கேள்வி: தமிழ்க் கவிதையின் முகம் பெண் கவிஞர்களின் வருகைக்குப் பிறகு முற்றிலும் புதிய பரிணாமம் அடைந்திருக்கிறது. அதுவே மிகுந்த சர்ச்சைக்குள்ளாகவும் மாறியிருக்கிறது. பெண்மொழி என்கிற ஒரு புதிய மொழியனுபவத்தை நீங்களும், மற்ற பெண்கவிகளும் உருவாக்கியிருக்கிறீர்கள். உங்களது பார்வையில் பெண் மொழி நுட்பம் என்ன? ஆண்சமூகத்தில் எழும் கொச்சையான விமர்சனங்கள் குறித்தும் சக பெண்படைப்பாளிகள் மத்தியிலேயே எழும் அபிப்ராயபேதங்கள் குறித்தும் உங்களது நிலை என்ன? பெண்கள் குறித்து மிக அதிகக் கட்டுப்பாடுகள் கொண்ட இஸ்லாமியச் சமூகத்திலிருந்து வந்துள்ள உங்களது எழுத்து மொழியின் இயங்குதளம் குறித்துச் சொல்லுங்கள்.

நீண்டகாலமாக தனக்குள்ளாக ஒடுங்கிக்கிடந்த பெண்மொழி தனது இருத்தல் சார்ந்த அனைத்து விதமான உணர்வுகளையும் சமூகத்தின் முகத்தில் அறையும் விதத்தில் பதிவு செய்து கொண்டிருக்கிற வேளையில் எது பெண்மொழி என்கிற கேள்வியும், பெண்மொழியே ஆபாசம், அதன் அடிப்படை பாலியல் மட்டுமே என்கிற கருத்தாடல்களும் சகல திசைகளிலிருந்தும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

 இன்றைய சமூக அமைப்பு, குடும்ப அமைப்பு என அனைத்து வகைப்பட்ட நிறுவனங்களும் ஆணாதிக்க சிந்தனையின் எச்சமாக இருப்பதை ஒவ்வொரு தருணத்திலும் உணர்வதற்கான சாத்தியங்கள் இருந்து கொண்டிருக்கிறது. இதுவரை சமூகம் பொதுமைப்படுத்தியும் காப்பாற்றியும் வருகிற ஆணாதிக்க சிந்தனைகளை மதிப்பீடுகளை எல்லா நிலையிலிருந்துமே மறுபரிசீலனைக்குட்படுத்த வேண்டியிருக்கிறது.

தனக்கென விதிக்கப்பட்டுள்ள வாழ்வை, இடத்தை, வெளியை விட்டு தன்னையும் தனது உடலையும் விடுவித்துக் கொள்வதற்கான யத்தனத்தை இன்றைய பெண்எழுத்து மொழிப்படுத்திக் கொண்டிருக்கிறது. தன் உடல் சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ள கற்பிதங்கள் குறித்த ஆழமான புரிந்துணர்வோடு நுட்பமான அரசியலை தம் படைப்புகளுக்குள் பெண்கள் முன்னெடுக்கத் துவங்கியிருக்கிறார்கள்.

ஆணின் அதிகாரமும் பெண்ணின் தோல்வியும் உடல் சார்ந்த கருத்துருக்களால் ஆனதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் பெண் தன் எழுத்தின் வழியே தன்னுடல் மீதான தனது அதிகாரத்தை உரிமையை முதலில் கையகப்படுத்துகிறாள். தன் உடல் தன்னுடையது எனும் உரிமையை இச்சமூகத்தின் முன்பாக தன் எழுத்தின் வழிநிறுவும் பட்சத்தில், இதுவரை காலமும் எதன் பேரால் அதிகாரமும் செய்யப்பட்டாலோ இழிவு செய்யப்பட்டாலோ அதிலிருந்து முற்றாகத் தன்னை விடுவிக்கிறாள். கூடவே தனதுடலைக் கொண்டாடும் அடுத்த கட்ட அரசியலுக்கும் தன் எழுத்தை நகர்த்திச் செல்கிறாள்.

ஒரு பெண் தனதுடலைக் கொண்டாடுவதற்கு முதலில் தனது உடல் குறித்து அவளுக்குள்ளே கட்டமைக்கப் பட்டுவிட்ட மோசமான மதிப்பீடுகளிலிருந்து தன்னை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. என் உடல் என்னுடையது, அற்புதமானது, அழகானது அதைக் கொண்டாட வேண்டுமென்கிற மனித மனத்தின் அடிப்படை உணர்வையே குலைத்து, தனதுடலை தானே பாவமாகக் கருதவும் அருவருப்போடு சுமக்கவும் வைத்திருக்கிற இந்த ஆணாதிக்க சமூக நிறுவனங்களின் கொடூர வன்முறையைக் குத்திக்காட்டி குற்ற உணர்வுக்குள்ளாகுகிற என் கவிதையை என் மனநிலை எனவும் புலம்பல் எனவும் தம் விருப்பத்திற்கிணங்க குறுக்கி ‘புரிந்து’ கொள்கிறவர்கள், அது இச்சமூகத்தின் மீதான வலுவான விமர்சனம் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை.

தனதுடலை தானே வெறுக்கும் நிலையை உண்டுபண்ணிய தனதுடலை தனக்கே அன்னியமாக்கிய ஆணாதிக்கக் கருத்தியலின் மீதான கடும் கண்டனம் அக்கவிதை. எனதுடலை என்னிடமிருந்து விலக்கிவைத்திருக்கிற ஒரு சமூகத்தின்மீது நான் எதிர்வினையாற்றுவதும் விமர்சனம் செய்வதும்தானே இயல்பு. இது தவிர்த்து அது வேறொன்றாக எப்படி இருக்க முடியும்?

புத்தகக் கண்காட்சியை பார்க்க வாய்க்காத வருத்தத்தைப் பதிவு செய்கிற பெண் படைப்பாளியிடம் வெளிப்படுவது புலம்பலோ, பூஞ்சைத்தனமோ அல்ல. அங்கே பதிவு செய்யப்படுவது குடும்பம் ஒருபெண்மீது செலுத்துகிற வன்முறையின் உச்சகட்ட அளவு. ஒருவகையில் புலம்பலும் கூட அரசியல்தான். தனது நிலையை அறிந்து கொண்டதாலும் அந்நிலையோடு முரண்படுவதாலும் எழக்கூடிய போராட்ட உணர்வே அதன் அடிப்படை.

கவிதைக்குள் பெண் தனது காதலைப் பாடுவதும், காதலனைத் தருவிப்பதும், தன்னுடலை அவனுக்குப் பலியிடுவதற்காக இல்லை. மாறாக தனக்கு விருப்பமான இணையோடு தனதுடலைப் பகிர்வதற்காக.

தருவதற்கும் பகிர்வதற்கும் இடையில் குறைந்த பட்சம் ஆறுவித்தியாசங்களாவது இருப்பதாகத்தான் நினைக்கிறேன். தனக்கு விருப்பமான இணையோடு தனதுடலைப் பகிர்தல் அவளது சுதந்திரம் சார்ந்தது, ஆளுமை சார்ந்தது.

பெண் தனது படைப்புகளில் பாலியலை எழுதுவது அதுகுறித்த பூடகங்களிலிருந்தும் மௌனங்களிலிருந்தும் வெளியேறுவதற்காகத் தானேயன்றி வேறெதன் பொருட்டுமில்லை. தன் போக்கில் இதனை மலினப் படுத்துபவர்களின் வீங்கிப்போன மூளைக்குப் பதிலை எம் படைப்புகள் சொல்லும். ஆணாதிக்கத்தின் அத்தனை நிலைகளுக்கும் மாற்றான சிந்தனைகளை, மதிப்பீடுகளை, எதிர் அரசியலை உருவாக்கக் கூடியதையே பெண்மொழி என வரையறுக்க வேண்டியிருக்கிறது. எனது படைப்புகளுக்குள் நான் அதற்கான தேடலை நிகழ்த்தியபடி இருப்பதாக நம்புகிறேன். எனது சமூக இறுக்கத்தில் நான் உணரும் பெண்ணின் நிலை எனது படைப்பின் இயங்கு தளத்திற்குள் பெண்ணியத்தைத் தீவிரமாக வெளிக்கொண்டு வரத் தோதாக இருக்கிறது என்றுதான் சொல்வேன்.

Pin It