இட்லரின் இறுதிக்காலம் பற்றி ‘வீழ்ச்சி’ (the downfall : Oliver Hirchbiegel : 2004) என ஒரு ஜெர்மானியத் திரைப்படம் வந்திருக்கிறது. புருனோ கன்ஸ் இட்லராக அதியற்புதமாக நடித்த அந்தப் படத்தில் பற்பல நெஞ்சை உருக்கும் காட்சிகள் இருக்கிறது.

இட்லரின் அறமும், படைப்பெழுச்சியும், மனிதாபிமானமும், விலங்குகளின் மீதான அவனது அன்பும் குறித்தவை அக்காட்சிகள். 

இட்லரது காரியதரிசியான இளம்பெண்ணின் மீது தந்தையின் வாஞ்சையுடன் அதியற்புதமாக அன்பு செலுத்துகிறான் இட்லர். கோயபல்சின் குழந்தைகளின் மீது மாளாத அன்பு கொண்ட இட்லர் தான் சாகும் தருவாயில் கோயபல்ஸ் குடும்பத்திற்கும் தன்னை நேசித்தவர்க்கும் தப்பிப்போகத் தனிவிமானம் ஏற்பாடு செய்கிறான். தான் அன்பாக வளர்த்த நாயைப் பிரிய மனமில்லாமல் தான் மரணமுறும் முன்னால் தனது நாயைக் கொல்கிறான் இட்லர். மிருகவதையை விரும்பாத தாவரப் புசிப்பாளன் இட்லர் என்பதையும் நாம் இதனோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இதே இட்லர் ஜிப்ஸிகளையும் உடல் ஊனமுற்றவர்களையும் யூதர்களையும் கம்யூனிஸ்ட்டுகளையும் உயிரோடு எரித்துக் கொன்றான். இட்லருக்கு இரண்டையும் செய்ய அவனுக்கு ஏதேனும் அடிப்படையான அறம் அவனளவில் இருந்திருக்கத்தான் வேண்டும். அறம் என்று பொத்தாம் பொதுவாக எதுவும் இல்லை என்பதுதான் நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டிய நிஜம். 

வர்க்கம், சாதி, இனம், பால், மதம் சார்ந்து வரலாறு நெடுகிலும் ‘தமக்கான பிறரது விசுவாசம்’ எனும் அடிப்படையில்தான் அவரவரது அறம் செயல்படுகிறது. 

படைப்பெழுச்சி, அறம் என ஒருவர் பேசுவது பிறிதொருவருக்கு பேத்தலாக இதனால்தான் தெரிகிறது. நிலைபாடுகள்தான் உண்டேயொழிய அறம் குறித்து அறுதியான நிஜம் என எதுவுமில்லை.

எதற்கு இதையெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது? 

தமிழ் இலக்கியச் சூழலில் படைப்பெழுச்சி, அறம் என்ற சதா 'அரற்றிக் கொண்டிருக்கிற' ஒரு வக்கிரன் குறித்து எழுத நேர்கிறதாலேயே இப்படித் தொடங்க வேண்டியிருக்கிறது. 

எம்.ஜி.ஆருக்குத் திக்குவாய், தி.க.சி.க்கு சாகித்திய அகாதமிப் பரிசு அவரது கடைசி காலத்துப் பென்சன், பெருங்குடிகாரனான ஜான் ஆப்ரஹாம் என் அறையில் மூத்திரம் பெய்தான், மனுஷ்யுபத்திரனின் கால் ஊனம்தான் அவரை மார்க்சிய அரசியலில் ஈடுபடாமல் செய்தது, அப்புறமாக அருந்ததி ராய்க்குக் குருவி மண்டை என்றெல்லாம் எழுதுகிற ஒரு வக்கிரனிடம் என்ன 'மண்ணாங்கட்டி அறத்தை' எதிர்பார்த்து நாம் எதிர்வினையாற்றுவது சாத்தியம்? 

முட்டாள்தனமாக - வரலாறும் தெரியாமல், உலக இலக்கியப் போக்குகளும் தெரியாமல் எழுத வேண்டியது, அதற்கு ஆதாரப்பூர்வமாக, தர்க்கப்பூர்வமாக, நாகரீகமாகப் பதில் எழுதினால், ‘அவதூறு’ என ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு, மறுப்பாக எழுதப்பட்ட கட்டுரையை வாசிக்காமலேயே மூன்று நான்கு பக்கத்திற்கு அனத்திக் கொண்டிருப்பது, இதுதான் வக்கிரன் எப்போதும் விவாதங்களை எதிர்கொள்கிற முறை. 

வக்கிரன் ஜெயமோகன். 

விவாதம் அருந்ததிராயின் இலக்கிய, அறிவுசார் தகுதிகள் பற்றிய அவரது கட்டுரை பற்றியது.. 

வக்கிரனின் அருந்ததிராய் பற்றிய கட்டுரைக்கான எனது மறுவிணை ‘உயிர்மை’ பிப்ரவரி-2011 இதழில் வெளியாகியிருக்கிறது. ‘யமுனா ராஜேந்திரன் எழுதிய கட்டுரையையே வாசிக்கமாட்டேன்’ எனச்சொல்லிவிட்டு, அது ‘அவதூறு’ என முடிவும் கட்டிவிட்டு அனத்தியிருக்கிறார் வக்கிரன். 

நாஞ்சில்நாடனை சாதிவாதி என அ.மார்க்ஸ் சொல்லிவிட்டார் என வேதனையில் இருக்கிறார் வக்கிரன். அ.மார்க்ஸ் ஆதாரமாகச் சொல்லியிருப்பதை நாஞ்சில்நாடன் தர்க்கப்பூர்வமாக மறுத்தால் பிரச்சினை முடிந்தது. அதற்கு எதற்கு எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ், யமுனா ராஜேந்திரன் எல்லோரும் அவதூறுக்காரர்கள் எனச் சந்தடி சாக்கில் இவர்களுக்கிடையிலான 'வித்தியாசங்களை' அழித்துவிட்டுப் பினாத்த வேண்டும்? 

நேரடியாகப் பதில் சொல்லாமல் போகிற போக்கில் எதுவோ ஒரு இணையதளக் குஞ்சுவுக்கு இப்படிப் பதில் சொல்வதுதான் வக்கிரனின் பாணி. 

இவர் சமீபத்தில் எழுதிய மூன்று சிறுகதைகளைப் பற்றி ஒருவர் தனது வலைப்பதிவில் எழுதியதை எல்லோரும் படிக்க வேண்டுமாம். தொடுப்புத் தருகிறார். நான் அருந்ததிராய் பற்றி எழுதிய மறுவினைக்கும் இந்த மூன்று கதைகளுக்கும் என்னய்யா சம்பந்தம்? இலக்கியத்துக்கும், அரசியல் மற்றும் கருத்தியலுக்கும் இருக்கும் நெருக்கமும் விலகலும் பற்றியது எனது கட்டுரை. அருந்திராய் பற்றிய ஜெயமோகனின் கருத்துக்கள் அனைத்தும் அபத்தம், முட்டாள்தனமானது என நான் ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறேன். 

இதற்கு ஜெயமோகனின் ஒற்றைவரி பதில், ‘அவதூறு‘. மற்றொரு பதில் இவரது கதைகளைப் படிக்க வேண்டுமாம்.. 

எனக்குப் படிக்கவென வேறு தேர்வுகள் இருக்கிறது. பிரச்சினை அருந்ததிராய் பற்றியது, இவரது மூன்று கதைகள் பற்றியது இல்லை. அருந்ததிராயை மட்டுமல்ல, நான் பேசுகிற விஷயங்கள் அனைத்தையும் படித்துவிட்டுத்தான் நான் பேசுகிறேன். வக்கிரன் அருந்ததிராயின் புனைவு மற்றும் புனைவல்லாத அரசியல் எழுத்துக்கள் எதனையும் படிக்காமல், அதனது பின்னணி குறித்த அறிவில்லாமல் பேத்துகிறார் என்பதுதான் எனக்குப் பிரச்சினை. 

வக்கிரன், நான் எஸ்.ராமகிருஷ்ணன் குறித்து எழுதியதைப் படித்திருக்கிறீர்களா என இணையதளக் குஞ்சுவிடம் கேட்கிறார். நான் எஸ்.ரா பற்றி மட்டுமல்ல சாரு நிவேதிதா பற்றியும்தான் எழுதியிருக்கிறேன். எனது வாசிப்பின், எனது ஈடுபாடுகளின், எனது அறிவின் எல்லைக்குள் நின்று, எனக்குத் திட்டவட்டமாக தெரிந்தவற்றைப் பற்றி மட்டுமே நான் எழுதியிருக்கிறேன். 

எஸ்.ரா. பற்றி மூன்று சந்தர்ப்பங்களில் நான் எழுதியிருக்கிறேன். 

ரித்விக்கடக்கையும், சத்யஜித்ரேயையும், பாலச்சந்தரோடு ஒப்பிட்டு, குறிப்பாக கடக்கின் ‘மேகா தாரா தாக்’ திரைப்படத்துடன் ஒப்பிட்டு அவர் எழுதிய கட்டுரை மிக அற்பமானது என நான் எழுதியிருக்கிறேன். சோடர்பர்க்கின் ‘சே குவேரா’ திரைப்படத்தைப் பார்க்காமலேயே எஸ்.ரா. அப்படத்தைப் பிறருக்குப் பரிந்துரைப்பது அபத்தம் என நான் எழுதியிருக்கிறேன். 

'உலகின் சீரிய எழுத்தாளர்கள் அனைவரும் வணிகப்படங்களுக்கு எழுதியிருக்கிறார்கள்' என அவர் சொல்வதற்கு என்ன ஆதாரம் என நான் கேட்கிறேன். இத்தனையும் நான் கேட்கக் காரணம், எனக்கு நான் பேசுகிற விஷயம் பற்றி திட்டவட்டமான அறிதல் இருக்கிறது. எஸ்.ரா, தான் வணிகப்படங்களுக்கு வசனம் எழுதுவதற்குச் சாதகமான ஒரு அறிவுப்புலத்தை உருவாக்குவது, தமிழ் வாசகனை, பார்வையாளனை ஏமாற்றுவது என அறிந்திருப்பதால் நான் இதனை எழுதுகிறேன். 

இதுவன்றி அவர் குறித்து நான் எழுதியது, ‘அரசியல் பற்றி எனக்குத் தெரியாது’ எனும் முன்னறிவிப்புடன் ஈழப்பிரச்சினை பற்றி அவர் எழுதியபோது, ‘தெரியாத விஷயங்கள் பற்றி ஏன் பேசுகிறீர்கள்?’ என நான் எஸ்.ராவிடம் கேட்டேன். 

இதனையே நான் சாருநிவேதிதாவிடம் பல சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறேன். இதனைத்தான் வக்கிரனிடமும் கேட்கிறேன். அருந்ததிராய் பற்றிப் படிக்காமல், தெரியாமல் முட்டாள்தனமாக எழுதுகிறீர்கள் என நான் வக்கிரனிடம் சொல்கிறேன். 

இந்தக் கேள்விகள் பெரும்பாலும் திரைப்படங்களும் அரசியலும் சார்ந்தவை. நான் எஸ்.ராவின் புனைவுகள் குறித்து எப்போதும் அபிப்பிராயம் சொன்னது இல்லை. சொல்கிற உத்தேசமோ, நேரமோ, வாசிப்புத் தேர்வோ இப்போதைக்கு எனக்கு இல்லை. 

இதுமாதிரித்தான், ரஜினிகாந்த் ரசிகர்கள் ‘லும்பன்கள்’ என்றொரு விவாதத்தை ‘சூர்யா’ எனும் புனைபெயர் பிரகிருதி ‘பதிவுகள்’ இணையதளத்தில் துவங்கியபோது, அதனை ஆதரிக்கவந்த வக்கிரன் குறித்து நான் எழுதியிருக்கிறேன். ‘சிந்துசமவெளி’ மாதிரிப் பலான படத்துக்கு வசனம் எழுதுகிற ஒரு நபரான வக்கிரன், ஜான் ஆப்ரஹாம் என்றொரு முன்னோடித் திரைக் கலைஞனை அவமானப்படுத்தியபோது அதற்கு எதிர்விணை ஆற்றியிருக்கிறேன். நண்பர் ஆர்.ஆர்.சீனிவாசன் தொகுத்த ஜான் ஆப்ரஹாம் : கலகக்காரனின் திரைக்கதை (வம்சி பதிப்பகம் : 2011) தொகுப்பிலுள்ள அக்கட்டுரை, முதலில் நண்பர் ரோஸா வசந்த்தின் வலைப்பூவில் வெளியானது.  இதுவன்றி நான் முழுமையாக வாசித்த பின்தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம் போன்றவை குறித்து, விரிவாக அல்லாமல் சிதறலாக எனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறேன். 

அல்லாமல், நான் ‘உயிர்நிழல்’ சஞ்சிகையில் விவாதித்த புனைவு சாருநிவேதிதாவின் ‘உன்னத சங்கீதம்’ சிறுகதை. ஈழம் குறித்த அதனது அபத்த அரசியலுக்காகவே அது குறித்து நான் பேச நேர்ந்தது. 

இவ்வாறு திரைப்படம், அரசியல், இலக்கியம் என எல்லாப் பிரச்சினைகளிலும் எனது வாசிப்பின் எல்லைக்குள் நின்று, எனது பார்வையனுபவத்தின், எனது நடைமுறை அனுபவத்தின் எல்லைக்குள் நின்று, இவைகள் குறித்த தெளிவான அறிவுடன்தான் நான் பேசினேன். 

இதே மாதிரியிலானதொரு அறிவுடன் பேசுவது அறிவுசார் ஒழுக்கம் என நான் வக்கிரனிடம் சொல்கிறேன். 

இதற்கு நாணயமாகப் பதில் சொல்லுவதை விட்டுவிட்டு ‘லூசுத்துனமாகப்’ படைப்பெழுச்சி, அறம் என்றெல்லாம் அனத்திக் கொண்டிருப்பதுதான் எப்போதும் வக்கிரனின் எழுத்துமறம்.

 மற்றபடி இந்துத்துவப் பிரியர் ஜடாயு ஊட்டி இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்வதும், ஆர்.எஸ்.எஸ். ஊதுகுழலான ‘ஜெயபாரதம்’ எழுத்தாளர் வலைப்பூவில் ஜெயமோகன் இணையதளத் தொடுப்பு இருப்பதும், ஜெயமோகனுக்காகச் சான்றிதழ் தர ஆர்.எஸ்.எஸ். பிதாமகன் அரவிந்தன் நீலகண்டன் வருவதும், விஷ்ணுபுரம் அமைப்பு சார்ந்தவர்கள் தமிழ் ஹிந்துவில் எழுதுவதும், வெ.சா. தமிழ் ஹிந்துவில் தொடர்கட்டுரை எழுதுவதும், அதே வெ.சா. நாஞ்சில்நாடனை புகழ்கிறவாக்கில் திராவிட மற்றும் இடதுசாரிகளை நக்கலடிப்பதும் என இவையெல்லாம் யதேச்சையாக நடக்கிறது என நான் நம்பாததைப் போலவே, அருந்ததிராய் பற்றிய வக்கிரனின் கட்டுரைக்கு அதே ஜடாயு வந்து ஒப்புதல் கடிதம் போடுவதையும் நான் யதேச்சையானதாக நினைக்கவில்லை. 

இப்படி நான் நினைக்காததற்கான காரணம் இந்திய வரலாறு நெடுகிலும் வீழ்ந்து கிடக்கிறது. 

நாகரீகமாக நாம் எழுதுகிறபோது நாகரீகமாக எதிர்வினையாற்றினால் நாமும் நாகரீகமாக எழுதவே வேண்டும். அதுவே எழுத்து அறம். பிறரை அவமானப்படுத்துவதையே விமர்சன அணுகுமுறையாகக் கொண்டு, வெறித்தனமாகவும், வக்கிரமாகவும் எழுதுபவர்களுக்கான எமது மறுவினை எவ்வாறுதான் இருத்தல் சாத்தியம்? இப்படியெல்லாம் எழுவது வருத்தமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய? சே குவேரா சொன்ன மாதிரி ‘நரிகளின் உலகத்தில் நாமும் சிலவேளைகளில் நரியாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது’.

- யமுனா ராஜேந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)