அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல்’ என்ற அம்பேத்கர் கோட்பாட்டுக்கு தவறான விளக்கம் தரப்படுவதை தஞ்சை மாநாட்டில் ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் சுட்டிக் காட்டியதோடு, இந்து மதம் ஒழியும்போதுதான் சாதி ஒழியும் என்று வலியுறுத்தினார். (சென்ற வார தொடர்ச்சி)

சாதியை ஒழிக்கப்போன அம்பேத்கர் எதற்கு கடவுள் மறுப்பு வாசகங்களை சொல்ல வேண்டும். அதிலே தான் நீங்கள் பெரியாருடைய கல்வெட்டிலே பொறிக்கப்பட்டுள்ள கடவுள் மறுப்பு வாசகங்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதைத் தான் இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

கடவுள் மறுப்பை சொல்லாமல் நீங்கள் சாதியை ஒழிக்க முடியாது என்பதே அம்பேத்கருடைய பெரியாருடைய மிக ஆழமான, தெளிவான நிலை. ஆனால் அம்பேத்கரிஸ்டுகள் அம்பேத்கருடைய கடவுள் மறுப்புக் கொள்கையை சரிவர பிரச்சாரம் செய்வதில்லை. அதனால் தான் பெரியாரை அவர்கள் வெறும் கடவுள் மறுப்பாளராக பார்க்கின்றார்களே ஒழிய அம்பேத்கருக்கு இணையாக சாதியை ஒழிக்க போராடிய போராளியாக பார்க்க மறுக்கிறார்கள்.

அதேபோல மதம் மாற்றம் என்று எடுத்துக் கொண்டால் தந்தை பெரியார் அவர்கள் நான் பவுத்தத்திற்கு போய்ச் சேர மாட்டேன் என்று சொன்னாரே ஒழிய அது ஒரு நிறுவனமாக்கப்பட்ட ஒரு மதமாக மாறிவிடும் என்பதால் நான் பவுத்தத்தில் சேர மறுக்கின்றேன். என்னுடைய கழகத்தினர் பவுத்தத்திலே சேர மாட்டார்கள் என்று சொன்னாரே ஒழிய அவர் இந்த நாட்டினுடைய தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் கண்டிப்பாக இசுலாத்துக்குச் செல்லுங்கள். பிற மதங்களை தழுவுங்கள். உங்கள் ‘சூத்திர’ இழிவை அப்பொழுதுதான் ஒழிக்க முடியும் என ஆணித்தரமாக தொடர்ச்சியாக பல்வேறு இடங்களிலே பேசி இருக்கிறார்கள்.

ஆனால், இதையும் இன்றைக்கு இருக்கக்கூடிய தலித் அரசியல் பேசக்கூடியவர்கள் அம்பேத்கரிஸ்டுகளாக இருந்து தங்களுடைய பிரச்சாரத்தை முன் எடுக்கக்கூடிய அறிவு ஜீவிகள் அம்பேத்கருடைய கடவுள் மறுப்பு வாசகத்தையும் அம்பேத்கருடைய மதமாற்ற விசயத்தையும் சொல்ல மறுக்கிறார்கள். அல்லது அதற்கு முன்னுரிமை கொடுக்க மறுக்கின்றார்கள்.

இதற்கெல்லாம் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டிலே தந்தை பெரியார் அவர்கள் அண்ணல் அம்பேத்கருடைய அதே கருத்து நிலைப்படி, அதே வழியின்படி, அதே கொள்கையின்படி புத்தருடைய அதே கோட்பாட்டின்படி பகுத்தறிவை பரப்பினார். சாதியை ஒழிப்பதற்காக அவர் பகுத்தறிவை பரப்பினார். சாதியை ஒழிப்பதற்காக அவர் இந்துமதத்தை மறுதலித்தார். சாதியை ஒழிப்பதற்காகத்தான் அவர் இராமனையும், கடவுள்களையும் செருப்பால் அடித்தார். இந்தக் கருத்துக்களை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மக்களுடைய அரசியலை பேசக் கூடியவர்கள் வைக்கக்கூடிய மிக முக்கியமான கருத்து என்னவென்று சொன்னால் அது அரசியல் அதிகாரம் என்பதுதான்.

இன்று நீங்கள் பார்க்கலாம், எதை நீங்கள் திறந்தாலும், எந்த தொலைக்காட்சியை திறந்தாலும், அரசியல் அல்லது சினிமா, அதைத் தவிர எதையுமே நீங்கள் பத்திரிகையிலும், ஊடகங்களிலும் பார்க்க முடியாது. ஆகவே, தாழ்த்தப்பட்ட மக்களும் அக்கருத்துக்களுக்கு ஆட்பட்டு தங்களுடைய தீண்டாமை கொடுமைகள் தன் மீதான வன்கொடுமைகள் எல்லாம் குறைய வேண்டுமானால் நாம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றினால் தான் இந்த தீண்டாமை கொடுமைகள் எல்லாம் முற்றுப்பெறும் என்று அவர்கள் தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு அவர்கள் அம்பேத்கருடைய மேற்கோள்களையே தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் காலம் காலமாக.

அரசியல் அதிகாரம்தான் ஒரே தீர்வு என்ற ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் எடுத்துக் கொண்டு நாம் எல்லாம் அரசியல் கட்சிகளாக வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களாக வேண்டும். நாம் எல்லாம் அரசியலிலே ஈடுபட்டு போராட்டங்களை நடத்தினால்தான் இந்த சாதி ஒழியும் என்று தவறாக அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்காக பெரியார் ஒன்றுமே செய்யவில்லை என்ற ஒரு கருத்தையும் பரப்பி வருகிறார்கள்.

இந்த நாட்டிலே சமூக, பண்பாட்டு புரட்சி நடைபெறாமல் இங்கே அரசியல் புரட்சியை நடத்தவே முடியாது என்பது அண்ணல் அம்பேத்கருடைய மிகத் தெளிவான முடிவு. இங்கே சமூக, பண்பாட்டு புரட்சி நடத்தப்பட வேண்டும். அதன் தொடர்ச்சியாகத்தான் நீங்கள் அரசியலைக் கைப்பற்ற வேண்டும். கைப்பற்ற முடியும் என்பதுதான் அம்பேத்கருடைய கனவு.

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் இறுதி இலக்கு என்று அம்பேத்கர் அவர்கள் சொன்னார்கள். ஆனால் அதற்கு முன்னால் இங்கே சமூக, மத, பண்பாட்டு புரட்சி நடந்தாக வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு அவர் முன்னாலே சொல்லப்பட்ட கருத்துக்கள் எல்லாம் வசதியாக மறந்துவிட்டு அவருடைய இறுதி இலக்கு என்று சொல்லக்கூடிய அரசியல் அதிகாரத்தை மட்டும் இன்றைக்கு பேசக் கூடியவர்களாக பலரும் இருக்கிறார்கள்.

ஆனால், பெரியார் அவர்கள் கடைசி வரைக்கும் கறுப்புச் சட்டை போட்ட தம் கழகத்தவர்கள் எந்த அரசியல் கட்சிகளிலும் தன்னை இணைத்துக் கொள்ளக் கூடாது என்பதிலே மிக மிக உறுதியாக இருந்தார். ஆகவே, இது புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஏன் அவர் அப்படி இருந்தார்? இந்த மக்களுடைய சூத்திர இழிவும், பஞ்சம இழிவும் நீங்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதால் நிச்சயம் போகாது உங்கள் சாதியை நீங்கள் ஒழிக்க வேண்டும் என்று சொன்னால் நீங்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினால் போதாது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே 30, 40 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு திராவிடக் கட்சிகள் தான் நாட்டை ஆண்டுக் கொண்டிருக்கின்றன. அதனால் சாதியை ஒழித்து விட முடிந்ததா?

சாதி முன்பைவிட வேகமாக பல்வேறு வடிவங்களிலே வந்து கொண்டிருக்கின்றது. தந்தை பெரியார் சொன்னாரே இந்தச் சூத்திரப் பட்டம் போக வேண்டும் என்று, அதற்காக இங்கு இந்த திராவிடக் கட்சிகள் ஏதாவது செய்திருக்கின்றதா. அவர்கள் சொல்லலாம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் சட்டத்தை. அது சரியான சட்டம் தான்.

சட்டரீதியாக சூத்திரப் பட்டம் ஒழிந்திருக்கின்றது. ஆனால் சமூக ரீதியாக, மதரீதியாக சூத்திரப் பட்டம் இங்கே ஒழிந்திருக்கின்றதா? 40 ஆண்டுகளாக சூத்திரர்கள் தான் ஆட்சி செய்கின்றார்கள், பிற்படுத்தப்பட்டவர்கள்தான் ஆட்சி செய்கின்றார்கள். ஆனாலுமே இங்கே சூத்திரப் பட்டம் ஒழியவில்லையே! என்னக் காரணம்? பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, பல்வேறு மாநிலங்கள் முழுக்க பிற்படுத்தப்பட்டவர்கள் தான் முதல்வராக இருக்கின்றார்கள். அவர்கள் தான் மிக வலிமையான அரசியல் கட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் அவர்கள் எல்லோருமே சமூக ரீதியாக இன்று வரை சூத்திரர்களாகத்தானே இருந்து கொண்டிருக்கிறார்கள். அதை எப்படி மாற்ற வேண்டும். அதை எப்படி ஒழிப்பது, இந்து மதம் என்று சொன்னால், ஒருவன் மேல் சாதியாகவும், ஒருவன் கீழ்சாதியாகவும் இருந்தாக வேண்டிய கட்டாயம். அவன் நிச்சயமாக சாதியற்ற ஒருவனாக இருக்க முடியாது. நம்மை போன்ற பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள் தீர்மானம் போட்டு சொல்லலாம். ஆனால் பொது மக்களாக இருக்கக் கூடியவர்கள் அப்படி சொல்வதை ஒரு போதும் இந்த சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை.

இந்துவாக இருந்தால் ஒருவன் மேல்சாதியாகவும், ஒருவன் கீழ்சாதியாகவும் தான் இருந்தாக வேண்டும். அந்த அடிப்படையிலேதான் அவனுக்கு எல்லாமே நிர்ணயிக்கப்படுகிறது. கே.ஆர்.நாராயணன் அவர்கள் மெத்த படித்தவர். இந்தியாவினுடைய முதல் குடிமகனாக இருந்தார். இன்றும்கூட அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகம் என்றுதான் பதிவாகின்றது. இன்றைக்கு தீண்டாமை, சட்டத்திலே ஒழிக்கப்பட்டு விட்டாலும்கூட ஏன் அவர் தாழ்த்தப்பட்டவராக அறிமுகம் செய்யப்படுகின்றார். காரணம் என்ன என்று சொன்னால் இந்து மதத்தை நீங்கள் ஒழிக்காமல் இந்த சமூக விடுதலையை நீங்கள் பெற முடியாது.

வெறும் அரசியல் அதிகாரம் கையில் கிடைத்தால்கூட நீங்கள் இந்து மத பண்பாட்டுப் புரட்சியை நடத்தாமல் நிச்சயமாக சூத்திரப்பட்டத்தையோ பஞ்சமர் பட்டத்தையோ ஒழிக்கவோ, அதிலிருந்து மீளவோ முடியாது என்பதுதான் பெரியாருடைய லட்சியமாக இருந்தது. நோக்கமாக இருந்தது. இது புத்தர் காலம் தொடங்கிய போராட்டம். நிச்சயமாக பல தலைமுறைகள் இந்த போராட்டம் தொடரும்.

அம்பேத்கரும், புலே-வும், பெரியாரும் புத்தருடைய தொடர்ச்சியாக இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். பல நூற்றாண்டுகளாக இந்தப் போராட்டம் நடந்துக் கொண்டிருக்கின்றது. ஏதோ இது ஒரு கட்சி ஆட்சியில் இருப்பதாலோ ஏதோ ஒரு இயக்கம் மக்கள் மத்தியில் இருப்பதாலோ இந்த சூத்திரப் பட்டத்தையோ, பஞ்சமர் பட்டத்தையோ, சாதியையோ நீங்கள் நீக்கிவிட முடியாது. இது இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இட்டுச் செல்ல வேண்டிய சமூகப் புரட்சி. சமூக மாற்றம். சமூகப் போராட்டம்.

அந்த சமூகத்தை நீங்கள் மாற்ற வேண்டும் என்று சொன்னால் இந்து மதத்திலே மிகப் பெரிய சீர்திருத்தம் மட்டும் அல்ல. இந்துமதத்தை ஒழித்தாக வேண்டும். இந்து மதத்தின் மீதான கடுமையான தாக்குதலை தொடுத்தாக வேண்டும். இதுதான் தந்தை பெரியாருடைய செயல் திட்டமாக இருந்தது. இந்த வகையிலே நீங்கள் பெரியாரை புரிந்து கொள்ளும்போதுதான் அவர் மிகப் பெரிய சமூகப் புரட்சியாளராக மிகப் பெரிய சமூக மாற்றத்திற்கான வழிகாட்டியவராக இந்த சமூகம் அவரை ஏற்றுக் கொள்ள முடியும்.

அம்பேத்கர் அவர்கள் மாமனிதர் யார் என்பதற்கான ஒரு விளக்கம் தருகிறார்கள். அது தந்தை பெரியாருக்கு அப்படியே பொருந்தி வருகின்றது. “நேர்மையும், அறிவும் சேர்ந்தால் ஒழிய ஒருவர் மாமனிதராக முடியாது. மாமனிதராவதற்கு இது மட்டும் போதுமா. இங்கு நாம் உயர் மனிதருக்கும், மாமனிதருக்கும் உள்ள வேறுபாட்டை பார்க்க வேண்டுமென நான் நினைக்கின்றேன். ஏனெனில் மாமனிதர் உயர்மனிதரைவிட மேலானவர் என நான் நம்புகிறேன்.

பிறரோடு ஒப்பிட்டு பார்க்கும் போது நேர்மையும், அறிவுத்திறனும் உயர் மனிதராக்கிக் காட்ட போதுமானவை. ஆனால், அவரை மாமனிதராக போற்றுவதற்கு போதுமானவை அல்ல. உயர் மனிதருக்கு இருப்பதைவிட மாமனிதருக்கு ஏதாவது ஒரு தனிச் சிறப்பு இருக்க வேண்டும். அது என்ன? அம்பேத்கர் விளக்குகிறார்: “தத்துவ அறிஞர்கள் மாமனிதருக்கு வழங்கியுள்ள வரையறை இங்குதான் முக்கியத்துவம் பெறுகின்றது. சமூகக் கொடுமைகளுக்கு எதிராக மாமனிதன் கிளர்ந்தெழ வேண்டும். சமுதாயத்தை தூய்மையாக்க அவன் ஒரு துப்புரவு பணியாளனைப் போல் செயல்பட வேண்டும்.

இப்பண்புகளே மாமனிதர்களை உயர்மனிதர்களிடமிருந்து உயர்த்திக் காட்டுகின்றன. - மதிப்புக்கும் வணக்கத்திற்குமுரிய ஆவணங்களாகின்றன” என்று அம்பேத்கர் அவர்கள் ஒரு மாமனிதருக்கான இலக்கணத்தை சொல்லியிருக்கின்றார்கள். அந்த மாமனிதனுக்கான இலக்கணத்தோடு தந்தை பெரியார் அவர்கள் வென்று மேன்மேலும் நம்மிடையே மீண்டும் வீறு கொண்டு இத்தகைய அவதூறுகள் எல்லாவற்றையும் கடந்து இமயம் போல் இந்திய துணைக் கண்டம் முழுதும் உயர்வார் - என்று, புனித பாண்டியன் பேசினார்.

Pin It