கடவுளையும், மதத்தையும் மறுக்கும் திராவிட இயக்க ஆண்கள் எவரும் கை கொள்ளத் துணியாத பெரியாரின் பெண் உரிமைச் சிந்தனைகளை, பெண்களிடையே குறிப்பாக கல்லூரி மாணவிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக ‘கூடு பெண்கள்' வாசிப்பு அரங்கம், பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக 17.9.2009 அன்று, பெரியாரின் பிறந்த நாளை கொண் டாடிய ‘கூடு பெண்கள்' – ‘என்னை வடிவமைத்த பெரியாரின் கருத்து', ‘பகுத்தறிவு வாதம்', ‘சுயமரியாதை என்பது...' ஆகிய தலைப்புகளில் கட்டுரை, கவிதை, சிறுகதைப் போட்டிகளை நடத்தினர்.
இதில் தென் மாவட்டங்களில் இருந்து சுமார் 200 கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். சிறந்த கட்டுரையாளர்களுக்கு பெரியார் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கரின் நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ‘பெண் விடுதலை நோக்கில் பெரியார், அம்பேத்கர்' என்று தலைப்பில் விரிவான விவாத அரங்கமாக, கருத்துப் பகிர்வரங்கம் நடைபெற்றது. இந்த அமர்வில் கல்லூரி மாணவிகள் எழுப்பிய கற்பு, காதல், மதம், சாதி, பண்பாடு குறித்த பல்வேறு கேள்விகளுக்கும், அய்யங்களுக்கும் வ.கீதா விளக்கமளித்தார்.
“பெரியார் பிறந்த நாளில் பெரியாரின் எழுத்துகளை நாட்டுடைமையாக்க வேண்டும். ‘பெண் ஏன் அடிமையானாள்?' நூலை கல்லூரிகளில் கட்டாயப் பாடமாக்க வேண் டும். பள்ளிகளில் பெரியாரின் எழுத்துகளை அறிமுகப்படுத்த வேண்டும். குஞ்சிதம் அம்மையார் உள்ளிட்ட சுயமரியாதை இயக்கப் பெண்களின் எழுத்துகளைப் பரவலாக்க வேண்டும். அரசு அலுவலகங் கள், கல்வி நிறுவனங்களில் மதத்தை அடையாளப்படுத்தும் நிகழ்வுகளைத் தடை செய்ய வேண்டும்” ஆகிய கோரிக் கைகள் முன்வைக்கப்பட்டன.
“பெண்கள் மத்தியில் பெரியாரையும், அம்பேத்கரையும் கொண்டு செல்லும் முயற்சிகள் – எங்களுக்கான பயிற்சிகளாகவே அமைகின்றன. எதிர்காலத்தில் பெண்கள் தொடர்பான விளையாட்டுகள் குறித்த கருத்தரங்கம், பெண் புகைப்பட கலைஞர்களின் புகைப்படக் கண்காட்சி ஆகியவை நடத்த திட்டமிட்டுள்ளோம். பெரியார் பிறந்த நாளை, பெண்களின் அடையாளமாக செய்கிறோம்” என்கிறார், ‘கூடு பெண்கள்' அமைப்பாளர் சாலை செல்வம்.
தலித்துகள் மீது வன்மத்தைக் கக்கும் தேவர் குரு பூஜை, அரிவாள், வெட்டு, குத்து என சாதிய இறுக்கம் கொண்ட தென் மாவட்டங்களின் மய்ய இடமான மதுரையில் – பெரியார், அம்பேத்கரின் கருத்துகளை பெண்களிடம் கொண்டு செல்லும் ‘கூடு பெண்'களின் செயல்பாடுகள், பெண்ணிய மற்றும் சாதி, மத எதிர்ப்பை தீவிரப்படுத்தும் நம்பிக்கை கீற்றாகத் திகழ்கின்றன.
– அநாத்மா