“சத்தியாக்கிரகம்” என்பது “சண்டித்தனம்” என்பதும், அதனால் வீண் சிரமமும், நஷ்டமும் ஏற்படும் என்பதும், அது மனிதருடைய வீர உணர்ச்சியைக் குறைத்து அடிமைப் புத்தியை வளர்க்கக் கூடியதென்பதும் நமது இயக்கத் தோழர்களுக்கெல்லாம் தெரியும். ஆகையால் தான் நாம் சத்தியாக்கிரகத்தைக் கண்டித்து வருகிறோம்.
அரசியல் துறையில் சத்தியாக்கிரகம் சிறிதும் பயனளிக்காதென்பது வெளிப்படையாகத் தெரிந்த செய்தி. சமூக ஊழல்களைப் போக்கும் வகையில் சத்தியாக்கிரகம் பயன் தரக்கூடும் என்ற ஒரு நம்பிக்கை சிலரிடம் இருந்து வந்தது. அந் நம்பிக்கையும் பயனற்ற தென்பதை விருதுநகர் மகாநாட்டிலும், அதன்பின் பல மகாநாடுகளிலும் நமது பத்திரிகை மூலமாகவும் விளக்கப் பட்டிருக்கிறது. இதை உண்மையென்று நிரூபிக்க, சமீபத்தில், நாசிக்கில், தீண்டாதவர்கள் செய்த சத்தியாக்கிரகம் சம்பந்தமாக அவர்களுக்கும் சனா தன தருமிகளுக்கும் உண்டான சச்சரவை, நாசிக் ஜில்லா மாஜிஸ்திரேட் திரு. எல். என். பிரௌன் அவர்கள் விசாரணை செய்து தீர்ப்பளித்து உத்தர விட்டிருப்பதே போதுமானதாகும்.
நாசிக்கில், ராமகுண்டம், இலச்சுமணகுண்டம், தனூர்குண்டம், சீதா குண்டம் என்று நான்கு தீர்த்தக் குளங்கள் இருக்கின்றன. இந்தக் குளங்களைச் சுற்றி வருவதற்கு ‘சாந்தவா’ என்று சொல்லப்படும் வழி ஒன்றிருக்கிறது, இந்தக் குளங்களில் குளிக்கவும் ‘சாந்தவா’வில் நடக்கவுமே தீண்டாதவர்கள் சத்தியாக்கிரகம் பண்ணினார்கள். இதை எதிர்த்தே சனாதன தருமிகளும் போர் புரிந்தார்கள். கடைசியாக ‘மாஜிஸ்திரேட்’ தீண்டாதவர்களுக்கு அந்தக் குளங்களில் குளிக்கவும், அந்த வழியில் நடக்கவும் உரிமையில்லையென்று தாம் நம்புவதாகவும் ஆகையால் “சிவில் கோர்ட்” மூலம் இவ்வுரிமைகளுக்கு உத்திரவு பெறும் வரையிலும் அந்தக் குளங்களை நெருங்கவும், அவைகளில் குளிக்கவும் கூடாதென்று கிரிமினல் புரொஸிஜர் கோட் 147 - 3 - வது பிரிவின் படி உத்திரவு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறிய தீர்ப்பின் உத்தரவு வருமாறு:-
பொதுவாகத் தீண்டாத வகுப்பினருக்கு நான்கு குண்டங்களின் அருகே செல்லவும் அவைகளில் இறங்கிக் குளிக்கவும் உரிமையில்லை என்றுநான் நம்புகிறேன். ஆதலால் லட்சுமண குண்டம், தனூர்குண்டம், ராம குண்டம், சீதா குண்டம் என்னும் இந்த நான்கு குண்டங்களின் அருகே செல்லவாவது அவைகளில் இறங்கிக் குளிக்கவாவது கூடாது என்று மகர்களுக்கும், மங்கர்களுக் கும், தோடர்களுக்கும், பங்கிகளுக்கும் மற்றுமுள்ள தீண்டாத வகுப்பினர்களுக்கும் கிரிமினல் புரொஸீஜர் கோட் 147 - 3 -வது பிரிவின் படி நான் தடை உத்தரவு செய்கிறேன். தீண்டாதவர்கள் இவைகளில் குளிப்பதற்கு சிவில் கோர்ட் மூலம் உத்தரவு பெறும் வரையிலும் பக்கத்தில் நெருங்கவோ அல்லது இவைகளில் இறங்கிக் குளிக்கவோ அவர்களுக்கு உரிமை இல்லை. குண்டங்களைச் சுற்றி வரும் பிரயாணிகள் சாந்தவாவை உபயோகப்படுத்துகின்றார்கள். ஆதலால் அதை பொதுப் பாதையாக உபயோகிக்கலாமா என்பது இரண்டாவது விஷயம். நாகரிகமாக உடைதரித்திருக்கும் கிறிஸ்த வர்களும், முஸ்லீம்களும் அவ்வழியாக நடக்க விடப்படுகிறார்கள் என்று சாட்சிகளின் மூலம் தெரிகிறது. ஆனால் அந்த சாட்சிகள் இந்த வழக்கிற்கு பொருத்தமாக இல்லை. ஆகையால் தீண்டாத வகுப்பைச் சேர்ந்த இந்துக்கள் சம்பந்தமான இவ்வழக்கில் தீண்டாத வகுப்பு இந்துக்களுக்கு சாந்தவாவை உபயோகிக்க உரிமையுண்டு என்பது வெளியாகவில்லை”
இதுதான் மாஜிஸ்திரேட் திரு. பிரௌன் அவர்களின் தீர்ப்பின் உத்தரவாகும்.
இவ்வுத்தரவில், மகமதியர் கிறிஸ்தவர் முதலான அன்னிய மதத்தினர் நடக்கும் ஒரு வழியில், இந்து மதத்தைச் சேர்ந்த தீண்டாதவர்களுக்கு மாத்திரம் நடக்க உரிமையில்லை என்று மாஜிஸ்திரேட்டால் குறிப்பிட்டிருப்பதைக் கவனிக்க வேண்டுகிறோம். இவ்வாறு தீர்ப்புக் கூறுவதற்கு, இந்துக்களின் பிடிவாதமும் குருட்டு மாமூல் பழக்கமும் காரணமல்லவா? இப் பழக்க வழக்கங்களை ஆதாரமாகக் கொண்டு தானே மாஜிஸ்திரேட் உத்தரவளித்திருக்கிறார்? இதற்கு விட்டுக் கொடுக்காத இந்துக்களும், இப்பழக்க வழக்கங்களுக்கு ஆதரவளிக்கும் சட்டமும், நியாயமும் இருக்கும் வரையிலும் தீண்டாதார்களுக்கு சத்தியாக்கிரகத்தினால் என்ன நியாயம் கிடைக்க முடியும்?
ஆகவே உண்மையில் எளிதாகச் சமூக மத உரிமை பெற விரும்புகின்றவர்கள் செய்யவேண்டிய வேலை சட்டஞ் செய்வதற்குக் கிளர்ச்சி செய்ய வேண்டியதேயாகும். “எந்த பொது இடங்களிலும் எல்லார்க்கும் செல்ல அனுபவிக்க உரிமையுண்டு” என்கின்ற சட்டம் ஏற்பட்டு விடுமானால், அப்பொழுது இச்சட்டத்திற்குக் கட்டுப்படாமல் தடை செய்கின்றவர்களிடம் சத்தியாக்கிரகம் போன்ற காரியங்களைச் செய்வது ஒரு சமயம் பயன்தரக் கூடியதாக இருக்கலாம். ஏனென்றால் சட்டபலமும், உரிமையும் அப்பொழுது ஏற்பட்டு விடுகிறது. அதிகாரிகளும் இம்மாதிரி தடையுத்தரவு பிறப்பிக்கவும், தீர்ப்பளிக்கவும் முடியாது என்பது உண்மையல்லவா?
ஆகையால் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டுத் தீண்டப்படாதவர்களாக வைத்துக் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கும் கூட்டத்தார் அமைதியான முறையில் அரசியல் உரிமைகளைக் கைப்பற்றி தங்கள் உரிமைகளுக்குச் சட்டங்கள் செய்வதன் மூலம் சுதந்தரம் பெற முயல்வதே சிறந்த வழி யென்பதை எடுத்துக் காட்ட விரும்புகின்றோம். ஆனால் தற்சமயம் சுதந்தரமடைவதில் தங்களுக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்த சத்தியாக்கிரகம் போன்ற பிரசாரம் தீண்டாத வகுப்பினரைப் பொறுத்தவரையில் ஒருவகையில் சிறிது சாதகமளிக்கக் கூடிய தென்பதை ஒப்புக் கொள்ளுகிறோம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 12.06.1932)