தொல்பழங்காலம் முதல் அநாகரிக காலம் வரை அதாவது நாகரிக காலம் தோன்றுவதற்கு முன்வரை உலகம் முழுவதும் ஆதிகாலப்பொருள்வாதம் தான் இருந்து வந்தது. அதுவரை கருத்துமுதல்வாதம் என்பது இல்லவே இல்லை என்பதை இக்கட்டுரையின் தரவுகள் உறுதி செய்கின்றன. சொத்துடமையும், தொழில்பிரிவுகளும், வகுப்பும், வர்க்கமும், குடும்பமும், அரசும் தோன்றிய பின்னர்தான் கருத்து முதல்வாதம் தோன்றுகிறது. சமூகத்தின் ஒரு பிரிவு உழைப்பிலிருந்து முழுமையாக விடுதலை பெற்று, யதார்த்த உலகிலிருந்து விலகி இருக்கும் பொழுதுதான் கருத்துமுதல்வாதச் சிந்தனைகள் தோன்றுகின்றன. பேரரசுகளில் பேரளவான பொதுமக்களைக் கட்டுப்படுத்தவும், ஆண்டான்-அடிமைச் சமுதாயத்தில் அடிமைகள் ஆண்டான்களைவிட பலமடங்கு அதிகமாக இருக்கும்பொழுது அவர்களைக் கட்டுப்படுத்தவும் இந்த கருத்துமுதல்வாதம் என்பது ஒரு வரலாற்றுத் தேவையாகவும் இருக்கிறது. ஆனால் வளர்ச்சி பெற்ற வணிக நகர அரசுகள், நீண்டகாலம் நிலையாக இருந்து, ஆண்டான்-அடிமைச் சமுதாயம் என்பதும் இல்லாத நிலையில் பொருள்முதல்வாத மெய்யியல் ஒரு உச்சகட்ட வளர்ச்சி நிலையை அடைகிறது. அதுபோன்ற ஒரு சூழ்நிலை பழந்தமிழகத்தில் கி.மு. 1000க்கு முன்பிருந்து இருந்து வந்ததால்தான் கி.மு. 8ஆம் நூற்றாண்டில் தொல்கபிலர் போன்ற ஒரு மாமேதை தோன்றவும், எண்ணியம் (சாங்கியம்) போன்ற ஒரு வளர்ச்சி பெற்ற பொருள்முதல்வாத மெய்யியலைத் தோற்றுவிக்கவும் முடிந்தது. பேரண்டம் குறித்தும், அதன் தோற்றம் குறித்தும், இயற்கை குறித்தும் நவீன அறிவியல் கண்டுணர்ந்த பலவற்றைத் தத்துவவடிவில் அன்றே தெளிவாகக் கூற முடிந்துள்ளது. அதனால்தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பே எண்ணிய மெய்யியலின் தாக்கம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரவி விரிந்துள்ளது.

அ. ஆதிகாலப்பொருள்முதல்வாதம் 

வரலாற்றுக்கு முந்தைய காலம்:

பண்டைய கால மனித வரலாற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை தொல்பழங்காலம் அல்லது காட்டுமிராண்டிக்காலம், அநாகரிக காலம், நாகரிக காலம் ஆகியன. தொல்பழங்காலத்தையும் அநாகரிக காலத்தையும் முதல், இடை கடை என மூன்று மூன்றாகப் பிரிக்கலாம். தொல்பழங்காலத்தின் முதல் இடைக்காலகட்டங்கள் என்பது முழுமையான காட்டுமிராண்டிக்காலம். இக்கால கட்டத்தை வேத மரபு கிருத யுகம் எனக் கூறுகிறது. இக்காலகட்டத்தில் உணவைப் பெறுவதற்கான போராட்டம் மிகமிகக் கடினமாக இருந்தது. உணவு கிடைக்கும் என்ற உறுதி இல்லாமல் இயற்கையிடமிருந்தும், காட்டு மிருகங்களிடமிருந்தும் தற்காத்துக்கொள்ள வழிவகை தெரியாமல் வேட்டைக்காக விலங்குகளின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த ஆதிமனிதனின் வாழ்வு நிச்சயமற்றதாக இருந்தது. இக்காலகட்ட மனிதன் பட்டைதீட்டப்படாத கற்கருவிகளையும், கரடுமுரடான கற்கருவிகளையும் மரக்கிளைகளையும் கொண்டு செய்யப்பட்ட வேல், ஈட்டி போன்ற கரடுமுரடான ஆயுதங்களையும் பயன்படுத்தினான். அவை அவனது உணவுத் தேவையின் சிறிய அளவைக்கூட நிறைவேற்றவில்லை. ஆதலால் உணவுக்கான இந்தப் போராட்டத்தில் பல மனித சமூகங்கள் மீத மிச்சமில்லாமல் அழிந்து போயின. இக்காலகட்டத்தில் தாயின் தலைமையில் அவன் சிறு சிறு கூட்டமாக வாழ்ந்து வந்தான். அன்று அவன் தாயை மட்டுமே அறிவான். தந்தையை அறியான். இக்காலகட்டம், மனிதனுக்கு வாழ்வு குறித்து ஒரு அச்சத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

deviprasath 268தொல்பழங்காலத்தின் கடைக்கட்ட காலத்தில், வில் அம்பு, நாண் ஆகிய மூன்றும் இணைந்த வில் - அம்பு கண்டுபிடிக்கப்பட்டது. இக்கருவியின் மூலம் அவன் ஓரளவு தொடர்ச்சியாக இறைச்சியைப் பெறத் தொடங்கினான். இதற்கு முன்பே நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அன்று அவன் பட்டை தீட்டப்பட்ட கற்கருவிகளைப் பயன்படுத்தினான். இவை போன்ற கண்டுபிடிப்புகள் அவனது வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. அன்று தாய்வழி உரிமைதான் இருந்துவந்தது. இக்காலகட்டத்தில் அவன் கண ஆட்சிமுறையைக் கொண்டு வந்தான். இந்தக் கண ஆட்சி முறை தான் இனக்குழு வாழ்வின் மிகச்சிறந்த காலகட்டம். தொல்பழங் காலத்தின் கடைக்காலம் முதல் அநாகரிக காலகட்டத்தின் இடைக்காலம் வரை இம்முறை இருந்து வந்தது. அநாகரிக காலத்தின் கடைக்கட்டத்தில் இம்முறை அழியத் தொடங்கியது. இக்கடைக்கட்டம் வீரயுகக் காலம். கண ஆட்சிமுறை என்பது முழுமையான பரிபூர்ணமான சனநாயக முறை இருந்த காலகட்டம். இதில் ஆண்பெண் அனைவரும் அனைத்திலும் சமம். தலைவர்களை அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுப்பர். அவரை எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றமுடியும். தலைவருக்கு என தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இருக்காது. ஒரு செயலைத் தலைமை தாங்கி செயல்படுத்துவது அவர் பொறுப்பு. அனைவரும் அனைத்துத் தொழிலையும் செய்வர். இக்காலகட்டத்தில் குழுமணம் இருந்தது. ஆண், பெண் வீட்டில் தான் வாழ்ந்தான். கண ஆட்சி காலத்தில் தொழில் பிரிவினையோ, சொத்துரிமையோ, வர்க்கமோ, அரசோ, குடும்பமோ இருக்காது (1).

அநாகரிக காலத்தின் கடைசிக்கட்டத்தில், அதாவது வீரயுக காலத்தில், கண ஆட்சிமுறை அழிந்து அவ்விடத்தில் தனிச்சொத்தும், குடும்பமும், அரசும், நாகரிக காலமும் தோன்றத் தொடங்குகிறது. தொல்பழங்காலம் முதல் அநாகரிக காலம் வரையான வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள பல கோணங்களில் அவற்றை ஆய்வு செய்ய வேண்டிய தேவையுள்ளது. உற்பத்திக் கருவிகள், பொருள் உற்பத்தி, திருமண உறவு, ஆட்சிமுறை, அவனது நம்பிக்கைகள் அல்லது சமயம் ஆகியன காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளன.

தொல்லினப் பழங்குடிகள்:

இவர்களை தாம்சன் என்பவர் மூன்றுகட்டங்களாகப் பிரிக்கிறார்.

முதல் கட்டத்தில் இருவகை. தொடக்ககால கீழ்மட்ட வேடர்கள். அவர்கள் உணவு சேகரித்தல், வேட்டைத்தொழில் ஆகியவற்றைச் செய்கிறார்கள். அடுத்து வருபவர்கள் உயர்மட்ட வேடர்கள். இவர்கள் வேட்டைத்தொழிலுடன் மீன்பிடித்தல் தொழிலையும் செய்கிறார்கள்.

மேய்ச்சல் இரண்டு கட்டங்கள்: முதல் கட்டத்தில் மேய்ச்சல் தொழில், அதாவது ஆநிரை வளர்த்தல். அடுத்த கட்டத்தில் ஆநிரை வளர்த்தலுடன், துணையாக விவசாயமும் சிறிதளவில் நடைபெறுகிறது.

வேளாண்மை மூன்று கட்டங்கள்: முதல் கட்டத்தில் ஆநிரை வளர்த்தலுடன் கூடிய சிறிய அளவு வேளாண்மை. இரண்டாம் கட்டத்தில் ஓரளவு வளர்ச்சிபெற்ற வேளாண்மையுடன் ஆநிரை மேய்த்தல். இதில் ஏர்கலப்பை இல்லை. மூன்றாம் கட்டத்தில் தோட்ட வேளாண்மையும், மண்வெட்டிகளைக் கொண்டு வயல் வேளாண்மையும் நடைபெறுகிறது. இங்கு ஏர் கலப்பை பயன்படுத்தப்படுவதோடு ஆநிரை வளர்த்தலும் இடம் பெறுகிறது.

இரண்டாம் மேய்ச்சல் கட்டத்திலும், வேளாண் வளர்ச்சியின் மூன்றாம் கட்டத்திலும், கைவினைத்தொழில் முன்னேறுவதையும், நிலைத்த குடியிருப்புகள் தோன்றுவதையும் தொல்லின மக்களுக்கு இடையே பண்டமாற்று நடைபெறுவதையும், உலோகத்தொழில் வளர்வதையும் காண்கிறோம். இந்த நிலையில்தான் தொல்லினப் பழங்குடி அமைப்பானது சிதையத் தொடங்குகிறது.

இந்த வகையினங்கள் ஒரு குறிப்பிட்ட கால வரிசைப்படி வருவதில்லை. ஆனால் உயர்மட்ட வளர்ச்சி என்பது ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் விலங்குகள், தாவரங்கள், ஏனைய சூழ்நிலைக்காரணிகள் ஆகியனவற்றைச்சார்ந்து இருந்தன.

சான்றாக உணவு சேகரித்தல், வேட்டை ஆகியவற்றிற்குப் பின்னர் சில தொல்பழங்கால மக்கள் மேய்ச்சல் பொருளாதாரத்திற்கு மாறினர். வேறு சிலர் வேளாண்மைக்கு மாறினர். இந்த இருவழி முன்னேற்றமானது தொல்லினப் பழங்குடிமக்கள் அமைப்பைச் சிதைத்து, வளர்ச்சி பெற்ற வேளாண்மையையும் தொழிலையும் கொண்டுவந்து நாகரிக நிலைக்கு மேலெடுத்துச்சென்றது (2).

தொடக்க காலப் பழங்குடி இனங்கள் அனைத்தும் தாய்வழி உரிமைமுறையைத்தான் பின்பற்றின. மேய்ச்சல் பொருளாதாரத்துக்கு மாறியவர்கள் தாய்வழி உரிமையில் இருந்து தந்தைவழி உரிமைக்கு மாறினார்கள். வேளாண்மைப் பொருளாதாரத்துக்கு மாறியவர்கள் தொடர்ந்து தாய்வழி உரிமை முறையைத்தான் பின் பற்றினர். அவர்களும் வேளாண்மையின் மூன்றாம் காலகட்டத்தில் ஏர்கலப்பையைப் பயன்படுத்தத் தொடங்கிய போது தாய்வழி உரிமையிலிருந்து தந்தைவழி உரிமைக்கு மாறினார்கள். கண ஆட்சிமுறை இருக்கும்வரை, அதாவது அநாகரிகக் காலம்வரை தந்தைவழி உரிமை முறையிலும் கூட பெண் வலிமை மிக்கவளாகவே இருந்தாள்.

தாய்வழி உரிமை குறித்து இரிவர்சு (W.H.R. Rivers), ‘சமுதாயம் முழுமைக்கும் தனி ஒருவனுக்கும் இடையேயான உறவு இங்கு தாய்வழியில் தீர்மானிக்கப்படுகிறது. இது ஒருவகைச் சமுதாய அமைப்பு. இங்கு ஒருவன் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள், அவன் பெறும் உரிமைகள், அவற்றின் தன்மை ஆகியன அவனுக்கும், அவனது தாயின் உறவினர்களுக்கும், தாயின் கூட்டத்தாருக்குமிடையே உள்ள உறவுகளால் தீர்மானிக்கப் படுகின்றன’ என வரையறை செய்கிறார். இன்றும்கூட இந்தத் தாய்வழி உரிமை ஒருசில பழங்குடிகளிடையே இருக்கிறது. சான்று: அசாமின் காசிக்கள், அமேரிக்க இராகுவாய்கள், செரி இந்தியர்கள் ஆகியோர் (3). ஆனால் உலகம் முழுவதும் தந்தைவழி உரிமைதான் நாகரிக காலம் முழுவதும் இருந்து வந்தது.

வேட்டைத்தொழில் வளர்ச்சியடைந்த காலத்திலிருந்து ஆணின் முக்கியத்துவம் அதிகரித்தது. அன்று பெண் சிறிய அளவில் வேளாண்மையையும் செய்து வந்தாள். தொடக்கத்திலிருந்தே வேளாண்மை பெண்களின் பணியாக இருந்து வந்தது. வேட்டையும் கால்நடைகளைப் பராமரித்தலும் ஆணின் கடமையாக இருந்தது. வேட்டை விலங்குகளைப் பழக்கி அவைகளைக் கால்நடைகளாகப் பராமரிக்கத் தொடங்கியதிலிருந்து ஆண் மேலும் வலிமை பெற்றான். இவற்றின் காரணமாகத்தான் மேய்ச்சல் பொருளாதாரத்தைப் பின்பற்றியவர்கள் நாளடைவில் தாய்வழி உரிமையிலிருந்து தந்தை வழி உரிமைக்கு மாறினார்கள். அதே சமயம் வேளாண்மை பெண்களின் பணியாக இருந்ததால் வேளாண்மைப் பொருளாதாரத்திற்கு மாறியவர்கள் தாய்வழி உரிமையைத் தொடர்ந்து பின்பற்றி வந்தார்கள். ஆனால் வேளாண்மையில் ஏர்கலப்பையைப் பயன்படுத்தத் தொடங்கிய காலத்திலிருந்து வேளாண்மைப் பொருளாதாரத்தைப் பின் பற்றியவர்களும் தந்தைவழி உரிமைக்கு மாறினார்கள். பொதுவாக எல்லா இடங்களிலும் சொத்துடமை வந்த பிறகு தாய்வழி உரிமை இல்லாதுபோய் தந்தைவழி உரிமை நடைமுறைக்கு வந்தது. ஆகவே நாகரிக காலத்தில் அனைவரும் தந்தைவழி உரிமையைத்தான் பின்பற்றினர்.

போலச்செய்தல்:

தொடக்க காலத்திலிருந்து இயற்கையின் செயல்பாடுகள் மனிதனுக்கு புரியாத புதிராக இருந்ததோடு அது அவனுக்கு அச்சத்தையும் நடுக்கத்தையும் கொடுத்து வந்தது. இயற்கை குறித்த அச்சத்தைப் போக்கிக்கொள்ளவும் அதைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், தனது விருப்பங்களை, ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் மனிதன் கண்டுபிடித்த மாயமந்திர முறைதான் ‘போலச்செய்தல்’ என்பதாகும். அதாவது தான் என்ன விரும்புகிறானோ அது நடைபெற வேண்டும் என்பதற்காக அது உண்மையிலேயே நடந்தது போல முழுமையாக நம்பி, தனது செய்கையாலும் நடத்தையாலும் அதை நடித்துக் காட்டினான். அதன் மூலம் இயற்கையைக் கட்டுப்படுத்தித் தான் விரும்பியதைச் செய்விக்க முடியும் என்று அவன் உளமாற நம்பினான். சான்றாக மழை வர வேண்டும் என விரும்பினால் இடியும் மின்னலும் ஏற்பட்டு மழை வந்து விட்டது போலவும், மழை வந்தால் தான் மகிழ்ந்து என்ன செய்வானோ அதனையும் சேர்த்து ஒரு முழு நாடகம் போல அனைத்தையும், அதாவது இடி மின்னல் ஏற்பட்டு மழை வந்தது தொடங்கி அனைத்தையும் தனது செய்கையாலும் நடத்தையாலும் செய்து நடித்துக் காட்டினான். இப்படிப் ‘போலச்செய்தல்’ மூலம் இயற்கையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தான் விரும்பியதைச் செய்விக்க முடியும் என அவன் உளமாற நம்பினான்.

இந்தப் போலச்செய்தல் என்பதை பலரும் இணைந்து ஒரு ஒத்த உணர்வோடு செய்யும் செயலாக, ஒரு கூட்டு நடவடிக்கையாகச் செய்தனர். இந்த கூட்டு நடவடிக்கை அவர்களுக்கு ஒரு உணர்வு பூர்வமான நம்பிக்கையை வலிமையைக் கொடுத்தது. இயற்கையைக் கட்டுப்படுத்தவும் தாங்கள் விரும்பியதைப் பெறவும் முடியும் என்ற நம்பிக்கையை இந்தக் கூட்டாகவும் உணர்வுபூர்வமாகவும் முழு நம்பிக்கையோடும் செய்யும் ‘போலச் செய்தல்’ ஏற்படுத்தியது. ஆதலால் எல்லாத் தொல்பழங்காலச் சமூகங்களும், பழங்குடிச் சமூகங்களும் இம்முறையைப் பின்பற்றின. இந்தப் போலச் செய்தல் என்பதில் கடவுளோ, ஆன்மீகமோ, சமயமோ எதுவும் இருக்கவில்லை. இதன் நோக்கம் தெளிவானது. இயற்கையை கட்டுப்படுத்தலும், தங்களது வாழ்கைக்கான தேவைகளை தங்களது இன்பத்துக்கான ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளுதலும் என்பதுதான் இதன் நோக்கமாக இருந்தது.

ஆகவே போலச்செய்தல் என்பது நாம் என்ன விரும்புகிறோ அதனை அடைந்துவிட்டது போல எண்ணி அது போன்று நடிப்பதாக இருந்து வந்தது. நாளடைவில் நாம் எதனை விரும்புகிறோமோ அதனை அடைந்துவிட்டது போலத் தீவிரமாக எண்ணுவதும் அதற்காகச் செயல்படுதலும்தான் அதனை அடைவதற்கான வழி என மனிதகுலம் நம்பியது. அதனால்தான் பெரும்பாலான பண்டைய தீர்க்கதரிசிகளும், ஞானிகளும், இறைதூதர்களும் ‘நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாக ஆவாய்” என்பதாகக் கூறி வந்துள்ளனர். போலச்செய்தல் என்ற கருத்தாக்கத்தில் இருந்து வந்தவைதான் இது போன்ற கருத்துகள். வள்ளுவன்

‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்’ (குறள்-666) - எனக் கூறுகிறான். அதாவது எண்ணியவர் எண்ணியபடியே செயலாற்றுவதில் உறுதியுடையவராக இருந்தால் அவர் எண்ணியதை எண்ணியவாறே அடைவார். தற்காலத் தன்னம்பிக்கை நூல்களும் இவை போன்ற கருத்துக்களைத்தான் கூறி வருகின்றன. இக்கருத்துகள் அனைத்தும் போலச்செய்தல் என்ற கருத்தாக்கத்தின் வளர்ச்சிதான் எனலாம்.

உற்பத்திச்சடங்குகள்;

போலச்செய்தல் என்பதுதான் நாளடைவில் பழங்குடி மனிதர்களின் உற்பத்திச் சடங்குகளாக ஆகின. சான்றாக இரிக் வேதத்தில் சத்ர, கிரது யாகங்கள் எனப்படும் ஆரிய இனக்குழுவின் ஆதிகால யக்ஞங்கள் சொல்லப்பட்டுள்ளன. இவை உற்பத்திச் சடங்குகள். இந்த சடங்குகளின் தரவுகள் அவை உற்பத்திச் சடங்குகள் என்பதை உறுதி செய்கின்றன. சான்றாக சத்ர யாகத்தில் குழுவில் உள்ள ஆண்பெண் அனைவரும் சமமாகக் கூட்டுழைப்பில் பங்கெடுத்து, உழைப்பின் பலனை அனைவரும் சமமாகப் பங்கிட்டுக்கொண்டனர். இக்காலகட்டத்தில் ஆண்பெண் என்ற பாகுபாடு இன்றி அனைத்திலும் அனைவரும் சமமாகவே நடத்தப்பட்டனர். சில சத்ர சடங்குகள் வருமாறு,

கம்பு, மரம், புல் முதலியவற்றைக்கொண்டு கூடைகளை முடைதல்

குதிரையின் விலா எலும்புகளை கூராக்கி புல் அறுத்தல்

விலங்கை தடியால் அடித்து அல்லது அதனை மூச்சுவிடாமல் செய்து கொல்லுதல்

மரத்தால் செய்த உரல்களைக்கொண்டும், கற்களைக்கொண்டும் தானியத்தை இடித்தல் (4). இதுபோன்ற சடங்குகளைச் செய்வதன் மூலம் அவர்களது வாழ்க்கைக்குத் தேவையான கூடைகள் போன்ற வீட்டுப்பொருட்கள், உணவுக்கான வேட்டை விலங்குகள், தானியங்கள் (சேகரிப்பு மூலம் கிடத்தவை) ஆகியன பேரளவில் கிடைக்கும் என பழங்குடி மனிதன் நம்பினான். தொடக்கத்தில் இவை ‘போலச்செய்தல்’ என்பதாகத்தான் இருந்து வந்தன. நாளடைவில் இவை சடங்குகளாக ஆகின. தொடக்க காலச் சடங்குகள் அனைத்துமே இதுபோன்று அவனது பொருளாதார வாழ்வுக்கான தேவைகளை நிறைவு செய்வதற்கானவைகளாகவே இருந்தன. ‘போலச்செய்தல்’ என்பது முழுமையாகத் தங்களது வாழ்கைக்கான தேவைகளை தங்களது இன்பத்துக்கான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதாகவே இருந்தது. இந்த உற்பத்திச் சடங்குகளின் நோக்கமும் அதுதான். ஆதலால் போலச்செய்தல் என்பதில் இருந்து தான் இந்த உற்பத்திச் சடங்குகள் உருவாகின. நாளடைவில் இவை பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகின. போலச்செய்தல் போலவே இது போன்ற தொடக்ககாலச் சடங்குகளிலும் ஆன்மீகமோ, கடவுளோ சமயமோ இருக்கவில்லை.

தொடக்ககால வேதங்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் சில சடங்குகளில் – யக்ஞங்களில் பயன்படுத்துவதற்கென்றே இயற்றப்பட்டவை. வேதகால மக்களின் தொடக்ககால முன்னோர்கள் இன்று வசிக்கும் பழங்குடி மக்களிடமிருந்து அடிப்படையில் வேறுபட்டவர்கள் என்று கருத இடமில்லை…. எனவே வேதகால மக்களது தொடக்ககால பாடலென்பது மாந்திரீகத்தன்மை உள்ளது என்பதும், ஏதேனுமொரு சடங்குடன் அது தொடர்புள்ளது என்பதும் இயல்பானதே என்று கூறுகிறார் சட்டோபாத்தியாயா (5). ஆகவே வேதத்தின் தொடக்க கால உற்பத்திச் சடங்குகள் மாந்திரீகத்தன்மை கொண்டவை.

உற்பத்திச் சடங்குகளின் மாந்திரீகத்தன்மை குறித்து, ‘பொதுவாக தொல்லினப் பழங்குடி என்பவன் செயல்படுபவன். அவனுக்கு வேண்டியதை ஒரு கடவுளைச் (அன்று அவன் கடவுளை அறியான்) செய்யச் சொல்வதைவிட அதை அவனே செய்கிறான் அல்லது செய்ய முயல்கிறான். துதிப்பாடல்களை விட அவன் வசிய மந்திரங்களைக் கூறுகிறான். சுருக்கமாகக் கூறினால் அவன் மந்திரத்தைப் பின்பற்றுகிறான். இதற்கும் மேலாக மாந்திரீக நடனங்களை அவன் தீவிரமாக ஆடுகிறான். ஒரு தொல்லினப் பழங்குடிக்கு சூரியன் அல்லது காற்று அல்லது மழை வேண்டுமென்றால் பொய்யான கடவுள்முன் மண்டியிட்டு வேண்டுவதில்லை. தேவலாயத்திற்குச் செல்வதில்லை. அவன் தனது இனத்தைக் கூட்டுகிறான். சூரிய நடனம் அல்லது காற்று நடனம் அல்லது மழை நடனம் ஆடுகிறான். அவன் ஒரு கரடியை வேட்டையாடி பிடிக்கும்பொழுது பலம் வேண்டி கடவுளைத் துதிப்பதில்லை. அந்தக்கரடியை வெல்லக் கரடிநடனம் ஆடி ஒத்திகை பார்க்கிறான்’ எனக் கூறுகிறார் சேன் ஆரிசன் (Harrison J.E.) (6).

மாயோரிசுகளிடம் உருளைக்கிழங்கு நடனம் உள்ளது. கீழ்காற்று இளம்பயிரை அழித்துவிடும் அதனைக் காப்பதற்காக இளம்பெண்கள் வயலுக்குச்சென்று காற்று வீசுதல், மழை, பயிர்முளைத்தல் ஆகியவற்றைப்போல் நடனம் செய்து பாட்டுப்பாடி ஆடுகிறார்கள். அவர்கள் விரும்பிய யதார்த்தத்தை நிறைவேற்ற கற்பனையான நடனத்தை ஆடுகிறார்கள். இது கற்பனையாக இருந்தாலும் வீணானது அல்ல. இந்த நடனம் உருளைக்கிழங்கில் எந்த மாற்றத்தையும் கொண்டுவராது எனினும் அந்தப் பெண்களிடம் பெரிய மாறுதலைக் கொண்டு வருகிறது. இந்த நடனம் அந்தப்பயிரைக் காப்பாற்றும் என முழுமையாக நம்பி, மேலும் கூடுதலாகப் பயிரின்மீது அதிகக் கவனம் செலுத்துகிறார்கள். எனவே பயிரின் மீது அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எதார்த்தம் பற்றிய அவர்களது அகவய அணுகுமுறையை அது மாற்றுகிறது. மறைமுகமாக எதார்த்தத்தை அது மாற்றுகிறது என தாம்சன் (Thomson) மேற்கண்டவாறு விளக்குகிறார் (7).

மந்திரத்தின் பயன்பாடு உளவியல் அடிப்படையைக் கொண்டது. ஆனால் அது தனி நபர் உளவியல் அல்ல. இந்தச்சடங்குகள் ஒரே உணர்ச்சியைக் கூட்டாகப் பகிர்ந்து கொள்ளும் மனிதர்களால் நிகழ்த்தப்படுகிறது. கூட்டுத்தன்மை, உணர்ச்சியின் உச்சகட்டநிலை ஆகியன இந்த எளிமையான சடங்கை மாற்றுகின்றன. பழங்குடிகளிடையே தனி நபருக்கு முக்கியத்துவம் கிடையாது. உணர்ச்சியின் உச்சகட்டநிலை என்பது சமூக அடிப்படையில் உணரப்பட்டு, உருவாக்கப்படுவது. ஆனால் உற்பத்தித்திறன் முன்னேறும்போது அது உபரி உற்பத்தியைத் தோற்றுவிக்கிறது. அதன்பின் கூட்டுத்தன்மை சிதறுகிறது. பலருடைய உழைப்பால் ஒருசிலர் பயனடையும் நிலை தோன்றுகிறது. அதன்பின் மந்திரம் மறைந்து மதம் தோன்றுகிறது. வேத இலக்கியங்களில் மந்திரம் சார்ந்த நம்பிக்கைகளின் அடையாளங்கள் உள்ளன. உண்மையில் அதர்வண வேதம் முழுவதும் மந்திரம் தவிர வேறில்லை எனக் கூறுகிறார் சட்டோபாத்தியாயா (8). இந்த உற்பத்திச் சடங்குகள் அனைத்திலும் கடவுளோ, ஆன்மீகமோ, சமயமோ இல்லை.

வேளாண்மைச்சடங்கு - வளமைச்சடங்கு:

தொல்பழங்கால மனிதன் உணவு சேகரித்தல், வேட்டையாடுதல் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு இரு பிரிவுகளாகப் பிரிந்து போனான் என முன்பே குறிப்பிட்டோம். அவற்றில் கால்நடைகளைப் பராமரிக்கும் மேய்ச்சல் தொழிலை விட வேளாண்மைத் தொழில் என்பது கடினமாக இருந்தது. இதுகுறித்து தாம்சன் (Thomson G),

‘ஆநிரைகளை மேய்ப்பது அவற்றிற்கு உணவு அளிப்பது, அவற்றை விருத்தி செய்வது ஆகிய தொழில்களை விட விதைப்பு, உழவு, அறுவடை போன்ற தொழில்கள் தாமதமாக இடம்பெறுபவை. கடினமானவை. உறுதியற்றவை. இதற்குப் பொறுமை, தொலைநோக்கு, நம்பிக்கை ஆகியன வேண்டும். ஆதலால் வேளாண் சமுதாயத்தில் மந்திரம் அதிகமாக வளர்ந்து வந்தது’ எனக் கூறுகிறார் (9).

தொடக்ககால வேளாண்குடிகளுக்கு விதைப்பிலிருந்து அறுப்பு வரைக்கும் உள்ள செயல்கள் மர்மமாகவே இருந்தது. வெற்றி கிடைப்பது என்பது உறுதியற்றதாக இருந்தது. அதனால் மந்திரத்தின் தேவை இங்கு அதிகமாகவே இருந்தது எனலாம். மந்திரம் என்பது போலச்செய்தல் என்பதுதான். பொறுமை, தொலைநோக்கு, நம்பிக்கை போன்ற உளவியல் தேவைகளை மந்திரம்தான் அளிக்க முடியும். எதார்த்தத்தை கட்டுப்படுத்துதல் என்ற பிரமையை உருவாக்குவதன் மூலம் நாம் உண்மையில் அதனைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற விதி மந்திரத்திற்கு அதாவது போலச்செய்தல் என்பதற்கு அடிப்படையாக உள்ளது. எதார்த்தத்தைக் கட்டுப்படுத்துதல் என்ற பிரமையை உருவாக்க அதனைக் கற்பனையாக நடிக்க வேண்டும். இந்த நடிப்பு இதனை நிகழ்த்துபவர் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கற்பனையாகச் செய்வதன் மூலம் தேவைப்பட்ட எதார்த்தத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையால் தூண்டப்பட்டு அவர் இன்னும் கடினமாகவும் பொறுமையாகவும் உழைப்பில் தொடர்ந்து ஈடுபட முடியும். ஆகவே வேளாண்மையில் மந்திரம் சார்ந்த நம்பிக்கைகள், சடங்குகள் தீவிரமடைந்தன.

வேளாண்மை தொடக்கத்தில் பெண்கள் தொழிலாக இருந்தது. ஆதலால் வேளாண் மந்திரமும் தொடக்கத்தில் பெண்களின் செயலாக மட்டுமே இருந்தது. இந்த மந்திரம் தான் நாளடைவில் வேளாண் சடங்குகளாக, அதாவது அவை வளமைச் சடங்குகளாக, தாந்தீரிகச் சடங்குகளாக ஆகின.

வெற்றிகரமாக வேளாண்மையைச் செய்துமுடிக்கச் செய்யப்படும் சடங்குகளில் மழையை வரவழைக்கும் சடங்குகள் முக்கியமானவை. இவை பெண்களின் சடங்குகளாக பல தொல்பழங்குடிகளிடையே இருந்து வந்தது. கானரித் தீவுகளில் உள்ள குவான் செசுகளிடையே தலைமைப்பெண் பூசாரியின் வேலை மழை கொண்டு வருவது. அதற்காக அவள் கடற்கரைக்குச்சென்று கடல்நீரைக் கழிகளால் அடித்தாள். ஐரோப்பியப் பெண் பூசாரிகள் மழைகொண்டுவர செய்த செயல்கள் மத்தியகால இடைக்காலப் பெண் மந்திரவாதிகளின் சொற்களிலும் செயல்பாடுகளிலும் வாழ்கின்றன. இதன் காரணமாக பெண்களுக்கென ஒரு தனி சக்தி இருப்பதாகக் கருதப்பட்டது (10). வேளாண்மை பெண்களின் கண்டுபிடிப்பு என்பதால் வேளாண்மையின் விருத்தி என்பது பெண்ணின் இனவிருத்திப் பண்புடன் தொடர்புபடுத்தப்பட்டது. பெண்களின் மந்திரச்சக்தி என்பது அவளது உடலமைப்பில் இடம்பெற்றுள்ள குழந்தைப்பேறு போன்று இயல்பானது. ஆகவே தொல்பழங்கால மனிதனின் வேளாண் வெற்றி என்பது பெண்ணையும் அவளது மக்கட்பேற்றையும் சார்ந்து இருப்பதாகக் கருதப்பட்டது. இதுவே நாளடைவில் வளமைச் சடங்காகவும், தாந்திரீகச் சடங்காகவும் வளர்ச்சியடைந்தது. இந்தச்சடங்குகள், இயற்கையின் உற்பத்தியானது, அதாவது தாய்பூமியின் விளைச்சலானது மனித இனவிருத்தியை போலச்செய்வதின் மூலம் அதிகரிக்கிறது என்ற அனுமானத்தை அடித்தளமாகக் கொண்டுள்ளது எனக் கூறுகிறார் சட்டோபாத்தியாயா (11).

பெண்களின் வளமையானது மழையைக்கொண்டு வரும் திறன் உள்ளது என நம்பப்படுகிறது. கோரக்பூர் பஞ்ச காலத்தில் (1873-74) பெண்கள் இரவு நேரத்தில் நிர்வாணமாக வெளியே சென்று ஏர்கட்டி வயல்களை உழுதார்கள். வடவங்காளத்தில் வறட்சி நிலவும்பொழுதெல்லாம் பெண்கள் நிர்வாண நிலையில் மழைக்கடவுள் முன் நடனமாடுகின்றனர். இத்தகைய நடவடிக்கைகள் உலகம் முழுவதும் நடைபெறுகிறது. செர்பியாவில் வறட்சிக்காலத்தில் ஒரு பெண் நிர்வாணமாக்கப்பட்டு பூக்களால் மூடப்படுகிறாள். இந்த அரைநிர்வாண நிலையில் அவள் ஒவ்வொரு வீட்டின் முன்பும் நடனமாடுகிறாள். அந்தந்த வீட்டின் தலைவி அப்பெண் தலையில் நீரை ஊற்றுகிறாள். அவளது தோழிகள் மழைப்பாடல்களைப் பாடுகின்றனர். இத்தகைய சடங்குகளின் நோக்கம் மழையை வர வழைப்பதுதான். தானியங்களைத் தரும் பூமி குழந்தைகளைத் தரும் பெண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தது. எனவே பெண்ணின் இனவிருத்திப்பண்பு இயற்கையின் உற்பத்தியைப் பெருக்கும் எனவும், அதே போன்று இயற்கையின் உற்பத்தித்திறன் பெண்ணின் இனவிருத்தித்திறனைக் கூட்டும் எனவும் நம்பப்பட்டது (12).

தாந்திரீகத்தில் பெண்களது பிறப்புறுப்பை மையமாகக் கொண்டு இடம்பெறும் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சடங்குகளுக்கு லதாசாதனை என்ற பெயரும் உண்டு. இந்த லதா என்பதன் நேரடிப்பொருள் செடி அல்லது கொடி என்பது. ஆனால் தாந்திரீகத்தில் அது பெண்பிறப்புறுப்பைக் குறிக்கிறது. வட அமெரிக்காவில் தானியங்களை நோய் தாக்கும்போது இரவு நேரத்தில் வீட்டுவிலக்கான பெண்கள் நிர்வாணமாக வயலில் நடந்தார்கள். இதே வழக்கம் ஐரோப்பாவிலும் இருந்தது. இத்தகைய நேரத்தில் பெண்களது உடலில் உள்ள வளமைச் சக்தி வெளிப்படும் எனக் கருதப்பட்டது. ஒரு பெண் மந்திரவாதி சடங்குகளைச் செய்யும்போது ஆடைகளைக் களையவேண்டும் என்பது ஒரு பொதுவிதி. பண்டைய கிரேக்க உரோம நாடுகளில் பெண்கள் மந்திரச் செயல்களில் ஈடுபடும்பொழுது நிர்வாணமாக இருந்தனர். இனவிருத்தி உறுப்புகளை வெளிக்காட்டுவதன் மூலம் பெண்கள் இயற்கையை அதிகமாக உற்பத்தி செய்யும்படிக் கட்டாயப் படுத்துகிறார்கள் எனக் கருதப்பட்டது (13). அதனால்தான் சடங்குகளில் நிர்வாணம் என்பது இருந்து வந்துள்ளது. இதுவரை குறிப்பிட்ட பண்டைய வளமைச்சடங்குகளும் தாந்திரீகச் சடங்குகளும் வேளாண்மை உற்பத்தியை பெருக்குவதற்கான ஒரு வழிமுறையாகத்தான் பயன்படுத்தப்பட்டன என்பதை இத்தரவுகள் உறுதி செய்கின்றன. இச்சடங்குகளில் ஆன்மீகமோ, கடவுளோ, சமயமோ இருக்கவில்லை.

பழங்குடிகளின் கடவுள்கள்:

நீலகிரி மலையில் வாழும் தோடர்கள் மேய்ச்சல் இனச் சமூகம். இவர்களை ஆய்வு செய்த இரிவர்சு (Rivers W.H.R), ‘தோடர்களது கடவுள் மிகத்தெளிவான மானுட வடிவமுடையவர். அவரைத்தேவு என அழைக்கின்றனர். அவர்களது பழங்கதைகளில் அவர் சாதாரண மனிதராகவே காணப்படுகிறார். அவருக்குப் பண்னைகள் உண்டு. எருமைகள் உண்டு. தோடர்கள் செய்வதைப் போலவே இந்தக் கடவுளர்கள் சபையைக் கூட்டுகின்றனர். ஒருவரோடு ஒருவர் கலந்து ஆலோசிக்கின்றனர். தோடர்களைப் போலவே அவர்கள் சிந்திக்கிறார்கள் தோடர்களைப் போலவே அவர்களது உணர்ச்சிகளும் நோக்கங்களும் உள்ளன…. தோடர்களிடம் தெய்வீகம் என்ற கருத்தே உருவாகவில்லை. தோடர்கள் படைக்கப்படுவதற்கு முன் கடவுள்கள் தனியாக வசித்தனர். ஒரு கட்டத்தில் அவர்களும் மனிதர்களும் ஒன்றாக வசித்தனர். கடவுளர்கள் மனிதர்களை ஆண்டனர்…. ஒவ்வொரு தோடர் குலத்திற்கும் ஒரு தெய்வம் உள்ளது. கடவுளர்களும் மனிதர்களும் ஒன்றாக வசித்த போது அந்த தெய்வம் அந்தக் குலத்தை ஆண்டது…. தோடர்களது கடவுள்கள் மனிதப் பண்புகளுடன்தான் இருந்தனர்’. எனக் கூறுகிறார் (14).

பழங்கால வேத காலக் கடவுள்கள்:

தோடர்களது கடவுளர்களுக்கும் வேதக்கடவுளர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை வியக்கத்தக்கதாக இருக்கிறது எனக் கூறுகிறார் சட்டோபாத்தியாயா. வேதகால மக்கள் இந்திரனை மனிதன் என்று எண்ணித்தான் வணங்கினர். இந்திரனை மனிதர்களின் தலைவனாகப் புகழ்ந்தனர். அக்னியை மனிதர்களுள் முக்கியமானவன், மனிதர்களுள் சிறந்தவன் என அழைத்தனர். மனிதர்களுள் தலைமையானவன் என இந்திரனைப் பற்றி அடிக்கடி கூறப்பட்டுள்ளது. அவன் மனிதர்களில் மேன்மையானவன். அவன் மனிதர்களின் துணையுடன் போர்களில் வெற்றி பெறுகிறான். அவர்களுடன் சேர்ந்து உணவு உண்கிறான். அவன் மனிதர்களுள் தைரியசாலி. அவன் மனிதருள் சிறந்தவன். பழங்காலத்தில் அவன் மனிதர்களின் தலைவனாக இருந்தான். இரிக் வேதத்தில் இருந்த மனிதர்களான மருத்துகள் குறித்து சாயனர், ‘மனிதர்கள் என்பதற்குப்பொருள் தொடக்கத்தில் உண்மையான மனிதர்களாக இருந்து கடவுளர் நிலைக்கு உயர்த்தப்பட்டு மருத்துகள் என அழைக்கப்பட்டனர்’ எனக் கூறுகிறார். மற்ற எல்லா வேதக்கடவுளர்களைவிட மருத்துகள்தான் தொல்பழங்கால கூட்டு வாழ்க்கைப் பண்புகளைப் பெற்றவர்களாக இருந்தனர். அவர்கள் கணங்கள் அல்லது தொல்லினப் பழங்குடி மக்களின் கூட்டு அமைப்பில் வாழ்ந்தார்கள். அவர்கள் சகோதரர்கள்; அவர்களிடையே பூரண சமத்துவம் இருந்தது. அவர்கள் ஒன்றாகவே வளர்ந்தார்கள். ஒரே வீட்டில் வசித்தார்கள். அவர்கள் சமபலம் உள்ளவர்கள்; நண்பர்கள்; ஒரே பிறப்பினர்.

உண்மையில் மனிதர்களாக இருந்த இரிபுக்கள் கூட படிப்படியாகக் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள். அதுபோன்றே அசுவினிகள் கடவுள் நிலைக்கு உயர்ந்ததை இரிக் வேதமே கூறுகிறது. கடவுள் நிலைக்கு உயர்ந்த பிறகும் கூட இரிபுக்கள் கூட்டு வாழ்க்கை குறித்த அடையாளங்களைக் கொண்டிருந்தனர். அசுவினிகளும் மனிதர்களுடன் சமமாகவும் நட்புறவுடனும் பழகினார்கள். அசுவினிகளே, நமது நட்புறவு நமது தந்தையர்களிடமிருந்து வருகிறது. நட்பு முறையில் நீங்கள் எங்களுக்குச் சமமானவர்கள். உங்களது பாட்டனாரும், எங்களது பாட்டனாரும் ஒருவரே. இந்த நட்புறவு, மனித உறவு ஆகியவற்றை மற்ற கடவுளர்களிடமும் வேதக் கவிஞர்கள் கண்டனர். முனிவர்கள் இந்திரனை நண்பன் என்று அழைத்தனர். விசுவதேவர்கள் (எல்லாக்கடவுளர்களும்) அனைவரும் தோழர்கள் என அழைக்கப்பட்டனர். சோமன், பிராமணசுபதி, சாவித்திரி, வருணன், மித்ரன், ஆரியமான் ஆகிய எல்லோரும் வேதக் கவிஞர்களுடனும் அவர்களது உறவினர்களுடனும் நல்ல நட்பு கொண்டிருந்தனர். வருணன் தம்மை வணங்குபவர்களுடன் சமமாக நட்பு கொள்கிறான் எனச் சொல்லப்பட்டுள்ளது. வேதக் கடவுளர்களுடன், குறிப்பாக வருணனுடன் உள்ள நட்புறவு பற்றிய விடயங்கள் பழங்காலப் பாடல்களில்தான் இடம்பெறுகின்றன. வேதகால மக்களது பழங்காலத்தினைப்பற்றி அதிகமாக ஆராய ஆராய அவர்களது கடவுள்கள் தெளிவான மனிதப் பண்புகளுடனும், தொல்லினப் பழங்குடி மக்களுடன் நட்பாகவும் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. மிகப்பழங்காலத்தில் வேதகாலக் கவிஞர்களுக்கும் கடவுளர்களுக்கும் இருந்த நட்புறவு மனிதத்தன்மை மிகுந்ததாகவே இருந்தது (15).

தின்காக்கள், தோடர்கள்:

ஆப்ரிக்காவில் வாழும் தின்காக்கள் கருத்துப்படி, டென்ங்திட் என்ற அவர்களது கடவுள்தான் தொடக்கத்தில் சொர்க்கத்திலிருந்து பூமியைப்பிரித்தான். வருணன் குறித்தும் இதே கதையைத்தான் வேதகால மக்கள் கூறுகின்றனர். வருணன் பூமி சொர்க்கம் ஆகியவற்றைத் தனித்தனியாக வைத்தான். உலகம் முழுவதும் இத்தகைய நம்பிக்கைகள் இருந்தன. இதன் அடையாளங்களை சீனம், மெசபடோமியா, எகிப்து ஆகிய நாடுகளில் காணலாம். பாலினீசியர்களிடையே இன்றும் இக்கதை உள்ளது. தோடர்களிடமும் வேண்டுதல் பாடல்கள் இருந்தன. இவை மந்திரங்களாக சடங்குகளின்போது பாடப்பட்டன. இந்த மந்திரங்கள் இரிக் பாடல்களை போன்றுதான் உள்ளன. ஆனால் இவை சிறிய அளவிலானவை. இந்த சடங்குகளின் நோக்கம் கால்நடைகளைப் பாதுகாப்பதுதான். ஒரு காலத்தில் தோடர்களுக்கு வளர்ச்சி பெற்ற கடவுளர்கள் உள்ள மதம் இருந்தது எனவும், அந்த கடவுளர்களுடன்தான் தோடர்கள் நீலகிரி மலைக்குக் குடியேறினார்கள் எனவும் ஆனால் நாளடைவில் அவர்கள் தங்களது பழைய கடவுள்களை மறந்துவிட்டனர் எனவும் இரிவர்சு கருதுகிறார். நாளடைவில் இங்கு அவர்களுக்கு புதிய கடவுளர்கள் உருவானார்கள். இந்தப் புதிய கடவுள்கள் அனைவரும் மானிட மூலத்தைக் கொண்டவர்கள். வீரர்கள் பலர் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டனர் எனவும் அவர் கூறுகிறார். ஆகவே மனிதன் தான் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளான் (16).

பண்டைய கடவுள்கள் – மனிதர்கள்:

இரிக் வேதகாலக் கடவுள்கள் தெய்வீகத்தன்மை உள்ளவர்கள் அல்ல எனவும் அவர்கள் அரை மானுடத்தன்மை அல்லது மானுடத் தன்மை கொண்டவர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும் எனவும் கூறுகிறார் சட்டோபாத்தியாயா. இரிக் வேதக்கவிஞர்கள் பொருளியல் மதிப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். எனவே இத்தகைய மதிப்புகளுடன் தொடர்பில்லாத கடவுளர்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது எனவும் அவர் கூறுகிறார் (17). இதுகுறித்து மக்டொனால்டு (Macdonell), ‘விருப்பத்தினை வெளிப்படுத்தாத எந்தப் பாடல் பற்றியும் அவர்களுக்குத் தெரியாது. பொருள்கள் தொடர்பான விருப்பம் தவிர வேறு எந்த விருப்பமும் அவர்களுக்குத் தெரியாது. அவர்களது விருப்பம் இந்த உலகத்தினைப் பற்றியது. அவர்களுக்கு மறு உலகநாட்டம் இருந்ததாகக் கூறமுடியாது. இவ்வாறு இருக்கும்போது விரிந்து பரந்த அந்தப் பாடல் தொகுதியிலிருந்து சந்தேகத்திற்குரிய சில துணுக்குகள் தரும் சான்றுகளைக் கொண்டு அவர்களுக்கு மறு உலக அல்லது ஆன்மீக சிந்தனை இருந்தது என்று விளக்கக்கூடாது’ எனக் கூறுகிறார் (18).

இரிக் வேதப் பாடல்களில் உலகம் பற்றிய ஆசை அடிநாதமாக ஒலிப்பதைக்காண முடியும். சான்றுக்குச் சில பாடல்களைக் காணலாம்.

அக்னியே எங்களுக்கு நிறைய உணவினை அளிப்பாயாக! அக்னியே எங்களுக்கு அளவற்ற செல்வத்தை அளிப்பாயாக!

அக்னியே வலிமையின் மகனே! உணவின் தலைவனே! கால்நடைகளின் தலைவனே! எங்களுக்கு நிறையக்கொடுப்பாயாக!

அக்னியே உணவின் மூலம் மற்ற மனிதர்களிடம் எங்கள் பலத்தினை நாங்கள் காட்ட வேண்டும். எங்களது அளவற்ற செல்வம் சூரியனைப்போல ஐந்துவகை மக்களிடமும் பிரகாசிப்பதாக

கடவுள் அல்லது மனிதனிடமிருந்து எந்த எதிரியும் எங்களை நோக்கி வரக்கூடாது. இத்தகைய எதிரிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக.

எதிரிகளை வெல்லும் இந்திரனும், வருணனும் எங்களைச்சுற்றி இருப்பார்களாக. அதனால் எங்களுக்கு நல்ல மகன்கள் பிறக்கட்டும்; பேரர்கள் பிறக்கட்டும்; செழிப்பான நிலம், நீண்ட ஆயுள், பலம் ஆகியன கிட்டட்டும்.

வெல்லமுடியாத வலிமை உள்ள அக்னியே எங்களுக்கு அளவற்ற செல்வத்தினை அளிப்பாயாக. எங்களைச்சுற்றி செல்வம் இருக்கட்டும். செழிப்பிற்கான வழியைக்காட்டு.

கடவுளர்களே எங்களுக்கு தடையற்ற வளமையைக்கொடுங்கள். இதுவரை காணாத இன்பத்தில் நாங்கள் எப்போதுமே பங்குபெற வேண்டும். அசுவினிகளின் பாதுகாப்பில் நாங்கள் இருக்க வேண்டும். நிரந்தரமான அசுவினிகளே எங்களுக்கு செல்வத்தினையும், ஆண்வாரிசினையும், நல்ல பொருள்களையும் அளியுங்கள்.

அசுவினிகளே! கால்நடைகள், ஆண்வாரிசு, இரதங்கள், குதிரைகள், உணவு ஆகியவற்றைக் கொண்டு வாருங்கள்.

சோமனே எங்களுக்குத் தைரியத்தையும் ஊக்கத்தையும் கொடு. எங்களது எதிரிகளை அழி. எங்கள் நலனுக்குப்பாடுபடு.

எங்கும் பரவியிருக்கும் சோமன் பல்லாயிரம் மடங்கு செல்வத்தையும் உணவையும் அளிக்கட்டும்.; மட்டற்ற வலிமையை அளிக்கட்டும்.

சோமனே மழையை அனுப்பு; அடிவானத்தில் நீரலைகள் இருக்கட்டும்; குறையாத உணவைக்கொடு (19).

இப்பாடல்கள் மக்டொனால்டு அவர்கள் கூறுவதை உறுதி செய்கின்றன. இப்பாடல்களில் மறு உலகம் குறித்தோ ஆன்மீகம் குறித்தோ எதுவும் இல்லை.

தோடர்களது பாடல்களும் கிட்டத்தட்ட இதே போன்ற வேண்டுதல்களைத்தான் கொண்டுள்ளன (20).

ஆகவே வேதகாலப்பாடல்களும், பழங்குடிகளின் பாடல்களும் ஆதிகாலப் பொருள்முதல்வாதத் தன்மை கொண்டவைதான் என உறுதி செய்யலாம்.

இரிக்வேத கடவுளர்களும் மனித நிலையில் இருந்து கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டவர்களே என்பதால் அவர்களும் மானுட மூலம் கொண்டவர்கள்தான். இதுவரை பார்த்த இரிக்வேதப் பாடல்கள் குறித்தத் தரவுகள் அனைத்தும் அதைத்தான் உறுதி செய்கின்றன. வேதகாலமக்கள் மட்டுமல்ல உலகிலுள்ள எல்லாப் பழங்குடி மக்களது கடவுள்களும் மானுடமூலம் கொண்டவர்கள்தான். ஆகவே இக்கடவுள்களும், அவர்களுக்கான வேண்டுதல் பாடல்களும் ஆதிகாலப் பொருள்முதல்வாதத்தன்மை கொண்டன.

வள்ளுவன் தனது 50 ஆவது குறளில்,

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்’ எனப்பாடியுள்ளான். அதாவது இந்த உலகில் யார் மிகச்சிறந்த முறையில் வாழ்கிறார்களோ அவர்கள்தான் தெய்வங்களாக வணங்கப்படுவர் எனக் கூறுகிறான் வள்ளுவன். இந்த அடிப்படையில்தான் பழந்தமிழகத்தின் நில தெய்வங்களும், குலதெய்வங்களும், நடுகல் தெய்வங்களும் வணங்கப்பட்டனர். கொற்றவை, சேயோன் (முருகன்), மாயோன் (திருமாள்), வேந்தன் (இந்திரன்), வருணன் ஆகிய நில தெய்வங்களும் இன்னபிற குல தெய்வங்களும், நடுகல் தெய்வங்களும் தமிழர்களின் முன்னோர்கள்தான். முப்பாட்டன்கள்தான். சங்ககாலம் வரை இக்கடவுள்கள் மானுடத்தன்மை, அல்லது அரைமானுடத் தன்மை கொண்டவர்களாகவே இருந்தனர். இவர்கள் மாந்திரீகத் தெய்வங்களாக, சிவனிய மாலிய தெய்வங்களாகவே வழிபடப்பட்டனர். வளர்ச்சி பெற்ற நகர அரசுகளில் பூசாரிகள் என்பவர்கள் இல்லாது ஒழிக்கப்படுகின்றனர். அங்கு பொருள்முதல்வாத மெய்யியல்தான் சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது. அதன் காரணமாக அங்கு முழுமுதல் கடவுள் என்ற சிந்தனை உருவாவதில்லை, உருவானாலும் ஏற்கப்படுவதில்லை. கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் முக்கியமாக பக்திக் காலகட்டத்தில்தான் எல்லாம் வல்ல முழுக்கடவுள்களாக இவர்கள் மாறினர். ஆகவே நாகரிக காலத்திற்கு முன்வரை இருந்த எல்லாப் பழங்குடி மக்களது கடவுள்களும் மனிதர்களில் இருந்து உருவாகியவர்கள்தான். அவர்கள் அனைவரும் பழங்குடிகளது முன்னோர்களாக இருந்து, அவர்களின் சிறப்பான செயல்களுக்காகப் படிப்படியாக தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டவர்கள்தான் ஆகவே வேத காலக் கடவுள்களான வருணன், இந்திரன், இருத்ரன், கிருட்டிணன் போன்ற அனைவருமே மனிதர்களாக இருந்த பின் படிப்படியாகக் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டவர்கள்தான்.

பார்வை:

1.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், NCBH, சனவரி-2023 புத்தகம்-1 பக்: 238-240.

2.உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, NCBH, சூன்-2010, பக்: 307, 308.

3. “ “ “ பக்: 311.

4. “ “ “ பக்: 239, 240.

5. உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, NCBH, சூன்-2010, பக்: 780,781.

6. “ “ “ பக்: 117.

7. “ “ “ பக்: 118, 119.

8. “ “ “ பக்: 117.

9. “ “ “ பக்: 356.

10. “ “ “ பக்: 358.

11. “ “ “ பக்: அறிமுக உரை - xxx.

12. “ “ “ பக்: 380, 381.

13. “ “ “ பக்: 386-389.

14. “ “ “ பக்: 695, 696.

15. “ “ “ பக்: 696- 702.

16. “ “ “ பக்: 704-708.

17. “ “ “ பக்: 718, 719.

18. “ “ “ பக்: 717.

19. “ “ “ பக்: 710-715.

20. “ “ “ பக்: 706, 707.

- கணியன் பாலன்

Pin It