ஏழைகளின் ஆப்பிள் தக்காளி என்பார்கள். ஏழைகளின் பிரியாணி தக்காளி சோறு என்றும் சொல்லலாம்.

போகிற போக்கில் நாலு வாய் சோற்றை அள்ளி வயிற்றில் போட்டுக் கொண்டு வேலையை பார்க்க போய் விடும் உழைக்கும் கரங்களில் பெரும்பாலும் தக்காளி சோறு பொட்டலம் கமகமக்கும் என்றால் மிகை என்று யாரும் சொல்ல இயலாது.

வறுமை கோட்டுக்கு கீழே இருப்போர்.. பெரும்பாலும் தேர்வு செய்வது தக்காளி சோறு தான். உடல் உழைப்பை கொட்டுவோர் தள்ளுவண்டி கடையில் 25 ரூபாய்க்கு சாப்பிட... கை நீட்டுவது பெரும்பாலும் தக்காளி சோறு பொட்டலத்தை நோக்கி தான். விலையும் குறைவு. வயிறும் நிறையும். ருசி... சில கடைகளில் பிரியாணியை தாண்டி விடும். ஒரு கட்டத்தில் தக்காளி பிரியாணி என்று கூட ஒரு வடிவத்துக்கு அவர்கள் தாவினார்கள்.tomato riceதக்காளி சோற்றுக்கு அதன் நிறம் தான் ஈர்ப்பு. சிவப்பு வண்ணம் தூவிய தக்காளி சோற்றில்... சின்ன வயிறுகள் பசி ஆறுவதை மதிய நேர நகர வலம் படம் பிடித்து காட்டும். இன்று காசு கம்மியாக இருக்கிறது என்று யோசிக்கும் எந்த கைகளும் தக்காளி சோற்றை நோக்கியே நீளும். எப்போதும் காசு கம்மியாக இருக்கும் கைகளும் தக்காளி சோற்றை நோக்கி தான் நீளும்.

இன்றும் கூட பெரும்பாலைய பட்ஜெட் பேச்சிலர்களின் இரவு உணவு தக்காளி சோறு தான். நேரமும் குறைவு. செய்யும் முறையும் எளிது. செலவும் கைக்கடக்கம். போன் பேசிக்கொண்டே கிண்டி விட முடியும்.

நானெல்லாம் கல்லூரி காலம் முழுக்க மதிய சோறாக தக்காளி சோறு தான் கொண்டு போயிருக்கிறேன். பிடித்தது பிடிக்காதது எல்லாம் தாண்டி அதில் ஒரு சிக்கனம் இருக்கிறது. ஒரு வசதி இருக்கிறது. சட்டென ஒரு தக்காளியைப் போட்டு சேர்க்க வேண்டிய சமாச்சாரங்களை சேர்த்து சுடு சோற்றை கலந்து கிண்டி டிபன் பாக்ஸில் அடைத்து போய்க் கொண்டே இருக்கலாம். மிஞ்சிய சோற்றை தக்காளி சோறாக்கி இரவு உண்பதும் பெரும்பாலும் இயல்பான வீடுகளின் நிலவரம் தான். பள்ளி நாட்களில் தின்பண்டம் இல்லாத போது தக்காளி சோறு செஞ்சு சுட சுட தரும் பாட்டி சனி மதியத்தை இனிக்க செய்திருக்கிறது.

ஒரு காலத்தில் மதிய சோற்றுக்கான இலக்கணம் தக்காளி சோற்றில் தான் இருந்தது. அதனோடு புளி சோறு.. தயிர் சோறு... லெமன் சோறு என்று இருந்து அதன் நீட்சியில் குழம்பு ரசம் என ஆகி...அடுத்த கட்ட பாய்ச்சலாக பிரியாணி வரை நீண்டு காய் சோறு... வறுத்த சோறு என்று லன்ச் பாக்ஸ்கள் சிறகு முளைத்து திரிய தொடங்கின. மரம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். விதை தக்காளி சோறு போட்டது. 90 களின் டிபன் பாக்ஸ்கள் பெரும்பாலும் தக்காளி சோற்றால் தான் நிரம்பி இருக்கும். வீட்டில் உள்ளோருக்கும் வேலை சுளுவாய் முடியும். கொண்டு போவோருக்கும்.... தூக்கி போவதற்கோ.... எடுத்து உண்பதற்கோ... என்னவோ ஒரு வகை வசதி. போர் அடிக்காமல் இருக்காது. ஆனாலும்... வாரத்தில் மூன்று நாள் தக்காளி சோறு தான். திரும்பவும் வார்த்தை அதை ஈஸி... சுலபம்... மதியம் டிபன் பாக்ஸுக்குள்ளயே வைத்து சாப்பிட வசதி என்று தான் வட்டமிடுகிறது.

என் தோழி ஒருவர் சொல்வார்.

என்ன சாப்பாடு என்றால்.. "இன்னைக்கு தக்கோளி ஸ்சோப்பா...ட்..." என்று அழுத்தம் திருத்தமாய்.. ஆசை நேசத்தோடு வயிறு முட்ட சாப்பிட்ட திருப்தியோடு கூறுவார். எனக்கு சிரிப்பாக இருக்கும். அதே நேரம் ஆச்சரியமாக இருக்கும். என்ன ஒரு ஈடுபாடு இருந்தால்... இப்படி ஒரு வாக்கிய சுவை வெளிவரும். தக்காளி சோறு எந்த சோற்றுக்கும் குறைந்தது இல்லை என்ற தத்துவத்தை போகிற போக்கில் பேச்சு வாக்கில் நாம் புரிந்து கொள்ள முடியும். அதுவும் ஞாயிறு மதியம் சொல்வார். முதலில் திகைத்தாலும்... செய்வோர் செய்தால்... செயல் எதுவாக இருந்தாலும் செம்மை பூக்கும். தக்காளி சோறு என்ன விதி விலக்கா. கை பக்குவத்தில் ருசி கூட்டி தக்காளி சோற்றில் வீட்டையே மலர்த்தி விடும் கைகளுக்கு... தக்காளி தோலில் வளையல் செய்து மாட்டலாம். தக்காளி சாறை முகம் பூசி மலர்த்தலாம்.

தக்காளி சோறே கூட வீட்டுக்கு வீடு சுவை மாறும். அதே தக்காளி தான். அதே அரிசி தான். ஆனால் ருசி மாறி விடும். நம் வீட்டு தக்காளி சோற்றை விட அடுத்த வீட்டு தக்காளி சோறு இன்னும் ஈர்க்கும். கவனித்திருக்கிறீர்களா.

தக்காளி சோற்றில் எனக்கு பிரச்சனையாக இருப்பது அவ்வப்போது சுருண்டு வரும் தக்காளி தோலை எடுத்தெடுத்து ஒதுக்கி கொண்டே சாப்பிடுவதுதான். மற்றபடி மற்ற சோறு நாளை விட தக்காளி சோறு நாளில் ஒரு பிடி அதிகம் உண்பது இயல்பாகவே இருக்கிறது. எழுதுவதால் சொல்லவில்லை. நிகழ்ந்தவைகளையே எழுதுகிறேன்.

மஞ்சள் போடாமல் செய்யும் தக்காளி சோறு... பார்த்ததும் பிடித்து விடும். அந்த சிவப்பு படரும் வண்ணத்தில் வெள்ளை கலந்த அளவு... ருசி ஏற்றுவதாக நம்புகிறேன். தக்காளி சோறு சுட சுட சாப்பிட்டாலும் சூப்பர் தான். காலையில் டிபனில் அடைத்து மதியம் உண்டாலும் உற்சாகம் தான். தொட்டுக்க என்ன வேண்டுமானாலும் கொள்ளலாம். கொஞ்சம் ஊறுகாய் இருந்தால் போதும். அல்லது கொஞ்சம் வடகம் இருந்தால் போதும். காய் பொரியல் எது ஒன்றுக்கும் ஒத்து போகும் தான். கொஞ்சம் குழைந்த சோறாக இருக்கும் பட்சத்தில் ஆஹா ரகம் எனக்கு.

கறிக்குழம்பில் அட்டகாசம் செய்வோர் கூட தக்காளி சோறு செய்ய முடியாமல் தத்தளிப்பார்கள். தக்காளி சோறு தானே என்று இளக்காரம் கூடாது என்பதற்கான மட்டையடி அது.

பிரியாணிக்கு போடுவதெல்லாம் போட்டு செய்யும் தக்காளி சோறு மணம் கூடி மனம் நிறைக்கும் என்றால்... எந்த மதியமாவது வாய்க்கப் பெறுங்கள். சின்ன சின்ன அன்பில் தானே சொர்க்கம் இருக்கு என்பது போல சின்ன சின்ன உணவில் கூட திருப்தி இருக்கு என்றும் சொல்லலாம். ஆயிரம் ருசி மொட்டுகளை உடைய நாவு தக்காளி சோற்றையும் ருசித்து ரசிக்கிறது என்றால் அதுவும் ஆயிரத்தில் ஒன்று தானே.

பெரும்பாலான விளிம்பு நிலை பயணிகளின் மதிய உணவு... தக்காளி சோறு தான். வாங்கி படபடவென தின்று விட்டு போய்க்கொண்டே இருப்பான். இன்னும் சிலர் பேருந்தில் கூட பொட்டலத்தை மெல்ல திறந்து அவக் அவக்கென உண்பதை பார்த்திருக்கிறேன். எல்லாம் அரை ஜான் வயிறுக்கு தானே. எல்லாம் எல்லாம் பசி எனும் பேராயுதம் கொண்ட யுத்தத்துக்கு தானே. மரத்தடியே அமர்ந்து உண்பவனை கவனியுங்கள். தக்காளி சாதமும் தயிர் சாதமும் தான் இரு சிறு பொட்டலங்களாக இருக்கும். திட்டமிட்ட காசு வழியே நிகழும் சுற்றுலாவாசிகளின் தேர்வு தக்காளி சோறு தான். இப்போது தக்காளி பிரியாணி என்று வேண்டுமானாலும் அதன் பெயர் மாறி இருக்கலாம். ஆனால் அதன் ஆணிவேர் தக்காளி சோற்றின் தத்ரூபத்தில் தான் இருக்கிறது.

ஆப்பிள் தக்காளி நாட்டு தக்காளி என்று அதனதன் வகையில் அதனதன் சுவை சோற்றில் ஊரும். தக்காளி சோற்றின் வடிவத்தை இலையில் பார்ப்பதை விட டிபன் பாக்ஸில் பார்க்கையில் தக்காளி சோற்றின் திருப்தியை உணர முடியும். உணர்ந்தவன் கூறுகிறேன்.

- கவிஜி

Pin It