தமிழ் சினிமா ரசனை மாறிவிட்டதாக சூதுகவ்வும், ஜிகர் தண்டா, அட்டகத்தி போன்றவற்றின் வருகையும், அவற்றின் வசூல்களும் தெரிவிப்பதாக, தொடர்ச்சியாக நம்ப வைக்க முயல்கிறார்கள். ஆனால் உண்மை கொஞ்சம் வேறு விதமாக இருக்கிறது. வசூல் சாதனையையும், சரியான விமர்சனங்களையும் பெற்றிருக்கும் இப்படைப்புகள் அனைத்தும் பொது புத்திக்குள் தான் இயங்கி இருக்கின்றன என்பதை உற்று அவதானிப்பவர்கள் உணரலாம். ஒரு கதாநாயகனும் கொஞ்சம் கேலியும் இவற்றின் மைய சரடுகள். ஒரு வணிக சினிமாவிற்கு அவசியமான சரத்துகளும் இவை தான்.
சினிமாவை அணுக, பார்வையாளர்களுக்கு சொல்லிக் கொடுப்பதிலும் ஒரு சரியான சினிமாவிற்கான விமர்சனம் என்பதே இங்கே கொஞ்சம் சிக்கலாக உள்ளது. இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் தான் இங்கே சினிமா விமர்சகர்கள். ஆனால் இவர்களின் சாய்வு நிலையைப் பொருத்து தான் இங்கே விமர்சனம் என்பதும் எழுதப்படுகின்றன. இயக்குனர்களுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பு, இயக்குனர்கள் அவர்களுக்குக் காட்டும் அனுசரணை இவற்றைப் பொருத்தே ஒரு சினிமா இங்கே மதிப்பிடப்படுகிறது.
ஆனால் இந்த பொதுப்புத்தியில் ஒத்துப்போகக் கூடிய சில படைப்புகளும் கவனம் பெறாமல் போய் விடுகின்றன. அப்படியான ஒரு படைப்பு தான் இயக்குனர் கரு.பழனியப்பன் அவர்களின் "மந்திரப்புன்னகை". எப்போதோ எழுதப்பட்டிருக்க வேண்டிய விமர்சனம்; ரொம்ப தாமதமானாலும் ஒரு நல்ல படைப்பு எந்த காலத்திலும் பேசப்படும் என்பதற்கு உதாரணமாக இருக்கட்டுமே.
மந்திரப் புன்னகையின் கதை எல்லா வணிக பொதுப்புத்திகளுடன் ஒத்துப்போக கூடியதாக இருந்தும், தமிழ்ப் பரப்பில் ஏன் அதிக கவனத்தைப் பெறாமல் போனது...?
தமிழ் சினிமா பார்வையாளனுக்கு கதிர் என்னும் கதாப்பாத்திரத்தை உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. அகத் தனிமை பற்றிப் பேசும் படைப்புகள் தமிழில் மிகவும் குறைவு, இல்லையென்றே கூட சொல்லலாம். உண்மையில் தனிமை என்பது யாரும் இல்லாமல் இருப்பதில்லை. இருக்கும் யாரிடமும் நாம் ஒட்ட முடியாமல் போவது தான். அப்படியான ஒரு தனிமையின் நிழலாக இருக்கும் ‘கதிர்’ பாத்திரம் தமிழ் சினிமா ரசிகன் அறிந்திராதது.
குடிப்பது, காசு கொடுத்து வேசையைத் துய்ப்பது என்பது போன்ற தவறான கருத்தியல்கள் இதில் முன்மொழியப்படுகிறது என்ற பொத்தாம் பொதுவான விமர்சனத்தை முன் வைப்பது, மந்திரப் புன்னகையை பொருத்தவரை தவறு என்றே நினைக்கிறேன். கதிர் பாத்திரம் உண்மையில் உளவியல் சிக்கல் நிறைந்த ஒரு பாத்திரம். அதிகம் விரும்பும் அம்மா தவறான நடத்தை உடையவளாக இருப்பதை சிறுவயதில் உணரும் ஒரு சிறுவனின் உள்ளத்தில் ஏற்படும் வடு. அதன்பின் எந்த ஒரு அன்பையும் வன்மமாகத் தட்டிவிடும் முரட்டு சுபாவமாக வடிவெடுக்கிறது.
வாழ்க்கையை ஒரு அபத்தத்தின் வழியே ருசிக்கும் ஒரு விசித்திர கதாபாத்திரம் தான் "கதிர்". உலகம் வடித்து வைத்திருக்கும் நேர்முறைகள் அனைத்திலும் ஒரு ஒழுங்கின்மை இருப்பதை உணரும் மனம், அபத்தங்களில் ஓர் ஒழுங்கு இருப்பதைக் கண்டடைகிறது. இத்தனை சிக்கலான ஒரு பாத்திரத்தைத் தான் தமிழ் சினிமா ரசிகர்களாலும் உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. விமர்சகர்களின் பார்வையிலும் சராசரியாய் எடை போடப்பட்டு, தூக்கி போடப்பட்டு விட்டது.
கதாநாயகியின் வீட்டிற்குச் சென்று, நள்ளிரவு கதவைத் தட்டி, அவளைக் காதலிக்கும் ஒருவனுடன் காலிங்பெல்லை அழுத்தி, பேசும் வசனம் லௌகீகத்தின் மீது ஏற்படக்கூடிய கசப்பை முதன் முதலாக பதிவு செய்துள்ளது.
‘மந்திரப் புன்னகை’ - தமிழ் சினிமாவில் அகத் தனிமை பீடித்தவனின் ஓர் அமைதியான குரல்.
- ஞா.தியாகராஜன்