தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம், சமுதாய ஏற்றத்தாழ்வு உள்ளதாக எழுந்த புகாரைக் களையும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் "அட்சயப் பாத்திரம்" திட்டத்தை அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தில், அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர் அறையிலோ, சத்துணவு மையம் முன்போ "அட்சயப் பாத்திரம்" என எழுதிய ஒரு பாத்திரத்தை வைக்க வேண்டும். அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தினமும் வீட்டில் இருந்து ஏதேனும் ஒரு காய் கொண்டு வந்து இப்பாத்திரத்தில் இட வேண்டும்.
மறுநாள் சமைக்கும் போது, அட்சயப் பாத்திரத்தில் உள்ள காய்கறிகளை சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். பாத்திரத்தில் எந்த மாணவர் காய் இட்டுள்ளார் என்பது குறித்த தகவல் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன் வழியாக மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை களைவற்கு அரசு புதியதொரு வழி கண்டுபிடித்துள்ளது என்பது எவ்வளவு பெரிய அபத்தம். இன்னும் வலுவாக மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை புகுத்துவதற்கான முன்னேட்டமாகவே இதைப் பார்க்க வேண்டியது உள்ளது.
அட்சயப் பாத்திரம் - என்ன பொருள்?
அட்சயப் பாத்திரம் என்பது இந்து தொன்மவியலின் படி, தர்மனுக்கு சூரிய பகவான் தந்ததாகும். இந்தப் பாத்திரத்தில் உணவு இட்டால், எடுக்க எடுக்க கொடுக்கும் தன்மையுடையது. இதனை வைத்தே பஞ்ச பாண்டவர்கள் தங்களுடைய வானப்பிரஸ்தம் காலத்தில் உணவை உண்டார்கள் என்று இந்து மத நம்பிக்கையின் படி நம்பப்படுகிறது.
பள்ளிகளில் செயல்படுத்தும் உணவுத் திட்டத்திற்கு மதக் கண்ணோட்டத்துடன் இப்படியொரு பெயரிடுவது சரியானதுதானா? பள்ளி என்றாலே அங்கு அனைத்து விதமான மதத்தினரும் படிக்க வருவார்கள் அல்லவா? அப்படிப்பட்ட இடத்தில் இந்து மதத்தின் அடையாளத்தைக் குறிக்கும் ஒரு பெயரை வைப்பது சரிதானா? இதன் வழியாக ஒருவித நஞ்சை மாணவர்கள் மத்தியில் புகுத்துவதற்கான ஏற்பாடாகத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உணவுத் திட்டத்தில் முன்னோடியான தமிழகத்திற்கு ஏன் இந்த நிலைமை?
மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தியதில் முன்னோடி மாநிலமான தமிழகத்தில், ஏன் காலை உணவு வழங்கும் திட்டத்தை தனியாருக்கு விட வேண்டும் என்று பொருளாதார வல்லுனர் ஜெயரஞ்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில், அப்போதைய சென்னையில் இருந்த ஒரு சில பள்ளிகளில் மட்டும் மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்பட்டு வந்தது. இதை அறிந்த காமராஜர் 1955-ம் ஆண்டு தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தினார்.
பின்னர், 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியில் சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 1989-ம் ஆண்டு சத்துணவில் முட்டை வழங்கப்பட்டு மாணவ, மாணவியரின் உடல்நலனுக்கு ஊட்டம் அளிக்கப்பட்டது.
ஜெயலலிதா ஆட்சியில் கலவை சோறு அளிக்கும் திட்டம் 2012-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இப்படி ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாட்டின் உணவுப் பழக்கத்தையும், மாணவர்களின் ஊட்டச்சத்தையும் அடிப்படையாகக் கொண்டு தமிழக ஆட்சியாளர்களால் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழகத்தின் பெருமைக்குரிய திட்டம் சத்துணவுத் திட்டம்.
தனியார் நிறுவனங்களை அனுமதிப்பது சரிதானா?
பெங்களுருவைச் சேர்ந்த ‘அட்சய பாத்ரா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தந்தது பேசுபொருளாகி உள்ளது. ஏழைக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் பணியைத் தமிழக அரசே செய்யாமல், ஏன் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கேள்வி பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு 9 மாநிலங்களில் 12 லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. டெல்லி தவிர்த்து பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதன் மூலம் இத்திட்டத்தின் அல்லது உணவு வழங்கும் பொறுப்பை வழங்கியிருக்கும் நிறுவனத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
அதிக இடங்களில் தெலங்கானா
ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும், இளம் சிறார்களுக்கும் மதிய உணவு சமைத்துத் தரும் மிகப் பெரிய சமையல்கூடம் தெலங்கானா மாவட்டத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள நரசிங்கி கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. பெங்களூருவைச் சேர்ந்த ‘அட்சய பாத்ரா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் 33-வது சமையல் கூடம் இது. இதுவரை கட்டப்பட்ட சமையல் கூடங்களிலேயே இதுதான் பெரியது. மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு 35,000 பேருக்கு உணவு தயாரிக்கும் திறன்பெற்ற இந்த மையத்தைக் கட்டத் தொடங்கி வெகுவிரைவாகக் கட்டி முடித்திருப்பதை முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா பாராட்டி இருக்கிறார். பேங்க் ஆஃப் டோக்கியோ-மிட்சுபிஷி யு.எஃப்.ஜே. அளித்த ரூ.10.5 கோடி நிதியுதவியுடன் ஒன்பது மாதங்களுக்குள் மையம் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.
ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள 238 பள்ளிக்கூடங்களுக்கும், 366 அங்கன்வாடி மையங்களுக்கும் இந்த உணவு கொண்டு செல்லப்படும். இந்த மையம் அல்லாமல் பிற மையங்கள் மூலம் ‘அட்சய பாத்ரா’ தெலங்கானாவின் 880 பள்ளிக்கூடங்களில் படிக்கும் 95,585 மாணவர்களுக்கும், 27,000 அங்கன்வாடி பாலர்களுக்கும் மதிய உணவு அளித்து வருகிறது.
‘அட்சயபாத்ரா’ மூலம் இப்போது 16 லட்சம் குழந்தைகளுக்கு உணவு அளிக்கப்படுகிறது. 2020-க்குள் இந்த எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்துவது இதன் லட்சியமாகும்.
தமிழகத்தில் தொடக்கம்
தற்போது, சென்னை மாநகராட்சியின் 24 பள்ளிகளில், 5785 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தனியாருடன் இணைந்து தமிழக அரசு தொடங்கி உள்ளது. இஸ்கான் என்ற அமைப்பு அட்சயப் பாத்திரம் என்ற இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. சென்ட்ரல் கிச்சன் அமைக்க கிரீம்ஸ் சாலையில் 20000 சதுர அடி, பெரம்பூர் பேரக்ஸ் பகுதியில் 35,000 சதுர அடி நிலத்தை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.
மாணவர்கள் கேட்டுக் கொண்டும், இந்த அமைப்பினர் உணவுத் திட்டத்தில் முட்டை வழங்கவில்லை. இஸ்கான் அமைப்பில் சைவ உணவுக்கு மட்டுமே இடம் உண்டு. சைவ உணவிலும் வெங்காயம், பூண்டு ஆகியவற்றைக் கண்டிப்பாக சேர்ப்பதில்லை. தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் பூண்டு, வெங்காயம் உள்ளிட்டவை தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. ஆனால், இஸ்கான் அமைப்பின் அட்சயப் பாத்திரம் திட்டத்தில் அவை முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகின்றன.
தற்போது 24 பள்ளிகள் எனத் தொடங்கி, பின்னர் மற்ற பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட இருக்கிறது. பல்வேறு பிரச்சனைகள், குற்றச்சாட்டுகள் உள்ள அமைப்புக்கு எவ்வாறு டெண்டர் விடாமல் இத்திட்டத்தை அனுமதிக்கலாம் என்பதே பலரின் குற்றச்சாட்டு.
மத்திய அரசின் நிர்பந்தத்தின் பெயரில் மாநில அரசு இதைச் செய்கிறதா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. மதச்சார்பான அமைப்பை ஏன் அனுமதிக்க வேண்டும்? இது சத்துணவுத் திட்டத்தை ஒழித்துக் கட்டும் முயற்சி என்ற சந்தேகம் எழுத்தானே செய்யும்.
வெங்காயமும் பூண்டும் தாவர உணவுதானே?
கடந்த ஆண்டு வெங்காய விலை விறுவிறுவென ஏறிக் கொண்டே இருக்க, தங்க நகைகளுக்குப் பதிலாக 'வெங்காய நகைகள்', பிறந்தநாள், திருமணம் நிகழ்ச்சிகளுக்கு 'வெங்காய பொக்கே' பரிசு என வெங்காயக் கதைகள் அப்போது அதிகமாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன.
இதற்காக எகிப்திலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்தார்கள். அதில் சுவையில்லை, மணமில்லை என்று டிசம்பரில் நடந்த நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கையில், 'நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை, எங்கள் வீட்டில் நாங்கள் அவ்வளவாக வெங்காயத்தைப் பயன்படுத்த மாட்டோம்' என்று பதிலளித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஒருவேளை வெங்காயமும், பூண்டும் அவர்கள் சாப்பிடாவிட்டால் போகட்டும். ஆனால் அதைச் சாப்பிடுபவர்களால் இவர்களுக்கு என்ன பிரச்சனை? வெங்காயமும் பூண்டும் காரம் நிறைந்தது. அதை ரோசம் உள்ளவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
முன்பெல்லாம் தாவர உணவைத் தவிர்த்து, அசைவத்தில் ஒரு சிலவற்றை எடுத்துக்காட்டாக, மாட்டிடமிருந்து கிடைக்கும் பால் பொருட்கள் உள்பட அனைத்தும் சைவம் என்பார்கள். அதுபோல தாவர உணவில் புதிதாக அசைவ வகைப் பொருட்களை கண்டுபிடித்திருக்கிறார்கள் போலும்.
சைவம் என்று சொல்லி அவர்கள் எதை வேண்டுமாலும் சாப்பிட்டுவிட்டுப் போகட்டும். சாப்பிடுபவர்களை அவர்களின் விருப்பப்படி சாப்பிட விட்டால் போதும். அங்கும் வந்து இதைச் சாப்பிடாதே, அதைச் சாப்பிடாதே என்று கையை பிடித்துக் கொண்டிருப்பது நாகரீகமல்ல. அதே வேளையில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் அன்று அப்படிச் சொன்னதற்கும், இன்று அட்சய பாத்ரா என்ற பெயரில் பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைப்பதற்கும் இடையே ஒரு தொடர்பைப் பார்க்க முடிகிறது. இப்படியொரு திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்காகவே அன்று நாடாளுமன்றத்தில் முன்னோட்டம் பார்த்தது போல் அல்லவா இருக்கிறது.
வெங்காயத்தின் பயன்கள் தெரியுமா?
வெங்காயத்தையும், பூண்டையும் யார் சாப்பிட்டாலும் சாப்பிட விட்டாலும் பரவாயில்லை. அதிலிருக்கும் நன்மைகளை அவர்களுக்குத் தெரியப்படுத்தினால் ஒருவேளை நமக்குத் தெரியாமல் மறைத்து வைத்துகூட சாப்பிடலாம்.
சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம்... இரண்டுக்கும் பொதுவான குணங்கள் நிறைய உண்டு. ஆனால், பெரிய வெங்காயத்தைவிட சிறிய வெங்காயத்தில் வீரியம் அதிகம்.
"வெங்காயம் குறைந்த கலோரி உணவுப் பொருள். காய்கறிகளோடு சேர்த்துச் சாப்பிடும்போது, அதன் சக்தி மேலும் அதிகரிக்கிறது. என்ன உணவாக இருந்தாலும், சிறிதளவு வெங்காயம் சேர்த்தால் மட்டுமே அதன் சக்தி உடலைச் சென்றடையும்.
வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நச்சுகளை அழிக்க உதவுகிறது. சமைக்காத வெங்காயத்தைச் சாப்பிடுவதால், உடலுக்கு வைட்டமின் சி கிடைக்கும். இதில் வலிமை தரும் மினரல்ஸும் ஏராளமாக இருக்கின்றன. சர்க்கரை நோய், இதயப் பிரச்னை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும்கூட தாராளமாகச் சாப்பிடலாம்" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி. (https://www.vikatan.com/health/food/health-benefits-of-onion-suggested-by-experts, Dec –12, 2019)
சரி வெங்காயத்தின் நன்மைகள் குறித்து சொன்னது போதும். பூண்டின் நன்மைகள் எங்கே? என்று கேட்பது காதில் விழுகிறது. அது வெங்காயத்தைவிட கூடுதல் பலன் தரும் பொருள். அதனால் அதை நீங்களே தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.
இந்தத் திட்டத்திற்கு என்ன அவசரம்?
தமிழகத்தில் இப்படியொரு திட்டம் கொண்டுவர என்ன காரணமாக இருக்கும்? வேறு ஒன்றும் இல்லை. இங்கு அசைவ உணவு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் அதிகம். அப்படிப்பட்ட இடத்தில் சைவ உணவு முறையை மாணவர்களின் வழியாகப் புகுத்த முயற்சி செய்வது சரியா?
"2015-ம் ஆண்டு வெளியான ஒரு சர்வே அடிப்படையில், தெலங்கானாவில் 98.7 சதவீதத்தினர், ஆந்திராவில் 98.25 சதவீதத்தினர் அசைவம் உண்பவர்கள். அதேபோல் தமிழகத்தில் 97.65 சதவீதத்தினரும், கேரளாவில் 97 சதவீதத்தினரும் அசைவம் உண்பவர்கள். அப்படி இருக்க முட்டை போட மாட்டோம் என்பது எப்படி சரியாகும்?" என பொருளாதார வல்லுனர் ஜெயரஞ்சன் கேள்வி எழுப்புகிறார்.
மேலும் அவர் கூறுகையில், "பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என காமராஜர், மத்திய திட்டக்குழுவிடம் கேட்டபோது, அதை விமர்சித்தனர். பின்னர் எம்.ஜி.ஆர். காலத்தில் அரிசிப் பஞ்சம் ஏற்பட்ட போது, சத்துணவு செயல்படுத்த அரிசி கேட்டு எம்.ஜி.ஆர் உண்ணாவிரதம் இருந்தார்.
அவ்வாறாக செயல்படுத்தப்பட்ட திட்டம் அது. இலவசம், இலவசம் என இப்போது கூறுவதைப் போல், இத்திட்டத்தை வீண் செலவு என 20 ஆண்டுகளாக கூறி வந்தனர். இப்படி சத்துணவுத் திட்டத்தை செயல்படுத்தியதில் பெரிய வரலாறு உள்ளது. பல தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக தமிழகத்தில் செயல்படுத்தி உள்ளோம். இந்தியாவிற்கே ஒரு வரலாற்றை உருவாக்கி உள்ளோம்" என்று பள்ளிகளில் உணவு வழங்கும் திட்டத்தை அருமையாக விளக்கியுள்ளார். சரி இதெல்லாம் அவர்களுக்கு புரியவா போகிறது?
உண்மை எது?
ஏற்கனவே தேசிய கல்விக் கொள்கை வரைவு என்ற பெயரில் ஏழை எளிய மாணவர்களின் கல்வியை கேள்விக்குள்ளாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி இதன் வழியாக காசு இல்லாதவர்களின் குழந்தைகள் கல்வி கற்க முடியாது என்கிற சூழலை உருவாக்கி இருக்கிறது. இதுவே மிகப்பெரிய ஏற்றத்தாழ்வை மாணவர்கள் மத்தியில் புகுத்தும் வேலைதான்.
நிலைமை இப்படியிருக்க தற்போது மாணவர்களிடம் இருக்கும் ஏற்றத்தாழ்வைக் களைய அட்சயப் பாத்ரா திட்டம் என்ற பெயரில் உணவு வழங்கும் திட்டம் கொண்டு வந்திருப்பது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது. இத்திட்டம் தொடங்கும் போதே மிகப் பெரிய ஏற்றத்தாழ்வை திணிக்க முயலுகிறது.
சரி அப்படியே ஏற்றத்தாழ்வுகளைக் களைவதுதான் உண்மையான நோக்கம் என்றால், அதை அரசே ஏற்று செய்வதுதானே சரியாக இருக்கும். அதை விடுத்து தனியாரிடம் ஒப்படைப்பது மோசமான விளைவுகளை உண்டு பண்ணாதா? அதுவும் ஒரு குறிப்பிட்ட மதப் பின்னணி கொண்ட அமைப்பிடம் கொடுப்பது இத்திட்டத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பதையும், அதன் பின்னணியில் என்ன கருத்துரு இருக்கிறது என்பதையும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது.
பள்ளியில் பல கனவுகளோடு பாடம் கற்க வரும் மாணவர்களிடம் பிஞ்சிலேயே நஞ்சை விதைக்க முயலாமல், அவர்களை அவர்களின் போக்கிலே விட்டு விடுங்கள். அவர்கள் விரும்பியதை அவர்களே சாப்பிட்டுக் கொள்ளட்டும். அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அட்சய பாத்ரா தீர்மானிப்பது மாணவ சமுதாயத்திற்கே மிகப் பெரிய கேடு. இதற்கு அரசும் துணை போவது சரிதானா?
உண்மையாகவே மனம் திறந்து சொல்லுங்கள்... அட்சய பாத்ரா மாணவர்களின் நலனுக்கானதுதானா? அல்லது யாரையோ திருப்திப்படுத்தி அதன் வழியாக கல்லா கட்டுவதற்கு வழி பார்க்கிறீர்களா? இதன் பின்னால் ஒளிந்திருக்கும் மர்மம்தான் என்ன?
பள்ளிகளில் மாணவர்களிடையே சமுதாய ஏற்றத்தாழ்வுகளை களைவதற்காக இத்திட்டம் என்று சொல்வது இதை செயல்படுத்தும் விதத்தில் துளியும் பொருந்தவில்லை. ஒருவேளை ஏற்றத்தாழ்வுகளை வலுப்படுத்த என்று மாற்றினால் அவர்கள் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் கொடுப்பதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்!
- மு.தமிழ்ச்செல்வன்