கவிஞர் மஞ்சுளா மதுரையைச் சேர்ந்தவர். பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பல இதழ்களில் கவிதை எழுதி வருகிறார். காத்திரமான கவிதைகளுக்குச் சொந்தக்காரர். புதிய சிந்தனைகளும் நுட்பமான மொழி நயங்களும் இவரது கவிதையில் முக்கிய இடங்களைப் பிடிக்கின்றன.

'தீராப் பொருள்' என்ற கவிதை காதலைப் பேசுகிறது.

தொடுதலற்ற கணங்களில்
நம்மிடையே உயிர்த்திருந்த அது
பார்வைகளிலிருந்து உள் நகர்ந்து ஸ்பரிசங்களாய்
மிக மென்மையான
பாடலைப் போல் இசைக்கிறது

என்று கவிதை தொடங்குகிறது. 'அது' என்ற சொல்லுக்கு ஒரு பொருள் மட்டுந்தானா? ஆசை, தேடல். எதிர்பார்ப்பு என்று அர்த்தவெளி விரிவது நல்ல வாசிப்பு அனுபவம். அடுத்து ஒரு புதிய படிமம்.

manjula book innumoru mazhaiஅறையெங்கும் புணர்ந்த இருள் வெளிகள்
வனமாய் அடர்ந்தும் சிவந்தும்
கிடக்கின்றன.

சிவந்து போன எப்படி? எனப் புரியவில்லை. இதற்கு அடுத்தடுத்த வரிகள் நேர்படப் பேசும்தன்மை இல்லாமல் பூடகத் தன்மையுடன் நிற்கின்றன.

கணநேரம் மூடித்திறக்கும் இமைகளுக்குள்
தேங்கிக் கிடக்கிறது
காதல் ஒரு சொல்லாகவும்
காமம் அதன் அர்த்தமாகவும்!

என அழகாக முடிகிறது கவிதை. காதலைப் பின்னுக்குத் தள்ளும் காமத்தின் இயல்பு இங்கு பதிவாகியுள்ளது.

'..........இப்படிக்கு மொழி' என்ற கவிதை நேர்படப் பேசுகிறது. எளிமையானது. புதிய படிமம் அனாயசமாக வந்து விழுகிறது. புதிய பாடுபொருள் மகிழ்ச்சியளிக்கிறது.

எனக்கான வடிவங்கள்
என்னைச் சுற்றியே உள்ளன.
....................
....................
என் கவிதைப் பரப்பில்
மொழியின் பரிமாணங்கள்
கிளைவிட்டுத் தொங்குகின்றன

ஒவ்வொரு கிளையிலும் ஓராயிரம் தளிர்கள் என்ற வரிகளில் புதிய படிமம் வசீகரிக்கிறது.

புத்தகத் தலைப்பான கவிதை 'இன்னுமொரு மழை' நயங்களைத் தன்வசப்படுத்திய திறமையை முன் வைத்துள்ளார் கவிஞர்.

மழை பொழிந்த இரவொன்றில்
என் சுவாசங்களாகின்றன
உன் நினைவுகள்

எனக் கவிதையின் தொடக்கமே வாசகனைக் கவிதைக்குள் இழுக்கிறது.

ஒரு துளியேனும் பருகாது
முன் நிற்கும் நீர்க்குடங்களில்
அசைகின்றன உன் பிரியங்கள்

ஒரு கருத்தை முன்வைத்து மொழியில் உச்சம் தொடுவது கவிஞருக்கு வாடிக்கையாகிறது.

தூரத்தே தெரியும் மலைகளைப் போல்
கண்ணில் தொடர்கின்றன
காட்சிப்பிம்பங்கள்

அழகைச் சொற்களில் நிரப்பிக் காட்டுகிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

இசை வடிவமாய்
நான் எழுந்த போது
இசைப்பவனாய் நீ...

-கவிதைக் கலை நயம் துள்ளுகிறது.

மகிழ்ச்சியின் வெள்ளம் முத்தாய்ப்பாக வடிய கவிதை கீழ்க்காணும்படி முடிகிறது.

இன்னுமொரு மழைபொழிகிறது
என் நினைவுகளில்

மொழியின் சிலிர்ப்பு அமைந்த சிறந்த கவிதையிது!

'நான் எப்போது நதியாவேன்' ஆறு தன் கூற்றாக அமைந்த கவிதையிது. இக்கவிதையின் கட்டமைப்பு மெல்ல மெல்ல அழகான புதுப்புது கருத்துகளால் நகர்கிறது.

நதியில் நீர் இல்லை. இதை வித்தியாசமாக எப்படிச் சொல்லலாம்?
இன்று நதியின் வாழ்க்கை நாக்கறுந்து கிடக்கிறது.

நீரோட்டமின்மையை வித்தியாசமாகச் சொல்லியிருக்கிறார்.

மட்டை அடித்து விளையாடும்
சிறுவனுக்கு இன்றது
மைதானம்.

- சரி. நீச்சல் குளத்தில் சிறுவர்கள் எப்படித் தெரிகிறார்கள். ஒரு முதியவர் பார்க்கிறார்.

ஏக்கத்துடன் பேசிய முதியவருக்கு
நகரத்து நீச்சல் குளத்தில்
நண்டுகளாய்ப் போய்விட்ட
சிறுவர்கள்...

புதிய உவமை, பொருத்தமாக இருக்கிறது. மெல்லிய நகைச்சுவையுடன் ஒரு தகவல் காணப்படுகிறது.

பூகோளத்தில்
நதியைப் படித்த பள்ளிச் சிறுமி
நதியைப் பார்க்க வந்து
பூகோளம் பொய்யென்று சொன்னாள்
நதியின் உதடுகள்
மெல்ல முணுமுணுத்தது
நான் எப்போது நதியாவேன்?

எனக் கவிதை முடிகிறது. பேசாப் பொருளைப் பேச வைத்தல் உத்தியில் இக்கவிதை மிகவும் எளிமையாக அமைந்துள்ளது.

'பூக்காத சொற்கள்' என்ற கவிதை தனிமையை, காதல் ஏக்கத்தை அழகுபடச் சொல்கிறது.

'நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்' என்ற கவிதையின் தொடக்கம் இப்படி அமைகிறது:

என்மீது எனக்கான
நம்பிக்கையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது
இந்நேரம்

வாழ்க்கை மிகுந்த துயரத்தோடு இருக்கிறது. தவிப்பின் கண்கள் நீர் சொரிகின்றன.

கொலை வாளினை
ஒத்த வாழ்வின் கண்கள்
குறுக்கே படமெடுத்த
பாம்பின் முகம் போன்றும்
குறுகிய வானிலைப் போன்றும்
நெளிந்து ஓடுகின்றன

-காத்திரமான மொழியாளுமை, தனித்தன்மையும் அழகூட்டுகின்றன.

வறண்ட என் உதடுகள்
இரவின் அமைதியை
மெல்லக் கடித்துச் சுவைக்கும்

தெறித்து விழும் புதிய வடிவம் மொழிக்கு வளமை சேர்க்கிறது.

விழி மூடாத இரவுகள்
என் இனிய தோழனின் வருகையை
குழந்தையின் நினைவில் பாலூட்டும் தாயாய் மாற்றும்

- மனநிறைவை அழுத்தமாய் பதிவு செய்துள்ளார். எதிர்பார்ப்பின் உச்சத்தில் இனிய சந்திரோதயம் எனலாம்! முத்தாய்ப்பிலும் ஒரு நயம் புன்னகை செய்கிறது.

பூக்காத இளம் மொட்டுக்களின்
உள் வாசனையைப் போலவே
இக்கவிதை
அதன் சொற்களால் நிரம்பியிருக்கும்

- ஆகச்சிறந்த கவிதையென ஒன்றை மட்டும் சொல்ல முடியாத நிலைமை வாசகனுக்குத் தோன்றும். அந்தப்பட்டியலில் இக்கவிதையும் சேரும்.

'எங்கெங்கு காணினும்' கவிதையில் ஒரேயொரு வாக்கியம்தான் உள்ளது. ஆனால் அது பத்து பத்திகளாகப் பிரிந்து காணப்படுகிறது.

இயற்கை கண்டு வியக்கிறார் கவிஞர்.

ஊரெங்கும் மழைத்தோகை
உயிரெங்கிலும் மயில்தோகை
விரிந்தாட... விரிந்தாட...

வீரியமிக்க சொற்றொடர்களால் அழகியலின் உச்சம் தொடுகிறார்.

பூக்கள்
நீரின் சுவையைத் தேனாக்கி
வண்டுகள் பருகக் கொடுக்க...

நீரைத் தேனாக்குதல் ஒரு சித்து வேலைதான்.

'பைபிள்' நினைவு வருகிறது. கனவில் வரும் பல காட்சிகளில் மேற்கண்டதும் ஒன்று.

ஒளியை விழுங்கிய மரங்கள்
நீரின் அர்த்தங்களை
கிளைகளின் இலைகளில்
நரம்புகளால் எழுத...

மொழியின் மேலான அழகு சொல் சொல்லாய்ப் படிந்து நிற்கிறது. இவ்வாறு பலவிதமாக நீர் பற்றி சிந்திக்கிறார். கனவு காணுகிறார். கண்ணுறக்கம் கலைந்தபோது யதார்த்தம் புரிகிறது. கவிதை முடிகிறது. எப்படி?

கையில் மினரல் வாட்டர் பாட்டில்களுடனும்
காலிக் குடங்களுமாக
அலைந்து கொண்டிருந்தனர்
எங்கள் ஊர்ப் பெண்கள்

நீர் போதாமை பற்றிய கவிதையில் கற்பனை மட்டுமே இனிக்கிறது. யதார்த்தம் சவாலாக நிற்கிறது.

'சொல்லப் போவதில்லை' என்ற கவிதையின் பூடகத் தன்மை நம்மமைச் சிந்திக்க வைக்கிறது.

நான் எப்போதும் சொல்லப் போவதில்லை
உன்னிடம் அந்த வார்த்தையை
வார்த்தையாக அது வழிந்து போகாமல்
எனக்குள் உன்னை நிரப்பிக் கொண்டிருக்கும்.

காதல்தான் மையம் கொண்டு வரிகளை வளர்க்கிறது.

நீ என் கண்கள் வழியாக ஊடுருவி
இதயம் நுழைந்து அந்த ரகசியம் கேட்த் துடிப்பாயா?

என்ற யாசித்தல் ஆழ்ந்த காதல் மயக்கம்தான். கடைசி வரை அந்தப் பெண் அவனிடம் தன் காதலைச் சொல்லவில்லை என்ற தகவலோடு கவிதை முடிகிறது.

அதை மகிமைப்படுத்துகிறேன் நண்பனே
உனக்காக வேணும் அது எனக்குள் இருக்கட்டும்.

இக்கவிதைத் தொகுப்பு கவிஞரின் நான்காவது தொகுப்பாகும். பல நல்ல கவிதைகளைக் கொண்ட நூலை வாசகர்கள் நிச்சயம் படித்து மகிழலாம்!

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Pin It