அகிரா குரோசவாவுக்கு இப்படியொரு பெயருண்டு. அவர் ஜப்பானில் புகழ் பெற்றதை விடவும் அதிக அளவு உலக நாடுகளில் புகழ்பெற்றுவிட்டார் என்று அவரைக் குறைகூறுவோரும் சொல்வதுண்டு. ஜப்பானிய சினிமாவின் அடையாளமாகிவிட்ட குரோசவாவுக்கு உலகெங்கிலும் ரசிகர்கள். அவரது ‘ரஷோமான்’ (1951) வெளிவந்தபோது மேற்குலக ரசிகர்களை விரிந்தளவு பெற்றார் குரோசவா.
‘ரஷோமான்’ இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு வந்த அவரது படமாகும். குரோசவா முதலில் இயக்கிய படம் சான்ஷிரோ சுகதா (1943). இருந்த போதிலும் குரோசவாவுக்கு ஜப்பானுக்கு வெளியே ஒரு உலகளாவிய புகழை அள்ளித்தந்தது அவரது ‘தி செவன் சாமுராய் (1954) படம்தான். இது வரலாற்றின் இடைக் காலத்தைய ‘ஆக்ஷன் டிராமா’ படம். மூன்று மணி நேரத்துக்கும் சற்றே அதிகமாக ஓடக்கூடிய இந்த ‘தி செவன் சாமுராய்’ மேற்கு ரசிகர்களை நோக்கிச் சென்றபோது கத்தரிக்கோலுக்கு நிறைய இலக்கானது. இருந்தபோதிலும், ஜப்பானியப் பட உலகின் அடையாளமாகவே இந்தப் படம் காலங்களைக் கடந்தும் பேசப்பட்டது.
இங்கே ஆங்கிலப் படங்களைப் பார்த்துக் காப்பியடிப்பவர்கள் என்று நம்மை நாமே குற்றம் சாட்டிக்கொள்வதுண்டு. அமெரிக்க சினிமாக்காரர்கள் எல்லோரும் சுத்த சுயம்புகள், சொந்தமாகக் கற்பனை செய்பவர்கள் என்றெல்லாம்கூட நம்மிடையே கருத்துக்கள் உண்டு. அமெரிக்க சினிமா உலகத்தினரின் லட்சணத்தைக் கொஞ்சம் பின்னோக்கிச் சென்று ஆராய்ந்தால்தான் உண்மை எது என விளங்கும். குரோசவாவின் படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நிலைகுலைந்து போன அமெரிக்கப் பட உலகினர் பின்னர் என்ன செய்தார்கள் தெரியுமா? அப்பட்டமாக அவரைக் காப்பியடிக்கத் தொடங்கிவிட்டனர். இதோ சில உதாரணங்கள், பாருங்கள்:
அவரின் ‘ரஷோமான்’தான் மேற்கத்திய அரங்கமைப்போடு ‘அவுட்ரேஜ்’ படமானது. செர்ஜியோ லியோனே அவரது ‘யோஜிம்போ’வை ‘எ ஃபிஸ்ட் ஃபுல் ஆஃப் டாலர்’ (1954) என்று எடுத்தார். குரோசவாவின் ‘தி செவன் சாமுராயையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அது ‘தி மேக்னிஃபிசன்ட் செவன்’ (1960) என்ற பெயரிலேயே ஜான் ஸ்டர்ஜ் என்பவரால் ஆங்கிலத்துக்குப் போனது. இதில் வேடிக்கை என்னவென்றால் அசல் ஜப்பானிய ‘தி செவன் சாமுராய்’ படத்தை விட இந்த ஆங்கிலத் தழுவலுக்கு ஜப்பானிலேயே அதிக வரவேற்பு இருந்ததுதான். என்ன கொடுமை சார் இது?
1980களில்கூட குரோசவாவின் படமாக்கப்படாத அவரது நாடகம் ஒன்று ஆங்கிலத்தில் வெளிவந்த ‘ரன் அவே டிரெய்ன் (1985) எனும் புகழ் பெற்ற ஆக்ஷன் படத்துக்கு அடிப்படையானது. குரோசவாவின் மர்மக் கதை சான்ஜூரோ (1962) ரெட் பியர்ட் (1965) ஆனது.
உடல்நலம் பாதிக்கப்பட்ட போதிலும், லட்சியப்பூர்வமான அவரது சினிமாவுக்குப் போதிய நிதி கிடைக்காத போதிலும் குரோசவா ஒரு சிறந்த ஜப்பானிய சினிமா இயக்குநராகவே வாழ்ந்தார். இத்தனைக்கும் அவரது கதை சொல்லும் முறை மேற்கத்திய பாணியில் இருந்ததால் ஐரோப்பா முழுவதிலும், அமெரிக்காவிலும் திரளான ரசிகர்களும், நிதி வாய்ப்புக்களும் அவருக்கு தனது தாய்நாட்டைவிடக் கூடுதலாகவே இருந்தன. மெல்லிய காதல் இதயம் கொண்ட குரோசவா நுட்பம் நிறைந்த உணர்வுப்பூர்வமான மனிதர். அவரது படங்களில் அந்த உணர்வுகள் அபூர்வமாக முனைப்புடன் மேலெழுந்து வருவதைக் காண முடியும். வேறு எந்த ஜப்பானிய சினிமா படைப்பாளியையும் அவருடன் ஒப்பிட இயலாது என்று கணிக்கும் சினிமா விமர்சகர்கள் அவரது படைப்புகளை ஜான் ஃபோர்டுடன் ஒப்பிடுகின்றனர்.
அகிரா குரோசவா ஜப்பானிய சினிமாவின் மிக முக்கியமான இயக்குநராக, தயாரிப்பாளராக, திரைக்கதையாசிரியராக, எடிட்டராகத் திகழ்ந்தவர். ஜப்பானிய சினிமாவுக்கு ஒரு உலகளாவிய கவனிப்பை அவர் போல வேறெவரும் உருவாக்கித் தந்திடவில்லை.
1910ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் நாள் பிறந்த குரோசவாவுக்கு இது நூற்றாண்டு. அவர் மறைந்தது 1998 செப்டம்பர் 6. இசாமு - ஷிமா குரோசவா தம்பதியினரின் 8 குழந்தைகளில் கடைக்குட்டியாக டோக்கியோவின் புறநகர் பகுதியில் பிறந்த குரோசவா இளம் வயதிலேயே மேற்கத்திய சினிமாக்களைப் பார்க்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றார்.
ஆரம்பக் கல்வியின்போதே அவர் ஓவியங்கள் வரையும் திறன் பெற்றிருந்தார். அவரது அண்ணன்களில் ஒருவர் ஹேய்கோ. பின்னாளில் ஹேய்கோ பேசாப் படங்களுக்கு டோக்கியோ திரையரங்கங்களில் கதைசொல்லியாகப் பணியாற்றினார். ஜப்பானில் அந்தப் பணி செய்வோரை ‘பென்ஷி’ என்று அழைப்பார்கள். பேசும் படங்கள் வரத் தொடங்கியபோது இந்த பென்ஷிக்கள் வேலையிழந்தனர். ஹேய்கோ பென்ஷிக்களைத் திரட்டிக் கொண்டு போராடினார். குரோசவா தொழிலாளர் போராட்டங்களை ஆதரித்தார். ஓவியத்திறனை வளர்த்துக் கொண்டும், இலக்கியம் படித்துக் கொண்டும் குரோசவா புரட்சிகரமான செய்தித்தாள் ஒன்றில் கட்டுரைகளையும் நிறைய எழுதினார்.
1936ல் கஜிரோ யமாமோட்டோவிடம் உதவி இயக்குநராக குரோசவா பணியாற்றத் தொடங்கினார். அவரது முதல் படமான சான்ஷிரோ சுகதாவைத் தொடர்ந்து ‘தி மோஸ்ட் பியூட்டிஃபுல்’, ‘ஜூடோ சகா 2’ வெளிவந்தன. ஜூடோ கலையை மேற்குலகின் குத்துச் சண்டையைவிட உயர்வாகச் சொல்லியிருந்தார் குரோசவா. அவரது மிகச்சிறந்த ‘ரஷோமான்’ தங்கச் சிங்கம் விருதினை வெனிஸ் திரைப்பட விழாவில் பெற்றது.
குரோசவாவின் சினிமாக்கள் முற்றிலும் வித்தியாசமான கதைசொல்லும் முறையையும், தொழில்நுட்பத் தனித்துவத்தையும் கொண்டிருந்தன. காட்சியின் உணர்வு நிலையை மேம்படுத்துவதற்காக அவர் பருவநிலைகளைப் பயன்படுத்துவதை ஒரு உத்தியாகக் கையாள்வார். ராஷோமானின் துவக்கக் காட்சியே பெருமழையுடன்தான் மிரட்டும். தி செவன் சாமுராயின் இறுதிக் காட்சியில் கொட்டும் மழையில் தான் உக்கிரமான சண்டை நடக்கும். ‘ஸ்டிரே டாக்’ படத்தில் உக்கிரமான உஷ்ணம் தகிக்கும். ‘யோஜிம்போ’விலோ விறைப்பூட்டும் குளிர்ந்த காற்றடிக்கும். ‘இகிரு’ படத்தில் பனி பொழியும். ‘த் ரோன் ஆஃப் பிளட்’ படத்திலோ தெளிவற்ற புகைமூட்டம் மிரட்டும்.
அவரை ஜப்பானில் ‘டென்னோ’ எனச் செல்லமாக அழைப்பர். அதன் பொருள் சக்கரவர்த்தி என்பதாகும். அதிகாரம் தொனிக்கும் அவரது இயக்கும் முறையினால் வந்ததே இந்தப் பெயர். அடிப்படையில் காட்சி ஊடகமான சினிமாவின் முழுமையை அடையும் வரையில் அவர் நேரத்தையும், திறனையும் அளவு கருதாமல் செலவிடும் இயல்புள்ளவர்.
குரோசவாவின் 99ஆவது பிறந்த நாளிலேயே அவரது ரசிகர்களும், அபிமானிகளும் அவரது படைப்பாக்க நினைவுகளைக் கொண்டாடத் துவங்கிவிட்டனர். அவரது பெயரில் அனாஹெய்ம் பல்கலைக்கழகம் ஒரு சினிமா பள்ளியினைத் துவக்கியிருக்கிறது. அவர் எடுக்கத் தொடங்கி, முற்றுப்பெறாத ஆவணப்படமான ‘ஜென்டாய் நோ நோஹ்’ அவரது நூற்றாண்டில் எடுத்து முடிக்கப்பட்டு திரையிடப்பட இருக்கிறது. அது ஜப்பானின் செவ்வியல் நாடகக்காரரான நோஹ் பற்றியது.
வெனிஸ், பெர்லின், கேன்ஸ் உள்ளிட்ட பல சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் குரோசவா படங்கள் பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளன. வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற அகிரா குரோசவா எனும் அந்த ஜப்பானிய சினிமா மேதையின் நூற்றாண்டில் அவரது திரைப்படங்களைப் பார்ப்பதும், அவர் குறித்தும், அவரது படைப்பாக்க ஆளுமை குறித்தும் விவாதிப்பதும் நல்ல கலை ரசனையை வளர்த்தெடுக்க நிச்சயம் உதவும். சினிமா என்றாலே அது ஏகாதிபத்திய ஹாலிவுட் சினிமாதான் என்று கட்டமைக்கப்படும் கருத்துருவாக்கங்களை எதிர்கொள்ள அகிரா குரோசவாவின் நூற்றாண்டு நினைவுகள் நமக்கு மிக அவசியமானவைதான்.