உலகின் புதிய நாடாக மலர்ந்துள்ளது தெற்கு சூடான். சனிக்கிழமை 9.7.2011 அன்று சூடானிலிருந்து விடுதலைப் பெற்றது. பிறகு தெற்கு சூடான் தங்கள் அரசை அதிகாரப் பூர்வமாக தெற்கு சூடான் குடியரசு என்று அறிவித்துக் கொண்டது. ஆப்பிரிக்கக் கண்டத்தின் 54வது நாடாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் 193 வது நாடாகவும் தெற்கு சூடான் மலர்ந்துள்ளது.

தெற்கு சூடான் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் தலைநகர் சூபா தெற்கு சூடானின் எல்லைகளாக கிழக்கே எத்தியோப்பியா, தெற்கே கென்யா, உகாண்டா, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு, மேற்கே நடு ஆப்பிரிக்க குடியரசு மற்றும் வடக்கே சூடான் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. தெற்கு சூடான் மக்களுக்கு தமிழ்த் தேசிய விடுதலைக்கு போராடி வரும் நாம் அந்த புதிய விடுதலைத் தேசத்திற்கு அடிமைத் தமிழகத்தில் இருந்து நம் வாழ்த்துகளை சொல்லுவோம்.

புதிய தேசம், தெற்க சூடானின் தன் முதலாவது சுதந்திர தினத்தில் தலைநகர் சூபாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்க தெற்கு சூடானுக்கான சுதந்திரப் போரை முன்னின்று நடத்திய ஜோண் ஹரங்கின் சமாதிக்கு முன்பாக முதற் தடவையாக தேசியக் கொடி ஏற்றப்பட்டு அம் மக்களால் கொண்டாடப்பட்டது.

தெற்கு சூடானின் அரசியலமைப்பில் கையெழுத்திட்ட சல்வா கிர், தமது புதிய தேசத்தின் முதலாவது அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். வடக்கு சூடானுடனான நீண்ட கால விடுதலைப் போரில்பெரும் இழப்புகளை தெற்கு சூடான் சந்தித்திருந்தது.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக கிறிஸ்தவ சூடானியர்களுக்கும், முஸ்லீம் சூடானியர் களுக்கும் இடையே கடும் உள்நாட்டுப் போரில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 50 வருடங்கள் நடந்த விடுதலைப் போரின் முடிவில் சூடானை இரு தேசங்களாக பிரித்துக் கொள்ள முடிவு செய்து கொண்டனர் சூடான் மக்கள். அதன் பின் புதிய தெற்கு சூடானை உருவாக்குவதற்கு பெரும் அளவில் சர்வதேச முயற்சிகள் தேவைப்பட்டன. அண்மையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் தனி தெற்கு சூடானுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்

விபரம்:

வாக்கு அளித்தவர்கள் 38,51,994 பேர் (97.58 விழுக்காடு)

செல்லுபடியான வாக்குகள்: 38,37,406 பேர் (99.62 விழுக்காடு)

தனி நாட்டுக்கு ஆதரவு: 37,92,518 (98.3) விழுக்காடு

எதிர்ப்பு வாக்குகள்: 44,888

இப்போது இரண்டு சூடான்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு, தெற்கு சூடான் பிறந்து விட்டது. பல்லாயிரக்கணக்கில் திரண்டி ருக்கும் மக்கள் மத்தியில் வடக்கு சூடான் அதிபர் ஓமர் அல் பசீர், ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலர் பான் கீ மூன் உட்பட பல வெளி நாட்டுப் பிரதிநிதிகளும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன், வடக்கு மற்றும் தெற்கு சூடான்கள் ஒற்றுமையாக எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என்று கூறினார். இன்று சுதந்திரம் கிடைத்து விட்டாலும், நீண்ட கால போரினாலும், வேறு பல காரணங்களாலும் ஏற்பட்டிருக்கும் வறுமை நிலையை போக்க தெற்கு சூடான் மிகுந்த சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று சுட்டிக் காட்டினர்.

ஆரம்பத்தில் தெற்கு சூடான் பிரித்தானியர் மற்றும் எகிப்தியரின் கூட்டுரிமையுடன் கூடிய ஆங்கிலோ எகிப்திய சூடானின் கீழ் ஆளப்பட்டு வந்தது. பின்னர் 1956 ஆம் ஆண்டில் சூடான் குடியரசின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டது. சூடானில் இடம் பெற்ற முதலாவது உள்நாட்டுப் போரை அடுத்து 1972 ஆம் ஆண்டிலிருந்து 1983ம் ஆண்டு வரை இது சூடானின் கீழ் தன்னாட்சியுடன் கூடிய சிறப்புப் பகுதியாக இருந்து வந்தது.

அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது உள்நாட்டுப் போரை அடுத்து 2005 ஆம் ஆண்டில் சூடானிய அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இராணுவத்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு உருவானது. அதே ஆண்டின் பிற்பகுதியில் சூடானின் கீழ் மீண்டும் தன்னாட்சி அமைப்பாக உருவானது. 2011 ஆம் ஆண்டு சனவரியில் இங்கு இடம்பெற்ற கருத்தறியும் வாக்கெடுப்பை அடுத்து 2011 சூலை 9 ஆம் நாள் உள்ளூர் நேரம் அதிகாலை 12.01 மணிக்கு தனி நாடானது.

கருத்தறியும் வாக்கெடுப்பில் 99% வாக்காளர்கள் சூடானில் இருந்து விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

புதிதாக விடுதலையடைந்த தெற்கு சூடான் எதிர்நோக்கும் சிக்கல்கள்:

இந்தப் புதிய தேசத்தை அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் அங்கீகரித்துள்ளன. தெற்கு சூடானின் எண்ணை வளத்தை நுகரும் சீனாவும் இராஜதந்திர உறவுகளைப் பேண முன்வந்துள்ளது. இதற்கிடையே, தமிழ்த் தேசிய வாதிகள் வழமை போலவே தெற்கு சூடானுடன் தமிழீழத்தை தொடர்புப்படுத்தி பேச ஆரம்பித்து விட்டனர். இவ்விரண்டு தேசியப் பிரச்சினை களுக்கு இடையில் சில ஒற்றுமைகள் காணப் பட்டாலும், பல வேறுபாடுகள் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். போரின் இறுதிக் கட்ட தீர்மானம், பேச்சுவார்த்தை தொடர்பாக பாரிய வேறுபாடு உள்ளது.

அதை தமிழ் நாட்டு தமிழர்களும் தமிழீழ ஆதரவாளர்களும் மறந்து விடுகிறார்கள். இன்று அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் அந்த எண்ணெய் வளம் கொண்ட தேசத்தை கொள்ளை அடிக்க அனைவரும் கூட்டு சேர்ந்துள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ளவும் மறுக்கின்றனர்.

சூடான் நாட்டின் மொத்த எண்ணெய் வளத்தில் மூன்றில் இரண்டு பங்கு தெற்கு சூடானில் உள்ளது. தெற்கு சூடான் சுதந்திர நாடாகிய போதிலும், அங்குள்ள வறுமை போன்ற பிரச்சினைகள் தீர்வதற்கு நீண்ட காலம் எடுக்கும். கடன் வழங்கும் நாடுகளும், இந்த நிலைமையைப் பயன்படுத்தி தெற்கு சூடானை அடிமைப்படுத்த முனைகின்றன. சுதந்திரமடைந்த தெற்கு சூடானின் இன்றைய நிலைமையை பயன்படுத்த அமெரிக்க மற்றும் மேற்குல நாடுகளும் முனைகின்றன.

அதே நேரத்தில் புதிய தேசத்தின் பதவிகள் யாவும் தெற்கு சூடான் மக்களின் விடுதலை இயக்கம் (குகஃM) செல்வாக்கு உள்ளவர்களுக்கே வழங்கப் படுகின்றது. சுதந்திர தேசத்தில் வாய்ப்புக் கிடைக்கும், என்று நம்பியிருந்த புலம் பெயர்ந்த தெற்கு சூடானின் சனநாயக அரசியல் இயக்கங் களுக்கு இதில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

தெற்கு சூடான் விடுதலைக்கு துணை நின்றவர்கள் புலம் பெயர்ந்த சூடான் மக்கள் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். தெற்கு சூடானில் முப்பது வருடங்கள் இடையறாது யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளையில், அகதிகளாக புலம் பெயர்ந்த பலர் இன்று தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சூடானின் தலைநகர் கார்ட்டூமில் வாழ்ந்தவர்கள் பெருமளவில் திரும்பி வருகின்றனர்.

"தெற்கு சூடான் விடுதலை கிடைத்து விட்டால் போதும், நாடு முன்னேற்றத்திற்கு வழி பிறந்து விடும். வறுமையும், சமுதாய வேற்றுமை களும் மறைந்து விடும்'' என்று பரப்புரைச் செய்து புலம் பெயர்ந்தோர் நடுவில் ஆதரவைத் திரட்டியவர்கள், "விடுதலை யடைந்த தெற்கு சூடானில் பாலும், தேனும் ஆறாக ஓடும்' என்றும் பரப்புரைச் செய்தனர்.

ஆனால் இங்குள்ள குழந்தைகள் வாய்க்காலில் ஓடும் அசுத்த நீரைப் பருகுவதைக் கண்டேன். வறுமை காரணமாக வெறும் உப்புக் கட்டியைக் கூட ஆகாரமாக உண்ணுகின்றனர் எனது பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணிக் கலங்கி நிற்கிறேன்'' என்று கார்ட்டூமில் கணித ஆசிரியராகப் பணியாற்றிய ஒருவர் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும்.

அதேபோல் ஒன்றுபட்ட சூடானில் இதே நிலைமை நீடிக்கும் என்பதுதான் உண்மை. இதை ஒற்றுமை பேசுபவர்களுக்கு நாம் புரிய வைக்க வேண்டும். இதையெல்லாம் மீறித்தான் அப்புதிய தேசத்தை கட்டியமைக்கவேண்டும்.

தெற்கு சூடானுக்கு தேவையான குழாய்ப் பாதைகளும், துறைமுகங்களும் வடக்கு சூடானில் அமைந்துள்ளன. எண்ணெய் ஏற்றுமதியினால் கிடைக்கும் வருமானத்தில் கணிசமான பங்கு, வடக்கு சூடானுக்கு கிடைக்கும். யுத்தம் நடைபெற்ற காலத்தில், சீனா வடக்கு சூடான் அரசுக்கு ஆயுத விநியோகம் செய்துள்ளமை அனைவருக்கும் தெரியும்.

 இருந்த போதிலும், மேலை நாடுகளின் ஆதரவு கிட்டுமென்பதற்காக தெ.சூ.ம.வி.இ. (குகஃM) ஒருபோதும் சீன எதிர்ப்பு பிரச்சாரம் செய்ய வில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளின் நேரடி ஆதரவு இருந்த போதிலும், சுதந்திர தெற்கு சூடான் சீனாவை நட்பு நாடாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை (குகஃM) அரசு உணர்ந் திருந்தது. இனி வரும் காலங்களிலும், தெற்கு சூடான் எண்ணெய்யை சீனாவே வாங்கப் போகின்றது.

 சந்தையில் எண்ணெய் விலை நிர்ணயிப்பதன் மூலம், வட்டிக்கு கடன் வழங்குவதன் மூலமும் தான், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் இலாபம் சம்பாதிக்கப் போகின்றன. தெற்கு சூடானை நிரந்தர கடனாளியாக்குவதன் மூலம், தமது காலனி யாக வைத்திருப்பதே அவர்களின் நோக்கம்.

சூடான் பாலஸ்தீன விடுதலை இயக்கம் உட்பட பல இஸ்லாமிய அமைப்புகளின் ஆப்பிரிக்க இடைத்தங்கல் வலையமாக மாறியிருந்தது. இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் சூடானை பிரித்து அதனைத் தனது ஆக்கிரமிப்பிற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என அமெரிக்கா மற்றும் ஏகாதிபத்தியங்கள் சிந்திக்க ஆரம்பித்தன.

அதன் விளைவாக தென் சூடான் விடுதலை இயக்கத்திற்கு ஆதரவை வழங்க ஆரம்பித்தன. தென் சூடானைத் தனக்கு விசுவாசமான அரசியல் மையமாக, ஆப்பிரிக்காவின் இஸ்ரேலாக உருவாக்கத் தீர்மானித்தன. அதன் விளைவாக இன்று ஒரு புதிய தேசம் உருவாகியுள்ளது.

ஈழப் போர் (ஈழத்தில் எண்ணெய் வளம் இல்லை) போன்றுதான், தெற்கு சூடான் போரும் நீண்ட காலம் (1983 2005) நடைபெற்றது. தெற்கு சூடான் விடுதலைப் போரில் 25 லட்சம் மக்கள் உயிரிழப்பும், சுமார் இரண்டு மில்லியன் மக்கள் அகதிகளாகவும் இடம் பெயர்ந்தார்கள்.

பெருமளவு இடம் பெயர்ந்தோர், சூடான் தலைநகரமான கார்ட்டூமில் தங்கிவிட, சிறு தொகை அகதிகள் அங்கிருந்து மேற்கு நாடுகளை நோக்கி புலம் பெயர்ந்தார்கள். இலங்கையிலும் இதேபோன்ற நிலைமை காணப்பட்டதை, நான் இங்கே குறிப்பிட வேண்டியதில்லை. 2005ம் ஆண்டு இரண்டு பரம்பரை எதிரிகளும் ஒன்று சேர்ந்து பேச்சு வார்த்தையில் தீர்வு காண முன்வந்தார்கள்.

தன்னை இடதுசாரியாகவும், புரட்சிகர அரசியல் இயக்க ஆதரவாளராகவும் காட்டிக் கொண்ட "அரபு பேரினவாதி' பஷீரும், தெற்கு சூடானின் "தேசியத் தலைவர்' ஜோன் காரெங்கும் சந்தித்து சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தப்படி, 2011 ஜனவரி மாதம், தெற்கு சூடான் விடுதலை குறித்து பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது அதன் அடிப்படையில், ஜனவரி 2011 ல் இடம் பெற்ற வாக்கெடுப்பில் 98.3 சதவீத மக்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

சர்வதேச கண்காணிப்பாளர்கள் பொறுப்பில், அமைதியாக அந்தத் தேர்தல் நடைபெற்றது. தெற்கு சூடான் விடுதலைக்காக போராடிய குகஃஅ தான், புதிய தேசத்தின் அரசுப் பொறுப்பையும் ஏற்றுள்ளது. குகஃஅ என்பது இராணுவப் பிரிவின் பெயர். குகஃM என்பது கட்சியின் பெயர். கட்சிக்கும், இராணுவத்திற்கும் இடையிலான வித்தியாசம் மிகக் குறைவு. அதுபோலத்தான் தெற்கு சூடான் அரசு முழுவதையும் குகஃM உறுப்பினர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

தெற்கு சூடானின் தேசியத் தலைவர் ஜோன் காரெங் எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரமணமடைந்தார். அதனால் தற்போது முன்னாள் தலைவரின் வலது கையாக செயல்பட்ட சால்வா கீர் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

2005ம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் வந்த நாளில் இருந்து தெற்கு சூடானில் குகஃM ஆட்சி தான் நடந்து வருகிறது. பிற அரசியல் அமைப்புகள் குகஃM ஆதிக்கத்தை எதிர்க்க முடியாமல் ஒதுங்கி விட்டன. இதனால் அங்கு அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் ஆதரவு ஆட்சிதான் நடை பெறப் போகின்றன என்பதில் நமக்கு இருவேறு கருத்துக்கு இடமில்லை.

மேற்கு வடக்கு சூடானுக்கும், தெற்கு சூடானுக்கும் நடுவே அமைந்து உள்ள அபெய் மாநிலம் யாருக்குச் சொந்தம் என்பதுவும் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. மோதலுக்கு இது வழிவகுக்கக் கூடும் என்பதால் அதற்கும் ஒரு தனி வாக்குப்பதிவுதான் தீர்வாக அமையக் கூடும்.

சூடான் அதிபர் அல் பசீர் நடத்திய இனப் படுகொலைக் குற்றங்களுக்காக அனைத்து உலகக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று, 2004 ஆம் ஆணடு ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றம், 1564 ஆவது தீர்மானத்தின்படி முடிவு செய்தது.

 2005ம் ஆண்டு மார்ச் மாதம் அதே மன்றம் அறிவித்ததற்கு இணங்க 2008 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் நாள், அனைத்து உலக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அல் பசீரைக் கைது செய்யப் பிடி ஆணை பிறப்பித்தது. 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம், தி ஹேக் நகரில் உள்ள நீதிமன்றம், அல் பசீரை, இனக் கொலை நடத்திய குற்றவாளி என அறிவித்து விட்டது.

இப்படி பல நெருக்கடி விளைவாக தெற்கு சூடான் மலர்ந்தது. அமெரிக்காவின் மனித நேய நாடகமும், மேற்குலக நாடுகளின் மனித உரிமைப் போராட்டமும், உலக நாடுகளின் உள்ள இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் கொள்ளை அடிக்கவே என்பதை இன்றுவரை தமிழர்களும் தமிழக மக்கள் உணரவில்லை.

 அதனால்தான் தமிழீழ மக்கள் 2009 இல் மனித இரத்தமும், எலும்பும் சதையும் மட்டுமே எஞ்சிய வன்னி மக்கள் அமெரிக்க மற்றும் பன்னாட்டு படைகள் வந்து சேரும் என நந்திக் கடல் மேல் கண் வைத்துக் காத்திருந்தனர். ஆனால் கடைசி வரை ஐ.நா. படையும் அமெரிக் கப் படையும் வர வில்லை. கடைசியில் பேரினவாதப் பாசிசப் படைகளின் கோரத்திற்கு தமிழீழ மக்கள் இரையாகிப் போனார்கள்.

 இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைத் துடிக்கத் துடிக்கக் கொடூரமாகக் கொலை செய்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும் அவனது கூட்டாளி களும் அனைத்து உலகக் குற்ற இயல் நீதிமன்றத்தின் கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக் கப்படவும், அதற்கு உரிய நடவடிக்கைகளை ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் மேற்கொள்ளவும், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்குப்பதிவு, பன்னாட்டுப் பார்வையாளர் களின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும். தெற்கு சூடானின் உதயம் என்பது சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கு, தமிழீழம், தமிழகம் பன்னாட்டு அரங்கில் நுழைவதற்கு வழி ஆகட்டும் தெற்கு சூடானின் விடுதலைக் காற்று ஒடுக்கப்பட்ட தேசங்கள் முழுவதும் பரவட்டும்.

அந்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைத் தணல் ஆதிக்க நாடுகளில் அத்துமீறட்டும். அந்த அத்துமீறல் இந்தியாவில் அடிமைப்பட்டு இருக்கும் தமிழகமும் இலங்கையில் அடிமைப் பட்டு இருக்கும் தமிழீழமும் விடுதலைப் பெறட்டும்.

Pin It