இலக்கியத்திற்காக 2004 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஒன்பதாவது பெண்மணி, உலகம் புகழும் ‘எல்பிரிட் ஜெலினிக்!’

               ஆண் - பெண் இடையே உள்ள பிரச்சனைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் சுரண்டல்கள் முதலியவற்றைத் தமது படைப்புகளில் உரக்கப் பதிவு செய்துள்ளார்.

              Elfriede Jelinek ‘எல்பிரிட் ஜெலினிக்’ – நல்லதோர் நாடக ஆசிரியராகவும், ஆவலைத் தூண்டும் நாவலாசிரியராகவும், சிறந்த கதையாசிரியராகவும் வெகுகாலம் விளங்கினார்! இவரது மொழி நடை இனிமையானது! பலருக்கும் அது எளிமையானது! கற்பவர்களுக்கு உற்சாகம் ஊட்டுவது!

               இவர், ஜெர்மனிக்கு அருகில் உள்ள, ஆஸ்டிரியா நாட்டு முர்கஸ்லாக்கில் 1946 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் நாள், வீயன்னா ஜெலினிக்- ஒல்கா தம்பதிக்கு மகளாகப் பிறந்தார். ஆஸ்டிரியாவின் சிறந்த பெண் எழுத்தாளராகப் புகழ் பெற்று விளங்கினார். நோபல் பரிசு பெற்ற ஆஸ்டிரியா நாட்டின் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார்!

               ‘ஜெலினிக்’ – தாம் பிறந்த நகரான முர்கஸ்லாக்கில் பள்ளிப் படிப்பை முடித்தார். இளம் வயதிலேயே இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டு பியோனோ வாசிக்கக் கற்றுக் கொண்டார்.

               நாடகம் - அரங்கமைப்பு – கலை - வரலாறு முதலிய பாடங்களைப் படித்து 1964 ஆம் ண்டு பட்டம் பெற்றார். இசைக்கல்வி பயின்று டிப்ளமோ பெற்றார். மாணவப் பருவத்திலேயே கவிதைகள் எழுதினார். இவரது 21 – ஆம் வயதில் முதல் கவிதைத் தொகுப்பு 1967 ஆம் ஆண்டு வெளிவந்தது. அக்கவிதை நூல் இவரை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியது.

               கல்லூரியில் பயிலும்போது மாணவர் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். சமூகப் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு, அவற்றைத் தீர்க்க முக்கியத்துவம் கொடுத்தார். மாணவர் இயக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தபோதே, இவரது முதல் நாவல் 1970 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த நாவல் மூலம் ஐரோப்பா முழுவதும் ‘ஜெலினிக்’ பிரபலமடைந்தார்.

               இவர் ஹாட்பிரிட் ஹங்ஸ்பர்க் என்பவரை 1974 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

               ‘Woman as lovers’, ‘wonderful’, ‘wonderful times’ முதலிய இவரது நாவல்கள் வாசகர்கள் மத்தியில் பிரபலமடைந்தன!- இந்நாவல்கள் மூலம் உலக அளவில் அறிமுகமானார். இவர், தமது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தி பியானோ டீச்சர்’ (The piano Teacher) என்ற நாவலை 1988 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். இந்த நாவல் மைக்கேல் ஹென்கி என்ற இயக்குநரால் 2001 ஆம் ஆண்டு திரைப்படமாகவும் வெளியிட்டப்பட்டது. சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு மூன்று விருதுகளையும் அது பெற்றது! இவரது ‘Lust’ என்ற நாவல் உலக அளவில், மிகுந்த செல்வாக்கைக் கொண்டுவந்து குவித்தது!

               பல நாடகங்கள் 1974 ஆம் ஆண்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டன. வானொலிக்காகவே பல நாடகங்களை எழுதியளித்தார். அந்த நாடகங்கள் கிராமிய பாணி மற்றும் வரலாற்றுப் பின்னணி கொண்டவையாகும். ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து ஆக்கிரமித்ததைக் கண்டித்து ‘பம்பிலேண்டு’ என்னும் நாடகத்தை 2003 ஆம் ஆண்டு எழுதினார்! அடுத்த ஆண்டே, இந்த நாடகம் 2004 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

               மொழியைக் கூர்மையாகக் கையாளும் திறமை கொண்ட இவர் அரசியல் விமர்சனம் செய்வதில் எவ்விதத் தயக்கமும் காட்டாதவர். தன்னுடைய கருத்துக்களைத் துணிவுடன் வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்தவர். இதனால் ஆஸ்டிரியா நாட்டு ஆளும் வர்க்கத்தினருக்கு எதிரியாகக் கருதப்பட்டார். ஆனால், ‘ஜெலினிக்’- பொது மக்கள் மத்தியிலும், இலக்கிய செல்வாக்குப் பெற்றிருந்தார். இவர் 1974 முதல் 1991 வரை ஆஸ்டிரியா கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து செயல்பட்டுள்ளார். ஏற்றத்தாழ்வு இல்லாத, சுரண்டலற்ற சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும் என்பதையே தமது இலட்சியமாகக் கொண்டிருந்தார்.

               இவரது நூல்கள் பெண்களை அடிமைப்படுத்துவதைக் கடுமையாக எதிர்க்கும் தன்மை கொண்டவையாகும். மேலும், இச்சமூகம், பெண்களைக் கீழ்த்தரமாக நடத்தும் கொடுமைகளை அம்பலப்படுத்தியும், பெண்கள் மீதான வன்முறைகளை எதிர்த்து முறியடிப்பது குறித்தும் தமது நூல்களில் வலியுறுத்தியுள்ளார்.

               இவரது நாவல்கள் மற்றும் நாடகங்கள் ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்ச் முதலிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன.

               ஆஸ்டிரியன் பல்கலைக்கழக மாணவர்களின் கவிதைப் பரிசு 1969 ஆம் ஆண்டு இவருடைய கவிதைக்காக வழங்கப்பட்டது. வியன்னா எழுத்தாளர் அமைப்பின் விருது, மேற்கு ஜெர்மனி சினிமா எழுத்தாளர் சங்கப் பரிசு, ஸ்டிரியா எழுத்தாளர்கள் வழங்கிய பரிசு – என பல பரிசுகளையும், விருதுகளையும் ‘ஜெலினிக்’ தம் படைப்புகளுக்காகப் பெற்றுள்ளார்.

               “ஜெனிலிக் ஒரு தீவிர பெண்ணியவாதி; ஆழ்ந்த கொள்கைப் பிடிப்பு கொண்டவர்; அத்தோடு மிகச் சிறந்த எழுத்தாளர்” என ஜெர்மன் இலக்கிய மேதை மார்செல் ரீச் ராணிகி புகழாரம் சூட்டியுள்ளார்!

- பி.தயாளன்

Pin It