‘தும் ஹாரி சுலு’ வித்யாபாலன் நடிப்பில் சுரேஷ் திரிவேணி இயக்கத்தில் 2017 நவம்பர் 17 ல் வெளிவந்த படம். 2018 நவம்பர் 16-ல் தமிழில் ரீமேக் செய்து இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் காற்றின் மொழி என்கிற பெயருடன் ஜோதிகா நடிப்பில் வெளிவந்து இருக்கிறது. ஜோதிகா விஜயட்சுமியாக வருகிறார்.
ஜோதிகாவிற்குத் திருமணம் ஆனபிறகு அவர் நடிக்கும் படத்தின் கதைகள், கதாபாத்திரங்களைப் பேசுவோம். அதாவது ஜோதிகாவிற்குத் திருமணம் ஆன பின்பு அவர் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம் இப்போது காற்றின்மொழி என ரொம்ப செலக்டிவான, அதே நேரத்தில் இத்தனை கவனத்துடன் கதாபாத்திரம், கதைகள் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் என்ன?
சூர்யா திருமணத்திற்குப் பின்பு நடித்த நடிக்கிற கதாபாத்திரம், கதைகள் படங்கள் பற்றி நாம் அறிவோம். சமூகப் பெண்களைப் பொதுச் சமூகம் சொல்லும் அந்தக் குடும்பப் பெண்களைப் பிரதிபலிக்கிறேன் என மிக மோசமான பிற்போக்குத் தனங்களை மேலும் விஷம் போல் உள்ளே ஏற்றும் வேலைகள்தான் ஜோதிகா தேர்வு செய்து நடிக்கும் படங்களும் கதாபாத்திரங்களும். நிஜத்தில் இவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் போல இவர் இருக்க மாட்டார்.
ஆனால் பொதுச் சமூகப் பெண்களுக்கு இந்த மாதிரியான பிம்பத்தைக் கொடுப்பதன் மூலம் மேலும் இங்கு பெண்களின் அடிமை மனோபாவம் கூடவே செய்யும். ஒரு முறை டீக்கடையில் நின்று இரண்டு ஆண்கள் பேசிக்கொள்கிறார்கள். ‘மச்சா... எனக்கு ஜோ வ ரொம்ப பிடிக்கும் டா.. ஏன்னா அவ பாரு மச்சா கல்யாணத்துக்குப் பிறகு கொஞ்சநாள் நடிக்கல... அப்ரம் நடிக்க வந்தபிறகு எப்டிலாம் கேரக்டர் செலக்ட் பன்ரா, கதைலாம் செமயா செலக்டிவா செய்கிறா... கிளாமரா இல்லாம சேலை கட்ர மாதிரி டிரஸ்லாம் டீசன்ட் ஆ இருக்கு’ எனப் பேசிக் கொள்கிறார்கள்.
இது மிக ஆபத்தான விசயம் இல்லையா. ஒரு பெண் திருமணம் ஆனதாலேயே நடிக்க இயலாமல் இருப்பதும், அப்படி நடிக்க வந்தாலும் பல கண்டிசன்களுடன் இந்த மாதிரியான கதா பாத்திரத் தேர்வுகளுடன் நடிக்க வேண்டியதும், அத்தோடு தன் மார்கெட்டைத் தக்க வைக்க மிக மோசமான அடிமைத்தனக் கட்டமைப்பை வருடிக் கொடுப்பதும், ஆணாதிக்கம் இல்லையா?
சூர்யா தேர்வு செய்யும் படங்கள், கதா பாத்திரங்கள் எதையும் அவருடைய திருமணம் நிச்சயிக்கவில்லை. ஆனால் ஜோதிகாவிற்கு அவர் எப்படி உடை அணிய வேண்டும் என்ன மாதிரியான கதை தேர்வு செய்ய வேண்டும்? என்ன பாத்திரத்தில் நடிக்க வேண்டும்? என எல்லாவற்றையும் அவரது திருமணமே முடிவு செய்கிறது. இவருக்கு மட்டும் இல்லை எல்லாப் பெண்களுக்கும். இதற்குப் பெரிய பாராட்டுகள் சமூகத்தில் இருந்து கிடைக்கும் குறிப்பாக ஆண்களிடம் இருந்து. இப்படியான நிர்பந்தத்திற்கு அவரைத் தள்ளியது எது? என நாம் யோசிக்க வேண்டும்.
தாய்மை, கணவன், குடும்பம், குழந்தை என வட்டத்திற்குள்ளேயே வாழும் பெண்களைத் திருப்திபடுத்தும் கதாபாத்திரங்கள். ஆனால் இந்தக் கதாபாத்திரப் படைப்பை அதன் கருத்தியலை நாம் கேள்வி கேட்டுவிட, யோசிக்க, அடையாளம் காணக் கூடாதல்லவா அதற்காக அவரே சுய கழிவிரக்கத் திற்குச் சில வசனங்களை இந்தப் படத்தில் பல காட்சிகளில் கேள்வியாய்க் கேட்டுக் கொள்வார்.
சரி, படத்துக்கு வருவோம். படத்தில் ஒரு மாமி வருகிறார். அவர் ஊறுகாய், புளிகாய்ச்சல் செய்து விற்கிறார். அவர் எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்கார், அது தனக்குப் பிடிக்கும் என்கிறார். ராதா மோகனின் பல படங்களில் ஒரு மாமா, மாமி வருகிறார்கள். அதே மொழியுடன், வாசனையுடன் வந்து போகின்றார்கள். ஒருவேளை நீங்கள் சொன்ன மொழி இதுதானோ? வலிய ஏன் இந்தக் கதாபாத்திரங்களைப் படத்தில் வைக்க வேண்டும்? ஊறுகாய், புளிகாய்ச்சலும் நாங்களும் சாப்டுவோம் நாங்களும் செய்வோம் அதுக்கு எதுக்கு ஒரு மாமி ராதா மோகன் அவர்களே?
நீங்கள் வைக்கும் கதாபாத்திரத்திலே உங்கள் அரசியல் பல்லிளிக்கிறதே... ஜஸ்டு கேரக்டர்தானே எனவெல்லாம் கடக்க முடியாது. உழைக்கும் மக்களையே காணோம். ஒரு நபர் வருகிறார். பாலு (வித்தார்த்) வேலை செய்யும் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்பவராகக் கொஞ்சம் பொது உடைமை பேசுகிறார். அவரை ஒரு ஜோக்கர் போலச் சித்தரித்து இருக்கிறார்கள். நிஜத்திலும் பகுத்தறிவு, பொது வுடைமை பேசுபவர்களை, செயல்படுபவர்களை மக்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள். உங்கள் தயவில் மேலும் அதிகமாகும். இது விசுவல் மீடியம்; மக்கள் அப்படியே உள் வாங்குவார்கள் என்கிற குறைந்தபட்சப் பொறுப்புணர்வு இல்லாத காட்சி களை அடுக்கியிருக்கிறார்கள்.
அதேபோல ஜோ, வித்தார்த் வீட்டில் டிவி ரிப்பேர் ஆகிறது. ஜோ வின் அப்பா டிவி ரிப்பேர் பற்றிக் கேட்கும்போது கஸ்டமர் கேரில் பேசியாச்சு, பலமுறை கம்பிளைண்டு கொடுத்தாச்சு, இனி குடும்பத்தோட தீ தான் குளிக்க வேண்டும் என்கிறார் ஜோதிகா. இந்தக் காட்சிக்கு இந்த வார்த்தையைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நாம் நினைக்க மறந்தாலும் கந்துவட்டிக் கொடுமையால் கலெக்டர் அலுவலகம் முன்பு சின்னக் குழந்தை களுடன் தீக்குளித்து இறந்து போன அந்த அப்பாவிக் குடும்பம் நினைவுக்கு வருகிறது. அவசியம் இல்லாமல், தேவையே இல்லாமல் இந்த வார்த்தையைப் பயன்படுத்தி அவர்களைக் கொச்சைப் படுத்துவது போல் உள்ளது. மிக மோசமான காட்சியாக அது தொக்கி நிற்கிறது.
ஆனால் அது சாதாரணமாகப் பார்க்கும் போது புரியாதபடி காட்சிகள் காமெடியாக வைக்கப்பட்டுள்ளது. பின்பு ஜோதிகாவிற்கு ரேடியோ ஜாக்கியாக வேலை கிடைக்கிறது. அது இரவு நேரத்தில் நடக்கும் ஒரு லைவ் நிகழ்ச்சி.
சிறு தயக்கத்துடன் வித்தார்த் ஒத்துக் கொள்கிறார். அந்த இரவுகளில் கால் செய்து தன் மன உணர்வுகளை, அழுத்தங்களைப் பேசுகிறார்கள். அதற்கு ஆறுதலாய் ஜோ பேசுவதும் பாடல் போடுவதுமான நிகழ்ச்சி அது.
ஆனால் அதில்கூட ஆண்கள் மட்டுமே காதல், கலவிபற்றிப் பகிர்கிறார்கள். ஏன் பெண்களுக்கும் மன அழுத்தம் வராதா? செக்ஸ்பற்றிப் பேச மாட்டார்களா? அந்த இரவுகளில் ஜோதிகாவிடம் ஒரு பெண் கூடக் கால்செய்து பேசுவதாகக் காட்ட வில்லை. அப்படிப் பேசும் ஆண்களும் லேட் நைட் ஷோ என்பதால் செக்ஸ் பத்தி மட்டுமே பேசுவது ஆண்கள் மன நிலையை இயக்குநரின் இந்தக் காட்சி மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. பெண்கள் கால் செய்வது, பேசுவது கூட விலக்கப்பட்டுதான் (taboo) இருக்கு இங்கே என்பது தெளிவாகிறது.
பின்பு இந்த 2 மணி நேர இரவு வேலைக்குச் செல்வதால் ஜோதிகாவின் மகன் செல்போனில் விளையாட்டு அதிகமாவதாகவும், வித்தார்த் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் காட்டி ரேடியோ ஜாக்கி வேலையை விடுவதற்குப் பெரிய காரணமாகச் சில காட்சிகள் கட்டமைக்கப்படுள்ளது. அதாவது கால் செய்து ஜோதிகாவிற்குப் பேசும் ஆண்கள் ஆபாசமாய்ப் பேசுவதாயும் அது வித்தார்த்துக்குப் பிடிக்கவில்லை என்பது மட்டும் இல்லாமல், ஒரு வித பய உணர்வோடு இருக்கிறார். ஆண்கள் போனில் ஜோவிடம் பேசுவது, வேலைக்குச் சென்று முப்பதாயிரம் சம்பாதிப்பது எனப் பல தொந்தரவு அவருக்குக் கொடுக்கிறது.
ஒரு கட்டத்தில் ஜோதிகா என் சம்பளத்தில் உனக்கு எதாவது வாங்கித் தரவா? எனக் கேட்கும் போது உன் சம்பாத்தியத்தில் நான் சாப்பிடவா? எனக் கேட்கிறார். அதாவது ஆண் சம்பாதித்து, பெண் வீட்டில் வேலை செய்து குழந்தைகளை வளர்கிறார்கள், வீட்டைப் பராமரிக்கிறார்கள். ஆனால் பெண் சம்பாதிப்பதை இணையைவிடக் கூடுதல் சம்பளம் வாங்குவதை, இரவு நேர வேலைக்குச் செல்வதை, வேலையின் தன்மையை ஒரு ஆணினால், புரிந்துகொள்ள இயலவில்லை என்பதாகத்தானே காட்சியாக அமைத்து இருக்க வேண்டும்?
ஆனால், அந்த ஆணின் ஒற்றைத் தன்மையை, ஆணின் பார்வையை இயக்குநர் உடைக்கவே இல்லை. மாறாக, காட்சிக்குக் காட்சி உரம் போட்டு வித்தார்த் பார்வையும், வலியும் சரி என்பது போலவே காட்டி இருக்கிறார். பார்க்கும் நமக்கும் வித்தார்த் பாவம் ஜோதிகா அந்த வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து குடும்பத்தைப் பார்ப்பது சரி என்று தோன்றும் அளவுக்கு வித்தார்த் பக்கம் காட்சிகள் நகர்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் ஜோதிகா ரேடியோ ஜாக்கியாக இருக்கும் அந்த நிகழ்ச்சிக்கே கால்செய்து தன் கஸ்டங்களை விதார்த் சொல்கிறார். அதாவது ஒன்றும் இல்லை; அவரின் புரிந்துகொள்ள இயலாத அந்த ஆணாதிக்கத் தன்மையின் மற்றுமொரு வெளிப்பாடு அவ்வளவே அந்த காட்சி. ஜோதிகாவும் கணவனின் ஃபீலி ல் கரைந்து போகிறார்.
பொதுவாக ஆண்கள் இரவு நேர வேலைக்குச் செல்லும் போது பெண்கள் குடும்பத்தை, குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது இல்லையா என்ன? அதேபோல மகனை இந்த 2 மணி நேர வேலையில் கவனித்துக் கொள்ளாதது யார் தப்பு? பொறுப்பு வித்தார்த் பொறுப்புதானே? அதையும் ஏன் ஜோதிகா தலையில் போடவேண்டும்? பொறுப்புகளை, பேரண்டிங்கை எப்போதும் பெண்கள் மீதே திணிக்கிறார்கள் என்பதற்கு இந்தக் காட்சிகளே போதுமானது. அதுவும் இவை எல்லாவற்றிற்கும் பெண்களையே குற்றவாளி ஆக்கி அவளையே வருத்தப்பட வைப்பது என்பது ஒரு வன்முறையே.
அதே போல இந்த வேலையை விடச்சொல்லி அப்பா, அக்கா, கணவன் என ஒட்டு மொத்தக் குடும்பமுமே ஜோதிகாவிற்கு அட்வைஸ் செய்கிறது, சண்டை போடுகிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ஆண்கள் கால்செய்து கண்டபடி பேசுகிறார்கள், கவுரவமான வேலை இல்லை என காரணங்களை அடுக்குகிறார்கள். ஒரு பெண்ணின் மீது வன்முறையைப் பிரயோகித்துவிட்டு அவளையே குற்றவாளி ஆக்கும் இந்தச் சமூகம், இந்தக் காட்சிகளைச் சர்வ சாதாரணமாகத்தான் கடக்கும்.
கணவன், குழந்தை இதைவிட இரவு வேலை முக்கியமா? என்ற அறிவுரைகள் அடுத்தடுத்து வந்தாலும், அந்த இடத்தில் ஜோதிகா, தனது வேலை பற்றியோ, பேரண்டிங் பற்றியோ, குடும்பப் பொறுப்பில் ஆணின் பங்கு பற்றியோ தனக்கு மட்டும் வரும் அறிவுரைகளின் முட்டாள்தனத்தைப் பற்றியோ கேள்வி கேட்காமல் இருப்பதால் காற்றின் மொழி அந்நியப்பட்டு நிற்கிறது.
ஒரு கட்டத்தில் வித்தார்த்தின் ஈகோ அதிகமாக, வேலையை விடுகிறார் ஜோதிகா. எதற்காக என்றால் அதே குடும்பக் கட்டமைப்பைக் கட்டிக்காக்க, குடும்ப அடிமையாய் குழந்தை, கணவனைப் பார்த்துக் கொள்ள.
அலுவலகத்தில் பிரியா விடை கொடுக்கும் போது அந்த ரேடியோ ஸ்டேசனில் சமையல் காண்டிராக்ட்டர் தேவை இருப்பதை அறிந்து ரேடியோ ஜாக்கி வேலையில் இருந்து சமையலுக்கு மாறுகிறார். அடுத்த காட்சியிலேயே கிட்சனில் வேலை செய்கிறார். சமையல் காண்டிராக்டராக பாலு உதவுகிறார். பின்பு எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்... நீ ரேடியோ ஜாக்கி வேலைக்குக் கிளம்ப ரெடி ஆகச் சொல்கிறார். ஜோதிகா தயங்கி, செல்ல மறுத்து ஆண்கள் பேசுவார்களே எனச் சொல்ல வித்தார்த்தோ ரொம்பப் பெருந்தன்மை யாக “நீ எப்படிப் பேசுவன்னு தெரியும், உன் மேல நம்பிக்கை இருக்கு” என வழியனுப்புகிறார்.
என்ன ஒரு பயம்? ஆத்தி! கடைசியில் ஜோதிகா வேலைக்குச் சென்று ஹலோலோலோ என வேலையை ஆரம்பிப்பது போலப் படம் முடிகிறது. என்ன சொல்ல வருகிறது காற்றின் மொழி? தனக்குப் பிடித்த வேலையைக் குடும்பத்துக்காக விட்டு, சமையல் வேலையை ஆரம்பித்து கணவன் அனுமதி கொடுத்து வழியனுப்பி வைத்த பிறகு வேலைக்குச் செல்வதில் என்ன சுயம் இருக்கிறது. இப்படியான நல்ல பெயரை வாங்குவதில் நமக்கு என்ன பயன் இருக்கிறது.
“எனக்கு இந்த வேலை முக்கியம், குழந்தையைப் பார்ப்பதும், வீட்டைக் கவனிப்பதும் கூட உன் வேலைதான். உன்னைவிட அதிகமாய் சம்பாதித்தால் தாழ்வாய் உணராதே, நானும் இத்தனை வருடம் உன் வருமானத்தில்தான் குடும்பத்தைக் கவனித்தேன். எனக்கு எந்த ஈகோவும் இல்லை” என்பதான அடிப்படை விசயங்களைத் தானே உரையாடி இருக்க வேண்டும்?
அந்த உரையாடலில் இயக்குநர் வைத்த காட்சிகளின் நூல்களை உடைத்து இருக்கலாம். அது மட்டும் இன்றி இந்த உரையாடல் இப்போது சமூகத்துக்கு அவசியமான உடைக்க வேண்டிய நுண்ணரசியலும் கூட. ஆனால் ஒற்றைப் பார்வையில் படம் முழுக்க நகர்வதும், சமூகப் பெண்களை அதே பண்பாட்டு, சாதிய, அடிமைக் கட்டமைப்புடன் வைத்திருக்கக் காட்சிகளை அமைப்பதும், பிரதிபலிப்பதும் எனக் காற்றின் மொழி முழுக்க விசம் மட்டுமே. இடது சிந்தனைக்கும், உரிமைக்கும், சமத்துவத்திற்கும் எதிரான மொழி இது. இந்தக் காற்றில் உயிரும் இல்லை. பெண்ணின் மொழியும் இல்லை.
- அபிநயா சக்தி, மனிதி