நவீன காலத்திற்கு முன்பாக தமிழக வரலாற்றின் போக்குகளை அறிவதற்கு கோயில்களின் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் முதன்மைச் சான்றுகளாக அமைகின்றன. 1948க்கு முன்புவரை புதுக்கோட்டை சமஸ்தானமாயிருந்த புதுக்கோட்டை வட்டாரத்தில் சுமார் 1200 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் கிறிஸ்து சகாப்தம் தொடங்கி 1800 வரைக்கும் ஆகும். சில கல்வெட்டுகளின் காலத்தினைத் துல்லியமாக கணிக்க இயலவில்லை. பல கல்வெட்டுகள் 1600-1800 காலகட்டத்தினைச் சார்ந்தவை.1 அவற்றுள் ஒன்று இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தின் குளத்தூர் வட்டத்தில் மலையடிப்பட்டி என்ற ஊரிலுள்ள ஒரு குகைக்கோயிலில் பொறிக்கப் பட்டுள்ளது. அவ்வூரின் பாறைக்குன்றுகளில் அரச கடவுளர்களான சிவனிற்கும் விஷ்ணுவிற்கும் தனித் தனியே தலா ஓரொரு குகைக்கோயில் உருவாக்கப் பட்டுள்ளது. இங்கு பேசப்படும் கல்வெட்டு சிவனிற்காக உருவாக்கப்பட்ட வாகீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ளது.2
இகல்வெட்டில் மலையடி(ப்பட்டி), பூச்சகுடி, திருநெடுங்குளம், ஆவுடையான்குடிக்காடு என்று நான்கு இடப்பெயர்கள் சுட்டப்பட்டுள்ளன. வாகீஸ்வரஸ்வாமி, வடிவுள்ள மங்கை என்ற இருகடவுளர்கள் குறிக்கப்பட்டுள்ளனர். இவையன்றி ஒருபெண் (இவர் திருநெடுங்குளம் தேவடியாள்3 என்று குறிக்கப்படுகிறார்) ஓர் ஆண் (இவர் பிராமணன் என்று குறிக்கப்படுகிறார்) என இருவர் குறிக்கப்படுகின்றனர். மூன்றாவதாக, பூச்சகுடி எனுமிடத்திலிருந்த ஆவுடையா தேவர் என்றொருவர் குறிக்கப்பட்டுள்ளார்; இவர் ஆவுடையான் என்றும் சுட்டப்பட்டுள்ளார்.கல்வெட்டுச் செய்திகளின் அடிப்படையில் இம்மூவரும் மலையடிப்பட்டியில் அமைந்துள்ள வாகீஸ்வரஸ்வாமி கோயிலோடு தொடர்புடையவர்கள் போல அறிய முடிகிறது. இக்கல்வெட்டுச்செய்திகள் ஆவுடையான் வாய்மொழியால் அமைகிறது.
அதாவது காணியுரிமை உடைய பூச்சகுடி எனுமிடத்தில் வசித்து வந்த ஆவுடையான், திருநெடுங்குளம் எனுமிடத்திலிருந்த தேவடியாள் வீட்டிற்குப் போயிருந்தபோது (போயிருக்கச்ச என்பது கல்வெட்டுப்பாடம்) அப்பெண் ஏற்கனவே ஒரு பிராமணனை தம் வீட்டிற்குள் அழைத்து வந்திருந்தார் என்பதனை ஆவுடையான் அறிந்து கொண்டார். உடனே அவ்விருவரையும் வெட்டிப் போட்டுள்ளார் (ரெண்டு பேரையும் வெட்டிப் போட்டு என்பது கல்வெட்டுப் பாடம்). திருநெடுங் குளத்தில் அவ்விருவரையும் வெட்டிப் போட்ட ஆவுடையான் நேரே மலையடிப்பட்டிக்கு வந்துள்ளார். அப்போது, அங்கு அவருக்கு இரண்டு கண்களும் தெரியாமல் போனதாகவும் கூறுகிறார். அவ்விருவரையும் வெட்டிப் போட்டதால் கண்கள் தெரியாமல் போயின என்று குறிப்பிடுகிறார். (புரிதலுக்காக, அவர்களை வெட்டிக் கொலை செய்தார் என்று பொருள் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது). இச்செயலைப் பாவமாக உணர்ந்த ஆவுடையான் இத்தோஷத்திலிருந்து விடுபட அல்லது இதனை நிவர்த்தி செய்வதற்கு அல்லது அப்பாவத்திலிருந்து மீள்வதற்கு முடிவெடுக்கிறார். எனவே, தன்னுடைய காணிநிலமான ஆவுடையான் குடிக்காடு என்ற நிலப்பகுதியினை வாகீஸ்வரஸ்வாமி, வடிவுடைமங்கை என்ற கடவுளர்களுக்கு கொடுப்பேன் என்று வேண்டிக் கொண்டவுடன் கண்பார்வை தெரிஞ்சது என்கிறார். கண் தெரிஞ்சபடியினாலே நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட ஆவுடையான் குடிக்காடு என்ற காணிநிலத்தினை கடவுளர்களுக்கு கொடையளித்து கல்வெட்டிக் கொடுத்துள்ளார்.
இக்கல்வெட்டுச் செய்திகளை அறியும்போது சில கேள்விகள் எழுவது இயல்பு. பூச்சகுடியில் இருந்த ஆவுடையான் திருநெடுங்குளத்தின் தேவடியாளையும் அவருடன் இருந்த பிராமணனையும் ஏன் வெட்டிப் போடவேண்டும்? ஆவுடையான் ஏன் தேவடியாள் வீட்டிற்குச் செல்லவேண்டும்? அங்கு அப்பெண் ஏன் ஒரு பிராமணனை தம் வீட்டில் அழைத்து வைத்திருக்க வேண்டும்? ஆவுடையான், அவர்கள் இருவரையும் வெட்டிபோட்டு திருநெடுங்குளத்திலிருந்து மலையடிப்பட்டிக்கு வரும்வரை இரு கண்களிலும் எப்படி பார்வை இழந்தார்? கடவுளர்களுக்கு என்னுடைய வயல் கல்போட்டுக் குடுக்குறோம் என்று அவர் வேண்டியவுடனேயே ஆவுடையானுக்கு இரண்டு கண்களுக்கும் பார்வை தெரிஞ்சது எப்படி? காணியுடைமையாளரான ஆவுடையான் மனிதர்களை வெட்டிப்போடும் உரிமையினை பெற்றது எப்படி? ஒரு தேவடியாளையும் ஒரு பிராமணனையும் வெட்டிப் போட்டால் கண்களின் பார்வை போகுமா? இக்கேள்விகளுக்கான விடைகளை எண்ணுவது இக்கட்டுரையினை வாசிக்கும் நபர்களின் மனத்திற்கே விடப்படுகின்றன.
இங்கு ஆவுடையானின் செயல்கள் பின்வருமாறு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
1. திருநெடுங்குளத்தில் இருந்த தேவடியாளின் வீட்டிற்குப் போகுதல். 2.அங்கு தேவடியாளும் பிராமணனும் இருப்பதனை அறிதல். 3.அவ்விருவரையும் வெட்டிப் போடுதல் (கொலை செய்தார் என்று கருதலாம்). 4. ஆவுடையான் திருநெடுங்குளத்திலிருந்து மலையடிப்பட்டிக்கு வருதல். 5. மலையடிப்பட்டியில் தம் இரண்டு கண்களுக்கும் பார்வை இல்லாமல் போனதாக உணர்தல். 6. வெட்டிப் போட்டதனை தோஷமாக / பாவமாகக் கருதி கடவுளர்களுக்கு நிலம் கொடுப்பதாக வேண்டிக் கொள்ளுதல். 7. வேண்டிக் கொண்டவுடனேயே இரண்டு கண்களுக்கும் பார்வை வந்ததாக உணர்தல். 8. தோஷம் நீங்கி கண்பார்வை பெற்றதனை உணர்ந்தவுடன் காணிநிலத்தினை கடவுளர்களுக்கு கல்வெட்டிக் கொடுத்தல்.
ஆவுடையானின் இச்செயல்களை உளவியல் ரீதியாக அணுக வேண்டியுள்ளது. உளவியலின் தந்தை எனப்படும் Sigmund Freud மனித மனத்தினை மூன்று அடுக்குகளாகப் பிரிக்கிறார். id என்ற இச்சை மனம். இது மனத்தின் முதல் அடுக்கு. இவ்விச்சை மனத்தின் விருப்பத்தினை நிறைவேற்றத் துடிக்கும் ego வான தன்முனைப்பு உணர்ச்சி இரண்டாம் அடுக்கு. மனத்தின் முதல் அடுக்கின் (id) விருப்பத்தினை நிறைவேற்றத் துடிக்கும் (ego என்ற) தன்முனைப்பு மனத்தின் செயற்பாட்டினை super-ego என்ற மூன்றாம் அடுக்கு தடுக்கும். மனித மனத்தின் இந்த மூன்றாம் அடுக்கு சமூகத்தில் தேங்கியிருக்கும் பண்பாட்டின் அடிப்படையில் egoவின் செயற்பாட்டினை தடுத்துக் கொண்டேயிருக்கும். இந்த ego, super-ego அடுக்குகளுக்கு இடையே நிகழும் போராட்டத்தில் ego அடுத்து இரண்டாக உடையும். அவற்றுள் உடைந்த ஒரு பகுதி இங்கு குற்ற உணர்ச்சிக்கு (guilt conscious) ஆளாகிறது. ஆனால், அது சமூகத்தில் கட்டமைக்கப்பட்டு படிமமாகிப் போன பண்பாட்டுச் சூழலிற்கு அஞ்சி மனிதனை தன்னையே துன்புறுத்திக் கொள்ள வைக்கிறது. எனவே, இம்மனச்சிக்கலில் இருந்து மனிதன் தப்பிக்க முயல்கிறான். பண்பாட்டிற்கு அடிபணிந்து அதிலிருந்து விலகவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் தடுமாற்றத்திற்கு உட்பட்டு தப்பிக்கும் முயற்சியில் தோற்கும்போது படிந்துபோன பண்பாடு தான் கழிவிரக்கமாகி துன்புறுத்தலில் இருந்து மனிதனைக் காக்கின்றது.
மேற்சொல்லப்பட்ட கருத்துருவின் பின்னணியில் பூச்சகுடியின் காணி நிலவுடைமையாளரான ஆவுடையானின் செயல்களை விளங்கிக் கொள்ளலாம்.
இந்தியப் பண்பாட்டில், குறிப்பாகத் தமிழ்ப் பண்பாட்டில் அண்மைக் காலம் வரை பிராமணச் சமூகத்தின் ஆண் நபர்களை ஸ்வாமி என்று அழைக்கும் வழக்கம் உண்டு. இன்றும் கோயில் குருக்களை/ பூசாரிகளை ஸ்வாமி என்று அழைக்கும் வழக்கம் பக்தர்களிடையே உண்டு. தமிழ்ச்சூழலில் ஆண் கடவுளர்கள் தந்தை என்றும் அழைக்கப் படுகின்றனர். தமிழ் பக்தி இலக்கியங்களில் ஆண் கடவுளர்கள் தந்தை என்று போற்றப்படுவதனை பரக்கக் காணலாம்.4 கடவுளிடம் வேண்டி வேண்டப் படுவது கிட்டாதபோது கடவுளைத் தூற்றும் மனப்பாங்கும் மனிதரிடம் உண்டு. தமிழக வரலாற்றில் கடவுளர்கள் பெருநிலக்கிழார்களாக இருந்தமையை கல்வெட்டுகள் விளக்கும். சில சந்தர்ப்பங்களில் கடவுளர்களுக்கு அடியார்களாக விளங்கிய சில கோயில்பெண்டிரும் பெருஞ் செல்வராயிருந்தனர்.5 இங்கு கல்வெட்டில் பேசப்பட்ட மூவரும் கோயிலோடு நேரடியாக தொடர்புபடுத்தப் பட்டுப் பேசப்படவில்லையெனினும் வெட்டப் பட்ட இருவருக்காக ஆவுடையான் கோயிலுக்கு காணிநிலத்தினைக் கொடையளித்தது கோயிலுக்கும் அவர்களுக்குமான தொடர்பினை உறுதிப்படுத்தும். எனவே, கல்வெட்டில் சுட்டப்பட்ட பெண் கோயில் பெண்டிர் என்று சொல்லத் துணியலாம். வெட்டப்பட்ட பிராமணனும் கோயிலில் பணியாற்றி வந்திருப்பார் என்று நம்பலாம். எனவே, அவர்களிடையேயான அலுவல்நிலை உறவினை கல்வெட்டு மறைமுகமாக வெளிப்படுத்துகிறது எனலாம்.
தமிழகத்தின் இடைக்காலத்திய வரலாற்றில் ஆண்கடவுளர்கள் தந்தையாக அணுகப்பட்டனர் என்று முன்பு குறிக்கப்பட்டது. கோயில் பெண்டிர்கள் கடவுளர்களுக்கு மனைவியாக கருதப்பட்டதால் பொதுப்புத்தியில் பக்தர்களுக்குத் தாயாகவும் அமைகின்றனர். பெண்கடவுளர்கள் தாயார் என்று வணங்கப்படுகின்றனர். பத்மாவதி தாயார் இங்கு மனங்கொள்ளத்தக்கவர். வழக்கில், கடவுளும் பிராமணனும் ஸ்வாமி என்று அழைக்கப்படுவதால் பிராமணன் கடவுளுக்குப் பதிலியாக அதாவது தந்தைக்குப் பதிலியாக கருதப்படுகிறார். கோயில் பெண்டிர், அதாவது கல்வெட்டில் குறிக்கப்பட்ட தேவடியாள் தாய்க்குப் பதிலியாக அமைகிறார்.
எனவே, Sigmund Freud வகுத்த Oedipus complex கோட்பாட்டின் நனவிலிப்படி மகன் தாயீர்ப்பு காரணமாகத் தன் தாயினை அடைவதற்குத் திருநெடுங்குளம் செல்கிறார். ஆனால், தந்தை தடையாக இருக்கிறார். எனவே, அவர் வெட்டப் படுகிறார். தன் உடைமையான தாய், மகனின் விருப்பமின்றி தந்தையின் உடைமையானதால் அவரும் வெட்டப்படுகிறார். தாயும் வெட்டப் பட்டதால் மகன்நிலையில் இருந்த ஆவுடையானின் மனம், குற்றஉணர்ச்சிக்கு ஆளாகிறது. அதனால், ego மனத்திற்கும் super-ego மனத்திற்கும் இடையிலான போராட்டத்தில் ஆவுடையானின் மனம் துன்புறுகிறது.
தமிழ்ச் சமூகத்தில் தாயினைக் கொல்வது மரபன்று. ஆனால், இங்கு தாய் கொல்லப்படுவதன் மூலம் தாயின் உடல் மீதான தந்தையின் உரிமை ஒழிகிறது. இங்கு ego மனம் வெல்கிறது. என்றாலும், பண்பாட்டில் படிந்த super-egoவிடம் தோற்று ego மனம் guilt conscious (குற்றவுணர்ச்சி) அடைகிறது.
தாய் சொல்லைத் தட்டாதே, தாயிற் சிறந்த கோயில் இல்லை போன்ற படிந்திருக்கும் பண்பாட்டு உணர்ச்சி இந்த கொலைப் பாதகத்தில் இருந்து மீள்வதற்கு முயல்கிறது. எனவே, ஆவுடையான் வெட்டுபட்ட கோயில்சார்ந்த இருவருக்கு ஈடாக தம் காணிநிலமான ஆவுடையான்குடிக்காடு6 என்ற நிலத்தினையும் அதில் உழைக்கும் மக்களையும் கோயிலுக்குத் தானமாக்கினார். அதனால் ஓர் ஊரே (an agricultural unit) கோயிலுக்கு உடைமையானது. இதனால் ego மனமும் super-ego மனமும் சமனடைகிறது. ஆவுடையானின் மனப்போராட்டம் அமைதி யடைகிறது. இரண்டு கண்களுக்கும் பார்வை தெரிஞ்சு போகிறது. 7
குறிப்புகள்
1. புதுக்கோட்டை வட்டாரக் கல்வெட்டுகள் புதுக்கோட்டை சமஸ்தானம் வெளியிட்ட Inscriptions of Pudukottai எனும் கல்வெட்டுத் தொகுப்பில் கிடைக்கும். பாறைகளிலும், கோயில் சுவர்களிலும் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டுகளைப் படியெடுத்து வெளியிடுதலில் பலரும் இயங்கியுள்ளனர். T.A.கோபிநாதராவ், V.வெங்கைய்யா போன்றோர் கல்வெட்டுகளைப் படியெடுத்தல், படித்தல், பதிப்பித்தல் போன்ற நிலைகளில் சமஸ்தானத்து அரசுக்கு வழிகாட்டியுள்ளனர். பதிப்பிக்கும் முன்பு S.கிருஷ்ணசாமி அய்யங்கார் கல்வெட்டுப் பாடங்களை சரிபார்த்துள்ளார். கல்வெட்டுகளின் காலத்தினை கணிப்பதில் L.D.சாமிக்கண்ணு பிள்ளை உதவியுள்ளார். அண்மையில் கரு.இராஜேந்திரன் புதுக்கோட்டை வட்டாரத்தின் சில கல்வெட்டுகளைப் பதிப்பித்துள்ளார். கரு.இராஜேந்திரன், புதுக்கோட்டை வட்டாரக் கல்வெட்டுகள் (புதிய கண்டுபிடிப்பு), பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வுமையம், மதுரை, 2017. இந்நூலில் 232 கல்வெட்டுகள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை குமிழி, மடைகள் பற்றியவை.
2. IPS.No.904. வாகீசர் என்பது தேவார மூவர்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் பெயர்களில் ஒன்று. ஆனால், அப்பெயர் அவர் சமணராயிருந்தபோது வழக்கில் இருந்த ஒன்று.
3. தமிழகத்தின் இடைக்காலத்திய தமிழ்க் கல்வெட்டுகள் கோயில் பெண்டிரை தேவரடியார் என்று சுட்டும். இச்சொல், காலனிய காலத்தில் கொச்சையாக தேவடியாள் என்று மருவியது. சோழர் வீழ்ச்சிக்குப்பின், 1300-1700 காலகட்டத்தில் கோயில் பெண்டிரின் நிலை மாறியது பற்றி ஆராயப்பட்டுள்ளது. பார்க்க: Leslie C.Orr, Donors, Devotees, and Daughters of God: Temple Women in Medieval Tamilnadu, OUP.Oxford.2000 அண்மையில் தமிழகத்தில் தேவதாசிகள் என்ற தலைப்பில் வெளியான நூல் காலந்தோறும் தமிழகத்தில் கோயில் பெண்டிர்களின் நிலை சமூக, பொருளியல் தளத்தில் எவ்வாறு இருந்தது என்று வாதிக்கிறது. அந்நூல் கோயில்பெண்டிர்கள் பல சொற்களால் சான்றுகளில், குறிப்பாக கல்வெட்டுச் சான்றுகளில், சுட்டப்படுவது பற்றி பேசுகிறது. அவற்றுள் தேவடியாள் என்ற சொல்லும் ஒன்று. அந்நூலின் அத்தியாயம் பத்து, முழுக்க முழுக்க 1600-1800 காலகட்டத்தில் கோயில்பெண்டிரின் சமூக, பொருளியல் நிலை தாழ்வுற்றது பற்றி விவரிக்கிறது. அக்கால கட்டத்தில், இப்பெண்டிர்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் இடையில் நிலவிய உறவும் அலசப்படுகிறது. கால ஓட்டத்தில் தேவரடியார் என்ற சொல் பொருள் திரிந்து தேவிடியார், தேவடியாள் என்று வக்கிரமான சொல்லாக மாறியது என்றும் மதிப்பிடுகிறது. அப்படித் தான், மலையடிப்பட்டி கல்வெட்டில் சுட்டப்பட்ட கோயில்பெண்டிர் தேவடியாள் என்று சுட்டப்பட்டார் என்ற முடிவிற்கு அந்நூலாசிரியர் வருகிறார். பார்க்க: கே.சதாசிவன், தமிழகத்தில் தேவதாசிகள் (தமிழாக்கம்: கமலாலயன்), அகநி வெளியீடு, சென்னை, 2013.பக்.260-293.
4. கடவுளர்கள் தந்தை என்று மட்டுமல்ல மைந்தன் என்றும் வணங்கப்பட்டுள்ளனர். சம்பந்தர் இவ்விருமுறைகளிலும் சிவனைப் போற்றுகிறார். அவை: எந்தை, எந்தையன், எந்தை பெருமான், எந்தைபெம்மான், யெந்தை எம்பெருமான்; மாதர்மைந்தர், வேற்கண்மாதர் மைந்தர், மலைநிலா உலாவிய மைந்தன் என்றும் விளிக்கப் படுகிறார். தாயனே தந்தையுமாகிய என்றும் எந்தை பெம்மன் என்றும் எந்தையீசன் எம்பெருமான் என்றும் சம்பந்தர் சிவனைப் போற்றுகிறார். திருவாய்மொழியில் இறைவன் தந்தை சடகோபன், முதல்தாய் சடகோபன், தாயோன் எல்லாவெவ்வுயிர்க்கும்தாயோன், என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தை யாயறியான அறிவித்த அத்தா என்று போற்றப்படுகிறார். திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய தேவாரம் (தலமுறை), திருப்பனந்தாள், 2001. ஸ்ரீ: நாலாயிர திவ்யப் பிரபந்தம், இருபாகம், தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, சென்னை, 1993.
5. IPS:.No.366; 367. இசைக்கல்வெட்டிற்குப் பெயர் பெற்ற இன்று குடுமியான்மலை என்று அறியப்படும் திருநலக்குன்றம் என்ற ஊரில் அமைந்துள்ள திருநலக் குன்றமுடைய நாயனார் கோயில் என்ற சிவன் கோயிலில் திருக்காமக்கோட்டத்து நாச்சியாராக அருவுடைமலை மங்கை என்ற பெண்கடவுளை நிறுவியவர் அவ்வூரின் ஊர்த்தேவரடியாரில் ஒருவரான துக்கையாண்டி என்பவரின் மகள் நாச்சியார் ஆவார். இது, ஒரு கடவுளை நிறுவுகிற அளவிற்கு தேவரடியார்கள் செல்வாக்கு பெற்றிருந்தனர் என்பதையே காட்டுகிறது. இப்பெண்கடவுளரை நிறுவுவதற்கான பொருட்செலவான காசு 73,300க்காக கோயில் தானத்தார் முன்வந்து விற்ற நீர் நிலத்தினை அந்நாச்சியார் வாங்கியுள்ளார். இந்நில விற்பனையினை கோயில்தானத்தார், கோயில் கணக்கர், தேவகன்மி, கைக்கோளர், காண்காணி செய்வார், நாட்டார் என அனைவரும் முன்னின்று செய்துள்ளனர். இது, அனைத்து நிலைகளிலும் அத்தேவரடியார் செல்வாக்கு பெற்றவர் என்பதனையே காட்டும்.
6. புதுக்கோட்டை வட்டாரத்தில் சுமார் 30 கல்வெட்டுகளில் குடிக்காடு பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. இதனை நிலமும் நீர்நிலைகளும் கொண்ட ஒரு வேளாண் அலகு (an agricultural unit) எனலாம். பதினோராம் நூற்றாண்டின் தொடக்ககாலத்திலிருந்தே கல்வெட்டுகளில் குடிக்காட்டின் நிலவியல் கூறுகள் (topographical traits) குறிக்கப்படுகின்றன. இது பெரும்பாலும் ஊர் மற்றும் நாடு அளவிலான வேளாண் அலகுகளின் விளிம்புநிலைப் பகுதிகளாக (peripheral zone) குறிக்கப்படுகின்றது. புதுக்கோட்டை வட்டாரம் இடைக்காலத்து அரசுகளின் விளிம்புநிலை நிலப்பரப்பாகும். இங்கு கல்வெட்டில் சுட்டப்பட்ட குடிக்காடு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்தபோதும் தற்போது புதுக்கோட்டை மாவட்டமாக அமைந்தபோதும் விளிம்புநிலைப் பகுதியாகவே உள்ளது. இதன்வழி விளிம்புநிலைச் சமூகப் போக்குகளை அறியலாம். பார்க்க: K.R.Sankaran, Kudikkadu in Pudukkottai Insciptions: An Interpretation in Journal of the Epigraphical Society of India, Vol.20, 1994.pp.29-32.
7. இக்கல்வெட்டினை ஆய்ந்த ஓர்அறிஞர் ஆவுடையானுக்கு கண்தெரியாதே போய் மீண்டும் தெரிஞ்சு போனதனை a case of temporary blinding caused to a murderer by shock termed in forensic medical science as AMBLAYOPIA என்று முடிக்கிறார். ஆனால், மருத்துவ குறிப்பு பற்றிய செய்தியினைத் தரவில்லை. See: R.Tirumalai, Studies in Ancient Township of Pudukkottai, State Department of Archaeology, Madras, 1981.p297. ஆணும் பெண்ணும் வெட்டப்பட்டதனை கொலை என்றே வருணிக்கிறார்.
* இக்கட்டுரை எழுதுவதற்கு அரங்க.நலங்கிள்ளி எழுதிய இந்திய இடிபஸ் ஃபிராய்டிய நோக்கில் ஒரு வாசிப்பு என்ற நூல் தூண்டுகோலாக அமைந்தது. அரங்க.நலங்கிள்ளி, இந்திய இடிபஸ் ஃபிராய்டிய நோக்கில் ஒரு வாசிப்பு, (முதல் பதிப்பு), தோழமை வெளியீடு, சென்னை, 2010. அவருக்கு நன்றி பல. இக்கட்டுரையின் படிவம் பேரா.அரங்க. நலங்கிள்ளியின் மாணவர் சிவராஜ் (ஜெயின் கல்லூரி,சென்னை) என்பவருக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. படித்தபின் தம் கருத்தினைப் பகிர்ந்தார். அவரின்மூலம், இக்கட்டுரையின் செய்தித் திரட்டினை கேட்டறிந்த பேரா.அரங்க. நலங்கிள்ளியிடம் செல்போனில் இக்கட்டுரை பற்றி கருத்து கேட்கப்பட்டது. கட்டுரையின் கருத்துகள் Sigmund Freud உடன் பொருத்திப் போவதாகத் தெரிவித்தார். அவ்விருவருக்கும் நன்றி பல. பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் கட்டுரை அவ்வளவாக ஈர்க்கவில்லையெனினும் உளவியல் உத்தியுடன் கல்வெட்டின் பகுப்பாய்வு பொருந்துகிறது என்றார். மேலும், சில செய்திகளையும் வழங்கிய அவருக்கும் நன்றி.
பின்னிணைப்பு: கல்வெட்டுப்பாடம்
வாகீஸ்வரசாமியா / ருக்கும்வடிவுள்ளமங்கைக்கும் / பூச்சகுடியில்யிருக்கும் நாம் / ஆவுடையாதேவ / ர்திருநெடுங்கொள / ம்தேவடியாள்வீ / ட்டுக்கு போயிருக்கச்சே/ பிராமண / னைஅழைச்சுவீட்டுலெ / இருந்தபடியினாலே / னான்அவற்கள்ரெண்டுபெ / ரையும்வெட்டிப்ட்பொட்டு / மலையடிக்குவந்தவிட / த்திலேரெண்டுகண்ணு / தெரியாதேபோன / படியினாலே இத்தோ / ஷம் போக / வாகீஸ்வர / ஸ்வாமிக்கு என்னு / ட வயல்கல்லுபொட்டுகுடுக்கு / றோம்என்றுவே /
ண்டிக்கொண் / டுஎனக்கு கண்/தெரிஞ்சபடியினாலே என்னுடை / யகாணியாந / ஆவுடையான்குடிக்கா / டு நாங்கெல்லைஉள் / பட்டநிலமும்கல்பொ / ட்டுகுடுத்தேன் / நாங்கெல்லைக்கேஉள்பட்ட நிலம்கல்போட்டு குடுத்தேன்.
- கி.இரா.சங்கரன், தகைசால் பேராசிரியர், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்