ஆதிகாலப் பொருள்முதல்வாதம்:

போலச்செய்தல் என்பதை அடிப்படையாகக் கொண்ட தொடக்கால மேய்ச்சல் நில மக்களின் உற்பத்திச் சடங்குகள், தொடக்ககால வேளாண்மை மக்களின் வளமைச் சடங்குகள், தாந்திரீகச் சடங்குகள் ஆகிய அனைத்துமே தங்கள் தங்கள் பொருளாதாரத் தேவைகளை ஈடுசெய்ய செய்யப்பட்ட சடங்குகள் என்பதை மேற்கண்ட தரவுகள் உறுதி செய்கின்றன. எனவே ஆதிகால மனிதனின் போலச்செய்தல் செயல்பாடுகளும், அதன் பிந்தைய அநாகரிக மக்களின் இடைக்காலம் வரையிலான (கண ஆட்சிமுறை வலிமையாக இருந்த காலம் வரை) போலச்செய்தலை அடிப்படையாகக் கொண்ட அனைத்து வகையான சடங்குகளும் பொருளாதாரத் தேவைகளுக்காகச் செய்யப்பட்டவை என்பதால் அவை அனைத்தும் பொருள்முதல்வாதத் தன்மை கொண்டவை. ஆகவே அவற்றில் இருப்பது எல்லாம் ஆதிகாலப் பொருள்முதல்வாதம்தான்.

உலகம் முழுவதும் இதே நிலைதான் இருந்து வந்தது. அதுபோன்றே அன்றைய கடவுள்கள் என்போர் மனிதர்கள்தான். அவர்களுக்கு மானுடத் தன்மை அல்லது அரை மானுடத்தன்மைதான் இருந்தது. அவர்கள் இக்காலக் கடவுள்களைப் போன்றவர்கள் அல்ல. மனிதர்கள் தங்களது விருப்பங்களான பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றவே இம்மனிதத் தெய்வங்களை வேண்டினர். அன்று மனிதர்கள், அதாவது இனமுன்னோர்கள்தான் தெய்வங்களாக இருந்தனர் ஆகவே அன்றைய அவர்களது வேண்டுதல் பாடல் முதலான அனைத்திலும் ஆன்மீகமோ, சமயமோ, கடவுளோ இருக்கவில்லை. ஆகவே தொழிலும் வேளாண்மையும் வளர்ச்சி அடைந்து சொத்துடமை உருவாகத் தொடங்கி வகுப்புகளும் வர்க்கங்களும் தோன்றும் வரை அதாவது நாகரிக காலம் தொடங்குவதற்கு முன்வரை ஆதிகாலப் பொருள் முதல்வாதம்தான் இருந்தது. கருத்துமுதல்வாதம் இருக்கவில்லை.

கருத்துமுதல்வாதத்தின் தோற்றம் 

deviprasad chattopathiyayaaஉடல் உழைப்பிலிருந்து முற்றிலும் விலகி, பிறருடைய உழைப்பால் உருவாகும் உபரியை உண்டு வாழும் நிலைமை தோன்றியதாலேயே கருத்துமுதல்வாதம் தோன்றுகிறது. இந்தக் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்பன குறித்து ஏங்கெல்சு, “எல்லாத் தத்துவங்களினுடைய அடிப்படையான கேள்வி சிந்தனைக்கும் இருப்புக்கும் இடையே உள்ள உறவு பற்றியதுதான். தங்களது உடலின் அமைப்பு குறித்து அறியாதிருந்த அப்பழங்காலத்தில் மனிதர்கள் கனவுகள் தரும் மாயத் தோற்றங்களின் தாக்கத்தால், தங்களது சிந்தனைகளும், உணர்வுகளும் உடலின் செயல்பாட்டினால் விளைவது அல்ல என்றும் அதற்கு உடலிலுள்ள வேறோன்றுதான் காரணம் எனவும் நம்பினார்கள். அந்த வேறொன்றுதான் ஆன்மா எனவும் அது மரணத்தின்போது உடலைவிட்டு வெளியேறி விடுகிறது எனவும் கருதினார்கள். அதன்பின் மனிதர்கள் தங்கள் ஆன்மாவுக்கும் வெளி உலகத்திற்கும் இடையேயான உறவு குறித்து ஆராயத் தொடங்கினார்கள். அந்த ஆய்வின் முடிவில் அதற்குப்பதில் தந்த தத்துவவாதிகள் இரு பிரிவாகப் பிரிந்தனர். ஆன்மாவே இயற்கையைவிட முதன்மையானது எனக் கருதியவர்கள் கருத்துமுதல்வாதிகளாக ஆயினர். இயற்கையே முதன்மையானது எனக் கருதியவர்கள் பல்வேறு பொருள்முதல்வாதிகளாக ஆயினர்” எனக் கூறுகிறார் (21). உடல் உழைப்பிலிருந்து முழுமையாக விலகி இருக்கும்பொழுதுதான் கனவு போன்ற மாயத்தோற்றங்களை உண்மை என நம்பி, ஆன்மா குறித்த கருத்துகள் உருவாகின. ஆனால் உண்மையில் வரலாற்றுத் தேவைகளும் வாழ்க்கைக்கான தேவைகளும் தான் கருத்துமுதல்வாதம் தோன்றுவதற்கும் அது நிலைத்து நிற்பதற்குமான அடிப்படைக் காரணம்.

கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம் உருவாக வேண்டும் என்றால் உணர்வானது உலகிலிருந்து விடுபடவேண்டும். இதற்குரிய முன்நிபந்தனை சிந்திக்கும் வர்க்கம் உடல் உழைப்பிலிருந்து விடுபட வேண்டும் என்பதாகும். ஏனென்றால் உழைப்புச் செயல்முறை என்பது இயற்கைக்கும், இயற்கையின் பகுதியாக இருப்பதுமான மனித உடலுக்கும் இடையே நடக்கும் ஒன்றோடொன்றுக்கான வினையின் விளைவாகும். மனிதன் உடலுழைப்பு சார்ந்த பணியில் ஈடுபட்டிருக்கும்வரை இயற்கை அல்லது பொருள்தன்மையுள்ள உலகமானது மனித உணர்வின் மீது அதன் முத்திரையைப் பதிக்கிறது. இதுகுறித்து மார்கசு, ‘முதலாவது உழைப்பு என்பது மனிதனும் இயற்கையும் பங்கெடுக்கும் செயல். இதில் மனிதன் அவனது விருப்பத்திற்கு ஏற்ப அவனுக்கும் இயற்கைக்குமிடையே உள்ள பொருளியல் தன்மையான செயல்களைக் கட்டுப்படுத்துகிறான், ஒழுங்கு செய்கிறான். இயற்கையின் பகுதியாக உள்ள அவன் இயற்கைக்கு எதிராக நிற்கிறான். அவனது கைகால்கள், தலை, உடலின் பல்வேறு உறுப்புகள் ஆகியவற்றை இயக்குகிறான். அவனது நோக்கம் தனது தேவைகளுக்கு ஏற்ப இயற்கைப் பொருளை உருவாக்கிக் கொள்வதாகும்’ என்கிறார் (22). இயற்கையின் பண்புகளைப் புரிந்து கொண்டு தனது உழைப்பின் மூலம் மனிதன் தனக்குத் தேவையான பொருள்களை உருவாக்கிக் கொள்கிறான். ஆகவே உழைப்புச் செயல்முறை என்பது இயற்கையுடன் மனிதன் கொண்டுள்ள உணர்வூர்வான தொடர்பு வடிவம். ஆகவே மனிதன் இயற்கையோடு கொண்டுள்ள உழைப்பு என்ற அந்த உணர்வுபூர்வமான தொடர்பை விடுவிக்காமால் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம் என்பது உருவாக முடியாது.

வர்க்க சமுதாயம் தோன்றிய போது கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம் தோன்றியதானது தற்செயலாக நிகழ்ந்த ஒரு சமநிகழ்ச்சியாகக் கருத முடியாது என ஏங்கெல்சு கூறுகிறார் (23). ஏனென்றால் அப்பொழுதுதான் மனித சமூகத்தின் ஒருவர்க்கம் உழைப்பிலிருந்து விடுபட்டு பிறருடைய உழைப்பில் வாழும் சூழ்நிலை உருவாகிறது. அதனால் அந்த ஆளும் வர்க்கம் உழைப்புச் செயல்முறையிலிருந்து விடுபட்டு இருந்ததால் அது இயற்கையோடு இருந்த உணர்வுபூர்வமான தொடர்பிலிருந்து அதாவது உழைப்பிலிருந்து விடுபட்டு கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தில் சிந்திக்க முடிந்தது. ஆதலால் அப்பொழுதிலிருந்துதான் கருத்துமுதல்வாதம் மலரத் தொடங்கியது. இதனை வேறுவகையிலும் விளக்கலாம். சமுதாயத்தின் தொடக்ககட்டத்தில் ஒரு செயலைச் செய்ய மனித மனது திட்டமிட்டது. பின் அந்த திட்டமிட்ட செயலை பிற மனிதர்களைக் கொண்டு செயல்படுத்தியது. ஆதலால் நாளடைவில் நாகரிக வளர்ச்சி என்பது மனித மனதின் உழைப்பினால்தான் ஏற்பட்டது எனக் கருதும் நிலை உருவாகியது. எனவே ஆளும் வர்க்கத்தின் உணர்வில் மனது அல்லது சிந்தனை என்பது மிகப்பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றது. அதன் காரணமாக வர்க்க சமுதாயம் முழுவதும் எண்ணம் அல்லது சிந்தனை முதலிடம் பெறுவது என்பதும், கருத்துமுதல்வாதம் உருவாவதும் தவிர்க்க முடியாததாக ஆகியது.

உலக வாழ்க்கையைக் கண்டனம் செய்து நிராகரிக்கும் தத்துவ நோக்கு வாழ்க்கையையே விட்டு விலகிய தத்துவத் தேடலின் விளைவென்றே கூற வேண்டும். பண்டைய கிரேக்கத்தில் அடிமைமுறை வளர்ச்சி பெற்றதும் உண்டானதைப் போலவே, உபநிடதகால இந்தியாவிலும் உலகை அடியோடு வெறுக்கும் போக்கு உருவானது. சுத்த உணர்வு, சுத்த ஞானம் என்றழைக்கப்படும் செயலைவிட்டு விலகிய சிந்தனையே, பொருளால் ஆகிய உலகையும் அதன் மாற்றத்தையும் வெறுக்கும் போக்குக்குக் காரணமாயிற்று. சமுதாயத்தின் ஒரு பகுதி உடல் உழைப்பிலிருந்து முற்றிலும் விலகி, பிறருடைய உழைப்பால் உருவாகும் உபரியை உண்டு வாழும் நிலைமை தோன்றியதாலேயே – அதே போன்று புற உலகின் யதார்த்தத்தை ஒப்புக்கொள்ளும் கட்டாயத்தை விட்டு விலகியதாலேயே இந்நிலை உருவாயிற்று. ஏனெனில் உழைப்பின் செயல்பாடு மட்டுமே புறவயமான உணர்வைத் தோற்றுவிக்க வல்லது. வேறுவிதமாகச் சொல்லவேண்டுமானால், கொள்கை செயலிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டது எனக் கூறுகிறார் சட்டோபாத்தியாயா (24).

கிரேக்கத்தில் கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கு முன்னால் சிந்தனை, செயல் ஆகிய இரண்டும் முதன்மையானதாகவே இருந்தன. அவற்றிற்கிடையே முரண்பாடுகள் இருக்கவில்லை. இதிகாசங்களிலும் பிற கவிதைகளிலும் அறிவென்பது தொழிற்படும் அறிவுதான். அறிவது என்பது எவ்வாறு அறிவது என்பதுதான். ஞானம் என்பது தொழிற்படும் திறன் அல்லது உழைக்கும் சக்தி மட்டுமே. உண்மையில் ஞானம் என்பது உண்மையான சிந்தனை, நேர்மையான செயல் ஆகிய இரண்டையும் குறிக்கும் என அன்று கருதப்பட்டது. பின்னாளில் அடிமைமுறை வளர்ச்சி அடைந்த பிறகு உடலுழைப்பு தாழ்வானதாக, கீழானதாகக் கருதப்பட்டது. ஞானம் அல்லது அறிவு என்பது செயலோடு இருந்த தனது உறவை விடுவித்துக் கொண்டது. ஆதலால் இறுதியில் இந்த உலகத்திலிருந்தே தன்னை விடுவித்துக் கொண்டது. கலை என்பது இயற்கையைக் கட்டுப்படுத்துவது, அதன்மூலம் மனிதன் தன்னை விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் கொள்ளும் செயல் என பண்டைய கிரேக்கப் பொருள்முதல்வாதியான டெமாக்கரிட்டசு (Democritus) கருதினார். ஆனால் கிரேக்க அறிஞரும் கருத்துமுதல்வாதியுமான பிளட்டோ, ஞானம் என்பது இயற்கையைப் பற்றிய அறிவல்ல. கருத்துக்களால் ஆன அதி இயற்கை அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்டது பற்றிய அறிவு எனக் கூறினார். ஐரோப்பியத் தத்துவ வரலாற்றில் கருத்தே முதன்மையானது என பிரகடனப்படுத்திய முதல் தத்துவவாதி பிளட்டோ. அதற்கு அவருடைய காலத்தில் கிரேக்கத்தில் இருந்த ஆண்டான்-அடிமைச் சமூகம்தான் காரணம் (25).

சட்டங்கள் (Laws) என்ற நூலில் பிளட்டோ அடிமை முறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தைப் படைத்திருந்தார். அதில் உயர்குடிமக்கள் உடல் உழைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். கலை, கைவினை, வேளாண்மை முதலியன அடிமைகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன்மூலம் உயர்குடி மக்களின் திளைப்புத்தேவைக்கான அனைத்துப் பொருட்களையும் அளிக்க வேண்டிய பணி அடிமைகளுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன்பின் இனி உயர்குடி மக்களின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் எனவும் புதிய வாழ்க்கைமுறை நம்முடைய வாழ்க்கையில் எத்தகைய சிந்தனையைக் கொண்டு வரும் எனவும் அவர் கேள்வி கேட்கிறார். பின் புதியவாழ்க்கை உருவாக்கும் புதிய சிந்தனை அறிவியலுக்கு மாறானதாகவே இருக்கும். இனிமேல் இயற்கையைச் சோதனைக்கு உருவாக்குவதன் மூலம் மட்டுமே புதிய அறிவு உண்டாகும் என்று எண்ண முடியாது. ஏனெனில் இயற்கையைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட கருவிகளும் செயல்பாடுகளும் அடிமைகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன என அவர் பதிலும் தருகிறார். அதாவது புதிய சிந்தனை என்பது அதி இயற்கை அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்டது பற்றிய அறிவு என்பதாகத்தான் இருக்கும் எனவும் அதுவே ஞானம் எனவும் அவர் கூறி தனது கருத்துமுதல்வாதக் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார் (26). அவரது மாணவரான அரிசுடாட்டிலும் கருத்துமுதல்வாதியாகத்தான் இருந்தார்.

உபநிடதகால இந்தியாவிலும் நிலைமை இவ்வாறுதான் இருந்தது. வேளாண்மையும், கலைகளும், கைத்தொழிலும் கீழ்வகுப்பாரின் தொழிலாக ஆகின. ஆளும் வர்க்கமும் அவர்களை அண்டிப் பிழைத்த பூசாரிகளும் உழைப்பின்றி பிறருடைய உழைப்பில் வாழ்ந்து கொண்டிருந்தனர். பிளட்டோ செய்ததைப் போலவே தங்கள் வாழ்கைக்கேற்ப தங்கள் சிந்தனையை அவர்கள் சீரமைத்துக் கொண்டனர். இவ்வாறு சிந்தனைக்கும் உழைப்பிற்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட பிளவே உலகை மறுக்கும் தத்துவம் (கருத்துமுதல்வாதம்) தோன்றக் காரணமாயிற்று. அன்றைய ஆளும் வர்க்கமும் பூசாரிகளும் உழைப்பிலிருந்து விடுபட்டு இருந்ததால் ஆன்மாவை இயற்கையைவிட முதன்மையானது எனவும் இயற்கை ஆன்மாவை விட முதன்மையானது என்பது தவறானது எனவும் கருதினர்.

உழைப்பிலிருந்து விடுபடும்பொழுதுதான் ஆன்மா, கடவுள் போன்ற கருத்துகள் பாதுகாக்கப்படும் என வேதாந்தக் கருத்துமுதல்வாதிகள் நன்கு அறிந்திருந்தனர் எனத்தெரிகிறது. அதனால்தான் தொடக்ககால சட்ட நூலின் ஆசிரியர் பௌதாயணர் வேதங்களும், வேளாண்மையும் ஒன்றை ஒன்று அழிக்கக்கூடியவை எனக் கூறியுள்ளார். மனுவோ பார்ப்பனர்களும் சத்திரியர்களும் வேளாண்மையை செய்யவே கூடாது எனவும் வேளாண்மை அடிமைத்தொழில், அது தீங்கிழைக்கக் கூடியது எனவும் கூறுகிறார். உடல் உழைப்பு என்பது கேவலமானது என்ற கருத்தே மனுபோன்ற வேதாந்திகளின் கருத்தாக இருந்தது. ஏனென்றால் உடல் உழைப்பு பொருள்முதல்வாதச் சிந்தனையைக் கொண்டுவரும் என அவர்கள் கருதினர். ஆனால் வேதாந்திகள் போற்றும் இரிக் வேதத்தின் தொடக்கக் காலப் பாடல்களில் மக்களின் கூட்டுழைப்பு போற்றிப் புகழப்படுகிறது. உணவு, கால்நடைகள், செல்வம் போன்றவற்றைப் பெருக்குவதற்காகக் கடவுள்களும் மக்களோடு சேர்ந்து உழைப்பது என்பது அடிக்கடி சொல்லப்பட்டுள்ளது. பண்டைய இப்பாடல்களில் வேதாந்திகள் வெறுக்கும் கைவினைஞன் தெய்வங்களின் நிலைக்கே உயர்த்தப்படுகிறான். அவன் கைதேர்ந்த தொழிலாளி, உன்னதமான கலைஞன் என அவன் இப்பாடல்களில் புகழப்படுகிறான். அந்தக்காலத்தில் அறிவு அல்லது ஞானம் என்பது உழைப்பை விட்டு விலகியதாகவோ அதனை வெறுப்பதாகவோ இருக்கவில்லை (27). ஆகவே கி.மு. 7ஆம் நூற்றாண்டிலிருந்து, அதாவது உபநிடதகாலத்தில் இருந்துதான் வட இந்தியாவில் கருத்துமுதல்வாதம் வளரத் தொடங்கியது எனலாம்.

நகர அரசும் தொல்கபிலரும் 

கண ஆட்சிமுறையின் அழிவும் நவீன நகர அரசும்

தொல்பழங்காலத்தின் இறுதிக்கட்டத்தில் இனக்குழுக்களிடையே தோன்றிய கண ஆட்சிமுறை அநாகரிக காலத்தின் இடைக்காலம் வரை வலிமையோடு இருந்து வந்தது. ஆனால் அநாகரிக காலத்தின் இறுதிக்கட்டத்தில் வேளாண்மையும் தொழிலும் வளர்ச்சியடைந்து வீரயுகக்காலம் தோன்றுகிறது. வீரயுகக் காலத்தில் கண ஆட்சிமுறை நீடித்த போதிலும் அது பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகிறது. கண ஆட்சிமுறையின் சிறப்பம்சங்களான இரத்த உறவுமுறை, அகமணமுறை, இணைமணம், ஆண்பெண் சமத்துவம், கணத்தின் ஒற்றுமை உணர்வு, முழுமையான சனநாயகம், கண ஆட்சிமுறையில் இருக்கும் ஆட்சிக்குழுக்களான மக்கள் மன்றம், கண சபை, இராணுவத்தலைவன் ஆகிய அனைத்துமே கேள்விக்கும் குழப்பத்துக்கும் உள்ளாகின்றன. தொழில்-வணிக வளர்ச்சியும், சொத்துரிமையும், அந்நியர் குடியேற்றமும், நகரம் உருவாதலும், கொள்ளைப் போர்களும் இன்னபிறவும் சேர்ந்து கண ஆட்சிமுறை அழிந்து ஒரு புதிய ஆட்சிமுறையான நவீனஅரசு உருவாகும் சூழ்நிலை தோன்றிக் கொண்டிருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக நீடித்திருந்த கண ஆட்சிமுறையின் வீழ்ச்சி பல குழப்பங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாறுதல் காலம் என்பது சில தலைமுறைகள் நீடிக்கிறது.

இதன் தொடக்க காலகட்டத்தில் வேளாண்மை, தொழில் ஆகியவற்றின் வளர்ச்சிக்காகவும், தனிமனித ஆசைகளுக்காகவும், குழப்பத்தால் ஏற்பட்ட அவநம்பிக்கையாலும் சடங்குகளின் எண்ணிக்கையும் பூசாரிகளின் தேவையும் மிகமிக அதிகமாகிறது. ஆகவே இதன் தொடக்கத்தில் பூசாரிகள் அதிக வருமானமும் வலிமையும் பெறுகிறார்கள். ஒரு கட்டத்தில் குழப்பங்கள் முடிவுக்கு வந்து நகரமும் நகர அரசும் உருவாகிறது. இரத்த உறவுள்ள குலங்கள் பல ஒன்று சேர்ந்துதான் நகரத்தை உருவாக்குகின்றன. ஆனால் நகரம் முழுமையடையும்பொழுது குலம், கணம் முதலியன இல்லாதுபோய், கண ஆட்சிமுறைக்கான முன்பு சொன்ன சிறப்பம்சங்கள் அனைத்தும் இல்லாதுபோய் ஒரு புதிய நவீன அரசு உருவாகிறது. அத்துடன் சொத்துரிமையும், ஒருதார மணமும், குடும்பமும், புறமணமுறையும், ஆணுக்குப்பெண் அடிமையாதலும், பரத்துமையும், பொதுமகளிர் முறையும், ஏழையும் செல்வந்தனும், சிறு விவசாயும் பெருநிலக்கிழாரும், ஆண்டான் அடிமையும், தொழில் பிரிவுகளும், வர்க்கங்களும், வகுப்பும் உருவாகின்றன. இவைகளும் அரசும் ஒன்றுக்கொன்று இணையானவை. ஒன்றில்லாமல் ஒன்றிருக்க இயலாது.

நகர அரசுகளும் பேரரசுகளும்:

தொடக்கத்திலேயே வேளாண்மையைச்சார்ந்து இருப்பவர்கள் குறைவாகவும், தொழில் வணிகம் இன்னபிறவற்றைச் சார்ந்து இருப்பவர்கள் அதிகமாகவும் இருக்கும்பொழுது கிரேக்கத்தைப் போன்று ஆண்டான் அடிமை அரசு உருவாகிறது. இதற்கு மாறுபட்டு வேளாண்மையைச் சார்ந்து இருப்பவர்கள் அதிகமாகவும், தொழில், வணிகம் இன்னபிறவற்றைச் சார்ந்து இருப்பவர்கள் குறைவாகவும் இருக்கும்பொழுது தமிழகத்தைப் போன்று வரம்புக்குட்பட்ட முடியாட்சி உருவாகிறது. இந்த இருவகையிலும் நகர அரசு என்பது நகர அரசாகவே மிக நீண்ட காலம் நீடிக்கும் பொழுது தொழில்நுட்பம் பெருகி, உற்பத்தி பேரளவில் வளர்ச்சியடைந்து, வணிகம் உலகளாவிய அளவில் நடைபெற்று, இந்த நகர அரசு என்பது வளர்ச்சிபெற்ற வணிக நகர அரசாக ஆகிறது. இந்த நகர அரசுகள் சுயமான சுதந்திரமான சிந்தனைகளை உடையனவாகவும், சனநாயகத்தன்மையைப் பெற்றனவாகவும், பொருள்முதல்வாத மெய்யியலையும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினையும் கொண்டனவாகவும், நிறையப் புதிய கண்டு பிடிப்புகளைப் செய்பவனாகவும் இருக்கின்றன எனக் கூறுகிறார் கார்டன் சைல்டு (Gordon childe). அதே சமயம் இந்த நகர அரசுகள் பேரரசாக ஆகும்பொழுது அவை புதியதாக எதனையும் உருவாக்குவதோ கண்டுபிடிப்பதோ இல்லை என்பதோடு அவை மக்களிடையே மூட நம்பிக்கைகளையும் மதக் கருத்துக்களையும், பிற்போக்குச் சிந்தனைகளையும் பரப்பி மக்களின் அறிவியல் தொழில்நுட்பச் சிந்தனைகளைக் கட்டுப்படுத்துகின்றன எனக் கூறுகிறார் (28). பேரரசுகள் மக்களைக் கட்டுப்படுத்தி அடக்கி ஆள இவை போன்ற மதக்கருத்துகள் மூடநம்பிக்கைகள் பிற்போக்குச் சிந்தனைகள் தேவைப்படுகின்றன.

உலகளவில் சுமேரிய நகர அரசுகளும், கிரேக்க நகர அரசுகளும் புகழ்பெற்றவை. மெசபடோமியாவின் சுமேரிய நகர அரசுகளையும் அதன்பின் அங்கு உருவான அக்கேடியன் பேரரசு, பாபிலோனியப் பேரரசு, அசீரியப் பேரரசு, பாரசீகப்பேரரசு போன்றனவற்றையும் விரிவாக ஆய்வுசெய்துதான் கார்டன் சைல்டு மேற்கண்ட முடிவுகளைக் கண்டறிந்துள்ளார். தமிழக நகர அரசுகளையும் வட இந்தியாவின் மகதப் பேரரசையும் ஆய்வு செய்து இந்நூலாசிரியரும் அதே முடிவுக்குத்தான் வந்துள்ளார் (29). ஆகவே வளர்ச்சியடைந்த சிறுகுறு நகர அரசுகள் என்பன பேரரசுகளைவிட மக்களுக்கானவைகளாகவும், வளர்ச்சிக்கானவைகளாகவும், முற்போக்குச் சிந்தனைகளையும் சனநாயகத் தன்மையையும் கொண்டனவாகவும் இருந்துள்ளன என்பதை வரலாறு பலவகையிலும் மெய்ப்பித்துள்ளது. நகர அரசுகள் வளர்ச்சிபெற்ற வணிக நகர அரசுகளாக உருவாகும்பொழுது பூசாரி வகுப்பை முழுமையாக அழித்து ஒழித்து விடுகின்றன என்பதையும் வரலாறு உறுதி செய்கிறது. அதே சமயம் பேரரசுகள் பூசாரி வகுப்பை வளர்த்தெடுத்துப் பாதுகாக்கின்றன. பேரரசுகள் மக்களைக்கட்டுப்படுத்த பூசாரிகள் தேவைப்படுகின்றனர்.

வட இந்திய வரலாறும் கருத்துமுதல்வாதமும்:

வட இந்தியாவில் கி.மு. 800 வரை ஆரிய இனக்குழுவில், கணஆட்சிமுறை இருந்து வந்தது. ஆகவே அக்காலம்வரை அவர்களிடத்தில் ஆதிகாலப் பொருள்முதல்வாதம் இருந்துகொண்டிருந்தது எனலாம். கி.மு. 8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் வட இந்திய ஆரிய இனக்குழுக்கள் கிழக்கு நோக்கி பயணம் செய்து கங்கைப் பகுதியில் நிலைகொள்கிறார்கள். அப்பொழுதுதான் பெரிய அளவில் இரும்பு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படுகிறது. வேளாண்மையும் தொழிலும் வேகமாக வளர்ச்சி அடைகின்றன. சொத்துடமையும், தொழில் பிரிவுகளும், வகுப்புகளும் வர்க்கங்களும் சிறுகுறு நகர அரசுகளும் உருவாகத் தொடங்குகின்றன. இதன் காரணமாக ஆளும் வகுப்பும், அவர்களை அண்டிப்பிழைக்கும் பூசாரிவகுப்பும் உழைப்பிலிருந்து விடுபடத் தொடங்குகின்றன. அதன்விளைவாக கி.மு. 7ஆம் நூற்றாண்டில் கருத்துமுதல்வாதச் சிந்தனைகளைக் கொண்ட உபநிடதங்கள் உருவாகின்றன. உபநிடதங்களில் பொருள்முதல்வாதச் சிந்தனைகளும் இருக்கின்றன. உபநிடதங்கள் குறித்து பொக்கே, ‘உபநிடதங்களில் ஒழுங்கான கட்டமைப்பு இல்லை. கூறியது கூறல், முன்னுக்குப்பின் முரணான கருத்து விளக்கம் ஆகியன எங்கும் எதிலும் மலிந்து கிடக்கின்றன…. அக உணர்வு எழுச்சியால் இயற்றப்பட்ட உபநிடதங்கள் எல்லாவித பொருண்மைகளையும் பரிசோதனைமுறையில் புரட்சிகரமாக சிந்திக்க முயன்றவை’ எனக் கூறுகிறார் (30).

வட இந்தியாவில் கி.மு. 7ஆம் 6ஆம் நூற்றாண்டளவில் 16 சனபதங்கள் எனப்படும் சிறுகுறு அரசுகள் இருந்தன என சொல்லப்பட்ட போதிலும் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் புத்தர்காலத்தில் மகதம், கோசலம் ஆகிய இரண்டு அரசுகளே ஓரளவு வளர்ச்சிபெற்ற அரசுகளாக இருந்தன. இந்த இரு அரசுகளைச் சுற்றிலும் ஏராளமான பழங்குடி அமைப்புகள் இருந்தன. முன்னேறிய தொல்லினப்பழங்குடி அமைப்புகளாக அங்கர்கள், வச்சிகள், சாக்கியர்கள், காசிகள், கோய்லர்கள், மல்லர்கள் ஆகியோர் இருந்தனர் எனக் கூறுகிறார் சட்டோபாத்தியாயா (31). ஆனால் அடுத்த நூறு ஆண்டுக்களுக்குள் மகதம் கோசலத்தையும் இன்னபிற தொல்லினப்பழங்குடி அமைப்புகள் அனைத்தையும் தோற்கடித்து ஒரு பேரரசாக உருவாகியது. அதாவது இந்த சிறுகுறு நகர அரசுகள் வளர்ச்சியடைவதற்கு முன்பே அனைத்தும் இல்லாதுபோய் பேரரசு உருவாகியிருந்தது. இந்தச் சூழ்நிலை பூசாரி வகுப்பு வளர்ச்சியடைவதற்கும் அது ஒரு தனிவகுப்பாக உருவாவதற்குமான ஒரு கெடுவாய்ப்பினை வழங்கியது. எனினும் புத்த, சமண மதங்களின் வளர்ச்சியால் அவர்கள் பெரிதளவான பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார்கள். மௌரியர்கள் மகதப் பேரரசை ஆண்ட போது அவர்களின் நிலை மிகவும் கீழான நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஆனால் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட பூசாரி வகுப்பான, பார்ப்பன வகுப்பு (புசியமித்திரன் தலைமையில்) தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டது. பின் தனக்கான நூல்களையும், இதிகாச இலக்கியங்களையும், புராணங்களையும் உருவாக்கிக் கொண்டதோடு, வைதீக பார்ப்பனியத்தையும், சாதியத்தையும், சமற்கிருத மயமாக்கலையும் கொண்டுவந்தது. பண்டைய வேதகால நூல்கள் உட்பட அனைத்தையும் தங்களின் கண்ணோட்டத்தில் இடைச்செருகல்களாலும், திருத்தங்களாலும் நீக்கல்களாலும் நிரப்பியது. எதிர்மறை கருத்துள்ள எண்ணியம் (சாங்கியம்) போன்ற பொருள்முதல்வாத மெய்யியலைக் கொண்ட நூல்கள் அனைத்தும் அழிவுக்குள்ளாகின. இதன்பின் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் ஆட்சிக்கு வந்த குப்தப்பேரரசு வைதீக பார்ப்பனியத்துக்கும், பார்ப்பனர்களுக்கும், சமற்கிருத மொழிக்குமான பொற்கால ஆட்சியாக இருந்தது. அன்று சாதியம் வட இந்திய சமூகத்தில் வன்முறையாக நடைமுறைப் படுத்தப்பட்டது. பின் இந்த வைதீக பார்ப்பனியமும் சமற்கிருதமயமாக்கலும், சாதியமும் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட்டன. ஒட்டுமொத்தமாக வேதகாலத்தில் இருந்து, இந்தியா என்பது ஒரு ஆன்மீக, சனாதன பூமியாக, வைதீக பார்ப்பனிய பூமியாக, நால்வர்ண சாதிய பூமியாக, சமற்கிருத மொழியின் பூமியாக இருந்து வந்ததாகக் கதைகட்டப்பட்டது. அக்கதை இன்றுவரை வரலாற்று ஆசிரியர்கள் உட்பட அனைவராலும் நம்பப்பட்டு வருகிறது. ஆன்மீக பூமியான இந்தியாவின் அடிப்படை கருத்துமுதல்வாதம்தான் எனவும் இங்கு பொருள்முதல்வாத கருத்துக்கே இடமிருந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது.

பழந்தமிழக நகர அரசுகளும் பொருள்முதல்வாதமும்:

பழந்தமிழகத்தில் கி.மு. 2500க்கு முன்பே இரும்புக்காலம் தொடங்கியிருந்தது. இரும்பு எஃகு பொருட்கள் உலகம் முழுவதும் அன்றே தமிழகத்திலிருந்து ஏற்றுமதியாகின. உலகில் முதல்முறையாக 1100 முதல் 1300 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் இரும்பை உருக்கி இரும்பு எஃகுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை அறிந்தவர்களாக பழந்தமிழர்கள் இருந்தார்கள். இதன்பின் 1000 அல்லது 1500 வருடம் கழித்துத்தான் உலகில் இருந்த பிறநாட்டு மக்கள் இரும்பை உருக்கும் தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டார்கள் (32). அன்றே வெண்கல உற்பத்தியிலும் தமிழர்கள் தலைசிறந்தவர்களாக இருந்தனர். கி.மு. 1500 வாக்கில் ஆதிச்சநல்லூர் ஒரு தொழிற்துறை நகராக இருந்தது. அன்றே பழந்தமிழகத்தில் ஆங்காங்கு சிறுகுறு நகர அரசுகள் உருவாகியிருந்தன. அதே காலகட்டத்தில் தமிழர்கள், தமிழ்க்குறியீடுகளை தங்களின் தமிழ்மொழிக்கான எழுத்தாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். கி.மு. 1000 வாக்கில் பழந்தமிழகத்தில் வளர்ச்சி பெற்ற நகர அரசுகள் உருவாகியிருந்தன. கி.மு. 800 வாக்கில் தமிழ்க்குறியீடுகளில் இருந்து வளர்ச்சிபெற்ற தமிழி எழுத்து உருவாகியிருந்தது. அதற்கு முன்பே சேர, சோழ, பாண்டியர்கள் வேந்தர்களாக ஆகி, தாங்களும் தங்கள் குடிகளான வேளிர்களும் ஒன்று சேர்ந்து, தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி ஒன்றை உருவாக்கி, தங்களைத்தவிர வேறு யாரும் வேந்தர்களாக ஆகமுடியாது என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டனர் (33). தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி என்ற இந்தக்கட்டமைப்பு 1000 வருடங்களுக்கு மேல் நீடித்தது. அன்றே தமிழர்கள் உலகளாவிய கடல்வணிகத்தையும், ஐக்கியக்கடற்படையையும் கொண்டவர்களாக இருந்தனர். இந்தியாவின் கிழக்கு மேற்குக்கடற்கரைகளையும் தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் தங்கள் வணிகக்கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.

பழந்தமிழகத்தில் இருந்த நகர அரசுகளும் கண ஆட்சிமுறையின் அழிவிலிருந்துதான் உருவாகின. ஆனால் இங்கு உருவான தொடக்க கால நகர அரசுகளில் வேளாண்மையைச் சார்ந்தவர்கள் அதிகமாகவும், தொழில் வணிகம் இன்னபிறவற்றைச் சார்ந்தவர்கள் குறைவாகவும் இருந்ததால் இங்கு இருந்த நகர அரசுகளில் வரம்புக்குட்பட்ட முடியாட்சி உருவாகி இருந்தது. ஆதலால் இங்கு ஆண்டான் அடிமைமுறை உருவாகவில்லை. இதன் காரணமாக நகர அரசுகள் உருவான காத்திலிருந்தே பொருள்முதல்வாத மெய்யியல்தான் பழந்தமிழ்ச் சமூகத்தின் அடிப்படையாக இருந்து வந்தது. மூவேந்தர்கள் உருவான பிறகும் பழந்தமிழகத்தில் தந்தைக்குப்பிறகு மூத்தமகன் என்ற அரசுரிமைமுறை பின்பற்றப்படவில்லை. வேந்தர் குடும்பங்களில் இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு நகர அரசை ஆண்டனர். அனைவருக்கும் மூத்தவன் வேந்தனாக இருந்தான். ஆதலால் இங்கு பேரரசுகள் உருவாகவில்லை. நகர அரசுகள்தான் மிக நீண்டகாலமாக இருந்துவந்தன. கி.மு. 1000க்கு முன்பிருந்தே ஓரளவு வளர்ச்சிபெற்ற நகர அரசுகளாக இருந்ததன் காரணமாக, பழந்தமிழக நகர அரசுகள் கார்டன் சைல்டு (V.Gordon Childe) கூறுவதுபோல், சுயமான சுதந்திரமான சிந்தனைகளை உடையனவாகவும், சனநாயகத் தன்மையைப் பெற்றனவாகவும், பொருள்முதல்வாத மெய்யியலையும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினையும் கொண்டனவாகவும், நிறைய புதிய கண்டு பிடிப்புகளைப் செய்பவனாகவும் இருந்தன.

பழந்தமிழகமும் தொல்கபிலரும்:

வளர்ச்சிபெற்ற வணிக நகர அரசுகளைக் கொண்டதாக பழந்தமிழகம் இருந்த சூழ்நிலையில்தான் தமிழ் அறிவு மரபின் தந்தை எனக் கருதப்படும் தொல்கபிலர் கி.மு. 800 வாக்கில் பழந்தமிழகத்தில் தோன்றினார். கி.மு. 750 வாக்கில் எண்ணியம் (சாங்கியம்) எனப்படும் புகழ்பெற்ற பொருள்முதல்வாத மெய்யியலைத் தோற்றுவித்தார். கி.மு. 1000க்கு முன்பிருந்தே பொருள்முதல்வாத மெய்யியல் பழந்தமிழகத்தில் வளர்ச்சி பெற்று வந்து கொண்டிருந்ததின் காரணமாகத்தான் கி.மு. 750 வாக்கில் எண்ணியம் என்ற ஒரு வளர்ச்சி பெற்ற பொருள்முதல்வாத மெய்யியலைத் தொல்கபிலரால் தோற்றுவிக்க முடிந்தது. கிரேக்கத்தில் வளர்ச்சி பெற்ற நகர அரசுகள் இருந்த போதிலும் இதுபோன்ற வளர்ச்சி பெற்ற பொருள்முதல்வாத மெய்யியல் அங்கு தோன்றவில்லை. அதற்கு அங்கு ஆண்டான் அடிமைமுறை இருந்ததே காரணம். கி.மு. 5ஆம் நூற்றாண்டிற்குப்பிறகு ஒரு கட்டத்தில் ஏதென்சு அரசில் 90,000 அத்தீனியர்களும், 3, 65,000 அடிமைகளும், 45,000 குடியேறியவர்களும் இருந்தனர் (34). நகரக்குடிகளான அத்தீனியர்கள் உழைப்பிலிருந்து விடுபட்டவர்களாக இருந்ததும், அடிமைகளை அடக்கி ஒடுக்க வேண்டிய தேவை இருந்ததாலும் அங்கும் கருத்துமுதல்வாதம் சாக்ரடிசு, பிளட்டோ காலத்திற்கு முன்பே தோன்றி விட்டது. ஆதலால் கிரேக்க நகர அரசுகளில் தோன்றிய பொருள்முதல்வாத மெய்யியல், தொல்கபிலரின் எண்ணியம் போன்ற வளர்ச்சிபெற்ற பொருள்முதல்வாத மெய்யியலாக உருவாக இயலவில்லை.

வட இந்தியாவில் நகர அரசுகள் உருவாகி வளர்ச்சியடைவதற்கு முன்னரே அங்கு மகதப் பேரரசு உருவாகி விட்டது. ஆதலால் வட இந்தியாவில் தொல்கபிலரின் எண்ணியம் போன்ற வளர்ச்சிபெற்ற பொருள்முதல் மெய்யியல் தோன்ற வாய்ப்பு இருக்கவில்லை. நகர அரசுகள் வளர்ச்சி பெறாததால்தான் அங்கு பூசாரி வகுப்பு இருக்க முடிந்தது. வளர்ச்சிபெற்ற நகர அரசுகள் அனைத்தும் பூசாரி வகுப்பை அடியோடு அழித்துவிடுவதை வரலாறு உறுதி செய்துள்ளது. சங்க காலத்தில் பூசாரி வகுப்பு என்ற ஒரு தனி வகுப்பு இருக்கவில்லை. யார் வேண்டுமானாலும் வழிபாடு நடத்தலாம், சடங்குகள் செய்யலாம் என்ற நிலைதான் இருந்து வந்தது. சங்ககாலத்தில், புலையர் முதல் அந்தணர் வரை பலரும் வழிபாடும், சடங்குகளும் செய்துவந்தனர். வளர்ச்சிபெற்ற கிரேக்க நகர அரசுகளிலும் ஓரளவு அந்நிலைதான் இருந்துவந்தது. ஆதலால் பழந்தமிழகத்தின் சமூகச் சூழ்நிலைதான் தொல்கபிலரின் எண்ணியத்தையும், பக்குடுக்கை நன்கணியாரின் அணுக் கொள்கையையும், கணாதரின் சிறப்பியலையும் (வைசேடிகம்), கௌதமனாரின் அளவியலையும் (நியாயவியல்), ஆசிவகம் போன்றவற்றையும் தோற்றுவிக்கக் காரணமாக இருந்துள்ளது எனலாம். எண்ணிய மெய்யியல் தோன்றிய பின் தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்களும், கலை இலக்கிய நூல்களும் பேரளவில் பழந்தமிழகத்தில் தோன்றின. ஆனால் கெடுவாய்ப்பாக காலவெள்ளத்தில் அவை அனைத்தும் அழிந்து போயின. தத்துவார்த்த கலை, அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இலக்கிய நூல்களில் 5 விழுக்காட்டுக்கும் குறைவான சங்க இலக்கிய நூல்களே தற்பொழுது கிடைத்துள்ளன.

பார்வை:

21. இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம், தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, படைப்பாளிகளின் பதிப்பகம், தமிழில் வெ. கிருசுணமூர்த்தி, 2010, பக்: 187.

22. உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, NCBH, சூன்-2010, பக்: 882.

23. “ “ “ பக்: 880, 881.

24. இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம், தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, படைப்பாளிகளின் பதிப்பகம், தமிழில் வெ. கிருசுணமூர்த்தி, 2010, பக்: 165, 166.

25, 26, 27 “ “ “ பக்: 168-170.

28, 29. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், NCBH, சனவரி-2023 புத்தகம்-2 பக்: 539-543.

30. இந்திய வரலாற்றில் பகவத் கீதை, பிரேம்நாத் பசாசு, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், சனவரி-2016 பக்: 81.

31. உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, NCBH, சூன்-2010, பக்: 612, 613.

32. ஆயுத தேசம், இரா.மன்னர் மன்னன், பயிற்று பதிப்பகம், 2021, பக்: 14-44.

33. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், NCBH, சனவரி-2023 புத்தகம்-1 பக்: 82-85, 90-91, 429-436, 450,

34. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், NCBH, சனவரி-2023 புத்தகம்-1 பக்: 259

- கணியன் பாலன்

Pin It