கறிக் குழம்பு சாப்பிடாலும் சரி... காய்கறிக் குழம்பு சாப்பிட்டாலும் சரி... கடைசியில் கையளவு சோற்றுக்கு பிசைந்துண்ண ரசம் வேண்டும்.
விபரம் தெரிந்த நாளில் மிக நெருக்கமாக தட்டில் பிசையப்பட்டது இந்த ரச சோறு தான். காலையில் அவதி அவதியாக பள்ளிக்கூடம் ஓடி விட்டு.. 11 மணிக்கு ரீசஸ் பீரியட் இடைவெளியில்... ஓடோடி வீடு வருவேன். சுடு சோறும் ரச குழைவுமாக... மம்மி ஊட்டி விட அடுத்த பத்து நிமிடத்தில் காலைக்கும் சேராத மதியத்துக்கும் சேராத ஒரு சிற்றுண்டி சிலுசிலுவென சின்ன வயிறு நிறைந்திருக்கும். ஓரிரு நாட்கள் கூட கிரேஸ் மேரியும் கூட ஓடி வந்திருக்கிறாள். அவள் வயிறையும் நிறைத்தது தனி எபிசோட்.
அப்படி ரசம் எப்போதிருந்தோ இப்போது வரை இனியும் தான்... தினமும் சாப்பாட்டில்..... கன்னத்தில் கிண்ணம் வைத்து காத்திருக்கும் ஒரு வகை சூப்பு போல தான். சோற்றில் பிசைந்து உள்ளங்கை மணக்க.. மஞ்சள் நிறம் படர... கூழாக வழிய எடுத்து வாயில் போடுவது ஒரு கலை. எனக்கு வாய்த்திருக்கிறது. ரசம் பிசைகையில் எல்லாம் கவிக்குயில் ஒரு வாய்க்கு ஆஹ் காட்டுவது ரசத்தில் ரஸம் கூடும் நேரம்.
ரசத்தை மேலாப்பில் ஊற்றி பருக்கை படர எடுத்து சிலர் உண்பார்கள். நமக்கு அது சரி பட்டு வராது. நமக்கு நிறைய ஊற்றி கூழாக பிசைய வேண்டும். ரச சோறு பிசைவதை ஒரு வேலையாகவே செய்வேன். கிட்ட நெருங்கி உற்று நோக்கின் கண்களில் தெறித்து விடும் அளவுக்கு அதில் ஒரு நேர்த்தி இருக்கும். முடியாத தருணத்தில் டம்ளரில் வாங்கி குடித்து கொள்வேன். குடித்தோ பிசைந்தோ ரசம் தினமும் உணவில் இருக்க ஒரு வழக்கம் எண்ணெய் மிதக்க... கடுகு துளிர்க்க.... பூண்டு பற்கள் காட்ட... கருவேப்பிலை கவனம் கூட்ட... கொத்தமல்லி... சீரகம்...மணக்க.... அதிமதுரம் இதுவல்லவோ என ஒரு நம்பிக்கை வாயூறும். ரசம் சாப்பிட்ட தட்டில் எண்ணெய் பிசுபிசுப்போடு மஞ்சள் நிறம் படிந்திருப்பது ஒரு சோற்றோவியம் போல...... அதிலொரு வயிறார உண்ட திருப்தி காணலாம்.
தக்காளி ரசமோ... புளி ரசமோ... சேர்க்க வேண்டியதை சேர்த்து... தக்காளி என்றால் தக்காளி அதிகமாக போட்டு... புளி என்றாலே புளி அதிகமாக போட்டு... என்னென்னவோ ஜிம்மிக் வேலை செய்வாள் கவிக்குயில். பார்க்க பார்க்க ரசம் மணக்க ஆரம்பித்து விடும். அது மம்மியிடம் இருந்து கற்றுக் கொண்டது. மம்மி என் பாட்டியிடம் இருந்து கற்றுக் கொண்டது. ரச விஷயத்தில் மூன்று பேருக்குமே ஒரே பக்குவம்.
மிளகு ரசத்துக்கு எல்லா சேர்மானங்களையும் பச்சையாகவே அரைக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. கொரோனா கால கட்டத்தில் மிளகு ரசத்தின் அவசியத்தை நாம் அனைவருமே அறிந்திருந்தோம். வாரம் இருமுறை மிளகு ரசம் என்பது சாப்பாட்டில் ஒரு தொடர் நிகழ்வாக இருக்க வேண்டும். ரசத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள்... ஆதித் தமிழரின் ஆச்சரியங்கள். நான்கு மிளகு இருந்தால் எதிரி வீட்டில் கூட சாப்பிடலாம் என்று சொல்வார்கள். அப்படி ஒரு விஷ முறிவு அது. ஆனால் நம்மில் பலர் வெண் பொங்கலில் கிடக்கும் மிளகை எடுத்து தட்டோரம் வைத்து விட்டு சாப்பிடுவோர்கள் தான். உணவு முறை சீராக இல்லாதவரை சர்க்கரை பிபி இன்னும் பிற சால்ஜாப்பு சகட்டு மேனிக்கு சனி செய்யும் என்பது தான் சக காலம் கற்று தந்த சரித்திரம்.
ரசங்களில் அடுத்த வகை பருப்பு ரசம். மிகுந்த சுவையை மிக சரியாக கொண்டிருக்கும் ரசம் இது என்பது தட்டு நிறைந்த என் நம்பிக்கை. பருப்பு குழம்பு செய்யும் நாட்களில்... பருப்பை பேருக்கு கொஞ்சம் போட்டுக் கொண்டு... ரசத்துக்கு தாவி விடுவேன். முழு சாப்பாடும் பருப்பு ரசத்தில் பிசையப்படுவது திடும்மென வந்தமர்ந்து கொள்ளும் சிறுவனின் நாவோடு நினைக்க நினைக்க பசி கூடும். ரச சோற்றின் முன் சிறுவனிலும் சிறுவனை பிசைய விட்டு வேடிக்கை பார்க்க சுவை கூட்டும் சூத்திரம் அது.
சிறுவயதில் விளையாட்டு போக்கில் புளியை கரைத்து சட்டியில் ஊற்றி வெற்றடுப்பில் வைத்தெடுத்து சோற்றில் ஊற்றி சாப்பிடுவேன். அது ஒரு விளையாட்டு. ஆனால்... அது கூட ஒரு வகை ருசி தான். பச்சை ரசத்தில்... பசியாறிய காலம் ரத்த சிவப்பில் இன்னும் இருக்கிறது.
ரசம் ஜீரணத்தில் அதிக பங்கு வகிப்பதை அறிவோம். இருந்தும் அதை பெரிதாக கண்டுகொள்ளாத வாழ்வு முறை நகரத்தில் இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது ஏதாவது ஒரு ரசம் உட்கொள்வது அவசியம். பிசைவது அவரவர் விருப்பம். பிசைந்தவன் உண்டு களித்த அனுபவம் தனி.
இங்கே ஒவ்வொரு வீட்டு ரசமும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. பழைய அலுவலகத்தில் சுமி கொண்டு வரும் ரசம் கொஞ்சம் கெட்டியாக குழம்பு மாதிரியே இருக்கும். அது ஒரு வித சுவை. கவிக்குயில் அம்மா வீட்டில் செய்யும் ரசம்... அது ஒரு டைப். இப்படி ஒவ்வொரு வீட்டு ரசமும் ஒவ்வொரு மாதிரி. எப்படியோ அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் உடம்புக்குள் செல்ல வேண்டும். அவ்வளவு தான். ருசி ஒரு ரூட் தான். மற்றபடி சேருமிடம் உடல் எனும் பெரு மந்திரம்.
எங்கு ரசம் கிடைத்தாலும் சாப்பிட்டுக் கொள்ளும் பழக்கம் நமக்கு இருக்கிறது. ஆனால் நம் வீட்டில் பாட்டியிடம் இருந்து கை மாறி வந்திருக்கும் ரசம்... பொதுவாகவே அனைவராலும் விரும்பப்படும். பழைய அலுவலகத்தில் நெல்சன் கூட சொல்வார். அப்படியே எங்க பாட்டி கைப்பக்குவம் விஜி என்று.
இந்த பக்குவத்தின் ஆதி எதுவென்று தெரியவில்லை. ஆனால்.. அதன் அவசியம் அறிந்ததால் மணக்க மணக்க இங்கே அதன் வார்த்தைகள் பிசையப்படுகின்றன.
- கவிஜி