கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி இன்றுவரை, வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ், ஆரஞ்ச், சான்ட்டா பர்பரா உள்ளிட்ட நகரங்களின் கடற்கரைகளில், ஆயிரக்கணக்கான கடல் சிங்கம் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் நோய்வாய்ப் பட்டு ஒதுங்கின.

இது குறித்து ஆராய்ந்த அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் சூழலியல் நிர்வாக (National Oceanic and Atmospheric Administration - NOAA) அமைப்பைச் சேர்ந்த அறிவியலாளர்கள், கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து நிலைகுலைந்து போன புகுசிமா அணுஉலைக் கதிர்வீச்சே இதற்குக் காரணம் என கருத்து வெளியிட்டனர்.

அனைத்துலக அணுசக்தித் துறை முகாமை (International Atomic Energy Agency - IAEA) நிறுவனத்தின் தலைவர் ஜூவான் கர்லோஸ்(Juan Carlos), புகுசிமா விபத்தால் மாசுபட்ட சூழல், நிலம், நீர் உள்ளிட்டவற்றை சீரமைக்க குறைந்தபட்சம் 40 ஆண்டுகளாவது ஆகும் என அறிவித்திருப்பது புகுசிமா விபத்து ஏற்படுத்திய கதிர்வீச்சுக் கொடூரத்தை உணர்த்தும் செய்தியாகும்.

இந்நிலையில், புகுசிமா விபத்தைத் தொடர்ந்து, 2030ஆம் ஆண்டுவரை புதிய அணுஉலைத் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என்று அறிவித்திருந்த ஜப்பான் நாடு, தற்போது அதைத் திரும்பப் பெற்றுள்ளது அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடஅமெரிக்க வல்லரசின் அணுஆயுதக் கூட்டாளியாகவும், உலகமயப் பன்னாட்டு நிறுவனங்களின் பொருளியல் கூட்டாளியாகவும் விளங்கும் ஜப்பான், அவர்களின் நெருக்குதல்களுக்குப் பணிந்து, புகுசிமா அணுஉலை விபத்திற்கு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணுஉலைத் திட்டங்களை மீண்டும் தொடங்கப் போவதற்கான அறிவிப்பை அந்நாட்டுப் பிரதமர் ஷன்சோஅபே மூலம் வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 02.06.2013 அன்று மிகப்பெரும் அணுசக்தி எதிர்ப்பு மக்கள் போராட்டத்தை சந்தித்தது, ஜப்பான் நாடு.

அந்நாட்டுத் தலைநகரான டோக்கியோ நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஜப்பான் அரசின் பாராளுமன்றமான டயட் கட்டிடத்தை சுற்றி, நடைபெற்ற மாபெரும் பேரணியில் 60,000க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். இப்பேரணியில், அணுசக்தியால் பாதிக்கப்பட்ட மக்களும், ஜப்பானின் மதிக்கத்தக்க பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில் பங்கேற்ற 68 அகவையான இச்சிகவா (Ichikawa) நகரத்தைச் சேர்ந்த கியேஹசி (Kiyohachi) என்ற முதியவர், “நாங்கள் யாருமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையெனில் அது அணுசக்திக்கு தெரிவிக்கும் ஆதரவாகிவிடும். எனவே, ஒரே ஒருவர் இருந்தாலும் நாங்கள் போராட்டத்தை தொடர்வது முக்கியம்’’ என்று ஊடகங்களில் உணர்ச்சிபடத் தெரிவித்தார்.

பேரணிக்கு முன்னதாக, ஜப்பானின் மதிக்கத்தக்க இலக்கியவாதியும், நோபல் பரிசு வென்றவருமான கென்சபுரோ உள்ளிட்ட புகழ்வாய்ந்த சான்றோர் பலர் பங்கேற்ற கூட்டம் ஒன்று டோக்கியோவின் ஷில்பா பூங்காவில் நடைபெற்றது.

அணுசக்திக்கு எதிரான மக்கள் போராட்டம் வெல்லட்டும்! 

எருதுக்குப் புண் என்றால் காக்கைக்குக் கொண்டாட்டம் மக்களின் அழிவு முதலாளிகளுக்கு கொண்டாட்டம் 

மனிதகுலம் பாதுகாக்க வேண்டிய இயற்கை வளங்களை, நுகர்ப்பொருளாக்கி, அதை வரைமுறையற்று முதலாளிகள் சுரண்டி விற்றதன் விளைவாக, இன்றைக்கு ‘புவிவெப்பமயமாதல்’ என்ற சூழலியல் பாதிப்பை உலகம் சந்தித்துக் கொண்டுள்ளது.

‘புவிவெப்பமயமாதல்’ விளைவாக, புவியின் மீது படும் கதிரவன் வெப்பம் அதிகரித்து, பனிப் பிரதேசங்கள் வேக வேகமாக உருகி வருகின்றன. இதன் காரணமாக, அதிகரித்து வரும் கடல் மட்டம், முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு உலகெங்கும் பெரும் சூழலியல் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டுள்ளது.

புவி சூடேற்றம் காரணமாக, ஆர்டிக் பனிப் பகுதிகளில், பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. அங்கு வாழும் 45 இலட்சம் உயிரி னங்கள் வெப்பம் தாங்காமல் அழிகின்றன. ஆர்ட்டிக் பனிப் பிரதேசக் காடுகளில் வாழ்ந்துவந்த ‘இன்னு யிட்டுகள்’ (Inuits) என்ற பழங்குடி மக்கள் 60000 பேர் தாயகம் இழந்து தத்தளிக்கும் நிலையில் உள்ளனர்.

ஆனால் இம்மக்களின் வேதனை முதலாளிகளுக்கு வேடிக்கை. மக்களின் அழிவு முதலாளிகளுக்கு புதிய வாய்ப்பு! உறைபனிப் பாறைகளுக்கு அடியில் அழுந்தியிருந்த அப்பகுதியில் பனிப்பாறை உருகுவதால் வெளியில் எடுக்க வாய்ப்பாக உள்ள எரிவளி, பெட்ரோலியம் உள்ளிட்ட இயற்கை வளங்களை எப்படி கொள்ளையடிப்பது என்பதற்கான ஆராய்ச்சியில் இப்போது முதலாளியநாடுகள் இறங்கியுள்ளன. மேலும், இதுவரை பனி மூடியிருந்த அந்தப் பகுதிகளில், பனிப் பாறைகள் விலகி வருவதால் அவ்வழியே சரக்குக் கப்பல்களை இயக்குவதற்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இறந்தவரின் உடலில் இருந்து நகைத்திருடுவது போன்ற நடவடிக்கை இது. எருதுக்குப் புண் என்றால், அதை கொத்தித்தின்பதில் ஆர்வமுடன் அலையும் காக்கைக்கு கொண்டாட்டம்தான்.

ஏற்கெனவே, ஆர்டிக் பனிப்பிரதேசங்களை ஒட்டியுள்ள நாடுகளான வடஅமெரிக்கா, கனடா, ஐஸ்லாந்து, ரசியா, டென்மார்க் உள்ளிட்ட 8 நாடுகளை உள்ளடக்கியதாக ஆர்டிக் கவுன்சில் (Artic Council) என்ற பன்னாட்டு அமைப்பு 1991ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அவ்வமைப்பின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த “ஆராய்ச்சி’’ப் பணிகளில், தம்மையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கோரி வந்தன.

இந்நிலையில், இவ்வமைப்பின் பார்வையாளர் தகுதியில், இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. இந்தியா இதில் இணைந்துள்ளதை, 15.05.2013 அன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பெருமிதத்துடன் மகிழ்ச்சி பொங்க அறிவித்தது. ஆர்டிக் பகுதிகளிலுள்ள பெட்ரோலியப் பொருள்களைக் கண்டறிவதற்கானப் பணியில் இந்தியா ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற பனிபடர்ந்த பகுதியான கீரின்லாந்து நாடு, தமது நாட்டிற்குள் சுரங்கங்கள் தோண்ட சற்றொப்ப 100க்கும் மேற்பட்ட உரிமங்களை வட அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு வழங்கியதன் காரணமாக, அங்கு இன்றும் மண்ணின் மக்கள் போராடிக் கொண்டுள்ளனர். இந்நிலையில்தான், ஆர்டிக் பகுதிகளில் இந்த ஆராய்ச்சிப் பணிகள் நடை பெற்றுக் கொண்டுள்ளன.

இதுவரை, பனிக்காற்றின் ஓசையைக் கேட்டு வந்த அப்பகுதி உயிரினங்கள், இனி, எண்ணெய் கிணறுகளுக்கான குழாய்களை அமைக்கத் தோண்டும் இயந்திரங்களின் இரைச்சலைக் கேட்கப் போகின்றன. தூய்மையான வடிவில் உருகியிருந்த நீர், இனி கச்சா எண்ணெய் கலந்து மாசுபடப் போகிறது.ஆர்டிக் பகுதியை வாழ்விடமாகக் கொண்ட, பென்குவின் பறவைகள் இனி மிருகக்காட்சி சாலைகளிலோ, அருங்காட்சியகங்ளிலோதான் பார்க்க முடியும். அமைதியாக வாழ்ந்துவந்த மக்கள் வெப்ப வெளியில், உருகும் கடலில் வீசியெறியப் படவிருக்கிறார்கள். எல்லாம் முதலாளிய லாப வேட்டைக்காக

Pin It