pawanஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பின்  பசுமைப் பொருளாதார முன்முயற்சியின் முன்னாள் தலைவராக செயல்பட்ட பவன் சுக்தேவ் ப்ளூ பிளானட் பரிசாலும், கோதன்பர்க் விருதாலும் சிறப்பிக்கப்பட்டார். சுற்றுச்சூழல் நிதியத்தால் அவர் 2010ஆம் ஆண்டின் சிறந்த ஆளுமையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பு 2012ல் பவனை  நல்லெண்ணத் தூதராக நியமித்தது. 2017இல் பவன் சுக்தேவ் இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் (WWF) தலைவராக நியமிக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறார்.

மகரந்தச் சேர்க்கைக்குச் சேவை செய்யும் தேனீக்கள் எப்பொழுதாவது தங்களின் சேவைக்காகப் பணம் கேட்டுள்ளனவா? எனக் கேட்கும் பவன், தேனீக்களிடமிருந்து ஒவ்வொரு வருடமும் நாம் இலவசமாகப் பெறும் சேவையின் மதிப்பு 190 பில்லியன் டாலர் என ஓர் ஆய்வில் மதிப்பிடப்பட்டுளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை வளங்கள் எல்லையற்றவையாக இல்லை. நாம் பெருமளவைத் தின்று தீர்த்து விட்டோம், இயற்கை மதிப்புமிக்கது என்பதால் நாம் பயன்பெறுகிறோம், ஆனால் அது இலவசம் என்பதால் அதை இழக்கிறோம். இயற்கை வளங்களில் பொருளாதார மதிப்பு வெளித் தெரியாமல் மறைந்துள்ளது.

அதுவே நிறுவனங்களும் அரசும் வரைமுறையில்லாமல் இயற்கை வளங்களை அழிக்கவும், அவற்றைப் பாதுகாக்காமல் புறக்கணிக்கவும் காரணமாக உள்ளது என்பதை வலியுறுத்தும் பவன் சுக்தேவ், இயற்கையின் மூலதன மதிப்பை நாம் உணர்ந்து மதிக்கத் தொடங்குவோமானால், அதன் உற்பத்தித்திறனையும், வேலைவாய்ப்புத் திறனையும் அறிந்திருப்போமானால், தீர்வுகள் அனைத்தும் நம் கையில்தான் உள்ளன என்கிறார்.

இயற்கையின்  உள்ளார்ந்த மதிப்பைக் கணக்கிடுவதற்கு எந்த வழியும் இல்லாததால், இயற்கைக்கு ஒரு விலை வைப்பது அவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்தக் காரணமாகலாம். இயற்கை வளங்கள் அனைத்தையும் பரிவர்த்தனைக்கான சரக்குப் பொருட்களாக மாற்றப்படுவதையும் தூண்டலாம். ஆரம்பத்திலிருந்தே இவ்விசயம் ‘டீப்’ திட்டத்தில் (சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல்லுயிர்களின் பொருளாதாரத் திட்டம்) பணியாற்றிய எங்கள் அனைவரையும் கவலை கொள்ள செய்தது.

இயற்கையின் பொருளாதார மதிப்பு கண்ணுக்கு தெரியாதது ஒரு பிரச்சினையாக இருந்த போதும் குருட்டுத்தனமாக இயற்கையைப் பணமாக்குதலில் பெரும் ஆபத்து இருப்பதை நாங்கள் அனைவரும் ஒப்புக் கொள்கிறோம். நாங்கள் மதிப்பீட்டைப் பற்றி பேசும் போது, ​​அதை ஒரு மனித அமைப்பாகவே பார்க்கிறோம் எனக் கூறுகிறார்.

சமூகத்தில் மதிப்பு என்பது சந்தை மதிப்பாகவே பார்க்கப்படுகிறது. விலை இல்லாத பல மதிப்புமிக்க விஷயங்கள் உள்ளன என்பதை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது? என்பது டீப் [TEEB] திட்டத்திற்கான சவாலாக இருந்தது என்றும், இதை “இயற்கைக்கு விலை வைப்பது” என்று கருதுவதை நான் வெறுக்கிறேன் என்றும், இது இயற்கையின் மதிப்பை அங்கீகரித்து மதித்து பாதுகாப்பது குறித்தது என்றும் குறிப்பிடுகிறார் பவன் சுக்தேவ்.

‘டீப்’ திட்டம் இப்போது அதன் மூன்றாம் கட்டச் செயல்பாட்டில் உள்ளது. ஃபிலிப்பைன்ஸ், பூடான், தான்சானியா, லைபீரியா, ஈக்வேடர் ஆகிய ஐந்து வளரும் நாடுகளில் டீப் திட்டத்தின் பரிந்துரைகள்  செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ’டீப்’ திட்டத்தின் இன்னொரு பகுதியாக வெவ்வேறு துறைகளையும், கடல், சதுப்பு நிலம் போன்ற தனித்துவமிக்க உயிர்ச்சூழல்களையும் மதிப்பிடுவது குறித்த ஆய்வுகளும் தொடர்கின்றன.

2016 ஜூலையில், இயற்கை மூலதனக் கூட்டணி (Natural capital coalition), டீப் திட்டத்தைக் கையிலெடுத்து சுற்றுச்சூழல் கணக்கியலை வர்த்தக, தொழில் நிறுவனங்கள் செயல்படுத்தும் விதமாக முன்வைத்தது. அதன் மூலம் 200க்கு மேற்பட்ட நிறுவனங்கள் அதன் கருத்துகளுடன் உடன்பட்டு சுற்றுச்சூழல் கணக்கியலை நடைமுறைபடுத்த முன்வந்ததைத் தனக்கு மிகவும் நெகிழ்வேற்படுத்தி கண்கலங்கச் செய்த தருணமாக பவன் குறிப்பிடுகிறார். 

உலகில் உள்ள அனைத்து நிறுவனங்களும் இதைச் செயல்படுத்தும் வரை நாங்கள் தொடர்ந்து அறிவுறுத்துவோம் என்கிறார். இயற்கையை மதித்து இயற்கையுடன் இணக்கமான வாழ்க்கைமுறை கொண்ட பொறுப்புள்ள ஒரு சமூகத்தை உருவாக்குவது அவருடைய கனவாக உள்ளது.

வங்கிப் பணியை துறந்த பவன் அமெரிக்காவில் உள்ள  யேல்  பல்கலைக்கழகத்தின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுத் துறையின் தலைவரும் தாவரவியல் பேராசிரியருமான பீட்டர் கிரேனுடன் கலந்தாலோசித்தார். அதன் பின்னர்  முதுநிலைக் கல்லூரி மாணவர்களுக்கு  ’டீப்’ திட்டம் கல்வி பாடமாகக்கப்பட்டதால் அதற்கான விரிவுரைகளை அளித்தார் பவன்.

நிறுவனங்கள் பொருளாதாரத்தில் முக்கியமான அங்கம் வகிக்கின்றன. பொருளாதாரத்தில் மூன்றில் இரண்டு பங்கு வேலைகள் தனியார் துறையில் உள்ளன என்பதால், நாளைய நிறுவனங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து 2012ஆம் ஆண்டில், யேல் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் "கார்ப்பரேஷன் 2020" என்ற திட்டத்தை  நூலாக வெளியிட்டார்.

பூமியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு அழிவின் விளிம்பில் இருப்பதால் மாற்றங்களை ஏற்படுத்த அதிக நேரம் இல்லை. இப்போதே நாம் ஏதாவது செய்ய வேண்டும், இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடவடிக்கை எடுத்தால் அது மிகவும் தாமதமாகி விடும் எனக் கருதியதாலே அத்திட்டத்திற்கு “கார்ப்பரேசன் 2020” எனப் பெயரிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாம் அளவிடாததை நம்மால் நிர்வகிக்க முடியாது; எனவே புது வகையான நிறுவனத்தை உருவாக்க வேண்டுமானால், நிறுவனங்கள் அவை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் புறத் தாக்கங்களைக் கணக்கீட்டுக்கு உட்படுத்த வேண்டும்.

அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூக நலன் மீது மிகுந்த அக்கறை கொண்ட நிறுவனங்களை உருவாக்க வேண்டும். அப்படிப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால், நாம் சமுதாயத்தை மாற்ற முடியும் என்பதே அவர் முன்வைக்கும் கருத்து.

கார்ப்பரேசன் 2020:

இந்நூலில் தனியார் நிறுவனங்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறார். முதல் வகை நிறுவனங்களை 1920 வகை நிறுவனங்கள் என அழைக்கிறார், இவை பழுப்புப் பொருளாதாரம் சார்ந்த நிறுவனங்கள். பொருளாதார நடவடிக்கைகளுக்கு பெரும்பாலும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் புதைபடிவ எரிபொருள்களான, நிலக்கரி, எண்ணெய்,எரிவாயு ஆகியவற்றையே ஆற்றல் மூலங்களாக பயன்படுத்தும் அமைப்புமுறையே பழுப்புப் பொருளாதாரம் (Brown economy) என அழைக்கப்படுகிறது.

இரண்டாவது வகையாக நாளைய நிறுவனங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற மாதிரி வடிவை ’கார்ப்பரேசன் 2020” என அவர் பெயரிட்டுள்ளார்.

1855இல் இங்கிலாந்து நாடாளுமன்றம் குறைந்த கடப்பாடு (Limited liability) சட்டத்தை நிறைவேற்றியது அதன் மூலம் கூட்டுப் பங்குதாரர் நிறுவனங்களின் நடவடிக்கைகளின் மீதான பங்குதாரர்களுக்கான பொறுப்புகளும் கடப்பாடுகளும் குறைக்கப்பட்டதும் நிறுவனங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதற்கான காரணமானது எனக் குறிப்பிடுகிறார்.

1920 வகை நிறுவனம்:

1919இல் ஹென்றி ஃபோர்டுக்கும், டாட்ஜ் சகோதரர்களுக்கும் இடையிலான முக்கியமான வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் நிறுவனங்களுக்கு இலாபமே முதன்மையானது, ஒரு நிறுவனத்தின் இலக்கு அதன் சுயநலனே என்பதை உறுதிப்படுத்தும் விதமாகத் தீர்ப்பளித்தது. சுயநலனே ஒரு நிறுவனத்தின் இலக்கே தவிர சமூக மேம்பாடல்ல என்று வழங்கப்பட்ட தீர்ப்பே இன்றும் காணப்படும் இலாபத்தையே குறியாகக் கொண்டு செயல்படும் 1920 வகை நிறுவன வடிவம் படிகமாக்கப்படக் காரணமானது என குறிப்பிடுகிறார் பவன்.

டாட்ஜ் சகோதரர்களுக்கும் ஃபோர்டுக்கும் இடையிலான வழக்கின் அடிப்படையில் நிறுவனச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. நீதித்துறை வழக்குகளில் ஒரு நிறுவனமானது மனிதவுரிமைகளுடைய ஓர் ஆளுமையாகவே நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு முரணான வகையில் பொறுப்புகள்/கடப்பாடுகள் என்று வரும் போது நிறுவனங்களுக்குக் குறைந்த கடப்பாடு அளிக்கப்பட்டு உயிரற்றவை போல் நடத்தப்பட்டன.

மனித சமூகங்களுக்கு அளிக்க வேண்டிய உரிமைகளைப் பறித்து அவற்றை நிறுவனங்களுக்கு வழங்கியதில் கார்ல் மார்க்ஸ் குறிப்பிடும் சரக்குகளின் மாய்மாலத்தையும், முதலாளித்துவத்தின் அந்நியமாக்கல் நடைமுறையையும் தெளிவாகவே கண்ணுறலாம்.

ஃபோர்டின் டி மாதிரி கார் ஆரம்பத்தில் அதிக மரக்கட்டைகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டது, ஒரு கார் தயாரிப்புக்கு ஒரு மரம் தேவைப்பட்டது, அதனால் ஒரு வருட கார் உற்பத்திக்காக 2,500 ஏக்கர் காடுகள் தேவைப்பட்டன. ஃபோர்ட் உற்பத்திச் செலவைக் குறைக்க முயன்றார், காட்டு வளங்களில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதன் மூலம் தனது பிராண்டின் பிம்பம் மேம்படும் என்பதையும் உணர்ந்திருந்தார், அதனால் காரில் உழைப்பின் உள்ளீடுகளைக் குறைத்து தானியங்கிச் செயல்பாடுகளுடன் வடிவமைத்தார்.

அதே நேரத்தில் ஃபோர்ட் தனது உற்பத்திப் பொருட்களைத் தொழிலாளர்களே வாங்குவதை ஊக்குவிக்கும் விதத்தில் தன் பணியாளர்களுக்கு அதிக ஊதியம் கொடுத்தார். பெரும உற்பத்தியையும் பெரும நுகர்வையையும் அடிப்படையாகக் கொண்ட அமைப்பே ஃபோர்டிசம் என அழைக்கப்பட்டது என்பதையும் விவரித்துள்ளார்.

ஹென்றி ஃபோர்ட் வருங்கால எரிபொருளைக் களைகள், மரத்தூள், பழங்கள் என எதிலிருந்தும் தயாரிக்க முடியும் என்றும் இன்னும் 75 ஆண்டுகளில் நீடித்த தன்மை கொண்ட எரிபொருளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியும் என மனக் கண்ணால் கனவு கண்டார். அவரது தொலைநோக்குப் பார்வை தொடர்ந்திருக்குமானால், பெட்ரோலியம் இன்றும் எரிபொருளாக இருந்திருக்காது. ஆனால் வழக்கின் தீர்ப்பு அவருக்குப் பாதகமாக அமைந்ததால் அவரின் கனவுகள் தகர்க்கப்பட்டன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1920 வகை  நிறுவனங்கள் சமூகத்திற்கும் சூழலுக்கும் பொது இழப்பு  ஏற்படுத்துவதன் மூலம் தனியார் இலாபம் பெறுவதையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. சுதந்திரமான சந்தை ஆற்றல்களின் மீதான அதீதமான குருட்டு நம்பிக்கையின் அடிப்படையிலே 1920 வகை நிறுவனம் செயல்பட்டது.

இயற்கையின் பொருளாதார மதிப்பு கண்ணுக்குத் தெரியாததாக உள்ளதை சந்தைகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. 1920 நிறுவனம் இலாபத்தை எல்லாம் தனதாக்கிக் கொண்டு செலவுகளைப் பொதுமைப்படுத்தும் விதத்திலே செயல்பட்டது.

1920 வகை நிறுவனங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் கொஞ்சமல்ல. கடந்த நூறு வருடங்களில் இவ்வகை நிறுவனங்கள் சமூகப் பொறுப்புகளைத் தட்டிக்கழித்துள்ளன. இவை மூன்று விதமான புறத்தாக்கங்களை ஏற்படுத்துகின்றன இவற்றால் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் கிடைக்காமல் போகிறது.

இதனால் நுகர்வாளர்களுக்கு மாற்றுப் பொருட்கள் கிடைப்பதில்லை. சமூக ஊடகங்களும் பரிவர்த்தனை வலையமைப்புகளும் இந்நிறுவனங்களின் பிடியில் உள்ளதால் தூய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்படும் பசும் மாற்றுப் பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறுக்கப்படுகிறது என்கிறார் பவன்.

உலக அளவில் அரசுகள் படிம எரிபொருள் உற்பத்திக்கு 650 பில்லியன் டாலர், அளவிற்கு நிதிச் சலுகைகள் அளிக்கின்றன. இது உலக ஜிடிபியில் 1% ஆகும். அரசுகள் பழுப்பு பொருளாதார நடவடிக்கைகளுக்கே பெருஞ்சலுகைகள் அளிப்பதால் பசும் பொருளாதாரம் பழுப்புப் பொருளாதாரத்துடன் போட்டி போட அரும்பாடு பட வேண்டியுள்ளது என்பதை விவரித்துள்ள அவர் 1920 வகை நிறுவனங்களால் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2020 வகை நிறுவனம்:

ஜப்பானில் 50க்கும் மேலான பெரும் நிறுவனங்கள் சமூகத்திற்கான தங்கள் பங்களிப்பாகக் காடுகளை ஏற்படுத்திப் பராமரித்து வருகிறார்கள் என்றும், 2020 வகை நிறுவனங்கள் அத்தகைய நடவடிக்கைகளையே முன்னுதாரணமாக்கிச் சமூகத்திற்கு நேர்நிறையான புறத்தாக்கங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் பவன் சொல்கிறார்.

 2020 வகை நிறுவனங்கள் உருவாக்குவதற்கு பவன் நான்கு முதன்மையான திட்டங்களை இந்நூலில் முன்வைத்துள்ளார். அவையாவன

1. புறத்தாக்கங்களை உள்ளடக்கிய கணக்கீட்டு முறை;
2. பொறுப்புள்ள விளம்பரத்துறை;
3. நிதிக்கடனைக் கட்டுப்படுத்துதல்;
4. மூல வரிவிதிப்பு.
 
புறத்தாக்கங்களை உள்ளடக்கிய கணக்கீட்டு முறை:

2020 வகை நிறுவனத்தின் பொருளாதார நடவடிக்கைகளால் சுற்றுச்சூழலிலும், இயற்கையிலும் ஏற்படுத்தப்படும் அனைத்துப் புறத்தாக்கங்களும் அவை நேர்நிறையானாலும், எதிர்மறையானாலும் அளவிடப்பட வேண்டும், அந்த அளவீடுகள் குறித்த தகவல்களை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக மேலாண்மை செய்யவும் வேண்டும்

நிறுவனங்களில் இப்பொழுதுள்ள கணக்கீட்டு முறையில் நிறுவனங்கள் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் புறத்தாக்கங்கள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இதற்கு மாறாக ‘ட்ரூவியா’ (TRUVEA) என்ற முறையில் நிறுவனம் சுற்றுச் சூழலில் ஏற்படுத்தும் புறத்தாக்கத்தையும் உள்ளிணைத்து நிறுவனத்தின் உண்மையான மதிப்பு கணக்கிடப்படுகிறது.

இந்த அளவீட்டு முறையில் 2004ல் அமெரிக்க நிறுவனங்களின் உண்மையான மதிப்பைக் கணக்கிட்டபோது பல நிறுவனங்களின் வருமானம் எதிர்க் குறியீட்டில் இருந்திருப்பது தெரியவந்தது. இந்த ஆய்வின் மூலம் நிறுவனங்கள் திறனற்ற முறையில் சூழலுக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துவதை அறியலாம்.

சுற்றுச்சூழல் அடிப்படையிலான இந்தக் கணக்கீட்டைச் செயல்படுத்திய உலகின் முதல் நிறுவனம்  பூமா.

சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகளைக் கூடுதல் செலவீனங்களாகக் கருதாமல் பேரழிவுகளைத் தடுக்கும் நடவடிக்கைகளாகவே கருத வேண்டும் என்று பவன் குறிப்பிடுகிறார். பிபி நிறுவனம் எவ்வாறு எண்ணெய்க் கசிவு விபத்தை ஏற்படுத்தியது என்று பார்த்தால், 5 லட்சம் டாலருக்கு ஒலித் தூண்டலால் செயல்படும் வால்வுகளைப் பொருத்துவது நிறுவனத்துக்கு வீண் செலவு எனக் கருதிப் புறக்கணித்ததாலே அவ்விபத்து ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட இழப்போ 20 பில்லியன் டாலர். நிறுவனங்களைச் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைக்கு உட்படுத்துவதன் மூலம் இதுபோன்ற விபத்துகளையும் பேரழிவுகளையும் தடுக்க முடியும்.

பொறுப்புள்ள விளம்பரத்துறை:

விளம்பரத் தொழில் என்பது உலகளவில் மிகச் சிறிய வர்த்தகத் துறை என்ற போதும் அளவுக்கதிகமான கவனம் பெறுகிறது. விளம்பரம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஊடகம்  அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும், அழிவுக்காகவும் பயன்படுத்தலாம். 2020 வகை நிறுவனம் விளம்பரங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பவன் அறிவுறுத்துகிறார்.

ஒரு சிகரெட்டை ஒரே நேரத்தில் ஆண்மைக்கான அடையாளமாகவும், மெல்லுடல் பெண்மைக்கான அடையாளமாகவும் சந்தைப்படுத்துவதில் விளம்பரத்துறை மிகவும் சாதுர்யமாகச் செயல்படுவதாகக் குறிப்பிடுகிறார். புகையிலைப் பொருட்களுக்கான விளம்பரங்களை ஒழுங்குமுறைக்கு உட்படுத்த நீண்ட காலமாயிற்று. அந்தப் படிப்பினையின் அடிப்படையில் விரிவான தீர்வுகளைப் பெற வேண்டும், விளம்பரப்படுத்துதலை நீதி நெறிமுறைக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார்.

அமெரிக்காவின் தூய நிலக்கரி மின்சாரக் கூட்டமைப்பானது நிலக்கரி ஒரு பாதுகாப்பான ஆற்றல்மூலம் என்பதை நம்பவைக்க விளம்பரத்திற்கு மட்டும் 38 பில்லியன் டாலர் செலவளித்துள்ளது. நிறுவனங்கள் ஒழுங்குமுறைகளைத் தவிர்க்க பேரத்தில் ஈடுபடுகின்றன. 2008இல் எரிஆற்றல், சுரங்க நிறுவனங்கள் காலநிலை ஒழுங்குமுறைகளை நடைமுறைப் படுத்துவதைத் தடுக்க பேரத்திற்கு மட்டும் பல மில்லியன் டாலர்கள் செலவழித்துள்ளன.

அழிவை ஏற்படுத்தும் நுகர்வுப் பழக்கங்களை மாற்றாமல் காக்க நுகர்வோரை நம்பவைக்கும் விதத்தில் விளம்பரங்கள் தயாரிப்பதற்குப் பெருமளவில் செலவிடப்படுகிறது. காலநிலை மாற்றம் போன்ற அறிவியல் உண்மைகளைப் பொய்யாகச் சித்திரித்துத் தவறான கருத்துகளைப் பரப்புவதற்கும் பல நிறுவனங்கள் நிதியளித்து வருகின்றன.

கம்யூனிஸ்ட் நாடுகளுக்கு வெளியே 2007இல் விளம்பரங்களைத் தடை செய்த நாடு பிரேசில். பிரேசிலின் சவொ பௌலொ நகரில் தூய்மை நகர நெறியை நடைமுறைப்படுத்தி, பொது வெளிகளில் விளம்பரம் செய்வதைக் கடும் ஒழுங்குமுறைக்கு ஊட்படுத்தியது. அதற்கு எதிர்ப்பு இருந்த போதும், நகர்புற மக்களில் 70 சதவீதத்தினர் அதை வரவேற்றனர். அத்திட்டம் எதிர்பாரா வெற்றியைத் தந்தது குறிப்பிடத்தக்கது.

மழைக்காடுகள் ஒருங்கமைப்புக் குழுவால் அமேசன் காடுகளின் அழிவு குறித்து மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தின் விளைவாக நிதிநிறுவனங்கள் கடன் நிதி அளிப்பதற்கு ஈக்வேடர் தத்துவங்கள் அடிப்படையில் விதிமுறைகள் கொண்டு வந்தது, அதை கடைபிடிப்பவருக்கே நிதியளிக்கப்படும் என ஒழுங்குமுறைக்குட்படுத்தியது.

விளம்பரமானது நிறைகளை மட்டும் கூறி குறைகளை மறைக்காமல், ஒளிவு மறைவில்லாமல் பொருள் குறித்த எல்லா தகவல்களையும் வெளியிடவேண்டும்.

விலையோடு  நின்றுவிடாமல் உண்மையான தகவல்களை நுகர்வோருக்கு தரும் விதத்தில் பொறுப்பான விளம்பரமுறையை ஏற்படுத்த வேண்டும். விற்பனை பொருளின் மேலே அதன் பயன்பாட்டிற்கு பிறகு சூழலுக்குகந்த முறையில் எவ்வாறு அதை அப்புறப்படுத்தவேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். விளம்பரத்திற்கான செலவுத் தொகையில் 10% வளரும் நாடுகளுக்கு உதவி செய்ய பயன்படுத்த வேண்டும். இந்த உயிர்க் கோளத்திற்காக 1% செலவிட வேண்டும் என்றும் ஆலோசனை அளித்துள்ளார்.

நிதிக்கடனைக் கட்டுப்படுத்துதல்

நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும் போது சமூக பொறுப்பற்ற முறையில் தவறாக  நிதியைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்குக் கடன் அளிப்பதைத் தடுக்க வேண்டும். பெரும் நிறுவனங்கள் தோல்வியுற மாட்டா என்ற பார்வையை மாற்றி அவற்றுக்கான நிதியை ஒழுங்குமுறைக்குள் கொண்டுவர வேண்டும்.

ஸ்பெயினைச் சேர்ந்த பேங்கோ சாண்டாண்டெர்  என்ற பன்னாட்டு வங்கியின் சேவை அனைத்தும் சமூகச்சூழல் அபாயக் காரணிகளின் அடிப்படையில் நிதிச் சலுகைகளை அளிக்கிறது. 3,900 நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளது. சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகளைச் செயல்படுத்தாத நிறுவனங்களைத் தன் வாடிக்கையாளர் பட்டியலிலிருந்து நீக்கிச் சேவைகளை நிறுத்தியுள்ளது,

பிபி, வேதாந்தா, டெக்சாகோ ஆகிய நிறுவனங்களுக்கு  நிதி வழங்குவதை நிறுத்தியுள்ளது பிரேசிலின் பேங்கோ ரியல் உள்படப் பல வங்கிகளை இணைத்து 50,000 பணியாட்களுடன் செயல்பட்டு வருகிறது. இலத்தின் அமெரிக்காவின் இதவுயுனிபேங்கோ எனப்படும் மிகப் பெரும் வங்கி, நீடித்த தன்மையின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கிறது. இந்தியாவில் இண்டஸ்இந்த் (IndusInd) வங்கியும் ஒழுங்குமுறையின் அடிப்படையில் நிதிச் சேவை அளிப்பதாகவும் பவன் குறிப்பிட்டுள்ளார்.

பனை எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உண்மையில் இலாபம் எண்ணெயிலிருந்து கிடைக்கவில்லை, அதை ஏற்படுத்துவதற்காகக் காடுகளை அழித்து மரங்களை விற்பதன் மூலமே இலாபம் கிடைக்கிறது. ஒவ்வொரு முறையும் காடுகளை மேலும் மேலும் அழிப்பதன் மூலமே பனை எண்ணெய் நிறுவனங்கள்  இலாபகரமாக இயங்குகின்றன.

பனை எண்ணெய் நிறுவனங்களின் 50-60% லாபம் காடுகளை வெட்டுவதன் மூலம் கிடைக்கிறது, எண்ணெய்க்கான மூலப் பொருட்களிலிருந்து 10-18% மட்டுமே இலாபம் கிடைக்கிறது. ஒரே இடத்திலே பயிரிடுவது இலாபகரமாக இருப்பதில்லை. இவ்வாறு பனை எண்ணெய்த் தயாரிப்புக்காகப் பெருமளவிலான காடுகளை அழித்ததாலே இந்தோனேசியா உலகின் பசுங்குடில் வாயுக்களை வெளியிடுவதில் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது என்றும், பல்லுயிர் அழிப்புக்கும் இதுவே காரணமாகிறது.

இதனால் சுமத்திர புலி, போர்னியா மற்றும் சுமத்திராவின் உராங்குட்டான், காண்டாமிருகம், சுமத்திராவை சேர்ந்த யானை இவை இப்பொழுது அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களாக வகைபடுத்தப்பட்டுள்ளன. மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இத்தகைய தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதிகளை தடுப்பதன் மூலம் இவற்றால் ஏற்படும் அழிமானங்களைத் தடுக்க முடியும் என்கிறார் பவன்.

மூல வரிவிதிப்பு:

இயற்கை வளங்களைத் தான்தோன்றித்தனமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். இயற்கை வளங்களின் பயன்பாட்டை வரிவிதிப்புக்கு உட்படுத்த வேண்டும். எரிஆற்றல் துறைகளுக்கு அதிகச் சலுகைகள் கொடுப்பதாலே அவற்றின் உண்மையான மதிப்பில் இல்லாமல் விலை குறைக்கப்பட்டு மக்களுக்கு கிடைக்கப் பெறுகிறது.

அவற்றிற்கு சலுகைகள் இல்லாமலிருந்தால், அவற்றின் விலை அதிகமாகும், அதனால் அதற்கான நிகரத் தேவை குறையும், அதனால் பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றம் குறைக்கப்படும்.

பழுப்புப் பொருளாதார - நிலக்கரி, பெட்ரோலியம், பிற தாதுக்கள் - மூலங்களின் பயன்பாட்டை வரிக்குட்படுத்துவதன் மூலம் - சந்தை ஆற்றல்களை இதிலிருந்து திசைதிருப்பித் திறனுள்ள, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில் நுட்பங்களை நோக்கி செலுத்த முடியும்.

நிறுவனங்கள் பெறும் இலாபத்தின் மீது வரிவிதிப்பதிலிருந்து, மூல வரிவிதிப்பு முறைக்கு மாற வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாத்து, மீள்பயன்பாட்டுக்கு உட்படுத்தும், நிறுவனங்களை உருவாக்க வேண்டும். நிலக்கரிப் பயன்பாட்டிற்கு 4% வரி விதிக்க வேண்டும், அது மேலும் திறனுள்ள முறையிலான நிலக்கரிப் பயன்பாட்டுத் தொழில்நுட்பங்களை வளர்த்து, சூழல்கேட்டைக் குறைக்கும் என்கிறார்.

மழைக் காடுகளிலிருந்து பெறப்படும் பெட்ரோலியமானது, பாலைவனத்தில் எடுக்கப்படும் பெட்ரோலியத்தைக் காட்டிலும் அதிக சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும். உலகளவிலான மாசுபாட்டுக் குறியீட்டை (Pollution Index) அடிப்படையாகக் கொண்டு ,வரிவிதிக்க வேண்டும். காலநிலை மாற்றத்தைத் தடுக்கத் திறனற்ற தொழில் நுட்பங்களின் பயன்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

வளங்களை வரைமுறையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும் சூழல் பாதிப்புகளை குறைக்க முடியும். இயற்கை வளங்கள் குறைந்த அளவிலே உள்ளன. அவற்றை நீடித்த பயன்பாட்டிற்கு உட்படுத்த இம்முறைகள் அவசியம் என்றும் விளக்கியுள்ளார்.

2020 வகை நிறுவனம் வளர்ச்சியைக் குறைக்கும் என்று நாம் கவலைப்படக் கூடாது. வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவை குறித்துத் தவறான புரிதல் உள்ளது. வறுமையை நீக்கி நீடித்த வாழ்க்கைத் தரத்தையும் ஏற்படுத்த இக்கொள்கைகள் முக்கியமானவை. ஜிடிபி என்ற குறுகிய அளவுகோலைத் தாண்டி உண்மையான  நீடித்த வளர்ச்சியை நோக்கி முன் நோக்கிச் செல்ல வேண்டும்.

இயற்கை வளங்களின் மதிப்புகளையும் உள்ளிணைத்துக் கணக்கிடப்படும் பசுமை ஜிடிபியே நீடித்த வளர்ச்சிக்கான அளவுகோலாகும். நமது செயல்பாடுகள் வெட்டுதல், தோண்டுதல், எரித்தல் ஆகியவற்றிலிருந்து குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி ஆகியவற்றை நோக்கிச் செல்ல வேண்டும் என்கிறார் பவன். சுரங்கத் தொழிலைக் காட்டிலும் மறுசுழற்சியின் மூலம் திறன்மிக்க பயன்பாட்டால் இலாபம் பெற முடியும் என்றும் குறிப்பிடுகிறார்.

பொதுக் கொள்முதல் பசுமையாக்கப்பட வேண்டும், பொது முதலீடுகள் சமூக நலன் அடிப்படையில் ஏற்படுத்தப்பட வேண்டும், இனியும் தனியார் உடைமையும், திறந்த சந்தைகளுமே அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்வுகள் எனக் கருதக் கூடாது. பொதுச் சொத்துரிமை, இயற்கை வளங்களை சமூகச் சொத்தாக்குதல் ஆகியவை பொருளாதார நடைமுறைகளாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனங்களில் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மட்டுமே நிறுவனச் செயல்பாடுகளை முடிவு செய்யும் வாக்குரிமைகளை அளிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். பெருநிறுவனங்களில் முதன்மை நிர்வாக அலுவலருக்கும், கடைமட்ட ஊழியருக்கும் இடையே காணப்படும் அதீதமான ஊதிய ஏற்றத்தாழ்வைக் குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்.

பொதுநிறுவன உடைமை, பணியாட்களே  நிறுவன உடைமையாளர்களாக இருத்தல் ஆகியவற்றைச் சிறந்த மாதிரிகளாக முன்னிறுத்தும் அவர் சிறந்த முன்னுதாரணங்களாகப் பின்வரும் நிறுவனங்களைக் குறிப்பிடுகிறார். ஜான் லுயிஸ் என்ற பிரிட்டன் நிறுவனம் 100% பணியாட்களின் உடைமையாக உள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஆர்கானிக் பள்ளாத்தாக்கு 1,200 விவசாயிகளால் உருவாக்கப்பட்ட கூட்டுறவு அமைப்பு, குருபொ நியூவ கூட்டமைப்பு நீடித்த மேம்பாட்டை உருவாக்குவதற்கான இலாப நோக்கமற்ற நிறுவனம், அமுல் கூட்டுறவு நிறுவனம், ஸ்பெயினில் மன்றாகன் என்ற நிறுவனம், 1956இல் டொன் ஜொஸ் அரிஸ்மெண்டியரீடா என்ற பாதிரியால் தொடங்கப்பட்டது.

மூலதனத்தைக் காக்க வேலைகளை அபாயத்துக்குட்படுத்தாதே என்ற நெறி அடிப்படையுடன் உருவாக்கப்பட்ட அதன் கீழ், இப்பொழுது 250 நிறுவனங்கள் செயல்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய மாற்றங்கள் தாமாகவே நிகழ்ந்து விட மாட்டா. ஒற்றை அமைப்பால் மட்டுமே இதைச் செய்துவிட முடியாது. இந்தச் சவாலானது பெரும்பாலும் சூழலியல் சவாலாக, சமூக நீதிக்கான சவாலாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இது உண்மையில் தனியார் நிறுவனங்களின் இருப்பைத் தக்க வைப்பதற்கான சவாலாகவும் உள்ளது.

அரசு, பொதுச் சமூகம், நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமே மாற்றத்தை உருவாக்க முடியும். இந்த மாற்றம் அமைதியான முறையில் நடைபெறாது, இரண்டு விதமான நிறுவனங்களும் பொருளாதாரத்தில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும், அவ்வாறுதான் இயல்பாக மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இயற்கையில் அவ்வாறுதான் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பழுப்புப் பொருளாதாரத்தைப் பசும் பொருளாதாரமாக மாற்றும் போது பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் பறிபோகும் ஆதலால் அந்த மாற்றத்தைச் சரியாக மேலாண்மை செய்யும் போது, பத்து வருடங்களுக்குள் பெரும் எண்ணிக்கையில் பசும் வேலைவாய்ப்புகளை வழங்க முடியும். பொருளாதாரத்தையும் அரசியலையும் இறுதியாக ஒன்றுபடுத்த முடியும் என்கிறார்.

இவ்வாறு பல்வேறு சுவாரசியமான தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் அளிக்கும் அவரது நூலில் உள்ள அனைத்தையும் ஒரு கட்டுரையில் சுருக்கி விட முடியாதுதான். ஆனால் அவரது தர்க்கத்திலும், இந்த நூலிலும் முரண்பாடுகளோ குறைபாடுகளோ இல்லாமல் இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். அடிப்படையான சிக்கல் என்னவென்றால் பவன் சுக்தேவ் முதலாளித்துவத்துக்குள்ளே தீர்வுகளை பெற முடியும் என்றும், அதன் மூலமே பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என்றும் கருதுகிறார்.

கள்ளக் கூட்டு முதலாளித்துவம் எந்த அளவிற்குச் சமூகத்திற்குப் புறம்பாகச் செயல்படுகிறது என்பதை இந்நூலிலே அவர் குறிப்பிட்டிருந்தும் முதலாளித்துவத்துக்கு அப்பால் நோக்கத் தவறி விட்டார். நல்லெண்ணம், நன்னடத்தை அடிப்படையில் சமூக அக்கறையுடைய பொதுநலனுக்காகச் செயல்படும் நல்ல முதலாளிகளையும், நல்ல முதலாளித்துவத்தையும் ஏற்படுத்தமுடியும் என நம்புகிறார். எல்லா முதலாளிகளையும் ராபர்ட் ஓவனாக மாறச் சொல்கிறார். அவர்கள் ராபர்ட் ஓவனாக மாறுவார்களா? அவ்வாறு மாறினால் முதலாளித்துவம் முதலாளித்துவமாக இருக்குமா?

பொதுச் சொத்துரிமையைச் சிறந்த உடைமை அமைப்பாக அவர் கருதிய போதிலும் உடைமையமைப்புகளில் மாற்றம் ஏற்படுத்த வெகுகாலம் ஆகும் என்று கூறியவாறு அதைப் பின்னுக்கு தள்ளி நிறுவனங்களில் மாற்றம் ஏற்படுத்துவதையே முன்னிறுத்துகிறார். நிறுவனங்கள் இலாபத்தையே உயிர்மூச்சாகக் கொண்டுள்ளன.

நிறுவனங்களின் கணக்கீட்டு முறையில் புறத் தாக்கங்களையும் உள்ளிட்டு அவற்றின் உண்மையான வருவாயை டிருவீயா முறையில் கண்டறிந்த போது பெரும்பாலான நிறுவனங்களின் வருவாய்/லாபம் எதிர்க் குறியீட்டிலே இருக்கும் என்னும் போது சுற்றுச்சூழலைக் காப்பதற்காக நட்டத்தை ஏற்க எத்தனை நிறுவனங்கள் முன்வரும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அதையும் தாண்டி அந்நிறுவனங்கள் இலாபகரமாகச் செயல்பட வேண்டுமானால் உழைப்புச் சுரண்டலை மேலும் அதிகப்படுத்துவதைத் தவிர முதலாளிக்கு வேறு வழியில்லை.

இயற்கைச் சுரண்டலுக்கு பதில் உழைப்பாளரை மேலும் சுரண்டலாம் என இயற்கைச் சுரண்டலை உழைப்புச் சுரண்டலால் மாற்றீடு செய்வது ஏற்புடையதா? இலாபத்திலிருந்து வரிவிதிப்பதற்கு பதிலாக மூல வரிவிதிப்பு முறையைச் செயல்படுத்த வலியுறுத்துகிறார். இதில் பதிலாக என்பதற்குப் பதில் கூடுதலாக என்றிருந்தால் பிரச்சனை இல்லை.

அதாவது இலாப வரிவிதிப்புடன் கூடுதலாக மூல வரிவிதிப்பையும் செயல்படுத்தினால் நமக்குப் பிரச்சனையில்லை, ஆனால் முதலாளித்துவத்துக்கு அது வாழ்வா சாவா போராட்டம். நட்டத்தில் இயங்க முதலாளித்துவம் தயாரா என்ற கேள்வியே தர்க்கப் பொருத்தம் அற்றது.

எப்படிப் பார்த்தாலும் உழைப்புச் சுரண்டலை அதிகப்படுத்தாமல் முதலாளித்துவத்தால் பசுமைக் கணக்கீட்டு முறையையோ பசுமைப் பொருளாதாரத்தையோ முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. பசும் தோல் போர்த்தி முதலாளித்துவத்தின் இரத்தக் கறைகளைப் புனிதப்படுத்த முடியாது. காலாவாதியாகப் போகும் முதலாளித்துவத்துக்குப் பச்சைச் சாயம் பூசி மார்க்கண்டேயராக்கவும் முடியாது, நிலைபேறுடையதாக்கவும் முடியாது.

முதலாளித்துவம் ஏற்படுத்திய சூழலியல் நெருக்கடிக்கு முதலாளித்துவத்திலே தீர்வு காண முடியாது. பசுமைப் பொருளாதாரம் சாத்தியமல்ல என்பதல்ல நாம் கூற வருவது. முதலாளித்துவத்துக்குள் பசுமைப் பொருளாதாரம் சாத்தியமில்லை. பவன் சுக்தேவ் முன்வைக்கும் பசுமைப் பொருளாதாரத்துக்கான சிறந்த செயல்முறைகளை பொதுவுடைமையின் மூலமே நடைமுறைப்படுத்த முடியும்.

- சமந்தா