admin corruptionஇராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற ஊழியர் சங்க ஊழியர்களுக்கு வீட்டுமனை வாங்கித் தருவதாக கூறி நூறு கோடி ரூபாய்க்கும் மேலாக ஊழல் நடந்துள்ளதாக நக்கீரன் வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தரகர்கள், அரசு அதிகாரிகள் மூலம் அரசு நிலத்தை வணிக நிலமாக, முறைகேடாக போலியாக மாற்றம் செய்து, சங்க உறுப்பினர்களுக்குப் பட்டா வாங்குவதற்காகத்தான் இவ்வளவு பெரும் தொகை வாரி இறைக்கப்பட்டுள்ளது.

இம்முறைகேடு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு சென்றவுடன் பெல் சிட்டி என்ற பெயரில் பெல் நிறுவன ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிறுத்தி வைக்கப்படுவதாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பணம் கொடுத்து எப்படியாவது காரியம் சாதிக்க நினைத்து ஏமாந்த தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்துப் போய் நிர்க்கதியாய் நிற்கின்றனர்.

மேற்கண்ட மகத்தான சாதனையை யார் செய்திருப்பார்கள்? அனேகமாக ஆளும் கட்சிக்காரன் எவனாவது செய்திருப்பான் என்றுதானே நினைப்பீர்கள்? அதுதான் இல்லை. உண்மையில் இதில் ஈடுபட்டிருப்பது யார் என்று தெரிந்த பலருக்கு அதிர்ச்சியிலும் ஏமாற்றத்திலும் தலையை சுற்ற ஆரம்பித்து விட்டது. எதற்கும் நீங்களும் தயாராக இருங்கள் தலை சுற்றி கீழே விழுந்து விடப் போகிறீர்கள்!

‘தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஒரே நக்சல்பாரி புரட்சிகர அமைப்பு நாங்கள் மட்டுமே’ என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் அமைப்பின் தொழிற்சங்க பிரிவினர்தான் இந்தச் சாதனைக்கு சொந்தக்காரர்கள். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலச் செயலாளர் திருவாளர் சுப.தங்கராசு அவர்கள்தான் ஓய்வு பெற்ற பெல் நிறுவன தொழிலாளர்களுக்கு வீட்டு மனை வாங்கித் தருவதாகக் கூறி இந்த ரியல் எஸ்டேட் ’தரகு’ வேலையை கனகச்சிதமாக செய்துள்ளார்.

இந்த ஊழல் நக்கீரன் பத்திரிகையில் வெளியாகி அம்பலமான பிறகு அந்த அமைப்பின் மாநில இணைச் செயலாளர் திருவாளர் பழனிச்சாமி அவர்கள் ‘சுப. தங்கராசுவுடன் சங்கத்தினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது’ என்று ரகசியமாக உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பொதுவில் விளக்கமளிக்கவோ, சுய விமர்சனம் செய்துக் கொள்ளவோ முன்வராமல் இதில் தமது பொறுப்பை கைக்கழுவி மூடி மறைத்து விடப் பார்க்கிறார்கள்.

‘திரு சுப தங்கராசு நல்லெண்ண அடிப்படையில் ஓய்வு பெற்ற பெல் தொழிலாளர்களுக்கு வீட்டு மனை வாங்கிக் கொடுக்க முயற்சி செய்தார். ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அவரை ஏமாற்றி விட்டார்கள், அதற்கு அவர் என்ன செய்வார், அவருக்குப் பொறுப்பான அரசியல் தலைமைதான் என்ன செய்யும்’ என்று அப்பாவித்தனமாக சிலர் நினைக்கலாம்.

ஒரு புரட்சிகர அமைப்பின் நடைமுறையின் அடிப்படையில் பரிசீலிக்கும் போதுதான் இந்தச் சீரழிவின் முழு பரிமாணமும் தெளிவாகும். ஒரு புரட்சிகர தொழிற்சங்கத் தலைமைக் குழுவில் இருக்கும் ஒருவரது சொந்த வாழ்க்கையும், அவரது நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் அரசியல் தலைமையாலும், தொழிற்சங்கத் தலைமையாலும் மாதாந்திர அடிப்படையில் வழிகாட்டப் படுகின்றன, வழிகாட்டப்பட வேண்டும்.

அவ்வாறு வழிகாட்டப்படும் நூற்றுக்கணக்கான தோழர்கள் பேருந்துகளிலும் பொது இடங்களிலும் நிதி திரட்டியும், பத்திரிகை விற்றும் தமது வாழ்வுக்கான ஆதாரமாக ஒரு சில ஆயிரம் ரூபாய்களை மக்களிடம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். அத்தகைய தோழர்களை அவமதித்து வெளியேற்றி பின்னர் நடுத் தெருவில் நிறுத்தி விடும் இந்த அமைப்பில் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கையாண்டிருப்பதும், அதன் மூலம் தமிழ்நாட்டின் ஆகக் கேடுகெட்ட ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பலுடன் உறவாடியதும் புரட்சிக்கும், உழைக்கும் மக்களுக்கும், பு.ஜ.தொ.முவின் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் இழைத்த துரோகமாகும்.

100 கோடி ரூபாய் அளவிலான தொகையைத் திரட்டியதும், அதை வெள்ளையாக ரூ 9 கோடி, கருப்பாக பல 10 கோடிகள் என்று ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் கொடுத்ததும், அரசு நிலத்தை முறைகேடாக பாகுபாடு மாற்றம் செய்ய முயற்சித்ததும் திரு தங்கராசு என்ற தனிநபர் மட்டும் தொடர்புடைய விஷயம் இல்லை.

முறைகேடு பற்றிய விபரங்கள் நக்கீரன் பத்திரிகையில் வெளியாவதற்கு முன்பு பு.ஜ.தொ.மு தலைமைக் குழுவுக்கும் அதன் அரசியல் தலைமைக்கும் இந்த விவகாரங்கள் தெரியாமல் இருந்திருக்க முடியாது. பொதுவில் அம்பலமாவது வரை அதை மூடி மறைத்தவர்கள், விஷயம் வெளியானவுடன் திரு சுப. தங்கராசுவை இடைநீக்கம் செய்து தங்களை சுத்தமானவர்களாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

எனவே, இது ஏதோ தனிப்பட்ட ஒரு நபரின் தவறு என்று நினைத்து விட முடியாது. இந்த ஊழல் புரையோடிப் போனது என்ற முறையில்தான் இதை நாம் அணுக வேண்டும்.

உதாரணமாக, போலீஸ் சாத்தான்குளம் செல்ஃபோன் வியாபாரிகளை கொலை செய்த விவகாரம் ஊடகங்களில் அம்பலமானதும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. அதன் மூலம், ‘போலீசு ஏதோ இப்போதுதான் முதன் முறையாக இப்படிப்பட்ட கொலையைச் செய்து விட்டதைப் போன்றும், இத்தகைய கொலைகளை நீதிமன்றம் சகித்துக் கொள்ளாது’ என்றும் நமது காதுகளில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

ஆனால் போலீசின் மக்களுக்கு எதிரான அத்துமீறல்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான வழக்குகள் இதே நீதிமன்றங்களில் தேங்கிக் கிடப்பதை பற்றி நீதிபதிகளுக்கு தெரியாதா என்ன? சென்னை உயர்நீதி மன்றத்திலேயே நுழைந்து நீதிபதிகளின் மண்டைகளையே பிளந்த தமிழக போலீசின் கோரமுகத்தை அறியாதவர்களா நமது நீதிபதிகள்? போலீசிடமிருந்து தம்மையேக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்கள்தான் நம்மை காப்பாற்றப் போகிறார்களாம்! இவ்வாறாக போலீசின் குண்டாந்தடிகளும், துப்பாக்கிகளும் மட்டுமல்ல இத்தகைய நீதிமன்ற நடைமுறைகளும்தான் சமூகத்தின் பாதுகாப்பு கவசங்கள் என்று சாதிக்கிறார்கள், ஆளும் வர்க்கங்கள்.

அது போல, பு.ஜ.தொ.மு தொழிற்சங்கத் தலைமைக்கும், அதன் அரசியல் தலைமைக்கும் தெரியாமலேயே சுப.தங்கராசு மட்டுமே இந்த ஊழலைச் செய்து விட்டதாக, தமது வெகுளித்தனமான ஆதரவாளர்களையும், அமைப்பிலுள்ள தமது கொத்தடிமைகளையும் நம்ப வைப்பதற்காக, அவரை அமைப்பிலிருந்து நீக்கி விட்டதாக அறிக்கை வெளியிட்டு நமது காதுகளில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். சாத்தான் குளம் போலீசாரை இடைநீக்கம் செய்துள்ள அரசின் செயலுக்கும், இவர்களின் செயலுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், தான் உருவாக்கிய திட்டத்தையும் குப்பையில் போட்டுவிட்டு, புதிதாக எதையும் உருவாக்காமல், கடந்த இருபது ஆண்டுகளாக, தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு வருகின்றனர் இவ்வமைப்பினர்.

காலிப் பெருங்காய டப்பாவிலிருந்து வாசனை வருவதைப் போன்று, எழுபதுகளில் நக்சல்பாரி அமைப்பிலிருந்து தெரிந்து கொண்ட சில வார்த்தைகளை நீட்டி முழங்குவதாலேயே, புட்சிகர அமைப்பாக வெகு காலத்திற்கு நடித்துக் கொண்டிருக்க முடியாது என்பதைத்தான் நூறு கோடி ரூபாய் பெல் சிட்டி ஊழல் மூலம் நிரூபித்துள்ளனர்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமது அமைப்பில் புரட்சிகர உணர்வோடு இணைந்துச் செயல்பட முன்வரும் இளைஞர்களை போகாத ஊருக்கு வழி கேட்பவனைப் போல, நிறைவேற்றவே முடியாத மாதாந்திர வேலைத் திட்டத்தை தந்தும், உளவியல் ரீதியாக அச்சுறுத்தியும் காயடித்தார்கள். பலரை மன நோயாளிகளாக ஆக்கினார்கள்.

புரட்சிகரக் கோட்பாடு இல்லாமல், எனவே, புரட்சிகர நடைமுறையும் இல்லாமல் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு கிடக்கும் இந்த அமைப்பினரும் அதன் சகோதர அமைப்புகளும் சீரழிவுப் பாதையில் வெகு தூரம் சென்று விட்டதற்கான துலக்கமான ஆதாரம்தான் இந்த நூறு கோடி ரூபாய் ஊழல். இன்னும் பல பரபரப்பான காட்சிகளை அவர்களிடமிருந்து நாம் இனி வரும் காலங்களிலும் எதிர்பார்க்கலாம்.

இனியும் இந்த சீரழிவு அமைப்புகளை புரட்சிகர சக்திகளாக பிரச்சாரம் செய்து கொண்டு அங்கே ஒட்டிக் கொண்டிருப்பவர்கள், இந்த முறைகேடுகளிலும் சீரழிவுகளிலும் பங்காளிகளாகவும், பங்குதாரர்களாகவும் மட்டுமே இருக்க முடியும். இந்த விபரங்கள் தெரியாமல் இவர்கள் முற்போக்கான புரட்சிகரத் தன்மை உடையவர்கள் என்று அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருப்பவர்கள் இந்த முறைகேடுகளுக்கு முட்டுக் கொடுப்பவர்களாகவே இருப்பார்கள்.

பொதுவுடைமை இயக்க சித்தாந்த வார்த்தைகளை உச்சரிக்கும் தகுதியைக் கூட பு.ஜ.தொ.முவும் அதன் சகோதர அமைப்புகளும் இழந்து விட்டன என்பதன் அடையாளம்தான் இந்த ஊழல். தமிழகத்தின் புரட்சிகர இயக்கத்துக்கு பெரும் முட்டுக் கட்டையாக மாறி விட்டிருக்கும் இந்த அமைப்புகளின் தலைமையைத் தூக்கி எறிவது பற்றி உள்ளே இருக்கும் புரட்சிகர சக்திகளும், அதனை புரட்சிகர அமைப்பாக அங்கீகரிக்கும் ஆதரவாளர்களும்தான் முடிவு செய்ய வேண்டும்.

- ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு

Pin It