திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ‘உப பாண்டவம்’ நூற் பிரதிகள் கொஞ்சம் வாங்கப்பட்டது என அறிகிறோம். ‘உப பாண்டவம்’, ‘விஷ்ணுபுரம்’ போன்ற நூற்களில் எத்தனை பிரதிகள் தேவஸ்தானங்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள், பக்திப்பத்திரிகை நடத்தும் சர்க்கரை முதலாளிகள், இன்னும் யார் யாரால் மொத்தமாக வாங்கி விநியோகிக்கப்படுகின்ற என்கிற தகவல்களைத் திரட்டினால் சுவையாக இருக்கும்.

**********************************

தேவரீர்களைத் தொண்டனிட்டு வேண்டிக் கொள்வது யாதெனில்

திரு. அல்பிரட் துரையப்பாவைப் பொன்னலை வரதராசப் பெருமாள் கோவிலில் வைத்துப் பிரபாகரன் சுட்டுக் கொன்றதோடு தொடங்கிய - வணக்கத்தலங்களில் படுகொலை செய்யும் போர் அறமும் வீரமும் இப்போது திரு. ஜோசப் பரராச சிங்கம் மட்டக்களப்பு செயின்ட் மேரிஸ் கதீட்ரல் தேவாலயத்தில் கிறீஸ்மஸ் பிராத்தனையில் ஈடுபட்டிருந்த போது 25-12-2005 இன்று அதிகாலை 1.20 மணியளவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு வந்து நிற்கிறது. திரு. ஜோசப் பரராச சிங்கத்தின் துணைவியார் திருமதி சுகுணம் பரராசசிங்கமும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மிக ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மாவீரம் தமிழ் மாண்புமல்ல மனித மாண்புமல்ல.

இவ்வேளை மனிதர் தம்மை ஆண்டவர் முன் ஒப்புக் கொடுத்து இறைஞ்சும் வேளை திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை’ எனும் வேளை. திரு. செல்வநாயகம் சொன்னார் தமிழ் மக்களைத் தெய்வம் தான் காப்பாற்ற வேண்டுமென. தமிழர் நிலை இப்போது திரு. ஜோசப் பரராசசிங்கத்தின் நிலையில் வந்து நிற்கிறது.

காத்தான் குடிப்பலிபள்ளிவாசலில் தொழுகையில் இருந்த முஸ்லிம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலை (103 பேர்).

பௌத்த விகாரை தலதா மாளிகையில் நிகழ்த்தப்பட்ட படுகொலையும், குண்டு வைப்பும்...

இப்படியாக வணக்கத் தலங்களில் அவ்வப்போதைய அரசியல் எதிரிகளைக் கணக்குத் தீர்ப்பதும் அப்பாவி களைக் கொல்வதும் மனித நிலையுமல்ல. மிருக நிலையுமல்ல. அது “சூரன் போர்” நிகழ்த்துவது போன்ற தேவர், கடவுள் நிலை. இத்தெய்வ நிலையைத் துறந்து மனித நிலையை அடையத் தேவரீர் தங்களைத் தொண்டனிட்டு இறைஞ்சுகிறோம்.

- சுகன்.

**********************************

இந்த மாதத்தின் சிறந்த உளறல்

“ஜெயமோகனின் எழுத்தின் அடிப்படை காந்தியின் அறிவியல்” என்கிற கூற்று (உயிர்மை, பிப்ரவரி 2006, பக்.55) இந்த மாதத்தின் தலைசிறந்த உளறலாகத் தேர்வு செய்யப்படுகிறது.

இதை உளறிய சாருநிவேதிதாவுக்கான பரிசை வாசகர்கள் தேர்வு செய்து அனுப்பலாம்.

**********************************

சுகன் கதைத்தவை

                            சொன்னதெழுதல்

1 விடுமுறைக்கு ஊர் சென்று திரும்பிய ரதியின், சித்தப்பா சொன்னது:
“என்ரை சகோதரத்தின்ரை பிள்ளையள் எல்லாம் வெளிநாடுகளுக்குப்போய் நல்லாயிருக்குதுகள். என்ரை இரண்டு பிள்ளையள் மட்டும்தான் இஞ்சை இன்னும் மரமேறுதுகள்.”

இதை வெள்ளாள நண்பருக்குச் சொன்னேன் “வேறுவழியில்லை” என்றார் அவர்.

2. பேராசிரியரின் மகன் பாட சாலையிலிருந்து வீட்டிற்கு வந்து தன் தந்தையிடம் “அப்பா நீங்கள் எனக்கு அடிக்க ஏலாது தெரியுமோ!” என்றான்.

பேராசிரியர் “ஏன் மகன் உனக்கு நான் எப்பவாவது அடித்திருக்கிறேனா? ஒருநாளும் அடிக்கயில்லையே!” என்றார் பரிவோடு.

மகன் சொன்னான்: “நீங்கள் எனக்கு அடிக்கயில்லை என்பதில்லை, நீங்கள் எனக்கு அடிக்க ஏலாது!”

**********************************

                            இரு மரபும் தூயவந்த உயர் சைவ வேளாளர்

Rue Du Fbg St. Denis இல் ஒரு Café’ Bar இரண்டு இளைஞர்களும் ஒரு முதியவரும்.

முதியவர் சொன்னார்: வெள்ளாளர் என்றதிற்கு நான் உத்தரவாதம். பொம்பிளை வீட்டாரிட்டைக் காசில்லை, இந்தியாவிலை வந்து நிக்கினம், பொம்பிளையைப் பாத்தா மாட்டன் என்டு சொல்லமாட்டீங்கள் அப்பிடி வடிவு, போட்டோவிலையும் அப்பிடித்தான். பாத்தா விடமாட்டீங்கள். ஓமெண்டா குறிப்பையோ ஆகவேண்டியதையோ பாக்கலாம். இங்கை வந்திருந்தா ஏதாவது குடிக்க வேணும். சும்மா இருக்க விடமாட்டினம். குடிக்கிறீங்களோ!

இல்லை, நேரமில்லை, வேலைக்குப் போகவேணும்.

இளைஞர்கள் போகின்றனர். நான் முதியவரின் முன்போய் அமர்கிறேன்.

நீங்கள் கோப்பி ஒன்று குடிக்கிறீங்களா?

ஓம்.

பெரியவர் நீங்கள் பேசினதைக் கேட்டன்; நீங்கள் கலியாணம் செய்து வைக்கிறனீங்களோ! புறோக்கரோ!

ஓம்!

வெள்ளாளருக்கு மட்டும்தான் செய்து வைப்பீங்களோ இல்லை, மற்ற ஆக்களுக்கும் செய்து வைப்பீங்களோ!

இல்லை; வெள்ளாருக்கு மட்டும்தான்.

ஏன்?

மற்றவையினரை சாதி கண்டுபிடிக்கிறது கஷ்டம்.

**********************************

32வது இலக்கியச் சந்திப்பில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
பிரான்ஸ் - 13.11.2005


அறமிழந்த கொடிய கொலைக் கலாச்சாரச் சூழலிலும் பண்பாட்டு பாஸிசத்துக்கும் நடுவில் என்றும் இல்லாதவாறு நமது தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் சிக்கியுள்ளன. கொலை யாளிகளுக்கும் வன்முறையாளர்களுக்கும் பின்னால் தமிழ் - முஸ்லிம் சமூகங்களின் நலனுக்காகப் பாடுபடுவதாகக்கூறும் அமைப்புகளும் இயக்கங்களும் நின்று கொண்டிருக்கின்றன. அனைத்துக் கொலைகளும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்துகிறோம். அரசு அல்லது புலிகள் அல்லது வேறு எவராவது வழங்கும் கொலைத்தண்டனைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் வைத்து ‘பாலியல் தொழிலாளி’ என்ற குற்றச் சாட்டின் பேரால் கொல்லப்பட்ட சகோதரி சாந்தினியின் கொலைக்கு எமது பலத்த கண்டனங்களைத் தெரிவிக்கிறோம். யோகேஸ்வரி என்னும் சிறுமியின் மீது பாலியல் வதை புரிந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கணேசலிங்கத்தையும் மற்றும் இது போன்று பெண்கள் மீது பாலியல் வதை புரிவோரையும் நாம் கடுமையாகக் கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.

இலங்கையில் தங்களது தாயக பூமியான வடக்கிலிருந்து பதினைந்து வருடங்களிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீளக் குடியேற்றுமாறு வேண்டுகிறோம். அவர்களுக்கான பாதுகாப்பு, மற்றும் ஜனநாயக உரிமைகளை வழங்குமாறு அனைத்து ஜனநாயக, மனித உரிமைச் சக்திகளையும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத் திரைப்படக் கலைஞர் குஷ்பு கூறிய கருத்துக்களுக்குப் பின்னால் குஷ்புவின் பேச்சுரிமை கருத்துரிமையை மறுத்து குஷ்புவை தமிழ் நாட்டை விட்டே விரட்டுவோம் எனக் கூறியும் குஷ்புவின் கருத்துரிமைக்காக குரல் கொடுப்போரை அச்சுறுத்தியும் குஷ்பு மீது பல வழிகளிலும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் கட்சிகளையும் அமைப்புகளையும் கலாச்சார அடிப்படைவாதிகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

**********************************

64வது நாயன்மார்

பெரியாரை தலித்துகளின் விரோதியாக்கி எழுதி வந்ததற்கும், இந்துமதத்தை விட்டு விட்டு சாதிதனியாக இயங்கத் தொடங்கிவிட்டது என்கிற பார்ப்பனர்களுக்கு உகந்த மொழியிலும் பேசி வந்த ரவிக்குமாருக்கு கைமேல் பலன் கிடைக்கத் தொடங்கிவிட்டது. ‘பிராமின் டுடே’ என்கிற பார்ப்பன பத்திரிகை அவரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளது. “இன்றைய காலகட்டத்தில் இடது சாரிகளும் அறிவுத்துறையினரும் மதவாதத்தையே பெரிய ஆபத்தாகச் சுட்டிக்காட்டுகின்றனர். (Religious Majority) சாதிப் பெரும்பான்மைவாதத்தையே (Castle Majority) நான் மிகப்பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கிறேன். இந்திய ஜனநாயகத்தின் சாரமாக (Rule of cast Majority) என ஆக்கிவிட்டார்கள். தமது பாதுகாப்பை மதப்பெரும்பான்மை என்பதற்குள் கண்டு கொண்டிருந்த பிராமணர்கள் இந்த ஆபத்தை இன்றும் புரிந்து கொள்ளவில்லை. இதைப்புரிந்து கொண்டால் நிச்சயமாக அவர்கள் தலித்துகள் உள்ளிட்ட சிறுபான்மையினரோடு அய்க்கியப்பட முன்வருவார்கள்’ என்று அண்ணல் அம்பேத்கருக்கு முரணான பார்ப்பன- தலித் அய்க்கிய முன்னணியன்றை உருவாக்க விரும்புகிறார். சங்கராச்சாரியை கைது செய்தபோது பிராமணரல்லாதார் எழுச்சியால் பாதிக்கப்பட்ட பிராமணர்கள் தங்களை தற்காத்து கொள்ள உருவாக்கிய நிறுவனம் ‘சங்கரமடம்’ என காலச்சுவடில் எழுதியது நினைவுக்கு வருகிறது. 64வது நாயன்மாராக பூணூல் அணிய விரும்பும் காலச்சுவடு ரவிக்குமாருக்கு நாம் பிரிவு உபசாரம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

Pin It