ஐ.நாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் ஈழத்தில் இருக்கும் தமிழ் மக்களுக்கு எவ்விதத் தீர்வையும் முன்வைக்கவில்லை என்பதை உரைத்தும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்துவதே இனப்படுகொலைக்கு உள்ளான மக்களுக்கான ஒரே தீர்வு என்பதை வலியுறுத்தியும் மார்ச் 17 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலையருகே ஒன்றுகூடலை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்து நடத்துகிறது. இந்த ஒன்று கூடலில் தமிழீழத்திற்கு ஆதரவான அனைத்து அமைப்புகளும், இயக்கங்களும் பங்கு கொள்கின்றன.

தமிழீழ இனப்படுகொலை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அவலம். இந்த அவலத்தை தடுத்து நிறுத்த வேண்டிய சர்வதேச நாடுகளும், ஐ.நா அமைப்பும் தங்களது கடமையில் இருந்து தவறியது மட்டுமின்றி இன்று இந்த இனப்படுகொலையை அங்கீகரிக்காமல் தொடர்ந்து தமிழர்களை ஏமாற்றி வருகின்றன. மேலும் இனப்படுகொலையை நடத்திய இலங்கை அரசே இந்த இனப்படுகொலையை விசாரித்து நியாயம் வழங்க வேண்டும் என்று சொல்லிவருகின்றன. குற்றவாளியிடம் குற்றத்தை விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்று சொல்லும் விசித்திரமான கோரிக்கையை நாம் ஏற்றுக் கொள்ளமுடியாது என்பதை பதிவு செய்யவும், இனப்படுகொலைக்கு உள்ளான மக்களை இனப் படுகொலை செய்து கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்து வாழக் கூறுவது நியாயம் இல்லை; தனித்தமிழ் ஈழமே தீர்வு என்பதை வலியுறுத்தவும் ஒன்றுகூடுவோம்.

இந்நிகழ்வில் பழ.நெடுமாறன், நல்லகண்ணு, வைகோ, பண்ருட்டி வேல்முருகன், தெஹ்லான் பாஹ்வி, தமீம் அன்சாரி, த.வெள்ளையன், பெ.மணியரசன், குடந்தை அரசன், மாணவர்கள், தொழிற் சங்கத்தினர், தமிழின உணவர்வாளர்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், தமிழ் இனத்திற்காகப் போராடும் அனைத்து அமைப்பினரும் பங்கு கொள்கின்றனர்.

கோரிக்கைகள்

1. தனி தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை அறிவித்து நடத்த வேண்டும்.

2. ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை, மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிக்க உடனடியாக சர்வதேச நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் ஆசிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து பங்கேற்க கூடாது.

3. அமெரிக்கா ஐ.நாவில் கொண்டு வரும் தீர்மானம் இலங்கை அரசிற்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு எதிராக இருக்கும் காரணத்தினால் அதை புறக்கணிக்கிறோம்.

4. தமிழீழத்தில் நடந்தது போர்குற்றமல்ல; இனப்படுகொலை என்று அறிவிக்க வேண்டும். மேலும் தற்பொழுது வரை நடந்து கொண்டிருக்கும் திட்டமிட்ட இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்துகிறோம்.

5. பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைத்திட, இலங்கை அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்ட இடைக்கால நிர்வாக சபை ஈழத்தின் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களை இணைத்து தமிழர்களை கொண்டு அமைக்கப்பட வேண்டும். இந்த இடைக்கால நிர்வாக சபை சர்வதேச நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும். 

Pin It