எந்த அடிப்படையும் இல்லாத, நிற வேற்றுமையை மிக அதிக அளவில் பாராட்டுகிற, எவ்வித புரிதலுமற்ற, மிகவும் தட்டையான மலினமான காதலையே சொல்ல வருகிறது சிவாவின் ரெமோ.
ஒரு கேள்வி. ஒரு தெருவில் 10 பெண்கள் இருக்கிறார்கள் என்று கொள்வோம். கீர்த்தி போல் வெள்ளையாய், அழகாய் ஒரே ஒரு பெண். ஏனைய 9 பேரும் மாநிறத்தில் இருக்கிறார்கள் எனக்கொள்வோம். அதே தெருவில் இருக்கும் 10 ஆண்களும் கீர்த்தி என்கிற ஒரு பெண்ணின் மேலேயே மெரிசலானால், ஏனைய 9 பெண்களுக்கு காதல்? அவர்களுக்கு காதல் இருக்க கூடாதா? அவர்கள் காதலிக்கப்பட தகுதியே இல்லாதவர்களா? வெள்ளையாய் அழகாய் இருப்பவர் மட்டுமே காதலிக்கப்பட தகுதியானவரா?
இந்த பின்னணியில், ரெமோவை ஒரு பக்கா ரேசிஸ்ட் ஃபிலிம் என்று சொல்லிவிடலாம்.
கீர்த்தி கதைப்படி ஒரு மருத்துவர். சிவா நடிகராக முயல்பவர். நாளை திருமணத்திற்குப் பிறகு நடிக்க வாய்ப்பின்றி சிவா என்கிற கேரக்டர் மனைவி சம்பாதித்து வர, வீட்டை பார்த்துக் கொள்வாரா? அப்படியானால் ஈகோ பிரச்சனை வந்து விவாகரத்துக்கு குவியும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை என்ன சொல்ல வருகிறது? அவைகள் பொய் புகார்களா?
பார்க்கப் போனால், சிவாவின் எல்லா படங்களிலும் நாயகன் - நாயகி காதலில் யாதொரு தர்க்கமும் இருந்ததில்லை. குறைந்தபட்ச புரிதல் கூட இருந்ததில்லை. சிவாவின் கேரக்டர்கள் செய்வதெல்லாம் ஃப்ராடுத்தனங்கள் தான். கதாநாயகி எதையாவது ஆசைப்பட்டால் உடனே அதை போலியாக உருவாக்கி பிக்கப் செய்வது..
சுருக்கமாக சொன்னால் ஏமாற்றுவது.. சிவாவின் படங்களில் உள்ள ஒரே ஒரு நல்ல விஷயம், ஏமாற்றி லவ் செய்வதோடு நிறுத்திக் கொள்வது தான்.. வயிற்றை ரொப்பிவிட்டு ஓடி ஒளிவது, கைவிடுவது போன்றவைகளெல்லாம் இந்த படங்களை பார்ப்பதினால் சூடேறி மற்ற ஆண்கள் செய்து மாட்டிக் கொள்வார்கள்... இப்படியான வயிற்றை ரொப்பும் ஆசாமிகளுக்கு உற்சாக மருந்தாய் இருப்பது சிவா போன்ற நடிகர்களின் படங்கள் தான்.. வேறு மாதிரி சொல்வதானால், இப்படி வயிற்றை ரொப்பும் ஆசாமிகளுக்காய் படங்கள் நடித்து தான் சிவா போன்றவர்கள் தங்களது வெற்றிப் பயணத்தை மேற்கொள்கிறார்கள்...
1. பார்க்க சுமாரான பெண்களின் அகமன தேவைகள், ஆசைகள் போன்றவைகள் குறித்து சிவாவின் படங்கள் பேசுவதே இல்லை..
2. இன்னொரு மோசமான விஷயம், அழகான பெண்களுக்கென்று சிவாவின் படங்கள் வரையும் வட்டம் தான்.. அழகான பெண்.. அவள் இன்னதுதான் செய்கிறவளாக இருக்க வேண்டும்.. அதைத் தாண்டி அவள் போய்விடக் கூடாது.. அழகான பெண் மருத்துவர் நான்கு ஆண் மருத்துவர்களுடன் இணைந்து முகாம்கள், கலந்தாய்வுகள், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளக் கூடாது. அப்படி மேற்கொண்டால், ஆராய்ச்சியில் பங்கேற்கும் மற்ற ஆண் மருத்துவர்கள் கண்டிப்பாக பெண் மோகிகளாக மட்டுமே இருப்பார்கள். உடனே சிவா நடுவில் புகுந்து அந்த ஆண் மோகியின் முகத்தைக் கிழித்து தன் தூய உள்ளத்தை நிலை நாட்டி மீண்டும் ஹீரோ ஆகிவிடுவார்.
3. சிவாவின் படங்களில் அழகான கதா நாயகிக்கு அறிவான ஒழுக்கமான ஒரு மேதாவி நண்பன் இருந்துவிட வாய்ப்பே இல்லை. சிவா மட்டும் தான் ஒரே ஒரு நல்லவர். வல்லவர். நாலும் தெரிந்தவர்.
4. அழகான படித்த அறிவான ஆண் சிவாவின் படங்களில் ஏதோ ஒரு கொடூர எண்ணப்பாடு கொண்டவராகவோ, அல்லது குறுகலான மனம் படைத்தவராகவோ தான் இருக்க முடியுமே ஒழிய நல்லவராக வல்லவராக வெளிப்பட வாய்ப்பே இல்லை.
5. அமெரிக்க மாப்பிள்ளை என்பவர் எப்போதும் ஒரு ஆணாதிக்க வாதம் நிறைந்த, காசு வெறி பிடித்தவராகவே தமிழ்ப் படங்களில் வெளிப்படுவார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, கவர்மென்ட் பள்ளியில் சொற்ப செலவில் படித்து சொந்த முயற்சியில் பொறியியல் முடித்து, சம்பாதித்து குடும்பத்தை பொருளாதாரத்தில் முன்னுக்கு கொண்டு வந்து இந்திய போலி சமூகத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவினதான திறமை, மற்றும் அறிவால், அமெரிக்கா போன்ற நாடுகள் சுவீகரித்துக்கொண்ட ஆண்களெல்லாம் தமிழ்ப் படங்களில் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்படுவார்கள்.
ஒரு வாதத்துக்கு இப்படி வைத்துக் கொள்ளலாம்.
அழகான பெண் மருத்துவர், தன் துறை சார்ந்து விவாதங்கள் செய்ய விழைபவராக இருந்துவிடவே கூடாது. ஏனெனில் அப்படியான விவாதம் செய்ய அவரது துணையும் ஒரு மருத்துவராக இருக்க வேண்டும். அதைத்தான் ஆரம்பத்திலேயே வேண்டாம் என்கிறதே சிவாவின் படங்கள்.
பெண்களை இப்படியும் தான் மோசமாக சித்தரிக்கிறார்கள். கொடுமை என்னவென்றான் இந்த படம் இங்கே அமெரிக்காவிலும் ஓடுகிறது. என் தேசத்து படம் என்று நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் உள்ள அமேரிக்கர்கள் கேட்டால் நான் இந்த படத்தை எப்படி கை காட்டுவது? ரெமோவைக் காட்டினால் நாட்டின் மானமே போய்விடும்.
அதாவது சிவாவின் படங்களில் பெண் மருத்துவராக இருந்தாலும் மூளையைக் கழற்றி வைத்தவராகத்தான் இருக்க வேண்டும். சிவா எப்படி இப்படிப்பட்ட கதைகளை தேர்வு செய்கிறார் என்பது சுத்தமாக விளங்கவில்லை. இவருக்கு பெண்கள் மீது எந்த புரிதலும் இருப்பது போல் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், பெண்களை இவர் தனது படங்களின் வாயிலாக மிக மிக மோசமாக மலினமாக சித்தரிக்கிறார். கொடுமை என்னவென்றால், இந்த சிவாவுக்கு ஆண் விசிறிகளை விட பெண் விசிறிகளே அதிகம். இதையெல்லாம் கேள்விப்படுகையில், பெண்ணியம் , பெண் சுதந்திரம், பெண் உரிமை, ஆணாதிக்கம் போன்றவைகள் எல்லாம் உண்மையில் என்ன என்கிற தீவிரமான யோசனை வந்துவிடுகிறது. இவரது படங்களை தொடர்ந்து பார்த்து, இவரை ஊக்குவித்து வாழ்த்தி வாழ வைக்கும் பெண்கள் எப்படிப்பட்ட மன நிலையைக் கொண்டவர்கள் என்கிற தீவிர சிந்தனை வந்துவிடுகிறது.
"சிவா என்கிற நடிகரை எனக்குப் பிடிக்கும்" என்று சொல்லும் பெண்கள் ஏதோ ஒரு மனப்பிறழ்வை கொண்டவர்கள் என்றே என்னால் அணுக முடிகிறது.
1991ல் வெளியான சின்னத்தம்பி என்கிற படத்திற்கு எவ்விதத்திலும் குறைவல்ல 2016ல் வெளியாகியிருக்கும் ரெமோ. இடையில் சரியாக 25 வருடங்கள் கடந்திருக்கின்றன. சின்னத்தம்பி படம் 1991ல் பெண்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற படம். ரெமோவில் சிவா 2016ல் பெண்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர். இந்த இரண்டு தகவலையும் தொடர்பு படுத்தி பாருங்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது விளங்கலாம். இன்றைய தலைமுறை பெண்களுக்கு 1991 காலகட்டத்தின் பெண்கள் அதாவது அம்மாக்களுடனான உரையாடல்கள் ஆரோக்கியமான திசையில் இல்லை என்பதையே இது குறிப்பதாக நான் எடுத்துக் கொள்கிறேன். இது நிச்சயம் ஒரு மோசமான தகவல் தான்.
ரெமோ என்கிற இந்த படம் எந்த உண்மையையாவது பேசுகிறது என்றால் அது இதைத்தான்.
- ஸ்ரீராம்