aamir khan dangal‘டங்கல்’ (Dangal) -இந்தித் திரைப்படம். அழகான கட்டுக்கோப்போடு, எவ்விதக் குழப்பமும் இல்லாமல், நேர்த்தியாக, தெளிவாகக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

பெண்கள் அடுப்பூதுவதற்கும், வருங்கால சந்ததியை உருவாக்குவதற்கும் மட்டுமே படைக்கப்பட்டவர்கள். ஆண் குழந்தை வேண்டுமென்பதற்காக வரிசையாகக் குழந்தை பெறுவதும், மல்யுத்தம் செய்வதற்கு இடையூறாக இருப்பதினால் தலை முடியை வெட்டிக் கொண்ட பெண்கள் ஆணாதிக்கச் சமூகத்தின் கேலி, கிண்டலுக்கு உள்ளாவதும், பெண்கள் மல்யுத்தம் செய்தால் ஆண்மை மேலோங்கி, பெண்மை குறைந்து திருமணம் செய்யத் தாமதம் ஆகலாம் அல்லது எந்த ஒரு ஆணும் மணம் செய்ய முன் வராமல் போகலாமென்று பெண்களின் அம்மா பயந்து வருந்துவதும் மிக நேர்த்தியாக காண்பிக்கப்பட்டுள்ளது.

அமீர்கான் மல்யுத்த வீரங்கனைகளின் தகப்பனார்... எப்போதாவது சிறிதாய்ப் புன்முறுவல் செய்வது, பெண்கள் எத்தனை கோப்பைகள், மெடல்கள் வாங்கி வந்தாலும், உள்ளுக்குள் உள்ள மன மகிழ்ச்சியை வெளியே கிஞ்சித்தும் காண்பிக்காத மனோபாவம், இந்தியாவிற்குத் தங்கம் வாங்கிக் கொடுப்பதற்கு, ஊர்க்காரர்கள் கேலி செய்தாலும் அவற்றை உதாசீனப்படுத்தும் நடிப்பு, பிரமாதம்.

சாக்ஷி பெண் வீரர்களின் அம்மா... இந்திய அம்மாக்களுக்கேயுரிய, பெண்களை மணம் செய்வித்து, கரை சேர்த்து, நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டுமே என்று சதா எண்ணிக்கொண்டிருக்கும் சராசரி அம்மா. அப்பாவுக்கும் மூத்த பெண்ணிற்கும் பிணக்கின் போது பாலமாய் நின்று தீர்த்து வைப்பதும், ஆரம்பத்தில் பெண்கள் மல்யுத்தம் செய்வது பிடிக்கா விட்டாலும் பதக்கம் வாங்கும் போது மன மகிழ்வதுமென்று முக்கிய பாத்திரத்தையேற்று கலக்குகிறார்... சரியான தேர்வு...

பாத்திமா , சானியா- (கீதா போகட் & பபிதா போகட்) இருவரும் மல்யுத்த வீராங்கனைகள். துடுக்கான பெண்கள். இவர்கள் செய்யும் மல்யுத்தம் ஒரு தேர்ந்தெடுத்த, நல்ல பயிற்சி பெற்ற தொழில் முறை வீரர்களைப் போல் விளையாடுகிறார்கள்.

இயக்குநர் நிதேஷ் திவாரி... உண்மைக்கதையை திரைக்குக் கொண்டு வந்து, எல்லோரையும் நடிக்க வைத்து, ஒரு திரைக் காவியத்தைத் தந்தவர். இவரின் உழைப்பு, படம் முழுக்கத் தெரிகிறது.

இந்த படம் என்ன சொல்கிறது ?

1. பெண்களுக்குச் சம உரிமை.

2. பெண்களும் திறமை மிக்கவர்கள். ஆண்கள் செய்யும் எந்த வேலையையும் செய்து, சாதிக்க உடல் வலிமையும், மன உறுதியும், அறிவும் பெற்றவர்கள்.

3. பெண்களுக்குச் சாதிக்க வாய்ப்பினையும் பிற வசதிகளையும் குடும்பத்தினர் மற்றும் அரசு செய்து கொடுத்தால் அவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள். செய்து கொடுக்க வேண்டும். இது அவர்களின் கடமை.

4. பெண்களின் மீதான சமூகத்தின் பார்வை உயர்ந்ததாக மாற வேண்டும்.

பெண்ணுரிமை முக்கியத்துவம் பெற்று விளங்கும் இந்தக் கால கட்டத்தில் இந்தப் படம் ஒரு சரியான தாக்கத்தை, விழிப்புணர்வைச் சமூகத்தில் ஏற்படுத்தும்.

பெண்மை போற்றுவோம். ஒவ்வொரு பெண் குழந்தையும் ஏதாவது ஒரு துறையில் ஒளிரச் செய்வோம்.

ஒரு நல்ல படம் பார்த்த மன நிறைவு.

Pin It