கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

modi kashmir leaders2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு 1 அன்று காசுமீரின் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் மோடியை சந்தித்தார்கள். சந்திப்பு நடந்த மூன்றாவது நாளில், காசுமீரின் சிறப்புச் சட்டம் 370 நீக்கப்பட்டு, காசுமீர் - லடாக் என இருபகுதிகளாக்கப்பட்டு, அவற்றின் மாநில அந்தஸ்து நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக்கப்பட்டது.

இந்த தலைவர்கள் உட்பட முன்னனி காசுமீர் தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டார்கள். நீண்ட சிறைவாசத்திற்கு பின் விடுவிக்கப்பட்ட காசுமீர் தலைவர்கள் ஒன்று கூடி ‘குப்கார் ஒருங்கிணைவு’ எனும் கூட்டமைப்பை ஏற்படுத்தினார்கள்.

இதை பருக் அப்துல்லாவும், முப்டி முகம்மதுவும் தலைமை தாங்குகிறார்கள். இந்த குப்கார் குழு, காசுமீரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெருவெற்றி பெற்றது.

காசுமீரின் மாநில அந்தஸ்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் 14 தலைவர்கள் உள்ளிட்ட ‘குப்கார் குழு’வை மோடி இன்று (24-06-2021) நேரில் சந்தித்திருக்கிறார்.

இந்த சந்திப்பில் மோடி உடன் அமித்ஷாவும், தேசிய பாதுகாப்புச் செயலர் அஜித் தோவலும் உடனிருந்திருக்கிறார்கள். இந்த திடீர் சந்திப்பின் பின்னனியில் மோடி அரசின் சனநாயக நோக்கம் என்று எதுவும் இல்லை.

ஆறு மாதங்களுக்கும் மேலாக போராடும் உழவர்களை சந்திக்காத மோடி, திடீரென காசுமீர் தலைவர்களை சந்திப்பதன் பின்னனியில் சர்வதேச மாற்றங்களே பெரும் காரணிகளாக இருக்கின்றன. குறிப்பாக மத்திய ஆசியாவில் மாறிவரும் புவிசார் அரசியல் காரணிகளே இந்த சந்திப்பிற்கு காரணம்.

இந்த சந்திப்பில் காசுமீரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடப்பது பற்றிய வாக்குறுதியும், மாநில அந்தஸ்த்தை மீண்டும் நிலைநாட்டுவதாகவும் அமித்ஷா வாக்குறுதி கொடுத்ததாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால் இதற்கான காலநிர்ணயம் எதையும் மோடி அரசு இச்சந்திப்பில் தெரிவிக்கவில்லை. இந்த சந்திப்பின் பின்னனி அரசியல் புரியும் பட்சத்தில் இனிவரும் காசுமீர் நிகழ்வுகளை புரிந்து கொள்ள இயலும்.

கடந்த ஜுன் 15ம் தேதியோடு, கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வருடம் முடிகிறது. சீனா வடக்குப் பகுதியில் தனது துருப்புகளை அதிகரிப்பதும், கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் செய்து வருவதை இந்தியாவினால் தடுக்க இயலவில்லை.

கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்திற்கு பின்னர் இந்தியாவின் பலவீனம் உலகரிந்த நிலையில், இந்தியாவின் வடக்குப்பகுதியின் அண்டை நாடான நேபாளத்தின் சீனா சார்பு நிலைப்பாடுகள் மேலும் அதிகரித்திருக்கின்றன.

காசுமீர் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்ட பின்னர் காசுமீர் பிரச்சனை சர்வதேசப் பிரச்சனையாக மாறியிருக்கிறது. 1971க்குப் பின்னர் காசுமீர் ஐ.நா.வின் பாதுகாப்பு அவை உட்பட ஐ.நா.வின் பல அரங்குகளில் விவாதமாகி இருக்கிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் காசுமீர் பிரச்சனை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றன.

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை காசுமீரத்திற்கு அழைத்து வந்து காட்ட வேண்டிய நெருக்கடி மோடிக்கு ஏற்பட்டது. கனடா நாட்டின் பிரதமர் வெளிப்படையாக காசுமீர் குறித்து கருத்து சொல்வது நடக்கிறது. இந்த நிலையில், காசுமீர் பிரச்சனை இந்தியாவின் கையிலிருந்து சர்வதேச தளத்திற்கு நகர்ந்திருப்பதை மோடி அரசு கண்டு பதட்டமடைந்திருந்தது.

இந்துத்துவ பார்ப்பனீய ஆற்றல்களால் காசுமீர் மீதான அடக்குமுறைகள், ஆயிரக்கணக்கான கைதுகளை நியாயப்படுத்த இயலாமல் போனது. பாகிஸ்தானை முன்னிறுத்தி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்தியப் பகுதியாக காசுமீரை காட்டிவந்த இந்திய அரசு, மோடியின் நடவடிக்கையால் பின்னுக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையிலேயே மத்திய ஆசியாவில், குறிப்பாக ஆப்கானிஸ்தானிலும் பெரும் மாற்றங்கள் நிகழத்துவங்கியுள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் துவங்கி இருக்கின்றன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முடிவிற்கேற்ப ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறும் நிலையில், தாலிபான்களின் ஆதிக்கத்தின் கீழ் ஆப்கானிஸ்தான் வருவதற்கு அதிக காலமாகாது.

தாலிபன் - அமெரிக்கா பேச்சு வார்த்தைகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த பேச்சு வார்த்தையில் ஆப்கானிஸ்தானின் தற்போதய அரசு கூட தவிர்க்கப் பட்டிருக்கிறது. இந்தியாவுடன் ஆலோசிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டது.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் தலிபான் பிரதிநிதிகள்

90-களின் நடுவில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் நடத்திய ஆட்சியை இந்தியா அங்கீகரிக்கவில்லை. தாலிபன்களை அங்கீகரிப்பதில் இந்தியாவிற்கு சிக்கல் எழுந்ததற்கு பல காரணங்களில் காசுமீர் முக்கியமானது. வாஜ்பாய் ஆட்சியின் பொழுது கடத்தப்பட்ட இந்திய விமான (கந்தஹார் விமானக் கடத்தல்) நிகழ்வினை இந்தியா மறந்திருக்கவில்லை.

இந்நிலையிலேயே, தாலிபன்களின் ஆட்சி மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஏற்படும் நிலையில், இந்தியா - ஆப்கான் உறவு என்னவாகும் எனும் கேள்விகள் எழுகின்றன. தாலிபன்களுடனான பேச்சுவார்த்தையை இந்தியா பார்வையாளராக கூர்ந்து கவனித்து வந்திருக்கிறது.

ஆப்கான் நாட்டிற்கு அதிக அளவு பொருளாதார உதவி செய்த நாடு இந்தியா. கிட்டதட்ட 3 பில்லியன் டாலர்களை இந்தியா முதலீடு செய்திருக்கிறது. ஆப்கானில் பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் ஈரானின் ஆதிக்கத்திற்கான போட்டியில் தொலைந்து போகும் நிலையில் இந்தியா இருக்கிறது.

ஆப்கானின் கிழக்குப் பகுதியில் இருக்கும் சீனா, ஆப்கானில் தனது ஆதிக்கத்திற்கான நிலையை உறுதி செய்ய, அதன் நட்பு நாடான பாகிஸ்தானின் உதவி கிடைக்கும். இதே நிலையில் ரசியாவும் தமக்கான தொடர்புகளோடும், உறவுகளோடும் வலுப்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்காவை சார்ந்து தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைத்த இந்தியாவிற்கு, ஆப்கானில் எந்த உதவியையும் அமெரிக்கா செய்திடவில்லை. இந்த கசப்பான உண்மை மோடியின் நெருங்கிய நண்பராக சொல்லப்பட்ட ட்ரம்ப் காலத்திலேயே நடைபெறவில்லை.

இந்நிலையில் மோடியுடன் நெருக்கம் காட்டாத ஜோ பைடனின் அரசாங்கத்திடம் மோடி எதிர்பார்த்த மேற்காசிய பாதுகாப்பும் நடைபெற்றதாக தெரியவில்லை. அதாவது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்காவிற்கு இருக்கும் பிடிமானத்தின் வழியாக தனக்குரிய பாதுகாப்பை நிலைநாட்ட இந்தியா முயலுகிறது.

இந்த எதிர்பார்ப்பை அமெரிக்காவிடம் இந்தியா எதிர்நோக்கி உள்ள நிலையிலேயே, அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு காசுமீரில் மாற்றங்களை கொண்டுவர மோடிக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. சீனா, பாகிஸ்தானுடனான மோதல் போக்கிற்கு நடுவே ஆப்கானில் தாலிபன்கள் ஆட்சி அமைந்தால் காசுமீரில் அவர்கள் தலையீடு நிகழ அதிக வாய்ப்புள்ளது.

அப்படியாக ஒரு சூழலை ஆயுதக்குழுக்கள் வழியே தாலிபான்கள் ஏற்படுத்தும் போது சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவிற்கு சாதகமான முடிவை எடுக்கப் போவதில்லை. இப்படியான சூழலில் தமக்கு அமெரிக்கா துணைக்கு வரும் என நம்பிய மோடியை அமெரிக்காவும் கைவிட்டிருப்பதைத் தான் இந்த மோடி - காசுமீர் தலைவர்கள் சந்திப்பு அம்பலப்படுத்தி இருக்கிறது.

கடந்த கால 90-களின் தாலிபான்களின் ஆட்சியை அங்கீகரித்த மூன்று நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று எனும் நிலையில், பாகிஸ்தானே ஆப்கனின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும். தாலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் ஆப்கனின் இன்றய அரசையும் இணைக்க இந்தியா முயன்றது. சவுதி அரசு இந்த முடிவை எதிரொளித்தது.

இன்றைய ஆப்கன் அரசோடு பேச இயலாது என தாலிபன் அறிவித்தது மட்டுமல்லாமல் பேச்சுவார்த்தை நடக்கும் இடத்தை சவுதியிலிருந்து கத்தார் நாட்டிற்கு மாற்றியது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவிற்கு இடமில்லை என்பதை நேட்டோவின் அதிகாரியான அலிஜண்டாரோ அல்வர்கான்சாலேஸ் (NATO official Alejandro Alvargonzález) வெளிப்படையாகவே சொன்னது இந்தியா டைம்ஸ் இதழில் 29 ஜன 2019ல் வெளியானது.

எனவே ஆப்கானில் உருவாகப்போகும் அரசில், பாகிஸ்தான் நேரடியாக தனக்கான அதிகாரவர்க்கத்தை உருவாக்கும் வாய்ப்பு மிக அதிகம். இந்நிலையில், ஆப்கான் அரசின் வழியாகவா அல்லது தனியாகவோ தாலிபன்களுடன் பேசுவதா எனும் இந்தியாவின் இரட்டை நிலை இன்று மாறிவிட்டது. தாலிபன்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முயற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறது.

அதாவது, காசுமீர் தலைவர்களை மோடி சந்திக்கின்ற இன்றைய (24-06-2021) தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் கத்தார் நாட்டில் தாலிபன்களின் பிரதிநிதிகளை இந்தியாவின் வெளியுறவுக்குழு சந்தித்தது எனும் செய்தியை கத்தாரின் அதிகாரி வெளிப்படுத்தினார்.

தாலிபன்களுடன் இந்தியாவினால் உறவுவை ஏற்படுத்திக்கொள்ள இயலவில்லையெனில் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இந்திய அரசு செலவழித்த கட்டமைப்புகளை பாகிஸ்தான் அழித்துவிடுமென இந்தியா அஞ்சுகிறது.

தாலிபன்களோடு பேசவேண்டுமெனில் காசுமீர் நிலையை இந்தியா சீர்செய்ய வேண்டுமென கோரிக்கை எழுவதில் வியப்பில்லை. ஜோ பைடனின் அழுத்தத்திலும், அரபு எமிரகத்தின் (UAE) பின்னனி பேச்சுவார்த்தையிலும் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.

ஏனெனில் அமெரிக்காவின் தெற்கு - மத்திய ஆசியாவிற்கான அதிகாரியான டீன் தாம்ப்சன், “..இந்தியா காசுமீரின் சிறைக் கைதிகளை விடுதலை செய்வது, 4ஜி மொபைல் தொடர்பை நிலை நிறுத்துவது, தேர்தல் நடத்துவது போன்ற நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறோம்..” என வெளிப்படையாக அறிவித்தார்.

அதாவது தேர்தலை நடத்த வேண்டுமெனில் சிறைப்பட்ட தலைவர்கள் விடுதலையாவது மட்டுமல்ல, காசுமீரின் மாநில உரிமை நிலை நிறுத்தப்பட வேண்டும். இதைச் செய்வதைத் தவிர மோடிக்கு வேறு வழியில்லை. காசுமீரில் தான் விரும்பிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்ற இந்துத்துவ கும்பல் தலைகுப்புற கவிழ்ந்திருக்கிறது.

அமெரிக்காவை நம்பி மோடி விரித்த வலையில் மோடியே சிக்கிய நிகழ்வாக இது மாறியிருக்கிறது. இந்த நிகழ்வு நடக்கும் இதே நாட்களில் அமெரிக்காவின் கடற்படையோடு கேரள கடற்கரையோரம் கூட்டுப் பயிற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவின் தேவைக்கேற்ப நடந்து கொள்ளும் நாடாக இந்தியாவை மோடி மிகச்சிறப்பாக மாற்றி இருக்கிறார்.

மேற்கு - வடக்குப் பகுதியில் இந்தியாவை கைவிட்ட அமெரிக்கா, தெற்காசியா கடல் பிராந்தியத்தில் எப்படி பாதுகாக்கப் போகிறது என்பதே தமிழர்களாகிய நம்முன் உள்ள கேள்வி. இதனாலேயே இலங்கை ஊடான வெளியுறவுக் கொள்கையில் தமிழ்நாடு முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதை முன்வைக்கிறோம்.

ஈழத்தமிழர்கள் மட்டுமே இப்பிராந்தியத்தில் அமைதியை கொண்டு வருவதற்கான அரசியல் கோட்பாட்டு நிலையில் இருப்பவர்கள். தமிழீழ விடுதலை மட்டுமே இப்பகுதியில் தமிழர்களின் பாதுகாப்பு அரணாக அமையும்.

இது நடக்கவில்லையெனில் தெற்காசியாவில் இந்தியாவின் பாகிஸ்தானாக இலங்கை மாறுவதை இந்திய பார்ப்பனியத்தால் தடுக்க இயலாது.

- மே பதினேழு இயக்கம்