மருத்துவர் அசோக் ராஜகோபால் இந்திய அரசின் பத்ம விருது பெற்றவர். கடந்த 30 ஆண்டுகளில் 25,000 க்கும் மேற்பட்ட முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்து சாதனை படைத்தவர். இந்தத் துறையில் இந்தியாவிலேயே முன்னோடியாகத் திகழ்பவர். இவர் தன் அனுபவத்தில், பல முன்னணி யோகா குருக்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதாகச் சொல்கிறார்.

யோகா என்பது, பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரள்கிற சர்வதேசத் தொழில் துறையாக இருப்பதாகவும், வயது முதிர்ச்சியின் பாதிப்புகளில் இருந்து மீட்கக்கூடிய வல்லமை கொண்டதாகவும், ஒழுங்காகப் பின்பற்றுகிறவர்களை வலிமையானவர்களாகவும், மன அமைதி கொண்டவர்களாவும் ஆக்கும், என்றெல்லாம் சொல்பவர்களுக்குச் சவால் விடுக்கும் அளவுக்கு அமைந்திருக்கிறது  டாக்டர் அசோக் ராஜகோபால் கொடுக்கும் எச்சரிக்கைகள்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் உலகளாவிய யோகா சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருக்கும் பாபா ராம்தேவைப் போன்ற மிகப் பிரபலமான யோகா பயிற்சியாளர்களில் சிலர், சுவாசப் பயிற்சிகள் மூலம் எச்.ஐ.வி எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களைக் குணப்படுத்த முடியும் எனச் சொல்லி வருகிறார்கள். வட அமெரிக்கவில் மட்டும், ஆண்டுக்கு 35,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவுக்கு யோகா உபகரணங்களுக்காகச் செலவழிக்கப்படுகிறது. சுமார் ஒன்னரைக் கோடி மக்கள் அங்கே யோகாவைப் பயிற்சிசெய்கிறார்கள்.

ஆனால், டாக்டர் ராஜகோபாலின் கூற்றுப்படி,  உடல் பாகங்களை அதீதமான அளவில் இழுத்து முறுக்கிச் செய்யப்படும் உடற்பயிற்சிகளினால் (Extreme Streching Arthritis எனப்படுகிற மூட்டு வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது. மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள்  யோகா பின்பற்றுபவர்களிடம் அதிகமாகத் தான் காண்பதாகவும் அவர் சொல்கிறார்.

மேலும் ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழுக்கு அவர் வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டவை என்னவென்றால்,

“முறையாகக் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சூழ்நிலையில் யோகா பயிற்சி செய்யப் பட்டால் அது சிறப்பான ஒரு விசயமாக இருக்கலாம். அதாவது, முறையான பயிற்சிகளும், யோகா நிலைகளில் உடலை வைத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு தேவையான உடல் வலிமை கொண்டவர்களும் முறையான பயிற்சி செய்யலாம். ஆனால் பொத்தாம் பொதுவாக அனைத்து மக்களையும் கடுமையான யோகா நிலைகளைப் பயிற்சி செய்ய உட்படுத்துவது அவர்களுக்கு பிரச்சனைகளைத்தான் கொடுக்கும்.

பல யோகா குருக்களே, அவர்கள் மேற்கொள்ளும் கடுமையான யோகா நிலைகளினால் மூட்டு சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. முழங்காலை வளைத்து, மடித்துத் செய்யப்படும் கடுமையான யோகா நிலைகள், அத்தகைய எந்தவித உடல்பயிற்சியை செய்து பழக்கப்படாதவர்களுக்கு, மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை ஒரு வகுப்பில் கொண்டு நடத்தப்படும் யோகா பயிற்சிகளில், பயிற்சியை மேற்கொள்பவர் களிடத்தில் இத்தகைய பிரச்சனைகளை அதிகமாகக் காணமுடிகிறது. பல யோகா குருக்களுக்கு முழங்கால் மற்றும் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள் வருவதற்கு  ‘வஜ்ராசனா’  என்கிற யோகா நிலைகூட காரணமாக இருந்திருக்கிறது.”

இந்தியாவில் Yogalife Center என்கிற அமைப்பை நடத்திவருகிற சாவித்ரி குப்தா என்பவர், யோகா பயிற்சியினால் உடல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதை ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் முறையான பயிற்சிகளின் மூலமும், கடுமையான பயிற்சிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக, மெதுவாகக் கற்றுக் கொண்டு பின்பற்றுவதன் மூலமும் அத்தகைய பாதிப்புகளை தவிற்க முடியும் என்றும் கூறுகிறார்.

பிரிட்டனில் 1910ஆம் ஆண்டு முதன்முதலில் ஒரு யோகா ஆர்வலர்கள் குழு தொடங்கப் பட்டுள்ளது. ஆனால், 1950 களில் சர் யெகுடி மெகுனின் என்கிற பிரபல வயலின் இசை கலைஞருக்கு  யோகா கலையின் முன்னோடியான பி.கே.எஸ் அய்யங்கார் என்பவர் பயிற்சி கொடுக்க ஆரம்பித்த பிறகுதான் அங்கு யோகா பரவலாக கவனத்தைப்பெற்றது.  அதன் பிறகு, பிரபல இசைகுழுவான பீட்டில்ஸ் (Beatles) இந்தியாவிற்குச் சென்று ரிஷிகேஷில் இருந்த குரு மஹரிஷி மகேஷ் யோகி என்பவருடைய ஆசிரமத்தில் யோகா முகாமில் பங்கேற்றபின், அதிகம் கவனம் பெற்றது.

தி டெலிகிராஃப், 23.10.2010

Pin It