எந்த ஒரு சிறந்த கலைஞனும் சுதந்திரமான படைப்பாளியாகச் செயல்படும் அதே போதில் கண்டிப்பு மிகுந்த தணிக்கை அதிகாரியாகவும் விளங்குவான்.

S.J. Suryaஇதனால்தான் பல இலக்கியங்கள் ஆசாரக் கள்ளர்களுக்கும் அரசியல் நிர்ப்பந்தங்களுக்கும் அஞ்சாமல் மறைக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, எரியும் பிரச்னைகளையெல்லாம் துணிவுடன் சித்திரிக்கின்றன. அவற்றைப் படைத்த கலைஞனே தணிக்கை அதிகாரியாகவும் இருப்பதால், அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தணிக்கைக்குழு அல்லது கண்காணிப்புப் பிரிவு தனக்குப் பிடிக்காத படைப்பு மீது விமர்சனம் எதுவும் கூறமுடியாமல் திணறிப் போகிறது. சில நேரங்களில் தடை செய்து விடுகிறது.

அவ்வாறு சிறந்த படைப்புகள் தடை செய்யப்படும்போது மக்கள் கிளர்ந்தெழுகிறார்கள். அந்தக் கிளர்ச்சி படைப்பாளிக்குக் கிடைக்கும் உயர்ந்த பரிசாகி விடுகிறது.

வர்த்தகச் சூதாடிகளிடம் கலை - இலக்கியம் பணம் கொட்டும் விற்பனைச் சரக்காகி விடும்போது, முதலாளித்துவ அரசுகளும் இந்தக் கலை இலக்கியக் கவர்ச்சி வாணிபத்தை உற்சாகமூட்டி வளர்க்கவே செய்கிறது. திரைப்படங்களால் மக்கள் போதை ஏறிச் சீரழிவதை மக்கள் விரோத அரசுகள் எப்போதும் எங்கேயும் ஆதரித்தே வருகின்றன. மக்கள் சிந்திக்க முடியாத மடையர்களாக இருப்பது ஆதிக்க சக்திகளுக்குப் பாதுகாப்பானதே!

இதனால்தான் நமது திரைப்படங்கள் கலைத்தன்மையோ, கருத்துச் செறிவோ இல்லாமல் ஆபாசங்களையும் வக்கிர உணர்வுகளைத் தூண்டும் சதைக் கவர்ச்சிகளையும் வாரி இறைக்கின்றன. இவ்வாறு இருப்பதையே ஆதிக்க சக்திகளும் அவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் அரசுகளும் விரும்புகின்றன. கலைஞரின் பராசக்தியை ஆதிக்க சக்திகளின் ஏடுகளெல்லாம் தாக்கின. அரசாங்கம் பராசக்தியைத் தடைசெய்தது. மக்களோ பராசக்தியைக் கொண்டாடினார்கள்.

ஆனால், இப்போது `நியூ’என்கிற படத்தை `அந்த’ஏடுகள் எல்லாம் பரபரப்பாக விளம்பரப்படுத்தின. அரசாங்கம் சிறந்த படம் என்று பரிசுகூட வழங்கியிருக்கும். வழக்கறிஞர் அருள்மொழி சீரழிய விரும்பாத - சிந்திக்கும் மக்கள் சார்பில் வழக்குத் தொடுத்து `நியூ’ படத்தை நிறுத்த நேரிட்டது.

சிறுவர்களுக்குக்கூட, `கொக்கோக’சுகத்தைக் கற்பிக்கும் இந்தப் படம் பல கலைஞர்களாலும் கண்டிக்கப்பட்டது. தமிழர்கள் இன்னும் சொரணையுள்ளவர்களாகவே இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கை தருகிறார்கள் இந்த இயக்குநர்கள், கவிஞர்கள்.

Arulmozhiதொழில்நுட்பம், புதுமை என்கிற பெயரில் இயக்குநர் சூர்யாவின் ஏகாதிபத்திய வக்கிரங்கள் நாகரிக மக்களால் எச்சரிக்கப்பட்ட இதே நேரத்தில், இயக்குநர் தங்கர்பச்சான் வேறொரு விவகாரத்தில் சிக்கிக் கொண்டு நடிகர் நடிகைகளின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார்.

“பணத்துக்காக நடிக்கும் நடிகைகளும் விபச்சாரிகள் தான்” என்று தங்கர்பச்சான் கூறிய சொற்களுக்காக நடிகர் சங்கம் கொதிப்புற்று, படப்பிடிப்பை நிறுத்துவதென்று அறிவித்தது. வேறு வழியில்லாமல் தங்கர்பச்சான் நடிகர் சங்கத்துக்குச் சென்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க நேரிட்டது.

இயக்குநர் சூர்யா பொறுப்பற்ற புதுமைவாதி என்று காட்டிக் கொண்டால், இயக்குநர் தங்கர்பச்சான் ஆசாரமுள்ள பிரபுத்துவ சிந்தனையாளராக வெளிப்படுகிறார். ஆண்கள் எவ்வளவுதான் சபலமுற்றவர்களாகவும், போக்கிரிகளாகவும் இருந்தாலும் பெண்கள் ஆண்களின் தேவைகளுக்குச் சேவை செய்யும் `பத்தினி’யராகவே இருக்க வேண்டும் என்றே தங்கர்பச்சானின் இரு படங்களும் போதித்தன. ஆண்களுக்குச் `சுதந்திரத்தையும்’(!) பெண்களுக்குத் `தர்மத்தையும்’(!) வழங்குவதுதான் அவருடைய கலைப்பணி.

“பணத்துக்காக நடிக்கும் நடிகைகளும் விபச்சாரிகளே” என்கிற அவருடைய விமர்சனம் அல்லது எரிச்சல் மிகுந்த பார்வை ஒரு பண்ணைப் பிரபுவின் இந்துத்துவக் கருத்தாக்கமே! நமது சமூக அமைப்பில், தவறு செய்யும் ஆண்கள் தடயமற்றுத் தப்பித்து விடுகிறார்கள். பெண்தான் விபச்சாரி என்று முத்திரை குத்தப்படுகிறார். அந்தப் பெண் விபச்சாரி என்றால் அவளுடன் படுத்து நக்கிக் கிடந்து, அவளுடைய உடம்பையும் மனத்தையும் காயப்படுத்திய ஆண் அயோக்கியனை எப்படி அழைப்பது? விபச்சாரம் என்பது ஆண், பெண் ஆகிய இருவர் சம்பந்தப்பட்டது. ஆனால், வழக்கில், அகராதியில், `விபச்சாரி’ இருக்கிறாள். அதற்கு ஆண்பால் இல்லையே ஏன்? ஆண் எப்படியும் நடந்து கொள்ளலாம். பெண் மட்டும் கற்புள்ளவளாக இருக்க வேண்டும் என்கிற ஆணாதிக்கக் கொடுமை இது!

பெண் பற்றித் தங்கர்பச்சானின் கருத்து இதுதான். இதை அவருடைய `அழகி’ படத்தில் நடித்த நந்திதா அழுத்தமாகவே வெளியிட்டிருக்கிறார். தங்கர்பச்சானின் விமர்சனம் குறித்து நடிகைகள் மனோரமா, குஷ்பூ போன்ற நான்கைந்து பேர் மட்டுமே எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். நடிகர் சங்கத் தலைவர் என்கிற முறையில் விஜயகாந்துதான் கண்டனத்தையும் தீர்ப்பையும் அறிவித்தாரே தவிர, இன்றைய முன்னணி நடிகைகள் யாரும் வருத்தப்படவில்லை; மானப் பிரச்னையாகக் கருதவும் இல்லை.

இன்றைய முன்னணி நடிகைகளில் பலரும் தமிழச்சிகள் அல்ல. மானம், அவமானம் எல்லாம் தமிழர்களின் பிரச்னை என்று தள்ளி விட்டார்களா?

தங்கர்பச்சானின் தரக்குறைவான செய்தியால் நடிகைகளுக்கு வராத கோபமும் கொந்தளிப்பும் விஜயகாந்துக்கு வந்ததில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே திரைத்துறையினரில் பலரும் கருதுகிறார்கள். தங்கர்பச்சானைக் கண்டிக்கும் தார்மீக உரிமை விஜயகாந்துக்கு மாத்திரமல்ல; இன்றுள்ள சினிமாக்காரர்கள் யாருக்குமே இல்லை என்றே ஆரோக்கியமான ரசனை உள்ள ரசிகர்களும் கூறுகிறார்கள்.

இன்றுள்ள தயாரிப்பாளர், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், நடன இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், பின்னணிப் பாடகர்கள், ஒலிப்பதிவாளர்கள், ஒப்பனையாளர்கள் எல்லோருமே பெண்களின் குறிப்பாகக் கதாநாயகியின் - நடிப்பையோ, வசனம் பேசும் ஆற்றலையோ நம்பிப் படம் எடுப்பதில்லை. இந்தக் கூட்டமே சேர்ந்து பெண்ணைத் துகிலுரிந்து அவளைக் கவர்ச்சிப் பொருளாக்கி, ஒரு விபச்சாரத் தரகன் செய்யும் வேலையையே கலை என்கிற பெயரில் செய்கிறது.

தயாரிப்பாளரும், இயக்குநரும் நிர்பந்திக்காமல், திட்டமிட்டுப் பாத்திரத்தை, காட்சியை உருவாக்காமல், தானே விரும்பி, ஆடை களைந்து, அங்கம் குலுக்கி, தொப்புள் காட்டி, பாலுணர்வைத் தூண்டும் விதத்தில் வந்து எந்த நடிகை நடிக்க முடியும்?

கவிஞன் என்கிற பெயரில் தமிழையும், பண்பாட்டையும் அசிங்கப்படுத்தும் போக்கிரிகளின் பாடல்களை எந்த நடிகை விரும்பிக் கேட்டாள்?

Thangarbachan in Actors union

இப்படித்தான் உடை வேண்டும், இப்படித்தான் ஒப்பனை வேண்டும் என்று எந்த நடிகை திட்டமிட்டாள்? ஒரு படத்தைத் திட்டமிட்டு உருவாக்குகிற தயாரிப்பாளர், இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே சினிமாவை ஓர் உல்லாசமான கொள்ளையாகவே கருதுகிறார்கள்?

இப்போது தங்கர்பச்சான் தனது விமர்சனத்துக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்; இல்லையென்றால் எந்தப் படப்பிடிப்பும் நடக்காது என்று அறிவிக்கும் விஜயகாந்த்தோ, அல்லது `புண்பட்டுவிட்ட’ நடிகர் நடிகைகளில் யாராவது ஒருவரோ –

ஆபாசமாக வசனம் எழுதினால்,

பெண்களைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் பாடல் எழுதினால்,

தரக்குறைவான பாவமோ, அசைவோ தரும் விதத்தில் நடனம் அமைத்தால்,

அம்மாதிரியான `ஷாட்’டுகளை ஒளிப்பதிவு செய்தால்,

பண்பாட்டுக்கு எதிரான - பாலுணர்வைத் தூண்டும் விதத்திலான ஆடைகளை அணிவித்தால்,

விளம்பரங்களில் வாத்சாயன ரசனை தெரிந்தால்,

நடிகர் - நடிகைகளில் யாரும் நடிக்க மாட்டார்கள்; படப்பிடிப்பு நடக்காது - என்று நடிகர் சங்கத்தின் சார்பில் எப்போதாவது அறிவித்ததுண்டா?

இப்போது தங்கர்பச்சானைக் குறிவைக்கும் விஜயகாந்த்தோ, ரஜினி, கமல், விக்ரம், விஜய் என்றுள்ள முன்னணி நடிகர்களில் யாரோ ஒருவராவது, ஆபாசமாக வசனம் எழுதினால், பெண்ணைக் கொச்சைப்படுத்தும் பாடல் எழுதினால், தரக்குறைவான அபிநயமோ அசைவோ தரும் விதத்தில் நடனம் அமைத்தால், அம்மாதிரியான `ஷாட்’டுகளை ஒளிப்பதிவு செய்தால் படத்தில் யாரும் நடிக்க மாட்டார்கள் என்று நடிகர் - நடிகைகள் சார்பாக நடிகர் சங்கம் அறிவித்ததுண்டா?

நடிகைகளுக்காக உணர்ச்சி மீதுறப் பொங்கி எழுந்த நடிகர் சங்கத் தலைவர், குறைந்தபட்சம் ஒரு படத்தில் கதாநாயகனுக்கு எவ்வளவு பணம் ஊதியமாகத் தரப்படுகிறதோ, அதே சம்பளம் கதாநாயகிக்கும் தரவேண்டும் என்று எப்போதாவது சொன்னதுண்டா?

எல்லாக் காலத்திலும், எல்லா இடத்திலும் பெண்களின் உழைப்பு அற்பமாகவே கருதப்படுகிறது. ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் உழைத்தாலும் ஆண்களைவிடப் பெண்களுக்குக் குறைந்த கூலியே தரப்படுகிறது?

குஷ்பூவை நவீன வீனஸாகவே கருதி ரசிகர்கள் கோயில் கட்டினாலும் சினிமாத் துறையில் அவர் அழகிய அடிமையாகவே கருதப்பட்டார். கதாநாயகனின் சம்பளத்தில் ஆறில் ஒரு பங்குதான் அவருக்குத் தரப்பட்டது. இப்போதும் நடிகைகளின் சம்பளம் கதாநாயகனின் சம்பளத்துடன் ஒப்பிட்டால் அதிர்ச்சி தரும் அளவுக்குக் கேவலமானதே!

நடிப்பு என்கிற முறையில் கேவலமாகச் சித்திரிக்கப்படுவது குறித்தோ, உழைப்பு என்கிற முறையில் மோசமாகச் சுரண்டப்படுவது குறித்தோ நடிகைகள் கிளர்ந்தெழாதது ஆச்சரியமானதல்ல. இன்றுள்ள சமூக அமைப்பில் ஒவ்வொரு பெண்ணும் தன்னை அழகுபடுத்திக் கொள்ள விரும்புகிறாளே தவிர, தனது அடிமைத்தனத்தை உணரவே மறுக்கிறாள்.

இந்த அவலத்தைப் பெண்கள் உணர்ந்திருந்தால் அருள்மொழி நீதிமன்றம் சென்று போராடும் நிலை வந்திருக்காது. அருள்மொழியின் போராட்டம் ஆபாசத்துக்கு எதிரானது மாத்திரமல்ல; பெண் அடிமைத்தனத்துக்கும் எதிரானதே!

ஆனாரூனா

Pin It