தமிழ் நடிகைகள் குறித்த தங்கர்பச்சானின் ‘அரிய’ கருத்து, திருமணத்திற்கு முன்னான பாலுறவு குறித்த குஷ்புவின் கருத்து போன்றவைகளுக்கு அடுத்தபடியாக ஜெயராமின் பேச்சு இப்போது தமிழ் ‘இன உணர்வைக்’ கிளப்பியிருக்கிறது. இன்று காலையில் ஒரு தமிழ்த்தேசிய நண்பரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது, ‘ஜெயராமுக்கு மன்னிப்பு, சீமானுக்குக் கைது - இதுதான் திராவிட நீதியா?’ என்று. ஜெய்ராம் பேசிய கருத்துக்காக தமிழகக் காவல்துறை அவரைக் கைது செய்ய முடியாது, ஜெய்ராம் மீது யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம் (தொடரப்பட்டிருக்கிறது). ஆனால் நாம் தமிழர் இயக்கம் ஜெய்ராம் வீடு புகுந்து நிகழ்த்திய வன்முறைக்கு நிச்சயம் காவல்துறை கைது நடவடிக்கை எடுத்துத்தானாக வேண்டும். ஆனால் இந்த வித்தியாசங்களைக் கூட உணர முடியாதளவு நிதானத்தை இழந்துள்ளனர் தமிழ்த் தேசியவாதிகள். நிதானம் இழப்பதும் எதார்த்தங்களைப் பரிசீலிக்கத் தவறுவதும் அவர்களுக்கு ஒன்றும் புதியதல்லவே!

'தாக்கரே பெருமகன்' என்று மும்பையில் சீமான் பேசியதற்கு மேலும் அர்த்தத்தின் அடர்த்தியைக் கூட்டியிருக்கின்றனர் அவரது தம்பிமார்கள். ஜெயராமின் கருத்திற்கு எதிரான கண்டனப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று எதுவுமேயில்லாது எடுத்தவுடனே வீடு புகுந்து அடிப்பது ஒன்றுதான் வழி என்றால் அந்த வன்முறை யார் மீது வேண்டுமானாலும் திரும்ப முடியும் என்பதை நாம் உணரவேண்டும். பெரியாரைக் கைவிட்ட சீமான் சிவசேனாவின் வழி நோக்கி அடியெடுத்து வைப்பது கருத்தியல் இயல்புதான்.

நிச்சயமாக இந்த கட்டுரை ஜெயராமின் கருத்துக்களை நியாயப்படுத்தவில்லை; ஆனால் ஜெயராமின் சொற்களுக்குப் பின்னாலிருந்தது வெறுமனே இனவாதத் திமிரல்ல என்பதை அடையாளப்படுத்த முனைகிறது. மேலும் ஜெயராமுக்கு எதிராய்க் குரலுயர்த்தும் இனவாதிகள் மற்றும் ஊடகங்களின் அறிவுநாணயம் மற்றும் அரசியல் யோக்கியதை குறித்துக் கேள்வி எழுப்ப விரும்புகிறது.

ஜெய்ராம் மலையாளச் சேனலில் அளித்த நேர்காணலை வைத்து முதன்முதலாகப் பரபரப்பைக் கிளப்பியது குமுதம்தான். வேலைக்காரிகள் குறித்த ஜோக்குகளையும் படங்களுக்கான கமெண்டில் நடிகைகள் குறித்த அருவெறுப்பான வார்த்தைகளையும் உதிர்க்கும் குமுதத்திற்கு இதுகுறித்து எழுதுவதற்கு ஏதாவது யோக்கியதை உண்டா? குமுதம் திடீரென்று பேசும் இனவாதத்தின் பின்னுள்ள லாபம் என்ன?

ஜெய்ராம் குறித்து முதலில் கண்டனத்தைத் தெரிவித்தவர் வழக்கம் போல், ‘என்ன சார் நடக்குது இங்க?’ தங்கர்பச்சான்தான். ஆனால் இதே தங்கர்பச்சான்தான் ‘நடிகைகள் விபச்சாரிகள்’ என்ற ‘முற்போக்குக் கருத்தை’ச் சொன்னவர். அவர் சொன்னது நவ்யா நாயர் என்னும் மலையாள நடிகை குறித்துத்தான். ‘எம்மினப் பெண்ணை எப்படி வேசி என்று சொல்லலாம்?’ என்று கேரளா அன்று கொதித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? குமுதத்தின் வேலைக்காரி ஜோக்குகளில் அவமானப்படுத்தப்படுபவர்கள் எல்லாம் ‘தமிழ் வேலைக்காரிகள்’தானே? சீமான், பச்சான் மாதிரியான தமிழ்த்தேசிய இயக்குனர்களின் படங்களில் தமிழ்ப்பெண்களுக்கான இடமென்ன? எப்போதாவது பெண்களின் உரிமைகள் குறித்தும் சுயமரியாதை குறித்தும் அங்கீகாரம் குறித்தும் அவர்களின் படங்கள் பேசியிருக்கின்றனவா? ‘என் சேலைக்கு அவிழ்ந்து விழ நேரம் என்னைக்கு?’ என்பதுதானே அதிகபட்சம் இவர்கள் படத்துப் பெண்கள் ஆண்களை நோக்கி கேட்ட கேள்வி?

தமிழ்த்திரைப்படங்கள் தமிழ்ப்பெண்களைச் சித்தரித்தது ஒருபுறமிருக்கட்டும். தமிழ்ச்சினிமா மலையாளப் பெண்களை எப்படி சித்தரித்திருக்கிறது? இடுப்பு வரை முண்டு கட்டிய பாலுணர்வு தீனிப்பண்டங்களாகத்தானே அவர்களைச் சித்தரித்திருக்கிறது. ‘தாராளமா மனசு இருந்தா கேரளான்னு தெரிஞ்சுக்கோ’ (ரன் படப் பாடல்) என்ற வரிகள் மலையாளப் பெண்களை இழிவுபடுத்தவில்லையா? எத்தனை படங்களில் மலையாளப் பெண்களுக்கான கேரக்டர்களில் ஷகீலாவும் மும்தாஜிம் வந்து ‘கவர்ச்சி விருந்து’ படைத்திருக்கிறார்கள்? இதற்குப் பெயர் இனவாதமில்லையா? மலையாள சினிமா எப்படி தமிழர்களையும் தமிழ்ப்பெண்களையும் இழிவாகப் பார்க்கிறதோ அதேபோல்தான் தமிழ்ச் சினிமாவும். ‘மற்றமை’ குறித்த வெறுப்புணர்ச்சியும் இனவாத அடிப்படைவாதமுமே இதற்குக் காரணம்.

அரசியல் தெளிவும் அறிவுநாணயமும் உடைய யாரும் தங்கர்பச்சான், சீமான் வகையறாக்களோடு கைகோர்த்து ஜெயராமை எதிர்க்க முடியாது. இப்படி ஒரு கேள்வியை எழுப்பிப் பார்ப்போம். ‘ஜக்குபாய் திருட்டு விசிடியாக வெளியானதை ஒட்டி நடந்த கண்டனக் கூட்டத்தில்’ கமல்ஹாசன் இப்படிப் பேசினார், "திருட்டு விசிடி மூலம் கிடைக்கும் பணம்தான் மும்பை குண்டுவெடிப்பிற்குப் பயன்படுத்தப்படுகிறது". ஏன் ‘நாம் தமிழர்’ இயக்கம் முஸ்லீம்களை இழிவுபடுத்தியதைக் கண்டித்து கமல்ஹாசனுக்கு எதிராகப் போராடவில்லை? 'முஸ்லீம்கள் நாம் தமிழர் இல்லை' என்கிறாரா சீமான்?

இப்போது ஜெயராமின் கருத்துக்கு வருவோம். ஜெயராமின் கருத்துக்களில் நிச்சயம் இனவாதம் இருந்தது. ‘கேரளப்பெண்களின் தாராள மனசைச் சொன்ன’ தமிழ் இனவாதத்தைப் போன்றதொரு மலையாள இனவாதம்; மேலும் பெண்களைப் பாலியல் நுகர்வுப்பண்டமாய்ப் பார்க்கும் ஆணாதிக்கத் திமிர்; உழைக்கும் பெண்களை இழிவாய்க் கருதும் வர்க்கத்திமிர் - இவையெல்லாம் சேர்ந்துதான் ஜெயராமின் வார்த்தைகளாக உருமாறின. ஆனால் தமிழினவாதிகள் மற்ற இரண்டு திமிர் குறித்துப் பேசமாட்டார்கள். ஏனென்றால் அந்த திமிர் அவர்களுக்கும் சொந்தமானது. ஜெய்ராம் வேலைக்காரிகளை அவமானப்படுத்தினார் என்றால் ஹேர்டிரஸ்ஸர் என்னும் உழைக்கும் பெண்ணிற்கான பேட்டா பிரச்சினையை முன்வைத்த நடிகையை ‘விபச்சாரி’ என்றவர்தானே தங்கர்பச்சான்?

ஜெய்ராம் வீட்டின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கும் சிவசேனாவின் பாசிச நடவடிக்கைகளுக்கும் இடையேயான ஒப்புமைகள் என்ன? மராட்டியத்தில் சிவசேனாவின் வன்முறைகள் தமிழர்கள், தொழிலாளிகள், முஸ்லீம்கள் என்று தொடர்ந்து விரிந்து இப்போது மராட்டியர் அல்லாதோரான வட இந்திய கூலித் தொழிலாளர்கள் வரை வந்து நின்றிருக்கின்றது. இந்தப் பாசிசத்தின் அடிப்படை, தொடர்ச்சியாக எதிரிகளைக் கட்டமைப்பதும், அவர்களின் மீதான வன்முறையை உணர்ச்சிகரமான வெகுமக்கள் அரசியலாக்குவதும்தான். அதற்கு இடையூறான மாற்றுக்குரல்கள் தமது சொந்தப் பிரிவினரிடம் இருந்து வந்தால் கூட (உதாரணம் சச்சின் டெண்டுல்கர்) அவர்களின் மீதான வன்முறையாகக் கூட மாறக்கூடும்.

இரண்டாவதாக இந்தப் பாசிசத்திற்கு எப்போதும் கருத்தியல் பலம் இருப்பதில்லை. மாறாக உணர்ச்சிவயப்பட்ட சொல்லாடல்களும், வெறுப்பின் அரசியல் மட்டுமே இவற்றின் நடவடிக்கைகளுக்கு பலம் கூட்டும்; மார்க்சியம், பெரியாரியம் மாதிரியான எல்லாவிதக் கருத்தியல் அடிப்படைகளை நீக்கம் செய்த தூய இனவாதத்தை இந்தப் பாசிசம் ‘வெற்றிகரமாக’ முன்வைக்கும். மேலும் பாசிசம் ஒரு சில கருத்தியல் அடிப்படைகள் இருப்பதாக பாவனை செய்தபோதும் கூட, தன் வன்முறைக்கு நியாயம் சேர்க்கும் கூறுகள் தனக்கு முற்றிலும் எதிரான ஒரு தளத்தில் இருப்பதாக நம்பினால் கொஞ்சமும் வெட்கமின்றி அதை உயர்த்திப் பிடிக்கும். பால்தாக்கரே புலிகளை ஆதரித்ததையும், சீமான் பசும்பொன் முத்துராமலிங்கத்தை ஆதரித்ததையும் இங்கு ஒப்பு நோக்கலாம். மேலும் பாசிசத்தின் பிரதான கூறு ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி என்று மனித குலப்போராட்டங்கள் இதுவரை கண்டடைந்த எல்லா வழிமுறைகளையும் புறங்கையால் நிராகரித்துவிட்டு, நேரடி வன்முறைக்கு முன்னுரிமை அளிப்பதுதான். இதுதான் ஜெய்ராம் வீட்டின் மீதும் நிகழ்ந்தது.

ஆனால் இங்கே இன்னொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இதே நாட்களில் சென்னையில் நடைபெற்ற ‘அனைத்து இந்திய வீடுகளில் வேலை செய்யும் பணிப்பெண்களுக்கான மாநாட்டில்’ ஜெயராமின் கருத்துக்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்பட்டன. ஜெயராமுக்கான கண்டனமும் தெரிவிக்கப்பட்டன. நமது குரல் இந்த கண்டனங்களோடு இணைய வேண்டுமே தவிர, நமது கைகள் உழைத்துச் சோர்ந்த இந்த கரங்களோடு இணைய வேண்டுமே தவிர தங்கர்பச்சான், சீமான் மாதிரியான தமிழ்ப் பாசிஸ்ட்களோடு அல்ல.

- அங்குலிமாலா
Pin It