நீங்கள் சம்பாதித்த பணத்தை ஒரு பைசா கூட எடுக்காமல் அப்படியே பொதுச்சேவைக்கு கொடுத்துவிட்டு விட முடியுமா உங்களால்?

நமக்கென்ன கிறுக்கா பிடித்திருக்கிறது? யாராவது அப்படி செய்வார்களா என்று நீங்கள் கேள்விகளை எழுப்பினால் அப்படி செய்யக்கூடிய ஒருவரும் இவ்வுலகில் இருக்கிறார் என்று யாருக்கேனும் தெரியுமா?

அவர் பெயர் பா.கல்யாணசுந்தரம். திருநெல்வேலியைச் சார்ந்த இவர் திருச்செந்தூர் கல்லூரி ஒன்றில் நூலகராக வேலை பார்த்து வந்தவர் அதில் கிடைக்கின்ற வருமானத்தை எல்லாம் பொதுசேவைக்காக கொடுத்துவிட்டு தனது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக திருநெல்வேலியில் உள்ள ஆர்யாஸ் ஹோட்டலில் இரவில் பரிமாறுபவராக வேலை பார்த்து வந்தார்.

என்ன உங்களால் நம்பமுடியவில்லையா..? ம் இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். இந்த விசயத்தை என்னால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவே முடியவில்லை. எல்லா மனிதர்களும் உழைப்பது தனது மற்றும் குடும்பத்தின் தேவைகளுக்காகத்தான் ஆனால் யாருடைய தேவைகளுக்காகவோ உழைக்கின்ற ஒரு மனிதர்தான் திரு பா. கல்யாண சுந்தரம்.

பாலம் என்ற ஒரு சமூக சேவை அமைப்பை உருவாக்கி பொதுச் சேவைகள் புரிந்து வருகின்றார். அது மட்டுமல்ல அவருக்கு அமெரிக்காவின் "மேன் ஆஃப் த மில்லியன்" என்ற விருதும் சுமார் 30 கோடி ரூபாய் பணமும் - கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் Most Notable Intellectual of the World என்ற பட்டமும்- ஐ.நா.சபையின் Outstanding People of the 20th Century என்ற கௌரவத்தையும் பெற்றவர்.

அமெரிக்கா கொடுத்த 30 கோடி ரூபாய் பணத்தையும் இவர் சர்வதேச குழந்தைகள் பல்கலைக் கழக அமைப்பிற்கு கொடுத்துவிட்டார் என்பதுதான் சாதாரண மனிதர்களுக்கெல்லாம் வயிற்றெரிச்சல் கிளப்புகிற விசயம்.

அப்துல்கலாம் - பில் கிளிண்டன் - நெல்சன் மண்டேலா - மன் மோகன் சிங் - கருணாநிதி - சரத் பவார் மற்றும் ஆளுனர் பாத்திமா பீவி - நீதிபதிகள் மற்றும் கல்வியாளர்கள் - சினிமா இயக்குநர்கள் - நடிகர்கள் என்று பலரது பாராட்டையும் பெற்றவர்.

நடிகர் ரஜினிகாந்த் இவரை தத்தெடுத்த கதையை சன்டிவியில் வணக்கம் தமிழகத்தில் பேட்டியின் போது கூட இவர் குறிப்பிட்டு கூறியிருந்தார்

என்ன நடிகர் ரஜினிகாந்த் தத்தெடுத்தாரா..? என்ன குழப்பமாக இருக்கின்றதா..? உண்மைதான் நடிகர் ரஜினிகாந்த் இவரது பணிகளைக் கண்டு தனது தந்தையாக அவரை தத்தெடுத்துக் கொள்வதாக அறிவித்தார். நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு எந்த நேரத்திலும் சாதாரணமாக சென்று வருபவர். அவரது மனைவி லதாவால் செல்லமாக "அப்பா அப்பா" என்று அழைக்கப்படுபவர்.

இப்படி உயர்ந்த விருதுகள் மற்றும் புகழ்பெற்றவர்களால் கௌரவிக்கப்பட்ட பா. கலியாணசுந்தரத்தை சாதாரணமாக அடையாறு - பட்டினப்பாக்கம் சாலைகளில் மக்களோடு மக்களாக தனிப்பட்ட அடையாளங்கள் எதுவும் இல்லாமல் நடந்து செல்வதைப் பார்க்ககூடும். மனிதர்களோடு மனிதர்களாக இவர் சென்றாலும் இவர் மனித உணர்வுகள் - எண்ணங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்

நான் இவரை 2001 ம் ஆண்டு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது நண்பனுடன் இணைந்து வெளியிட்ட கவிதை புத்தகத்திற்கு அவர் மூலமாக பார்த்திபன் - வைரமுத்து போன்றோர்களிடம் விமர்சனம் வாங்குவதற்காக அவரைச் சந்திக்க சென்றோம்.

சென்னையில் அவரைச் சந்தித்து கவிதைப்புத்தகத்திற்கு விமர்சனம் வாங்குவதற்காக வைரமுத்து மற்றும் பார்த்திபனை காண வேண்டும் என்று கேட்டபொழுது, " முதலில் நீங்கள் பாலம் அமைப்பில் உறுப்பினராகுங்கள்" என்று கேட்க நாங்கள் உறுப்பினராகி மாதச் சந்தாவாக ஒரு சிறிய தொகையைக் கொடுத்தோம்.

பின்னர் அவர் விமர்சனம் வாங்கித்தருவதாகவும் "நீங்கள் என்னுடனேயே தங்குங்கள்" எனவும் கூறினார். நாங்களும் அவருடன் தங்குவதற்கு சம்மதித்துவிட்டு அவருடைய சமூக சேவை அலுவலகத்தில் காத்திருந்து இரவில் அவருடன் பக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றோம். வழியில் நீதிக்கதைகள், போதனைகள் என்று கூறிக்கொண்டே வருவார்.

காலில் ஒரு பிய்ந்து போன செருப்பு - ஒரு ஜோல்னாப்பை சகிதமாக தனது வேட்டியை மடித்துக் கொண்டு எங்களோடு நடக்க ஆரம்பித்தார் .

எங்களுக்கு பெருமையாக வந்தது. பின்னே ரஜினி அப்பாவாக தத்தெடுத்த ஒருவர் எங்களோட சகஜமாக பேசிக்கொண்டு வருகின்றார் என்றால் சும்மாவா..? ரஜினியே எங்களோடு நடந்து வருவது போன்ற உணர்வு. அங்கேயும் இங்கேயும் திரும்பி பார்த்துக்கொண்டேன் யாராவது நம்மை கவனிக்கிறார்களா என்று.

நான் நண்பன் ராஜாவிடம்

"என்னடா இவ்வளவு பணம் வைத்திருக்கின்றார் - விருதுகள் வாங்கியிருக்கின்றார் ஆனால் நம்மோடு சாதாரணமாக நடந்து வருகிறாரே..அவருக்கு கார் இல்லையா"

என்று கேட்க அவன் மெல்ல அவரிடம் கேட்டுவிட்டான்

"ஐயா உங்களுக்கு கார் ஏதும் இல்லையா ?"

"எதுக்குப்பா கார்...என்னால நடக்க கூடிய சக்தி இருக்கு நடக்குறேன்.. அது மட்டுமல்ல பொதுப் பணத்தை எதுக்கு வீண்விரயம் பண்ணணும்" என்று சாந்தமாக பதிலளித்து விட்டு ஒரு ஓட்டலுக்குள் நுழைகின்றார்.

எங்களுக்கும் பசியெடுத்தது. நாங்களும் அவருடன் சென்று சாப்பிடுகின்றோம்
அவர் இரண்டு இட்லி மட்டும் சாப்பிடுகின்றார். நாங்கள் தோசை - ஆம்லெட் சாப்பிடுகின்றோம்.

சாப்பிட்டு முடிந்தவுடன் நான் பில் கொடுப்பதற்காக பணத்தை நீட்டுகின்றேன். ஆனால் நானும் நண்பர் ராஜாவும் சாப்பிட்டதற்கு மட்டும் பணம் வாங்குகிறார்கள். பா.கலியாணசுந்தரம் அவர்கள் சாப்பிட்டதற்கு பணம் வாங்கவில்லை.

ஒருவேளை அவரைப்பற்றி தெரிந்து அவர் சாப்பிட்டதற்கு பணம் வாங்க மறுக்கிறார்களோ என நினைத்தேன். ஆனால் அவரோ சாப்பிட்டு முடித்துவிட்டு அவர் சாப்பிட்டதற்கு மட்டும் காசு கொடுத்துவிட்டு வெளியே அமைதியாய் வெளியேறிக் கொண்டிருக்கின்றார்.

எங்களுக்கோ அதிர்ச்சி.."என்னடா ஒன்றாக இருந்துதானே சாப்பிட்டோம்". நாம் நண்பர்களுடன் ஒன்றாக சாப்பிடும்பொழுது என்ன செய்யக்கூடும்? ஒன்று நாம் அனைவருக்கும் சேர்த்து பில் கொடுப்போம். இல்லையென்றால் நண்பர்களில் எவரேனும் நமக்கும் சேர்த்து பில் கொடுப்பார்கள். இப்படித்தான் பழகியிருக்கின்றேன்..

ஆனால் முதன் முறையாக ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அவர் மட்டும் தனியே கொடுத்து விட்டு வெளியேறுவதை காண எனக்கு ஆச்சர்யமாகவும் இருந்தது அவர் மீது இன்னமும் மதிப்பு அதிகமாகவும் வந்தது.

நானும் ராஜாவும் ஒருவருக்கொருவர் லேசான சிரிப்புடனும் ஆச்சர்யத்துடனும் பார்த்துக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்து நடந்தோம்.

நாய்களின் குரைப்புச் சப்தத்திற்கிடையே பட்டினப்பாக்கத்தின் இருட்டுப்பகுதியில் ஒரு சந்து வழியாகச் சென்றுகொண்டிருக்கின்றோம். அப்பொழுது நான் ராஜாவிடம்

"டேய்! சுத்தி நாய் குரைக்குதுடா..பயமா இருக்குது..இப்போது நாய் துரத்தினா அவரால ஓடமுடியாதுடா நாமதான்டா அவரைக் காப்பாத்தணும்.. "

"அவருக்கு என்ன பயம்..அவர் தினமும் இந்த வழியாகத்தான் போவாரு அதனால் நாய்கள் எல்லாம் பழகியிருக்கும்..நாமதான்டா ஓடணும்.. "

நாங்கள் பயந்தபடியே அவரைப் பின்தொடர அவருக்கும் எங்கள் உரையாடல் கேட்டதோ என்னவோ லேசாக புன்னகைப்புரிந்தபடியே,

"சீக்கிரம் வாங்கப்பா..நாய் ஒண்னும் செய்யாது " என்று கூறியபடியே மெல்ல பேச்சு எடுத்தார் . "இந்த பாலம் அமைப்புக்காக நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு நிதி சேர்க்கிறோம் தெரியுமா..?" என்று கூறி அவர் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்தபடியே வந்தார்.

அவர் அப்படி கூறுவது எதற்காகவென்றால் அவர் சாப்பாட்டுக்குண்டான பில்லை அவர் மட்டும் கொடுத்து விட்டு வந்ததை நாங்கள் தவறாக எடுத்துக்கொள்வோமோ என்று எங்களின் மன நிலையை அறிந்து விளக்கம் கொடுப்பதற்காக இருந்திருக்கலாம்.

தினமும் யாருக்காவது ஏதாவது சின்ன சின்ன உதவிகளாவது செய்ய வேண்டும் என்று இறுதியாக அறிவுரை வழங்கிவிட்டு அவரது அறைக்குச் சென்றுவிட்டார்.

அவரைப்பற்றி நினைக்க நினைக்க ஆச்சர்யமாக இருந்தது. எப்படி ஒரு மனிதரால் இப்படியெல்லாம் மனித இயல்புகளை மீறி இருக்க முடியும். தனது தேவைகளுக்காக உழைப்பவர்களுக்கு மத்தியில் பொதுநலத்திற்காக உழைத்துக் கொண்டும் மிகப்பெரிய தொகை கிடைத்தும் அதனை எளிதாக சமூக சேவைக்காக எடுத்துக் கொடுத்தும் இவரால் இவ்வளவு எளிமையாக இருக்க முடிகின்றது.

இரவில் அவருடைய அறையில் ஹாலில் படுத்துக் கொண்டோம் . எங்களைப்போல ஏதோ உதவி கேட்டு வந்த சிலரும் அந்த ஹாலில் படுத்துக்கிடந்தார்கள். இரவில் அவருடைய மனிதநேயம் - குழந்தைகளுக்கு அவர் உதவும் தன்மை - பொதுநலச்சேவை தன்னுடைய சம்பளப் பணத்தை முழுவதும் பொதுச்சேவைக்கு தந்துவிட்டு தன்னுடைய வருமானத்திற்கு சர்வராக வேலை பார்த்தது என்ற எல்லா விசயங்களையும் நாங்கள் அலசினோம்.

மறுநாள் காலையில் அவர் சந்திக்கச்சொன்ன சில நபர்களைச் சந்தித்துவிட்டு அவரது அலுவலகம் வந்தபொழுது அவர் கேட்ட கேள்வி இதுதான்:

"இன்று என்ன என்ன உதவிகள் எல்லாம் செய்தீர்கள்? "

எங்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஏதும் உதவிகள் செய்யவில்லை என்று கூறினால் வருத்தப்பட்டு விடுவாரோ என்று எண்ணி யோசித்தோம் என்ன உதவி செய்தோம்

உடனே எனக்கு ஞாபகம் வந்து அவரிடம் இன்னைக்கு பஸ்ல ஒரு ஆளுக்கு எழுந்து இடம் கொடுத்தேன் என்று சொல்ல அவர் சிரித்துக் கொண்டே "ம் அதுவும் ஒருவகையில் உதவிதான். நீ என்ன உதவி செய்தாய் " என்று எனது நண்பர் ராஜாவிடம் கேட்க அவன் எதுவுமே சொல்லவில்லை .

உடனே அவர் "பரவாயில்லை! இதுபோல சின்ன சின்ன உதவிகள் கூட நீ செய்யலாம் சரியா" என்று அவனிடம் கேட்டுக்கொண்டார்

எனக்கு அவரை ஒரு சாதாரண மனிதப் பார்வையில் பார்க்கவே முடியவில்லை. இப்படியெல்லாம் நடக்கின்ற மனிதர்கள் கூட இருப்பார்களா என்ன? மனிதர்கள் இல்லாத பகுதியைத் தாண்டி ஒரு வித்தியாசமான உலகத்திற்குள் இருப்பதாகவே எனக்குள் தோன்றியது.

அதுவும் திருமணம் செய்தால் சொந்தம் - பந்தம் - பணம் பிரச்சனை என்று சாதாரண மனித வட்டத்திற்குள் நாமும் வந்துவிடுவோமோ யாருக்கும் உதவிகள் செய்யமுடியாமல் போய்விடுமோ என்று பயந்து திருமணம் செய்து கொள்ளாமலையே வாழ்பவர்.

நானும் நண்பரும் சுமார் ஒருவார காலங்கள் அவர் அலுவலகத்திற்கும் அவரைச் சுற்றியும் அலைந்து கொண்டிருந்தோம். அவருடைய நடவடிக்கை - மற்றவர்களுக்கு உதவும் பண்பு- சுயநலமில்லாத நடவடிக்கை - தேடி வருபவர்களிடம் அவர் காட்டுகின்ற கண்ணியம் இப்படி எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டே இருந்தோம்.

யானை
கடல் அலை
இரயில்
இவற்றை
ரசித்துக்கொண்டே இருக்கும்
குழந்தைகள் போல
அவரை ரசித்துக்கொண்டிருப்பதில்
எங்களுக்குள் ஓர் ஆனந்தம்

கண்டிப்பாக இதுபோன்ற மனிதர்கள் அடையாளம் காணப்பட்டு அரசாங்கத்தால் வருங்கால தலைமுறையினர்களுக்காக பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும். பணம் மட்டுமே உலகமாய் எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் இந்தக் கல்யாண சுந்தரத்தின் வாழ்க்கைதான் ஒரு முழுமைப் பெற்ற பாடம்.

இவருடைய குரல் லேசான கீச்சுக்குரலில் பெண் குரல் போல இருக்கும். ஒருவேளை இவரை மற்ற சாதாரண மனிதர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துவதற்காக இறைவன் அவ்வாறு கொடுத்து விட்டானோ எனத் தெரியவில்லை.

இந்த நேரத்தில் சதக் கல்லூரி பேரா. மகாதேவன் அவர்கள் எழுதிய இந்த வரிகள் ஞாபகம் வருகின்றது

ஊதுபத்தியாய் ஊருக்கு உழைத்தால்
மரணித்த பிறகும் மணத்தோடு வாழலாம்.


- ரசிகவ் ஞானியார்

Pin It