Non-Linear Layered Structure Screenplay Technique
இந்தத் திரைப்படத்தைப் பார்த்த நம்மவர்களில் அனேகர் இந்தத் திரைப்படம் குறித்துச் சொன்ன விசயங்கள் இரண்டு. ஒன்று திரைப்படம் புரியவில்லை, மற்றொன்று கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்பது. குவண்டின் டரன்டினோ திரைப்படங்களில் பொதுவாக கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டே இருப்பதுபோலத்தான் தெரியும். ஆனால் விசயம் என்னவென்றால் உரையாடல்களின் வழி கதாபாத்திரங்களுக்கு இடையிலான டென்ஷனை பில்டப் செய்து எதிர்பாராத தருணத்தில் அந்த உரையாடலின் உச்சமாக ஒரு அதிரடி ஆக்சன் காட்சி வைக்கப்பட்டிருக்கும். இது டரன்டினோ திரைக்கதை உத்தியின் அடையாளங்களில் ஒன்று.
இதற்கு ஆகச் சிறந்த உதாரணமாக Inglorious Bustards திரைப்படத்தில் வரும் பப் காட்சியைச் சொல்லலாம். அவருடைய Jackie Brown திரைப்படம் இதற்கு ஒட்டுமொத்த எடுத்துக்காட்டு. இந்தத் திரைப்படத்தில் உரையாடலின் வழியாகவே கதாபாத்திரங்களுக்கு இடையிலான டென்ஷன்கள் பில்டப் செய்யப்பட்டிருக்கும். ஆக டரன்டினோவின் திரைப்படங்கள் பெரும்பாலும் பேசிக்கொண்டே இருப்பதைப்போல இருந்தாலும் அது எதிர்பாராத ஒரு ஆக்சன் காட்சிக்கான முன் தயாரிப்பு என்பதைப் புரிந்துகொண்டு பார்க்கத் தொடங்கினால் அந்த உரையாடலின் தீவிரம் தெரியத் தொடங்கும்.
அடுத்து Pulp Fiction புரியவில்லை என்கிற கருத்திற்கு வருவோம். ஏன் புரியவில்லை என்றால் நாம் திரி ஆக்ட் ஸ்டிரக்சர் கொண்ட லீனியர் திரைக்கதை கொண்ட திரைப்படங்களையே பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் என்பதால், இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை உத்தி சற்று நம்மை மிரள வைக்கிறது. டரன்டினோ நான்-லீனியர் திரைக்கதை உத்தியை இந்தத் திரைப்படத்தில் பயன்படுத்தி இருப்பதால் இந்த உத்திக்கு முற்றிலும் அந்நியப்பட்டிருக்கும் நாம் சற்று மிரண்டுதான் போகிறோம். நான்-லீனியர் திரைக்கதை உத்தியை தெரிந்துகொண்டு பார்க்கும்போது இந்தத் திரைப்படம் வேறு ஒரு தளத்திலிருந்து திரை அனுபவத்தைத் தரக் கூடியது என்பதில் சந்தேகமில்லை.
இந்தத் திரைப்படம் லேயர்ட் ஸ்டிரக்சர் கொண்ட நான்-லீனியர் திரைக்கதை அமைப்பைக் கொண்டது. ஒன்றிற்கு ஒன்று தொடர்பில்லாத வெவ்வேறு கதாபாத்திரங்கள் சம்பந்தப்பட்ட மூன்று சம்பவங்களின் தொகுப்பு இந்தத் திரைப்படம். அதாவது இந்தத் திரைப்படத்தில் கதை என்பது கிடையாது. மூன்று சம்பவங்கள் டைம் & ஸ்பேசில் முன்னும் பின்னுமாகக் கோர்க்கப்பட்டிருப்பதே இதன் தனித் தன்மை. திரைப்படம் கிளைமாக்ஸ் காட்சியில் இருந்தே தொடங்கும். பங்கின் மற்றும் ஹனிபனி கதாபாத்திரம் இரண்டும் சாப்பிட வந்திருக்கும் ரெஸ்டாரண்டை கொள்ளையடிக்கத் திட்டம் போடுவதிலிருந்து திரைப்படம் தொடங்கும். இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடலின் வழியாகவே காட்சி தொடங்கும். உரையாடலின் உச்சத்தில் இரண்டு பேரும் தங்கள் கைகளில் இருக்கும் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு எகிறுவார்கள். இந்தக் காட்சியை எண் 3 என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அத்துடன் அந்தக் காட்சி கட் செய்யப்பட்டு வின்சென்ட் மற்றும் ஜூல்ஸ் கதாபாத்திரங்களுக்குச் சென்றுவிடும் அடுத்த காட்சி. கிளைமாக்ஸ் காட்சியிலேயே பங்கின் மற்றும் ஹனிபனி கதாபாத்திரங்கள் ரெஸ்டாரண்டை கொள்ளை அடித்தார்களா இல்லையா என்பது தொடர்ந்து காட்டப்படும். வின்சென்ட் மற்றும் ஜூல்ஸ் கதாபாத்திரங்கள் அவர்கள் துப்பாக்கியை நீட்டிக்கொண்டு பாயும்போது அங்கே இருப்பார்கள். அதாவது எண் 3 காட்சியின் தொடர்ச்சியே கிளைமாக்ஸ். இந்தக் காட்சியில் காட்சி எண் 1-உடன் தொடர்புடைய இரண்டு கதாபாத்திரங்கள் இடம் பெற்றிருக்கும். இதில் விசேசம் என்னவென்றால் காட்சி எண் இரண்டிலேயே அதாவது பாதித் திரைப்படத்திலேயே வின்சென்ட் கதாபாத்திரம் சுட்டுக் கொல்லப்பட்டுவிடும்.
காட்சி எண் 3-உடன் தொடர்புடைய புட்ச் கதாபாத்திரம் திரைப்படத்தின் பாதியிலேயே வின்சென்ட் கதாபாத்திரத்தை சுட்டுக் கொன்றுவிட்டிருக்க, பிறகு எப்படி வின்சென்ட் கதாபாத்திரம் திரைப்படத்தின் கிளைமாக்சில் வர முடியும்? பங்கின் மற்றும் ஹனிபனி கதாபாத்திரங்கள் மூன்றாம் தொகுப்பு. இது காட்சி எண் 3-உடன் தொடர்புடையது. வின்சென்ட் மற்றும் ஜூல்ஸ் கதாபாத்திரங்கள் தொகுப்பு ஒன்று. இது காட்சி எண் 1 உடன் தொடர்புடையது. புட்ச் கதாபாத்திரம் தொகுப்பு இரண்டு. இது காட்சி எண் 2-உடன் தொடர்புடையது. இங்கே காட்சிகளைச் சீக்குவென்ஸ் என்று புரிந்துகொள்ள வேண்டும். டரன்டினோ இங்கே செய்திருக்கும் அற்புதம் என்னவென்றால் இந்த மூன்று தனித் தனிச் சீக்குவென்ஸ்களையும் துண்டு துண்டாக வெட்டிப் பிரித்துவிடுகிறார். மூன்றாம் சீக்குவென்ஸ் அதாவது மூன்றாம் தொகுப்பு இரண்டாக வெட்டப்பட்டு அதன் ஒரு பகுதி திரைப்படத்தின் தொடக்கக் காட்சியாகவும், இரண்டாம் பகுதி கிளைமாக்ஸ் காட்சியாகவும் வைக்கப்படுகிறது.
முதல் சீக்குவென்ஸ் காட்சிகள் இரண்டாக வெட்டப்பட்டு அதன் ஒரு பகுதி இரண்டாம் சீக்குவென்ஸ்சுடனும், அடுத்த பகுதி மூன்றாம் சீக்குவென்ஸ்சுடனும் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒன்று, இரண்டு, மூன்று என்று போகவேண்டியதை வெட்டி மூன்று, ஒன்று, இரண்டு என்று நகர்த்தியிருக்கிறார் டரன்டினோ. ஒருவகையில் இந்தத் திரைக்கதையில் நான்-லீனியர் உத்தியை அராஜகமாகக் கையாள்கிறார் டரன்டினோ. அதிலும் இரசிக்கும்படியாக. எங்கிருந்து அவர் இந்த உத்தியைக் கற்றுக்கொண்டார்? நியாயமான கேள்வி. டரன்டினோ உள்ளூர் காணொளி கடையில் சேல்ஸ் பாயாக வேலை பார்க்கும் காலத்தில் இதற்கான அடித்தளத்தை அவராகவே போட்டுக்கொண்டார். காணொளி கடையில் இருந்த நல்ல திரைப்படங்களின் சிறப்பான காட்சிகளைத் தனித் தனியாக வெட்டி எடுத்து அதை அவராகவே ஒரு வரிசையில் எடிட் செய்து அதிலிருந்து ஒரு புதுப் படத்தை உருவாக்கிப் பழகியிருக்கிறார். அந்தப் பயிற்சியின் வெளிப்பாடே இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை உத்தி.
டைம் & ஸ்பேசில் மூன்று சீக்குவென்ஸ்களையும் வெவ்வேறு வரிசையமைப்பில் வைப்பதன் காரணமாக ஒரு குழப்ப நிலையை உருவாக்குகிறார் டரன்டினோ. இந்தத் திரைப்படத்தை வரிசையமைப்பில் சொல்வது என்றால் முதல் சீக்குவென்ஸ், மூன்றாம் சீக்குவென்ஸ் இறுதியாக இரண்டாம் சீக்குவென்ஸ் என்று வரும். திரைப்படத்தின் பாதியில் வின்சென்ட் கதாபாத்திரத்தை சுட்டுக் கொன்றுவிட்டு புட்ச் கதாபாத்திரம் அவனுடைய காதலியுடன் தப்பிச் செல்வதே இந்தத் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி. ஆனால் இது திரைப்படத்தின் இடையில் வரும். இந்தத் திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியாக இருக்கும் வின்சென்ட் மற்றும் ஜூல்ஸ் கதாபாத்திரம் ரெஸ்டாரண்டை விட்டு வெளியேறிச் செல்வது வரிசைப்படி பார்த்தால் திரைப்படத்தின் இடையில் வரவேண்டியது. ஆனால் இந்த ஒழுங்கமைப்பைப் படு சாமார்த்தியமாகக் குலைக்கிறார் டரன்டினோ.
நான்-லீனியர் திரைக்கதை உத்தியில் அமைந்த படு ஆக்சன் திரில்லர் திரைப்படம் ஒன்றைப் பார்க்க, கற்றுக்கொள்ள விரும்பினால் இந்தத் திரைப்படம் உங்களுக்கானது.
- நவீனா அலெக்சாண்டர்