மொழியானது மானுடச் சமூகத்தில் தகவல் பரிமாற்ற ஊடகமாக மட்டுமே தொழிற்பட்டுக்கொண்டிருந்த காலம் காலாவதி யாகிவிட, மனித வாழ்வுப்போக்கைக் குறிப்பாக அதனுடைய மன அமைப் பினை, சமூக உறவுகளை, அரசியல் வீச்சுக்களை, பண்பாட்டுப் பதிவுகளைத் தீர்மானிக்கும் அதிமுக்கியக் கருவியாகச் சமகாலத்தில் உருமாற்றம் பெற்றுள்ளது. இதனைக் கைக்கொண்டு ‘இலக்கியம்’ எனும் ஊடகத்தின் வழி, மனிதச் சமூகம் தன்னைத் தானே வழி நடத்துதல், தாம் கடந்து வந்த பாதையைச் சுயபரி சோதனை செய்து கொள்ளுதல் என்ற செயல்பாடுகளை முன்னெடுப்பதுடன், அவற்றை ஆவணமும் படுத்தி விடுகிறது. இவ்வித முன்னெடுப்புகளுக்குச் சமகாலத்தில் கவிதை, சிறுகதை, நாவல் என்ற வகைமைகள் பயன்படுத்தப்படினும், விசால வெளியையும் அணுக்கமான தன்மையையும் தன்னகத்தில் கொண்டு திகழும் ‘நாவல்’ எனும் கலைவடிவமே நடப்புக்காலச் சமூகத்தாருக்கு நெருக்கமாகியுள்ள ஊடகமாகத் திகழ்கிறது.

குறிப்பாக, சமகாலத்தில் மேலை இலக்கியக் கோட்பாடுகளை உள்வாங்கியும் சார்ந்தும் படைத்தல், அதன்வழி, தாம் கடந்து வந்த வரலாற்றை, மரபை, தொன்மத்தை மறுபரிசீலனை மற்றும் மறு உருவாக்கஞ் செய்தல், தம் இனம் வேற்றுப் புலங்களில் எதிர் கொண்டு வருகின்ற நெருக்கடிகளை அவதானிக்க முயலுதல், தன்புலத்துள்ளேயே இனம், பால், சாதி,நிலம், வர்க்கம், மனம் என்பனவற்றின் ரீதியாகப் பாகுபட்டும் பாகுபடுத்தப்பட்டும் இருப்போரின் நசிவுகளைப் பேசுதல், பன்முகப்பட்ட ஒடுக்குதல் களால் மானுடம் எதிர்கொண்டுவரும் அவதிகளைச் சித்திரித்தல், தம்மைத் தாமே சுயபரிசோதனை செய்துகொள்ளல் என்கிற விதங்களில் பதிவு பெற்று, தாம் தேர்ந்து பேசிட விரும்பிய கருத்தியல்களுக்குள் ஆழ்ந்து, நுணுக்கமாகப் பிரயாணிக்க முயற்சி செய்துள்ளமை என்பது ஆரோக்கியமான வளர்ச்சியாகும்.

மேலைக் கோட்பாட்டுத் தாக்கம் :

தமிழ் நாவலிலக்கியப் படைப்புச் சூழலில் எதார்த்த வகை எழுத்துக்களுக்கான மாற்று, எண்பதுகளில் சிறுபத்திரிகைகளால் தொடங்கி வைக்கப்பட்டு, தொண்ணூறுகளின் இறுதியில் உக்கிரப்பட்டது. இம்மாற்றினை முன்மொழிந்தவையாகப் பின் அமைப்பியல், மாந்திரீக எதார்த்தவாதம், பின்நவீனத்துவம், பின்காலனித் துவம் போன்ற சிந்தனைகள் உருக்காட்டின. அதன் அடுத்தகட்டப் பரிணாமம் நடப்புக் காலகட்டத்திலும் தொடர்ச்சியறாமல் பயணிக்கிறது. அதியதார்த்தப் போக்காகக் காட்டிக்கொண்ட இவ்வெழுத்துமுறை புலன்யதார்த்த நிகழ்வுகளுக்குள் குறியீட்டுத் தன்மை, உருவகத்தன்மை கொண்ட அதீதச் சித்திரிப்புகளை இணைப்பதன் மூலம், நுணுகித் தேடவேண்டிய அர்த்தத் தளங்களை உருவாக்குவது போலக் காட்சிப்படுகின்றது. இவ்விதமான காட்சிப்படுத்தல்களுக்குக் கதைகூறலில் கால நேர்கோட்டுத் தன்மையை மறுப்பது, காரணகாரியத் தொடர்ச் சியைச் சிதைப்பது, கதைநிகழ்வுகளைச் சிதறலாக்குவது என்கிற செய்முறைப் பயிற்சிகளை முன்னெடுக்கிறது. இதன்வழி, படைப் பாளியின் மரணம் அறிவிக்கப்பட்டதுடன், வாசிப்பில் சுதந்திரம், பன்முகத் தன்மை, அர்த்தத்தின் வேறாம் தன்மைக்கு (The other) முதன்மை, வாசகரின் பிரதானம், இரட்டைக் குறியீட்டுத் தன்மைக்கு முதன்மை, மொழி விளையாட்டு, பிரதி தரும் இன்பம், மரபு எதிர்ப்பு, புனிதக் கவிழ்ப்பு, கட்டுடைப்பு, மறுவாசிப்பு, மறுகட்டுமானம் மையம் - விளிம்பு மோதல் என்கின்ற பல கருத்து நிலைகள் முன்மொழியப்பட்டன. விளைவு, சமகால நாவலிலக் கியப் பிரதிகளானவை உத்திகளில் புதுமையை, உருவத்தில் பிறழ்வை, உள்ளடக்கத்தில் மாற்றங்களை உள்வாங்கின. இவற்றில் குறிப்பாக, உள்ளடக்க ரீதியாக விளிம்புகள் மீதான கவனமும், உத்திகள் ரீதியாக, தான் சார்ந்த வரலாற்றைத் தானே அனைத்துவித கனபரிமாணங்களுடன் கட்டுடைக்க முயலுதலை, ஒரு பிரதியைக் குறுக்கு நெடுக்காக, குத்துக்கோடாக, கிடைத்தளமாக வாசிக்கச் சுதந்திரம் ஏற்படுத்தியுள்ளமையைச் சுட்டலாம்.

மேலைக்கோட்பாடு சார்ந்து நாவலிலக்கியத்தை முன்னெடுத்த முதல்வராக எண்பதுகளில் காட்சிப்படுத்திக் கொண்ட தமிழவன், அவ்விடத்தைத் தக்க வைக்கும் முயற்சியாக, நடப்புப் பத்தாண்டுப் படைப்புக் களத்தில் தீட்சண்ய இயங்குதலுடன் இருப்பதை இவ்விடத்து நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். இவ்வரிசையில் அணிவகுப்பவர்களாக, சாரு நிவேதிதா (‘ராஸ லீலா’ - அக்டோ பர் 2006, ‘காமரூபக் கதைகள்’, டிசம்பர் 2008), எம்.ஜி. சுரேஷ் (‘அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் -நவம்பர் 2001’, ‘யுரேகா என்றொரு நகரம்’, ‘சிலந்தி 2001’, ழு, 37), ரமேஷ்-பிரேம் (‘சொல் என்றொரு சொல்’ டிசம்பர்-2001), எஸ். இராமகிருஷ்ணன் (‘நெடுங்குருதி’ - டிசம்பர் - 2003, ‘உறுபசி’-டிசம்பர் -2005, ‘யாமம்’), கோணங்கி (‘பாழி’ - மே - 2000, ‘பிதிரா’ - ஜூலை - 2004), ஜெயமோகன் (‘காடு’ - அக். 2003, ‘ஏழாம் உலகம்’, ‘கொற்றவை’ - டிசம்பர் - 2005) ஆகியோரும், இவர்களை அடியொற்றுபவர்களாக யுவன் சந்திரசேகர் - (‘பகையாட்டம்’ ‘குள்ளச்சித்தன்சரித்திரம்’, கானல்நதி), வாமுகோமு, (கள்ளி டிச-2008) பா. வெங்கடேசன் (‘தாண்டவராயன் கதை’ - டிச-2008), சுதேசமித்திரன் - (‘காக்டெய்ல்’, டிசம் - 2004, ‘ஆஸ்பத்திரி’ - டிசம் - 2006), அருணன்(‘பூருவம்சம்’ - ஏப் -2003) போன்றோரும் நடையிடுகின்றனர்.

இவ்வரிசையில், பரிசோதனைப் படைப்புக்களத்தில் இருப்பவரும் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’, ‘சரித்திரத்தின் படிந்த நிழல்கள்’, ‘ஜி.கே. எழுதிய மர்ம மீது நாவல்களின்வழி, பின் நவீனத்துவ எழுத்து முயற்சியைத் தமிழில் தொடங்கிவைத்தவருமான - தமிழவன், அனைத்துலக வாசகர்களை மனதில் வைத்து எழுதியதாகக் கூறிக் கொண்டு ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ எனும் பிரதியைத் தமிழ்ச் சூழலுக்குத் தந்துள்ளார். இந்திய, தமிழ்க் கலாச்சார மரபுக்குள் மட்டுப்படுத்தப்படாமல், சர்வதேச அளவில் தன் இயங்குதளத்தைக் கொண்டுள்ள இப்பிரதி போலந்து தேசத்தின் சமகால வரலாறு, தலைநகர் வார்ஸா குறித்த வர்ணனை, போலந்துக்காரர்கள் கம்யூனிச ஆட்சிமுறையை எதிர்கொள்ளும் விதம், இவர்கள் இந்தியர்களின்மீது கொள்ளும் தார்மீக அன்பு போன்றவற்றை விரிவாக வர்ணித்துச் செல்கிறது. இடையிடையே, தத்துவச்சரடாக, மேற்கத்திய நாகரிக முறைமையுடன் இந்திய - தமிழகத்தின் புராண, இதிகாச, தொன்மக் கீற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதி உராய்வுற்று மாற்றுருக்களாக வெளிப்படும் விதங்களையும் விதந்தோதுகின்றது. மேலும் இதில் கனவும் நனவும் கலந்து கதையாக விவரிக்கப்படுகிற பட்சத்தில், பற்பல புதிர் முடிச்சுகள் உருவாகி, இப்பிரதியானது தன்னை வாசிப்பதற்காக, ஒருவித அமானுஷயத் தன்மையை வாசகர்களிடம் கோரி நிற்கிறது. வழமையான விவரணக் கதைகூறலில் இருந்து தன்னை இது விடுவித்துக் கொண்டுள்ளமையால், காத்திரமான கதை கூறல் பாங்கானது தமிழவனுக்கு வாய்க்கப் பெற்றுள்ளதை வாசகர்தம் வாசிப்பு வழியில் கண்டுணரலாம்.

‘ஸீரோ டிகிரி’ புகழ் சாருநிவேதிதாவின் ‘ராஸாலீலா’, ‘காம ரூபக் கதைகள்’ எனும் இரு பிரதிகள் பாலியல் விடயங்களைக் கோடம்பாக்கச் சினிமா பாணியில், தமிழ் வாசகர்களுக்கு மலிவுப் பரிசாகத் தருவது போலக் கட்டமைவு பெற்றுள்ளன. நுண்ணதிகார வலைப் பின்னல்களாலும் புறவுலக எதார்த்தத்தையும் எதிர்கொள்வதன் பொருட்டு, நாவல் படைப்பதாகக் கூறிக்கொண்டு செயல்படும் சாருநிவேதிதா, ‘கண்ணாயிரம் பெருமாள்’ எனும் பாத்திரமாக உருமாறிச் செய்யும் லீலைகளைச் சொல்லிமாளாது.

“காமத்திலிருந்தே துக்கம் உண்டாகிறது. காமத்திலிருந்தே பயமும் பிறக்கிறது. காமத்திலிருந்து விடுதலையடைந்த வனுக்கு துக்கமோ பயமோ இல்லை” (ராஸலீலா, ப. 293) என்று வரும் தம்மபத விடயங்களைத் தனக்குத் துணையாக்கிக் கொண்டு, கதைக்கின்ற கதையாடல்கள் வாசகர்கள் மனங்களில் மட்டரகமான கிளர்ச்சியை மட்டுமே உண்டாக்க ஏதுவாகின்றன. ஆனால், பிரதியாளரோ, “தமிழ்ச்சூழலில் அடையாளமும் தன்னிலையும் அழிந்த சுயங்கள் ‘சைபர்’ வெளியில் சொற்களாலான கட்டற்ற சுதந்திரத்தை அடைகின்றன. மாறாக, சமூகவெளியிலோ மனோ ரீதியான ஒடுக்குமுறையும் இரகசியமான வன்முறையும் எல்லாத் தளங்களிலும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. ஒரே புள்ளியில் சந்திக்கும் அனுபவம் ஒருவித அபத்த நிலையினை உருவாக்குகிறது. இந்த அபத்தத்தைக் கேலிசெய்யவே, என் பிரதிகளைக் கேளிக்கைக்குரியதாகப் படைக்கிறேன் என்றும், ஆகவேதான், என் படைப்புப் பிரதிகள் எல்லாமே நவீன உளவியல் மற்றும் உறவுகள் குறித்த கேலிச் சித்திரங்களின் தொகுதியாக உருமாற்றப் படுகின்றன” என்றும் கூறுவதுடன், “இவ்விதக் கேலிச் சித்திரங்களின் நிஜ உருக்கள்தான் சமகாலத்தில் வாழ்கின்ற தமிழ் மனிதர்கள்” என்றும் கதைக்கிறார். இவருடைய பிரதிகளையும் பேச்சையும் எதிர்கொள்ள நேரும்போது,

“அணுசக்தி என்பதை அழிவுக்காகப் பயன்படுத்தினாலும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தினாலும் அதன் அபாயம் ஒன்றுதான்” (ஜனகப்பிரியா, நதி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது - ப. 12) எனும் ‘வாலலரிலெக சோ’வின் கருத்து நினைவுக்கு வரவே செய்கிறது. இத்துடன், ‘பாலியற் சுதந்திரம் பேசுகின்றேன்’ என்ற பாணியில், காமவிடுதலைக்காக, ஸீரோ டிகிரியில் தொடங்கிய சாரு தன்குரலை ஒரே அலைவரிசையில் இவ்விரண்டு பிரதிகளிலும் ஒலிக்கவைப்பதை இவர் தவிர்த்துக் கொள்ளவில்லை.

எம்.ஜி.சுரேஷ் தனது ‘அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்’ தொடங்கி, ‘G.37’ வரையிலான, தம் நாவல் பிரதிகளுக்கு Virtual reality novel (தோற்றமெய்மை நாவல்), Cubism novel (கனசதுரக் கோட்பாடு) என்ற பல நாமகரணங்களைச் சூட்டி, அதற்கு வக்காலத்து வாங்கிடும் முகத்தான், கதைக்கத் தொடங்குகிறார். “ரோலான் பார்த் சொல்லும் பிரதி தரும் சந்தோசத்துக்கு உதாரணமாக, தமிழில் இரண்டு நாவல்களைச் சொல்லுமாறு என்னிடம் யாராவது கேட்டால் தயங்காமல், என்னுடைய ‘அட்லாண்டிஸ் மனிதனையும்’ ‘அலெக்ஸாண்டரையும்’ என்னால் சொல்ல முடியும். ரோலான் பார்த்தின் ‘writing zero degree’ என்ற கட்டுரையைப் படித்தவர்கள், இவற்றை ஒரு zero degree writing என்றே புரிந்து கொள்வார்கள். இவை சுந்தரராமசாமி, வண்ணதாசன், ஜெயமோகன் போன்றோரின் எழுத்துக்களில் காணப்படும் கவித்துவ அசட்டுணர்ச்சி, வாசகனைத் தற்காலிக மனச் சிதைவுக்கு ஆளாக்கும் மிகையுணர்ச்சி போன்ற இயல்புகளுக்கு முற்றிலும் மாறானவை. அதுபோல, கோணங்கியிடம் காணப்படும் வாசகன் மீதான எழுத்து வன்முறைக்கு எதிரானது. அட்லாண்டிஸ் மனிதரையும் அலெக்ஸாண்டரையும் நவீனத் தமிழின் ‘பின் நவீன வேதங்கள்’ என்று மனச்சாட்சி உள்ள எவருமே ஒப்புக்கொள்வார்கள். (கோ. பிரேம்குமார், - பன்முகம், 2001 டிசம்பர் பிப்ரவரி 2002 - ப. 33) எனத் தானே, தனக்கான ஒரு வாசகரைத் தயார் செய்து, தனது சிறுபத்திரிகையிலேயே தன் புகழ்பாட வகை செய்துள்ளார். எம்.ஜி.சுரேஷின் இவ்வித இராண்டாந்தரக் கீழ்மைச் செயல்பாடுகளைக் கூர்ந்து நோக்கின், அவர் கோட்பாடுகளை வைத்துக் கொண்டு நாவல் புனைய முயல்வது அப்பட்டமாவதுடன் அபத்தமாகவும் தெரிகிறது. கூடவே, காலுக்குச் செருப்பா; செருப்புக்குக் காலா? -என வினவின், சுரேஷ் செருப்புக்குத் தான் கால்’ என்ற கோட்பாட்டை முன்மொழிவது போலத் தெரிகிறது. இவ்விடத்து, ஐரோப்பாவின் பின் நவீனத்துவ வேதம் என்று போற்றப்படும் ‘உம்பர்ட்டோ ஈக்கோவின்’ ‘The name of Rose’ என்னும் புனைவுப் பிரதியைத் தயவு கூர்ந்து ஒரு முறையாவது வாசியுங்களேன் எனத் தமிழ் வாசகர்கள் சார்பாக, எம்.ஜி.சுரேஷ்க்கு ஒரு கோரிக்கை விடலாம் என்றும் தோன்றுகிறது.

ரமேஷ் பிரேமின் ‘சொல் என்றொரு சொல்’எனும் நாவலினுள், வரலாறு/புனைவு; நடப்பு/கனவு; யாதார்த்தம்/புராணம்/படைப்பாளி; வாசகர்/ அறியாமை; அறிவியல் என்றெல்லாம் மொழிவழி இயங்கும் மனத்தின் பாகுபாடுகள் அழிக்கப்பட்டு, இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்தும் பிணைந்தும் கிடப்பதாகக் காட்சிப்படுகிறது. தனது நகர்விற்கு, வரலாற்று நடை, பிரசங்க நடை, ஆராய்ச்சி நடை என்ற பல நடை அமைப்புக்களைக் கைக்கொள்வதுடன், மூவிடம், முக்காலம், இரு திணை, ஐம்பால், செம்மொழி என்கின்ற இலக்கணப் பாகுபாடுகளனைத்தும் கலைத்துக் குழைத்துப் பூசிக்கொண்டதாகவும் தோற்றங் காட்டுகிறது. மேலும், தன்னுள் ஒற்றை மனிதராக நுழையும் வாசகரைப் பல்வேறு மனிதராகச் சிதைத்து உருவாக்கிடும் இரஸவாதத்தையும் இவர்கள்தம் பிரதி மேற்கொள்கிறது. மேலும், “தனக்கான கதையைத் தானே எழுதிக்கொள்ள வேண்டிய பிரசவ வேதனைகளையும் வலிகளையும் எதிர்கொள்வதிலிருந்து வாசகர் தப்பித்துவிட முடியாதபடி, வார்த்தைகள் பின்னங்களாகவும் வலைகளாகவும் வார்த்து விரிக்கப்பட்டிருக்கின்றன. கதைசொல்லி என்ற ஒற்றை மனிதர் இறந்து போகிறார். ஒவ்வொரு வார்த்தையும் கதைகளாகின்றன, ஒவ்வொரு கதையும் வார்த்தையாகின்றது”. (க. பஞ்சாங்கம், நாவல் நவீனப் பார்வைகள் - ப. 46) என்ற சிலாகிப்புக்கும் இந்நாவல் இடந்தருகிறது. இருப்பினும், இப்புதினமானது படைப்புக்குப் பாலூத்தி, படைப்பாளனுக்குக் கல்லறை அமைத்து, வாசகர் கையில் மாலையைக் கொடுத்து, வாசிப்பு எனும் இரங்கற்பா பாடச் சொல்கிறதோ என்ற உணர்வைத் தம்மை வாசிப்பவரிடத்துக் கிளப்பாமல் இல்லை.

எஸ். இராமகிருஷ்ணனின் ‘நெடுங்குறுதி’, ‘உறுபசி’, ‘யாமம்’ ஆகிய நாவல்களில் முன்னது, நடப்புக் காலத் தமிழகச் சூழலில் பொருள், பண்பாடு சார்ந்தியங்கும் சமூகப் புழங்குதளத்தில், சுய அடையாளமற்றுப் போனவர்களாகக் காட்சிதரும் மனிதர்களுக்கான உரிமையைக் கோருவதாகக் காட்சிப்படுவதுடன், “வேம்பலை எனும் கிராமத்தை முன்வைத்து, மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பூர்வீகத் தமிழ்க் குடியினரின் வாழ்வியலை Non linear உத்திமுறையில் மறுவாசிப்புச் செய்வதாக உள்ளது” (ந. முருகேச பாண்டியன், காலச்சுவடு - ப. 68, ஜனவரி, 2010) ஆனால், பின்னர் வரும் ‘உறுபசியோ, நீலபத்மநாபனின் ‘யாத்திரை’ நாவலையும், ‘யாமம்’ ‘Perfume’ எனும் மேலை நாட்டுத் திரைப்படத்தையும் தழுவியமைவதாகக் காணக் கிடைக்கின்றது.

‘தமிழ்ச் சூழலில் சொந்தமாக யோசிக்காமல், தழுவுதல் மற்றும் நகலெடுத்தல் என்கின்ற மரபுவழிச் செய்கைகள் வளமையே’ என்ற கருத்து இவ்விடத்து உறுதிப்படுகிறது. குறிப்பாக, தாஸ்தவஸ்கியின் ‘வெண்ணிற இரவுகளானது’, கு.ப.ராவின் நூருண்ணிசாவாகவும், இயற்கை - திரைப்படமாகவும் தமிழ்ப் படைப்புத்தளத்தில் உருமாற்றப்பட்டமைபோல், ப்ரெஞ்ச் நாவலாசிரியரான ‘ஸ்டெபான் ஸ்வெய்க்கின்’ ‘யாரோ ஒருத்தியின் கடிதமானது’, தங்கர்பச்சனால் ‘தென்றல்’ சினிமாவாகப் படைப்பாக்கம் பெற்று, கோலாகலக் கொண்டாட்டங்களை எதிர்கொண்டன. இவ்விடத்து, மூலப் பிரதியாளர்களின் பெயர்களை எங்கேயும், எவ்விடத்தும் சுட்டாமல், தழுவலாளர்கள் கவனமாகத் தவிர்த்துள்ளனர் என்பது கண்கூடு. இதே பாணி எஸ்.ராமகிருஷ்ணனால் பின்னிரு பிரதிகளிலும் செய்யப்பட்டிருந்தும், அதை அவர் யாங்கேனும் எச்சூழலிலும் வெளிக்காட்டாமல், வரலாற்றுத் தரவுகளைப் புனைவாக்கம் செய்ய முயன்ற இளம் படைப்பாளியான சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ எனும் நாவலை, ‘ஆயிரம் பக்க அபத்தம்’ என விமரிசித்திருப்பது எவ்விதப் படைப்புத் தர்மம் என்று வாசகர்களுக்கு விளங்கவில்லை.

எதார்த்தக் கதைகூறல் முறையிலிருந்து மாறுபட்டு, வாசகர்கள் தாம் முன் அறியாத மாயவுலகிற்கு, அவர்கள் தம் கண்களைக் கட்டிக் கூட்டிச் செல்பனவாக/ கோணங்கியின் ‘பாழி’, ‘பிதிரா’, ‘இருள்வ மௌத்திகம்’ ஆகிய பிரதிகள் விளங்குகின்றன. வாழ்வில் மிக எளிதாக நம்மைக் கடந்து செல்லும் தருணங்களில் ஒளிந்திருக்கும் வசீகரங்களையெல்லாம் மாயப்பிரதியாக உருமாற்றும் வித்தையையும் இரசவாதங்களையும் அறிந்துள்ள கோணங்கி, தன் பிரதிகளில் மண்மீதான, மானுடம் மீதான, இயற்கை மீதான நேசிப்புகளை அபரிமிதமாகச் சித்திரித்துள்ளினும், அவற்றைத் தீவிர வாசிப்பினை மேற்கொள்ளக் கூடிய வாசகர்களும்கூடத் தெரிந்துகொள்ள முடியாவகையில், மாயவழியை ஏற்படுத்தியிருப்பதென்பது ஏமாற்றந்தருவதாகவே உள்ளது.

‘இது நாவல் அல்ல, வாழ்வியல் வரைபடம்’ என்ற அடைமொழியுடன் தொடக்கமுறும் ‘ஜனகப்பிரியா’வின் ‘சூரனைத் தேடும்/ தேடிய ஊர்’ எனும் பிரதி, முருகனால் தேடப்பட்டு ஒழிந்துபோன, கந்தபுராண எதிர்நிலை மாந்தன் சூரன் என்னும் தொன்மத்தை, நடப்புக்கால வாழ்வியலுக்குள் படரவிட்டு, அது சாதிய இருளாக, மதவெறியாக மூடநம்பிக்கைகளாக, சடங்கு சம்பிரதாயங்களாக, சுரண்டல்களாக, அதிகார மூர்க்கமாகக் கிளைத்துப் புரையோடிப் போய்விட, அதனை அணுகியழிக்க முடியாக் கையறுநிலையைக் காட்சிப்படுத்துவது போன்று தோற்றங்காட்டுகிறது. “தீர்ந்துபோன நிழல்; தொலைந்து கொண்டிருக்கும் கிராமம், வரமும் சாபமுமாய் நிச்சயிக்கப்பட்டு விட்ட ஆண் பெண் உறவு, பன்முகங் கொண்ட பகையின் ஊற்று, நீக்கமறப் படிந்து கிடக்கும் சாதி, இடையிடையே வாழ்வின் சாரமாய் வார்த்தைகள், எளிய வாழ்நிலையில் என்றுமே தீர்க்க முடியாத ஆற்றாமை, கனவுகள் சுமக்கும் கண்கள், இருத்தலைத் துயரறச் செய்வதற்கான எத்தனிப்புகள், உறவின் பிணைப்புகளைத் தகர்த்து, சுமைகளைத் துறந்து சிறகென உருமாறிட முனையும் மனத்தின் பறத்தல், காவுகொள்ளப் பெற்ற சூழலின் வனப்பை மீண்டும் யாசிக்கும் ஆதிமனம்” என்று இப்படைப்பின் விரல்கள், நேர்கோடற்ற கதைகூறல் முறையில் தொட்டுக் காட்டும் கதாவெளியானது விசாலப் பாய்ச்சல் கொண்டதாகும். சமகாலச் சூழலில் சாமானிய மனிதரிடமிருந்து அசாமானியப் படைப்புத்திறமுடன் காத்திரமான பிரதியொன்று, புறப்பட்டிருப்பதென்பது தமிழ்ப் புனைகதைப் படைப்புச் சூழலின் மேன்மைக்கு ஒரு மைல்கல் என்றே இதைக் கணிக்க முடிகிறது.

மனித இருப்பின் நசிவை, கோரத்தை, அவலத்தையெல்லாம் வறுமை, முதுமை, அங்கஹீனம் ஆகியவற்றின் மூலமே பெரிதும் உணர முடியும். இவ்வுணர்வைச் சித்திரிக்கும் முகத்தானும் அங்கஹீனர்களாகவுள்ள, ஹீனர்களாக ஆக்கப்பட்ட மனிதர்களைப் பிச்சையெடுக்க வைத்துச் சுகித்து வாழும் குணங்கொண்டோரின் மனிதாபிமானமற்ற செய்கைகளை வெளிச்சமிட்டுக் காட்டவும், கடவுள் நம்பிக்கை மீதான அவநம்பிக்கையை, ஆன்மீகம் மீதான பகடியை முன்மொழியவும் நோக்கங்கொண்டு, எதார்த்த எழுத்துப் பாணியில் உருவாக்கமுற்றதாக ஜெயமோகனின் ‘ஏழாம் உலகமும்’, இயற்கையைத் தன்வயப்படுத்த முயன்று, கோரச் செய்கைகளை மேற்கொள்ளும் மானுடம், இறுதியில் நசிவுபெற்ற ழிவதைச் சித்திரிக்க முயன்றுள்ள ‘காடும்’ - சமகாலத்தில் எழுந்துள்ள காத்திரப் பிரதிகள். இவற்றிற்கு நேரெதிராக, எதார்த்தக் கதை கூறல் முறையைத் தவிர்த்த அவர்தம் ‘கொற்றவை’ எனும் நாவல், தன்னைக் ‘காப்பியம்’ என்று அறிவித்தபடி, அதீதக் கதையாடற் பாங்கில் விவரணை பெறுகிறது. காப்பியம் என்றால், ‘உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுளாக இருக்கும்’ என்று எதிர்பார்த்து வாசகர் நுழையின், அவருக்கு மிஞ்சுவது ஏமாற்றமே. இது பாட்டையும் செய்யுளையும் தவிர்த்து, 598 பக்கங்களிலும் உரைநடையால் மட்டுமே அமைவுபட்டிருக்கும். ஏன் இந்த மாறாட்டம் என வாசகர் வினவக் கூடாது; அதி நவீனப்பிரதிகள் எனில் பெயரளவிலாவது ஒரு மாற்றம் வேண்டுமல்லவா? அதற்காகத்தான் ‘புதுக்காப்பியம்’ என்ற இட்டுக்கட்டும் இடைச்செறுகலும்.

வியாசருடைய மகாபாரதத்தின் இருண்ட பகுதிகளுக்கு, ஒளி பாய்ச்சிடும் முகத்தான், அருணனால் உருவாக்கம் பெற்றுள்ள ‘பூருவம்சம்’ எனும் பிரதியானது, தனித்தனி அத்தியாயமாகப் படிக்கப்படின் சிறுகதை என்னும் பன்மை குணம் பெறுவதும், மொத்தமாக வாசிக்கப்படும்போது நாவல் என்னும் ஓர்மை குணம் கொள்வதுமாக அமைவு பெற்றுள்ளது. உருவப் பரிசோதனையை, உள்ளடக்கப் புதுமையை இந்நாவல் தரித்துக் கொள்வதால் நவீனப் பிரதிகளின் வகைமைகளுக்குள் ஆட்பட்டு வருகிறது.

‘குள்ளச்சித்தன் சரித்திரம்’, ‘பகடையாட்டம்’, ‘கானல் நதி’, ‘வெளியேற்றம்’ என விரியும் யுவன் சந்திரசேகரின் நாவல்கள் யாவற்றையும் ‘மீபொருண்மை மாயயதார்த்த வகைமைக்குள்’ அடக்கிவிட வாய்ப்புண்டு. ‘குள்ளச்சித்தன் சரித்திரமானது’ வாய்மொழி மரபில் தொழிற்படும் சித்தர்கள், ஞானிகள், யோகிகள் குறித்துப் பேசப்படும் மாயக்கதாவுலகப் பாங்கினைக் கொண்டது. திபெத் தேசப் பின்புலத்தைக் கதைவெளியாகக்கொண்டு கட்டமைப்புற்றுள்ள பகடையாட்டமோ, மர்மம், துப்பறிதல், திகில் என்ற உணர்வுகளை உள்ளடக்கி, ஆன்மீகச் சோதனைகளைச் செய்து சுழலுவதாக உருக்காட்டுகிறது. ‘கானல் நதியோ’ கலைச் செயல்பாடுகளின் எல்லைகளை, மனித இருப்பின் முடிவற்ற பெருந்துயருக்குரிய விடிவுக்கான வழிமுறைகளை விஸ்தாரணம் செய்வதாகத் தொழிற்படுகிறது. இவரது அனைத்துப் பிரதிகளிலும் வாழ்க்கையின் தாத்பரியத்தை அறியத் துடிக்கும் தேடலை நிகழ்த்துகின்ற பாங்கில், தத்துவத் தேடலுக்கான களங்களாகக் காட்சிப்படுகின்றன.

மத்தியதரவர்க்கக் கலாச்சார மதிப்பீடுகளுக்கு மறுப்புத் தெரிவிக்கும் முகத்தான், மண்சார்ந்த (வாழப்பாடி) கதையைத் தேர்ந்து கொண்டு, பழனிச்சாமி எனும் கதாமாந்தரின் வழி, தமிழ் வாழ்வின் அறியப்படாத முகங்களையும் விளிம்பில் தள்ளப்பட்டோர் பக்கம் உள்ள கனவுகளையும் வாழ்வில் படும் வேதனைகளையும், வாழ்க்கை குறித்த மதிப்பீடுகளையும் ஒழுங்குபடுத்தலற்ற மொழிவழியாக ‘வாமு கோமு’, தம்முதல் நாவலான ‘கள்ளி’ வழிச் சொல்லிச் செல்வது, தமிழ் நாவலுலகிற்குப் புதிய முயற்சியாகும்.

கதைநிலத்தை மாயப்பிரதேசமாக மாற்றுகின்ற முயற்சியில் அடுத்து வருபவராக பா.வெங்கடேசன் காணக்கிடைக்கிறார். இவருடைய ‘தாண்டவராயன் கதை’ என்னும் பிரதி, முறையே இங்கிலாந்து, பிரான்ஸ், தமிழகம் எனப் பிரயாணிக்கிறது. இப்பிரயாண வழியில் 18 நூற்றாண்டுக்கால காலனிய ஆதிக்கத்தின் தொடக்கப் புள்ளியை, அதன் கொடூரச் செய்கைகளைப் பின் காலனிய அணுகளில் காட்டினாலும், ‘டிரிஸ்டிராம்’ என்ற பெயரைத் தாங்கிய ஆங்கிலக் கதாநாயகன் பிரதியில் இடம் பெறுவது நெருடலைத் தருவதாகவே உள்ளது. இருப்பினும், நடப்பு மனிதர்கள், அன்றாட அரசியல் நிகழ்வுகள், இட்டுக்கட்டப்பட்ட வரலாறுகள் என்கிற இந்த எல்லாவற்றையும் ‘பெருங்கதையாடல்களின் முகமாக’க் காணும் இப்பிரதி பின்னை நவீனச் சாயலுற்று, நவீனத்துவச் சிந்தனை மீது பல நுட்பமான விமர்சனங்களையும் எழுப்பிச் செல்கிறது.

அ-நேர்கோட்டு எழுத்துப் (Non-Linearity) புனைகதையாளர்கள் வகைமைக்குள் அடங்கும் மற்றொரு பிரதியாளராக ‘சுதேசமித்திரன்’ விளங்குகிறார். குடிச்சாலை அனுபவங்களினூடே சமூக விமர்சனங்களை முன்வைக்க முயற்சித்துள்ள இவரது ‘காக்டெய்ல்’ என்னும் நாவல், குடியையும் கொண்டாட்டங்களையும் முன்னெடுப்பது போல முதலில் காட்சிப்பட்டு, ‘குடியின்றி அமையாது உலகு; குடித்தல் ‘எதனினும் நலமே’ என்பன போன்ற கோட்பாடுகளை உருவாக்குவதுபோலத் தோற்றங்காட்டி, குடித்தல் தொழிலை ஏற்று நடப்பதா! விட்டு மீள்வதா?! என்ற ஊசலாட்ட, தள்ளாட்ட நிலையை (போதை மனதை) உண்டாக்கிவிடுகிறது. ‘ஆஸ்பத்திரி’ எனும் இவரது அடுத்த நாவல், நேர்மைக்கு மாற்றாகச் சமகாலத்தில் நடைபெறும் மருத்துவமனைச் செயல்பாடுகளை அங்கதம் செய்து விவரிப்பதோடு, கழிவிரக்கமற்ற தமிழ்ச்சமூக நடத்தை முறையைப் பகடிப்பதுடன் சுய எள்ளலையும் மேற்கொண்டிருக்கிறது.

இனவரைவியல் மற்றும் திணைசார் பண்பாட்டுப் பதிவு நாவல்கள்

மானுடவியலின் முக்கியப் பிரிவுகளுள் ஒன்றாக அமைகிற இனவரைவியலானது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழு அல்லது அவர்தம் பண்பாட்டை விவரிக்கும் கலையறிவியலாக நடப்பில் தொழிற்படுத்தப்படுகிறது. இவ்வினவரை வியலை உள்வாங்கிய வண்ணமாகவும் பெரும்பான்மையான நடப்புக்காலப் புனைகதைப் பிரதிகள் காட்சிப்படுகின்றன. மேலும், ஐவகையாகப் பகுக்கப்பட்டு அறிதலுக்கு உட்படுத்தப்படும் தமிழ் நிலத்தின் ஆரம்ப கால இலக்கியங்கள் திணை சார்ந்து படைப்பாக்கம் பெற்றது போல், சமகாலத்திலும் திணைசார்ந்து பண்பாடுகளைப் பதிவு செய்யும் புதினப் படைப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் வட்டாரம் சார்ந்தவை என்றும், தற்போது திணை சார்ந்தவை, இனம் சார்ந்தவை என்றும் பாகுபடுத்தலுறுகின்றன. இவ்வித எழுத்து முயற்சியில் நெய்தல் நிலத்தை மையமிட்டு எழுதியுள்ளதாக ஜோசப் டி குரூஸின் ‘ஆழி கூழ் உலகு’ அமைகிறது. 1933இல் தொடங்கி 1985இல் முடிவுபெறும் நாவலின் கால ஓட்டத்தில், ஆமந்துறை (உவரி) எனும் தூத்துக் குடிக் கடல்புரத்து மக்கள், கடலின் பருவநிலை மாற்றங்களால் படும் அவஸ்தைகளானவை விரிவாகப் பதிவாக்கம் பெற்றுள்ளன. (தூத்துக்குடியைச் சுற்றியுள்ள துறைமுகக் கிராமங்களில் நிலவும் அரசியல், சமூக, பண்பாட்டு மாற்றங்களும் கூட நாவலில் விவரணை பெற்றுள்ளன). குறிப்பாக, அப்பகுதியில் வாழுகிற ‘நாடார்’ சமூக மக்கள், தமது வறண்ட நிலத்தில், பனையை நம்பி வாழும் வாழ்க்கை பயன்தராது என்று முடிவு கொண்டு, கருவாடு வாங்கி விற்பனை செய்ய முன்வருதலும், காலப்போக்கில் அச்செயலே நாடார் சமூகம் பெரும் வர்த்தகச் சமூகமாக உருமாறிட வழியேற் படுத்துவதும் ‘ரத்தினசாமி’ எனும் கதாமாந்தர் வழிச் சித்திரிப்புற்றுள் ளது. மேலும், கடலோரக்கிராமங்களில் வாழும் மக்கள் கிறிஸ்தவச் சமயத்தைத் தழுவுதற்கான ஏதுக்கள் எவ்வெவ்வாறெல்லாம் உருவாக்கம் பெற்றன என்பதையும் இப்பிரதி விளக்கி வரைகிறது.

நடப்புக் காலப் புனைவு வரைவாளர்களுள் முக்கியஸ்தராக அடையாளப்பட்டுவரும் சு. தமிழ்ச்செல்வி, ‘மாணிக்கம்’, ‘அளம்’, ‘கீதாரி’, ‘கற்றாழை’, ‘ஆறுகாட்டுத் துறை’ ‘கண்ணகி’ எனத் திணைசார் நாவல்களைத் தந்து வருகிறார். இவற்றில் குறிப்பாக, ‘கீதாரி’ மேய்ச்சல் தொழிலைக் கைக்கொண்ட ‘கோனார்’ இனமக்களை வரைவு செய்ய, ‘அளமோ’ மருதம், முல்லை, நெய்தல் ஆகிய மூன்று திணைசார் வெளிகளில் பயணிக்கிறது. சான்றாக, அப்பிரதியில் இடம்பெறும் ‘கோயில்காவு’ எனும் சிற்றூர், மருத நிலத்தினதாகக் காட்சிப்படினும் ஊரின் கடைசிப் பகுதி கடலுடன் இணைவதையும், கம்பு, வரகு முதலான திணைப்பயிர்களுக்கான களத்தை அவ்வூரே பெற்றிருப்பதையும் வாசிப்பு வழியில் அறியலாம்.

ஒரு குறிப்பிட்ட மக்கள் குழு அல்லது அவர்தம் பண்பாட்டை விவரிக்கும் கலை அறிவியலாக நடப்பில் தொழிற்படுகிற இனவரைவியலை நடப்புக்காலத்தில் தம் படைப்பில் இழையோட விடுபவர்களில் காத்திரமானவராக சு.தமிழ்ச்செல்வி காட்சிப்படுகிறார். சு.தமிழ்ச்செல்வியின் பிரதிகள் இனவரைவுற்றதாக, உண்மையும் புனைவும் சரிவிகிதமாகக் கலந்து கலையம்சமாக்கப்பட்டதாக, சங்ககாலத் திணைமரபை உள்வாங்கியமைவதாகக் காட்சி தரினும், குறிப்பிட்ட வட்டாரத்திற்கே சென்று, அங்குத் திரட்டப்பட்ட தரவுகளின்படி, நாவல் படைப்பில் ஈடுபட்ட இராஜம் கிருஷ்ணனின் மரபில் கிளைத்தமை போன்று காட்சிப்படும் இவரது தோற்ற நிலையை மறுப்பதற்கில்லை.

‘பழங்குடி மக்களினுடைய பண்பாட்டினைத் தீர்மானிக்கும் அடிப்படை இயங்கு சக்தியாக ‘வனமே’ இருக்கிறது என்ற நம்பிக்கை இன்றும் நடப்பில் உள்ளது. குறிப்பாக, அப்பழங்குடியினர் தங்கள் வழிபாடுகளின் நடுநாயகமாக ‘பச்சை’ வர்ணத்தையே பாவித்தும் அதைப் பாதுகாத்தும் வருகின்றனர். ஆனால், இதனைச் சந்தைப்படுத்தும் முயற்சியை ‘வீரப்பன் வேட்டை’ என்ற பெயரில், அரசு நிறுவனங்கள் மேலெடுத்தை ச. பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ எனும் நாவல் சுட்டிச் செல்கிறது. வீரப்பன் இருந்த காட்டின்கண் வாழ்ந்துவரும் பூர்வ இனக்குடிகளான சோளகர்களின் தொல் நம்பிக்கைகள், சடங்குகள், வாழ்வியல் நடைமுறைகள் போன்றன எங்ஙனம் அரசியந்திரங்களாலும், வீரப்பனின் சகாக்களாலும் பாழடிக்கப்பட்டன என்பதைச் சுட்டுவதுடன், ஓர் இனத்தை அழித்தொழிக்கும் செயல்பாடு உலக வல்லரசுகளால் மட்டுமல்ல; பிராந்தியக் குழுக்களாலும் நிகழ்த்திவிக்கப்படும் என்பதற்கும் இந்நாவல் சாட்சியாகி நிற்கின்றது.

இவ்வித இனவரைவியல் மற்றும் திணைசார் புனைவியலின் அடிப்படையில் படித்தறியத்தக்க தன்மைகளைக் கொண்டு புனைவு பெறுபவையாக, கொங்கு வட்டாரத்தை உள்வாங்கி புனைவு பெற்றுள்ளன ப.க.பொன்னுசாமியின் ‘படுகளம்’ என்பதையும், பெருமாள் முருகனின் ‘கங்கணத்தையும்’ (செம்மங் காடு), சோலை சுந்தர பெருமாளால் கீழைத் தஞ்சையின் வண்டல் மண்ணைச் சார்ந்தியங்கும் ‘நஞ்சை மனிதர்களையும், ஜெயமோகனின் காடு (குறிஞ்சி) எனும் நாவலையும் உள்ளடக்கிக் கூற வாய்ப்புள்ளது.

வரலாற்று நாவல்கள்

வரலாற்றை உருவாக்குபவன் ஒடுக்குமுறையாளன்தான். அவன் எழுதுகின்ற வரலாறு அவனால் ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறாக என்றும் இருப்பதில்லை. அது சூறையாடுகின்ற, வன்புணர்ச்சி செய்கின்ற, வறுமையை உருவாக்குகின்ற, அவனது சொந்த வரலாறே. இதற்கு மாற்றாக, ஒடுக்கப்பட்டவர்களால் வேறொரு வரலாறு உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்த வரலாற்றை உருவாக்குபவர்கள், நாவலாசிரியர்களும் கவிஞர்களும் தானே தவிர, தொழில் ரீதியான அல்லது கல்வித்துறை சார்ந்த வரலாற்றாளர்கள் அல்லர், என்பது வரலாற்று வரைவியலின் அரசியல் குறித்த ‘ப்ரான்ஸ் பனோன்’ என்பாரின் கருத்து (வே.மு.பொதிய வெற்பன், புத்தகப்பார்வை/புதியபார்வை/ ஆகஸ்ட் 1-154-2007).

இதுநாள்வரை ஆதிக்க, அதிகார சக்தியினரால் ‘வரலாறு’ என எழுதப்பட்ட அனைத்தும், அவர்களுக்கே சாதகமான, சுயநலன் பொருட்டுத் திரிக்கப்பட்ட புனைவுகளாகத் தொடரும் பட்சத்தில், கீழிருந்து எழும் வரலாறைப் படைக்கும் புனைவுகளே மெய்யான வரலாறாகவும் ஆகின்றன. எந்தவொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால், அதற்கான அரசியலும் வர்க்கமும் மறைந்திருக்கும் என்பது வெளிப்படை. இவ்வகையில், சாமான்யர்களால் தங்களுக் கான வரலாறு படைக்கும் இரஸவாதம் சமீபத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அது, புனைவு என்ற பெயரில் தரப்படினும், இதுதான் உண்மை வரலாறாக இருக்க முடியும்.

இவ்விதங்களில், புனைவாகக் கட்டமைப்புப் பெற்றுள்ள வரலாற்று நாவல் வரிசையில், சோலை சுந்தரப்பெருமாளின் “குருமார்கள்’ எனும் நாவல்வழி,சோழ ராஜ்ய ஆதிக்க வரலாறு மறு உருவாக்கம் பெறுகிறது. ராஜராஜசோழனை வரலாற்றில் முன்னிறுத்த நேர்கையில், பெருவுடையார் கோயிலும் கலைகளின் மேன்மைத் திறமும் மட்டுமல்லாமல், தேவதாசிக் கொடுமைகளும், சனாதனச் சார்பும் உடன் பேசப்பட வேண்டும் என இப்பிரதி வலியுறுத்துகிறது. மேலும், நாயக்கர் ஆட்சி குறித்துப் பேச முற்படுகையில்,

“இந்தக் கல்யாண மகாலை நாயக்க மாமன்னர்கள் தங்கள் வைப்பாட்டிமார்களுக்கான அந்தப்புரமாக வைத்திருந்தனர். அரசவை மருத்துவச்சிகளால் பொறுக்கி எடுத்து, அழைத்து வரப்படும் அழகிய பெண்களின் கன்னித் தன்மை இங்குப் பரிசோதித்து அனுப்பப்படும். அதுக்குன்னே உளவுப்படையும் இராஜாங்கப் பிரதிநிதிகளும் உண்டு. அப்படித் தேர்ந்த பெண்கள் ஒரு மண்டலம் மட்டுமே மன்னர்களோடு தங்கி, கலந்து நெகிழ்ச்சி தந்த பின்னர், இந்தக் கல்யாண மகாலுக்கு அனுப்பப்படுவர். அப்படி அனுப்பப்பட்ட மக்களுக்குச் சிறைவாழ்க்கைதான். இப்படி சிறை வைக்கப்பட்ட சில பெண்களைத் தலைமை வேதியர்க்குத் தானமாகக் கொடுத் திருக்கிறார்கள். சில பெண்கள் தற்கொலை செய்துகொண் டும், பல பெண்கள் தப்பி ஓடுவதற்காகவே சவண்டிப் பார்ப்பார்களுக்கு இசைந்து படுத்தும் பயன் இல்லாமல், தப்பிக் கும் முன்னர் சிரச்சேதம் பண்ணப்பட்டவர்களும் உண்டு”

என, வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்களை மீட்டெடுத்துக் கட்டமைப்பவையாகப் பல கதைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சோலை சுந்தரபெருமாள் தம் ‘நஞ்சை மனிதர்களில் 1930-80 வரை கீழைத்தஞ்சை கொண்டிருந்த நிலஉடைமைச் சமூக அமைப்பின் இறுக்கம், அதன்வழி நிகழ்த்தப்பட்ட சிதைவு, பூர்ஷ்வாச் சீரழிவு போன்றவற்றை உள்ளடக்கிப் படைத்துள்ளார். இதில், அரசியல் ரீதியாக, காங்கிரஸ், ஜஸ்டிஸ், திராவிடக்கழகம், அ.தி.மு.க. ஆகிய வற்றின் சமூகச் செலுத்து நிலைகளையும் இழையோட விட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

வரலாற்று வரைவியலாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்ட தமிழ் நாவல்களில் சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ மிக முக்கியமானது. 1310 இல் நிகழ்ந்த மாலிக்கபூரின் படையெடுப்பில் தொடங்கி, மதுரை ஆட்சியராக ‘பிளாக் பெர்ன்’ வந்து சேர்ந்து, மதுரையின் சுற்றுப் புறக் கோட்டைச் சுவரை இடிப்பது மற்றும் மதுரை அருகேயுள்ள தாதனூரைச் (கீழக்குயில்குடி) சேர்ந்த, காவல் தொழில் புரியும் இனத்தாரின் சரிவுகள், நசிவுகள் என நாவல் 1048 பக்கங்களில் விரிந்து முடிகிறது. ஒரு சமூகத்தின் துயர வரலாறு, ஒரு வரலாற்று நாவலாக உருப்படுத்தப்பட்டுள்ளமையை வாசிப்பு வழியில் கண்டுணரலாம்.

“வரலாற்றின் நினைவுகளைப் பருகத் தொடங்கிவிட்டால் அதற்குள் பெருமிதம் மட்டும் கடிந்து வருவதில்லை; வலியும் அதிர்ச்சியும் கூடச் சேர்ந்தேதான் வருகிறது” (ப. 447) என்ற நாவலாசிரியரின் கூற்று, இந்நாவலுக்கு மிகவும் பொருந்திப் போகிறது.

இருப்பினும், வரலாற்று நாவல் படைப்பதில் உள்ள சிரமங் காரணமாக, இந்நாவல் சில அவப்பெயர்களையும் சந்தித்துள்ளதைச் சுட்டவே வேண்டும். இந்நாவலை,

“ஆயிரம் பக்கம் அபத்தம்; இது வரலாறும்அல்ல புனைவும் அல்ல” எனப் பேசி, விமரிசித்த எஸ்.ராமகிருஷ்ணன், இதற்குக் காரணமாக, நாவலின் பல இடங்களில், வரலாற்றுச் செய்திகள் ‘ஆவணக் கோப்புகளில் உள்ளவையாகவே உள்ளன’ என்கிறார். வரலாற்று நாவல் படைப்பதில் இது போன்ற சிரமங்களும் ஏற்பட வாய்ப்புள்ளமைக்கு இந்நிகழ்வு சான்றாகிறது.

தன் வரலாற்று (சுயசரிதை) நாவல்கள்

சென்ற நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் குறிப்பாக, 1992-இல் பாமாவால் ‘கருக்கு’ நாவல் வழித் தொடங்கி வைக்கப்பட்ட சுயசரிதைப் பாங்கு கொண்ட புதினப்படைப்பு முயற்சி, தமிழ் நாவல் படைப்பு வரலாற்றுக்குப் புதியது இல்லை. இதற்குமுன், அழகிய நாயகியம்மாளின் ‘கவலை’, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் ‘என்கதை’, நகுலனின் ‘நினைவுப்பாதை’ எனப் பல பிரதிகள் படைப்பாக்கம் பெற்றுள்ளன என்றாலும், புதிய பாய்ச்சலைத் தமிழ்ச்சூழலில் ஏற்படுத்திவிடக் ‘கருக்கே’ காரணமாகியது. தன் வரலாறுகளில் அதனை ஆக்கியோர், தாம் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையை மீண்டும் மீள்பார்வைக்காட்படுத்திடவும் மேலும், தெளிவுபடுத்திடுவதற்குமே இது போன்ற முயற்சியை மேற்கொள்கின்றனர்.

சமகாலத்தில் தன் வாழ்க்கைப் பார்வையையே மையமாகக் கொண்ட ராஜ்கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’, ‘லண்டனில் சிலுவைராஜ், காலச்சுமை’, பாரத தேவியின் ‘நிலாக்கள் தூர தூரமாக’, முத்தம்மாள் பழனிச்சாமியின் ‘நாடு விட்டு நாடு வந்து’, (90களில் வந்து கவனம் பெறாது தற்போது பேசப்படுவதாக), எஸ். சண்முகத்தின் ‘நிலம் மருகும் நாடோடி’, ‘பெரியவயல்’, முத்து மீனாளின் ‘முள்’ என விரியும் பட்டியலில், கே.ஏ. குணசேகரனின் ‘வடு’வும் சரவணனின் ‘நான் வித்யா’வும் இணைய முற்படினும் முன்னையது புனைவு கலந்த வரலாறாக இருக்க, பின்னது வெறும் வரலாறாகவே ஆகிப் போதல் கண்கூடு. ‘தமது சமூகத்தின் வரலாற்றைத் தன் வரலாறுகளின் அடிப்படையில் / நோக்கில் உருவாக்கும் புது முயற்சியே இவ்வித சுயசரிதைப் பாங்கு நாவல்கள் என்ற முடிவுக்கு வரச் சமகாலத் தன்வரலாற்று நாவல்கள் வழிவகுக்கின்றன.

பெண்ணிய நாவல்கள்

பெண்ணியம் என்பது, “ஒரு படிப்பு, ஆய்வு, பெண்ணுரிமை பற்றிய பார்வை” என்ற நடைமுறை சிறிது மாறி, இன்றைய கால கட்டத்தில் பெண்கள் தங்களுடைய ‘இருத்தல்’ நிலையைக் குறிக்கும் இலட்சனையாக உருப்பெற்றுள்ளது. மேலும் பெண் களானோர் ஒருவித விழிப்புணர்வுக்குள்ளாக வந்துவிட்ட சிந்தனா அம்சத்தையும் குறிப்பதாகவே ‘பெண்ணியம்’ என்ற சொல்லாடலைப் புரிந்துகொள்ள முடிகிறது. சமூக, பொருளாதார, அரசியல்,கலாச்சார, சமய, பண்பாட்டு நிலைகளில் பெண்களான தமது வாழ்நிலைமை எவ்வாறு இருக்கிறது என்கிற புரிதல் நிலையை அடைந்துவிட்ட, விழிப்புணர்வுக்கான அடையாளக் குறியீடாகவும் ‘பெண்ணியம் என்ற சொல்லை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இவ்வித விழிப்புணர்வுகளின் பயனாகச் சமகாலத்தில் கற்பு, புனிதம், தீட்டு என்கிற ஆதிக்கச் சமூகம் கட்டமைத் திருந்த மதிப்பீடுகள் காலாவதியாக்கப்பட்டு,பெண்கள் தாம் தமக்கேயுரிய பௌதிக இயங்குதன்மையுடன் நடையிடுகின்றனர். இப்பெண்ணியம் என்ற சிந்தனை மேலை தேயங்களிலிருந்து தருவித்துக் கொள்ளப்பட்டிருப்பினும் மண் சார்ந்த பெண்ணிய மாக, தமிழ்ச் சூழலில் தற்போது வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, தமிழில் உமா மகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை’, சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ சு. தமிழ்ச்செல்வியின் கண்ணகி - (பிம்பம் தகர்க்கப்படுதல்), கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’, பா. விசாலத்தின் ‘மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்’ என்பன இவ்வகைமைக்குள் அடங்குவன.

“உறவுகள், குடும்பம், சுற்றம் வரையறுக்கும் பிணைப்புகள் மற்றும் கற்பின் சுமையுடன் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கும் பெண்மை, குழந்தைப் பருவத்தின் நிலைமாறாதபோதே பெரியாட்களாக உருவமைக்கப்படும் நிலைமையின் அ- கோரத் தன்மை என விரியும் பெண் குறித்த கதையாடல்கள், பெண்களின் நிலையை விளக்குவதோடு மட்டுமே நின்று விடாமல் பெண் களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான ஆக்கங்களையும் செய்துள்ளன.

தலித்திய நாவல்கள்

ஒவ்வொரு காலகட்டத்திலும் தகிக்க வைக்கும் உண்மைகளை எதிர்கொள்ள, ஆதிக்க மனம் ஏனோ தயங்குகிறது. அம்மனத்துக்கு உண்மையை விளங்கவைக்க வேண்டுமெனில், அதற்கு, ‘உண்மை யுறைந்த புனைவுகளால் மட்டுமே முடியும்’ என்ற விதத்தில், தமிழில் தலித் நாவல்கள் ஆக்கம் பெற்றுள்ளன. அழகிய பெரியவனின் ‘தகப்பன் கொடி’, ராஜ் கௌதமனின் ‘சிலுவைராஜ்’, ‘லண்டனில் சிலுவைராஜ் சரித்திரம்’, சோ.தர்மனின் ‘கூகை’, கீரனூர் ஜாகீர்ராஜாவின் ‘மீன்காரத் தெரு’, க. பஞ்சாங்கத்தின் ‘ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம்’, ப. ஸ்ரீதரகணேசனின் ‘மீசை’, பாமாவின் ‘வன்மம்’, பாண்டிக்கண்ணனின் ‘சலவான்’ (குறவர் இனம்) எனப் பிரயாணக்கின் றன தமிழில் தலித் நாவல்கள்.

“ஒரு உயர் ஜாதிக்காரன் தலித் வீட்டில் உணவருந்தினாலும், ஒரு தலித்தை உயர்சாதிக்காரன் தன் வீட்டிற்கு அழைத்து உபசரித்தா லும், பெருமை உயர் சாதிக்காரனையே சென்றடைகின்ற அவலச் சூழலில்,” தம் சாதிய அடையாளங்களை, கலை முதலான அனைத்து நடவடிக்கைகளின் மூலமாகவும் வெளிப்படுத்துவது, தன் சாதி இதுதான் என உரத்துக்குரல் கொடுப்பது போன்ற பல கோசங்கள் தற்காலத் தலித்திய நாவல்களின் போக்காக அமைகின்றது.

விளிம்புநிலை மனிதர்கள்குறித்த நாவல்கள்

விளிம்புநிலை மனிதர்கள் என்ற வகைமைக்குள் காலவளர்ச்சிக்கேற்பச் சிலர் உள்ளே வருவதும் சிலர் மேலேறிச் செல்வதும் நிகழ்கிறது. இவ்வரையறைக்குள் வருபவர்களைச் சமூகம் உதிரிகளாக - மற்றமைகளாக மட்டுமே அணுகுகிறது. “பிச்சைக்காரர்கள், திருடர்கள், விபச்சாரிகள், அரவாணிகள், நிரந்தர நோயாளிகள், பிணம் எரிப்போர், நாடோடிகள், அகதிகள், பழங்குடிகள், ஓரினப் புணர்ச்சியாளர்கள், கரமைதுனக்காரர்கள்” என இப்பட்டியல் நீட்டம் பெறுகிறது. இவர்களில் அரவாணியர் குறித்த புனைவுகள் நடப்புக் காலத்தில் அதிகம் வெளி வரத் தொடங்கியுள்ளன. பிரியா பாபுவின் ‘மூன்றாம் பாலின் முகம்’, ‘பாலபாரதியின் ‘அவன் - அது - அவள்’ குறிப்பிடத் தக்க பிரதிகள்.

தாம் அனுபவித்த வலி, வேதனை,அவமானம் ஆகியவற்றைப் பிறர் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கிலும், மனிதர் என்ற முறையில் அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வேண்டிய தேவையையும் நிர்பந்தங்களையும் இப்பிரதிகள் முன்வைக்கின்றன. இவ்வாறிருக்க, இவர்களை அதிகாரமாக அழைத்து வந்து, பொட்ட லில் நிறுத்தி, பாட, ஆட வைத்து, பரிதவிக்க வைக்கும் கோடம்பாக்கச் சிந்தனையும் இன்னும் தமிழகச் சூழலில் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது.

‘மனிதர் செய்யும் வேலைகளிலேயே ஆகக் கடைசி வேலை மனித மலம் அள்ளுவதுதான்’ என்று நினைத்துக் கொண்டிருந்தவர் களுக்கு, ‘அதையும் விட மிக மோசமான வேலையொன்று இருக் கிறது’ என்று சுட்டிச் செல்வது தான் ஆண்டாள் பிரியதர்ஷிணியின் ‘தகனம்’. மயானத்தில் பிணங்களை எரிப்பதையே தம் வாழ் நிலை யாதாரமாகக் கொண்டு, தம் கும்பிக்கும் குடும்பத்துக்கும் இரை தேடும் அவல ஜீவன்களின் ஜீவிதப் போராட்டத்தைப் புனைவு படுத்தி விளம்பும் நிலையினதாகத் ‘தகனம்’ காட்சிப்படுகிறது.

அநாதையாக்கப்பட்ட மூன்று சிறுவர்கள் மற்றும் வீட்டு வேலைக் காட்படுத்தப்படும் இளம் பெண் குழந்தை படும் அவஸ்தைகளை, ‘கறுப்பு விதைகள்’ என்னும் புதினத்தின் வழி, கரன்கார்க்கி தந்துள்ளார். இது விளிம்புகளுக்காட்படும் குழந்தைச் சீரழிவு குறித்து விதந்து பேசுகிறது.

வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வரப்படுகின்ற சடங்குகள், மற்றும் ஐதீகங்களினால், இறுகப் பிணைக்கப்பட்டுள்ள தமிழ்ச் சமூகம், தான் அறிந்தோ அறியாமலோ, தம்முள் சிலரைப் பலி கொடுத்தோ, காவு வாங்கியோ விடுகிறது. இவ்வித பழி நடவடிக்கை காட்பட்டவளாக, ‘தேவதாசி’ மரபைத் தழுவிடச் செய்யப்பட்ட, இமயத்தின் ‘செடல்’, (பாட்டுக் கட்டும் மரபு/ கூத்துப்பறையர்) ஆகிப் போகிறாள். தேவதாசியர் மரபின் மிச்ச சொச்சங்களைத் துடைத்தெறிய முயன்றுள்ளதாக இமையத்தின் ‘செடல்’ காட்சிப்படுகிறது.

‘விளிம்பு நிலை மக்களின் மேன்மைக்காகப் பேசுகிறோம்’ என்று வெற்றுப் பதிவுகள், தன் வரலாற்றுப் புலம்பல்கள், காலா வதியாகிப் போன போராட்டப் பார்முலாக்களையே கையாண்டு வந்த நிலைமை மாறி, தம் வாழ்வனுபவங்களிலிருந்து உலகத் தினரைக் கேள்விக்கும், கேலிக்கும் உட்படுத்துகின்றபோக்கு நடப்பில் விளிம்புநிலையினர் குறித்த பிரதிகள்வழி வந்துள்ளமை என்பது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

கவன ஈர்ப்பினைக் கோருகின்ற சமீபத்திய புதின வரவுகள்

வாழ்கின்ற சூழலின் பதிவு, வாழ்ந்த நிலை குறித்து அசை போடல், அனுபவ விவரணை, கடந்து வந்த பாதை குறித்த விமரிசனம் எனக் கிளைவிரித்துப் பாயும் புதினப் பிரதிகள் வாசிக்க வாசிக்க வளர்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றில், இஸ்லாமி யர் தம் இனவரைவுகளை முன் வைத்திடும் புதினங்களானவை, தம் எண்ணிக்கையை நடப்புக் காலத்தில் வளப்படுத்திக் கொண்டுள்ளன. அடிப்படைவாதக் கருத்தியலில் உழன்றுகொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம் காலமாற்றத்தின் முன் திக்கித் திணறுவதை, தோப்பில் முஹம்மது மீரானின் ‘அஞ்சு வண்ணம் தெரு’வும், தமிழ் முஸ்லிம் குடும்பப் பெண்களைக் களமாகக் கொண்டு, அப்பெண்கள் படும் வாதைகளைச் சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’யும், தம் சமுதாயத்தைக் கட்டிப் பிணைத் திருக்கும் அடிமைச் சங்கிலியை அறுத்திடச், சாதி ஏற்றத் தாழ்வு களைப் போக்கிட முனைகிற கீரனூர் ஜாகீர்ராஜாவின் ‘கருத்த லெப்பை’, ‘துருக்குத் தொப்பி’, அர்ஸியாவின் ‘ஏழைப்பங்காளி வகையறா’ போன்றனவும் குறிப்பிடத்தக்க ஆக்கங்களாகும்.

இடதுசாரிச் சிந்தனைப் புலத்தோடு வர்க்கமுரண்களை அடையாளங் காட்டும் முகத்தான் உருவாக்கம் பெற்ற ஸ்ரீதர கணேசனின் ‘அவுரி’, 1968 டிசம்பர் 25இல் 44 தலித் அப்பாவி மக்களின் உயிரைக் காவு வாங்கிய இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவை 1980களில் அழித்தொழித்த செய்திகளை, குறிப்பாக, கீழ வெண்மணி எரிப்புப் படுகொலைக்குப் பிந்தைய நிலையில், அதனை மையப்படுத்தி நடைபெற்ற போராட்டங்களை, எதிர் கொண்ட அரசியல் அடக்குமுறைகளை மையப்படுத்தி, பாட்டாளி யால் புனைவுபெற்றுள்ள ‘கீழைத்தீ’, ‘தஞ்சை மண்ணில் குண்டும் இல்லாமல் மருந்தும் இல்லா மல்’ தம் சித்து வேலைகளால் மட்டுமே அப்பாவி உழைப்பாளிகளை (நந்தனை) மாய்த்துவிட்ட மர்மங்களை மறுவாசிப்புச் செய்யும் சோலை சுந்தர பெருமாளின் ‘மரக்கால்’, நிலங்களை இழந்த விவசாயிகள் தம் சொந்த முகங் களை இழந்து திருப்பூர்க் கம்பெனிகளில் படும் அவலத்தை விவ ரிக்கும் சுப்ரபாரதிமணியனின் ‘ஓடும் நதி’, கரும்பு விவசாயிகளின் பாடுகளை விவரிக்கும் கு. சின்னப்ப பாரதியின் ‘சர்க்கரை’, கூட்டுக் குடும்பச்சிதைவினால் எதிர்கொள்ளும் நசிவை விதந்து பேசிடும் தங்கர் பச்சானின் ‘அம்மாவின் கைபேசி’, பெருகி வரும் நகர்மயமாதலின் பசிக்கு, கிராமங்களும் இயற்கையும் யாங்ஙனம் பலிகொடுக்கப்படுகின்றன என்பதை விவரிக்கும் முகத்தான் அமைந்துள்ள வெ. இறையன்புவின் ‘ஆத்தங்கரை ஓரம்’, தனி மனித நசிவைச் சித்தரிக்கும் பிரான்ஸிஸ் கிருபாவின் ‘கன்னி’, தனிமனித, சமூகக் குழுமத்தின் மன அழுத்தம் கொண்டாடப்பட வேண்டும் என்று உளவியல்பூர்வமாக வலியுறுத்துகிற நிஜந்தனின் ‘மேகமூட்டம்’, முதலாளிகளின் பிடியில் சிக்கிப் பரிதவிக்கும் பாமரர் படுகிற பாடுகளைக் காட்சிப்படுத்தும் சி.ஆர். ரவீந்திரனின் ‘செந்தூரச் சாரல்’ போன்ற பிரதிகள் நடப்புக்காலத் தமிழ் நாவ லிலக்கியச் சூழலில் காத்திரமானவையாகத் தென்படுகின்றன.

மேலும், சமீபத்திய வரவான ஜோ.டி. குரூஸின் கொற்கையை யும், சிறார் புதினமாக வந்துள்ள வேலு சரவணனின் ஐராபாசியை யும், அறிவியல் புதினங்களாகத் தலைகாட்டியுள்ள இரா. நடராச னின் ‘நாகா’மற்றும் ‘பூஜ்யமாம் ஆண்டையும்’, சிறுபத்திரிகை களில் தொடராக வந்துகொண்டிருக்கும் கோணங்கியின் ‘தீ நீரையும்’, வாமு கோமுவின் ‘கீதா’வையும் தமிழ் நாவல் உலகம் ஏற்று உட்கிரகிக்க முயலும் என நம்பலாம். இதே காலகட்டத்தில் வெளிவந்து தீவிர வாசிப்பைக் கோரிநிற்கின்ற நாற்பதுக்கும் மேலான காத்திரமான புதினங்கள் தம்மால் ஆன பங்களிப்பைத் தமிழ்ப் படைப்புலகிற்குத் தந்துள்ளன என்கின்ற செய்தியை இவ்விடத்துக் குறிப்பிட்டேயாக வேண்டும்.

நிறைவாக

சமகாலத் தமிழிலக்கியப் படைப்பு மற்றும் வாசகர் மனங் களானவை மரபு, தொன்மம் இழையோடும் புராதனத் தன்மை, நவீனப்பாங்கு, நவநவமான புதுமைமோகம் என்கிற கலவை களின் சங்கமமாகத் தொழிற்படுகின்றன. விளைவு, ஏகாதிபத்தியக் காலகட்டத்தில் அறிமுகஞ்செய்து கொண்ட கலைச் செயல்பாடு களைக் காலனிய மனோநிலையுடன் உள்வாங்கியமை யோடு, அதில் தம் சுதேசிய தன்மைகளையும் இட்டு நிரப்ப முயன்று வருகின்றன. இதன் தொடர்ச்சியில் தன்னையும் ஓர் இழையாக இணைத்துக்கொண்டு செயலாக்க நூற்றாண்டைக் கடந்த நாவல் வடிவம், தமிழ் வாழ்வின் சமூக, அரசியல், பண்பாடுகளைப் பதிவுசெய்துள்ள ஊடகமாக உள்ளதா? அல்லது வெற்றுக் கேளிக்கை வடிவமாக மட்டுமே புழங்கப்படுகிறதா என்ற வினா காலந்தோரும் எழுப்பப்பட்டே வந்திருக்கின்றது. இதற்கான விடையைத் தேட முயலும்போது, புதினப் பதிவு வரைவியல் குறித்த நுண்ணிய அவதானிப்பு அவசியமாகிறது.

-      குறிப்பாக, புத்தாயிரமாண்டின் தொடக்கப் பத்தாண்டுகளில் புனைவுற்றுள்ள நாவல் பிரதிகளை நோக்கும்போது, இவை கணிசமான எண்ணிக்கையை எட்டியிருப்பது மட்டுமன்றி, காத்திரமான படைப்புக்களைத் தந்துள்ள பிரதியாளர்களையும் தமிழ்ப்புதினப் படைப்புச் சூழல் தன் வசப்படுத்தியுள்ளது.

-      மேட்டுக் குடித்தனத்தாருக்கு மட்டும், பிறவியிலேயே படைப்பாளுமையை வரமாகப் பெற்று வந்தவர்களுக்கு மட்டும் என்றிருந்த படைப்புச்சூழல் மாறுபட்டு, சாமானியர்களும் கூடப் படைப்பாளிகளாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ள செயல்நிகழ்வு நடப்புக்காலத்தில் அரங்கேறியுள்ளது.

-      நாவல் படைப்புச் சூழலானது தம்முடைய பொது வகைமைத் தளத்திலிருந்து பெரிதும் மாறுபட்டு, தம் ஆழ, அகலங்களை மேன்மேலும் பன்முகப்பட்ட ஆளுமைத் திறங்களுடன் விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது.

-      மேலையிலக்கியக் கோட்பாட்டுத் தாக்கத்தால் பன்முகப்பட்ட பரிசோதனை முயற்சிகளானவை நாவலிலக்கியப் படைப்புச் சூழலில் கையாளப்பட்டிருப்பினும், பெரும்பாலும் மேற்கத் திய மற்றும் ஏனைய புனைவுப் பிரதேசவெளிகளின் கலை, இலக்கிய விடயங்களைச் சுவீகரித்து, மறு ஆக்கமாக உருமாற்றித் தருகின்ற போலி இரசவாதங்களை, நாசுக்காக நகலெடுக்கும் தன்மைகளைப் பெரிதும் தன்வயங் கொண்டதாகக் காட்சிப் படுகின்றன.

-      அயலகப் புகலிடச் சூழலிலிருந்து அவர்கள் எதிர்கொண்ட துயர்செறிந்த வாழ்வியல் பதிவுகளை, குறிப்பாக, அவர்கள் அனுபவித்த நசிவுப்பதிவுகளை, அதற்கான மீட்சியை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற தமிழ்மனம், தன்வரலாறு எனும் மேட்டுச் சித்திரிப்புகளை, கேளிக்கைகளைக் கொண்ட உள்ளடக்கக் கருத்தியலை நிராகரிக்க முற்படுகிறது எனின் மிகையில்லை.

-      தாம் அடக்கப்பட்ட விதம், ஒடுக்கி உருத்தெரியாது ஆக்கப் பட்ட நிலை ஆகியவற்றை மட்டுமே சிலாகித்துக் கொண்டு இராது, அடுத்தகட்ட பாய்ச்சலுக்கான நடவடிக்கையைப் பெண்கள், தலித்துகள் மேற்கொண்டுள்ளனர்.

-      தனக்காகத் தாரைவார்த்துத் தரப்படுகிற வெற்று அனுதாபங்களை நிராகரித்து, தம் வாழ்வியல் உரிமைக்கான போராட்டத்தை விளிம்புநிலை மக்கள் முன்னெடுத்துள்ளனர்.

-      அடிப்படைப் பிற்போக்குவாதங்களைக் காலாவதியாக்கும் முயற்சியும் நடைபெற்று வருகின்றது.

-      தன் மண் சார்ந்து, மக்கள் சார்ந்து, பண்பாடு சார்ந்து மட்டுமே பேசிக் கொண்டிருந்த பிரதியாளர்கள், அறிவியல் உலகிற்குள்ளும் அகில உலகப் புலங்களுக்குள்ளும் தம் சிந்தனையைச் செலுத்தி, புதுவுலகம் அமைத்திட முயன்று வருகின்றனர்.

-      “ஓர் ஓவியத்தின் வெற்றி தீட்டாத தீற்றல்களில் தான் இருக்குமாம்” கடந்த பத்தாண்டுக்கால நாவலிலக்கியக் கதையாடல்களைப் பன்முகப்பட்ட வாசிப்புவழிக் கடந்து வந்தும், ‘இன்னும் சொல்லப்படாத, சொல்லவிருக்கின்ற கதைகளுக்காக வாசக மனம் ஏனோ ஏங்கி நிற்கிறது’ என்று கூறின் மிகையில்லை.

(கட்டுரையாளர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழாசிரியர். கோட்பாட்டு அடிப்படையில் பிரதிகளை வாசிக்கும் ஆர்வத்தோடு செயல்படுகிறார். ‘தத்துவத் தேடல்’, ‘விளிம்பு நிலை மனிதர்கள்’, ‘பின்னை நவீனத்துவம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர். இவர் ‘தமிழ்ப் புனைகதைளில் பின்னை நவீனத்துவத்தின் தாக்கம்’ என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளார்.)

Pin It