காசாபிளாங்க்கா படப்பிடிப்பு முடிந்த உடனே இங்ரிட் வீடு திரும்பத் தான் திட்டமிட்டிருந்தாள். பீட்டரும் பியாவும் நீண்ட பெருமூச்சுகளுடன் அவளுக்காகக் காத்திருப்பது அவளது வீடு திரும்புதலை அவசரப்படுத்தியது. ஆனால் மரியாவின் அழைப்பை மீறி அவளால் வீடு திரும்ப முடியவில்லை. பாவமல்லவா மரியா. பாசிஸ்ட்டுகளால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி முழுக்குடும்பத்தையும் இழந்து அனாதையாகி அதன் காரணமாகவே மனதின் சமநிலை குலைந்து நிற்கும் பெண்ணல்லவா.(ஸ்பானிய உள்நாட்டுப்போரில் கொரில்லா வீரர்களால் காப்பாற்றப்பட்ட மரியா அவர்களோடே அழைத்துச் செல்லப்படுபவள்.
போரில் ஒரு பாலத்தை வெடிவைத்துத் தகர்ப்பதற்காக தானே முன்வந்து களத்துக்குச் செல்லும் அமெரிக்கரான (ஸ்பானிய மொழிப்)பேராசிரியர் ராபர்ட் ஜோர்டான் அக்கொரில்லாக்களுடன் சென்று சேர்கிறார்.ஜோர்டானுக்கும் மரியாவுக்கும் இடையில் காதல் துளிர்த்து மலர்கிறது.இந்தக்காதலில் தன்னை முற்றிலுமாகக் கொடுக்கிறாள் மரியா.இக்காதலின் தூய்மையே தன் உடம்பின் மீதும் மனதின் மீதும் ஏற்றப்பட்ட கசடுகள் அழிந்து ஒழியும் என நம்பத்துவங்குகிறாள். ஒருநாள் முழுக்க அவளை ஆழ்ந்த காதலுடன் பார்த்தபடி இருக்கிறார் ஜோர்டான். அந்தப் பார்வையின் ஸ்பரிசத்தில் மரியாவின் இறுகிப்போன மன உணர்வுகள் இளக்கம் பெறுகின்றன.கொரில்லாக்களில் சிலதோழர்கள் ராணுவத்தின் சிப்பாய்களைக் கொல்ல மறுக்கிறார்கள்.அவர்களும் எங்களைப்போல இந்நாட்டின் பிரஜைகள் தானே என்று மறுக்கிறார்கள்.எனினும் பாலத்தின் பாதுகாப்புக்காக நிற்கும் வீரனைக் கொன்றால்தான் பாலம் தகர்ப்பு வெற்றிகரமாக முடியும் என்று ஜோர்டான் விளக்குகிறார்.
கண்ணீருடன் அவ்வீரனைக் கொரில்லாக்கள் கொல்லுகிறார்கள்.பாலம் தகர்க்கப்படுகிறது.கொரில்லாக்கள் சிலர் கொல்லப்படுகிறார்கள். ராணுவம் துரத்தி வருகிறது.ஜோர்டான் பலத்த காயத்துடன் விழுகிறார்.உயிர் பிழைக்க வாய்ப்பில்லாத அளவுக்கு ஆழமான காயங்கள்.மரியாவின் எதிர்ப்பை மீறி அவளை கொரில்லாக்களுடன் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்புகிறார்.
கையில் எந்திரத் துப்பாக்கியுடன் தைரியத்துடன் எதிர்பார்த்துக்காத்திருக்கிறார்.தன் மரணத்தையா ராணுவத்தையா? போர்க்களத்தின் மூன்று நாள் நிகழ்வுகள் தான் ஹெமிங்வேயின் நாவல்.)
படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சியர்ரெ நெவடா மலைப்பிரதேசத்தை நோக்கி இங்ரிட்டின் கார் பறந்துகொண்டிருந்தது.தனக்காக அங்கே கொரில்லாக்களும் ஜோர்டானும் காத்திருப்பார்களே என்கிற பதட்டம் அவள் உடம்பை நடுக்கிக்கொண்டிருந்தது.
அன்புள்ள புத்தகமே,
அந்த மலைகளுக்கு நடுவே நான் போய் நின்றேன்.தன்னந்தனியாக நிற்கும் ஒரு ஆதிகாலத்து மனுஷியைப்போல நின்று காட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்."வெல்கம் மரியா" என்ற குரல் கேட்டுத் திரும்பினேன்.ஹாலிவுட்டின் அற்புதமான நடிகர் கேரி கூப்பர் என்னை வரவேற்கும் விதமான புன்சிரிப்புடன் பின்னால் வந்து நின்றார். அவர் தானே ராபர்ட் ஜோர்டான். அவருடைய கைகளை அன்புடன் பற்றிக்கொண்டேன்.வா.. இயக்குநர் சாம் வுட்டைத் தேடுவோம் என்று காட்டுக்குள் அழைத்துச்சென்றார்.அக்கணமே நான் அவரைக் காதலிக்கத் துவங்கினேன்.
முழுப்படமும் அந்த மலைகாட்டில் தான் எடுத்து முடிக்கப்பட்டது.உண்மையான போர்க்களம் போல செட் அந்த மலைகளுக்கிடையே அமைக்கப்பட்டிருந்தது.போர்விமானங்களும் இருந்தன.அடிக்கடி அவை மேலே பறந்து குண்டுகள் வீசின.பழங்கால இனக்குழு வாழ்க்கைபோல தற்காலிகமாக அமைக்கப்பட்ட கேபின்களில் ஜாகை.தினசரி ஒருவர் சமைக்க வேண்டும்.பல்வேறு நாட்டு கலைஞர்கள் இப்படத்திலும் இருந்தார்கள்.பலர் போரினால் உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
எல்லோரும் ஒரு இனக்குழுவைச் சார்ந்தவர்கள் போல அவ்வளவு நெருக்கத்துடன் பழகினோம்.படப்பிடிப்பு மூன்றுமாத காலம் நடந்தது.இறுதி நாட்களில் மலையெங்கும் பனி பொழிய ஆரம்பித்தது. போர்க்களக் காட்சிகளில் எல்லோருமே அலைக்கழிந்தோம்.உடல் உபாதைகளுக்கு ஆளானோம்.ஆனால் என் மனம் முற்றிலுமாகத் ததும்பியிருந்தது.என்னோடு கேபினில் உடன் தங்கியிருந்த மொழி ஆசிரியை ரூத் கேலியாக அடிக்கடி கூறுவார்: நீ கேரி கூப்பரை பார்க்கும் பார்வை ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது.படத்தில்தான் நீ அவரைக் காதலிக்கிறாய்.மறந்துவிடாதே.
நான் தயாராக இருந்தபோதும் மரியாவுக்காக என் தலைமுடி கத்தரிக்கப்படவில்லை.என் முடியை உள்ளுக்குள் மடக்கிவிட்டு கிளிப்கள் மாட்டி கத்தரிக்கப்பட்ட முடிபோல ஆக்கினார்கள்.ஒவ்வொரு "ஷாட் முடிவிலும் மீண்டும் மீண்டும் கிளிப்களைச் சரி செய்ய வேண்டியிருந்தது. படம் ரிலீசாகி கொஞ்ச நாளில் இந்த "மரியா கட்" ரொம்ப பாப்புலர் ஆகிவிட்டது.அமெரிக்கப் பெண்கள் மரியா கட்டுக்காக சலூன்களில் வரிசையில் நின்றனர்.ஆனால் பாவம் அவர்களுக்குத் தெரியாது இது 'கட்' அல்ல கிளிப் வேலை என்பது.நானும் பார்த்தேன் சலூன்களில் மரியா கட் செய்து கொண்ட பெண்களின் தலை ரெண்டு நாட்களில் பெருச்சாளி போல ஆகி விரைத்துக்கொண்டு நிற்கும். ஆனாலும் பல வருடங்களுக்கு மரியா கட் அமெரிக்காவை ஆட்டிக்கொண்டிருந்தது.
இப்படத்தில் மரியாவாக நான் நடிப்பது டேவிட்டுக்கு அறவே பிடிக்கவில்லை.அழகான "அன்புக்காதலி" என்கிற கூண்டுக்குள்ளேயே என்னை அடைத்து வைக்க விரும்பிய அவருக்கு கற்பழிக்கப்பட்டுப் பைத்திய மனநிலையோடும் அழுக்கு ஆடைகளோடும் படம் முழுக்க அலையும் மரியாவை எப்படிப் பிடிக்கும்?
ஆனால் படம் ரிலீசான போது இரண்டு விதமாகவும் கருத்துக்கள் வந்தன. ரொம்ப நீளம். ரொம்ப போர் என்று சில பத்திரிகைகள் எழுதின. நாவலின் உயிர் சிதையாமல் படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் இங்ரிட்தான் படத்தில் பலத்த மணியோசையை எழுப்பியுள்ளதாகவும் அந்த மணியோசை இன்னும் செவிகளில் அதிர்ந்து கொண்டே இருப்பதாகவும் பத்திரிகைகள் எழுதின.எனக்கு எர்னஸ்ட் ஹெமிங்வேயின் கருத்து என்ன என்று அறிந்து கொள்வதில்தான் ஆர்வம் அதிகமாயிருந்தது. அவர் சீனாவிலிருந்து திரும்பியதும் அவரைப்போய்ப் பார்த்தேன்.
"படத்தைப் பார்த்தீர்களா?"
"ஆம். ஐந்து முறை" அவருடைய பதில் எனக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. என் முகமெல்லாம் மலர்ந்து சிவந்துவிட்டது.
"அப்படியானால் படம் உங்களுக்கு அவ்வளவு பிடித்திருந்ததா?"
"நிச்சயமாக இல்லை.படம் பார்க்க தியேட்டருக்குச் சென்றேன். முதல் ஐந்து நிமிடம் பார்த்தேன்.அதற்கு மேல் உட்காரவே முடியவில்லை.வெளிநடப்புச் செய்துவிட்டேன்.படத்தை எப்படியாவது முழுசாகப் பார்த்து விட்டுப் பேசுவதுதான் சரி என்று நினைத்து மறுபடி சென்றேன். கூடப் பத்து நிமிடம் பார்த்திருப்பேன். மீண்டும் வெளிநடப்பு. முழுசாகப் பார்த்து முடிக்க ஐந்து முறை போக வேண்டியதாகிவிட்டது. என் நாவலின் அதி முக்கியமான காட்சிகளைப் படத்தில் காணவில்லை. எதற்காகப் பின் இப்படத்தை எடுத்தார்களோ தெரியவில்லை"
நானும் திரும்ப தியேட்டருக்குப் போய் படத்தைப் பார்த்தேன். நான் நடித்த முதல் வண்ணப்படம் அது தான். மூன்று மாதம் காட்டிலும் மூன்று மாதம் ஸ்டூடியோவிலும் எனத் தொடர்ச்சியான கடும் உழைப்பில் படம் உருவாகியிருந்தது. போரில் தான் யார் பக்கம் என்பது நாவலில் தெளிவாகத் தெரியும்படியாக ஹெமிங்வே எழுதியிருந்தார்.படத்தில் அது இல்லை.யார் பக்கமும் சாராமல் படம் முடிந்திருந்தது. ஹெமிங்வேயின் வருத்தம் எப்படி இருப்பினும் நான் என்னுடைய பங்கைச் சரியாகச் செய்தேனா என்பதையே படத்தில் பார்த்தேன்.
ஆம். படப்பிடிப்புக்காலம் முழுவதும் நான் கேரி கூப்பரோடு கொண்டிருந்த காதலும் அங்கே காட்டுக்குள் எல்லோருமாகச் சேர்ந்து வாழ்ந்த இனக்குழு வாழ்க்கையும் என் மனதில் ததும்ப வைத்திருந்த சந்தோஷம் என் முகத்தில் மறைக்க முடியாத வண்ணம் படிந்திருந்தது. எல்லாக்காட்சிகளிலும் என் முகத்தை உற்று நோக்கினால் அந்த மகிழ்ச்சி தெரிந்தது. பாசிஸ்ட்டுகளால் சிதைக்கப்பட்ட மரியா என்ற பெண்ணுக்கு அவளுடைய சோகத்துக்கு நியாயம் வழங்கும்படியாக என் முகம் படத்தில் இல்லை என்பதைக் கண்டேன். என் மனம் தளர்ந்தது. சொந்த உணர்வுகள் நடிப்புக்கு இடையூறாக வந்து நின்றது என் வாழ்வில் அதுவே முதன் முறை.
இப்போது ஹாலிவுட்டிலேயே ஒரு வீடு வாங்கி குடும்பத்தை வைத்துக் கொண்டார்கள். பீட்டரையும் பியாவையும் தினசரி சந்திக்க முடிந்ததில் கூட இருக்க முடிந்ததில் மகிழ்ச்சி கூடியது.எப்போதும் திரைப்படத்துறையினர் அவளைக் கேலி செய்வது வழக்கம். மகிழ்ச்சிகரமான திருமண வாழ்க்கை நடத்துவதாக அவள் சொல்லும்போது நீ இங்கே அவர் அங்கே.எப்போதாவது தான் சந்திக்கிறீர்கள் அப்புறம் அது மகிழ்ச்சிகரமான வெற்றிகரமான திருமணமாம். முதலில் இருவரும் ஒன்றாக வாழுங்கள்.மற்றதை பிறகு பேசலாம் என்பார்கள்.
ஆனால் ஹாலிவுட்டில் தங்கியதால் ஒரு ஹாலிவுட் நட்சத்திரத்தின் வாழ்க்கையை அவள் வாழ வேண்டும் என மற்றவர்கள் எதிர்பார்த்தனர்.அவ்வப்போது விருந்து வைப்பது நட்சத்திரங்களைப்போல முறையாக உடை உடுத்துவது பார்ட்டிகளுக்குப் போய் பிரபலங்களுடன் டான்ஸ் ஆடுவது இதெல்லாம் இங்ரிட்டுக்கு ஒத்து வரவே வராது. அவள் ஒருபோதும் ஒரு 'ஹாலிவுட்காரி'யாக ஆகிவிட முடியாதல்லவா.எல்லா நட்சத்திரங்களும் கௌரவமாக பார்ட்டிகளுக்கு உடுத்தி வரும் மிருகத்தோல் கோட் ஒன்றுகூட அவளிடம் இல்லை.
அப்புறம் எல்லா ஹாலிவுட் நட்சத்திரங்களையும் ஆட்டிப்படைக்கும் இரண்டு பெண்களைக் கண்டாலே அவளுக்குப் பிடிக்காது. அவர்கள் பத்திரிகைகளில் நட்சத்திரங்களைப்பற்றி கிசுகிசு எழுதும் லூலா பார்சன்ஸ் மற்றும் ஹெட்டா ஹோப்பர்.அவர்கள் நினைத்தால் ஒரு நட்சத்திரத்தின் கலை வாழ்வையே அஸ்தமிக்கச் செய்து விடுவார்கள்.ஆகவே எல்லோரும் பயப்பட்டார்கள். ஆனால் இங்ரிட் அவர்களைத் துச்சமாகவும் கேவலமாகவும் மதித்தாள். அவர்களுடைய பார்ட்டி அழைப்புகளைத் தூக்கிக் குப்பையில் போட்டு விடுவாள்.
எப்போதாவது பார்ட்டிகளுக்குப் போனால் பீட்டரையும் அழைத்துச் செல்வாள். அதிலும் சங்கடம் இருந்தது. இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், சக நடிகர், நடிகைகள் என அவள் உடனே கலந்துவிட ஒரு பெரிய கும்பலே இருக்கும். பீட்டர் ஒரு ஓரமாக நடிகர்களின் மனைவிகள் உட்கார்ந்து காத்திருக்கும் இடத்தில் போய் அமர்ந்து கொள்வான். ஆனால் இங்ரிட்டையே பார்த்துக்கொண்டிருப்பான்.
நாட்கள் செல்லச் செல்ல அவன் அந்த மனைவிமார்களுடன் பழகி அவர்களுடன் டான்ஸ் ஆடத்துவங்கினான். ஆனால் ஒவ்வொரு பார்ட்டி முடிந்து வீடு திரும்பியதும் ஏராளமான அறிவுரைகளும் குற்றம் குறைகளும் இங்ரிட் மீது வாரி இறைப்பான். முக்கியமாக 'நிமிர்ந்து உட்கார்வதே இல்லை.யாரோடும் வள வள என்று பேசுகிறாய்.ஏதோ ஒரு அறிவுக்களை உன் முகத்தில் இருக்கிறது.
அது மற்றவர்களைக் கவரக்கூடியது தான். ஆனால் நீ வாயைத் திறந்தால் உன் லட்சணம் தெரிந்து விடுகிறது இப்படி பலவிதமான அறிவுரைகள்.எவ்வளவு பெரிய வெற்றிப்படத்தை அவள் கொடுத்திருந்தாலும் அவன் வாயைத் திறந்து பாராட்ட மாட்டான். எல்லோருமே உன்னைப் பாராட்டும்போது நான் இப்படி இருந்தால் தான் உன் மனநிலை சமமாக இருக்கும் என்று அதற்கு விளக்கமும் கொடுப்பான். அவன் வாயிலிருந்து வரும் உயர்ந்தபட்ச பாராட்டே " ம்.. பரவாயில்லை.இட்ஸ் ஓகே.."தான்.
அவளுடைய டயட் விஷயத்தில் அவன் ரொம்பக் கறாரக இருப்பான்.கொஞ்சம் காய்கறி ஸ்லைஸ் ஒரு டம்ளர் பழச்சாறு இதற்குமேல் அவள் சாப்பிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பான்.எல்லா நட்சத்திரங்களும் இப்படித்தான் கட்டுப்பாடாக சாப்பிடுவார்கள்.அவளும் அவன் சொல்படி சாப்பாட்டு மேசையில் ரொம்பக் கொஞ்சமாக உட்கொண்டு நல்ல பிள்ளையாக அவன் மனம் மகிழும்படி நடந்து கொள்வாள்.
ஆனால் அவளுடைய படுக்கையறையில் கட்டிலுக்குக் கீழே கொஞ்சம் தீவனத்தை ஒளித்து வைத்திருப்பாள். அவன் அந்தப்பக்கம் திரும்பியதும் உள்ளே போய் கப்புக்கப்பு என்று அள்ளிச் சாப்பிட்டு வாயைக்கழுவித் துடைத்துவிட்டுப் பாவம் போல வெளியே வந்துவிடுவாள்.அதுபோக ராத்திரி அவன் தூங்கிய பிறகு நடுச்சாமத்தில் எழுந்து ஒளித்து வைத்திருக்கும் ஐஸ்கிரீம்களை ஒரு வெட்டு வெட்டி விட்டுச் சத்தமில்லாமல் படுத்துக்கொள்வாள். அவனுக்கு அவள் எடை மீது சந்தேகம் வந்து கொண்டே இருக்கும்.
தின்று தின்று அவள் பெரிய குண்டம்மா ஆகி ஒரு பட வாய்ப்பும் கிடைக்காமல் போய்விடும் என்கிற பயம் அவனுக்கு இருந்துகொண்டே இருந்தது. பத்துப்பைசா வீணாகச் செலவுசெய்ய அனுமதிக்க மாட்டான். அவள் சம்பாதித்துக்கொண்டு வரும் லட்சம் லட்சமான பணத்தையெல்லாம் அப்படியே இன்சூரன்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்திருந்தான். வயசான காலத்தில்தான் அதை எடுத்துச் செலவழிக்க முடியும்.
பியா ஒரு சைக்கிள் கேட்டாள். அதற்கென்ன இப்பவே போய் வாங்கிவிடலாம் என்று இங்ரிட் சொன்னதற்காக பீட்டர் ரொம்பக் கடிந்து கொண்டான்.எதுவும் கேட்டவுடன் வாங்கிக் கொடுத்தால் பணத்தின் அருமை அவளுக்குத்தெரியாமலே போய்விடும் என்றான். அவன் ஆலோசனைப்படி இங்ரிட்டும் பியாவும் கொஞ்ச நாள் எந்தமாதிரி சைக்கிள் வாங்கலாம் என்று பேசிப்பேசிக் கனவு கண்டார்கள்.பிறகு சிறுகச்சிறுக சைக்கிளுக்காகப் பணம் சேர்த்தார்கள்.அதன் பிறகுதான் சைக்கிள் வாங்கினார்கள். யெஸ்.. தேட்ஸ் குட்.. என்றான் பீட்டர்.
இந்த அழும்புகள் எதுவும் இங்ரிட்டுக்குப் பிடிக்கவில்லை.பீட்டரின் ஆலோசனைகள் பலசமயம் அவளுக்கு உதவியாக இருந்துள்ளன.நடிப்பைத் தவிர வாழ்க்கையில் சகலத்துக்கும் அவனையே சார்ந்திருப்பது ஒருவகையில் சௌகரியமாக இருந்தது என்றாலும் எல்லா முடிவுகளையும் அவனே இறுதி செய்பவனாக இருப்பது சோர்வூட்டியது. அவளுக்கு ஒன்றுமே தெரியாது என்கிற அவனுடைய சந்தேகத்திடமில்லாத கருத்து உள்ளுக்குள் கோபமூட்டிக்கொண்டேயிருந்தது..
ஒன்றாக ஒரே வீட்டில் தினசரி வீடு திரும்பும்படியாக வாழத்துவங்கிய பின் தான் அவளுக்கு இதெல்லாம் உறைக்கத் துவங்கின.ஒருநாள் அவனுக்கு அவளுடைய எடை மீது சந்தேகம் வலுப்பட எடைபார்க்கும் கருவியை அவளுக்கு முன்னால் கொண்டுவந்து வைத்து ஏறச்சொல்லி கட்டாயப்படுத்தினான்.அவள் சரி இருக்கட்டும் அப்புறம் பாத்துக்கலாம் என்று மறுத்தபோது அவளைத் தள்ளி அதில் ஏற வைத்தான்.அது அவளுக்கு மிகவும் அவமானகரமாக இருந்தது.
அப்புறம் எடை கூடியிருப்பதைப் பார்த்து அவளைத் திட்ட ஆரம்பித்தான்.அவள் ஓடிச்சென்று தன் படுக்கையறையைப் பூட்டிக்கொண்டு உள்ளே வைத்திருந்த பண்டங்களை எடுத்து ஆவேசமாகத் தின்று தான் தன் கோபத்தைத் தணித்துக் கொண்டாள். சண்டை போட அவளுக்குப் பிடிக்கவில்லை.இதுபோக அவள் நடிக்கும் படங்களின் கதாநாயக நடிகர்கள் ஒவ்வொருவரையும் அவள் காதலிப்பதாக அவனுக்குப் பலத்த சந்தேகம் இருந்தது.படப்பிடிப்பு முடிந்த பிறகு எந்த நடிகரையும் வெளியே ஒருமுறை கூடச் சந்திக்காத தன் மீது இப்படி சந்தேகப்படுவது அபத்தம் என்று மனம் வருந்தப் பேசுவாள்.தன் நடிப்பின் முறை தன்னுடைய பாணி அப்படியாக இருப்பதால் படம் முழுவதும் எடுத்து முடிக்கும்வரை அப்படிக் காதலிக்காமல் தன்னால் நடிக்க முடியாது என்பதை அவனுக்குப் புரியும்படியாகச் சொல்லத்தெரியவில்லை.
பின்னொருநாள் ஒரு பத்திரிகையில் அவளுடைய புகைப்படம் வந்திருந்தது.அவள் உட்கார்ந்து போஸ் கொடுத்த நாற்காலியை அவன் அடையாளம் கண்டு "அப்படியானால் நீ நம்முடைய வீட்டில் வைத்து இந்தப் படத்தை எடுக்க அனுமதித்திருக்கிறாய் இல்லையா " என்று கோபத்துடன் கேட்டான்.வீட்டில் வைத்து பேட்டி,புகைப்படம் எதற்கும் அனுமதிக்கக் கூடாது என்பது அவனுடைய விருப்பம்.
அதை அவளும் ஏற்றுக்கொண்டிருந்தாள். வீட்டின் புனிதம் குடும்பத்தின் அந்தரங்கம் என்கிற மாதிரியான அந்த உணர்வை அவள் மதித்தாள்.ஆனால் ஒரு முறை இப்படிப் படம் எடுக்க நேர்ந்து விட்டது.தவறு தான். நீ இது மாதிரி தவறு செய்வதில்லையா? என்று கேட்டாள். அவன் அக்கேள்வியால் மிகவும் ஆத்திரமடைந்து " தவறா.. நானா.. நோ..நெவர்..எதைச் செய்தாலும் முன்கூட்டியே பலமுறை யோசித்து திட்டமிட்டு சீர்தூக்கிப் பார்த்து இறுதி முடிவு எடுப்பவன் நான்.தவறு செய்ய வாய்ப்பே இல்லை.நோ சான்ஸ். "என்று ஆணித்தரமாக மறுத்தான்.
அன்புள்ள புத்தகமே..
அந்த நிமிடம் எனக்குத் தோன்றிவிட்டது. இனி இந்த மனிதருடன் வாழ முடியாது.தான் தவறே செய்ய மாட்டேன் என்று உறுதியாக நம்புகிற ஒரு மனிதருடன் எப்படி வாழ முடியும்? அமைதியான ஒரு இடத்தை நோக்கி என்னை நானே வெளிக்கொண்டுசெல்ல வேண்டும் என்று தோன்றிவிட்டது.இந்த உலகத்திலேயே நான் பார்த்து பயப்படும் ஒரே ஒரு மனிதருடன் என் மண வாழ்க்கை கட்டுண்டு கிடப்பது எவ்வளவு பெரிய கிறுக்குத்தனம் என்று தோன்றியது.எத்தனை இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், உலகப்புகழ் பெற்ற நடிகர்கள், நடிகைகள் என இத்தனை பேரில் யாரிடமும் பயமின்றிப் பழக முடிகிறதே!
நாம் டைவர்ஸ் செய்து கொள்ளலாமா என்று நான் கேட்டதும் பீட்டர் அதிர்ச்சியடைந்தார். ஏன்?ஏன்? நாம் எப்போதும் சண்டையே போட்டுக்கொண்டதில்லையே? பிறகு ஏன் டைவர்ஸ்?
நீ எப்போதும் என் தரப்பைப் பற்றி யோசிப்பவனில்லை ஆதலால் நான் உன்னிடம் வாதம் செய்வதில்லை.இப்போதும் நான் உன்னிடன் வாக்குவாதம் ஏதும் செய்யப்போவதில்லை. ஆனால் நான் போகிறேன் என்றேன்.
ஆனாலும் நான் போகவில்லை.வீட்டை என்ன செய்வது? பியா யாருடன் இருப்பது? என்பது போன்ற கேள்விகளை உடனே சந்திக்க விருப்பமோ தைரியமோ அற்றவளாக தொடர்ந்து அதே வீட்டிலேயே இருந்து வந்தேன்.அல்லது என்னை அந்த பந்தத்திலிருந்து வெளியே இழுக்கும் வெளிச்சக்தி ஒன்று தேவைப்பட்டது.நானாக வெளியேறுகிற சக்தி எனக்குப் போதாமல் இருந்தது.
இன்னும் இரண்டாம் உலகப்போர் முடிவற்று நடந்து கொண்டிருந்தது.ஜெர்மானிய எல்லைக்குள் புகுந்து நிற்கும் அமெரிக்கத் துருப்புக்களை குஷிப்படுத்த சினிமா நட்சத்திரங்களை போர்க்களங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.இங்ரிட்டுக்கும் அரசிடமிருந்து அழைப்பு வந்தது.ஏற்கனவே ஒருமுறை ஜப்பானிய எல்லைப்பகுதிக்குச் சென்று வந்திருந்த இங்ரிட் இந்த அழைப்பை உடனே ஏற்றுக்கொண்டு கிளம்பி விட்டாள்.வீட்டிலிருந்து சுதந்திரத்தை நோக்கி கிளம்புவது போலிருந்தது. 1945 ஜுன் ஆறாம்நாள் பாரிஸ் வந்து சேர்ந்தாள்.ரிட்ஷ் ஹோட்டல் தான் அமெரிக்காவின் போர்ச்செய்திகளுக்கான தலைமையகமாக இயங்கியது. அவள் தங்க வைக்கப்பட்டிருந்த அந்த ஓட்டலில் அவளுடைய படுக்கையறைக் கதவுக்கு அடியில் கூடி ஒரு கடிதத்தை யாரோ தள்ளியிருந்தார்கள்.அது ஒரு மனு வடிவத்தில் இருந்தது.
பெறுநர்
இங்ரிட் பெர்க்மன்
முகாம்:பெர்லின் எல்லையை நோக்கி பாரீஸில்
பொருள்: இரவு எங்களோடு சாப்பிடுவது பற்றி
1.இது ஒரு சமுதாயத்தின் அழைப்பு(சமுதாயத்தில் பாப்காபா மற்றும் இர்வின் "நூ இருவரும் அங்கத்தினர்)
2.இக்கடிதத்துடன் ஒரு மலர்ச்செண்டும் சேர்த்து அனுப்புவதாகத் தான் சமுதாயத்தில் பேசினோம்.ஆனால் மலர்ச்செண்டு வாங்கிவிட்டால் இரவு விருந்துக்கு பைசா இருக்காது.விருந்து அல்லது மலர்ச்செண்டு.மலர்ச்செண்டு அல்லது விருந்து.வாக்கெடுப்பில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் விருந்து வென்றது.
3.எனினும் நீங்கள் விருந்தில் அக்கறை இன்றி இருந்தால் மலர்ச்செண்டு அனுப்பலாம் என்பதே சமுதாயத்தின் இறுதி முடிவு.
4.இதற்கு மேல் அதிகமாக இக்கடிதத்தில் எழுதிவிட்டால் அப்புறம் இரவு நேரில் பேச நமக்கு விஷயமிருக்காது.ரொம்பக் குறைவான சரக்கு உள்ள சமுதாயம் நாங்கள்.
5.மாலை சரியாக 6.15 க்கு தொலைபேசுகிறோம்.
இப்படிக்கு,
குழப்பத்திலிருக்கும் சமுதாயம்
அனுப்பியவர்கள் யாரென்று தெரியாவிட்டாலும் இங்ரிட்டுக்கு அந்த அழைப்பு மிகவும் பிடித்திருந்தது.மாலையில் அவர்கள் போன் செய்தபோது அவள் விருந்துக்கே தனது வாக்கு என்று அறிவித்து விட்டு உடனே அவர்களுடன் கிளம்பிவிட்டாள்.ரொம்ப சுமாரான ஒரு ஓட்டலில் மூவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.அந்த முதல் மாலைப் பொழுதிலிருந்தே அவளை பாப் காபா (BoB Capa) வசீகரிக்கத் துவங்கிவிட்டார்.
காபா ஒரு ஹங்கேரியன்.போர்க்களப் புகைப்படங்கள் எடுக்கும் கலைஞர். அவரும் துருப்புக்களை உற்சாகப்படுத்தச் செல்லும் கலைக்குழுவில் இருந்தார்.அவர் அன்றைய தேதியில் ஒரு உலகப்புகழ் பெற்ற போர்க்களப் புகைப்படக்கலைஞராக அங்கீகரிக்கப் பட்டிருந்தார்.அவர் எடுத்த படங்கள் உலகின் ஆகப் பெரிய பத்திரிகைகளில் அட்டைப்படங்களாக வந்து கொண்டிருந்தன.எப்போதும் கேலியும் சிரிப்புமாக இருந்தார். எனினும் அவருடைய கண்களின் ஆழத்தில் ஒரு வேதனை பதுங்கியிருப்பதை முதல் பார்வையிலேயே இங்ரிட் கண்டுகொண்டாள்.
ஐரோப்பா முழுவதும் துருப்புகளை உற்சாகப்படுத்த ஒரு மாதத்துக்குமேல் சுற்றினார்கள். காபாவுடனான நெருக்கம் அதிகரித்தது. காபா வாழ்க்கையை ஒரு சூதாட்டம் போலக் கருதினார்.மகத்தான வெற்றி அல்லது படுகுழிக்குப்போகும் தோல்வி இந்த இரண்டுக்கும் இடையிலான சூதாட்டம் தான் வாழ்க்கை என்றார். ஆரம்பத்தில் எல்லாப் போர்ப் புகைப்படக் கலைஞர்களையும் போல போர்விமானங்கள் புறப்படும் பாசறையில் தங்கியிருந்துகொண்டு விமானங்கள் புறப்படும்போது சில படங்களும் தாக்குதலுக்குப் பிறகு குற்றுயிராகத் திரும்பும் வீரர்களைப் பல கோணங்களில் பல படங்களும் என்றும் தான் எடுத்துக் கொண்டிருந்தார்.
ஒருமுறை பிரிட்டிஷ் விமானத்தளம் ஒன்றில் 20 போர்விமானங்கள் புறப்பட்டுச்சென்றன.அவற்றில் தாக்குதலுக்குப் பிறகு 17 விமானங்களே திரும்பின. அவற்றிலும் படுகாயமடைந்த வீரர்களும் இறந்த வீரர்களின் உடல்களுமே நிறைந்திருந்தன.ஒவ்வொன்றாக இறக்க இறக்க காபா படம் எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார்.கடைசியாக இறக்கப்பட்ட பைலட்டின் உடலில் இன்னும் உயிர் ஒட்டிக்கொண்டிருந்தது.கேமிரா கோணத்தைச் சரி செய்துகொண்டு அவரைக் குறி வைத்தபோது அந்த பைலட் மிச்சமிருந்த சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி கோபத்துடன் ஏ.. புகைப்படக்காரா.. இப்படி ஒரு படம் எடுப்பதற்காகத் தான் காலையிலிருந்து ஆவலுடன் இங்கே காத்துக்கிடக்கிறாயா?.. என்று கேள்வியை உமிழ்ந்துவிட்டுச் சென்றான்.
அந்தக்கேள்வி காபாவின் சுயமதிப்பைச் சிதைத்து இனிவரும் வாழ்நாள் முழுமைக்கும் அவமானத்தால் குன்றிப்போகும் படிச் செய்தது.அதன் பிறகு காபா ஒரு முடிவு எடுத்தார்.இனி பிணங்களுக்காக காத்திருக்க மாட்டேன். அன்று முதல் அவரும் வீரர்களோடு நேரடியான யுத்த களத்துக்குச் சென்று பாரசூட்டில் குதித்துப் படங்கள் எடுக்கத்துவங்கினார். ஜீவ மரணப்போராட்டம் துவங்கிவிட்டது. தனக்கு மிகக்குறுகிய வாழ்க்கை தான் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காபாவுக்குத் தோன்றிவிட்டது. அதை இப்படித்தான் வாழவேண்டும் என்று ஏதாவது சில தர்ம நியாயங்களை மண்டைக்குள் ஏற்றி வைத்துக் கொண்டு வாழ்வைச் சலிப்பூட்டிக்கொள்ள விரும்பவில்லை.
அவர் இங்ரிட்டுக்குச் சொன்னார்: " நடிப்பு நடிப்பு என்று சொல்லி நீயே ஒரு தொழிற்சாலை போல ஒரு ஸ்தாபனம் போல ஆகிவிட்டாய். மனிதஜீவி என்கிற நிலையை நோக்கி நீ திரும்பியாக வேண்டும்.உன் கணவர் உன்னை இயக்குகிறார். படக்கம்பெனிகள் உன்னை இயக்குகின்றன.ஒவ்வொருவரும் உன்னை இயக்க நீ அனுமதிக்கிறாய். வேலை, வேலை,வேலை. வாழ்க்கையிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியதை நீ இன்னும் எடுக்காமலே இருக்கிறாய்.
மூன்று சக்கரங்களில் உன் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. நான்காவது சக்கரத்தை இழந்து விட்டதே தெரியாமல் நீ ஓடிக்கொண்டிருக்கிறாய். எப்போது வேண்டுமானாலும் உன் வண்டி கவிழ்ந்து போகலாம். தவிர நீ வெற்றி என்னும் சூறாவளியில் சிக்கிக் கொண்டிருக்கிறாய்.பெரும் பூகம்பத்தை விட ஆபத்தான அழிவுகளைத் தரவல்லது வெற்றி என்பதை மறந்துவிடாதே "
இங்ரிட் மறுத்தாள் "இல்லை. அது அப்படி இல்லை.வேலை வேலை என்று என்னை நானே நிரப்பிக்கொள்கிறேன். காற்றுக் குமிழிகளுக்குக் கூட இடமின்றி முற்றிலுமாக நடிப்பால் என்னை நிரப்பிக்கொள்ள விரும்புகிறேன்.நான் ஹாலிவுட்டில் இன்னும் அதிகமான படங்களில் நடிக்கப் போகிறேன்.இன்னும் நாடகங்களிலும் நடிப்பேன்.நாடக அரங்கின் கட்டுப்பாடு எனக்குத் தேவையாக இருக்கிறது. 'ஜோன் ஆஃப் ஆர்க்' ஆக நிச்சயமாக நான் நடித்தே தீர வேண்டும்" இதைக் காபாவிடம் சொல்லிக்கொண்டிருந்த போதே மனசின் ஆழத்தில் அவளைச் சந்தேகம் ஆட்டிக்கொண்டிருந்தது.காபா சொல்வதுதான் சரி.இன்னும் விரிவான முழுமையான வாழ்க்கை ஒன்று இருக்கிறதா? அதற்கான அவகாசத்தை மூச்சுவிடும் நேரத்தையேனும் அளிக்க நான் தவறுகிறேனா?
அடுக்கும் கேள்விகளுடன் ஹாலிவுட் திரும்பிய இங்ரிட் உலகப்புகழ்பெற்ற இயக்குநர் ஹிட்ச்காக் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்தாள். Spellbound மற்றும் Notorius இரண்டுமே திரையரங்குகளைக் குலுக்கிய வெற்றிப்படங்களாக த்ரில்லர்களாக அமைந்தன. ஸ்பெல்பவுண்ட் படத்தில் ஒரு மனநோய் மருத்துவராக இங்ரிட் நடித்தார்.
சர்ரியலிஸ்ட் ஓவியரான சால்வடார் டாலி அப்படத்தின் கனவுக்காட்சிகளுக்கான பின்னணி செட்டிங்குகளை அமைத்துத் தந்தார்.ஏற்கனவே இங்ரிட்டும் ஹிட்ச்காக்கும் நெருக்கமான நண்பர்களாக இருந்ததால் இப்படங்களில் வேலை செய்த நாட்கள் சுதந்திரமான காற்றை சுவாசித்த நாட்களாக அமைந்தன.படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியபோது Good-bye Freedom என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டாள்.
இப்படங்களின் படப்பிடிப்பு நாட்களில் காபா ஹாலிவுட்டுக்கு இருமுறை வந்தார்.இங்ரிட்டும் அவரும் கிடைத்த நேரமெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர்.பீட்டருடனான பந்தத்திலிருந்து தன்னை வெளியே இழுக்கும் சக்தி காபாதானா என்கிற கேள்வி வந்து வந்து மோதிக் கொண்டிருந்தது.ஆனால் காபா தெளிவாகச் சொன்னார் " ஒரு திருமண வாழ்க்கைக்கான மனிதனாக நான் இல்லை. இன்று உன்னைத் திருமணம் செய்து கொள்வேன்.நாளையே போர் விமானத்திலேறி நான் கொரியாவில் போய் விழ வேண்டியிருக்கும்.
மண வாழ்க்கை எனக்கு இல்லை இங்ரிட்.ஆனால் நீ என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானவளாக ஆகிவிட்டாய்.உன் மீது நான் கொண்டுள்ள நேசம் காற்றைப்போல விரிந்து பரவிக்கொண்டே செல்கிறது.என் கூடவே வந்துகொண்டிருக்கிறது."காபாவை இங்ரிட் புரிந்துகொள்ள முடிந்தது.இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பது இருவருக்குமே புரிந்தது.ஆனால் காபாவின் அடர்ந்த நிழல் ஆழமாக இங்ரிட்டின் மனசில் விழுந்துவிட்டது.
Nணிtணிணூடிணிதண் படப்பிடிப்பு முடிந்து கொண்டிருந்தபோது மாக்ஸ்வெல் ஆண்டர்சன் என்பவர் இங்ரிட்டைச் சந்திக்க வந்தார்.நியூயார்க்கைச் சேர்ந்த அவர் ஒரு நாடகத் தயாரிப்பாளர்.தன்னுடைய ஒரு நாடகத்தில் நடிக்க இங்ரிட் ஒப்புக்கொள்வாரா என்று கேட்டு நின்றார்.பேசுவோம் பேசுவோம் என்று ஒரு வாரமாக தன் படப்பிடிப்பின் கடைசிக் கட்ட வேலைகளை முடிப்பதிலேயே கவனமாக இருந்தாள் இங்ரிட். வெறுத்துப்போன மாக்ஸ் கடைசியில் இங்ரிட்டைப் பார்த்து" நான் கிளம்புகிறேன் மேடம்.என் நாடகத்தில் ஒரு ஹாலிவுட் நட்சத்திரத்தை நடிக்க வைக்க நினைத்தது பெரும் தவறு என்பதைப் புரிந்து கொண்டேன்.
விடை பெறுமுன் ஒரே ஒருமுறை உங்களோடு சேர்ந்து பசிபிக் சமுத்திரத்தைப் பார்க்க விரும்புகிறேன்.அதற்காவது அவகாசம் ஒதுக்கமுடியுமா?" என்று கேட்டார்.உடனே இருவரும் காரில் பசிபிக் கரையில் சாந்த்தா மோனிகா பீச்சில் அமர்ந்திருந்தார்கள்.சரி.இப்பொ சொல்லுங்க உங்க நாடகத்தின் கதை என்ன? என்று அமைதியான குரலில் கேட்டாள்.
ப்ரான்ஸ் நாட்டின் காவிய நாயகி ஜோன் ஆஃப் ஆர்க்கின் கதைதான் என்றார்.அதைக்கேட்டவுடன் இங்ரிட்டின் உடம்பே ஒரு முறை ஆடி நின்றது.அவளது கைகள் நடுங்கத் துவங்கின. அடுத்த நிமிடம் அக்கடற்கரை மணலில் வைத்து அந்நாடகக் காண்ட்ராக்டில் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டாள்.அந்த நிமிடத்திலேயே அவள் கவச உடை தரித்த ஜோனைப் போல கம்பீரமாக நடந்து வந்து காரில் ஏறினாள்.பீட்டர் ஒரு மறுப்பும் சொல்லவில்லை.போருக்குச் செல்லும்ஜோன் ஆப் ஆர்க்கை அவனால் எப்படித் தடுக்க முடியும்.
மறுநாளே நியூயார்க்கில் நாடக ஒத்திகை துவங்கி விட்டது.நாடக ஸ்கிரிப்ட்டில் ஏராளமான மாற்றங்களைச் செய்ய வற்புறுத்தினாள் இங்ரிட்.ஜோன் பற்றி உலகத்தில் வந்திருந்த அத்தனை புத்தகங்களையும் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தேடித் தேடிப் படித்துத் தானே பாதி ஜோன் ஆக மாறிவிட்டிருந்த இங்ரிட் சொன்ன ஒவ்வொரு திருத்தத்தையும் மாக்ஸ் செய்தே தீர வேண்டியிருந்தது.நாட்டைக் காப்பாற்ற அவளை அழைத்த அதீதக் குரல்களிடம் வானத்தை நோக்கி அவள் பேசும் வசனங்களை முற்றிலுமாக இங்ரிட் மாற்றி அமைத்தாள். அரசியல் தன்மை மிகுந்ததாக இருந்த மாக்ஸின் ஸ்க்ரிப்ட்டை ஏழை விவசாயப் பெண்ணான ஜொனின் கதையாக இங்ரிட் மாற்றிவிட்டாள்.
நாடகத்தின் முதல் காட்சிஅரங்கேற்றம் வாஷிங்டன் நகரில் புகழ்பெற்ற ஒரு தியேட்டரில் ஏற்பாடாகியிருந்தது.டிக்கெட்டுகள் முன்கூட்டியே வேகமாக விற்பனையாகிக் கொண்டிருந்தன.ஆனால் இங்ரிட் வாஷிங்டன் போய் இறங்கியதும் கேள்விப்பட்ட செய்தி அவளைப் கோபத்துக்காளாக்கியது. கறுப்பு இன மக்களுக்கு நாடக அரங்கில் நுழைய அனுமதி இல்லை. அவர்களுக்கு டிக்கட் விற்பனை மறுக்கப்பட்டது.
இங்ரிட் மாக்ஸ் ஆண்டர்ஸிடம் ஆத்திரப்பட்டாள் " இப்படிப்பட்ட ஒரு நாடகத்தி இப்படிப்பட்ட ஊரில் அரங்கேற்ற எப்படித் தீர்மானித்தீர்கள்? கறுப்பு இன மக்களுக்கு இப்படி ஒரு அவமதிப்பு நிகழும் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தால் நான் இந்த நகரத்தில் என் கால் சுண்டு விரலைக் கூட வைத்திருக்க மாட்டேன்." மாக்ஸ் ரொம்ப பயந்துதான் போனார்.ஏனெனில் இன்னும் அரை மணி நேரத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடாகி இருந்தது.
அதில் இங்ரிட் கோபமாக ஏதும் பேசிவிடக்கூடாதே.ரொம்ப தயவாகவும் பணிந்தும் இங்ரிட்டை அவர் வேண்டிக்கொண்டார். நடப்பதெல்லாம் தப்பு தான். ஆனால் எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டோம்.டிக்கட்டுகளும் விற்று விட்டோம்.எதுவும் பிரச்னை ஆகாமல் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று வார்த்தைகளை நெடுஞ்சாண் கிடையாகக் கிடத்தினார். இங்ரிட் மௌனமானாள். " நானாக எதுவும் பேசமாட்டேன்.நிருபர்களிடமிருந்து இந்த டிக்கட் மறுப்பு பற்றி ஒரு கேள்வி வந்தாலும் அப்புறம் நான் வந்திடமாட்டேன்" என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
மாக்ஸ் மற்றும் நாடக ஏற்பாட்டாளர்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு நிற்க பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. ஆனால் ஒரு கேள்விகூட கறுப்பு இன மக்களுக்கு டிக்கட் மறுக்கப்பட்டது பற்றி வரவில்லை.எல்லாம் ஒரு ஹாலிவுட் நட்சத்திரம் இப்படி மேடைக்கு 'இறங்கி' வந்தது பற்றியும் அவளுடைய அடுத்த படம், குடும்பம் , கிசு கிசுக்களுக்கு என்ன பதில் என்று சுற்றிச் சுற்றி வந்தன. சந்திப்பு முடிந்தது. நிருபர்கள் புகைப்படக்கலைஞர்கள் மெல்லக் கலைய ஆரம்பித்தனர்.
"நன்றி மிஸ் பெர்க்மன்.எங்கள் ஊருக்கு நீங்கள் வந்ததிலும் எங்களுக்கு பேட்டி அளித்ததிலும் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.வணக்கம்" என்று கிளம்பினர்.அவர்களுக்கு இங்ரிட் பதில் வணக்கம் செலுத்தவில்லை.மாறாக "ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.நான் மீண்டும் இந்த மண்ணில் கால் வைக்க மாட்டேன்.உங்கள் நகருக்கு வரவே மாட்டேன் " என்று குரலை உயர்த்திச் சொன்னாள்.உடனே பத்திரிகையாளர்கள் பரபரப்படைந்தனர். மீண்டும் சபை கூடிவிட்டது.வெளியே போய்விட்ட பத்திரிகையாளர்களும் உள்ளே ஓடி வந்தனர். மாக்ஸ் தன் இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டார்.ஏன் ஏன் என்று நிருபர்களின் கேள்விகள் முற்றுகையிட்டன.
ஒரு பிரகடனத்தை வெளியிடுகிற குரலில் இங்ரிட் பேசினாள்" கறுப்பின மக்களுக்கு இங்கே நாடக அரங்கில் அமர்ந்து பார்க்க அனுமதி மறுக்கப்படும் என்பது முன்பே தெரிந்திருந்தால் நான் இந்தத் திசைப்பக்கமே எட்டிக்கூடப் பார்த்திருக்க மாட்டேன். இப்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.காண்ட்ராக்ட்படி நான் நடித்தாக வேண்டியிருக்கிறது. ஆனால் மீண்டும் ஒருமுறை இந்த நகரின் முகத்தில் விழிக்க மாட்டேன்.எப்போது கறுப்பர்களும் தியேட்டர்களுக்குள் அனுமதிக்கப் படுகிறார்களோ அதன் பிறகுதான் இங்கு வருவேன்.
நான் எல்லோருக்காகவும் தான் நடிக்கிறேன். எல்லோருக்காகவும். அதிலும் விடுதலைக்காகத் தன்னையே அழித்துக்கொண்ட ஜோன் நாடகத்தை அரங்கேற்றும்போதா இந்த அவலம்? நாடகத்தின் இறுதிக்காட்சியில் விசாரணையில் ஜோன் கதறிச்சொல்லும் இந்த வசனங்களை இந்த ஊரில் ஒவ்வொரு இரவும் மேடையில் நான் எப்படி உச்சரிக்க முடியும் சொல்லுங்கள்?" ஒரு நிமிடம் தன் பேச்சை நிறுத்திய இங்ரிட் மறுகணமே ஜோன் ஆக மாறி விசாரணைக்காட்சிக்குள் போய்விட்டாள்.
அந்த வசனங்களைக் கதறும் குரலில் பேச ஆரம்பித்தாள் : " ஒவ்வொரு மனிதனும் தான் எதை நம்புகிறானோ அதற்காகவே தன் வாழ்வை முழுமையாகக் கொடுக்கிறான்.ஒவ்வொரு மனுஷியும் தான் நம்புகிற ஒன்றுக்காகத் தான் தன்னையே தருகிறாள்.சிலர் ரொம்பச் சின்னதாக நம்பிக்கை வைக்கிறார்கள் அல்லது எதன் மீதும் நம்பிக்கை வைக்காதிருக்கிறார்கள். ஆயினும் அவர்கள் அந்த சின்னதான நம்பிக்கைக்காகவும் நம்பிக்கையின்மைக்காகவும் தான் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணம் செய்கிறார்கள்.
நம் எல்லோருக்கும் வழங்கப்பட்டிருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். அதை அவரவர் நம்பிக்கையின் படிதான் வாழ முடியும்.அதை வேறு எதற்காகவும் அர்ப்பணிக்க முடியாது.அது மரணத்தை விடக் கொடுமையானது."
பத்திரிகைகள் "வாஷிங்டன் நகரத்தின் முகத்தில் உமிழும் ஹாலிவுட் நட்சத்திரம்" என்று தலைப்புச்செய்திகளை விரித்தன.இன வெறியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தியேட்டர் வாசலில் இங்ரிட் மீது காறி உமிழ்ந்தனர்.எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நகரெங்கும் நடந்தன.ஆனால் எழுத்தாளர்கள், நடிகர்கள்,நடிகைகள் என உலகெங்கிலுமிருந்து இங்ரிட்டுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர்.அவளுக்கு தந்திகளும் கடிதங்களும் வந்து குவிந்தவண்ணம் இருந்தன.
இத்தனை களேபரங்களுக்கு இடையே முதல் அரங்கேற்ற நாளும் வந்தது.நாடகத்தில் இங்ரிட் தோற்பாள்.தோற்க வேண்டும் என ஒரு கூட்டம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது.ஆனால் எல்லோரும் வாயடைக்க நாடகம் பெரிய வெற்றியானது."மீண்டும் உயிர்த்தெழுந்த ஜோன்" ஜோனின் புத்துயிர்ப்பு" என்றெல்லாம் வாஷிங்டன் பத்திரிகைகள் எழுதிப் புகழ்ந்தன.
ஆனால் கறுப்பர்கள் நாடக அரங்கத்தில் அனுமதிக்கப்பட வாஷிங்டன் நகரம் மேலும் ஏழு ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.
இரண்டு வாரத்திற்குப் பின் நாடகம் நியூயார்க் நகரில் அரங்கேறியது. கூர்மையான நாடக விமர்சகர்களும் அதிநவீன வாழ்க்கையிலிருந்து நாடகம் பார்க்க வரும் சீக்கிரமே போரடிக்குது என்று சொல்லத் துவங்கிவிடும் ரசிகர்களும் நிறைந்த நியூயார்க்கில் நடிப்பது பற்றி சிறு நடுக்கம் இங்ரிட்டுக்கு இருந்தது. ஆனால் எல்லோருடைய மனங்களையும் இங்ரிட் வென்றாள். 'இவள்தான் ஜோன்' என்றே விமர்சகர்கள் எழுதினர்.
ஒவ்வொரு இரவும் நாடகம் முடிந்ததும் பல்வேறுபட்ட பெரிய மனிதர்கள்,பிரபலங்கள் மேடைக்குப்பின்னால் மேக்அப் அறை வரை வந்து அவளை மனதார வாழ்த்திவிட்டுச் சென்றனர்.ஹெமிங்வே நாடகத்தைப் பார்த்துவிட்டு உலகத்தின் ஆகச் சிறந்த நடிகை நீதான் என்று பாராட்டினார்.பீட்டரும் பியாவும் நியூயார்க் வந்து நாடகம் பார்த்துவிட்டுத் திரும்பினர்.போய் அங்கிருந்து பீட்டர் ஒரு தந்தி அனுப்பினான்" நீ என்னை அழச் செய்து விட்டாய் "பீட்டரின் ஒரு வரித் தந்தி மிகுந்த மனநிறைவைத் தந்தது.
அன்புள்ள புத்தகமே,
நியூயார்க் நகரத்தில் நாடகம் நடந்துகொண்டிருந்த ஒவ்வொரு இரவிலும் புதுசாக ஒன்றை நான் கற்றுக்கொண்டே இருந்தேன். குறிப்பாக ரசிகர்களின் மனநிலை பற்றி.நம்முடைய நடிப்பின் நம்பகத்தன்மையை அவர்கள் புரிந்து கொண்டுவிட்டால் இது நடிப்புதான் என்றாலும் அவர்கள் முழுசாக நம்மோடு நிற்பார்கள்.ஒரு இரவு நான் கவச உடைகளோடு ஆவேசமாக வசனம் பேசிவிட்டு அப்படியே திரும்பாமல் ஒரு பெஞ்ச்சில் உட்கார வேண்டும்.என் கணக்கு தப்பிவிட்டது.பெஞ்ச்சின் ஒரு முனையில் உட்கார்ந்து விட்டேன்.
சடாரெனப் பெஞ்சு தூக்கியடித்துவிட்டது. ஹோ வென்ற கேலிச்சிரிப்பை அரங்கத்திலிருந்து எதிர்பார்த்தேன். ஆனால் காற்றாடிகள் சுழலும் சத்தம் மட்டுமே கேட்கிற அளவுக்கு மௌனம் கனத்து நின்றது. நான் சமாளித்து எழுந்து மீண்டும் நின்றதும் ஹா என்று அரங்கம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.என் நாடக வாழ்வில் மறக்க முடியாத நிமிடங்கள் அவை.எப்போது நினைத்தாலும் கண்களில் நீரை வரவழைக்கும் நினைவாக அது பதிந்துவிட்டது.ரசிகர்கள் முழு நம்பிக்கையை நம் மீது வைத்து விடுமளவுக்கு நாம் அசலாக மாறிவிட்டால் அப்புறம் நம் தவறுகளை ரசிகர்கள் மன்னித்து விடுவார்கள். நம் தவறுகளைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்க அவர்கள் வருவதில்லை.
ஒரு இரவில் நாடகம் முடிந்ததும் புகழ்பெற்ற சினிமா இயக்குநர் விக்டர் ஃபிளெம்மிங் புயல் வேகத்தில் ஒப்பனை அறைக்குள் நுழைந்தார்.அவர் கையில் வைத்திருந்த புத்தகம் ஒன்றை அறையின் மூலையில் வீசியெறிந்தார். ஓடி வந்து அவளைத் தழுவிக்கொண்டார். முதிய மூத்த இயக்குநரான அவருடன் Dr.Jekyll and Mr Hyde என்ற படத்தில் இங்ரிட் வேலை செய்திருக்கிறாள்.
அது மறக்க முடியாத அனுபவம்.அப்பட நேரத்தில் அவரை மிகவும் நேசித்த தருணங்கள் உண்டு. இப்போது அவர் ஒரு புதிய கதைக்காக அவளை ஒப்பந்தம் செய்யும் நோக்கத்துடனே இங்கு வந்திருக்கிறார்.ஆனால் அவளிடம் கொடுப்பதற்காகக் கொண்டு வந்திருந்த அக்கதைப் புத்தகத்தைத் தான் இப்போது தூர எறிந்து விட்டார்.அவளை அன்புடன் தழுவியபடியே சொன்னார் " இதுதான்.இதுதான் இங்ரிட்.நீ நிரந்தரமாக ஆம் நிரந்தரமாக ஜோன் ஆகவே நடிக்க வேண்டும். திரையில் நீ ஜோன் பாத்திரத்தில் நடிக்க வேண்டும்"
அன்புள்ள புத்தகமே,
எந்த வார்த்தைகளுக்காக நான் எட்டு ஆண்டுகளாகத் தவமிருந்தேனோ அந்த வார்த்தைகளை விக்டரின் வாயிலிருந்து கேட்டேன்.'திரையில் நான் ஜோனாக நடிக்க வேண்டும்.'கடவுளே அந்த வார்த்தைகளை நான் கேட்டு விட்டேன்.
ஜோன் ஆஃப் ஆர்க் படத்துக்கான திரைக்கதையை மாக்ஸ் ஆண்டர்சன் எழுதத் துவங்கினார்.இப்போது இங்ரிட்டின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான சம்பவம் நிகழ்ந்தது. முதியவரான விக்டர் ஃபிளெமிங் இங்ரிட்டின் மீது காதல் கொண்டு கடிதங்களை எழுதிக்கொண்டே இருந்தார்.ஜோனாக அவளைப் பார்த்த கணத்திலிருந்து அந்தக் காதல் பிறந்து மலர்ந்து மணம் வீசத் துவங்கியது. Dr Jekyll and Mr hyde படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நாட்களில் விக்டர் மீது அளவற்ற காதல் அவளுக்கு இருந்தது உண்மைதான்.
ஆனால் அந்தக் காதல் வேறு விதமானது.இங்ரிட் ஒவ்வொரு படத்தின் நாயகர்களையும் காதலிப்பது போன்றதுதான் இதுவும்.திறமைகளுக்கு அவள் செய்யும் மரியாதையாகவே அந்தக் காதல்கள் இருந்தன.அவளைப் பிரமிக்கச் செய்யும் அத்தகைய படைப்பாளிகளைக் கௌரவிக்க அவளுக்குத் தெரிந்த வழிமுறையாக காதல் இருந்தது. ஆனால் அது அப்படப்பிடிப்பு முடிந்ததும் முடிந்துவிடும்.ஒரு இனிய நினைவாக எப்போதும் அவளுக்குள் தங்கி விடும்.
ஆனால் இப்போது விக்டர் உண்மையிலேயே அவளைக் காதலித்தார்.ஆனால் தன்னுடைய 60 வயதும் அவளுடைய 30 வயதும் அக்காதல் உணர்வுக்கு ஊடாக நினைவுக்கு வந்து அவரைக் குற்ற உணர்வு கொள்ள வைத்தது.தன்னுடைய மனநிலைபற்றி அவருக்கே கேவலமான உணர்வு வந்தது.ஆனாலும் காதல் இருந்தது.
ஆனால் படப்பிடிப்பு துவங்கியதும் வேலையில் மூழ்கிவிட்டார்.காதல் மறந்து போனதுபோல வேலை நடந்துகொண்டிருந்தது. இங்ரிட் தன் பல்லாண்டுகாலக் கனவுப்படம் என்கிற பொறுப்புணர்வோடு உழைத்து நடித்தாள். படப்பிடிப்பு முடிந்ததும் படத்தின் விளம்பர இலாகாவினர் இங்ரிட்டை பிரான்சுக்கு அழைத்துச் சென்றனர்.படத்தில் ஒரு காதல் காட்சியோ முத்தக்காட்சியோ இல்லை ஹாலிவுட் படத்துக்கான எந்த முத்திரையும் இல்லை என்பதில் எல்லோருக்கும் பயம் இருந்தது.
எனவே பிரான்ஸ் நாட்டில் ஜோன் பிறந்த வீட்டிலிருந்து அவள் புறப்பட்டு நடந்து சென்ற பாதை வழியே இங்ரிட்டும் நடந்து செல்வார் என்று விளம்பரம் செய்தனர்.அது இங்ரிட்டுக்கும் பிடித்திருந்தது.பத்திரிகைகள் பரபரப்பாக இதுபற்றி எழுதின.பிரான்ஸ் நாட்டில் விமானம் இறங்கியதும் அங்கிருந்த சுங்க இலாகா அதிகாரிகள் இங்ரிட்டை வணங்கி "Welcome back to France Joan" என்று சொல்லி வரவேற்றனர்.ஜோன் பிறந்த ஊரான டோம்ரெமியில் இங்ரிட் போய் இறங்கினாள்.பள்ளி கல்லூரிகளுக்கெல்லாம் அன்று விடுமுறை விடப்பட்டிருந்தது.
மாணவ மாணவிகளும் ஊர் மக்களும் கைகளில் மலர்ச் செண்டுகளுடனும் "Welcome Home Joan" என்ற வாசகங்கள் பொறித்த பதாகைகளுடனும் சாலையின் இருபக்கங்களிலும் நெடுக நின்று பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தனர்.ஜோன் பிறந்த வீட்டுக்கு இங்ரிட் சென்றாள்.நூற்றாண்டுகள் கழித்து தன் சொந்த வீட்டுக்குள் மீண்டும் நுழைவதுபோல உணர்ந்தாள்.அவள் வீட்டுக்குள் காலெடுத்து வைத்ததும்,கூடிநின்ற மக்கள் மலர்மாரி பொழிந்தனர்.ஆனந்த முழக்கங்கள் எங்கும் எழுந்தன.
படப்பிடிப்பு உண்மையில் இங்கிருந்துதான் துவங்கியிருக்க வெண்டும்.தவறு செய்து விட்டோமே என்கிற உணர்வு ஒரு மின்னலைப்போல வந்து சென்றது.ஜோன் வீட்டைவிட்டுப் புறப்பட்டாள்.சர்ச்சுக்குச் சென்றாள்.பிறகு வனத்திலிருந்து கேட்ட குரல்களோடு ஜோன் வாதிட்டுப்பேசிய இடத்துக்குச் சென்றாள். திரும்பிய திசையெல்லாம் மக்கள் தங்கள் ஜோனை வரவேற்கக் காத்துக்கிடந்தார்கள்.அந்த அன்பில் திணறிய இங்ரிட் அப்பயணம் முழுவதிலும் கண்ணீருடன் தானிருந்தாள்.போதும்.இது போதும் என்று மனம் சொல்லியபடி இருந்தது.உலகில் எந்த ஒரு நடிகைக்கும் தன் வாழ்வில் கிடைத்திருக்க முடியாத கௌரவத்தை பிரான்ஸ் நாட்டு மக்கள் தனக்கு அளித்துவிட்டார்கள் எனத் ததும்பி நின்றாள்.
ஹாலிவுட் திரும்பியதும் படத்தின் ப்ரிவியூ காட்சி நடந்தது.பத்திரிகைகள் வெகுவாகப் பாராட்டி எழுதின.ஜோன் பத்திரத்தில் இங்ரிட் மின்சாரம் பாய்ச்சுகிறாள் என்று எழுதின.இங்ரிட்டும் விக்டரும் அருகருகே அமர்ந்து படத்தை முழுதாகப் பார்த்தனர்.அவர்கள் கனவில் இருந்த படம் திரையில் இல்லை என்பதை ஏமாற்றத்துடன் உணர்ந்தார்கள்.படம் முடிந்து எல்லோரும் இருவருக்கும் பாராட்டுத் தெரிவித்தபோது இருவருமே கனத்த மௌனம் தரித்தவர்களாயிருந்தனர்.
அன்று இரவு நாற்காலியில் அமர்ந்த படியே விக்டர் இறந்து போனார் என்று தகவல் வந்தது.இங்ரிட் உண்மையில் அதிர்ச்சியில் சிதறிப்போனாள்.படத்தின் கலைப்பூர்வமான தோல்விதான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பது அவளுக்கு மட்டுமே தெரியும்.1919 முதல் படங்களை இயக்கிய மூத்த கலைஞரான விக்டர் உலக சினிமாவின் முன்னோடியான டேவிட் கிரிஃபித் போன்ற கலைஞர்களுடன் பணியாற்றியவர்.அவருடைய இறுதிச்சடங்கில் இறுதிவரை இருந்து கலந்து கொண்ட இங்ரிட்டின் மனதில் ஒரு வரி ஓடிக்கொண்டே இருந்தது "I love Victor as I love all men with whom I worked. But I am in love with Capa only"
தொடர்ந்து ஹாலிவுட்டின் பாணிக்கு மாறான பூச்சுகளற்ற நடிப்பையும் அசலான படைப்புகளையும் தேடும் மனமே அவளுக்கு இருந்து கொண்டிருந்தது.செட்களை அவள் வெறுக்கத் துவங்கினாள். அதிலும் குறிப்பாக இத்தாலிய இயக்குநர் ரோபர்ட்டோ ரோஸ்ஸலினி இயக்கிய Oணீஞுண இடிtதூ (உலகப்போர் நடந்து கொண்டிருந்த நாட்களில் எந்த அணியினரும் புனித நகரமான ரோம் மீது குண்டு வீசக்கூடாது என்று ஒப்பந்தம். ஆகவே ஐரோப்பாவின் அத்தனை நகரங்களும் குண்டுவீச்சு விமானங்களுக்கு பயந்து இருட்டைப் போர்த்திக்கொண்டு தூங்கும்.
ரோம் நகரம் மட்டும் திறந்த நகரமாக இருக்கும்.எனவே அதற்கு Oணீஞுண இடிtதூ என்று பெயர் வந்தது) படத்தைப் பார்த்த பிறகு அவள் மனம் முற்றிலுமாக யதார்த்தத்தை நோக்கிச் சாய ஆரம்பித்தது.இப்படிப் படத்தில்தான் நடிக்கவேண்டும் என மனதார ஏக்கம் கொண்டாள்.ஆனால் அடுத்த படமும் ஹிட்ச்காக்கின் படம் தான். ஆஸ்திரேலியாவில் நடப்பதான கதை. ஆகவே ஆஸ்திரேலியாவுக்கே போய் படம் எடுக்கலாம் என்று இங்ரிட் சொல்லிக்கொண்டே இருந்தாள். ஆனால் ஹிட்ச் அதை ஏற்கவில்லை கடைசியில் இங்கிலாந்தில் போய் எடுக்கலாம் என ஒப்புக்கொண்டார்.எப்படியோ இந்த செட்களிலிருந்து தப்பித்தால் சரி என்று இங்ரிட்டும் சம்மதித்தாள்.
இங்கிலாந்தின் ஸ்டுடியோக்களில் அடிக்கடி ஸ்ட்ரைக் நடந்து வேலை தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. அது 1947.போர் முடிந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக இது போன்ற வேலை நிறுத்தங்கள் தவிர்க்க முடியாததாகியிருந்தன.கிடைத்த ஒரு இடைவெளியில் இங்ரிட் அறிஞரும், எழுத்தாளருமான பெர்னாட்ஷாவைச் சந்திக்கச் சென்றாள்.உண்மையில் அவர்தான் அவளை ஒரு தேநீருக்கு அழைத்திருந்தார்.
அவருக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டுத் தேடிச்சென்றாள்.காரிலிருந்து அவள் இறங்குமுன்னே பெர்னாட்ஷா முன் கேட்டில் தொங்கிக் கொண்டு காத்து நிற்பதைக் கண்டாள்.90 வயதைத் தாண்டிய அவர் நடந்து வருவதே சிரமம்.அவளைக் கண்டதும் வரவேற்பாக ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை " நீ ஏன் நான் எழுதிய ஜோன் ஆப் ஆர்க் நாடகத்தைப் பின்பற்றிப் படம் எடுக்கவில்லை?" என்று விவாதத்தை முன் கேட்டிலேயே ஆரம்பித்து விட்டார். அவள்தான் புன் முறுவலுடன்"உள்ளே போய் உட்கார்ந்து பேசலாமே " என்று அவரையும் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
உள்ளே போனதும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்.நீ ஏன் என் நாடகத்தைப் பின்பற்றிப் படம் எடுக்கவில்லை?
"ஏனெனில் உங்கள் நாடகம் எனக்குப் பிடிக்கவில்லை" என்று வெளிப்படையாக இங்ரிட் கூறியதும் அவர் பேச்சு நின்றது.மௌனமாக அவளைப் பார்த்தவாறு இருந்தார். "அது ஒரு மாஸ்டர் பீஸ் என்று உலகமே பாராட்டுவது உனக்குத் தெரியாதா" என்று கேட்டார். "நிச்சயமாக அது ஒரு மாஸ்டர் பீஸ்தான்.அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அது உங்களுடைய ஜோன். அவள் பேசும் வசனங்கள் எல்லாம் உங்களுடைய வசனங்கள். ஆனால் எனக்கு அசலான ஜோன் தான் தேவைப்பட்டாள். அந்த சாதாரண விவசாயக் குடும்பத்துப் பெண்.
அவள் உங்கள் ஜோனைப்போல அவ்வளவு புத்திசாலி அல்ல. அறியாப்பெண். உங்கள் ஜோன் பேசும் வார்த்தைகளையெல்லாம் அசலான ஜோன் பேசியிருக்க வாய்ப்பே இல்லை " என்று யோசிக்காமல் படபடவெனப் பேசிவிட்டாள் இங்ரிட். அப்புறம்தான் அவர் வருத்தப்படுவாரோ என்று தோன்றியது. ஆனால் அவர் அவளுடைய கருத்துக்களை ஆமோதித்து ஏற்றுக்கொண்டார்.நீண்ட நேரம் அவர்களின் உரையாடல் தொடர்ந்தது.
வெவ்வேறு நாடகங்கள் கதைகள் சினிமாக்கள் என்று விரிந்து சென்ற பேச்சு முடிந்து அவள் விடைபெறும்போது "மீண்டும் ஒரு முறை என்னைச் சந்திக்க வருவாயா "என்று கேட்டார். என் கணவர் வர இருக்கிறார்.வந்ததும் அவரோடு சேர்ந்து ஒருமுறை தங்களைச் சந்திக்க வருகிறேன்" என்றாள்.சற்றும் யோசிக்காமல் "உன் கணவரைச் சந்திப்பதில் எனக்கு சற்றும் ஆர்வமில்லை. உன்னைசந்திப்பது தான் எனக்கு முக்கியம்" என்று சொல்லி வழியனுப்பி வைத்தார்.ஆனால் அவர் இறப்பதற்கு முன் அவரை மீண்டும் ஒருமுறை சந்திக்கும் வாய்ப்பு அவளுக்குக் கிட்டவில்லை.
அவள் முற்றிலும் எதிர்பாராதவிதமாக ரோபர்ட்டோ ரோஸ்ஸலினியிடமிருந்து ஒரு நீண்ட கடிதம் அவளுக்கு வந்திருந்தது.தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க முடியுமா என்று கேட்ட அக்கடிதத்துடன் ஒரு கதையும் இணைக்கப்பட்டிருந்தது.நாஜிக்களால் தாக்கப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டு அவமானமும் காயங்களும் உடலெங்கும் நிறைந்திருக்க வேவுகாரி என்கிற முத்திரையுடன் தனித்தீவு ஒன்றில் வைக்கப்படும் பெண் ஒருத்தி.அத்தீவுவாசி ஒருவனின் ஆழ்ந்த முரட்டுக்காதலுக்குள் பிரவேசிக்கும் கதையாக அது இருந்தது.
அன்புள்ள புத்தகமே,
எல்லோருடைய வாழ்விலும் தற்செயல் நிகழ்வுகள் நிறையவே நடக்கத் தான் செய்யும். ஆனால் என் வாழ்வில் நான் ஆசைப்படுவதெல்லாம் தற்செயலாக நடப்பது நம்ப முடியாமலிருக்கிறது.இங்கிலாந்திலிருந்து நானும் பீட்டரும் ரோஸ்ஸலினியைச் சந்திப்பதற்காக பாரிஸ் சென்றோம்.மிகவும் கூச்ச சுபாவமும், சினிமாக்காரர் என்கிற அடையாளம் எதுவுமில்லாத மனிதராக அவர் இருந்தார். என்னைவிடப் பத்து வயது அதிகமிருப்பார்.பேச ஆரம்பித்ததும் அவரைப் புரிந்துகொள்ளத் துவங்கினேன்.ஹாலிவுட் பார்வையில் பார்த்தால் எனக்கும் அவருக்கும் இடையில் நடந்த கேள்வி, பதில் உரையாடல்
ரொம்ப வித்தியாசமானதுதான்:
"இந்தப் படம் எடுத்து முடிக்க எவ்வளவு நாட்களாகும்?அதாவது எத்தனை வாரங்கள்?"
இக் கேள்வியால் குழப்பமடைந்த ரோஸ்ஸலினி " வாரங்கள் ? ஒரு நாலைந்து வாரம் ஆகலாம்"
"நாலைந்து வாரத்தில் எப்படி முடிப்பீர்கள்? ஹாலிவுட்டில் எந்தப் படக் காண்ட்ராக்டும் மூன்று மாதம் பிளஸ் தேவைப்பட்டால் ஒரு பத்து நாள் அதிகரித்துக் கொள்ளும் "ஷரத்துடன் தான் கையெழுத்திடுவோம்."
நான் சொல்லிய வார்த்தைகளால் மேலும் குழப்பமடைந்த ரோஸ்ஸலினி " ஓகே..வெல்.. அப்படியானால்.. நீங்கள் விருப்பப்பட்டால் படத்தை மூன்று மாதங்கள் வரை இழுக்க முயற்சிக்கிறேன்.ஆனால் அது என்னால் எப்படி முடியும் என்று தெரியவில்லை.ஆனால் முயற்சிக்கிறேன்.."
இந்த பதில் எனக்கு விசித்திரமானதாகவும் சற்றே சிரிப்பை வரவழைப்பதாகவும் இருந்தது.
அப்புறம் " நான் என்ன மொழியில் பேசி நடிப்பது? "
"மொழி? என்ன மொழியானால் என்ன? உங்களுக்கு பிடித்த மொழியிலேயே பேசுங்கள்.ஏன் உங்கள் தாய் மொழியான ஸ்வீடிய மொழியிலேயே பேசி நடியுங்கள்"
"ஸ்வீடிஷ் மொழியிலா? அதெப்படி உங்களுக்குப் புரியும்.?ஸ்க்ரிப்ட்டை எந்த மொழியில் எழுதுவீர்கள்?
"ஸ்க்ரிப்ட்டா? அது.. இத்தாலிய மொழியில் தான் எழுதுவேன்.பாருங்கள்.மொழி, என் படத்தில் பெரிய பிரச்னையில்லை. எப்படியானாலும் டப்பிங்கில் பார்த்துக்கொள்ளலாம்"
"சரி.எனக்கான உடைகள்?"
"உடைகளா? அதைப்பற்றி என்ன முக்கியத்துவம் இருக்கிறது? அந்தத் தீவில் ஒதுக்கப்பட்ட மக்கள் பக்கத்து நகரத்துப் பிளாட்பாரக் கடைகளில் குவித்து விற்கப்படும் துணிமணிகளைத் தான் வாங்குவார்கள்.எவ்வளவு மலிவான விலையில் வாங்க முடியுமா அவ்வளவு மலிவாக.."
இந்த சந்தர்ப்பத்தில் பீட்டர் குறுக்கிட்டு படப்பிடிப்பு கால வாழ்க்கைச் செலவு எவ்வளவு கொடுப்பீர்கள் என்று ஒரு கேள்வியைப் போட்டார்.நான் பீட்டரைத் தள்ளிக்கொண்டு தனியாகப் போனேன்.என்னவானாலும் நான் இப்படத்தில் நடிக்க முடிவு செய்து விட்டேன். நீங்கள் நிறையக் கேள்விகளையும் விதிகளையும் போட்டு காண்ட்ராக்ட்டைச் சிக்கலாக்கி விடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டேன்.அதற்காக நீ ஏமாற வேண்டுமா என்கிற அவருடைய கேள்விகளைத் தடுத்துவிட்டு மீண்டும் ரோஸ்ஸலினியிடம் வந்தேன்.
உண்மையில் இப்படத்தை அவருடைய Oணீஞுண இடிtதூ படத்தில் நாயகியாக நடித்த அன்னா மாக்னானியை வைத்துத்தான் எடுப்பதாக இருந்ததாம்.இடையில் இங்ரிட்டைக் கொண்டுவர முடிவு செய்து விட்டார்.அன்னாவும் ரோஸ்ஸலினியும் சேர்ந்து வாழ்கிறார்கள். ஒரு குழந்தையும் இருக்கிறது.அன்னாவை எடுத்துவிட்டு யாரோ ஒரு ஹாலிவுட்காரியைப் போடப்போவது தெரிய வந்த போது வீட்டில் அன்னா உருளைக்கிழங்கைப் பிசைந்து மசாலாவுடன் கலக்கிக் கொண்டிருந்தாள். அப்படியே அந்தக் குழம்பைத் தூக்கி ரோஸ்ஸலினியின் மூஞ்சியில் அடித்துவிட்டாள்.இதெல்லாம் பிற்பாடு கேள்விப்பட்டபோது அன்னாவின் கோபம் நியாயமானதென்று இங்ரிட் சொன்னாள்.
ஹாலிவுட் திரும்பியபிறகு 1948க்கான அந்த ஆண்டின் மிகச்சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான "நியூயார்க் சிட்டி க்ரிட்டிக் விருது" ரோஸ்ஸலினியின் 'Oணீஞுண இடிtதூ' படத்துக்கு கிடைத்த செய்தி தெரிய வந்தது.எனவே விருது பெற வந்த ரோஸ்ஸலினி ஹாலிவுட்டுக்கு வந்தார். இங்ரிட்டைச் சந்திப்பதற்காகவும் ஏதாவது ஒரு படக்கம்பெனியிடம் தன் படத்துக்கான நிதி கோரவும்.கோல்ட்வின் நிறுவனத்தின் அதிபர் சாம் இங்ரிட் மீது மதிப்புக்கொண்டவர்.
இங்ரிட்டை வைத்து ஒரு படம் எடுக்க பெருவிருப்பம் கொண்டவர்.ரோஸ்ஸலினியின் படத்தை எடுக்க முதலில் அவர் சம்மதித்தார். ஆனால் ரோஸ்ஸலினி கொண்டுவந்த அவருடைய வேறு படங்களையும் பார்த்த பிறகு அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை.ரோஸ்ஸலினி பேசுவதும் அவருக்கு புரியவில்லை என்றார்.பட்ஜெட் எவ்வளவு ஆகும் என்கிற கேள்விக்கு தெளிவான விடை சொல்ல ரோஸ்ஸலினியால் முடியவில்லை.நிதி ஒன்றும் ஏற்பாடாகமலே அவர் திரும்ப நேரிட்டது.
உண்மையில் ரோஸ்ஸலினி வேலை செய்யும் பாணி வேறுவிதமானது.ஒரு அடிப்படையான கருத்தை வைத்துக்கொண்டு படத்தை ஆரம்பித்து விடுவார். முழுமையான ஸ்க்ரிப்ட் எதுவும் முன்கூட்டியே இருக்காது.காட்சிபூர்வமாக படப்பிடிப்பு நகரும் போது ஒரு காட்சியிலிருந்து அடுத்த காட்சி தானே பிறக்கும்.வார்த்தைகளால் தான் உந்துதல் பெறுவதில்லை. படப்பிடிப்புத் தளத்தில் காட்சிப் பூர்வ யதார்த்தத்தைக் காணும்போதே மன எழுச்சி பெறுவேன் அப்படியே படம் வளரும் என்பதை விளக்கினார். அதை இங்ரிட்டால் புரிந்து கொள்ள முடிந்தது.ஆனால் ஹாலிவுட்டாருக்கு அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.