“கவிஞர் இ. முருகையன் தமது காலத்தில் ஆற்றல் மிக்க படைப்பாளியாக விளங்கியதால் அவரது படைப்புகள் முக்கியமான கணிப்பிற்குரியதாகியதுடன், நவீன தமிழ் கவிதை சம்பந்தமான பல சிக்கலான பிரச்சனைகளுக்கு ஒளி பாய்ச்சுவனவாகவும் அமைந்துள்ளன. தனிமனித அவல புலம்பல்களுக்கும் சமூக உணர்வுமிக்க படைப்புகளுக்குமான அடிப்படை வேறுபாடு இதுதான். பாரதிக்குப் பின் வந்த கவிஞரான முருகையனில் பாரதி பரம்பரையின் பரிணாமத்தைக் காணமுடிகிறது. அந்த வகையில் கவிஞர். இ. முருகையன் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்துவமான பாதையில் வரித்துச் சென்றவர் என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை. யாவற்றுக்கும் மேலாக அவர் தமிழ் அறிஞராகவும், திறனாய்வாளராகவும் சீரிய முற்போக்குச் சிந்தனையாளராகவும் விளங்கினார்.” என ஈழத்து எழுத்தாளர் லெனின் மதிவாணம் பதிவு செய்துள்ளார்.

 murukaiyanமுருகையன் யாழ்ப்பாணம் சாகவச்சேரி கல்வயல் என்னும் கிராமத்தில் தமிழாசிரியர் இராமப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினருக்கு 23.04.1935 அன்று மகனாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், தொடர்ந்து சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் அதன் பின் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கொழும்பு பல்கலைக் கழகத்தில் பயின்று விஞ்ஞானப் பட்டதாரியானார். இவர் லண்டன் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றார். விஞ்ஞானத்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்ற இவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

               சாகவச்சேரி இந்துக்கல்லூரியில் 1956 ஆம் ஆண்டு விஞ்ஞான ஆசிரியராகத் தமது பணியை ஆரம்பித்த முருகையன், அறிவியல்-பாடநூல் மொழிபெயர்ப்பாளராகவும், தமிழ்மொழிப் பாடநூல் குழுவின் முதன்மைப் பதிப்பாசிரியராகவும், கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், முல்லைத் தீவு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கல்விப்பணிப்பாளராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக முதுதுணைப் பதிவாளராகவும் பல பதவிகளை வகித்து 1995 ஆம் ஆண்டு ஒய்வு பெற்றார்.

இவர் பள்ளியில் பயிலும் காலத்திலேயே தமிழ்மணி, யாழ்ப்பாடி, இந்துசாசனம், கலைச்சுடர் ஆகிய இதழ்களில் கவிதைகள் எழுதினார்.

கவிஞர் இ. முருகையன் தமிழுலகுக்கு படைத்து அளித்துள்ள நூல்கள்: நெடும்பகல், நாங்கள் மனிதர், மாடும் கயிறு அறுக்கும், ஒவ்வொரு புல்லும் பிள்ளையும், அது அவர்கள், ஆதி பகவன் (காவியம்) முதலிய கவிதை நூல்களை படைத்து அளித்துள்ளார். வெறியாட்டு (கவிதை நாடகம்), சிந்தனைப் புயல், நித்திலக் கோபுரம், வந்து சேர்ந்தன, தரிசனம், கோபுரவாசல், கடூழியம், செங்கோல், கலைக்கடல், கொண்டு வா தீயை கொளுத்து விறகை எல்லாம், சும சும மகாதேவா, அப்பரும் சுப்பரும், பொய்க்கால், குற்றம் குற்றமே, தந்தையின் கூற்றுவன், கந்தப்ப மூர்த்தியார், இடைத்திரை, குனிந்த தலை, இரு துயரங்கள், கலிலியோ, உயிர்த்த மனிதர் கூற்று, எல்லாம் சரி வரும், நாம் இருக்கும் நாடு, பில்கணியம், வழமை, அந்தகனே ஆனாலும், கூடல் முதலிய நாடகங்களை எழுதியுள்ளார்.

               இதயத்தின் இளவேனில் (மொழிபெயர்ப்புக் கவிதைகள்), ஒரு வரம் (ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு ), உண்மை (மொழிபெயர்ப்பு நாடகத் தொகுதி), கர்வபங்கம் (சொபொகிளிஸின் அன்ரிகனி நாடகத்தின் மொழிபெயர்ப்பு) முதலிய மொழி பெயர்ப்பு நூல்களையும் அளித்துள்ளார். மேலும் காளிதாசன் சமஸ்கிருதத்தில் எழுதிய ‘இறையனர் களவியல் ’ என்னும் கவிதை நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து குமார சம்பவத்தை அடியொற்றி ‘இளநலம் ’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார். இன்றைய உலகில் இலக்கியம், ஒரு சில விதி செய்வோம், கவிதை நயம் (பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதியுடன் இணைந்து எழுதியது), மொழி பெயர்ப்பு நுட்பம் -ஓர் அறிமுகம் ஆகிய நூல்களையும் எழுதி அளித்துள்ளார்.

               இ. முருகையன் எழுதிய கோபுரவாசல் (கவிதை நாடகம்) ஆலயப் பிரவேசம் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்திருந்த காலகட்டத்தில், பழைய நந்தனார் சரித்திரக் கதையைப் பொருத்தமாக மாற்றிச் சமகாலத்துக்குத் தொடர்புடைய நாடகமாக அமைந்துள்ளது.

“இவரது ‘நாடகம் நான்கு’ தொகுதிக்கு சிறப்பொன்றுண்டு. எத்தனையோ நாடகங்கள் மேடையில் பார்க்கும் பொழுது ஓரளவு சுவராஸ்யமாயிருப்பினும், அவற்றை இலக்கியமாக போற்றத்தக்க சிறப்பற்று மறைந்து விடுகின்றன. ஆனால், நடிப்பதற்கென்றே திட்டமிட்டு எழுதப்பட்ட ஒரு நாடகம், மேடையில் வெற்றி பெற்று அதன் கருத்தாழத்தினாலும், நடைச் சிறப்பினாலும், உணர்வு நலத்தினாலும் நூலாகப் படிப்பதற்கும், மீண்டும் மீண்டும் நடிப்பதற்கும் உகந்ததாகக் கருதப்படுமாயின் அதுவே ஆற்றல் மிக்க நாடக இலக்கியமாகும். பா நாடகங்களுக்கு இப்பண்பு சாலப் பொருந்தும். காத்திரமான சமூக உள்ளடக்கத்தைக் கொண்டனவாயும், உயர் கவிதையின், சொற் செறிவு, தரிசன வீச்சு, தெளிவு, ஓசைச் சிறப்பு முதலிய அம்சங்கள் பொருந்தப் பெற்றனவானவாயும், தனிப்பட்ட நிகழ்வுகளையும் தாண்டி உலகப் பொதுவான உணர்வுகளை எழுப்புனவாயும் இந்நான்கு நாடகங்களும் அச்சுருவிலும் வெளிவரக் கூடியனவாய் விளங்குகின்றன. காட்சி நயம் மட்டும் நாடகத்துக்கு உயிரூட்ட முடியாது. கருத்து மேம்பாடு மாத்திரம் நாடகத்தை இயங்க வைத்து விடாது. இரண்டும் இணைவுற்று இயங்குவதே நாடகத்தின் உயிர் நிலையாகும். இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள நாடகாசிரியர்கள் கவிஞராயும் இருப்பது அவர்தம் படைப்புகள் இலக்கியச் செவ்வியுடன் விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது. நாடக உணர்வு நன்கு வாய்க்கப்பெற்ற முருகையன் எழுதியுள்ள கவிதைகள் பலவற்றிலும் நாடகப் பண்புகள் அவற்றின் உள்ளியல்பாய் இருக்கக் காணலாம். மேலும், பாராளுமன்ற அரசியலின் போலித்தன்மை, கட்சி முறைகளின் வறுமை, வர்க்க முரண்பாடுகளின் உண்மை, போராட்டங்களின் இன்றியமையாமை என்பன இந்நாடகங்கள் உணர்த்தும் மெய்ப்பொருள்கள்.” ஏன ஈழத்து நாடகவியல் விமர்சகர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

‘கலீழியம் ’ நாடகம் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார். “சுரண்டல் பற்றிய ஒரு விசாரணையின் கலை வெளிப்பாடாக அதனைக் கருதிக் கொள்ளலாம். வர்க்க ஒடுக்குமுறையே அதன் உட்பொருளாகக் கையாளப்பட்டுள்ளது. ஆயின், இனம், நிறம், மதம் தொடர்பான நசுக்கலின் ஏனைய வடிவங்களுடனும் அதனைப் பொருத்திக் காணலாம் என்று இப்பொழுது எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. ‘விடுதலை கிடைத்த பிறகுதான் நிம்மதி’ என்பது ‘கலீழியத்தின்’ உயிர்க்குரல். அந்த விடுதலை தேசிய விடுதலையாயும் இன, மத, வர்க்க ஒடுக்குதல்களினின்றும் மீளலாகிய விடுதலையாயும் இருக்கலாமல்லவா? கவிதை மொழி பல பரிமாணம் உடையதாகையால் இவ்விதமான வியாக்கியானங்களுக்கும் அது இடமளிக்கிறது.”

‘கூடல்’ ஆண், பெண் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் சிறு நாடகமாகும். ‘கோபுரவாசல்’ சாதி ஓடுக்கு முறைக்கு எதிராக இடதுசாரி நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நாடகமாகும்.

“ஆசிய நாடுகள் பலவற்றின் மக்களாட்சி நெறிமுறைகளையும் நடைமுறைகளையும் பற்றிய ஒரு குறிப்புரையாக இதைக் கொள்ளலாம். கட்சி வழி ஆளுகின்ற முறைமையால் ஆட்சிப் பொறுப்பாளர்களை அடிக்கடி மாற்றிக்கொள்வதும், அந்த மாற்றம் ஒவ்வொன்றும் அனைத்துத் துயர்களையும் தீர்த்துவிடும் என்ற அதீத நம்பிக்கை வைப்பதும், நம்பிக்கை கைகூடாத நிலையில், மீண்டும், மீண்டும் அந்த மாற்றங்களை இடைவிடாது செய்து கொண்டிருப்பதுமான திண்டாட்ட நிலைமையே இந்த நாடகத்தில் கையாளப்படும் உரிப்பொருள் ” என ‘ அப்பரும் சுப்பரும் ’ எனும் நாடகத்தின் உள்ளடக்கம் பற்றி கவிஞர் முருகையன் கூறியுள்ளார்.

 ‘இன்றைய உலகில் இலக்கியம் ’ என்ற நூலில், இலக்கியம் ஏன்? இலக்கியம் உணர்த்தும் காட்சிகள், பழமையின் பீடிப்பு, மரபின் விரிவு, இரவல் மனப்பான்மையும் மேற்குமய மோகமும், ஆங்கில வழிபாடும் பண்பாட்டு வறுமையும், சரித்திரமும் புனைகனவும், விமரிசன அச்சம், ஆகிய இரு வேறு நோக்குகள், படைப்பும், நுகர்வும் முதலிய தலைப்புகளில் இலக்கியக் கட்டுரைகள் இடம் பெற்று உள்ளது.

 “இலக்கிய வளர்ச்சி, அறிவுத்துறைகளைப் புறக்கணித்த வளர்ச்சியாக இருத்தல் இயலாது. ஏனென்றால், முன்னேறாத ஒரு மொழியின் இலக்கியம் முற்போக்கானதாக அமையாது. மொழி முன்னேற வேண்டுமானால் அதனைப் பேசும் மக்கள் முன்னேற வேண்டும். அந்த மக்களின் பொருளியல், வர்த்தக, விஞ்ஞான, தொழில்நுட்பத்துறைகள் யாவும் முன்னேறியிருத்தல் வேண்டும். இந்தப் பலதுறை முன்னேற்றத்தின் உயிர்ப்புள்ள தொரு கருவியாக அந்த மக்களின் மொழி பயன்படவேண்டும். சுருங்கச் சொல்வதானால் அறிவாயுதமாகவும், அரசியல் ஆயுதமாகவும், வர்த்தகத் தொழில் நுட்ப ஆயுதமாகவும் மொழி பயன்பட வேண்டும். அப்பொழுது தான் அந்த மொழி முன்னேறிய மொழியாகும்.” என்று அந்நூலில் பதிவு செய்துள்ளார்.

மேலும், “மனித சமூகங்களின் மிக நெடிய வரலாற்றுத் தொடர் ஓட்டத்தின் போது பல்வேறு காலங்களில் பல்வேறு மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு முயற்சியினால் அணுஅணுவாகத் திரண்டு கோவைப்பட்டு வெளிப்பட்ட ஒரு பண்பாட்டு விளை பொருளே மொழி” எனப் பதிவு செயதுள்ளார் முருகையன்.

மேலும், மேற்கண்ட நூலில், தமிழைப் பூசனைப் பொருளாகவும் எல்லாமறிந்த தமிழாகவும் பூட்டி வைத்துப் போற்றுவதன் கேடும், தீங்கும் சுட்டிக் காட்டப்படுகின்றன. முதலாளித்துவ நாகரிகத்தை இறக்குமதி செய்வதன் மூலம் நமது பண்பாட்டிலும், இலக்கியத்திலும், மொழியிலும் நிகழ்ந்துள்ள கலப்பும், ஏற்பட்டுள்ள வறுமையும் முற்போக்குச் சக்திகளால் நீக்கப்பட வேண்டியவையாகும். இலக்கிய வியாபாரிகள் போதை இலக்கியங்களையும் போலி இலக்கியங்களையும் மேலைக் கலாச்சாரத்தோடு ஆங்கில மொழி கலப்போடும் விற்பனை செய்து நமது பாரம்பரியத்துக்கு எவ்வாறு ஊறு விளைவிக்கிறார்கள் என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.

ஓரு மொழி உலகியலின் பல துறைகளிலும் துணிவுடன் புகுந்து, கருத்துக்கள் எவ்வளவு சிக்கலானவையாக இருந்தாலும், எவ்வளவு நுணுக்கமானவையாக இருந்தாலும், அவற்றை அப்படியே அச்சொட்டாகத் திரிபின்றி எடுத்துரைக்கும் வல்லமையைப் பெற்றிருத்தல் வேண்டும். அவ்வாறே மனித உணர்வுகளும் மனநிலைகளும் கொள்ளும் பல்வேறு நுணுக்கமான வேறுபாடுகளையும் மென்மையான விவகாரங்களையும் பிறழ்வின்றியும் கொச்சைப்படுத்தாமலும் செப்பமாயும், நுட்பமாயும், திட்பமாயும் வெளிப்படுத்தும் ஆற்றலையும் மொழி பெற்றிருத்தல் வேண்டும். கணிதம், தருக்கம், மெய்யியல், தொழில் நுட்பம், விஞ்ஞானம், அரசியல், ஆன்மிகம், வணிகம், ஆட்சியியல் முதலான அனைத்துத்துறைகளையும் அளாவி, அளந்து, அலசி, அனைத்தையும் தழுவிச் செல்லும் பன்முகமான திறமைபெற்ற மொழியே வளர்ச்சியடைந்த, அபிவிருத்தி பெற்ற, மேம்பாடுற்ற முழுமையான தொடர்புச்சாதனமாகத் திகழும் மனித நாகரிகத்தின் திறம்பட்ட கருவியாகவும், பண்பாட்டு உயர்ச்சியின் துணைக்காரணமாகவும் தொழிற்படும். அந்த வலிமையும் வளமும் வினைத்திறனும் தமிழ் மொழிக்கு வாய்க்கும் வகையில் உழைப்பதுதான் உண்மையான தமிழறிஞர்கள் செய்ய வேண்டிய உயிர்ப்புள்ள பணியாகும்” என கவிஞர் முருகையன் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தமிழறிஞர்கள் ஆற்ற வேண்டிய பணியை சுட்டிக்காட்டியுள்ளார்.

               முருகையனின் நெடும்பகல், ஆதிபகவன், அது அவர்கள் முதலிய நெடும் பாடல்களில் ‘ மனிதனே ’ மையப்பொருளாக விளங்குகிறான். அவருடைய பெரும்பாலான தனிக் கவிதைகளிலும், பல நாடகங்களிலும் இலங்கையின் சமூக, அரசியல் பிரச்சனைகள் மையப்பொருளாக உள்ளன. மேலும், இவரது படைப்புகள் யாவும் சமூக அக்கறையும், மனித விடுதலை நாட்டமும் கொண்டுள்ளன.

               ‘ நாங்கள் மனிதர் ’ என்ற கவிதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் முருகையன் பின்வருமாறு கூறுகின்றார். “இக்கவிதைகள் எல்லாம் மனிதகுல மேம்பாட்டை நோக்கிய உந்துதல்களாகவும், தேடுதலாகவும், விசாரணையாகவும், அங்கலாய்ப்புகளாகவும், தேற்றமாகவும், தெளிகையாகவும், உறுதியாகவும் உள்ளன. இடையறாத பரிசீலனைகளின் ஆவணங்களாகவும் அமைகின்றன. மனிதனைப் பிணித்துள்ள தளைகள் நீங்க வேண்டும். தடங்கல்கள் அகல வேண்டும். அதன் பேறாக முழுமையான விடுதலை கிட்ட வேண்டும் என்னும் வேட்கையின் மூச்சொலிகளை வாசகர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.”

“ஆதி பகவனின் கதை உலகின் கதை ; உலக மனிதனின் கதை ; ஆதி பகவனின் குடும்பம் மனித சமுதாயம். எனவே தான் ‘ஆதிபகவன்’ தனிமனித குடும்பச் சித்திரம் போன்று தொடங்கினாலும், சமுதாயத்தின் வரலாறாக விரிந்து பரந்து சென்று கொண்டிருக்கிறது.” என ‘ஆதிபகவன்’ நூலில் கவிஞர். இ. முருகையன் குறிப்பிட்டுள்ளார்.

               ‘கவிதை நயம் ’ என்னும் நூல் கவிதையின் இயல்புகளையும், கவிதையின் மூலாதாரங்களையும் அறிவதற்கு ஒரு வழித்துணையாக அமைந்துள்ளது. இலக்கியவாதிகளுக்கும், இளங்கவிஞர்களுக்கும் இந்நூல் மிகுந்த பயனுடையதாக உள்ளது.

               இந்நூலில், படைப்பும் நயப்பும், உவமையும் உருவகமும், கற்பனையின் பங்கு, ஓசையின் மேல் ஓசை, சொல்வளம், பரவசமும் பகுப்புணர்வும், கவிதையின் உயிர், பயிற்சிப் பாடல்கள் முதலிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

               இவர் எழுதிய, ‘மொழிபெயர்ப்பு நுட்பம் - ஓர் அறிமுகம் ’ என்னும் நூல் மொழி பெயர்ப்பின் தேவையானது நாள்தோறும் வளர்ந்து பெருகிக் கொண்டிருக்கும் இச்சூழலில் மிகவும் அவசியமானது ஆகும். மேலும், மொழிபெயர்ப்பு முயற்சியில் முழுமூச்சோடு இறங்கி செயல்படும் ஒருவர் விரைவில் ஒரு கைதேர்ந்த, சிறந்த மொழி பெயர்ப்பாளராக வளர்ச்சி அடைய மிகவும் பயனுடையது. இந்நூலில், மொழிபெயர்ப்பின் விளக்கங்கள், வரைவிலக்கணங்கள், வகைப்பாடுகள் பயன்பாடுகள், சிக்கல்கள், மொழிபெயர்ப்புக்கு இன்றியமையாத மொழி இயல், இலக்கண நியமங்கள் மாத்திரமின்றி மொழி மரபு நுணுக்கங்கள், மொழி பெயர்ப்பின் சமுதாயப் பரிமாணங்கள், மொழியில் நிகழும் மாற்றங்கள், கலைச்சொல் ஆக்கம், கவிதை மொழி பெயர்ப்பு, பல்மொழிப் பயில்வு முதலிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவராக செயற்பட்டார் முருகையன். தேசிய கலை இலக்கியப் பேரவையின் ‘தாயகம்’ இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தார்.

               சிங்களம் மட்டும் ஆட்சி மொழி என்ற நிலைப்பாட்டுக்கு எதிரான தமிழ் மொழி உரிமைப் போராட்டம், ஒரு பண்பாட்டு அரசியல் போராட்டமாக எழுச்சியடைந்த சூழலில் தான் வீறார்ந்த மொழி உணர்ச்சிக் கவிதைகள் எழுந்தன. அச்சூழலில் கவிஞர். முருகையன் கீழ்க்கண்ட கவிதையை படைத்தார்.

“மொழியே உயிர், முதலாவது.

                               முடிவாவதும் அதுவே    

                               முடியாது –

                               அதை விடவா ?

                               சமர் முரசே அறை தமிழா

                               விழியே மொழி

                               ஒரு போதிலும்

                               மிதிகாலிடல் சகியோம் ”

              

               கவிஞர் இ. முருகையன் 27.06.2009 அன்று தமது 74 ஆவது வயதில் காலமானார். அவர் மறைந்தாலும் உலகத் தமிழர்கள் மத்தியில் அவரது கவிதைகளும், நாடகங்களும் என்றும் நிலைத்து நிற்கும்.

               “முருகையனது கவிதைகள் எப்பொழுதுமே ஆய்வறிவுப் பண்புடையனவாய் இருத்தல் சிறப்பாகக் குறிப்பிட வேண்டியதாகும். உணர்ச்சி வெள்ளத்தில் அடிபட்டுப் போகாமல் நிதானித்து விஷயங்களை ஆழமாக நோக்கிக் கவிபாடும் நோக்கும், போக்கும் அவரின் சிறப்பியல்புகள். முருகையனைக் கவிஞர்க்குக் கவிஞன் நான் பெருமையோடு கூறிக் கொள்வதுண்டு. கவிதை உயிர்த் துடிப்புள்ள இலக்கிய வடிவம் என்று நம்மவர்க்கு இக்காலத்தில் உணர்த்திய கவிஞரில் முக்கியமானவர் முருகையன்.” என மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் கலாநிதி க.கைலாசபதி புகழ்ந்துரைத்துள்ளார்.

“தற்காகலத் தமிழ்க் கவித வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த முக்கியமான கவிஞர்களுள் முருகையனும் ஒருவர்.” என ஈழத்து இலக்கிய விமர்சகர் எம்.ஏ.நுமான் பதிவு செய்துள்ளார்.

“சிறந்த நடையும், கருத்தாழமும், முருகையனின் கவிதைகளிற் பொதிந்திருப்பதைக் கவனிக்கலாம். எங்கள் மத்தியிலும் சிறந்த கவிஞர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் கவிஞர் முருகையன் ஆவார்.” எனப் பதிவு செய்துள்ளார் பேராசிரியர் சு. வித்தியானந்தன்.

இலங்கை அரசினால் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் அதிஉயர் விருதான சாகித்திய இரத்தினம் விருது 2007 ஆம் ஆண்டு முருகையனுக்கு வழங்கப்பட்டது.

               “அவலங்களும் அழுக்குகளும் மேடு பள்ளங்களும் சுரண்டலும் ஒழிந்து மானுடம் மேம்பட வேண்டும் என்ற உறுதியுடன் பாடிய மாபெரும் கவிஞர்” எனப் பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் புகழ்ந்துரைத்துள்ளார்.

               “மானிடன் அழிவதுண்டு மானிடம் அழிவதில்லை

                நானிலத்தே வாழுகையில் நலிந்தோர்க்குக் குரல் கொடுத்து

               இறுதி மூச்சு இருக்கும்வரை என்னிதயக் கருத்துக்களை

               அறுதியாக உரைப்பேனென அரும்பெரும் கவிதைகளில்

               வடித்து வைத்துச் சென்றதெல்லாம் மக்களின்

               துடிப்பை வெளிக்காட்டும் துல்லியப் பளிங்கு போல

               அடியொற்றி வாழ்வோரின் அடிமனதில் ஒளிவிடும்

               விடிவெள்ளி ஆனவருள் முருகையன் முதற்கவிஞன் ”.

               எனக் கவிஞர் முருகையன் போற்றி புகழப்பட்டார்.

- பி.தயாளன்

Pin It