ma senthamizhanசென்ற செப்டெம்பர் 12ஆம் நாள் சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் “தமிழரா? திராவிடரா?” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் “சங்கத் தமிழர் வாழ்வியல்” என்ற தலைப்பில் உரையாற்றிய ஆசான் ம. செந்தமிழன் சமண முனிவர் வச்சிரநந்தியை வைது தீர்ப்பதையும், அதில் வெளிப்படும் காலவழுவையும் சென்ற (செப்டம்பர்) இதழில் கண்டோம்.

திரமிள சங்கம் அமைத்த வச்சிரநந்தியை செந்தமிழன் வன்சொல் கொண்டு சாடக் கேட்கலாம்: தமிழ்க் கழகத்தை ”திரமிள சங்கம் என்று அவன் சொன்னான்”! அம்மட்டோ? திரமிள சங்கத்தை நிறுவி விட்டு ”அவர்கள் சில நூல்களை இயற்றினார்கள், அந்த நூல்களில் ஒன்றுதான் ஆசாரக் கோவை… இதை தமிழ்ச் சங்க நூல்கள் என்ற வரிசையில் இப்போது வைத்திருக்கிறார்கள். இது பெரிய பாவம், பிழையான கருத்து. இது ஒரு வகையில் திரித்தல். இந்த ஆசாரக் கோவைதான் சில குடிகளில் பிறந்தவர்களை பிராமணர்கள் தீண்டக்கூடாது என்ற விதியை எழுதிய முதல் தமிழ்நூல்.”

ஆசான் ம. செந்தமிழன் முதலில் ஒரு வினாவிற்கு விடையிறுக்கட்டும்: ஆசாரக் கோவையைத் தமிழ்ச் சங்க நூல்கள் என்ற வரிசையில் வைத்தது யார்? எப்போது?

சங்க இலக்கியம் என்பது பொ.ஊ.மு. (கிமு) 500 முதல் பொ.ஊ. (கிபி) 200 வரையிலான காலத்தில் இயற்றப் பெற்ற செவ்வியல் இலக்கியத்தைக் குறிக்கும். நாளது வரை கண்டறியப்பட்டுள்ள படி 473 புலவர்கள் இயற்றிய 2,381 சங்கப் பாடல்கள் உள்ளன. எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமான 18 நூல்கள் சங்கத் தமிழ் நூல்கள் ஆகும். இவற்றுக்குப் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்று பேர். இந்தப் பட்டியலில் ஆசாரக் கோவைக்கு இடமில்லை. அது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகத்தான் மதிக்கப் பெறுகிறது.

ஆசாரக் கோவையைத் தமிழ்ச் சங்க நூல் வரிசையில் சேர்ப்பது பெரிய “பாவம்” என்றால், செந்தமிழன் அந்தப் பாவத்தைச் செய்யாதிருக்கட்டும்! கருமவினைக் கொள்கையை நம்பாத ஒருவர் “பாவம்” என்ற சொல்லை வெகு இயல்பாக ஆள்வது வியப்பாக உள்ளது.

எனக்குத் தெரிந்த வரை ஆசாரக் கோவையைத் தமிழ்ச் சங்க நூல்கள் என்ற வரிசையில் யாரும் சேர்க்கவில்லை. சேர்த்திருந்தால் பிழைதான்! யாரும் சேர்க்காமலிருந்து செந்தமிழன் யாரோ சேர்ப்பதாகச் சொல்வராயின் அது இன்னும் பெரிய பிழை!

ஆசாரக் கோவை தீண்டாமையை வலியுறுத்தும் முதல் தமிழ் நூல் என்கிறார் செந்தமிழன். முதல் என்ற அடைமொழி ஆய்வுக்குரியது. ஆனால் அது தீண்டாமை பேசும் நூல் என்பது மெய்!

ஆசாரக் கோவையில் இடம்பெற்றுள்ள வெண்பா வடிவிலான 100 பாடல்கள், மக்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகள் (ஆசாரங்கள்) எவையெவை எனக் கூறுகின்றன. உண்ணல், உடுத்தல், உறங்கல், நீராடல் போன்ற நடைமுறை வாழ்க்கைக் கூறுகள் முதற்கொண்டு, யாரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ன செய்ய வேண்டும் போன்ற வழிமுறைகளும் சொல்லப்பட்டுள்ளன. சுருக்கமாக அகத்தூய்மை, புறத்தூய்மை என இரண்டுக்கும் வழிகாட்டும் முயற்சி எனக் கொள்ளலாம். எவை செய்தல் நன்மையுண்டாக்கும், எவை செய்தால் தீமைகள் நேரும் என்பதை விளக்குவது நூலின் நோக்கம்.

“இன்றியமையாது நீராடுதல்” என்ற ஆசாரக்கோவை பாடல் எப்பொழுது நீராட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

"தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
வைகு துயிலோ டிணைவிழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்
ஐயுறா தாடுக நீர்.” (10)

ஒரு பத்துச் செயல்களைக் குறித்து அவற்றில் எதைச் செய்தாலும் நீராடுதல் வேண்டும் என்கிறது இந்த ஆசாரம். அந்தப் பத்தில் ஒன்று “கீழ்மக்கள் மெய்யுறல்”, அதாவது கீழ்மக்கள் எனப்படுவோரைத் தீண்டி விட்டால் உடனே குளிக்க வேண்டுமாம். தீட்டுக் கழிப்பதற்காக நீராட வேண்டுமாம்!

“செய்யத்தகாதன” என்ற ஆசாரக்கோவை பாடல் எவற்றைச் செய்யக் கூடாது என்று அறிவுறுத்துகிறது.

"நீருள் நிழற்புரிந்து நோக்கார் நிலமிராக்
கீறார் இராமரமுஞ் சேரார் இடரெனினும்
நீர்தொடா தெண்ணெ யுரையார் உரைத்தபின்.
நீர்தொடார் நோக்கார் புலை.” (13)

பாடலின் பொருள்: செய்யக் கூடாதவை என்பனவற்றைச் செய்ய விரும்பாத ஒருவர், நீருக்குள் தனது நிழலை விரும்பி நோக்க மாட்டார், தரையைக் கீற மாட்டார், இரவில் மரத்தின் பக்கம் இருப்பதைத் தவிர்ப்பார், நோய் கொண்ட நேரத்தில் எத்தனை இடையூறு என்றாலும் நீரைத் தொடாமல் எண்ணெய்யை உடலில் தேய்க்க மாட்டார், எண்ணெய் தேய்த்த பின்னர் நீராடாமல் புலையரை (கீழ்மக்கள் எனக் கூறப்படுவோர்) தனது கண்ணால் நோக்க மாட்டார் (அதாவது ‘கண்டு முட்டு’, புலையரைப் பார்த்தாலே தீட்டு வரும் என்ற மூட நம்பிக்கை).

எண்ணெய் தேய்த்த பின் நீராடாமல் புலையரைக் காணக் கூடாதாம்! தீண்டாமையினும் கொடிய காணாமை!

“நன்னெறி” என்ற ஆசாரக்கோவைப் பாடலும் எவற்றைச் செய்யக் கூடாது என்று அறிவுறுத்துகிறது.

"பெரியார் உவப்பன தாமுவவார் இல்லஞ்
சிறியாரைக் கொண்டு புகாஅர் அறிவறியாப்
பிள்ளையே யாயினு மிழித்துரையார் தம்மோ
டளவளா வில்லா விடத்து." (68)

பாடலின் பொருள்: பெரியோர்கள் விரும்புகின்றவற்றைத் தானும் அடைய விரும்பாமையும், தங்கள் வீட்டுக்குள் கீழ்மக்கள் என்போரை உள்ளே அழைத்து வராமலிருப்பதும், தனக்கு அறிமுகமில்லாதவர் ஒருவரை, அவர் அறியா வயது சிறு பிள்ளையாக இருப்பினும் இழிவாகப் பேசாமல் இருப்பதும் கடைபிடிக்க வேண்டிய நன்னெறிகளாகும்.

கீழ்மக்கள் எனப்படுவோரை வீட்டுக்குள் அழைத்து வரக்கூடாதாம்! சில நன்னெறிகளைச் சொல்லி அவற்றுக்கு நடுவில் தீண்டாமைத் தீநெறியை நுழைக்கும் உத்தி கவனத்துக்குரியது.

(4) “குரவர் பெயர் முதலியன கூறாமை” என்ற ஆசாரக்கோவை பாடலும் எவற்றைச் செய்யக்கூடாது என்று அறிவுறுத்துகிறது.

தெறுவந்துந் தங்குரவர் பேருரையா ரில்லத்து
உறுமி நெடிதும் இராஅர் – பெரியாரை
என்று முறைகொண்டு கூறார் புலையரையும்
நன்கறிவார் கூறார் முறை. (80)

பாடலின் பொருள்: எவை நன்மை தருபவை என நன்கு அறிந்த ஒருவர், சினம் கொண்டு வெகுண்ட நிலையிலும் மூத்தோரைப் பெயர் சொல்லிக் குறிப்பிடமாட்டார், வீட்டில் உள்ளோரிடம் சினம் கொண்டாலும் அதை நீட்டிக்க மாட்டார், தம்மிற் பெரியாரை முறைப் பெயர் கொண்டு இழிவுபட அழைக்க மாட்டார், கீழ்மக்களாகக் கருதப்படுவோரிடம் முறைமை பாராட்டி உறவு கொண்டாட மாட்டார்.

நல்லவற்றைச் சொல்லி அவற்றோடு அல்லவற்றைக் கலந்து கொடுக்கும் அதே தந்திரம்தான்!

(5) “அந்தணர் வாய்ச்சொல் கேட்டல்” என்ற ஆசாரக்கோவை பாடலும் எவற்றைச் செய்யக் கூடாது, எவற்றைச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

“தலைஇய நற்கருமஞ் செய்யுங்கா லென்றும்
புலையர்வாய் நாள் கேட்டுச் செய்யார் – தொலைவில்லா
அந்தணர்வாய்ச் சொற்கேட்டுச் செய்க அவர்வாய்ச்சொல்
என்றும் பிழைப்ப திலை.” (92)

பாடலின் பொருள்: அறிவுள்ளவர் முக்கியத்துவம் வாய்ந்த நற்செயல்களைச் செய்யும்பொழுது என்றும் புலையரிடத்து நாள் கேட்டுச் செய்யார், ஒழுக்கம் குறையாத ஐயர் ஒருவர் குறித்துத் தரும் நாளில் நற்செயல்களைச் செய்வார். ஏனெனில் அவர் சொல்வது என்றும் பிழையாத் தன்மை கொண்டது. அதுவே நன்மையும் தரும். இங்கு அந்தணர் ஒழுக்கம் குன்றாதவர் என்று காட்டும் பொழுது, புலையர் ஒழுக்கமற்றவர் என்பது சொல்லாமல் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து. மேலும், புலையர் என்று இப்பாடலில் குறிப்பிடப்படுபவர் வள்ளுவர் என்ற சோதிடங்கூறும் கீழ்வகுப்பார் என்று உரை நூல் விளக்கம் தருகிறது.

தமிழகத்தில் குல உயர்வுதாழ்வு, தீண்டாமை என்ற கருத்தாக்கங்கள் எக்காலத்தில் தோன்றின என்பதும், கீழ்மக்கள் என்று ஒரு சிலர் எப்பொழுது விலக்கப்பட்டனர் என்பதும் ஆய்வுக்குரியன.

ஆனால் ஆசாரக் கோவை சங்க காலத்துக்குரியதாக இருக்க வாய்ப்பே இல்லை என்பதற்கு மேற்காட்டிய பாடல்களையே அகச் சான்றாகக் கொள்ளலாம். எப்படியும் அது சங்கம் மருவிய காலத்துக்குரியதாகவோ இன்னும்கூட பிற்காலத்தியதாகவோ இருக்கக் கூடும்.

தீண்டாமையை ஒழுக்கங்களில் ஒன்றாகக் காட்டும் இந்த ஆசாரக் கோவையை இயற்றியது யார்? எப்போது? ஆசாரக் கோவையை இயற்றியவர் திரமிள சங்கத்தவர், அதாவது சமணர் என்பது ஆசான் ம. செந்தமிழனின் சாற்றுரை! அந்தத் திரமிளம் தீது! ஆகவே திராவிடம் தீது!

இதுதான் அவர் கற்பிக்கும் எதிர் ஏரணம்! ஆசாரக் கோவையை இயற்றியவரின் பெயர் தெரியாத ஒன்றோ அல்லது ஐயுறு ஆய்வுக்குரியதோ அன்று. பெருவாயின் முள்ளியார் இயற்றியதுதான் ஆசாரக் கோவை! யார் இந்தப் பெருவாயின் முள்ளியார்? 

ஆசாரக் கோவை நூலை இயற்றியவர் யார்? என்று செந்தமிழன் எவர் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும், அவர் ஒரு சமணர் என்று உறுதியாக உணர்த்துகின்றார். இரண்டாவதாக அது களப்பிரர் காலத்திய நூல் என்பதையும் அறுதியிட்டுரைக்கின்றார்.

பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய ஆசாரக் கோவையை இயற்றியவர் பெருவாயின் முள்ளியார் என்பதில் ஐயத்துக்கிடமில்லை. இவர் சமணரா? இல்லை என்பதற்கு ஆசாரக் கோவையிலேயே அகச் சான்று உள்ளது. ஆசாரக் கோவையின் 100 பாக்களுக்கும் நுழைவாயிலாக அமைந்திருப்பது தற்சிறப்புப் பாயிரம். அதனை அப்படியே தருகிறேன்:

ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி,
ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம்
யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை
ஆசாரக்கோவை எனத் தொகுத்தான்-தீராத்
திரு வாயில் ஆய, திறல் வண், கயத்தூர்ப்
பெருவாயின் முள்ளி என்பான். 

நூலின் தற்சிறப்புப் பாயிரத்தால், அப்பாடலின் கருத்தினைக் கொண்டு இந்நூலாசிரியர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

தற்சிறப்புப் பாயிரத்தின் முதலடியே இதனைத் தெளிவாக்கி விடுகிறது.

”ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி” என்றால் என்ன?

எயில் என்றால் மதில். மூன்று மதில்களை அழித்தவன் யார்? அரக்கர்களின் மூன்று கோட்டைகளை அழித்தவன் சிவபெருமான் என்பது சிவனடியார்தம் நம்பிக்கை. ”ஆர் எயில் மூன்றும் அழித்தான்” ஆகிய சிவனின் அடி தொழுது நூலியற்றும் ஆசிரியர் சமணராக எப்படி இருக்க முடியும்? அவர் சிவனடியாராக மட்டுமே இருக்க முடியும். வண் கயத்தூர் என்பது அவரது ஊர்ப்பெயர். முள்ளியார் என்பது அவரது இயற்பெயர்.

வண் கயத்தூர் பெருவாயின் முள்ளியார் எனும் சிவனடியார் இயற்றிய ஆசாரக்கோவை தீண்டாமை பேசும் தீநூல் என்றால் அதற்கான பழி சமண முனிவர் கூட்டமாகிய திரமிள சங்கத்தை எப்படிச் சாரும் என்பதை ஆசான் ம. செந்தமிழன் அவர்களே விளக்க வேண்டும்.

ஆசாரக் கோவையை தமிழ்ச் சங்க நூல் வரிசையில் வைத்திருப்பது பெரும் பாவம் என்கிற செந்தமிழன் அப்படி வைத்திருப்பது யார் என்று சொல்லவே இல்லை. எப்படியாயினும் அது சங்கத் தமிழ் நூலன்று, ஆனால் அந்நூலின் காலக் குறிப்பு என்ன? என்பதைக் கணிக்கத்தான் வேண்டும்.

ஆசாரக்கோவை களப்பிரார் ஆட்சியில் திரமிள சங்கத்தில் இயற்றப்பட்ட நூல் என்று கற்பித்துச் சமணத்தின் மீது பழிசுமத்துவது ஆசான் ம. செந்தமிழனின் முயற்சியாக அமைவதால், அந்நூலின் காலக் கணிப்பு ஆய்வுக்குரியதாகிறது.

நூலாசிரியரை அறிந்து கொள்ள நூலிற்குள்ளேயே அகச் சான்று இருப்பது போல் நூலின் காலக் கணிப்புக்கும் அகச் சான்றுகள் உள. பார்ப்போம்.

தீண்டாமை பேசும் ஆசாரக்கோவை களப்பிரர் ஆட்சிக் காலத்தில் திரமிள சங்கத்தில் சமணரால் இயற்றப்பட்டது என்பது ஆசான் ம. செந்தமிழனின் துணிபு. நூலை இயற்றிய வண் கயத்தூர் பெருவாயின் முள்ளியார் சமணரல்லர் என்பது மட்டுமல்லாமல், சிவனடியாரே ஆவார் என்பதைத் தற்சிறப்புப் பாயிரத்தின் சான்று கொண்டு பார்த்தோம். ஆனால் ஆசாரக் கோவையின் காலக் கணிப்பு அவ்வளவு எளிதன்று. அதில் மாறுபாடுகளுக்கு இடம் இருக்கத்தான் செய்யும்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஆசாரக்கோவை சைவ சமயத்தைச் சேர்ந்தவரால் இயற்றப்பட்ட நூல் என்று சொல்லும் அந்நூலின் சீராளர் (பதிப்பாசிரியர்) தமிழறிஞர் தி. செல்வகேசவராய முதலியார் அது கடைச்சங்கம் மருவிய காலத்து நூல்களுள் ஒன்று என்றும் கணிக்கிறார். இந்நூலுக்கு மூலநூல் ஆரிடம் என்னும் வடநூலெனவும் பாயிரத்திலிருந்து தெரிவதாகச் சொல்கிறார். இந்நூல் தொகுக்கும் ஆசாரங்கள் யாவும் சுக்ர ஸ்மிருதி நூலின் பாடல்கள் என்று வடமொழிப் புலவர் கூறுவதாகவும் எடுத்துக்காட்டுகின்றார்.

ஆனால், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தமது ‘தமிழ் இலக்கிய வரலாறு’ நூலில், ஆபஸ்தம்ப கிருஹ்யசூத்திரம், ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம், போதாயனதர்ம சூத்திரம், கௌதம சூத்திரம், விஷ்ணு தர்ம சூத்திரம், வசிஷ்ட தர்ம சூத்திரம், மனு ஸ்மிருதி, உசனஸ ஸம்ஹிதா, ஸங்க ஸ்மிருதி, லகு ஹாரித ஸ்மிருதி ஆகிய பல நூல்கள் ஆசாரக் கோவை நூலுக்கு அடிப்படையாய் அமைந்துள்ளன எனக் குறிப்பிடுவார். 

ஆசாரக் கோவை குறித்து மயிலை சீனி. வேங்கடசாமி சொல்வதாவது:

“பல்வேறு வெண்பா வகைகளும் விரவி, கடவுள் வாழ்த்து தவிர்த்து நூறு பாடல்களைத் தன்னகத்தே கொண்டதாய் இந்நூல் விளங்குகிறது. இந்நூல் மக்கள் அன்றாட வாழ்வில் கொள்ள வேண்டுவன இவை, தள்ள வேண்டுவன இவை என்பதைக் கூறுகிறது. எனவே, இதனை வடமொழிக் கருத்துகள் வழங்குவது போன்றதொரு நூல் என்பர். இந்நூலின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் என்பவர். இவர், வடமொழியில் இருடிகள் சொல்லிய ஆசார சீலங்களைத் தொகுத்து ஆசாரக்கோவை என்னும் இந்நூலில் கூறுவதாகச் சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்று செப்புகின்றது. இவர் காலமும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டாய் இருக்கலாம் என்பர்.” (மயிலை சீனி. வேங்கடசாமி, களப்பிரர் ஆட்சியில் தமிழகம்)

"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு"

எனப் பாடப்பெறும் நாலடியார் முதல் ஏலாதி முடியவுள்ள பதினென்கீழ்கணக்கு நூல்களில் திருக்குறள் உள்ளிட்ட ஒருசில மட்டும் கடைச் சங்க காலத்திலேயே எழுதப்பட்டவை. பெரும்பாலானவை களப்பிரர் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்டவை. ஒரு சில களப்பிரர் ஆட்சிக் காலம் முடிந்த பின் எழுதப்பட்டவை. ஆசாரக்கோவை ஒப்பளவில் பிற்காலத்தியது என்பதில் ஆய்வறிஞர்கள் உடன்படுவர். அகச் சான்றுகளின் அடிப்படையில் ஆசாரக்கோவையின் காலத்தைக் கணிக்க அறிஞர் வையாபுரிப்பிள்ளை செய்யும் முயற்சி கவனத்துக்குரியதாக உள்ளது.

வையாபுரிப் பிள்ளை எழுதுகிறார்:

“ஆனால் ‘ஆரிடத்து’ என்று ஆசிரியர் பொதுப்படக் கூறுவதாலும், ‘தொகுத்தான்’ என விவரித்தலாலும், ஸ்மிருதிகள் பலவற்றிலிருந்து ஆசாரக்கோவைப் பொருள்கள் தொகுக்கப் பெற்றன என்று கொள்ளுதலே தக்கது. சுக்கிர ஸ்மிருதி எனப்படும் உசனஸ் ஸம்ஹிருதைக்கும் ஆசாரக்கோவைக்கும் பல கருத்தொற்றுமைகள் காணப்படுகின்றன….”

“பிற்பட்ட ஸ்மிருதிகளிலிருந்து சில கருத்துக்கள் ஆசாரக்கோவையில் கொள்ளப்பட்டுள்ளன. ‘நிறையுவா மெல்கோலுந் தின்னார்’ (ஆசாரக்கோவை 17) என்பது அவற்றுள் ஒன்று. இது சுக்ரஸ்மிருதியிற் காணப்படவில்லை. லகுஹாரீ தஸ்மிருதியில் உள்ளது. இந்த ஸ்மிருதியின் காலமும் கி.பி. 600க்குப் பிற்பட்டதே. ‘மண்டலஞ்செய் எண்ணல்’ (ஆசாரக் கோவை 19) என்பது மற்றொன்று. இது சுக்ரஸ்மிருதியில் காணப்படுகிறது; ஆனால் இச்செய்யுளின் இறுதியடியிற் காணப்படும் “கொண்டாரரக்கர் குறித்து’ என்னுங்கருத்து இதன்கண் இல்லை. இரண்டும் ஒருங்கே காணப்படுவது லகுசா தா தபத்திலும்’ லகு அத்திரிஸ்மிருத்தியிலும் தான். இவ்விரண்டும் கி.பி. 600க்குப் பிற்பட்டனவே. வடமொழியில் இந்த ஸ்மிருதிகள் கி.பி. 600க்குப் பின் தோன்றியவையாயின், இவை தமிழ்நாட்டிற்பரவி, மொழிபெயர்க்க வேண்டும அவசியம் ஏற்பட்டு மொழிபெயர்க்கப்படுவதற்கு சுமார் 150 ஆண்டுகள் சென்றிருக்கலாம். ஆகவே சுமார் கி.பி 750ல் ஆசாரக்கோவை இயற்றப்பட்டிருக்க வேண்டும்….”  (எஸ். வையாபுரிப்பிள்ளை, திரிகடுகமும் சிறுபஞ்ச மூலமும் [பழைய உரையுடன்])

பல்வேறு வடமொழி நூல்களோடு ஆசாரக்கோவைக்குள்ள ஒற்றுமையைக் காட்டி அவற்றின் காலக்கணிப்பைத் துணைகொண்டு ஆசாரக்கோவையின் காலக்கணிப்புக்கு வழியமைக்கும் வையாபுரிப் பிள்ளையின் பார்வையை மறுத்தல் அரிதே. மனுஸ்மிருதியோடு ஆசாரக்கோவை ஒத்திருப்பதைக் காட்ட அவர் காட்டும் சான்றினைப் படமாகக் கீழே இணைத்துள்ளேன்,

இவ்வாறு ஆசாரக்கோவையின் அகச் சான்றுகளைக் கொண்டு அது பிற்பட்ட ஸ்மிருதிகளிலிருந்து தொகுக்கப்பட்டது என்பதையும் கி.பி. 750 வாக்கில் இயற்றப்பட்டது என்பதையும் வையாபுரிப் பிள்ளை நிறுவுகிறார்.

எப்படிப் பார்ப்பினும் ஆசாரக்கோவை களப்பிரர் காலத்திய நூலாக இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. ஒருவேளை அப்படி ஒரு வாய்ப்பிருப்பதாக ஆசான் ம. செந்தமிழன் கருதினால், அதற்குச் சில சான்றுகள் தர முடிந்தால் நன்று. ஆனால் அப்போதும் ஆசாரக் கோவை சமணர் இயற்றிய நூலாகி விடாது. அது சிவனடியார் பெருவாயின் முள்ளியர் இயற்றிய நூல் என்பதை மறுக்கவே இயலாது.

சமணம் ஆரியத்துக்கு இசைவானது என்றும் சைவம் ஆரியத்துக்கு எதிரானது என்றும் கருத்துருவாக்க செந்தமிழன் செய்யும் முயற்சிக்கு ஆசாரக்கோவை பற்றிய அவரது பழிதூற்றல் உதவாது. சமணத்தின் மீது காழ்ப்புக் கொள்ள ஆசாரக்கோவையை அடிப்படையாகக் கொள்ளும் ஆசானின் முயற்சி வீண்.

சமணத் துறவிகளின் திரமிள சங்கத்தை நிறுவிய வச்சிரநந்தி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தும் ஆசான் ம. செந்தமிழன் தீண்டாமைத் தீமைக்கான பழியைச் சமணத்தின் மீது சுமத்துகிறார், அதற்கு ஆசாரக் கோவை என்ற நூலையும் அது இயற்றப்பட்ட காலத்தையுமே சான்றாகக் கொள்கின்றார்.

ஆசாரக் கோவையை இயற்றியவர் சமணரல்லர் என்பது மட்டுமல்ல, அவர் பெருவாயின் முள்ளியார் என்னும் சிவனடியாரே என்பதற்கு அந்நூலின் தற்சிறப்புப் பாயிரமே சான்றாக இருக்கக் கண்டோம்.

ஆசாரக் கோவை களப்பிரர் ஆட்சிக் காலத்தில்தான் இயற்றப் பெற்றது என்பதற்கும் சான்றேதுமில்லை. களப்பிரர் ஆட்சி போய் விட்ட பிறகே ஆசாரக் கோவை இயற்றப்பட்டது என்பது தமிழறிஞர் பலரின் துணிபுமாகும்.

ஆசாரக் கோவை அதன் உள்ளடக்கத்தில் தமிழில் எழுதப் பெற்ற மூலநூலன்று என்பதும் ஒரு முகன்மைச் செய்தியாகும். அதன் கருத்துகள் எங்கிருந்து பெறப்பட்டன என்பதிலிருந்து ஆரியச் சிந்தனைகள் எவ்வாறு தமிழ் மரபுக்குள் நுழைந்தன என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

கடந்த 1916ஆம் ஆண்டில் ஆசாரக் கோவையைச் சீர்மை செய்து வெளியிட்ட பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் திரு டி. செல்வகேசவராய முதலியார் தமது பதிப்புரையில் சொல்கிறார்:

”இந்நூலுக்கு ஆதாரம் ஆரிடம் என்பது தற்சிறப்புப் பாயிரத்தில் குறித்திருக்கின்றது. இலக்கண விளக்கவாசிரியர் வழிநூலை விளக்கும் சூத்திரவுரையில் மொழிபெயர்ப்பு நூலுக்கு ஆசாரக் கோவையை உதாரணம் காட்டியிருக்கிறார். இந்நூலிற்கூறிய ஆசாரங்கள் பெரும்பானமையாய் வடமொழியிலுள்ள சுக்ரஸ்ம்ருதியிலிருந்து தொகுத்தவை என வடநூற்புலவர் கூறுகின்றனர்….”

வையாபுரிப்பிள்ளை சொல்கிறார்:

“… இந்நூல் வடமொழி நூலின் வழித்தோன்றியது என்பதில் சிறிதும் ஐயப்பாடில்லை.... ஆனால் ஆரிடத்து என ஆசிரியர் பொதுப்படக் கூறுவதாலும், தொகுத்தான் என விவரித்தலாலும், ஸ்மிருதிகள் பலவற்றிலிருந்து ஆசாரக் கோவைப் பொருள்கள் தொகுக்கப் பெற்றனவென்று கொள்ளுதலே தக்கது. சுக்ரஸ்மிருதி எனப்படும் உசனஸ் ஸம்ஹிதைக்கும் ஆசாரக்கோவைக்கும் கருத்தொற்றுமைகள் பல காணப்படுகின்றன.

“… ஆசாரக்கோவையில் காணப்படும் உண்ணுங்கால் நோக்குந்திசை கிழக்கு” என்பது ஆபஸ்தம்ப தர்ம சூத்திரத்திலும் (I 11, 31, 1) வசிஷ்ட தர்ம சூத்திரத்திலும் வந்துள்ள கருத்தேயாகும். இவ்விரண்டு சூத்திரங்களும் கி.மு. 300க்கு முன் தோன்றியன என்பர். ‘ஒழிந்த திசையும் வழிமுறையால் நல்ல’ என்பது கி.பி. 200க்கு முன் தோன்றியதாகக் கருதப்படும் மனுதர்ம சாஸ்திரத்தில் (II, 52) வந்துள்ளது. எனவே இவை சுக்ரஸ்மிருதியினின்றும் கொள்ளப்பட்டனவெனல் பொருந்தாது. ஆசாரக்கோவையிலுள்ள பல கருத்துக்கள் சுக்ரஸ்கிருதியில் காணப்படவில்லை. உதாரணமாக ‘ஆசாரம் வீடு பெற்றார்’ இவரெனக் கூறும் இறுதிச் செய்யுளைக் கூறலாம். இங்ஙனமே சுக்ரஸ்மிருதியிலுள்ள கருத்துக்கள் பல ஆசாரக்கோவையிற் காணவில்லை. 3ஆம் அத்தியாயத்தின் பிற்பகுதியிலுள்ள சிரார்த்த நியமங்களும், அதன்பின் இறுதியிலுள்ள 9ஆம் அத்தியாயத்தில் வரும் கழுவாய் நியமங்களும் உதாரணங்களாம். பிற தர்மசூத்திரங்களிலும் காணப்படாது, சுக்ரஸ்மிருதியில் மட்டும் காணப்படும் கருத்துக்கள் பெரும்பாலும் இல்லையென்றே சொல்லலாம்….”

இவ்வாறான அகச் சான்றுகளிலிருந்து வையபுரிப்பிள்ளை ஆசாரக்கோவையின் காலக்கணிப்புக்குச் செல்வதை முன்பே பார்த்தோம். ஆசாரக்கோவையின் ஆசாரங்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பதற்கு மேலும் பல சான்றுகளை அவர் தருகிறார்:

”பிற்பட்ட ஸ்மிருதிகளிலிருந்து சில கருத்துக்கள் ஆசாரக்கோவையில் கொள்ளப்பட்டுள்ளன. ‘நிறையுவா மெல்கோலுந்தின்னார்’ (ஆசாரக்கோவை 17) என்பது அவற்றுள் ஒன்று. இது சுக்ரஸ்மிருதியிற் காணப்பட வில்லை. ‘லகுஹாரீ தஸ்மிருதியில்’ உள்ளது….”

வடமொழி ஸ்மிருதிகளை கிரந்த வரிவடிவத்தில் எடுத்துக்காட்டி அவற்றுக்கு நிகரான ஆசாரக்கோவையின் ஆசாரங்களையும் வையாபுரிப்பிள்ளை பட்டியலிடுவது கருத்துக்குரிய இலக்கிய ஒப்பாய்வு என்பேன்.

இந்த ஒப்பாய்வின் அடிப்படையில் ஆசாரக் கோவையைக் காலங்கணிக்க வையாபுரியார் முற்படும் போது சிவனடியாராகிய பெருவாயின் முள்ளியார் கோத்துக் கொடுக்கும் ஆசாரங்களின் மூலம் ஆரியமே என்பதும் தெளிவாகிறது. ஆசாரக்கோவையை சமண நூல் என்று கற்பித்துக்கொண்டு ஆசான் ம. செந்தமிழன் சீறித் தொடுக்கும் கணைகள் சிவனியத்துக்கு எதிராகத் திரும்புகின்றன. இதுதான் சைவம் என்றால் சைவத்துக்கு எதிராகத் திரும்புகின்றன. இந்த சைவம் வைதிகத்துக்கு எதிரானதென்று எப்படிச் சொல்ல இயலும்? சைவம் வைதிகத் தொற்றினால் பீடிக்கப்பட்டமைக்குத்தான் ஆசாரக்கோவையைச் சான்றாகக் கொள்ளத்தகும்.

இந்த அடிப்படையில் ஆசாரக்கோவையின் ஆசிரியர் ”பெரும்பாவம் செய்து விட்டார், அவரது குற்றத்தை மறக்காதீர்கள், மன்னிக்காதீர்கள்” என்று செந்தமிழனைப் போல் பொங்க வேண்டியதில்லை. வரலாற்று நிகழ்வுகளை ஆய்வு செய்யும் போது உவத்தல் காய்தலுக்கு இடமில்லை. காலங்கடந்து எவரையும் கழுவேற்றும் மனநிலை உயிர்ப்புள்ள அறிஞர்களுக்கு ஏற்றதன்று.

தீண்டாமை பேசிய முதல் தமிழ் நூல், செந்தமிழன் பார்வையில், ஆசாரக்கோவைதான் என்பது மெய்யானால் அது ஒரு சிவனடியார் ஆரியந்தழுவி இயற்றிய நூல் என்பதில் ஐயமில்லை. சமணத்துக்கு எதிராக விரல் நீட்ட அதில் ஒன்றுமில்லை. சமணத்தின் மீது சினங்கொள்ள வேறு அடிப்படை இருப்பின் எடுத்துக் காட்டலாம். ஆசாரக்கோவை அதற்கு உதவப் போவதில்லை.

- தியாகு