காலையில் தினசரித்தாளைக் கையில் வைத்துக்கொண்டு நாட்டு நடப்புகளை மிகவும் வருத்தத்துடன் படித்துக்கொண்டே ‘டீ’ ரெடியா? என்று கேட்பார் கணவர். அதற்கு அந்தம்மாவும் இந்தா வந்துட்டேன் என்று சொல்லி டீ யை ஆற்றிக்கொண்டே (சூடாகக் கொடுத்தால் அவர் வாய் வெந்துரும்ல) அவரிடம் கொடுப்பார்.  

அவர் டீ யை வாங்கி “பிள்ளைகள் எழுந்து விட்டார்களா?” என்று கேட்டு, அந்தம்மாவை அடுத்த வேலைக்குத் திருப்புவார். அம்மாவும் பிள்ளைகளுக்கான தேநீரைத் தயார் செய்து, அவர்களிடம் செல்வார். அவர்களை எழுப்பி தேநீர் கொடுத்து, பள்ளி செல்லத் தயார்படுத்த வேண்டும்.

இதற்கிடையில் தேநீர் குடித்த கணவருக்குக் குளிப்பதற்க்கான தண்ணீரை எடுத்து வைக்க வேண்டும்.  அம்மா எடுக்கும் வரை அந்த தேநீர் டம்ளர் அங்கே தான் இருக்கும். அதையும் பிள்ளைகள் குடித்த தேநீர் டம்ளர்களையும், அம்மா எடுத்துக் கழுவி வைப்பார்.

இந்த பரபரப்பில் இவர் தனக்காக எடுத்துவைத்த தேநீர், பச்சத் தண்ணியாப் போயிருக்கும். அதன் பிறகு கணவர், குழந்தைகளுக்குக் காலை, மதிய உணவுகளை அவரவருக்குப் பிடித்தமாதிரி தயார் செய்து கொடுக்கவேண்டும். இவ்வளவு பணிகளையும் அம்மா ஒருவரே செய்வார்.

அவரவர் உடைகளை அவரவர் அணிவதைத் தவிர, வேறு எந்த வித வேலைகளும் செய்து அம்மாவின் சுமையை பகிரமாட்டார்கள். குழந்தைகளாகிருந்தால் பெரும்பாலும் அம்மா தான் உடையணிவிக்க வேண்டும். அப்பா அதைக்கூடச் சரியாகச் செய்யமாட்டார்.

இந்தக் கலவரமெல்லாம் முடிந்து சாப்பிடலாம் என்று நினைத்து உட்காருவார்.  வீட்டுக்கடிகாரம் பன்னிரெண்டு மணி அடிக்கும். மீண்டும் பிள்ளைகள், கணவர் வருகை, அவர்களுக்கான உணவு தயாரித்தல் என்று ஆரம்பித்துவிடுவார். இந்த உலகில் அம்மாக்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்ட வீடும் அந்த வீட்டில் ஒரு தனியறையும் இருக்கிறதென்றால் அது சமையலறை தான். இது நகரங்களின் வாழும் நடுத்தரவர்க்க அம்மாக்களின் நரகம்.

ஒரு முறை வேலை சம்பந்தமாக ஒரு கிராமத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. நான் எனது இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு அம்மா பல் விளக்கிக் கொண்டிருந்தார். இதிலென்னாப்பா இருக்கு என்று நீங்கள் நினைக்கலாம். இருக்கு விசயம், என்னவென்றால் அப்போது மணி காலை 11.45.  இன்னொரு அம்மாவும் காலை உணவை (கஞ்சி தான்) பாத்திரத்தில் வைத்து குடித்துக் கொண்டிருந்தார். காரணம் புரிந்தது. காலை உணவை பதினோரு மணிக்கு சாப்பிட அவர்களுக்கு என்ன ஆசையா?

அதிகாலை 4 மணிக்கு ஆண் எழுந்து, தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியை எழுப்பி, வீட்டில் மாடுகள் இருந்தால் அதுகளுக்குத் தண்ணி வைத்துக் கொட்டத்தைக் கூட்டிப்பெருக்கிச் சுத்தம் பண்ணச் சொல்லிவிட்டு, அவர் வெளியே தேநீர் அருந்தச் சென்றுவிடுவார்.

இவர் கொட்டத்தைக் கூட்டி, சுத்தம் செய்துவிட்டு, மாடுகளுக்குக் குடிக்கத் தயார் செய்து வைத்துவிட்டு, கணவர் மற்றும் பிள்ளைகளுக்குக் காலை மற்றும் மதியத்துக்கும் சேர்த்து உணவு தயாரிக்க ஆரம்பித்துவிடுவார் . தேநீர் அருந்தச் சென்ற கணவர் தான் அருந்திவிட்டு, அந்தம்மாவுக்கும் சேர்த்து  தேநீர் வாங்கிவருவார். அந்தவகையில் இவரைப் பாராட்டலாம்.

பின்னர் இருவரும்  வயலுக்குச் சென்றுவிடுவார்கள். வயலில் இருவரும் வேலை செய்வார்கள் சிறிது நேரத்தில் அம்மா மட்டும் கிளம்பி வீட்டிற்கு வந்து பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்து பள்ளிக்கு அனுப்பிவைப்பார். பின்னர் இவர் மற்ற வேலைகள் எல்லாம் முடித்து சாப்பிட மணி 11 அல்லது 12 ஆகிவிடும்.

ஆடு, மாடு வயல் இல்லாதவர்களுக்கு இந்தத் தொல்லை இல்லையே என்று நாம் நினைக்கலாம். இல்லைதான். ஆனால் அவர்கள் தினக்கூலியாக தினமும் அதே நேரத்தில் (அதிகாலை 5 மணி)கிளம்பி மீண்டும் வீட்டுக்கு 11 அல்லது 12 மணியளவில் தான் வருகிறார்கள். எந்தச் சுழலில் வாழ்ந்தாலும் பெண்களின் பிறருக்கான உழைப்பின் பங்கு மட்டும் குறைவதே இல்லை.

மேலே குறிப்பிட்ட பெண்கள் அனைவரும் உலகமயமாதல், டிஜிட்டல் மயமாதல் காலத்திற்கு முந்தையவர்கள், மனுதர்மத்தாலும், பார்ப்பனியச் சிந்தனையை உள்வாங்கிய, ஆணாதிக்கச் சிந்தனையுள்ள வர்க்கத்தால் உரிமை மறுக்கப்பட்டவர்கள். ஆனால் நல்ல கல்வி, வேலை, சிந்தனை வளம், சமூகத்தில் நல்ல நிலைமை, கொண்ட இந்த காலத்து கணினிப் பெண்களின் வாழ்க்கையும் ஒப்பீட்டளவில் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது.

கல்வியில் கணவருக்குச் சமமாகப் படித்த, ஏன் சில இடங்களில் ஆணை விட அதிகம் படித்த பெண்கள் வாழும் வீடுகளில், இருவருமே பணிக்குச் செல்பவராக இருந்தாலும், அந்த வீட்டில் அனைத்து வேலைகளையும் பெண்களே செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் சமையல் மட்டுமல்ல வீட்டில் மற்ற எந்த வேலைகளும், ஆண்களால் பகிரப்படுவதில்லை.

சமகல்வி, சம பொருளாதாரமிருந்தும் வேலைகள் மட்டும் பெண்களுக்கு இரட்டிப்பாக இருக்கிறது. விதிவிலக்காக ஒரு சில குடும்பங்களில் மட்டும் ஆண்கள், பெண்களின் ஒரு சில வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அதற்குக் காரணம் பெண்கள் சுயமரியாதை உள்ளவர்களாகவும், சுயமதிப்பை அறிந்தவர்களாகவும், பொருளாதாரத்தில் சுயசார்புள்ளவர்களாகவும் இருப்பதால் தான்.

பெரும்பாலான பெண்கள், ஆணாதிக்கச் சிந்தனையுள்ள அரக்கர்களிடம் மாட்டிக் கொண்டு, வீட்டு வேலை, அலுவலக வேலை, குழந்தைகள் பராமரிப்பு என்று பல சுமைகளைச் சுமந்து, தனக்கான விருப்பத்தை வெளியில் சொல்ல முடியாமல் மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள்.

குடும்பம் என்ற அமைப்பு  பெண்களால் கெடக்கூடாது என்று பெண்களால் பெண்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தக் கொடுமையின் சூத்திரதாரிகள் ஆண்கள் தான். அவர்கள் தான் நம் கையைக் கொண்டே நம் கண்ணைக் குத்துகிறார்கள்.

சமீபமாகத்தான் சில பெண்கள் எடுக்கின்ற விவகாரத்து, தனித்து வாழ்தல் போன்ற முடிவுகள்,  ஆண்களை, பெண்களின் பேச்சுக்களைக் காது கொடுத்துக் கேட்கவைக்கின்றது. வீட்டில் வேலையை செய்யச் சொன்னால் பத்தில் ஒன்றாவது செய்கிறார்கள். மார்க்கெட் போய் காய்கறி வாங்குதல், கடைக்குப் போவது போன்ற வேலைகளைச் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். மேலும் அவர்களை சமையலறையை நோக்கித் தள்ளவேண்டும். காலமெல்லாம் பெண்ணினம் பட்டத்துயரம் என்னவென்று புரியவைக்கவேண்டும்.

OECD( Organization for Economic Co-operation and Development 2014 ம் ஆண்டு எடுத்த புள்ளிவிபரப்படி உலகளவில் வீட்டுவேலைகளில் பங்கெடுக்கும் ஆண்கள் வரிசையில் கடைசியாக இருப்பது இந்தியஆண்கள் தான்.  இவர்கள் வீட்டு வேலைகளில் ஒரு நாளைக்கு வெறும் பத்தொம்பது நிமிடங்கள் வீதம், வாரம் 5மணி நேரம் முப்பத்தைந்து நிமிடம் மட்டும்  செல்விடுகிறார்கள். இது  பெண்களுடன் ஒப்பிடுகையில் ஒரு சதவீதத்திற்கும் கீழ்தான்.

மேலும் இந்தியப் பெண்கள் தான் சமையல் வேலையில் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் வேலை செய்யும் நிலையில் இருக்கிறார்கள். உலக ஒப்பீட்டளவில் இந்தியப் பெண்கள் வீட்டு வேலை செய்யும் நேரம் மற்ற நாட்டைக்காட்டிலும் 6 மடங்கு அதிகம். வேலைக்குப் போகாத இந்திய ஆண்கள் சொந்த நலனுக்காக செலவிடும் நிமிடங்கள் ஒரு நாளைக்கு 703 நிமிடங்கள், அதாவது ஒரு நாளில் பதினொரு மணி நேரம். இந்த நேரத்தை அவர்கள், தொலைக்காட்சி பார்ப்பது, அரட்டை அடிப்பது, வாக்கிங் போவது, செய்தித் தாள் படிப்பது, டீக்கடைக்குப் போவது, மாதிரியான வேலைகளுக்குத்தான் செலவிடுகின்றனர் ஒழிய வீட்டு வேலைகளில் பங்கேற்பதில்லை.

ஒரு பெண் அதிகாரியாக இருந்தாலும், அவர் கீழ் பல பேர் அவருக்கு பணிவிடை செய்தாலும். அவர் வீட்டு வேலையை அந்தப் பெண் அதிகாரி மட்டுமே செய்யவேண்டும். இத்தனைக்கும் அவர் கணவர் எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருந்தாலும், அந்தப் பெண் தான் எல்லா வேலைகளும் செய்ய வேண்டும்.

திருமணத்திற்குப் பெண்ணின் சம்மதம் கேட்கிறார்களோ இல்லையோ, முதலில் நன்றாக சமைக்கத் தெரியுமா என்றுதான் கேட்கிறார்கள்.  சமையல் வேலை மட்டுமே தெரிந்த ஆண் கூட வீட்டில் சமைப்பதில்லை. கேட்டால் நாளெல்லாம் வேலை செய்கிறேன் அதனால் நீயே செய் என்பார். இதே பதிலை ஒரு பெண் சொன்னால் ஏற்பார்களா? என்பது சந்தேகம் தான். ஒரு வேளை சரி என்றாலும் ஆண்கள் சமைக்க மாட்டார்கள். கடைகளில் தான் வாங்கி வருவார்கள்.

வீட்டு வேலைகளில் நாம் விடுபட, அல்லது ஆண்களையும் பங்கேற்க வைக்க, முதலில் நாம் அவர்களுக்கு ஜனநாயக முறையில் எடுத்துச் சொல்வோம்.  அடுத்து, டிக்டேட் செய்வோம். அப்படியும் ஒத்துவர வில்லையென்றால் ஒரிரு நாள் வீட்டுவேலையப் புறக்கணிப்போம். இது ஆரம்பம் தான்.

முதலில் வீட்டு வேலையை நமது பெண் பிள்ளைகளுக்கு மட்டும் சொல்லித்தராமல் ஆண் பிள்ளைகளுக்கும் சொல்லித்தந்து  பழக்குவோம். இறுதியாக, சமையலறை ஒன்றும் கருவறையல்ல பெண்கள் மட்டுமே வைத்திருக்க, கருவறையே தேவைப்பட்டால் எடுப்போம். சமையலறைகள் எம்மாத்திரம்?  #Boycott Kitchen24.12.17

Pin It