வான்கோவின் கால்கள் எதையோ தேடி அலைகின்றன. எதுவென்று தெரியாத தூரங்களினால் அந்தக் கால்களில் ஒரு தீராத யாத்திரை இருக்கிறது.

அவன் தொடர்ந்து காடுகளுக்குள் பயணப்படுகிறான். தீரா தேடல்களில் அவன் தன்னையே தொலைக்கிறான். தொலைவது என்று தெரிந்து கொண்டே தொலைவதில் ஒரு துயர இன்பத்தை கண்டடைகிறான். அதன் மூலம் எதையோ தேடுவதாக நம்புகிறான். அவன் நம்பிக்கை தூரிகைகளால் ஆனவை. ஒவ்வொரு நாளும் அவன் பூமி அவன் காலடியில் நழுவுகிக் கொண்டே இருக்கிறது. இனம் புரியாத புள்ளிகளில் அவன் நகர்ந்து கொண்டே இருக்கிறான். தனித்த தொலைதலில் அவன் வரைந்து கொண்டே இருக்கிறான். அதிகாலையை அந்திமாலையை மதியத்தை பூக்களை... தொடுவானத்தை... மண்ணை.... ஆகாயத்தை.... மரங்களை.... காடுகளை.... காற்றுவெளியை... பரந்த நிலப்பரப்பை... வரைந்து முடியவே முடியாத பக்கங்களில் அவன் தன்னையே நிறைத்துக் கொண்டிருக்கிறான்.

At Eternitys Gate 400செவ்வகப் பெட்டியை போன்ற பலகையையும் வரைதலுக்கான உபகரணங்களையும் முதுகில் சுமந்து கொண்டு காடுகளில் அவன் நடக்கும் காட்சிகளில்... அவன் கண்களில் நாமும் இவ்வுலகைக் காண்கிறோம். அத்தனை பிரகாசம் அது. அத்தனை சுவாசம் அங்கே. அற்புதக் கூடுகளின் நிகழ்கால வெளியில் கண்களுக்குத் தெரியாமல் சிறகடிக்கும் தன்னையே உணர முடியும்.

புறக்கணிப்பின் வீதியில் கறுத்த காகத்தின் மனநிலை தான் அவனுக்கு. முதல் காட்சியிலேயே கிழிந்த காலணிகளை கழட்டி எடுத்தெடுத்து பார்க்கும் அவன் கைகள் வேறு வழியின்றி அதையும் ஓவியமாக்குகிறது. ஓவியங்களின் வழியே தான் தன் துக்கங்களையும்... தூக்கங்களையும் மறுபரிசீலனை செய்து கொள்கிறான். ஒரு வகை சோர்வு மனம் கொண்ட மனிதனாகத்தான் வான்கோ எப்போதுமே இருக்கிறான். அந்த சோர்வு மனம் தான் அவனை ஓவியங்களுள் அலைக்கழிக்கிறது. ஓரிடத்தில் அவன் சிந்தனையை நிறுத்த முடியாமல் வைத்திருக்கிறது. அவன் காணும் காட்சிகளில் எல்லாம்... கனவும் சேர்ந்து இருப்பதை நம்பாதோருக்கு அவன் காடுகளில் காலடி இல்லை.

மஞ்சள் வண்ணத்தில் ஒரு வித மயக்கம் காண்கிறான். மஞ்சள் பூக்களில்.. முயக்கம் தரும் அவன் சிந்தனைகளின் வழியே நாமும் ஒரு புள்ளியில் அவனோவியம் ஆகிறோம். இந்த மனிதர்களிடம் இருந்து அவன் விலகியே இருக்கிறான். சிலுவைகள் சுமக்க எல்லாராலும் முடியாது. சில சிந்தனைகளையும் அப்படித்தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவன் மரங்களோடும்.... காகங்களோடும்.... பறவைகளோடும் தூரிகையின் மொழியில் உரையாடுகிறான். அவன் தனது 30 வது வயதில்தான் வரைய ஆரம்பிக்கிறான். அதன் பிறகு அடுத்த ஏழு ஆண்டுகள் தான் அவன் வரைந்தான். அந்த கால கட்டத்தில் வரைந்தவை தான் இன்றும் நம்மடையே இருக்கும் அழியா புகழ் பெற்ற வான்கோவின் ஓவியங்கள். அவன் வாழும் காலத்தில் அவன் ஓவியங்கள் ஒன்று கூட விற்கப்படவில்லை என்பது எத்தனை வருத்தத்திற்குரிய விஷயம். ஆனாலும் அவன் வரைவதை விடவேயில்லை. அவன் வரைந்து கொண்டிருப்பதற்காக வரைந்து கொண்டிருந்தான். வேறு வழியின்றி தனது கடைசி கால கட்டத்தை அவன் வரைந்து தான் கடக்க வேண்டி இருந்தது. வரைவது வானத்துக்கும் பூமிக்கும் பயணிப்பது. அந்த ஓரிட பயணத்தை அழுகையோடும்... வலியோடும்... தனிமையோடும்... மனச்சோர்வோடும்.... இயலாமையோடுமே தூரிகைக்கு படையலிட்டான். ஒரு ஓவியனின் சொல் கொண்டு யோசிக்கையில் வண்ணங்களற்ற வெறுமை மனமெங்கும் படர்வதை தடுக்க முடியவில்லை.

பறந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பில் ஒரு பிரபுவைப் போல நடை போடும் அவன்... சிறுபிள்ளையின் மனநிலையோடு தன் சகோதரனைக் கட்டிக் கொண்டு அழுவதெல்லாம் கலைஞனின் தத்ரூப முயக்க நிலை. ஆடு மேய்க்கும் பெண்ணிடம் உன்னை வரைகிறேன்..... என்று போஸ் கொடுக்க சொல்லும் காட்சியில்... அப்பட்டமான ஓவியனின் ஆழ்மன தேடலின் நுட்பத்தை உணர முடியும். அவன் நடைபோடும் காடுகளுக்குள் வீசும் பிரத்யேகமான காற்றை உணர முடிந்த எனக்கு அதை எழுத்தில் கொண்டு வர வார்த்தைகள் போதவில்லை. அவரவர் கண்களில் உணரும் உச்சி வெயிலின் அரூபம் அது. அவன் காணும் வெளிகளில்.. . .. ..வானத்தில்...... வெளிச்சத்தில்........ஒருவகை முடிவிலி நிரம்ப ததும்புகிறது. அவையோடு பேசும் நிலை வருகையில்.. அவன் மனதுக்குள் பிறழ்ந்த நிலை மெல்ல உருவாகிறது. பூக்களின் குரல் கேட்க ஆரம்பிக்கையில் அவன் நடுங்குகிறான். அவன் வரைய வரைய அதுவும் அவனை வரைகிறது. அதில் இடைவெளி நிரம்பி எது வரையும் எது என்று இடம் பெயரும் புள்ளிக்குள் நாமும் சற்று தலைகீழாய் நடக்கத் தொடங்குகிறோம்.

காட்சியில் இல்லை என்றாலும்...ஒரு கட்டத்துக்கு பின் இடது காது இல்லாமல் மறைத்து கட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறான். இருவேறு காட்சிகள் சரித்திரத்தில் இருக்கிறது. ஒன்று லோக்கல் விலைமகளுக்கு தன் இடது காதை அறுத்து பரிசாக கொடுத்தது. இரண்டாவது.. தீவிர மனசோர்வில் செய்வதறியாது... தன் காதை தானே அறுத்துக் கொண்டான் என்பது. அதனால் அதை பார்வையாளன் கணிப்புக்கே இயக்குனர் விட்டிருக்கிறார். காதலிக்கு அறுத்து கொடுத்ததாகவே இருக்கட்டும். காதலின் முக்தி நிலையில்.. எல்லாமே சாத்தியப்படும். அது கூடு அறுத்துக் கொண்டு உயிர் விட்டு விடும் அன்பின் ஆழ்ந்த குறுக்கு வெட்டு தோற்றம். மானுட சாட்சி காதலாகவே இருக்கிறது. அவனுக்கும் அப்படியே இருக்கட்டும்.

அதன் பிறகு அவன் மனநிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். ஒரு தலைசிறந்த உலக ஓவியன்....அந்த மருத்துவமனை அறைக்குள் அமர்ந்திக்கும் காட்சி கூட அவனே வரைந்த ஓவியமாகத்தான் தெரிகிறது. இந்த மனிதர்களுக்கு கலைஞர்களை புறக்கணிப்பதில் அப்படி என்ன தான் கிடைக்கும் என்று தெரியவில்லை. காலத்துக்கும் ஒதுக்கிவைத்து சாகடித்து வெறும் நினைவுகளாக மாற்றி விடுவதில் மானுட குரூரம் மையம் எப்போதும் அதே முகத்தோடு தான்.

ஒரு காட்சியில் காட்டுக்குள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறான்... தவம் செய்வது போல. அவ்வழியே வரும் ஒரு பள்ளி சிறுமியர் சிறுவர்கள்... அவன் அருகே ஆவலோடு வந்து ஓவியனை இது வரை பார்த்ததில்லை என்று சொல்லி ஓவியத்தை தொட்டு இழுத்து விளையாடி... கலாட்டா செய்கிறார்கள். ஓவியனின் உள்ளிருக்கும் கலை மிருகம்... கோபமாக வெளிப்பட்டு எல்லாரையும் திட்டி......அந்த ஆசிரியை லூசு என்று விரட்டிக் கொண்டு ஓடுவதை வேறு எப்படியும் பொருள் படுத்த முடியாது. லூசுகளால் ஆனது அதன் சார்புகளும்.

இறுதியில், விட்ட ஒரு வகை மென் நிலையில்... வழக்கம் போல வரைந்து கொண்டிருக்கிறான் வான்கோ. இரு சிறுவர்கள் துப்பாக்கி வைத்து விளையாடிக் கொண்டு அவன் அருகே வந்து தொந்தரவு செய்ய.....வழக்கம் போல ஓவிய மிருகம் வெளியே வர......அங்கே நடக்கும் தெளிவில்லாத ஒரு வகை தடுமாற்றத்தில்.. கைகலப்பில் அந்த துப்பாக்கி வான்கோவின் வயிற்றில் வெடித்து விடுகிறது. காட்டிக் கொடுத்து விடாதீர்கள் என்று கெஞ்சும் சிறுவர்களை கடந்து தள்ளாடி நடந்து வரும் வான்கோவின் ஒவ்வொரு அசைவிலும் ஓவியம் தான் உணர முடிந்தது குரூர ரசிக மனதுக்கு. அதன் பிறகு ஓரிரு நாளில் வான்கோ என்ற மாபெரும் ஓவியன்...தொடுவானம் தொடாமலே மரித்து போகிறான். எதிர் வினையற்ற ஒரு செயல் தன்னை நிறுத்திக் கொள்கிறது. அப்போது அவனுக்கு வயது 37. (தீவிர மன உளைச்சலில் தானே தன்னை சுட்டுக் கொண்டான் என்றும் நம்பப்படுகிறது) வான்கோவின் வாழ்வில் அது சரியான முடிவல்ல. சரியான முடிவில்லாத ஒரு வாழ்க்கையின் பின் பாதியில் ஒரு காதற்ற சிந்தனையில் ஒரு பறவையின் சிறகடிப்பை மறந்து கொண்டே இருந்திருக்கிறான் வான்கோ.

அவன் ஆன்மா அதன் பிறகு தான் வரைந்த ஓவியங்களின் ஊடாக மீண்டும் மீண்டும் வினையாற்றிக் கொண்டிருக்கும் என்பதை படம் முடிந்தும் நான் உணர்ந்தேன். உணர்வுகளால் ஆனவனை அறிவால் தேடாதீர்கள். அகப்படவே மாட்டான். அது ஆக சிறந்த அற்புத நொடிகளால் ஆனது. அது அவனுக்கு வாய்ந்திருந்தது. ஒரு அதீத கலைஞனின் தவிப்பை படம் முழுக்க காண முடிந்ததை உயிர் அறுத்து செல்லும் அற்புதமான காட்சி ஒன்றாக சொல்லக்கூடும் இந்த காலம். தனது 37 வது வயதில் பூமியை விட்டு போன இந்த மகா கலைஞனின் ஆன்மா ஒருபோதும் சாந்தி அடையாது. அடையாத சாந்தியில் தான் அவன் இன்னும் உலாத்திக் கொண்டிருக்கிறான்.

"வின்சென்ட் வான்கோ" என்ற ஓவியனின் வாழ்வு மிக மிக மெல்லிய கோடுகளால் தீட்டப்பட்டது. அதன் நீட்சி இன்னமும் தன்னை நீட்டித்துக் கொண்டுதானிருக்கிறது.

ஒரு நூறு வருடங்களுக்கு பின் கிடைத்த அவனின் இன்ன பிற ஓவியங்களை போல... கிடைக்காமல் போன இன்ன பிற ஓவியங்களுள், காதை ஏன் அறுத்துக் கொண்டான் என்ற பதில் ஒளிர்ந்து கொண்டிருக்கலாம்.

Film : At Eternity's Gate
Direction : Julian Schnabel Year :2018 

- கவிஜி