அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த பிறகு, அங்கே ராமர் கோயிலை கட்டுவோம் என்று கூறி வடமாநிலங்களில் 30 ஆண்டுகளாக இந்துத்துவ அரசியலில் குளிர்காய்ந்தது பாஜக. ஆனால் இப்போது ராமர் கோயில் கட்டப்பட்டுவிட்டதால், இனி அயோத்தி அரசியல் எடுபடாது என்பதையும் உணரத் தொடங்கிவிட்டார்கள். புதிதுப் புதிதாக மசூதியைத் தேடத் தொடங்கிவிட்டார்கள் சங் பரிவார்கள். அவர்கள் இப்போது புதிதாகக் குறி வைத்திருக்கும் மசூதி ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் அஜ்மெர் மசூதி. கி.பி. 1236-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இம்மசூதி இந்தியாவில் மிகப் பழமையான மசூதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

இந்த மசூதியை தற்போது பார்வையிட்டுச் சென்றிருக்கும் சங் பரிவார் கும்பல், ஜெயின் கோயிலும், சமஸ்கிருதப் பள்ளியும் அவ்விடத்தில் இருந்ததாக சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர். அங்கே இந்து கடவுள் சிலைகளை கண்டதாகவும், மேலும் பல சிலைகள் அப்பகுதியில் எரிக்கப்பட்டிருக்கலாம் என்பதால், அப்பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டுமென்று பாஜகவைச் சேர்ந்த சாகர் என்பவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மசூதிக்குள் சென்று வந்த குழுவில் இவரும் இருந்திருக்கிறார். தற்போது இந்த மசூதியானது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏற்கெனவே அயோத்தியைத் தொடர்ந்து காசி, மதுரா என ஒவ்வொரு மசூதியாகச் சென்று, உள்ளே சிலைகள் இருப்பதாக சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளனர் சங்கிகள்.

அதன் தொடர்ச்சியாகவே தற்போது ராஜஸ்தானிலும் ஒரு மசூதியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ராஜஸ்தானில் 2 கட்ட வாக்குப்பதிவும் முடிந்துவிட்ட நிலையில், பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படலாம் என்று ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. எதிர்வரும் காலங்களில் அந்தப் பின்னடைவை சரிசெய்யும் முயற்சியாகவே பாஜகவின் வழக்கமான மசூதி அரசியல் உத்தி இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இந்துக்களையும், சிறுபான்மை மக்களாகிய இசுலாமியர்களையும் மோதவிட்டு, அதில் பார்ப்பன நலனைப் பேணுகிற நயவஞ்சக அரசியலே இத்தகைய மசூதி இடிப்புகளின் பின்னணியில் ஒளிந்திருக்கிறது. அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியதால், பார்ப்பனர்களைத் தவிர வேறெந்த சமூகமாவது சிறு பயனைப் பெற்றிருக்கிறதா என்பதை பெரும்பான்மை இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It