Wangari Maathaiபிரிட்டிஷ் ஆட்சியாளர்களும், பெரும் பண்ணையாளர்களும் கென்யா நாட்டிலிருந்து எழுபத்தைந்து விழுக்காடு காடுகளை அழித்தனர்.  மலைகளிலிருந்த பல லட்சக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்தினர்.  பசுமை நிறைந்த காடுகளையும், மலைகளையும் பாலைவனமாக்கினர்.

காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகளை உணர்ந்த ‘வங்கரி மாதாய்’ (Wangari Maathai), ‘பசுமைப் பகுதி இயக்கத்தை’ (Green Belt Movement) 1977ஆம் ஆண்டு துவக்கினார். இந்த இயக்கத்தில் மக்களை இணைத்து சுற்றுச் சூழலைப் பாதுகாக்கப் போராடினார்.  இந்த இயக்கத்தின் மூலம் கடந்த இருபத்து ஏழு ஆண்டுகளில் மூன்று கோடி மரங்களை நட்டு சாதனைப் படைத்துள்ளார். அய்ந்தாயிரம் மரப்பண்ணைகளையும் அமைத்தார். 

இந்த இயக்கம் ஆப்பிரிக்காவில் உள்ள பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்ந்துள்ளது.

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க, `பசுமைப் பகுதி இயக்க’த்தில் அதிக அளவில் பெண்கள் அணி திரட்டப்பட்டனர்.  இந்த இயக்கம், பெண்கள் மீதான அடக்கு முறைக்கு எதிராகவும், கல்வி, நலவாழ்வு, குடும்பக் கட்டுப்பாடு, ஊட்டச்சத்துப் பற்றாக்குறை நீக்கம், ஊழல் ஒழிப்பு முதலியவற்றுக்காகவும் போராட்டங்களில் ஈடுபட்டது. மேலும், ஏழைப் பெண்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கவும், குழந்தைகளின் நல வாழ்வுக்காகவும் குரல் எழுப்பியதால், பல லட்சக்கணக்கான பெண்களின் குடும்பங்கள் பயன் பெற்றன.

வங்கரி மாதாய் 1940 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காக் கண்டத்திலுள்ள கென்யா நாட்டில் மவுண்டு கென்யா என்னும் பகுதியில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.  இவரது கிராமத்தில் பள்ளி கிடையாது.  அதனால், வெகு தூரத்திலிருந்த பள்ளிக்கு நடந்து சென்று கல்வி கற்றார்.

பின்னர், கன்சாஸில் மவுண்ட் செயிண்ட் ஸ்கோலாஸ்டிக்கா கல்லூரியில் உயிரியல் பட்டப் படிப்பையும், பட்ட மேல் படிப்பையும் முடித்தார்.  ஆராய்ச்சி படிப்பை முடித்து டாக்டர் பட்டம் பெற்றார்.  கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் முதன் முதலில் டாக்டர் பட்டம் பெற்ற பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

கென்யாவின் தேசிய பெண்கள் குழுவின் உறுப்பினராக 1976 முதல் 1987 வரை சிறப்பாகச் செயல்பட்டார்.  இந்த அமைப்பின் தலைவராக 1981 முதல் 1987 வரை விளங்கினார்.

கென்யாவின் அதிபர் டேனியல் அரப்மோய் தலைமையிலான அரசு கண்மூடித்தனமாகக் காடுகளை அழித்து சுற்றுச் சூழலுக்குக் கேடு ஏற்படுத்தியது.  இதை எதிர்த்துத் தீவிரமாகப் போராடினார்.  இதனால், இவர் வகித்து வந்த தேசிய பெண்கள் குழுவின் தலைவர் பதவி அரசால் பறிக்கப்பட்டது.

கென்யா தலைநகர் நைரோபியில் பல கோடிகளை அள்ளி இறைத்து, அறுபத்திரண்டு மாடி கொண்ட கட்டிடம் கட்டும் அரசுத் திட்டத்தை எதிர்த்துப் போராடினார்.  இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  ஆனால், அவர் நடத்திய போராட்டத்தினால் கட்டிடம் கட்டும் அத்திட்டம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கென்யா அரசு வனப்பகுதியை தனியாருக்கு விற்பனை செய்வதை எதிர்த்து 1999 ஆம் ஆண்டு மிகத் தீவிரமான போராட்டம் நடத்தினார்.  அப்போராட்டத்தின் போது மாதாய் காவல் துறையினரால் கைது செய்யப்படும் முன்னர் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

கென்யா நாட்டில் 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற ஒன்பதாவது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தொண்ணூற்று எட்டு விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடினார்.  இருபத்து நான்கு ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்த டேனியல் அரப்மோய்க்கு எதிராகக் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது.  அக்கூட்டணி ஆட்சியில், மாதாய் சுற்றுப்புறச் சூழல் இணையமைச்சரானார். 

“அமைதியின் ஓர் அங்கமாகவே, சுற்றுப்புறச் சூழல் திகழ்கிறது.  சுற்றுச்சூழலை பாதுகாக்க நாளெல்லாம் பாடுபட்டுவரும் நூறு பெண்மணிகளில், மாதாயும் ஒருவர்” -என அறிவித்து, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பு இவரைக் கௌரவித்துள்ளது!

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க முனைந்து பாடுபட்டதற்காக உலகின் மிக உயரிய நோபல் பரிசு வங்கரி மாதாயிக்கு 2004ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.  இவர் தான் முதன் முதலில் நோபல் பரிசு பெறும் ஆப்பிரிக்க கறுப்பினக் கண்மணியான பெண்மணி ஆவார்!

நோபல் பரிசு மூலம் கிடைத்த பணத்தைத் தமது இயக்கத்தை வளர்க்கவே, இவர் பயன்படுத்திக் கொண்டார்!

“இயற்கை வளங்களை நாம் பாதுகாப்பதன் மூலம் அமைதிக்கான விதையை நாம் இப்போதே விதைக்கிறோம்” என்ற உன்னதக் கோட்பாட்டின் அடிப்படையில் பாடுபட்டு வருகிறார்.

கென்யா மக்களின் உரிமைகளுக்கான இவரது அரசியல் பயணம் ஆறாகப் பெருகி இன்றும் தொடர்கிறது.

- பி.தயாளன்

Pin It