அமேசான் நாடுகளின் தலைவர்கள் உலகின் மிகப் பெரிய மழைக்காடுகளைக் காப்பாற்ற தங்களுக்கு உதவுமாறு பணக்கார நாடுகளைக் கோரியுள்ளனர். பிலெம் (Belem) என்ற பிரேசில் நகரில் சமீபத்தில் இரண்டு நாட்கள் நடந்த உச்சிமாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் அமேசான் காடுகளைத் தாயகமாகக் கொண்டுள்ள எட்டு தென்னமெரிக்க நாடுகளின் தலைவர்கள் காடுகளைக் காக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு மட்டுமே உரியது இல்லை. இந்த வன வளங்களை உலகம் முழுமையும் பயன்படுத்திக் கொள்கிறது என்று கூறியுள்ளனர்.
அமேசான் ஒத்துழைப்பு உடன்படிக்கை அமைப்பைச் (ACTO) சேர்ந்த இந்த எட்டு நாடுகள் காடுகளைக் காக்கும் பிரம்மாண்டமான சுமையை தாங்கள் மட்டும் சுமக்க முடியாது என்று கூறியுள்ளனர். இறைச்சிக்காக காடுகள் அழிக்கப்பட்டு மேய்ச்சல் நிலங்களாக மாற்றப்படுதல், எண்ணெய் மற்றும் சுரங்கத் தொழில் போன்றவை அமேசானை அழிக்கும் முக்கிய காரணிகள். 2030ம் ஆண்டிற்குள் வன அழிவை முழுவதுமாக தடுத்து நிறுத்துவது பற்றி எந்த உடன்படிக்கையும் இந்நாடுகளுக்கு இடையில் ஏற்படவில்லை.என்றாலும் அமேசானைக் காக்க நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உதவும் பொருளாதார நடவடிக்கைகள், தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருந்து கூடுதல் நிதியுதவியைப் பெறுவதால் அமேசானைக் காப்பாற்ற முடியும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிரேசில் மற்றும் கொலம்பியாவில் புதிய ஆட்சியாளர்கள் பொறுப்பேற்றதில் இருந்து கடந்த ஆண்டில் காடுகள் அழிக்கப்படுவது குறைந்துள்ளது.
கடன் தள்ளுபடி, மனித உரிமை மீறல்களைக் குறைப்பது, சட்டவிரோத சுரங்கத் தொழில் மற்றும் மாசுக்கட்டுப்பாடு போன்றவற்றை மேற்கொள்ள உலக நாடுகள் உதவ வேண்டும் என்று மாநாடு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு சூழல் சீரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக தருவதாகக் கூறிய நிதியுதவியை உடனடியாக வழங்கவும் இந்த நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காடுகள் எங்களை இணைக்கிறது. எங்கள் கண்டத்தின் இதயத்தை நாங்கள் வலுப்படுத்த வேண்டும். இன்றும் என்றும் அமேசானின் அடையாளத்தை நாங்கள் காப்பாற்ற வேண்டும். அமேசானே எங்கள் உலகத் தொடர்புகளுக்கான புதிய பாஸ்போர்ட். ஒரு சிலர் மட்டுமே பயனடையும் வகையில் அமேசானின் வளங்கள் சுரண்டப்படுவது தடுக்கப்பட வேண்டும். புதிய முறைமையில் இதன் வளங்கள், சேவைகள் ஒவ்வொரு மனிதரையும் சென்றடைய வேண்டும்.
புவி வெப்ப உயர்வுக்குக் காரணமாக இருக்கும் புதைபடிவ எரிபொருட்களை அமேசானில் தேடுவதை நிறுத்த வேண்டும் என்று கொலம்பிய அதிபப் கஸ்ட்ராவோ பெட்ரோ (Gustavo Petro) கூறுகிறார். ஆனால் பிரேசில், வெனிசுவேலா, மற்ற எண்ணெய் உற்பத்தி நாடுகள் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. அமேசான் ஆறு உற்பத்தியாகும் இடத்திற்கு அருகில் எண்ணெய் தேடுவதற்காக பிரேசில் அரசின் பெட்ராப்ரஸ் (Petrobras) எண்ணெய் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. ஆனால் இது பற்றி பிரேசில் அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
வாழ்வுக்கான போராட்டத்தில் அமேசானின் காடுகள்
அமேசான் பிரதேசத்தில் உள்ள மற்றொரு நாடான கயானா, வரும் ஆண்டுகளில் இப்பிரதேசத்தின் அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக மாறத் திட்டமிட்டுள்ளது. மரணத்திற்கும் வாழ்வுக்கும் இடையில் எண்ணெய் வளம் மிக்க காட்டை அரசியல் எவ்வாறு காக்கப் போகிறது? இம்மாநாட்டில் எந்த உடன்படிக்கையும் ஏற்படாதது ஏமாற்றம் அளித்தாலும் வருங்கால நடவடிக்கைகளுக்கு இது ஒரு நல்ல தொடக்கம் என்று காலநிலை கண்காணிப்புக் குழுவின் செயலாளர் மார்ஸியோ அஸ்ட்ரினி (Marcio Astrini) கூறுகிறார்.
உருகும் பூமியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உயரும் வெப்பநிலையின் அளவுகள் தொடர்ந்து முறியடிக்கப்படுகிறது. இந்த நிலையில் அமேசானின் எட்டு நாடுகள் மட்டும் காடுகளை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்று பிரேசில் சுற்றுச்சூழல் அமைச்சர் மரைனா சில்வா (Marina Silva) கூறுகிறார். அமேசானைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் மீளமுடியாத அளவில் காடுகள் அழிவதைத் தடுத்து நிறுத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இப்போது இருக்கும் காடுகளின் பரப்பில் 20 முதல் 25% அழிந்தால் அது எப்போதும் மீட்கப்பட முடியாத நிலைக்கு அமேசானை இட்டுச் செல்லும். இந்த நிலை காட்டின் மரணத்தை குறிக்கிறது. அமேசானின் அழிவு என்பது பூமியின் மழைப்போக்கின் அழிவையே குறிக்கிறது. உலகம் இன்னும் பாலைவனமாக மாறாமல் இருக்க ஒரே காரணம் அமேசான் மட்டுமே.
அமேசான் முதலாளித்துவத்திற்கு பலிகடா ஆக்கப்பட்டது. தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளே உலகில் உமிழப்படும் பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்விற்கு முக்கிய காரணம்.
விவசாயத்திற்காக அமேசான் தொடர்ந்து அழிக்கப்படுகிறது. இதன் விளைவுகளை அமேசான் நாடுகள் மட்டும் அனுபவிக்கவில்லை. மாறாக உலகம் முழுவதும் அனுபவிக்கிறது.
மழைக்காடுகளைக் காக்கும் ஒபெக் உடன்படிக்கை
ஐநாவின் உயிர்ப் பன்மயத்தன்மை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான காப் (COP) திட்டத்தின் கீழ் பிரேசில் காங்கோ குடியரசு மற்றும் இந்தோனேஷியாவுடன் காடுகளைக் காக்கும் நோக்கத்துடனான ஓபெக் எனப்படும் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது.
காடுகளை காப்பாற்றும் நோக்குடன் கூடிய இந்த உச்சிமாநாடு நாளை வரலாற்று ரீதியாக அமேசானைக் காக்கும் நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்துவதில் முதல் படியாக அமையும் என்று சூழலியலாளர்கள் நம்புகின்றனர்.
** ** **
மேற்கோள்கள்:
&
https://www.bbc.co.uk/news/world-latin-america-66446449
- சிதம்பரம் இரவிச்சந்திரன்