பரமக்குடி பா.உஷாராணி கதை, கவிதை, கட்டுரை, ஆகிய வடிவங்களைக் கையாள்பவர். இவர் சொல்லாட்சியின் சிறப்பு என்ற தேடலில் முன்நிற்கும் நல்லியல்பு 'அவசியமான சொற்களால் கவிதை செய்தல்' என்பதாகும். இது ஏதோ ஒரு கவிதைத் தொகுப்பு அன்று; கவிதை விருந்து.

'மேகமானவள்' கவிதையில் ஒரு யதார்த்தமான குழந்தையின் செயல் கருவாகியுள்ளது. குழந்தையை யாரும் மேகம் என்று சொன்னதில்லை. பா.உஷாராணி அப்படிச் சொல்கிறார். பொருத்தமாக இருக்கிறது. பள்ளி விட்டதும் வீடு திரும்புகிறார்கள்.காயத்ரி என்ற சிறுமி போத்தலிலிருந்து தண்ணீரைக் குடித்துவிட்டு மிச்சத்தை ஒரு மரத்திற்கு வார்க்கிறாள்.

"வானத்தின் பிரம்மாண்டத்திலிருந்து
பொழியும் பேரன்பை
இலைகளின் வழியாக அல்லாமல்
பிஞ்சுக் கரங்களின் வழி
கண்டு சிலிர்த்த மரம்
கைகால்கள் முளைத்த
சின்னஞ்சிறு மழைமேகமொன்றைப்
பூமியில் கண்ட அதிசயத்தை
இன்றிரவு
பகிர்ந்து கொள்ளக் கூடும்
பறவைகளிடம்"

- எளிமையான கவிதையில் இனிமை மிதக்கிறது.

குழந்தைகள் வரும்போது தட்டான்கள் உயரப் பறக்கின்றனவாம். ஏன்?..

"தங்களது கண்ணாடிச் சிறகுகளின்
பத்திரத்திற்காய்த்
தட்டான்கள் உயரப் பறக்கின்றன.."

- நுணுக்கமும்,கற்பனைத் திறனும் இயல்பாக அமைகின்றன. மழைக் கவிதைகளின் தொடக்கம் களை கட்டுகிறது.

'குழையும் விருந்து' மழையில் நனையும் ஆசை நிறைவேறாமல் போன வருத்தத்தை நம் முன் வைக்கிறது. மழையின் குளுமை சிலிர்க்கச் செய்கிறது. மழையோடு ஊஞ்சல் கட்டி ஆட விரும்புகிறார் கவிஞர். மழையின் இயல்பு எப்படியிருக்கிறது?

"எதிர்பாராக் கணமொன்றில்
ஒரு குழந்தையின் மென் தொடுகையாய்..."

என்கிறார் கவிஞர். புதிய உவமை மகிழ்ச்சி அளிக்கிறது. இடிமழைச் சள்ளைகளைச் செவியில் பொழிய தோழியிடமிருந்து அலைபேசி அழைப்பு வருகிறது. அதனால் மழையில் நனைந்து மகிழ முடியாமல் போய்விட்டது.

"தேம்பியபடியே போயிருக்கும்
என் பூஞ்சாரல் மழை
உபசரிக்கப்படாத
விருந்தாளியின் வாட்டத்துடன்.."

என்று கவிதை முடிகிறது. எல்லாக் கவிதைகளும் "மழை மழை" என்று பெரும் தாகம் கொண்டு நிற்கின்றன. கவிஞரின் நடையின் சிறப்பு அனாவசியமாக, ஒரு சொல் கூட இல்லாமை என்பதைக் குறிப்பிட வேண்டும்.

"கொட்டாங்கச்சி வனம்" - ஓர் இயற்கைக் காட்சியைக் காட்டுகிறது.

"விதைக்குள்
வனத்தின் ஞாபகமிருக்க
வாய்க்கும் கையளவு நீரை
மழையென நம்பிக் கொண்டு
கொட்டாங்கச்சி சிரட்டையின்
இருபிடி மண்ணில் வேரோடி
இளம்பச்சை முகத்துடன் துளிர்த்திருக்கிறது
புளியந்தளிர்.. ஒன்று..
சில அன்பின் பாத்திரங்களில்
நாமும்
இப்படியே
இவ்வாறே."

- இயற்கைக்காட்சி ஒன்றைக் காட்டி விட்டு அதை உடன் வாழ்வியல் தத்துவத் தளத்திற்குச் கொண்டு செல்கிறார் கவிஞர். மிகச் சிறு கருவைக் கச்சிதமாக முன் வைத்துள்ளார். சொல்லாட்சியில் மொழி ஒரே சீரான பாதையில் அழகாகப் பயணிக்கிறது..

"சவப்பூக்களும், பரிசுத்தனும்" என்ற கவிதையும் மழையைப் போற்றுகிறது.

"பூக்களைப்
பூக்களெனவே காணும்
அவனின் பால்யம்
உணரத் தருகிறது
பூமியைத் தொடுமுன்
வான்மழை கொண்டிருக்கும்
ஒப்பற்ற பரிசுத்தத்தை.."

- ஒன்றைக் காட்டி மற்றவற்றை நிறுவும் உத்தி இக்கவிதையிலும் காணப்படுகிறது. ஒரு சிறுவன் சவ ஊர்தியிலிருந்து உதிரும் பூக்களைச் சேகரித்துக் கொண்டே செல்கிறான். அவனுக்கு பூவைப் பூவாக காணும் பால்ய மணம். பூமியில் விழுந்தாலும் மழை மழை தான்; ஒப்பற்றது என்கிறார்...

'தேநீர்க் கடையில் கடவுள்'- இதில் நாம் எல்லோரும் அறிந்த ஒரு நிகழ்ச்சியை அப்படியே பதிவு செய்து, முத்தாய்ப்பாக ஓர் அழுத்தத்தை உருவாக்குகிறார். தலைப்புடன் இணைகிறது கவிதை.

மேட்டுச் சாலையில் கோழி முட்டைகள் அடுக்கிய பாரவண்டியை மேடேற்றயியலாது கஷ்டப்படுகிறார் ஒரு முதியவர். அப்போது அழுக்கேறிய கைலியுடன் பீடி புகைக்கும் ஒருவர் உதவி செய்கிறார் என்பதுதான் கவிதைச் சுருக்கம். இதைக் கவிதையாக்க உதவியவரைக் கடவுளாக்குகிறார் உஷாராணி. வழக்கம் போல் உயிர்ப்பான ஒரு கவிதை நமக்குக் கிடைக்கிறது.

"அழுக்கேறிய கைலியுடன்
பீடி புகைக்கும் முகத்துடன்
தேநீர்க் கடையில்
கடவுள் நிற்பது குறித்து
எந்தப் புகாருமில்லை எனக்கு"

எனக் கவிதை முடிகிறது.

புத்தகத் தலைப்பாக 'இக்கணத்தின் மழை' ஒரு நீள் கவிதையாகும். மழை பெய்யும் போது ஏற்பட்ட பசுமையான நினைவுகளைப் பட்டியலிடுகிறது கவிதை. கவிதை முழுவதும் மழை நேசம் விரவிக் கிடக்கிறது. மழையில் நனைவது தான் சுகமா?

"அவ்வினிய மழையை
மறுபடி பார்த்து விட்டால்
மயிலாய் மாறிவிடுவேன் நான்.."

என்கிறார். அந்த மழை எந்த மழை?

செருப்பில்லாக் கால்களுடன் மழையில் ஒத்தையாக நனைந்து வரும்போது பார்த்த பத்துமாமா சட்டெனத் தன் தோளில் தூக்கிக் கொண்டு வீடு வர, ஏதோவோர் சண்டையில் அம்மாவிடம் பேசாமல் இருந்த அவரது கோபம் மாறிய அக்கணத்தில்....'மயிலாய் மாறி விடுவேன் நான்...' என்கிறார்.

மழையை வாசிக்கும் சிறுமி-சிறுமி காயத்ரி மழையில் நனைந்தபடி வீடு வந்து சேர்கிறாள். அம்மா தலையைத் துவட்டி விடுகிறாள். சாதாரண நிகழ்ச்சி. இதைக் கருவாகக் கொண்டு கவிதை செய்துள்ளார் கவிஞர். எப்படி நனைந்தாள் எனச் சொல்கிறாள் காயத்ரி.

 "தான் நனைந்த
ஈரக் கதையை
அவள் வாசிக்க வாசிக்க..."

என்று நயம்பட விளக்கப்படுகிறது.

"ஆனந்தமாய்க் கேட்டபடி
மின்விசிறிக் காற்றில்
தன் துளிகளை
உலர்த்திக் கொண்டிருந்தது மழை.."

- வித்தியாசமாகச் சொல்வது தான் கவிதை என்கிற கவிதையாக்க நுணுக்கம் புலப்படுகிறது.

"அம்மாவின் சாம்பல் கரைத்த
கடலிலிருந்து
ஆவியான நீர் தானே
ஒவ்வொரு மழையும்"

- என்ற கவிஞரின் வரிகளை என்னால் எளிதாகக் கடந்து செல்ல முடியவில்லை என்கிறார் அணிந்துரையில் கவிஞர். பழநிபாரதி.

நிறைவாக இத்தொகுப்பின் ஆகச் சிறந்த கவிதை எது என்று கேட்டால் பதில், 'எல்லாம் தான்' என்று தான் சொல்ல வேண்டும். நேர்த்தியான நூல்

- ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Pin It