தாரா தான் சிறையில் இருந்து தப்பித்துச் செல்வதற்காக தான் தன் மோதிரத்தை லஞ்சமாக கொடுக்கிறாள்... என்று நினைப்போம். ஆனால் நடப்பதே வேறு. தாயில்லாத அந்த சிறு குழந்தை சோட்டுவுக்கு நிலா என்றாலே என்னவென்று தெரியவில்லை. அந்த சிறைச் சாலையிலேயே பிறந்த குழந்தை அவன்.
தன் கணவனை கொலைச் செய்து விட்டு உள்ளே வந்த அந்த அம்மா உடல்நிலை சரியில்லாமல் இறந்த பிறகு அம்மாவை கேட்டு சாப்பிட அடம் பிடிக்கிறான் சோட்டு. சக கைதியாக இருக்கும் தாரா அந்த குழந்தைக்கு நிலாவைக் காட்ட கொஞ்சூண்டு கதவைத் திறந்து வைக்க சொல்லிதான் சிறை காவலருக்கு லஞ்சமாக தன் மோதிரத்தைத் தருகிறாள்.
வெளியே மழையும் மின்னலும்... எதற்கோ அங்காலாய்த்துக் கொள்கிறது. விளையாட ஏங்கும் அந்த குழந்தையின் கை மழையை பிடித்துவிட வெளியே நீள்கிறது. அதன் பின்னால் விடுதலைக்கு ஏங்கும் ஒரு தாயின் கையாக இப்போது தாராவின் கையும்... மெல்ல வெளியே நீண்டு அந்த குழந்தையின் கைக்கு கீழே தாங்கி பிடிக்க ஆரம்பிக்கிறது.
மழை இன்னும் வேகமெடுக்கிறது. நமக்கு மனம் இன்னும் தாகமெடுக்கிறது.
"மஜித் மஜிதி" என்ற மகா கலைஞனின் இன்னொரு மனம் உலாத்தும் படைப்பு இந்த படம்.
மானுட மனங்களுக்குள் மஜித் மஜிதியினால் வெகு நுட்மாக பெரிய பெரிய ராட்டினங்களை எல்லாம் சுழற்றி விட முடிகிறது. அன்பென்ற வடிவத்தை தான் நாம் கோபமாக ஆங்காரமாக வன்மமாக தனிமையாக எல்லாமுமாக மாற்றி வைத்திருக்கிறோம்.
இந்த வாழ்வு சக மனிதர்களால் ஆனது என்று மிக மெல்லிய குரலில் மஜித் மஜிதி பேசிக் கொண்டே இருக்கிறார். கேட்க அதிரும் அழுகையை நாம் அடக்கவே முடியாது.
"நான் உங்க அப்பாவ வெறுக்கிறேன்... உங்களை வெறுக்கிறேன். இந்த உலகத்தை வெறுக்கிறேன்... உங்கப்பா எங்க அக்காவை ரேப் பண்ணிட்டான். அவனைக் கொல்லனும்.
ஆனா... நான் காப்பாத்திட்டு இருக்கேன்..." என்று தன் அக்கா ரகசியமாக வளர்க்கும் புறாக்களை எல்லாம் எடுத்து எடுத்து வெளியே வீசிக் கொண்டே அந்த அறையையே அடித்து உடைத்து கத்தி அழும் ஆமீருக்கு தேவையெல்லாம் தலை வருடும் அவன் அக்காவின் கைகள் தான்.
பறந்து போன புறாக்கள் மறுநாள் அதே வீ ட்டு வாசலில் அமர்ந்திப்பது தான் வாழ்வின் சூட்சுமம். விதைபட்ட அன்பு வேறெப்படியும் முளைக்காது... அன்பாய் முளைப்பதைத் தவிர. அவனோடு சேர்ந்து நாமும் உணர்கிறோம்.
தன் குடிகார கணவன் தன்னை விட்டு சென்று பிறகு தம்பிக்கும் தெரியாமல் வாழ்வாதாரத்துக்கு அவ்வப்போது பலான தொழிலில் ஈடுபடும் தாரா மீது அங்கே துணி துவைக்கும் வேலை செய்யும் அக்சிக்கு காதல்... காமம்... பாசம்... அன்பு எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
அவன் திட்டுகிறான்.
"நீ எனக்கு தான் நீ எனக்கு தான்" என்று உள்ளே ததும்பும் பேரியக்கத்தின் குழப்பத்தில் அவளை வன்புணர்வும் செய்து விடுகிறான். அவள் அந்த நேர தடுமாற்றத்தில்... தள்ளுமுல்லில் கிடைத்ததை எடுத்து தலையில் தாக்கி விட அக்சி பலத்த காயத்தோடு சாக கிடக்கிறான். போலீஸ் தாராவை கைது செய்கிறது. அவன் பிழைத்தால் உனக்கு விடுதலை.
இல்லையெனில் ஆயுள் தண்டனை தான் என்கிறார்கள்... மெத்த படித்த மேதாவிகள்.
என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள் சிறைக்குள் வந்த தாரா தடுமாறுகிறாள். அழுகிறாள். கதறுகிறாள். எப்படியாவது தன்னை வெளியக் கொண்டு போய் விடு என்று தன் தம்பி ஆமீரிடம் கெஞ்சுகிறாள்.
பெண்கள் அடைபட்டிருக்கும் அந்த சிறைச்சாலையின் தோற்றம்... நம்மை அச்சுறுத்துகின்றது. ஆசுவாசமற்ற இயலாமை அங்கே தானாக அடுக்கடுக்காய் அமைந்திருக்கும் படுக்கையில் மேய்ந்துக் கொண்டிருப்பதை காணுகையில் விடுதலை என்பதன் விரிவாக்கத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஒரு வேகத்தில் குற்றம் இழைத்து பிறகு வாழ் நாளெல்லாம் கம்பிகளுக்குள் சிக்கிக் கொள்ளும் பெண்கள் கூட்டத்தில் அன்புக்கு ஏங்கும்... விடுதலைக்கு ஏங்கும் கண்கள்... ஒருபோதும் தூங்குவதேயில்லை.
சக சிறைவாசியின் குழந்தை சோட்டுவின் மீது அன்பு வைக்க ஆரம்பிக்கிறாள். இந்த மனம் அலைவதெல்லாம் சக மனிதனின் ஆறுதலுக்கு தான்... என்று நாம் உணர தொடங்குகிறோம்.
சிறுவயதிலேயே அம்மா அப்பா விபத்தில் இறந்து விட அக்காவால் வளர்க்கப்பட்டு 13 வயதிலேயே வீட்டை விட்டு ஓடி... ஆதரவற்ற சிறுவனின் வாழ்க்கை மும்பை இருள் தேசத்தில் எப்படி இருக்குமோ அப்படி மாறிய ஒருவனாக அக்காவிடம் திரும்புவதாக இருக்கிறது ஆமீரின் வாழ்வு.
போதை பொருள் கை மாற்றுவது தான் அவன் வேலையாக இருக்கிறது. அப்படி ஒரு முறை போலீஸ் விரட்டுகையில்... அவனைக் காப்பாற்றுவது அக்சி தான். அதே ஆக்சி தான் தன் அக்காவை வன்புணர்வு செய்து அடிபட்டு மருத்துவமனையில் இருக்கிறான்.
அவன் சாகவும் கூடாது. ஆனால் வாழவும் கூடாது என்ற இடைவெளியில் பரிதவிக்கும் அவனால்... அப்போதைக்கு அக்சியைக் காப்பாற்றத்தான் முடிகிறது. மருந்துகள் வாங்கி கொடுத்துக் கொண்டு மருத்துவமனையிலேயே துணையாக இருக்கிறான். யாரை கொல்ல வேண்டும் என்று நினைக்கிறோமோ அவனை காப்பாற்ற வேண்டிய நிலைதான் மஜித் மஜிதியின் காலம் சொல்லும் பாடம்.
அந்த நேரத்தில் தான் தமிழ் நாட்டில் இருந்து அக்சியின் அம்மாவும் இரு மகள்களும் அக்சியைத் தேடி வருகிறார்கள்.
அவர்களுக்கு ஹிந்தி தெரிவதில்லை. அந்த பாட்டி தமிழ் தான் பேசுகிறாள். வறுமை சூழ்ந்த வாழ்வில் பிடியற்ற பொழுதுகளை தூக்கி அலைகிறார்கள் அம்மூவரும்.
மருத்துவமனையில் முகவரி வாங்கிக் கொண்டு அமீரின் வீட்டை தேடி வந்து விடுகிறார்கள்.
காலையில் நேரத்திலேயே மருந்து வாங்க வேண்டும் என்று நர்ஸ் கூறியதாக கூறுகிறார்கள். சரி என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்கிறான். வெளியே இருள். மனதிலும் இரவு. அவர்கள் அந்த வீதியில் ஒரு திண்ணையில் படுத்துக் கொள்கிறார்கள். அவன் வீட்டுக்குள் செய்வதறியாது உழன்று கொண்டிருக்கிறான்.
இதில் மழை வேறு. ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறான், அக்சி மீதுள்ள வெறுப்பு அவர்கள் குடும்பம் மீதும் இருப்பதால் முடிந்தளவு அவர்களை கண்டு கொள்ளாத மாதிரி நடந்து கொள்கிறான்.
ஆனால் அவனின் உண்மை அதுவல்ல. அவன் அன்புக்கு எங்கும் தனியன். அக்காவை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று கிறுக்கு பிடித்து அலைபவன்.
தன் மகன் செய்த தன் அப்பா செய்த பிழைக்காக அவர்கள் மூவரும் சிலுவை சுமப்பது தான் எதிர் வினையின் முனையில் அன்பென்னும் சொல்லும் நீதி. சரியும் தவறும் மாறி மாறி நிகழ்வும் நித்தியத்தில் தான் இந்த நிஜம் நம்மை ஆதி பாம்பென சூழ்ந்து கொண்டிருக்கிறது.
மழை அதிகமாக... மனம் கூடிய சூட்டோடு ஓடிச் சென்று அவர்களை வீட்டுக்குள் அழைத்து வருகிறான்.
பெரிய சிறுமி ஆங்கிலம் ஓரளவுக்கு பேசுவதால்.. ஓரளவுக்கு சம்பாஷணைகள் நிகழ்கின்றன. பிறகும்... பேரன்பின் சுவடுகளுக்கு மொழிகள் எதற்கு. புன்னகை... பார்வை... கண்கள்... போதுமே. அதுவும் ஏகத்துக்கும் நிகழ்கிறது. விடிந்தும் அக்சியைக் காணச் செல்கிறார்கள்.
திரும்பவும் வீட்டுக்கு வருகிறார்கள். அந்த சிறுமிகளில் சிறியவள் ஐந்து வயது குட்டி பெண். அவளோடு விளையாடுகிறான். அவளுக்கு பென்சில் பேப்பர் வாங்கி தந்து எழுத... வரைய வைக்கிறான்.
அந்த பாட்டிக்கு உடம்பு சரி இல்லாத போது கவனித்துக் கொள்கிறான். பிறகு மெல்ல மெல்ல அவர்கள் ஒரு குடும்பம் போல நடந்துக் கொள்கிறார்கள். அந்த இன்னொரு பெண் வயது வந்த சிறுமி. அவள் மீது தனித்த பார்வை ஆமீருக்கு இருந்துக் கொண்டே இருக்கிறது.
அவள் பாட்டி மருத்துவச் செலவுக்கு கொடுத்த கொஞ்சம் காசையும்... அவளின் ஒரு காது வளையத்தையும் அவளிடம் திருப்பித் தரும் அந்த ஒரு காட்சி... மிகு மெல்லிய பூனை பாதங்களால் அவர்களின் நெருக்கத்தை உயிர்ப்பிக்கிறது.
'என்ன இது...?' திரை தாண்டி கை மட்டும் வருகிறதே என்று அவள் கூட பயந்து உடலைச் சற்று பின் வாங்குவாள். ஆனால் அவன் அந்த பண முடிச்சை பொத்தினாற் போல நீயே வைத்துக் கொள் என்பதற்கு தான் கையை மட்டும் நீட்டி கொடுத்து விட்டு எடுத்திருப்பான்.
அதிலிருந்து அந்த தோட்டை மட்டும் அவள் எடுத்துக் கொள்ளும் காட்சி... இயலாத மனிதர்களின் கடைசி ஆயுதமென இன்னமும் காது தோடும்... மூக்குத்தி மின்னலும் இருப்பதை வெளிச்சம் போட்டு அமைதியாகக் காட்டுகிறது.
ஒரு கட்டத்தில்.... அவளை விற்பதற்கு கூட முன்பணம் வாங்கி விடுவான். நாமும் திடுக்கிட்டு தவிர்த்திருப்போம். அவள் அவன் மீது கொண்ட நம்பிக்கை அவனை மீண்டும் மீண்டும் சுய பரிசோதனை செய்து கொண்டே இருக்க செய்யும். சட்டென மாறிய முடிவோடு அவளைக் காப்பாற்றவும் செய்வான்.
ஒரே நேரத்தில் சாத்தனாகவும் கடவுளாகவும் மாறி மாறி தன்னை உணரும் போக்கில் அவன் வாழ்வின் நிதானமற்ற தவிப்புகளை நாம் உணர்கிறோம்.
சிவப்பு விளக்கு பகுதிக்குள் அனாயாசமாக சென்று போதை பொருள் தொழில் செய்யும் ஆமீர் ஓர் இடத்தில் கூட தன் நிலை மறப்பதில்லை. தன்னை காட்டிக் கொடுத்த பெட்டிக் கடைக்காரனை நிதானமாக கையில் குத்தி விட்டு செல்லும் போது அவன் செய்வது என்னதென்று தெரிந்தே தான் செய்கிறான்.
தன் நண்பனால் காட்டிக் கொடுக்கப்பட்ட போது மனம் உடைந்து தடுமாறுகையில்... இந்த உலகத்தின் மீதிருந்த எந்த பற்றுதலையும் அவன் பற்றவும் இல்லை விடவும் இல்லை என்பது போன்ற சிந்தனை தான் அவன்
உடல்மொழியில். விரக்திக்கும் வீம்புக்கும் இடையே சதா வீணை வாசிக்கும் அவன் குற்ற உணர்வுகளை நாம் செய்வதறியாத திகைப்பில் காணுகிறோம்.
அவளை காப்பாற்றும் நீட்சியில் அடிபட்டு துவண்டு வருகையில்... பாட்டியும் சிறுமிகளும் அவனை கவனித்துக் கொள்வதில்... சாப்பாடு ஊட்டுவதில்... மனமாற்றம்... நெகிழ்வித்த தன்மையோடு அந்த வீடெங்கும் அரங்கேறுகிறது.
அறையை பிரிக்கும் திரைக்கு பின்னால் முக்காபுலா பாடலுக்கு ஆடிக் காட்டி இந்த பக்கம் அமர்ந்து இவர்கள் மூவரும் படம் பார்ப்பது போல பார்க்கும் காட்சியில் நிழல் செய்யும் நேர்த்தியாக உன்னதமான உள்ளார்ந்த மன வெளிப்பாட்டை மஜித் மஜிதி நிகழ்த்தி விடுகிறார்.
மிக தொன்மையான அன்பின் நீளத்தை அளவாக காட்சி வடிவத்திலேயே நிஜத்தின் நடுவில் நின்று மஜித் மஜிதி பேசுவதெல்லாம் நம்மோடு நாமே பேசுவது தான். நாம் நம்மையே புரிந்துக் கொள்வது தான்.
சிறைச்சாலையில் சோட்டு தாராவுக்கு ஆதரவாகிறான். இங்கே அக்சியின் குடும்பம் ஆமீருக்கு ஆதரவாகிறது. யாருக்கு எது நடந்தாலும்... ஊரின் கொண்டாட்டங்களுக்கு கவலையில்லை. ஹோலி பண்டிகை ஜாம் ஜாம் என்று நடக்கும் ஒரு முடிவில்.... அவர்கள் கரைந்து போகிறார்கள்.
அக்சி பிழைத்தானா செத்தானா என்பது இப்போதைக்கு இங்கு முடிவிலி.
மும்பை மாநகரத்தில் அத்தனை பெரிய ஜியோ நெட்ஒர்க் விளம்பர பேனர் இருக்கும் பாலத்தின் அடியே விறகடுப்பில் வாழ்வு வெந்துக் கொண்டிருக்கும் மும்பையின் இன்னொரு முகத்தின்.... பாவனைகள் நாம் கனவிலும் நினையாதது.
மஜித் மஜிதி ஒரு காட்சியில்... பளிச்சிடும் மும்பையை காட்டுவார். அங்கே கீழே ஓரத்தில் குடிசை நீள் வரைபடம் இந்தியாவை இருட்டிக் கொண்டு காட்டும்.
தாரா தான் சிறையில் இருந்து தப்பித்துச் செல்வதற்காக தான் தன் மோதிரத்தை லஞ்சமாக கொடுக்கிறாள்... என்று நினைப்போம். ஆனால் நடப்பதே வேறு. தாயில்லாத அந்த சிறு குழந்தை சோட்டுவுக்கு நிலா என்றாலே என்னவென்று தெரியவில்லை. அந்த சிறைச் சாலையிலேயே பிறந்த குழந்தை அவன்.
தன் கணவனை கொலைச் செய்து விட்டு உள்ளே வந்த அந்த அம்மா உடல்நிலை சரியில்லாமல் இறந்த பிறகு அம்மாவை கேட்டு சாப்பிட அடம் பிடிக்கிறான் சோட்டு. சக கைதியாக இருக்கும் தாரா அந்த குழந்தைக்கு நிலாவைக் காட்ட கொஞ்சூண்டு கதவைத் திறந்து வைக்க சொல்லிதான் சிறை காவலருக்கு லஞ்சமாக தன் மோதிரத்தைத் தருகிறாள்.
வெளியே மழையும் மின்னலும்... எதற்கோ அங்காலாய்த்துக் கொள்கிறது. விளையாட ஏங்கும் அந்த குழந்தையின் கை மழையை பிடித்துவிட வெளியே நீள்கிறது. அதன் பின்னால் விடுதலைக்கு ஏங்கும் ஒரு தாயின் கையாக இப்போது தாராவின் கையும்... மெல்ல வெளியே நீண்டு அந்த குழந்தையின் கைக்கு கீழே தாங்கி பிடிக்க ஆரம்பிக்கிறது.
மழை இன்னும் வேகமெடுக்கிறது. நமக்கு மனம் இன்னும் தாகமெடுக்கிறது.
"மஜித் மஜிதி" என்ற மகா கலைஞனின் இன்னொரு மனம் உலாத்தும் படைப்பு இந்த படம்.
மானுட மனங்களுக்குள் மஜித் மஜிதியினால் வெகு நுட்மாக பெரிய பெரிய ராட்டினங்களை எல்லாம் சுழற்றி விட முடிகிறது. அன்பென்ற வடிவத்தை தான் நாம் கோபமாக ஆங்காரமாக வன்மமாக தனிமையாக எல்லாமுமாக மாற்றி வைத்திருக்கிறோம்.
இந்த வாழ்வு சக மனிதர்களால் ஆனது என்று மிக மெல்லிய குரலில் மஜித் மஜிதி பேசிக் கொண்டே இருக்கிறார். கேட்க அதிரும் அழுகையை நாம் அடக்கவே முடியாது.
"நான் உங்க அப்பாவ வெறுக்கிறேன்... உங்களை வெறுக்கிறேன். இந்த உலகத்தை வெறுக்கிறேன்... உங்கப்பா எங்க அக்காவை ரேப் பண்ணிட்டான். அவனைக் கொல்லனும். ஆனா... நான் காப்பாத்திட்டு இருக்கேன்..." என்று தன் அக்கா ரகசியமாக வளர்க்கும் புறாக்களை எல்லாம் எடுத்து எடுத்து வெளியே வீசிக் கொண்டே அந்த அறையையே அடித்து உடைத்து கத்தி அழும் ஆமீருக்கு தேவையெல்லாம் தலை வருடும் அவன் அக்காவின் கைகள் தான்.
பறந்து போன புறாக்கள் மறுநாள் அதே வீ ட்டு வாசலில் அமர்ந்திப்பது தான் வாழ்வின் சூட்சுமம். விதைபட்ட அன்பு வேறெப்படியும் முளைக்காது... அன்பாய் முளைப்பதைத் தவிர. அவனோடு சேர்ந்து நாமும் உணர்கிறோம்.
தன் குடிகார கணவன் தன்னை விட்டு சென்று பிறகு தம்பிக்கும் தெரியாமல் வாழ்வாதாரத்துக்கு அவ்வப்போது பலான தொழிலில் ஈடுபடும் தாரா மீது அங்கே துணி துவைக்கும் வேலை செய்யும் அக்சிக்கு காதல்... காமம்... பாசம்... அன்பு எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
அவன் திட்டுகிறான்.
"நீ எனக்கு தான் நீ எனக்கு தான்" என்று உள்ளே ததும்பும் பேரியக்கத்தின் குழப்பத்தில் அவளை வன்புணர்வும் செய்து விடுகிறான். அவள் அந்த நேர தடுமாற்றத்தில்... தள்ளுமுல்லில் கிடைத்ததை எடுத்து தலையில் தாக்கி விட அக்சி பலத்த காயத்தோடு சாக கிடக்கிறான். போலீஸ் தாராவை கைது செய்கிறது. அவன் பிழைத்தால் உனக்கு விடுதலை.
இல்லையெனில் ஆயுள் தண்டனை தான் என்கிறார்கள்... மெத்த படித்த மேதாவிகள்.
என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள் சிறைக்குள் வந்த தாரா தடுமாறுகிறாள். அழுகிறாள். கதறுகிறாள். எப்படியாவது தன்னை வெளியக் கொண்டு போய் விடு என்று தன் தம்பி ஆமீரிடம் கெஞ்சுகிறாள்.
பெண்கள் அடைபட்டிருக்கும் அந்த சிறைச்சாலையின் தோற்றம்... நம்மை அச்சுறுத்துகின்றது. ஆசுவாசமற்ற இயலாமை அங்கே தானாக அடுக்கடுக்காய் அமைந்திருக்கும் படுக்கையில் மேய்ந்துக் கொண்டிருப்பதை காணுகையில் விடுதலை என்பதன் விரிவாக்கத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஒரு வேகத்தில் குற்றம் இழைத்து பிறகு வாழ் நாளெல்லாம் கம்பிகளுக்குள் சிக்கிக் கொள்ளும் பெண்கள் கூட்டத்தில் அன்புக்கு ஏங்கும்... விடுதலைக்கு ஏங்கும் கண்கள்... ஒருபோதும் தூங்குவதேயில்லை.
சக சிறைவாசியின் குழந்தை சோட்டுவின் மீது அன்பு வைக்க ஆரம்பிக்கிறாள். இந்த மனம் அலைவதெல்லாம் சக மனிதனின் ஆறுதலுக்கு தான்... என்று நாம் உணர தொடங்குகிறோம்.
சிறுவயதிலேயே அம்மா அப்பா விபத்தில் இறந்து விட அக்காவால் வளர்க்கப்பட்டு 13 வயதிலேயே வீட்டை விட்டு ஓடி... ஆதரவற்ற சிறுவனின் வாழ்க்கை மும்பை இருள் தேசத்தில் எப்படி இருக்குமோ அப்படி மாறிய ஒருவனாக அக்காவிடம் திரும்புவதாக இருக்கிறது ஆமீரின் வாழ்வு.
போதை பொருள் கை மாற்றுவது தான் அவன் வேலையாக இருக்கிறது. அப்படி ஒரு முறை போலீஸ் விரட்டுகையில்.....அவனைக் காப்பாற்றுவது அக்சி தான். அதே ஆக்சி தான் தன் அக்காவை வன்புணர்வு செய்து அடிபட்டு மருத்துவமனையில் இருக்கிறான்.
அவன் சாகவும் கூடாது. ஆனால் வாழவும் கூடாது என்ற இடைவெளியில் பரிதவிக்கும் அவனால்... அப்போதைக்கு அக்சியைக் காப்பாற்றத்தான் முடிகிறது. மருந்துகள் வாங்கி கொடுத்துக் கொண்டு மருத்துவமனையிலேயே துணையாக இருக்கிறான். யாரை கொல்ல வேண்டும் என்று நினைக்கிறோமோ அவனை காப்பாற்ற வேண்டிய நிலைதான் மஜித் மஜிதியின் காலம் சொல்லும் பாடம்.
அந்த நேரத்தில் தான் தமிழ் நாட்டில் இருந்து அக்சியின் அம்மாவும் இரு மகள்களும் அக்சியைத் தேடி வருகிறார்கள்.
அவர்களுக்கு ஹிந்தி தெரிவதில்லை. அந்த பாட்டி தமிழ் தான் பேசுகிறாள். வறுமை சூழ்ந்த வாழ்வில் பிடியற்ற பொழுதுகளை தூக்கி அலைகிறார்கள் அம்மூவரும்.
மருத்துவமனையில் முகவரி வாங்கிக் கொண்டு அமீரின் வீட்டை தேடி வந்து விடுகிறார்கள்.
காலையில் நேரத்திலேயே மருந்து வாங்க வேண்டும் என்று நர்ஸ் கூறியதாக கூறுகிறார்கள். சரி என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்கிறான். வெளியே இருள். மனதிலும் இரவு. அவர்கள் அந்த வீதியில் ஒரு திண்ணையில் படுத்துக் கொள்கிறார்கள். அவன் வீட்டுக்குள் செய்வதறியாது உழன்று கொண்டிருக்கிறான்.
இதில் மழை வேறு. ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறான், அக்சி மீதுள்ள வெறுப்பு அவர்கள் குடும்பம் மீதும் இருப்பதால் முடிந்தளவு அவர்களை கண்டு கொள்ளாத மாதிரி நடந்து கொள்கிறான்.
ஆனால் அவனின் உண்மை அதுவல்ல. அவன் அன்புக்கு எங்கும் தனியன். அக்காவை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று கிறுக்கு பிடித்து அலைபவன்.
தன் மகன் செய்த தன் அப்பா செய்த பிழைக்காக அவர்கள் மூவரும் சிலுவை சுமப்பது தான் எதிர் வினையின் முனையில் அன்பென்னும் சொல்லும் நீதி. சரியும் தவறும் மாறி மாறி நிகழ்வும் நித்தியத்தில் தான் இந்த நிஜம் நம்மை ஆதி பாம்பென சூழ்ந்து கொண்டிருக்கிறது.
மழை அதிகமாக... மனம் கூடிய சூட்டோடு ஓடிச் சென்று அவர்களை வீட்டுக்குள் அழைத்து வருகிறான்.
பெரிய சிறுமி ஆங்கிலம் ஓரளவுக்கு பேசுவதால்.. ஓரளவுக்கு சம்பாஷணைகள் நிகழ்கின்றன. பிறகும்... பேரன்பின் சுவடுகளுக்கு மொழிகள் எதற்கு. புன்னகை... பார்வை... கண்கள்... போதுமே. அதுவும் ஏகத்துக்கும் நிகழ்கிறது. விடிந்தும் அக்சியைக் காணச் செல்கிறார்கள்.
திரும்பவும் வீட்டுக்கு வருகிறார்கள். அந்த சிறுமிகளில் சிறியவள் ஐந்து வயது குட்டி பெண். அவளோடு விளையாடுகிறான். அவளுக்கு பென்சில் பேப்பர் வாங்கி தந்து எழுத... வரைய வைக்கிறான்.
அந்த பாட்டிக்கு உடம்பு சரி இல்லாத போது கவனித்துக் கொள்கிறான். பிறகு மெல்ல மெல்ல அவர்கள் ஒரு குடும்பம் போல நடந்துக் கொள்கிறார்கள். அந்த இன்னொரு பெண் வயது வந்த சிறுமி. அவள் மீது தனித்த பார்வை ஆமீருக்கு இருந்துக் கொண்டே இருக்கிறது.
அவள் பாட்டி மருத்துவச் செலவுக்கு கொடுத்த கொஞ்சம் காசையும்... அவளின் ஒரு காது வளையத்தையும் அவளிடம் திருப்பித் தரும் அந்த ஒரு காட்சி... மிகு மெல்லிய பூனை பாதங்களால் அவர்களின் நெருக்கத்தை உயிர்ப்பிக்கிறது.
'என்ன இது...?' திரை தாண்டி கை மட்டும் வருகிறதே என்று அவள் கூட பயந்து உடலைச் சற்று பின் வாங்குவாள். ஆனால் அவன் அந்த பண முடிச்சை பொத்தினாற் போல நீயே வைத்துக் கொள் என்பதற்கு தான் கையை மட்டும் நீட்டி கொடுத்து விட்டு எடுத்திருப்பான்.
அதிலிருந்து அந்த தோட்டை மட்டும் அவள் எடுத்துக் கொள்ளும் காட்சி... இயலாத மனிதர்களின் கடைசி ஆயுதமென இன்னமும் காது தோடும்... மூக்குத்தி மின்னலும் இருப்பதை வெளிச்சம் போட்டு அமைதியாகக் காட்டுகிறது.
ஒரு கட்டத்தில்.... அவளை விற்பதற்கு கூட முன்பணம் வாங்கி விடுவான். நாமும் திடுக்கிட்டு தவிர்த்திருப்போம். அவள் அவன் மீது கொண்ட நம்பிக்கை அவனை மீண்டும் மீண்டும் சுய பரிசோதனை செய்து கொண்டே இருக்க செய்யும். சட்டென மாறிய முடிவோடு அவளைக் காப்பாற்றவும் செய்வான்.
ஒரே நேரத்தில் சாத்தனாகவும் கடவுளாகவும் மாறி மாறி தன்னை உணரும் போக்கில் அவன் வாழ்வின் நிதானமற்ற தவிப்புகளை நாம் உணர்கிறோம்.
சிவப்பு விளக்கு பகுதிக்குள் அனாயாசமாக சென்று போதை பொருள் தொழில் செய்யும் ஆமீர் ஓர் இடத்தில் கூட தன் நிலை மறப்பதில்லை. தன்னை காட்டிக் கொடுத்த பெட்டிக் கடைக்காரனை நிதானமாக கையில் குத்தி விட்டு செல்லும் போது அவன் செய்வது என்னதென்று தெரிந்தே தான் செய்கிறான்.
தன் நண்பனால் காட்டிக் கொடுக்கப்பட்ட போது மனம் உடைந்து தடுமாறுகையில்... இந்த உலகத்தின் மீதிருந்த எந்த பற்றுதலையும் அவன் பற்றவும் இல்லை விடவும் இல்லை என்பது போன்ற சிந்தனை தான் அவன்
உடல்மொழியில். விரக்திக்கும் வீம்புக்கும் இடையே சதா வீணை வாசிக்கும் அவன் குற்ற உணர்வுகளை நாம் செய்வதறியாத திகைப்பில் காணுகிறோம்.
அவளை காப்பாற்றும் நீட்சியில் அடிபட்டு துவண்டு வருகையில்... பாட்டியும் சிறுமிகளும் அவனை கவனித்துக் கொள்வதில்... சாப்பாடு ஊட்டுவதில்... மனமாற்றம்... நெகிழ்வித்த தன்மையோடு அந்த வீடெங்கும் அரங்கேறுகிறது.
அறையை பிரிக்கும் திரைக்கு பின்னால் முக்காபுலா பாடலுக்கு ஆடிக் காட்டி இந்த பக்கம் அமர்ந்து இவர்கள் மூவரும் படம் பார்ப்பது போல பார்க்கும் காட்சியில் நிழல் செய்யும் நேர்த்தியாக உன்னதமான உள்ளார்ந்த மன வெளிப்பாட்டை மஜித் மஜிதி நிகழ்த்தி விடுகிறார்.
மிக தொன்மையான அன்பின் நீளத்தை அளவாக காட்சி வடிவத்திலேயே நிஜத்தின் நடுவில் நின்று மஜித் மஜிதி பேசுவதெல்லாம் நம்மோடு நாமே பேசுவது தான். நாம் நம்மையே புரிந்துக் கொள்வது தான்.
சிறைச்சாலையில் சோட்டு தாராவுக்கு ஆதரவாகிறான். இங்கே அக்சியின் குடும்பம் ஆமீருக்கு ஆதரவாகிறது. யாருக்கு எது நடந்தாலும்... ஊரின் கொண்டாட்டங்களுக்கு கவலையில்லை. ஹோலி பண்டிகை ஜாம் ஜாம் என்று நடக்கும் ஒரு முடிவில்.... அவர்கள் கரைந்து போகிறார்கள்.
அக்சி பிழைத்தானா செத்தானா என்பது இப்போதைக்கு இங்கு முடிவிலி.
மும்பை மாநகரத்தில் அத்தனை பெரிய ஜியோ நெட்ஒர்க் விளம்பர பேனர் இருக்கும் பாலத்தின் அடியே விறகடுப்பில் வாழ்வு வெந்துக் கொண்டிருக்கும் மும்பையின் இன்னொரு முகத்தின்.... பாவனைகள் நாம் கனவிலும் நினையாதது.
மஜித் மஜிதி ஒரு காட்சியில்... பளிச்சிடும் மும்பையை காட்டுவார். அங்கே கீழே ஓரத்தில் குடிசை நீள் வரைபடம் இந்தியாவை இருட்டிக் கொண்டு காட்டும்.
Film : Beyond the clouds
Director : Majid Majidi
Language : Hindi
Year : 2017 Drama/Family
- கவிஜி