“வரலாறு கல்லில் செதுக்கப்படவில்லை; மனிதர்களின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருந்தது.
கவிதைகள் எழுதப்படவில்லை; பாடப்பட்டன. கதைகள் புத்தகங்களில் இல்லை; இசையோடு மக்களின் உதடுகளில் வாழ்ந்தன.”
அண்மையில் ஹோமரின் ஆனால், ஒடிஸி திரைப்படமாக வெளியாகி உலகம் முழுக்க பேசப்பட்டு வருகிறது. ஆனால், பலருக்கும் தெரியாது - அதுதான் உலகின் மூத்த இலக்கியப் படைப்பு;
உலக இலக்கிய வரலாற்றில் நாகரீகத்தின் முதல் மூச்சு!
கி.மு. எட்டாம் நூற்றாண்டு. கிரேக்க நாகரிகம் இன்னும் தனது எழுத்து மரபை முழுமையாக உருவாக்காத காலம். வரலாறு கல்லில் செதுக்கப்படவில்லை; மனிதர்களின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருந்தது. கவிதைகள் எழுதப்படவில்லை; பாடப்பட்டன. கதைகள் புத்தகங்களில் இல்லை; இசையோடு மக்களின் உதடுகளில் வாழ்ந்தன.
அந்தக் காலத்தில் பார்வையற்ற ஒரு பாடகர் ஊரெல்லாம் பாடிக்கொண்டு நாடோடியாகத் திரிந்தார் என சொல்லப்படுகிறது. அவரது பெயர் ஹோமர். அவர் ஒரு போரைப் பாடினார். ஆனால் அது ஒரு போரின் வரலாறு அல்ல; மனித அகங்காரத்தின் வரலாறு. ட்ரோஜன் போர் பத்து ஆண்டுகள் நீடித்தது என்று புராணங்கள் கூறுகின்றன. ஆனால் இலியட் அந்தப் போரின் முழுக் கதையையும் சொல்லவில்லை. அது வெறும் ஐம்பது நாட்களை மட்டுமே விவரிக்கிறது.
ஏன்?
ஏனெனில், ஹோமருக்கு போரில் வெற்றி பெற்றவர்கள் முக்கியமல்ல; போரில் மனிதன் எப்படி மாறுகிறான் என்பதுதான் முக்கியம். அக்கிலீஸ் என்ற வீரன் கோபப்படுகிறான். ஒரு கோபம் ஆயிரக்கணக்கான உயிர்களை விழுங்குகிறது. அந்தக் கோபத்தின் விலையை ஒரு நாகரிகம் செலுத்துகிறது. இதுவே இலியட்.
ஹோமர் முதன்முதலாக உலக இலக்கியத்திற்கு ஒரு புதிய உண்மையைச் சொன்னார்.
ஒரு மனிதனின் உள்ளுணர்வே ஒரு பேரரசின் விதியை மாற்ற முடியும்.
இந்த எண்ணம்தான் பின்னர் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் முதல் தோஸ்தயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் வரை எல்லா மகத்தான இலக்கியங்களின் அடித்தளமாக மாறியது.
இலியட் ஒரு காவியம் மட்டுமல்ல; அது மேற்கத்திய உலகின் முதல் உளவியல் நாவலும் கூட. அக்கிலீஸின் கோபம்... ஹெக்டரின் கண்ணியம்... பிரியமின் துயரம்... ஆண்ட்ரோமாக்கியின் அச்சம்... இவை அனைத்தும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித மனத்தில் மாறாமல் இருக்கும் உணர்ச்சிகள்.
அதனால்தான் இலியட் இன்று கூட புதிதாகத் தோன்றுகிறது.இந்தக் காவியத்தின் மிக உருக்கமான காட்சி போர்க்களத்தில் நிகழ்வதில்லை; மாறாக, தனது மகன் ஹெக்டரின் உடலைத் திரும்பக் கேட்டு, வயதான மன்னன் பிரியம் எதிரி வீரன் அக்கிலீஸின் கூடாரத்திற்குள் வருகிறார்.
அந்தத் தருணத்தில்...ஒரு மன்னன் இல்லை; ஒரு வீரன் இல்லை. ஒரு தந்தையும், இன்னொரு மனிதனும் மட்டுமே இருக்கிறார்கள். உலக இலக்கியத்தில் மனிதநேயம் முதன்முதலாக இவ்வளவு ஆழமாகப் பேசப்பட்ட தருணம் அதுவாகும்.
இலியட் பிறந்த நாளில் ஒரு காவியம் மட்டுமல்ல பிறந்தது.இலக்கியம் மனிதனைப் பற்றிப் பேசத் தொடங்கியது.
அந்த ஒரு நூலின் நிழலில்தான் பின்னர் ஏஸ்கிலஸ், சோபோக்ளீஸ், யூரிப்பிடீஸ், விர்ஜில், டான்டே, ஷேக்ஸ்பியர், மில்டன், ஜாய்ஸ் ஆகியோரின் படைப்புகள் வளர்ந்தன.
மேற்கத்திய இலக்கியம் முழுவதும், ஹோமர் விதைத்த விதையின் கிளைகள்தான்.இன்று, இலியட் ஒரு பழைய கிரேக்கக் காவியமாக மட்டும் வாசிக்கப்படுவதில்லை.
மனிதன் ஏன் போர் செய்கிறான்? புகழின் விலை என்ன? கோபம் எப்போது ஒரு பேரழிவாக மாறுகிறது?
என்ற கேள்விகளுக்கான நிரந்தர இலக்கியப் பதிலாக வாசிக்கப்படுகிறது. இப்படி உலகமே கொண்டாடும் ஹோமரைப் பற்றி இன்னொரு செய்தியும் உண்டு
ஹோமர் யார் என்று இதுவரை யாருக்கும் தெரியாது .இராமாயணம் எழுதிய வால்மீகிக்குக் கூட ஒரு கதை இருக்கிறது. ஆனால் ஹோமருக்கென்று உறுதியான வாழ்க்கைச் சான்றுகள் எதுவும் இல்லை. அவர் கி.மு. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது. ஆனால் அவர் எந்த நகரத்தில் பிறந்தார், அவர் தாய் தந்தை யார்? அவர் குருடா செவிடா? இன்னும் சொல்லப்போனால், உண்மையில், அப்படி ஒருவர் இருந்தாரா? எதுவும் தெரியவில்லை. அதனால்தான் விடை தெரியாத கேள்விகளுக்கு ‘‘Homeric Question” எனும் ஆய்வுக் கேள்வி உருவானது
தமிழ் இலக்கியங்களில் பல அவ்வையார்கள் இருப்பது போல ஹோமர் என்பவரும் ஒருவர் அல்லர்; பல ஹோமர்கள் இருந்தனர் என்று சொல்லப்படுகிறது..
பண்டைய கிரேக்க இலக்கியம் முதலில் எழுதப்படாமல், வாய்மொழியாகவே பரவியது. பல தலைமுறைகளாகப் பாடகர்கள் (rhapsodes) தங்கள் சொற்களில் கதைகளைப் பாடிப் பரப்பினர். அப்படித்தான் ‘இலியட்’, ‘ஒடிஸி’ போன்ற காவியங்கள் உருவாகியிருக்கக் கூடும் எனப் பல அறிஞர்கள் கூறுகின்றனர்.
மறுபுறம், சில அறிஞர்கள், இவ்விரு காவியங்களிலும் காணப்படும் ‘‘மொழி நடை, காட்சித் துல்லியம், மனோதத்துவ ஆழம்’’ ஆகியவை ஒரே பெரிய கவிஞனின் கையெழுத்தாகவே இருக்க முடியும் என வாதிடுகின்றனர். அவர்களின் கூற்றுப்படி, ஹோமர் ஒரே நபர்தான் — ஆனால் அவரது படைப்புகள் வாய்மொழியாகத் தொகுக்கப்பட்டு, பிறகு எழுதப்பட்டன.
இன்றைய இலக்கிய உலகம் இந்த இரு வாதங்களையும் சமநிலையுடன் ஏற்றுக்கொள்கிறது. ஹோமர் ஒருவராக இருந்தாலும், அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மரபு — பல தலைமுறைக் கவிஞர்களின் குரல். அதனால்தான் ‘இலியட்’, ‘ஒடிஸி’ ஆகிய இரண்டும் ஒரே சமயம் தனிப்பட்டவையாகவும், பரந்த கலாசார அனுபவம் நிறைந்திருப்பனவாகவும் திகழ்கின்றன.
எப்படியிருந்தாலும், இலியட், ஒடிஸி ஆகிய இரண்டும் உருவாக்கும் படைப்புலகம் மனித குலத்தின் மைல் கல்லாக மதிக்கப்படுகிறது. ஆகிய இரண்டும் உருவாக்கப்பட்ட அந்த உணர்வுகள் காலத்தையும் தலைமுறைகளையும் தாண்டி வாழ்கின்றன — அதுவே ஹோமரின் உண்மையான அடையாளம்!
- அஜயன் பாலா