மட்டன் எடுக்க போவது போல அத்தனை சுலபம் இல்லை இது... அதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டும். அதுவும் நீண்ட சனி இரவுக்கு பின் ஞாயிறு காலை கடவுளே வந்து வரம் தருகிறேன் என்றாலும்.. இந்த நாள் சாத்தானுக்கு என்று கும்பிடு போடுவது தான் இயல்பு.
ஆனால் அசைவ பிரியன் ஒருவன் வீட்டில் வளர்கிறான். வாரம் ஒருமுறை அதிகாரபூர்வமாக அசைவனாக வேண்டும் அவனுக்கு. வார நாட்களில் ஒளிந்து மறைந்து ஸ்விக்கி காரன்... அப்படி இப்படி என்று தன்னை தகவமைத்துக் கொள்வான். ஆனால் ஞாயிறு வடிவத்தை சனி இரவே கண்டிப்பாக தீர்மானித்து விடுவான்.
அப்பா நாளைக்கு நான் சிக்கன்காரன் என்பான். அப்பா நாளைக்கு நான் மீன்காரன் என்பான். அந்த மாதிரி மட்டன்காரன் ... காடைக்காரன்... எல்லாம் சுழற்சி முறையில் சுகம் காணும். ஆனால் எப்போதாவது நான் குடல்காரன் என்பான். அது தான் எனக்கு வேட்டு வைக்கும். மற்றவை வாங்க பகல் 12 க்கு மேல் போனால் கூட போதும். குடலுக்கு அந்த பருப்பு வேகாது. அதிகாலையில் போனால் கூட இல்லை என்பது உதடு பிதுக்குவார்கள் சில மட்டன்னவாலாக்கள்.
சிலர்.. இன்னும் ஒரு மணி நேரம் 40 நிமிஷம் 20 நொடி ஆகும் அடுத்த ஆட்டை போட... என்பார்கள். அய்யயோ இப்பதான் வாங்கிட்டு போறாங்க என்பார்கள். நேத்தே சொல்லி வெச்சிருக்காங்க என்பார்கள். ஒரு கிலோ வராது... கால் கிலோ தான் இருக்கு.. அதை வாங்கிட்டு போய் என்ன பண்ணுவீங்க என்பார்கள். அடுத்த கடை அடுத்த கடை அடுத்த கடை என்று ஒரு கவிஞன் செய்யற வேலையா அது.
அத்தி பூத்தாற் போல எப்போதாவது... கேட்கும் முதல் கடையிலேயே கிடைக்கும். பல சமயங்களில் கடைசி கடையில் கூட கிடைக்காது. குடல் கிடைத்த நாள் கொடுத்த வைத்த நாள்.
கவரில் சுற்றப்பட்ட மெது மெதுவான குடலை... கையில் வாங்கும் போதே உச்சந்தலையில் ஓர் குளிர்ச்சி கொப்பளிக்கும். அதை கொண்டு வந்து சேருமிடம் சேர்த்து விட்டு இதோ எழுத அமர்ந்தாயிற்று.
அதை கழுவுவது என்பது தான் காதலோடு செய்ய வேண்டியது. கொஞ்சம் சறுக்கினாலும்... கெட்டது கதை.
மூணு நான்கு முறை கழுவ வேண்டும். வட சட்டி வைத்து கொஞ்சம் பட்டை கொஞ்சம் கிராம்பு கொஞ்சம் சோம்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். வற மல்லி கொஞ்சம் வறுக்க... மிளகு கொஞ்சம் சீரகம் கொஞ்சம் போட்டு அதையும் வறுக்க... தேவையான அளவு மிளகாய்... அதையும் வறுக்க.... சின்ன வெங்காயம்...எண்ணெய் ஊற்றி வதக்கி வைத்துக் கொண்டு கொஞ்சம் தேங்காய் போட்டு முன் சொன்னவைகளை எல்லாம் மொத்தமாக போட்டு மசால் அரைத்துக் கொள்ள வேண்டும். அப்புறம் வழக்கம் போல இஞ்சி பூண்டு கலவை. ஏற்கனவே அஞ்சு விசில் விட்டு வேக வைத்திருந்த குடலை இப்போது இந்த கலவையில் போட்டு வேக விட.. சற்று நேரத்தில் குடல் கிரேவி. இது நான் பார்த்தவரை. இதையும் தாண்டி பொன்னிற முகத்தில் புன்னகை மாறாமல் சமைக்கும் கவிக்குயிலின் சமையல் பக்குவம் விவரிக்கலாகாது.
வழக்கம் போல சுடுசோறுக்கு அதுவும் ஞாயிறு மதியத்துக்கு சுவை கூட்டும் குடல் கறியில் இமையில் கூட பெருமூச்சு தான். இலை போட்டு உண்ணும் போது குடல் கூறும் உன்னதத்துக்கு சொற்கள் இல்லை. பற்கள் சிரிக்கும். வயிறு முட்ட சாப்பிடுவது எப்போதும் பழக்கமில்லை. கொஞ்சம் சோறும் நிறைய குடலும் என்று மட்டனின் மகத்துவத்தை மற்றோர் பக்கம் என்று திகட்டாத ஒவ்வொரு வாய் உருண்டைக்கும் வாழ்க்கை இனிப்பென்று உணரலாம். சமைத்து உண்ணும் இந்த நிலை பரிணாமத்தின் அதி உன்னதமான நிலை என்கிறேன். அதுவும் அசைவத்தின் வழியே அற்புதங்கள் தான் ஞாயிறு மதிய உணவு.
குடல்காரன் ஹேப்பி. வயிறு நிறைந்து... வாய் முழுக்க சிரிப்போடு இருக்கும் சேகுட்டி... ஒரு தவத்தை போல அசைவம் உண்ணுவதை பார்க்கையில் எனக்கு என் சின்ன வயது நினைவு குடல் வழியே நீள்கிறது. குடல் எடுத்த அன்று என் மாமா என்னை ஓடைக்கு கூட்டி சென்று விடுவார். கதை சொல்லிக் கொண்டே ஓடையில் தான் குடல் அலசல் நடக்கும். சின்ன கத்தியைக் கொண்டு குடலுக்குள் ஒரு முனையில் விட்டு கத்திரியில் துணியை கிழிப்பது போல சர்ரென ஒரு கோடு போட்டு டியூப் மாதிரி இருக்கும் குடலின் வயிற்றை கிழிப்பார். எல்லாமே ஒரு அட்டகாசமான கைக்கடக்கமான கணக்கு போல இருக்கும். கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். தூரத்தில் இருந்து பார்க்கும் அது ஒரு கால ஓவியமும் தான் இன்னமும்.
எழுதிக் கொண்டே இருக்கும் இந்த வேளையில் இந்த நாளின் சுவை இதோ கதவை தட்டுகிறது... டேஸ்ட் பார்த்து விட்டு வந்து விடுகிறேன்....
குடல் கறி வயிறு தொடர்பான நிறைய பிரச்சனைகளை தீர்க்கும் மறந்து என்றால்...அதில் மணம் மட்டுமா கூடும்... மனமும் தானே.
- கவிஜி