படைப்பூக்கமிக்க பெருங்கலைஞன் (1923-2007)
“கலை என்பதே அரசியல்தான்! கலை இல்லாமல் சுதந்திர மனிதர்கள் இல்லை” - இப்படி முழங்கியவர் ஆஸ்மேன் செம்பேன்.
“என் படைப்புகளை என் மக்களுக்குக் காட்டுவதிலேதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி”- என்பார் அவர். செம்பேன் ஆப்பிரிக்காவின் புரட்சிகரமான கலைஞன். ஆம், அவர்தான் ஆப்பிரிக்க சினிமாவின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்.
ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டின் தென் பகுதியில் கேசமேன்ஸ் மாகாணத்தில் இருக்கும் சிகின்சோர் கிராமம்தான் செம்பேன் பிறந்த ஊர். 1923 ஜனவரி முதல் நாள் வலோஃப் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தார் ஆஸ்மேன். அவரது தந்தை ஒரு மீனவர். 1900 வாக்கில்தான் அவரது குடும்பம் டாக்கரில் இருந்து இடம்பெயர்ந்து சிகின்சோர் வந்திருந்தது. 1936 ல் அவர் பிரஞ்சுப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது தனது பிரஞ்சு தலைமை ஆசிரியருடன் ஏற்பட்ட முரண்பாட்டில் அந்த ஆசிரியரை அடித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு பள்ளியை விட்டுத் துரத்தப்பட்டார் செம்பேன்.
நடுத்தரக் கல்வியோடு அவரது படிப்பு முடிந்துபோனது. தந்தையுடன் கடலுக்கு மீன்பிடிக்கப் போனார். வருமானம் அதிகமில்லாத நிலையில் கடல் சீக்கிற்கு ஆளானார். பின்னர் டாக்கரில் இருந்த அவரது அப்பாவழி உறவினர் வீட்டிற்கு 1938 ல் அனுப்பப்பட்டார். பதினைந்தே வயது நிரம்பிய செம்பேன் டாக்கரில் பலதரப்பட்ட கடினமான வேலைகளைச் செய்யவேண்டியிருந்தது. 1944 ஆம் ஆண்டு பிரஞ்சு ராணுவத்தின் துப்பாக்கி சுடும் செனகல் நாட்டவர் படைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த சமயம் அது. போர் முடிந்த பின்னர் அவர் வீடு திரும்பினார். 1947 ல் அவர் டாக்கர்- நைஜர் ரயில்வே திட்டப்பணியில் சாதாரணத் தொழிலாளியாக வேலை செய்தபோதுதான் முதன்முதலில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றார். இந்த அனுபவம் பின்னாளில் அவருக்கு ‘கடவுளின் மரத் துண்டுகள்’ நாவல் எழுத அடிப்படையாக அமைந்தது.
1947 ஆம் ஆண்டின் பிற்பகுதியில்தான் அவர் அந்த முடிவுக்கு வந்தார். எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் பிரான்சுக்குக் கப்பல் ஏறினார் செம்பேன். பாரிசில் ஒரு ஆலையிலும் பின்னர் மார்செய்லே துறைமுகத்திலும் வேலை செய்தார். செம்பேனின் வாழ்க்கைப் பாதை முற்போக்கு திசையில் இன்னும் அழுத்தம் பெற்றுச் சென்றது இந்தக் காலகட்டத்தில்தான். பிரஞ்சுத் தொழிற்சங்க இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டார் செம்பேன். பிரஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியிலும், அதன் ‘தொழிலாளர்கள் பொதுக் கூட்டமைப்பு’ எனும் தொழிற்சங்கத்திலும் இணைந்தார். வியட்நாமுக்கு எதிராக பிரஞ்சுக் காலனி ஆதிக்கம் நடத்திய போரில் பயன்படுத்துவதற்காக கப்பல் நிறைய ஆயுதங்கள் கொண்டுசெல்லப்பட்டன. அதனைத் தடுக்கும் வகையில் நடந்த வேலை நிறுத்தத்தை வழி நடத்துவதில் செம்பேன் பெரும்பங்காற்றினார். இந்த சமயத்தில்தான் கிளாவ்டே மெக்கே மற்றும் ஜாக்வெஸ் ரூமேன் போன்ற எழுத்தாளர்கள் செம்பேனுக்கு அறிமுகமானார்கள்.
செம்பேனின் இதுபோன்ற பலதரப்பட்ட அனுபவங்கள் ‘தி பிளாக் டாக்கர்’ (1956) எனும் அவரது முதல் பிரஞ்சு மொழி நாவலை எழுத அவரைத் தூண்டின. மார்செய்லே துறைமுகத்தில் பணியாற்றும் ஆப்பிரிக்கக் கருப்பின சுமைத் தொழிலாளியான டையவ் எப்படியெல்லாம் அங்கே இனப் பாகுபாட்டினால் உதாசீனப்படுத்தப்பட்டு அவமானத்திற்குள்ளாகிறான் என்பதே இதன் கதை. டையவ் ஒரு நாவல் எழுதுகிறான். அதனை ஒரு வெள்ளைக்காரப் பெண் திருடி தன் பெயரில் அதனை வெளியிடுகிறாள். அதனை டையவ் எதிர்க்கிறான். தற்செயலாக அந்த வெள்ளைக்காரப் பெண்ணை டையவ் கொல்ல நேர்கிறது. அவனுக்குக் கடும் தண்டனை கிடைக்கிறது. இந்த நாவல் புலம்பெயர்ந்த ஆப்பிரிக்கர்கள் இழிவாக நடத்தப்படுவது குறித்துப் பேசினாலும், செம்பேன் தன்னுடன் துயரப்படும் அராபியத் தொழிலாளிகள் பற்றியும், ஸ்பானியத் தொழிலாளிகள் பற்றியும் இதில் விவரிக்கிறார். இந்தப் பிரச்சனைகள் எந்தளவுக்குப் பொருளாதார அடிப்படையைக் கொண்டிருக்கிறதோ அதற்குச் சற்றும் குறையாத அளவுக்கு இன அடிப்படையையும் கொண்டதென்கிறார் செம்பேன். அவரது பெரும்பாலான படைப்புகளைப்போலவே இந்த நாவலும் சோசலிச யதார்த்தவாதத்தின் அடையாளமாக அமைந்தது.
அவரது இரண்டாவது நாவலான ‘ஓ நாடே, என் அழகிய மக்களே’ (oh country, my beautiful people) 1957ல் வந்தது. கருப்பினத்தைச் சேர்ந்த ஓமர் ஒரு லட்சியப்பூர்வ விவசாயி. தனது பிரஞ்சு இன வெள்ளை மனைவியுடன் சொந்த ஊரான கேசமேன்சுக்கு வருகிறான். தனது ஊரின் விவசாய முறைகளை நவீனப்படுத்துவதே அவனது லட்சியம். இதற்காக அவன் காலனிய அரசையும், கிராமத்தின் பழமைவாதத்தையும் எதிர்த்துப் போராட வேண்டி வருகிறது. இறுதியில் அவன் கொல்லப்படுகிறான். இந்த நாவல் செம்பேனுக்கு உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்தது. நாடுகள் பலவும் அவரை விருந்தாளியாக அழைத்தன. குறிப்பாக, சோசலிச நாடுகள் அவருக்கு மிகுந்த மரியாதை செய்ய விரும்பின. சீனமும், கியூபாவும், சோவியத் யூனியனும் அவருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கப் பெரிதும் விரும்பின. செம்பேன் மீண்டும் பயணம் மேற்கொண்டார். இந்த முறை சாதாரணத் தொழிலாளியாக அல்லாமல், தொழிலாளி வர்க்கத்தின் தீரமிக்கப் படைப்பாளியாகப் பயணப்பட்டார்.
சோவியத் யூனியனில் இருந்தபோது செம்பேனுக்கு சினிமா குறித்த அறிவை வளர்த்துக் கொள்ள வாய்ப்பேற்பட்டது. ஒரு ஆண்டு அங்கே தங்கி, கார்க்கி ஸ்டூடியோவில் சினிமா எடுப்பது தொடர்பாகப் பயிற்சி பெற்றார். ஆப்பிரிக்காவில் பின்தங்கிய ஒரு இனத்தில் பிறந்து, காலனிய ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட தொழிலாளி வர்க்கத்தின் நாவலாசிரியராக உயர்ந்த ஆஸ்மேன் செம்பேன் என்ற அந்தப் படைப்பாளியை ஒரு அபூர்வமான திரைப்படக் கலைஞனாக சோசலிச சோவியத் பூமி செதுக்கி அவரது தாய் மண்ணுக்கு அனுப்பிவைத்தது.
தொடர்ந்து பல நாவல்கள், குறுநாவல்கள், சிறு கதைகள் என்று எழுதிக் கொண்டிருந்தாலும் சமுதாய மாற்றத்திற்காகப் போராடுகிற ஒரு கலைஞன் பரந்துபட்ட மக்கள் திரளிடம் செல்லவே விரும்புவது இயல்பு. 1960 ல் செனகலுக்குத் திரும்பிய செம்பேன் தனது ஆப்பிரிக்க மக்களை அதிகப்படியாக நெருங்கவேண்டி திரைப்படத் தொழிலில் இறங்கினார். பிரஞ்சு மொழியில் தனது முதல் குறும்படமான ‘தி வேகனர்’ 1963ல் வந்தது. 64ல் அவரது இன்னொரு குறும்படம் ‘நியாயே’ வந்தது. 1966ல் அவரது முதல் முழுநீளத் திரைப்படமான ‘லா நொய்ரே டே’ வெளி வந்தது. இந்தப் படம்தான் கருப்பின ஆப்பிரிக்கர் ஒருவர் எடுத்த ஆப்பிரிக்காவின் முதல் சினிமா ஆகும். தனது சிறுகதைகளில் ஒன்றை அடிப்படையாகக்கொண்டு இந்தப் படத்தின் கதையை அமைத்தார் செம்பேன். 60 நிமிடங்களே ஓடும் பிரஞ்சு மொழிப் படமான இது வெளியான உடனேயே ‘பிரிக்ஸ் ஜீன் விகோ’ விருதினை வென்றது. இதனால் ஆப்பிரிக்க சினிமாவின் மீதும், குறிப்பாக செம்பேன் மீதும் உலகின் கவனம் திரும்பியது. இந்த மகத்தான வெற்றியை அடியுரமாக்கி செம்பேன் தனது தாய்மொழியான வலோஃப் மொழியில் 1968 ல் ‘மன்டபி’யையும், தனது நாவலை அடிப்படையாக வைத்து 1975ல் ‘சாலா’வையும், 1977ல் ‘செட்டோ’வையும், 1987ல் ‘கேம்ப் டி தியாரோயே’வையும், 1992ல் ‘குயல் வார்’ ஐயும் தந்தார். 1971ல் ஆப்பிரிக்கப் பழங்குடியின மொழிகளுள் ஒன்றான டயோலா மொழியிலும் ‘எமிட்டாய்’ என்ற படத்தை எடுத்தார் செம்பேன்.
செம்பேனின் படங்கள் காலனியத்தின் கொடூரமிக்க வரலாற்றின் பதிவுகளாகும். மதத்தின் தோல்விகளை அவரது படங்கள் அம்பலப்படுத்தின. ஆப்பிரிக்காவின் புதிய முதலாளிகளை அவை கடுமையாக விமரிசனம் செய்தன. ஆப்பிரிக்கப் பெண்களுக்கு அவரது படங்கள் தெம்பையும் நம்பிக்கையையும் ஊட்டின. அவரது கடைசிப் படமான ‘மூலாடே’ (2004) கேன்ஸ் படவிழாவிலும், ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பட விழாவான பெஸ்பாகோவிலும் விருதுகளை வென்றது. கொடூரமான ஆப்பிரிக்க மூடப்பழக்கமான பெண்ணுறுப்பைச் சேதப்படுத்தும் வழக்கத்திற்கெதிராகக் குரல் கொடுத்தது இந்தப் படம்.
2007 ஆம் ஆண்டு ஜூன் 9 அன்று தனது 84 வது வயதில் செம்பேன் மறைந்தார். செனகல் டாக்கரில் தனது வீட்டில் அவரது உயிர் பிரிந்தபோது ஆப்பிரிக்க சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகின் எல்லா திசைகளிலிருந்தும் முற்போக்கு சினிமா ரசிகர்கள் அந்த உன்னதக் கலைஞனுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
தென்னாப்பிரிக்கக் கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர் டாக்டர் இசட். பல்லோ ஜோர்டன் மிகச் சரியாகவே செம்பேன் குறித்து இவ்வாறு சொன்னார்: “நன்முறையில் முழுமைபெற்ற அறிவுஜீவி, அபூர்வமாகப் பண்பட்ட மனிதாபிமானி, அனைத்தும் உணர்ந்த சமூக விமர்சகர், ஆப்பிரிக்காவின் மாற்று ஞானத்தை உலகத்திற்கு வழங்கிய பெருங் கலைஞன்!” ஆப்பிரிக்காவை இருண்டகண்டம் என்று சொன்னவர்களுக்கெல்லாம் செம்பேனின் படைப்பூக்கமிக்க வரலாறு இன்றும் விடை சொல்லிக்கொண்டேயிருக்கிறது என்பதே உண்மை.
- சோழ. நாகராஜன்