“பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை சிறந்த ஆய்வாளர்; செறிவான எழுத்தாளர்; கட்டுரையாளர்; பன்னூலாசிரியர்; தெளிந்த சிந்தனையாளர்; நல்ல உரையாடல் வல்லவர்; கடிதம் வரைபவர்; அடக்கமும் கூச்சமும் அணிகலனாக உடையவர்; பல்கலைக் கழகத்திலே பலருக்கும் ஆய்வு வழிகாட்டியாக விளங்கியவர்; இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல பல்கலைக்கழகத்திலும் தேர்வாளர்; இந்திய மொழியியல் கழகம், திராவிட மொழியியல் கழகம், இந்திய கல்வெட்டியியல் கழகம், இலங்கைத் தொல் பொருட்கழகம் போன்ற அறிஞர் குழாத்தில் உறுப்பினர் எனப் பல்வேறு சிறப்புகள் பெற்றவர்” எனப் போலந்து நாட்டில் உள்ள வார்சா பல்கலைக் கழக வருகைப் பேராசிரியர் முனைவர் சி. நாச்சிமுத்து பதிவு செய்துள்ளார்.

velupillaiபேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை யாழ்ப்பாணம் தென்புலோலியில் உபயகதிர்காமம் என்ற ஊரில், ஆழ்வாப்பிள்ளை – உமையாத்தைப்பிள்ளை வாழ்விணையருக்கு மகனாக 21.11.1936 அன்று பிறந்தார். தென்புலோலியில் உள்ள தமிழ்ப் பாடசாலை, ஆங்கிலப் பாடசாலை ஆகியவற்றில் தமது தொடக்கக் கல்வியை முடித்தபின் உயர்கல்வியை ஹாட்லிக் கல்லூரியில் கற்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் உயர்கல்வியை முடித்தார். இளங்கலை –ஆனர்ஸ் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று கீழ்த்திசைக் கல்வி உதவித் தொகையையும், ஆறுமுக நாவலர் பரிசையும் பெற்றார். பின் பல்கலைக்கழக உதவித் தொகை பெற்று ‘பாண்டியர் காலக் கல்வெட்டுகளில் தமிழ்மொழியின் நிலை’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து இலங்கையில் தமிழில் முதல் முனைவர் பட்டத்தை 1962 ஆம் ஆண்டு பெற்றார். இலங்கையில் 1960-61 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கைச் சிவில் சர்வீஸ் தேர்வில் இலங்கை முழுவதிலுமிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஐந்து நபர்களில் ஒருவராகத் தேர்ச்சி பெற்றார். அக்காலத்தில் சிவில் சர்வீஸ் நியமனம் பெற்றவர்கள் பொருள் வருவாய், அதிகாரம், அந்தஸ்து என்பன மிகுந்த பதவிகளை இன்று வசிக்கின்றனர். தமிழ்க் கல்வியிலும் தமிழாராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபடுவதற்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் பதவி உதவும் என்ற நம்பிக்கையில், சிவில் சர்வீஸ் நியமனத்தை நிராகரித்தார். இவருக்கு புகழ் பெற்ற பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை வழிகாட்டியாக இருந்தார். பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் சென்று புகழ்பெற்ற திராவிடவியல் மொழியியலிலே துறைபோகியவர்களில் ஒருவராக மதிக்கப்படும் பேராசிரியர் தாமஸ் பர்ரோவின் மேற்பார்வையில் ‘கி.பி. 800 தொடக்கம் 920 வரையுள்ள கல்வெட்டுகளில் தமிழின் நிலை’ என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு இரண்டாவது டாக்டர் பட்டம் பெற்றார்.

இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்திலும், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் துறைத்தலைவர் வரை பல நிலைகளில் பணியாற்றினார். திருவனந்தபுரத்தில் திராவிட மொழியியல் கழகத்தில் 1973-74 ல் முதுநிலை ஆய்வாளராகப் பணியாற்றிய போது கேரளப் பல்கலைக் கழக மொழியியல் துறையில் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். பின்னர் 1980 ஆம் ஆண்டு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலைப் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் 1990 முதல் சுவீடனில் உள்ள உப்சாலா பல்கலைக் கழகச் சமய வரலாற்றுத்துறையில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

பொதுநல நாடுகள் கல்வி உதவித் தொகை பெற்று இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழக மொழியியல் துறையில் பேராசிரியர் ஆர்.ஈ. ஆஷர் (R.E. Asher) மேற்பார்வையில் தற்காலத் தமிழ்மொழியின் அமைப்புப் பற்றி ஆய்வுகள் செய்து கட்டுரைகள் வெளியிட்டார். சுவீடன் உப்சாலப் பல்கலைக் கழகத்துச் சமய வரலாற்றுத்துறையில் வருகைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியாப் பல்கலைக்கழகத்திலும், பின்பு அரிசோனா மாநிலப் பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவரும் இளங்கதிர் . இந்த தர்மம், சிந்தனை முதலிய இதழ்களிலும், தமிழ்த் தின இதழாகிய ‘வீரகேசரி’ யிலும் ஆய்வுக் கட்டுரைகளையும், இலக்கியக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் தமிழ், தமிழக வரலாறு, புத்த, சமண சமயத்துறைகளில் ஆற்றல் மிக்கவர். மேலும், சாசனவியல், திராவிட மொழியியல், இலக்கியமும் வரலாறும் ஆகிய துறைகளில் மிகவும் புலமை கொண்டவர்.

கல்வெட்டுகளில் தமிழ்மொழியின் நிலை (கி.பி. 800-920) என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தினார். இவரது கல்வெட்டு ஆய்வுகள் தமிழகக் கல்வெட்டுகளைப் பற்றியும், இலங்கைக் கல்வெட்டுகள் பற்றியும் பல தகவல்களைத் தருகின்றன. இவரது ஆய்வுகள் நூல் வடிவம் பெற்றபொழுது தமிழுலகம் ஏற்றுப் போற்றியது.

பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை படைத்து அளித்துள்ள நூல்கள்: ஈழத்து அறிஞர் ஆளுமைகள், இலக்கணக் கொள்கைக் கட்டுரைகளிலே கணேசையரின் அணுகுமுறை, சேர். பொன். இராமநாதன் நினைவுப் பேருரை, தமிழலக்கியத்தில் காலமும் கருத்தும், தமிழ் வரலாற்றிலக்கணம், தமிழர் சமய வரலாறு, சாசனமும் தமிழும், பண்டிதமணி போற்றிய யாழ்ப்பாணத்து சைவத் தமிழ், பேராசிரியர் வித்தியானந்தன் காட்டும் ஈழத்துத் தமிழர் சால்புக்கோலம், பாவலர் துரையப்பாபிள்ளையின் யாழ்ப்பாணம் அன்றும் இன்றும், ஈழத்தமிழ் இலக்கியம் வரலாற்றுப் பின்னணி தமிழும் சமயமும், கல்வெட்டுச் சான்றும் தமிழாய்வும் (ஆங்கிலம்), கல்வெட்டில் தமிழ்க் கிளைமொழியியல் ஆய்வு (ஆங்கிலம்), An Inscription from the munnisvaram Temple முதலிய நூல்களாகும்.

‘சாசனமும் தமிழும்’ என்னும் நூலில், சாசனத்துத் தமிழ் வரிவடிவம், சாசனத்துத் தமிழ்மொழி, சாசனத்துத் தமிழ் பண்பாடு, சாசனத்துத் தமிழ் இலக்கியம், சாசனத்துத் தமிழ் வழக்காறுகள், சாசனத்துத் தமிழ் இலங்கை முதலிய தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மேலும், தமிழ்ச் சாசனக் கல்வி கற்போருக்கு மிகவும் உதவியாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூல் தமிழ்க் கல்வெட்டுகள் பற்றிய மிகச் சிறந்த அறிவியல் படைப்பாக விளங்குகிறது. மேலும் இந்நூல் கல்வெட்டுகளில் தமிழின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை விளக்குகிறது. கல்வெட்டுகளில் உள்ள தமிழ்வரி வடிவம், தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழ் இலக்கியம், தமிழ் வழக்காறுகள், இலங்கையில் கிடைக்கும் கல்வெட்டுகள் பற்றிய மதிப்பீடுகள் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளின் துணையுடன் மொழி, இலக்கியம் பற்றி ஆராயப்பட்டுள்ளது. கல்வெட்டில் உள்ள சொல், சொற்றொடர், செய்திகள் அடிப்படையில் மொழியமைப்பு, இலக்கணம் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நூலில் கல்வெட்டுகளின் துணைகொண்டு இலங்கையில் தமிழர்கள் பெற்றிருந்த செல்வாக்கு விளக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கல்வெட்டுகள் சிங்களம், தமிழ், பாலி ஆகிய மொழிகளில் வெட்டப்பட்டுள்ளது. இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் சிங்களக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களில் கிடைக்கும் தமிழ் கல்வெட்டுகளை அந்தந்த மாநிலத்தார் முதன்மையளிக்காமல் மறைப்பது போல் இலங்கையில் சிங்களக் கல்வெட்டுகளுக்கு முதன்மையும், தமிழ் கல்வெட்டுகளுக்கு முதன்மையின்மையும் உள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ்க்கல்வி தமிழ்ச்சாசன அறிவு இன்றிப் பூரணத்துவம் பெறாது. துமிழ் இலக்கிய வளத்துக்குத் தமிழ்ச்சாசன வளம் குறைந்ததன்று. தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள், தமிழ்ச்சாசனங்கள், தமிழ்நாடுத் தொல்பொருட் சின்னங்கள் என்பன பண்டைக்கால, இடைக்காலத் தமிழகத்தை அறிந்து கொள்வதற்கு வேண்டிய முக்கியமான மூன்றுவகை மூலாதாரங்களெனலாம். சாசனம் என்பது வடமொழிச் சொல், சாசனம் என்பதற்குப் பதிலாகக் கல்வெட்டு என்ற தமிழ்ச்சொல் வழங்கப்படுவதுண்டு, சாசனங்களில் மிகப்பெரும்பாலானவை கல்லில் வெட்டப்பட்டனவாதலால் இப்பெயர் வழக்குக்கு வந்திருக்க வேண்டும். கல்லில் வெட்டப்பாத செப்புப் பட்டயம் முதலியனவற்றையும் உள்ளடக்கக்கூடிய தமிழ்ச் சொல்லின்மையால், சாசனம் என்ற வடசொல் இங்கே எடுத்தாளப்படுகிறது.” என ‘சாசனமும் தமிழும்’ என்னும் நூலின் முகவுரையில் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பதிவு செய்துள்ளார்.

‘தமிழ் வரலாற்றிலக்கணம்’ என்னும் நூல், தமிழ் மொழியின் வரலாற்றிலக்கணத்தை ஆராய்ந்து கூறும் முதல் நூலாகும். இந்நூலில் தமிழில் பிறமொழி, எழுத்தியல், சொல்லியல், பெயரியல், வினையியல், இடையியல், பொருளிலக்கணம் முதலிய தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

‘ஈழத்துப் பழைய இலக்கியங்கள்: வரலாறு தேடல்’ என்னும் நூலில் ஈழத்து பழைய இலக்கிய வரலாறு இன்னும் நன்கு தெளிவுபடாத நிலையிலேயே காணப்படுகிறது. அந்தப் பழைய இலக்கிய வரலாற்றுக்கான தேடலே இந்த நூலிலே உள்ள கட்டுரைகள். தமிழகத்தையும், ஈழத்தையும் உள்ளடக்கிய பழைய ‘தமிழ் கூறும் நல்லுலகத்தைப் புரிந்து கொள்வதற்காக இந்திய-இலங்கை அரசியல் பண்பாட்டு இலக்கிய வரலாறுகளும், அண்மைக்காலத்திலே பிரபலமடைந்துவரும் தொல்லியல் கல்வெட்டியல் செய்திகளும் இந்தத் தேடலுக்குப் பயன்பட்டுள்ளன. இந்நூலில், தொடக்க கால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின்வரலாற்றுப் பின்னணியும், அரசகேசரியின் இரகுவம்மிசமும் அது எழுந்த இந்துப் பண்பாட்டுச் சூழலும், இலங்கைத் தமிழர்களின் கயிலாச பாரம்பரியம், கோணேசர் கல்வெட்டுப் பற்றிய நுண்ணாய்வு முதலிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

‘தமிழர் சமய வரலாறு’ என்னும் நூலில் சமய பொருளை விளக்க எழுந்து இலக்கியங்கள் உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் மொழியாலும் பலவாக விரிவாகின்றன. எவ்வெச்சமயப் பொருளை எவ்வெவ் இலக்கியம் எவ்வெவ் காலத்தில் எவ்வெவ்வாறு கூறியுள்ளது என்ற நோக்கிலே பல ஆராய்ச்சி நூல்கள் எழுகின்றன. இன்னும் எழ இடமுண்டு. இந்நூலில், சமய இலக்கியமும் கால மாறுதலும், புறநானூற்றில் நிலையாமை, தமிழ் நாட்டிற் சமணர், தமிழில் அற நூல்கள் எழுந்த காலம், வள்ளுவர் காட்டும் வாழ்க்கைத் தத்துவம், சைவமும் பௌத்தமும், சைவ மறுமலர்ச்சியும் சம்பந்தர் சமயப் பிரகாசமும், சிவபிரானுடைய அட்டவீரச் செயல்களும், ஞானசம்பந்தரும், அப்பர் சுவாமிகள் சமண சைவப் பாலம், அப்பர் தேவாரத்துள் சிவசூரிய வழிபாடு, நாயகன்-நாயகி பாவம், வைணவமும் தமிழும், சமண பக்திப் பாடல்கள், திருநூற்றந்தாதி, பௌராணிக மதமும் சமணமும் முதலிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது.

‘தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்’ என்னும் நூலில் தமிழ் சிந்தனையின் வரலாற்றையும், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக தோன்றிய தமிழிலக்கியங்களிலிருக்கும் கருத்துக்கள் ஆராயப்பட்டுள்ளது. இயற்கை நெறிக்காலம், அறநெறிக்காலம், சமய நெறிக்காலம், தத்துவ நெறிக்காலம், அறிவியல் நெறிக்காலம் ஆகிய ஐந்து காலப்பிரிவுகளின் ஊடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தந்தக் காலங்களில் சிறப்பு பெற்றிருந்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அத்தியாயங்களைப் பிரித்து அதில் ஆய்வு செய்துள்ளார். அதுவரை காலமும் அந்தந்தக் காலங்களில் ஆண்ட ஆட்சியாளரை அடிப்படையாகக் கொண்டே தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்பட்டு வந்தது. பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை எழுதிய நூலே ஒவ்வொரு காலப்பகுதிகளும் முதன்மைப் பெற்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் இலக்கிய வரலாற்றைக் கூறுகிறது. அத்துடன் இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு இந்நூலில் முதன்மை பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்களைத் தொகுத்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். தமிழ் ஈழத்தின் பழம் வரலாற்றை அறிய இவை அரிய மூலங்களாகும். ஆத்துடன் பாண்டியல் கல்வெட்டு மொழி பற்றிய இவரது ஆய்வேடு இடைக்காலத் தமிழ் மொழி வரலாற்றை அறியத் துணை செய்யும் ஒன்றாகும். தமிழில் வரலாற்றுக் கிளை மொழி ஆய்வில் முதல் நூல் என்று போற்றத்தக்கது, விரிவாக இவர் ஆய்ந்து திராவிட மொழியியல் கழகம் ‘கல்வெட்டில் தமிழ்க் கிளை மொழி ஆய்வு’ என்ற ஆராய்ச்சி நூலை ஆங்கிலத்தில் 1974 ஆம் ஆண்டு வெளியிட்டது. மேலும், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இவரது ‘கல்வெட்டுச் சான்றும் தமிழாய்வும்’ என்னும் ஆங்கில நூலை 1980 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை தமிழ், ஆங்கிலம், வடமொழி, மலையாளம், சுவீடிஷ் ஆகிய மொழிகளை நன்கறிந்தவர். மொழியியல், கல்வெட்டியல், தொல்லெழுத்தியல், சமயம், இலக்கியம், வரலாறு என்று பல்துறைகளிலும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார்.

பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை 1973 ஆம் ஆண்டு திராவிட மொழியியல் கழகம் வழங்கிய முதுநிலை ஆய்வு நிதியை ஏற்று ‘ கல்வெட்டுகளில் தமிழ்க்கிளை மொழி வழக்கு’ என்ற தலைப்பில் திருவனந்தபுரத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

ஸ்வீடனிலுள்ள புகழ்பெற்ற உப்சாலா பல்கலைக்கழகம் 31.05.1996 அன்று பேராசிரியர் ஆ .வேலுப்பிள்ளையின் பணிகளைப் பாராட்டிச் சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இது ஈழத்தமிழருக்கு மட்டுமல்லாது உலகத் தமிழர் அனைவருக்கும் பெருமதிப்பளிக்கக்கூடிய செய்தியாகும். “திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்” என்ற மகாகவி பாரதியின் இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்தார். மேலும், உப்சாலா பல்கலைக்கழகச் சமயவியல் புலத் தலைவர் பேராசிரியர் கார்ல் ரெயின்ஹோல்டு பிரேக் கென்ஹீயெல்ம் "உலகு அவாவும் உங்கள் புலமைத் திறத்தைப் போற்றி மகிழ்கிறோம். அடிமை நாடாவதற்கு முந்தைய தென்னிந்தியச் சமய வரலாறு பற்றிய தங்கள் ஆய்வுகள் அறிஞர் உலகத்திற்குச் சிறந்ததொரு விருந்தாகும்” என்று பாராட்டினார்.

தமிழகத்தில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளையை கலந்து கொள்ள மத்திய மாநில அரசுகள் அனுமதி மறுத்து திருப்பியனுப்பி வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.

இலங்கைச் சாகித்திய மண்டலப் பரிசு 1972 ஆம் ஆண்டு, பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை எழுதிய ‘சாசனமும் தமிழும்’ என்னும் நூலுக்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை 01.11.2015 அன்று தமது 79 ஆவது வயதில் சான்பிரான்சிஸ்கோவில் காலமானார்.

“கல்வெட்டாய்விலும் வரலாற்று மொழியியலாய்விலும் இவர் சிறந்த ஈடுபாடுடையவர். தமிழ்க் கல்வெட்டுக்களைப் பற்றி இவர் தனிப்பெரும் புலமை பெற்றவர். என சுவீடனில் உள்ள உப்சாhலா பல்கலைக் கழகப் பேராசிரியர் பீட்டர் ஹால்க் புகழ்ந்துரைத்துள்ளார்.

- பி.தயாளன்