‘மஞ்சள்’ மங்களகரமானது என்ற இந்துப் பொதுப் புத்தியின் செவிட்டில் அறைந்துள்ளது ‘மஞ்சள்’ நாடகம்.  வலியின் நிறமே மஞ்சள். இழிவின் நிறமே மஞ்சள் என்று மனிதர்கள் என்று சொல்லிக் கொள்பவர் களின் அழுக்குப்படிந்த மூளைகளைத் தட்டி எழுப்பிப் பதிய வைத்துள்ளது இந்த நாடகம்.

நாம் இந்த நாடகத்தைப் பார்க்கவில்லை.  நாடகம் நடந்த ஊருக்கும் நமக்கும் வெகுதூரம். ஆனால், இந்த நாடகத்தைப் பார்க்காத நம்மைப் போன்ற இலட்சக் கணக்கானவர்களுக்கும் ஒரு தாக்கத்தை உண்டாக்கியது இந்நாடக நிகழ்வு.

நாடகம் குறித்த Promo Video’s  களின் பயன் மிகப்பெரியது. தமிழ்நாட்டில் இதுபோல, இதுவரை  தமிழர் உரிமைகள், தமிழ்ஈழம், சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம் தொடர்பான நிகழ்வுகளுக்குரிய Promo Video’s களைப் பார்த்திருப்போம். ஊடகங்களும், பெரும் வணிக நிறுவனங்களும் அதற்காக விளம்பரத் தூதர் களாகப் பணியாற்றியதையும் பார்த்திருப்போம்.

முதன்முறையாக தமிழ் நாட்டின் அடித்தட்டு மக்களின் மிகப்பெரும் துயரத்தையும், நீங்காத இழிவையும் வெகுமக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் கடமையில் - பெரும் ஊடகங்களையும், நவீன பரப்புரை உத்திகளையும் பயன்படுத்தியுள்ளார் தோழர் ஜெயராணி. அவருக்குத் துணையாக தோழர் சரவணன், பாரதி ஆகியோரும் கடமையாற்றியுள்ளனர்.

இயக்குநர் இரஞ்சித் அவர்கள் மெட்ராஸ், கபாலி படங்கள் மூலமாக மிகப் பெரும் ஜாதி ஒழிப்புப் புரட்சி நடத்திவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் பரபரப்புகள் காணப்பட்ட நேரத்தில் நாம், சாதி ஒழிப்புக்கோ, தீண்டாமை ஒழிப்புக்கோ அவை துளியும் பயன்தராது என்றோம். இப்போதும் நமக்கு அதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.

ஆனால், தோழர் இரஞ்சித் நம்மை ஏமாற்ற வில்லை. மிகப்பெரும் உச்சத்தில் இருக்கும் இதே நேரத்தில், ஜாதி ஒழிப்புக்காகக் களத்தில் நிற்கும் தோழர் இரஞ்சித் அவர்களின் பணியைப் பாராட்டுகிறோம்.

நாடகத்தை ஊர் ஊராகக் கொண்டு செல்வதற்கு நீண்ட காலம் ஆகிவிடும். சிறு சிறு வீடியோக்களாக மாற்றி வெளியிட்டால் இன்னும் கூடுதல் பலன் இருக்கும்.

காலங்காலமாக திராவிடர் இயக்கங்களின் பரப்புரைப் பயணங்களில் பேசி வந்த செய்திகளை இன்று, வெகுமக்களின் பெரு ஊடகங்களில் இடம்பெற வைத்து - ஒரு கருத்துருவாக்கத்தைச் செய்துள்ள, தோழர்கள் இதழியலாளர் ஜெயராணி, இயக்குநர் இரஞ்சித், வழக்கறிஞர் சரவணன், பாரதி இன்னும் முகக்காட்டாத ஜெய்பீம் மன்றம், நீலம் அமைப்புகளின் தோழர்கள் அனைவருக்கும் கருப்புச்சட்டைகளின் சார்பில் நன்றி.

“மஞ்சள் எதிர்ப்புப் பாடல்”

கொழம்புல மஞ்சள்

கோயில்ல மஞ்சள்

மூஞ்சியில மஞ்சள்

தாலியில மஞ்சள்

மாலையில மஞ்சள்

சேலையில மஞ்சள்

புதுசுலயும் மஞ்சள்

ஆரத்தியில மஞ்சள்

அம்மா போட்ட மஞ்சள்

கும்பத்துலயும் மஞ்சள்

தங்கத்துல மஞ்சள்

வாசல்ல மஞ்சள்

பூஜையில மஞ்சள்

கொளத்துல மஞ்சள்

கொள்கையில மஞ்சள்

நல்லதுக்கு மஞ்சள் வேணும்

நாளுக்கெல்லாம் மஞ்சள் வேணும்

வெட்டுப்பட்டா மஞ்சள் வேணும்

நோயிக்கெல்லாம் மஞ்சள் வேணும்

ஷிட்...ஷிட்...ஷிட்...

போடாத நீ... தூத்தேறியே....

சாலையோரம் மஞ்சள்

சாக்கடையில் மஞ்சள்

கழிப்பறையில் மஞ்சள்

மலக்குழியில் மஞ்சள்

கைகளியே மஞ்சள்

கண்ணீரில் மஞ்சள்

வலியின் நிறம் மஞ்சள்

இழிவின் நிறம் மஞ்சள்

அந்த மஞ்சள் உனக்கு

இந்த மஞ்சள் எனக்கா?

நல்ல மஞ்சள் உனக்கு

நாத்த மஞ்சள் எனக்கா?

உன்னோட மஞ்சள் உனக்கே உனக்கு

உன்னோட மலமும் உனக்கே உனக்கு

ராக்கெட் விடுற, சாட்டிலைட் விடுற

மலமள்ள மட்டும் மனுசன விடுற

மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா

நிறுத்து... நிறுத்து... உன் வேசத்த நிறுத்து

ஏ டி எம் இப்போ பேடிஎம் ஆச்சு

ப்ளாஸ்டிக் பணமும் கேஷ்லெஸ் ஆச்சு

ஆதார் இந்தியா, அல்ட்ரா இந்தியா

உன் அறிவியல் அறிவு எங்க போச்சு?

ஷிட்...ஷிட்...ஷிட்...

போடாத நீ... தூத்தேறியே....

 

Pin It