அடர் காட்டுக்குள் சலசலத்து ஓடும்  சிற்றோடை எழில் வாய்ந்தது மட்டுமல்ல. பிரதிபலிக்கும் கண்ணாடியும் கூட. பளிங்கு நீர் கண்கவர்கிறது என்றாலும் அதில் தெரியும் காட்சி அழகானதாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. உண்மையைத் துல்லியமாகக் காட்டுவதே சிறந்த கண்ணாடி.

kalachithan poemsஒரு நல்ல இலக்கியம் ஒரு குறிப்பிட்ட காலம் இடம் அந்தச் சூழலில் வாழும் மனிதர்கள் ஆகிவற்றைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பார்கள். காலச்சித்தன் பிரதிபலிக்கிறார். கூடவே மிக மெல்லிய இழையாக பகுத்து ஆராயவும் செய்கிறார்.

ஒரு மிக உக்கிரமான அதே நேரம் மிக நுட்பமான கவிதை –எதிர்வினை.

நடுக்கமில்லாத கைகளில் தொங்கியபடியிருக்கும்

அருவாளுக்கு ரத்தமாக வியர்த்திருந்தது.

ஒரு கூலிக் கொலையாளி. கூலிக் கொலைகாரர்கள் நடுத்தெருவில்தான் கொலைகள் செய்வார்கள். சுவர்களால் மறைக்கப்பட்ட இடங்களில் ஆபத்துகள் மறந்திருக்கக் கூடும் என்று அவர்கள் திறந்த வெளிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கொலையாளிக்கும் கொல்ல்ப்பட இருப்பவனுக்கும் இடையே ஒரு பந்தம் இருக்கிறது. பால்மணம் மாறாத கொலைகாரன் தன் அருவாளால் அதைத் தூண்டிக்கிறான். அப்போது ஒரு வேளை அவன் கரங்கள் நடுங்கியிருக்கக் கூடும். ஆனால் மரண ஓலத்திலும் தெறித்து ஓடும் மக்களின் கண்களிலும் தனது அதிகாரத்தைக் கண்டு கொள்கிறான். அவன் பின்னே அணிவகுக்கின்றன அருவாள்கள்.

வெளியுலகம் தெரியாமல் தானே உலகின் மையம் என்றிருக்கும் ஒரு கவிஞரால் கட்டாயம் இப்படியொரு கவிதை எழுதுவது சாத்தியமே இல்லை. ரத்தமாக வியர்த்திருந்த அருவாளின் மணத்தை உணர்ந்த ஒருவராலேயே சக உயிர்களின் மேல் தனது அதிகாரத்தை உணர்ந்து முழுகொலைகாரனாக ஒரு மனிதன் மாறும் அந்தக் கணத்தை நுட்பமாக சுட்டிக் காட்ட முடியும்.

மிகையான துய்ரங்கள், புலம்பல்கள் இல்லாமல் சொற்கள் அலையாமல் அந்தக் கணத்தைத் துல்லியமாகப் பிடித்த கவிஞர் யாரென்று தெரியும் போது எப்படி என்ற ரகசியத்தை நாம் உணரக் கூடும். அதுவரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மேலோட்டமாகப் பார்த்தால் இந்தக் கவிதைகளில் ஒரு சோகம் இழையோடுவதும் துயருரும் மனிதர்களின் வாழ்வும் மட்டும் தெரியும். அது ஒரு பரிமாணம் மட்டுமே. சக மனிதர்கள் மேல் அன்பு கொண்ட எல்லோரிடமும் இதைக் காண முடியும். காலச் சித்தனை வேறு படுத்திக் காட்டுவது அவர் மறைத்து வைத்திருக்கும் சமூக உளவியல்தான்.

ஆடம்பரமான ஒரு அலுவலகத்தில் வெள்ளைக்கார மேனேஜர் அவனிடம் அவன் தந்தையின் மரணத்தை ஆங்கிலத்தில் சொல்கிறான். கேட்ட அவன் வெடித்துச் சிரிக்கிறான். இழவு சேதி சொல்லும் பரம்பரையைச் சேர்ந்தவன் அவன். காலம் கடந்த துப்பட்டி.

காலம் மாறுகிறது. அடிமைத்தனத்திலிருந்து சிலர் விடுபடுகின்றனர். மூதாதயைர் கனவிலும் கருதாத சுதந்திரத்தை அனுபவிக்கின்றர். ஆனால் அதே காலம் வேறு ஒன்றையும் கொண்டு வருகிறது. முதியவர்கள் இல்லங்களில் கொண்டு தள்ளப்படுகின்றனர், இந்த இடத்தில்தான் சித்தனின் வரிகள் எவ்வளவு அழகு.

பாட்டிகள் இல்லாத வீடுகளிலும்

குழந்தைகள் இல்லாத காப்பகங்களிலும்

சொல்லபப்டாமலும்

கேட்கப்படாமலும்

வீணாகிக் கிடக்கின்றன

பலநூறு கதைகள்.

ஒரு சமூகம் எந்த அளவுக்கு நகரீகம் அடைந்திருக்கிறது என்பதை அது தனது குழந்தைகள் மேல் காட்டும் அன்பையும் முதியவர்கள் மேல் காட்டும் பரிவையும் மரியாதையும் கொண்டு அளவிடலாம். நமது சமூகம் எபப்டி அமைந்திருக்கிரது என்பதை நமக்குக் காட்டும் கண்ணாடியாக இருக்கின்றன கவிதைகள்.

இந்தத் தொகுப்பு முழுவதும் வதைபடுபவர்கள், புறகக்ணிக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று ஒரு கூர்மையான எள்ளலோடு பேசுகின்ரன கவிதைகள். மாற்றுத் திரனாளிகள், கிரச்சில் விடப்படும் குழந்தைகள், ஒடுக்கப்பட்டவர்கள், வாழ்ககியைத் தொலைத்த முதியவர்கள், வெற்றியத் தேடிய மூர்க்கமான ஓட்டத்தில் வேடிக்கையையும் விளையாட்டையும் தொலைத்த சிறுவர்கள் என்று தெரிந்த உலகம் தெரியாத கோணங்களில் நிறப்பிரிகையாய் விரிகிறது சித்தனின் சொற்களில்.

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளின் பரப்பு வியக்க வைக்கிறது. ஆச்சரியமூட்டுகிறது. சிலப்பதிகாரம் மகாபாரதம் மறுவாசிப்பிலிருந்து மெல்லிய நகைச்சுவை இழையோடும் அழகியல் கவிதைகள் வரை பர்ந்து விரிந்த வெளியில் இயங்குகிறது சித்தனின் கவிதை உலகு.

நூலகத்திலுள்ள புத்தகங்கள் முழங்குகின்றன. கிசுகிசுக்கின்ரன. கதை சொல்கின்றன. பாடுகின்றன. அபத்தமாக சத்தம் செய்யாதீர்கள் என்ற அறிவிப்பு. மனிதர் நூலகத்தோடு ஒன்றிப் போய்விட்டார் போலும். இந்த அழகியல் இல்லாமல் போயிருந்தால் முன் சொன்ன கவிதைகளின் அடர்த்தி மூச்சுத் திணறச் செய்திருக்கும்.

கம்யூனிஸ்டுகள் பற்றி பெர்னாட் ஷா சொன்ன வாசகத்தை எழுத்தாளர்களுப் பொருந்தும் படி சற்று மாற்றிச் சொல்லலாம். முப்பது வயதுக்கு முன் எழுதுபவர்கள் மனதால் உலகைப் பார்க்கிறார்கள். மாற்றிவிட முடியுமென்ற நம்பிக்கையும் கோபமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

முப்பதுக்குப் பின்னான எழுத்துக்கள் நிதானம் கொள்கின்றன. மனதால் மட்டுமின்றி அறிவாலும் அனுபவத்தாலுமுலகைப் பார்க்கின்றன. அழகும் ஆபாசமும் ஆவேசமும் எல்லாம் கலந்ததுதான் வாழ்க்கை என்ற புரிதல் மாற்ர வேண்டுமென்ற விருபப்தோடு இழைந்து வெளிப்படுகிறது. இலக்கியமும் இருவராலும் செறிவு கொள்கிறது.

இந்த இரண்டு வகையான எழுத்துகளிலும் ஏதோ தயக்கத்தால் எழுத்தகளை மறைத்து வைத்திருந்து பின்பு வெளிச்சத்துக்கு வருபவர்களின் எழுத்துக்கள் தனி விதமானவை. நீண்டு நின்ற விதை உறக்க காலத்தில் செறிவு எழுத்துகளில் வேர் பிடித்திருக்கிறது. புறவயமான எழுத்துகக்ளை ஆப்ஜெக்டிவ் எழுத்துகளை இந்த வகையான எழுத்தாளர்கள்தான் உருவாக்கியிருக்கின்றனர். காலச் சித்தனின் எழுத்துக்கள் கட்டாயம் தமிழ் சூழலில் நாம் வாழும் காலத்தின் கண்ணாடியாகக் கருதபப்டும் என்பதில் ச்ந்தேகமில்லை.

- இரா.முருகவேள்

Pin It