கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

1947ல் இந்தியாவிற்கு சுதந்திரத்தை வழங்கியது ஆங்கில ஏகாதிபத்தியம். இரண்டாவது உலகப் போரில் கடும் சேதமடைந்த இங்கிலாந்து தனது நாட்டை மீள் கட்டமைக்க அமெரிக்க அரசின் உதவியை சார்ந்து நிற்கும் நிலை ஏற்பட்டது. உலகப் போரில் பெரும் சேதம் அடையாமல் பொருளாதார வலுவுடன் இருந்த அமெரிக்க ஐக்கிய குடியரசு உலக நாயகனாக, பொருளாதார உதவிகள் மூலம் உலக நாடுகளின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்தியமாக ஒளிர ஆரம்பித்த நிலையில் இந்தியாவிற்கு சுதந்திரம் தரப்பட்டது. கத்தியின்றி இரத்தம் இன்றி இந்திய நாடு சுதந்திரம் பெற்றது என்ற கருத்தாக்கமும் வலுவாக ஊன்றப்பட்டது.

சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்று இந்திய ஒன்றியம் பன்னாட்டுக் நிறுவனங்களின் தேவைகளுக்கு தன்னை விற்றுப் பிழைக்கும் நிலையில் உள்ளது. இதையே வளர்ச்சி என்று கூவுகின்றன இந்திய அரசை நடத்தும் அரசியல் கட்சிகள். இந்த வளர்ச்சி மாயையைப் பற்றி சில சொல்ல வேண்டியுள்ளது.

indian farmers 3921966ல் மழைப் பொழிவு சற்றே குறைந்தது. உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால் பெரிய பஞ்சம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. என்றாலும் ஊடகங்கள் நிலைமையை ஊதிப் பெரிதாக்கின. அமெரிக்காவிடம் கோதுமை உதவிக்காக கோரிக்கை வைக்கப்பட்டது. கோதுமை உதவியைத் தொடர்ந்து செய்ய அமெரிக்கா போட்ட நிபந்தனைதான் "இந்தியா பசுமைப் புரட்சிக்கு கையெழுத்திடவேண்டும்" என்பது. 1967ல் அறிவிக்கப்பட்ட பசுமைப் புரட்சிக் கொள்கை 52 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கின்றதே ஏன்?

விவசாய நிலத்தில் கடும் ரசாயன நச்சுப் பொருட்களையும், இரசாயன உப்புக்களையும் இட்டதால் நிலங்கள் மலடாகின்றன. உணவுப் பொருட்களில் ஏறிய நஞ்சு மக்களின் உடல் நலத்தைக் கெடுத்து மக்களை நோயாளிகளாக ஆக்குகின்றது, உயிரிழப்புகள் பெருகுகின்றன. மண், நீர், சூழல் சீர்கேடுகள் நிலைமையை நாளும் மோசமாக்குகின்றன. இவை பற்றிய அறிஞர்களின் ஆய்வுகள் தொடர்ந்து வெளிவருகின்றன.

உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்களுக்குக் கிடைக்கும் குறைந்த விலையால் பாதிக்கப்படுகின்றார்கள். கடன், திவால் நிலை ஆகியவைகளால் தாங்க முடியா மன உளைச்சலில் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். விவசாயத் தொழிலாளிகள் வேலையின்மையாலும், ஊதியக் குறைவாலும் கிராமங்களை விட்டு வெளியேறுகிறார்கள். கிராமங்களின் அருகாமையில் உள்ள சிறு நகரங்களில் வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கிராம மக்களுக்கு இருந்த அருகாமை வேலை வாய்ப்புகள் குறைந்தன. விவசாயத்தைத் தொடர முடியுமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலைக்கு காரணமான பசுமைப் புரட்சி வேளாண்முறையை ஏன் தொடர வேண்டும்? பசுமைப் புரட்சியால் விளைந்த கொடுமைகளை இந்திய அரசோ, மாநில அரசுகளோ ஏன் அங்கீகரிக்க மறுக்கின்றன? ஏன் அன்னிய மரபீனி மாற்று விதைகளைத் தடை செய்யவில்லை? எதற்காக விதைச் சட்டம்?

பசுமைப் புரட்சியைப் பற்றிய ஓர் ஆய்வை நடத்த இந்திய அரசுக்கு ஆர்வமோ, திராணியோ இல்லை. ஆனால் அமெரிக்கத் தொண்டு நிறுவனங்களான ராக்ஃபெல்லர், ஃபோர்டு அறக்கட்டளைகள் இந்தியாவெங்கும் 1952 முதல் 1967 வரை 15 ஆண்டுகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டே பசுமைப் புரட்சியை நடைமுறைப்படுத்த பரிந்துரைத்தனர். அவர்கள் பரிந்துரை வீரிய விதைகள், ரசாயன உரங்கள், பூச்சி களைக் கொல்லிகள், பயிர் ஊக்கிகள், வேளாண் எந்திரங்கள் போன்ற கம்பெனிகளின் பொருட்களுக்கு பெரிய சந்தையை தந்திரமாகத் திறந்துவிட்டது. இதனால் பல லட்சம் கோடி ரூபாய்கள் இந்திய வேளாண் தொழிலில் இருந்து வெளியேறியது.

மாபெரும் கொடுமையாக இந்திய அரசு வேளாண் விலைபொருட்களின் விலையை, பொதுப் பொருட்களின் விலைவாசிக் குறியீட்டிற்கு ஏற்ப உயரவிடாமல் கட்டுப்படுத்தியது. இன்றைய நிலையில் வேளாண் விலைபொருட்களின் விலை கிடைக்க வேண்டிய விலையில் 25% -கால்பங்கு கூட இல்லை. இதனால் விவசாயிகள் இழப்பது பெரும் தொகை. ஆண்டுக்கு ஒரு போக சாகுபடியில் இந்திய விவசாயிகள் இழப்பது சுமார் 40 முதல் 50 லட்சம் கோடிகள் ஆகும். விவசாயத் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் கூலியும் மிகக் குறைவாக உள்ளது. 70 முதல் 80 விழுக்காட்டு மக்களை பலிகொடுத்து இந்திய அரசு நாட்டின் விலைவாசி, கூலி உயர்வு, தொழில் உற்பத்திச் செலவு, அரசாங்கத்தை நடத்தும் செலவு ஆகியவைகளைக் கட்டுப்படுத்துகிறது. அன்னிய இறக்குமதியாளர்களுக்கு குறைந்த விலையில் விளைபொருட்கள் கிடைக்க வகை செய்கிறது.

கிராமங்களை ஏணியாய் பயன்படுத்தும் அரசு கிராமிய தண்ணீர் வசதி, அதன் சுகாதாரம், பள்ளிகள், மருத்துவ வசதிகள் மற்றும் கட்டுமானங்களையும் புறக்கணிக்கிறது. அவலங்களில் இருந்து விடுபட கிராம மக்கள் நகரங்கள், கட்டுமான வேலைகள் நடக்கும் இடங்கள், மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகள் என புலம் பெயர்வது தொடர்கிறது.

நாட்டின் 80% மக்களின் வாங்கும் சக்தியை அநியாயமாகக் குறைத்துவிட்டு, அன்னிய மூலதனத்திற்கு உலகெங்கும் அலையும் அரசு வளர்ச்சிக்கான அரசு அல்ல. தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள சந்தையைத் தேடி உலகையே கலக்கும் வல்லாதிக்கங்களுக்கு சேவை செய்து நாட்டையே அடமானம் வைக்கும் அரசாகவே பரிணமிக்கின்றது.

கிராமங்கள் விடுதலை பெற அமெரிக்கா திணித்த பசுமைப் புரட்சி விவசாய முறையை தேசவிரோத செயலாக அறிவித்து தடை செய்யவேண்டும். இயற்கை வேளாண் முறைக்கு திரும்ப அரசு ஆவன செய்ய வேண்டும்.

உழவர் -நுகர்வோர் கூட்டமைப்புகள் வலைப்பின்னலாக ஏற்படுத்தப்பட்டு விளைபொருள் விநியோக கட்டுப்பாட்டை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இத்தகைய கூட்டமைப்புகள் வலைப்பின்னலாக இணைக்கப்பட்டு, உணவுப்பொருள் கொள்முதலில் நிலவும் மொத்த வணிகர்களின் ஆதிக்கம் நீக்கப்பட வேண்டும்.

விளைபொருட்களின் விலையை நான்கு மடங்காக உயர்த்த வேண்டும். விவசாயத் தொழிலாளர்களின் கூலியை மூன்று மடங்காக உயர்த்த வேண்டும். சாத்தியமா? நிச்சயம் சாத்தியம். இந்திய ஒன்றியத்தின் உயிரைக் காக்க வேண்டும் என்றால் தீர்வுகள் சாத்தியம் ஆக வேண்டும்.

அடுத்து தொழில் துறையைப் பற்றி சில சொல்ல வேண்டும். குறிப்பாக எரிசக்தித் துறை. எரிசக்தித் துறையைப் பற்றிய இந்திய அரசின் அணுகுமுறை தொழிற்புரட்சி காலத்தில் இருந்த நிலக்கரி, எரிவாயு, பெற்றோலிய எண்ணெய்களைத்தான் இன்றும் பிரதம ஆற்றல் ஊற்றாக ஏற்கின்றன.

இந்திய மின்நிலையங்களை, எந்த எரிபொருளால் இயக்குவது சிறந்தது என்ற முடிவு இந்திய அரசின் கைகளில் இல்லை. ஒவ்வொரு மின் நிலையமும் அன்னியக் கூட்டாளிகளால் தீர்மானிக்கப்படுகின்றது.

hydrocarbon projectஇந்தியா முழுவதற்குமான சமையல் எரிவாயு விநியோகம், உரத் தொழிற்சாலைகள், எரிவாயுவால் இயக்கப்படும் நூற்றுக்கணக்கான மின்நிலையங்கள் என ஒரு பெரிய திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. கெயில் (GAIL) இதற்கான எரிவாயுக் குழாய்களை விவசாய நிலங்களில் இடுகிறது. உண்மையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கட்டார் நாடுகளின் எரிவாயுவை, திரவமாக்கி கப்பல்களில் கோழிக்கோடு கொண்டுவந்து பின் எரிவாயுக் குழாய்கள் மூலமாக தமிழ்நாடு, கன்னடம், மும்பை, குசராத், ராஜச்தான், அமிர்தசரஸ், டெல்லி, உபி, வங்காள ஆல்தியா, ஒரிசா, காக்கிநாடா, சென்னை, பெங்களூர் இவற்றோடு சென்னை -திருநெல்வேலி பகுதிகளுக்கு விநியோகிக்கும் திட்டம் இது. பெரிய தொழில் வளர்ச்சித் திட்டம் என இந்திய அரசு உரக்க கீச்சிடுகிறது. அன்னியப் பொருட்களுக்கு நாட்டின் சந்தையை அடுப்பங்கரைவரை திறந்துவிடும் சௌக்கிதார் வேலை ஆபத்தானது. ஏதோ ஒரு காரணத்தால் எரிவாயுக் கப்பல் வருவது நின்றால் எல்லா சமையல் கட்டுகளும் நின்றுவிடுமே.

நிலத்தடி படிம எரிபொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால் புவி வெப்பமாகி பேரழிவு ஏற்படும் என்பதை உலகமே ஏற்றுக் கொண்டு படிம எரிபொருட்களின் பயன்பாட்டை ஒரு கால அட்டவணைப்படி கைவிடுவது என்று 192 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்திய அரசும் கையெழுத்திட்டுள்ளது. பிறகு எதற்காக பிரம்மாண்டமான கைற்றோ கார்பன் எடுப்புத் திட்டம்? வேதாந்தா தலைமையில் ஒரு பெரிய அமெரிக்க கம்பெனிக் கூட்டமே உள் நுழைய உள்ளதே? கெயில் எரிவாயுக் குழாய்த் திட்டம் ஏன்? சாகர்மாலாத் திட்டமும் பல துறைமுகங்களின் திட்டமும் இந்தியாவின் கனிம வேட்டைக்குத் தானே? கையில் இருப்பதை கடைசி பைசாவரை குப்புறக் கொட்டி செலவழிப்பவன் கழிசடை எனப்படுவான். தொழில்துறை நிபுணன் ஆக முடியாது.

நீரியல் விரிசல் முறை மிக ஆபத்தானது, நில நடுக்கங்களை ஏற்படுத்தக் கூடியது என்று அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த முறையைக் கையாள கைற்றோ கார்பன் எடுக்கும் நிறுவனங்க்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது ஏற்க முடியாத, பொறுத்துக் கொள்ள முடியாத செயல். அன்னிய நிறுவனங்களுக்கு எல்லாவற்றையும் எளிதாக்கித் தரும் அற்பத்தனமான முடிவு.

சரி எரிபொருள் தேவைக்கு என்ன செய்வது என்கின்றீர்களா?

ஐயா ஜே.சி. குமரப்பா கூறிய வழி எளிதாகத் தெரியலாம். ஆனால் சீனர்கள் இந்தியா வந்து கற்றுச் சென்று பெரிய அளவில் தங்கள் நாட்டில் வளர்த்துள்ளார்கள்.

பொறியாளர் திரு சா. காந்தி எழுதிய காவேரி சமவெளியைக் கொல்லும் கச்சா எண்ணெய் என்ற நூலைப் படியுங்கள் (நிமிர் வெளியீடு)

அணுமின்சாரக் கழிவுகள், சூரிய ஒளிமின் நிலையங்கள், காற்றாலை ஆகியவற்றின் கழிவுகள் காலப் போக்கில் தீர்க்கமுடியாத தலைவலியாக மாறும். ஆனால் கிராம, நகரக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரித்தால் கிராமத்தில் இருந்து பெருநகரம் வரை தொடர்ந்து வெளியேற்றப்படும் கழிவுகள் உள்வாங்கப்பட்டு செரிக்கப்படும். மொத்த சுற்றுச் சூழலும் தூய்மைப்படும். கூவம் மணக்கும். நொய்யல் புத்துயிர் பெறும். நிலத்தடி நீரும் தூய்மை கெடாது. கங்கையில் கால் நனைக்க கூசவேண்டிய தேவையே இருக்காது. யமுனையின் புனிதம் மீளும்.

கழிவு சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து வரும் மீத்தேன் மின்சாரம் தயாரிக்க, போக்குவரத்து வாகனங்களை இயக்கப் பயன்படும். சுத்திகரிக்கப்பட்டு வெளியிடப்படும் நீரை ஏரிகளில் நிரப்பி மறுசுழற்சிக்கு செய்ய முடியும். செரிக்கப்பட்ட கழிவுகள் NPK மற்றும் தனிமங்கள் கொண்ட உரம். உடனடியாக பயிர்கள் இவைகளை உறிஞ்சும் நிலையில் உள்ளதால் நேரடியாக வயல்களுக்குப் பாய்ச்சலாம். கெயில் போடும் தெண்டக் குழாய்களை விட உரத்தை எடுத்துச் செல்லும் பசுமைக் குழாய்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். உரத் தொழிற்சாலைகளை மூடலாம். நாட்டில் ஏராளமான ஆடு, மாடு, பன்றி, கோழி, வாத்து, மீன் ஆகியவைகளை இயற்கை முறையில் வளர்த்து மக்களுக்கு சத்தான உணவுகளைத் தரலாம்.

கழிவைப் பற்றிய அறிவியல், புரிதல் நம்மைக் கரை சேர்க்கும். போலி அறிவியல் கூத்துகள் நம்மை அடிமைப்படுத்தும்.

கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கைற்றொ கார்பனுக்கும், தொழில் மண்டலங்களுக்கும் சாலைகளுக்கும் போகின்றன. இந்த நிறுவனங்கள் இயங்க ஆற்று நீரும், மணலும் மிக அதிகமாகத் தேவை. தண்ணீர்ப் பற்றாக்குறை விவசாயத்திற்கு சாவு மணி அடிக்கும். ஆறுகளின் நீர் விற்பனைக்குப் போகும். மக்களுக்கான உணவு நீர் எட்டாக்கனியாகும். நிலம் மக்கள் வாழ அருகதையற்றுப் போகும். வாழ்க்கை உனது பிறப்புரிமை அல்ல என்று கூட வல்லாதிக்கம் வேதம் ஓதும். நாட்டின் இறையாண்மை என்று பேசுவதுகூட குற்றமாக அறிவிக்கப்படும்.

எல்லாம் எதற்காக? யாருடைய வளர்ச்சிக்காக? கூறுபோட்டு இந்திய நிலத்தை ஏலம் விட்டபிறகு பாரதமாத்தா கி ஜே என்று கூறுபவனை விட பெரிய எத்தன் இருக்க முடியாது.

- கோ.திருநாவுக்கரசு