ஓசோன் மண்டலத்தை ஒரு சர்வதேச உடன்படிக்கை மூலம் காப்பாற்றியது போல, பிளாஸ்டிக் பொருட்களைக் கட்டுப்படுத்த உலகளவில் ஓர் உடன்படிக்கை தயாராகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 1960களில் அறிமுகமானதில் இருந்து பிளாஸ்டிக் உற்பத்தி முப்பது மடங்கு அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் 430 மில்லியன் டன் நெகிழிக் கழிவுகளை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இது இப்போதுள்ள 8 பில்லியன் என்ற உலக மக்கத்தொகையின் அளவை விட அதிகம்.
என்றாலும் இதன் உற்பத்தியும் பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2050ல் இதன் நுகர்வு இரட்டிப்பாகும் என்று அஞ்சப்படுகிறது. இந்த அசுர வளர்ச்சி விரைவில் நிறுத்தப்பட, மீண்டும் நெகிழி இல்லா உலகம் உருவாக சமீபத்தில் பாரிஸில் நடந்த மாநாட்டில் உலக அரசுகள் ஒரு புதிய வரைவுத் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளன. ஆட்சியாளர்கள் மனது வைத்தால் 2040ற்குள் இதன் உற்பத்தியை 80% குறைக்க முடியும் என்று அண்மையில் ஐநா கூறியுள்ளது.
2024ல் நடைமுறைக்கு வரும் என நம்பப்படும் இத்தகைய உடன்படிக்கை, நினைப்பதுபோல அத்தனை சுலபமாக ஏற்படாது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 2040ல் கடலில் கொட்டப்படும் இப்பொருட்களின் அளவு இருமடங்காகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மட்டுமே பயன்படும் நெகிழிப் பொருட்கள் ஒட்டுமொத்த யுகே நாடு உமிழும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவைவிட அதிகம்.நுண் பிளாஸ்டிக்குகள் மனித இரத்தம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் தாய்ப்பாலில் கலந்துள்ளது. கருவுற்ற தாயின் நஞ்சுக் கொடியிலும் காணப்படுகின்றன. இப்பொருட்களில் கலந்துள்ள தீங்கு செய்யக்கூடிய 3200 நச்சுப்பொருட்களால் பூமிக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் ஏற்படும் பாதிப்பு பற்றி பெரும்பாலானோர்க்கு இன்னும் முழுமையாகத் தெரியாது.
ஐநா சூழல் திட்ட அமைப்பின் (UNEP) 2022 கூட்டத்தில் இதற்கு ஒரு தீர்வு காண உலக அரசுகள் கூடின. இதையடுத்து தொடர் கூட்டங்கள், உடன்படிக்கைக்கான வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பாரிஸில் இதன் இரண்டாவது அமர்வு நடந்தது. அடுத்த இரு கூட்டங்கள் நடைபெறவுள்ளன. கடின உழைப்பு மற்றும் அக்கறை இருந்தால் மாண்ட்ரீல் ஓசோன் உடன்படிக்கை போல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உடன்படிக்கை இதிலும் ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இத்தகைய ஒன்றிற்காக குப்பை முதல் கடல் வரை, மனித நலம் முதல் காலநிலை மாற்றம் வரை பல்வேறு துறைகளில் ஆர்வமுள்ள பொதுமக்கள் பெரும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
இந்த ஆதரவு அரசியல் அழுத்தமாக மாறும் என்ற பெருத்த எதிர்பார்ப்பு இப்போது உருவாகியுள்ளது. இவற்றின் கட்டுப்பாட்டிற்கு புதிய தொழில்நுட்பங்கள் எவையும் தேவையில்லை. ஒரு முறை மட்டும் பயன்படும் நெகிழிகளைக் கொண்டு பொட்டலமிடுதலைத் தவிர்த்தல், மறுபயன்பாட்டை உறுதிப்படுத்துதல், வேதி நெகிழிகளை மக்கக் கூடிய உயிரி நெகிழிகளைக் கொண்டு பதிலீடு செய்தல் போன்ற நமக்குத் தெரிந்த வழிமுறைகளின் மூலம் இவற்றின் பயன்பாட்டை 80% குறைக்கலாம் என்று ஐநா சூழல் அமைப்பு கூறுகிறது.
பெரிய நிறுவனங்கள்
அரசுகள் புதிய நெகிழிகளின் உற்பத்தியைக் குறைக்க அதிக வரிவிதிப்பு, நெகிழித் தொழிற்ஸாலைகளுக்கு வழங்கப்படும் மானிய உதவியைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளன. ஓசோன் உடன்படிக்கையின் போது நடந்ததுபோல இப்பொருட்களை அதிகம் பயன்படுத்தும் யூனிலிவர் (Unilever), கோக்கோ கோலா (Coca-cola) உட்பட நூறு பெரிய தொழிற்துறையினர் அடங்கிய நெகிழி உடன்படிக்கைக்கான உலகக் கூட்டமைப்பின் வலுவான ஆதரவு இதற்கு உள்ளது.
இதற்கான உயர் குறிக்கோள் கூட்டமைப்பில் (High ambition coalition) இத்தாலி, அமெரிக்கா தவிர மற்ற வளர்ச்சியடைந்த ஏழு நாடுகளின் ஜி7 அமைப்பு உள்ளது. வலுவான ஒரு நெகிழிக் கட்டுப்பாட்டு உடன்படிக்கையை தொடக்கத்தில் எதிர்த்த ஜப்பான் இப்போது மனம் மாறி முழு உடன்படிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஐநா சூழல் அமைப்பு வன உயிரினங்கள் பாதுகாப்பு, நச்சுக் கழிவு கட்டுப்பாடு மற்றும் ஓசோன் உடன்படிக்கை போன்ற பல உலக உடன்படிக்கைகள் ஏற்படக் காரணமாக இருந்துள்ளது.
பூமியைக் காக்கும் ஓசோன் அடுக்கை அரிக்கும் நூறு நச்சுப் பொருட்களின் உமிழ்வைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் ஓசோன் உடன்படிக்கை மூலம் ஒரு மனதாக ஒப்புக் கொண்டன. வேறெந்த சர்வதேச உடன்படிக்கை ஏற்படுத்தியதைக் காட்டிலும் இதன் மூலம் பூமியை சூடாக்கி வந்த காலநிலை மாற்றத்தின் தீவிரம் குறைந்தது.
சுலபமானதில்லை எந்த உடன்படிக்கையும்
இதனால் மட்டும் நெகிழிக் கட்டுப்பாடு உடன்படிக்கை சுலபமாக ஏற்படும் என்று எதிர்பார்ப்பது கடினம். ஓசோன் உடன்படிக்கை ஏற்பட்டபோது ஆங்கிலத்தில் இருந்த அதன் உள்ளடக்கத்தின் அம்சங்கள் வலிமையான லாபநோக்குடன் செயல்படும் தனியார் நிறுவனங்களால் மாற்றப்படும் என்ற அச்சத்தினால் ஐநாவின் மற்ற ஐந்து அதிகாரப் பூர்வ மொழிகளில் உடனே மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை. இந்த முயற்சிகளுக்கு தடை போட எந்த பன்னாட்டு விதிமுறையையும் பின்பற்றாத இந்தியா, அமெரிக்காவில் உள்ள உற்பத்தியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
வெப்ப உயர்வுக்கு முக்கிய காரணம்
99% புதைபடிவ எரிபொருட்களில் இருந்தே தயாரிக்கப்படும் நெகிழிகளே புவி வெப்பமயமாதலிற்கு முக்கிய காரணம். நெகிழி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மக்களிடம் பேராதரவை இழந்துள்ள நிலையிலும் இவர்கள் இப்பொருட்களின் கட்டுப்பாட்டுக்கு எதிரான செயல்களைத் தொடர்கின்றனர். பேச்சுவார்த்தைகளில் மூன்று வேறுபட்ட நிலைபாட்டை எடுத்துள்ள குழுக்கள் உள்ளன. பெரும்பான்மையான நாடுகள் உலகளாவிய கட்டுப்பாட்டு விதிமுறைகளையே விரும்புகின்றனர். இதற்கு எதிரானவர்கள் இந்த விதிமுறைகள் மனமுவந்து பின்பற்றக் கூடியவையாக இருக்க வேண்டும் என்று கோருகின்றனர்.
போலி வாதம்
பெரும்பாலான நாடுகள் நெகிழி உற்பத்தி கட்டுப்பாடு மற்றும் ஆபத்தான பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றன. ஆனால் தயாரிப்பாளர்கள் மறுசுழற்சி மூலம் இப்பிரச்சனைக்குத் தீர்வு காணலாம் என்று போலியான வாதத்தை முன்வைக்கின்றன. பெரும்பாலானவர்கள் வாக்கெடுப்பு மூலம் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தும்போது பலர் வீட்டோ வாக்குரிமையை ஆதரிக்கின்றனர்.
ஒரு மனதான சம்மதத்திற்காக பாரிஸ் கூட்டத்தில் இரண்டு நாட்கள் தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால் இப்பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை. இதற்கு நடுவில் இந்த மாற்றங்களுக்கு ஆகும் பொருளாதாரச் சுமையை யார் சுமப்பது என்பது பெரும் கேள்விக்குறியாக எழுந்துள்ளது. எது எப்படி இருந்தாலும் உருப்படியான ஓர் உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் உலகம் காத்திருக்கிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்