01. கரும்பு ஆலை உருவாக்கப்படுவதனை மையமாகக் கொண்டு இந்நாவல் இயங்குவதால் கரும்பு பற்றிக் குறிப்பிடுவது அவசியமாகிறது. கரும்பு எனும் ஒரு விதையிலைத் தாவரமான புல்லினம் மனிதவரலாற்றின் உணவில் மிகமுக்கிய இடத்தினைப் பெறுகிறது. இதன் தோற்றுவாய் Polynesia தீவுகளாகும். அமெரிக்காவிற்கு மேற்கே ஆஸ்திரேலியாவிற்கு கிழக்கே பசிபிக்கடலின் தென்பகுதியில் அமைந்துள்ளன இத்தீவுக்கூட்டம். இந்தியமரபில் கரும்பிற்கு தனித்ததோர் இடம் உண்டு. வட இந்தியப்பகுதியில் குப்தர் காலத்தில் (கி.பி.370) கரும்பு பற்றிய குறிப்பு உண்டு. இக் காலத்தில்தான் காளிதாசர் குமாரசம்பவம் எனும் இலக்கியத்தினை இயற்றினார். இதனடிப்படையில் கரும்புவில் கொண்ட காமன்/மன்மதன் எனும் புராணக் கதாபாத்திரத்தின் வரலாற்றுத்தன்மையினை கணிக்கலாம். சங்க இலக்கியத்தில் கரும்பு பற்றி 56 இடங்களில் குறிப்புகள் உள்ளன. புறம் 392 இல் எங்கிருந்தோ அதியமானின் ஆட்சிப்பகுதிக்கு கரும்பு கொண்டுவரப்பட்டதாகப் பதிவு உள்ளது. அப்பகுதி வணிகப்பாதையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. சிலப்பதிகாரத்தில் கரும்புவில் சுட்டப் படுகிறது. கரும்பு பற்றி முதல் தமிழ் கல்வெட்டுக் குறிப்பு கி.பி.831. கி.பி.984 ஆம் ஆண்டின் கல்வெட்டில் கரும்புச்சாறு இறைவனுக்குப் படைக்கப்படுவது பற்றி பேசுகிறது. கி.பி.12 ஆம் நூற்றாண்டில் பேய்க்கரும்பு இனிப்பதெப்போ பேரின்பம் கிடைப்பதெப்போ என்பது பட்டினத்தாரின் புலம்பல். காலனிய இந்தியாவின் முதல் கரும்பாலை கி.பி.1824 இல் ஒரிசாவின் அஸ்கா எனுமிடத்தில் பிரஞ்சுக்காரர் களால் கட்டப்பட்டது. இதனாலேயே சர்க்கரைக்கு அஸ்கா என்ற பெயர் பிரபலமானது. வெண்சர்க்கரை யினை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியது சீனா. அதனால்தான் அது சீனி.

sa kandhasamy novel02. தமிழ் இலக்கியத்தில் வனம் பெரும் நிலப் பரப்பினை ஆக்கிரமித்துள்ளது. பட்டினப்பாலையின் காடுகொன்று நாடாக்கி குளந்தொட்டு வளம்பெருக்கி என்ற தொடர் சங்ககாலத்திலேயே காடுகள் அழிக்கப் பட்டு வேளாண்மைக்கு உட்படுத்தப்பட்டன என்பதனை விளக்குகிறது. பல்லவர், தம்மை செப்பேடுகளில் காடுபட்டிகள் என்று குறித்துக்கொள்கின்றனர். அதாவது, காடுகளை அழித்து அதனை மக்கள் வசிக்கும் பட்டிகளாக மாற்றினர் என்று பொருள். தமிழகத்தில் பட்டி என்று முடியும் பெயரில் பல ஊர்கள் உள்ளன. தாழம்பட்டி, பனையபட்டி, பனையூர், வாழப்பாடி, மல்லியம், நெல்லிக்குப்பம், உளுத்(ந்)துக்குப்பை, தேங்காய்பட்டினம் என்று தாவரங்களின் பெயர்களில் ஊர்கள் அமைந்துள்ளன. அகம், புறம் தொகை இலக்கியங்களில் காநாடு, கோநாடு என்ற குறிப்புகள் உண்டு. கோநாடு அரசு கட்டமைப்பின் ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பு; காநாடு என்பது அரசாட்சி கட்டமைப்பிற்கு உட்படாத மக்கள் வாழும் நிலப்பரப்பு.

03. வேதங்கள் வனங்களை மூன்றாகப் பிரிக்கின்றன: மகாவனம் (பெருங்காடு), தபோவனம் (தபசிகள் தங்கும் தோட்டம் போன்ற காடு), Srivanam (minerals போன்று மதிப்புமிகு பொருள்கள் நிறைந்த வனம்). புத்தமதத்தின் கொல்லாமை என்ற கருத்து பயிர்களையும் வனங்களையும் அழிவிலிருந்து காக்கவேண்டும் என்ற பொருளிலேயே முன்வைக்கப் பட்டிருக்க வேண்டும். புத்தர் தவம் பயில்தற்கு வனத்திற்குத்தான் சென்றார். துஷ்யந்தன் வேட்டைக் காட்டில்தான் சகுந்தலையைத் தொட்டான். இராமனுடன் சீதைக்கும் 14 ஆண்டுகள் வனவாசம். இலங்கையில் அசோகவனத்தில் துயர்வாசம். தாருகாவனத்தில் சிவபெருமான் ரிஷிபத்தினிகளை மயக்கினார் என்பர்.

04. இடைக்காலத்தமிழக வரலாற்றில் பாடல் பெற்ற பலதலங்கள் வனங்கள். 15 தலங்களின் பெயர்கள் கா என்றோ காடு என்றோ முடிகின்றன. அவையனைத்தும் வேளாண்ஊர்கள். அவற்றுள் தாவரங்களின் பெயர்களில் குறிக்கப்படும் தலங்களும் உண்டு. தில்லைவனம், கடம்பவனம், ஆலங்காடு போன்றன. முகலாயமன்னர்கள் தங்களின் நினைவுக் குறிப்புகளில் இந்தியாவில் தாம் கண்ட வனங்களைப் பேசுகின்றனர். முகலாயர் ஓவியங்கள் இடைக் காலத்திய இந்தியவரலாற்றின் கானுயிர் அறிவியல் (wildlife biology) பற்றி அறிதற்கு அரிதான தரவு களைத் தருவன.

05. காடுகள் பொதுவாக மழைக்காடு, ஈரக்காடு, முள்காடு, ஊசியிலைக்காடு, அகன்றயிலைக்காடு, சதுப்புநிலக்காடு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிதம்பரம் அலையாத்திக்காடு சதுப்புநிலக்காட்டிற்கு நல்ல காட்டாகும். ஈரக்காட்டுத்தாங்கல்தான் ஈக்காட்டுத்தாங்கல் என்று மருவியது.

06. சாயாவனம் என்ற இந்நாவலின் பெயருக்கு சூரியஒளி புகமுடியாத அளவிற்கு மரங்களின் நிழலில் அடைபட்டுப்போன காடு என்பது பொருள். அடைபட்ட அந்நிழற்காட்டினை அழிப்பதே கதைக் கரு. இவ்வழிவை முந்நிறுத்தி நாவல் வளர்கிறது. வனம், மெல்ல மெல்ல அழிகிறது. இவ்வழிப்பில் ஒவ்வொரு தாவர இனமும் வெட்டி சாய்க்கப்பட்டு, தீயிலிடப்படுவதனை சோகவாடை விளக்க வருணிக் கிறார் கதையாசிரியர். மூங்கில்புதர், கூந்தல்பனை, கொடிகளால் உயிர்பிணைக்கப்பட்ட பலவகைத் தாவர இனங்கள் வேரோடு பல ஆயுதங்களால் சாய்க்கப்படுவது ஒரு தாய் தம் மகனால் கொல்லப் பட்டு, தீயிட்டுக்கொளுத்தப்படுவது போல் காட்சியாக கண்முன் விரிகிறது. இதனைச் செய்து முடிப்பவன் சிதம்பரம் எனும் முதன்மை கதாபாத்திரம்.

07. 204 பக்கங்கள் கொண்ட இச்சிறுநாவலில் முதன்மைப்பாத்திரமான சிதம்பரத்தையும் சேர்த்து 124 பேர் ஊடுபாவாக வந்துபோகின்றனர். இவற்றுள் 22 பேர் பெண்பாத்திரங்கள். இவர்களில் அய்ந்து பெண்கள் இறக்கின்றனர்: ஒருவர்: சிதம்பரத்தின் தாய் (அம்மை நோயினால் இறந்தவர்). அடுத்தவர்: சிதம்பரத்தின் சின்ன பாட்டி. இவர் அரளிவிதை யினை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொள்கிறார். பிறிதொருவர் டேவிட்சாரநாதனின் மனைவி (பெயர் இல்லை). இவர் கணவரால் அடித்துக் கொல்லப்படுகிறார். மற்றொருவர் சிவனாண்டித்தேவரின் மனைவி, இயற்கை மரணம். அடுத்து, புன்னைமரத்தில் தூக்கிட்டுத் தொங்கிய பெண், லட்சுமியின் தாய். காட்டழிப்பில் இறந்து போன காத்தவராயன் எருது கவலையோடு நினைக்கப் படுகிறது. காட்டழிப்பில், உள்ளும், புறமுமாக மாமன் முறையில் சிவனாண்டித்தேவர் சிதம்பரத்தை இயக்குகிறார். அவனுடன் விருப்பும்-வெறுப்புமாக ஊடாடுகிறார்.

08. களம். மயிலாடுதுறையினை மையமாகக் கொண்டு நகரும் இந்நாவலின் கதைப்போக்கில் கதாபாத்திரங்கள் மாங்குடி, கூரைநாடு, மல்லியம், சாயாவனம், குத்தாலம், சீர்காழி, மேலகரம், காவேரிப்பட்டினம், நெய்விளக்கு,மணக்குடி, நொச்சிக்குப்பம், திட்டக்குடி போன்ற ஊர்களில் இருந்து வந்துபோகின்றன.

09. காலம். வரலாற்றுத்தன்மை. இதுபோன்ற நடப்பியல் நாவல்களின் உண்மைத் தன்மையை கதையூடாக கோடுகாட்டும் வரலாற்று நிகழ்வுகள் பற்றிய குறிப்புகளே உறுதி செய்யும். ஓரிடத்தில் காங்கிரஸ்-மாநாடு பற்றி குறிப்பு வருகிறது. சுப்ரமண்யபாரதி காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டது பற்றி ஒரு கதா பாத்திரம் பேசும். பாரதி 1905 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நிகழ்ந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். அங்குதான் சிஸ்டர் நிவேதிதா வினை சந்தித்து பெண்ணுரிமை பற்றிய புரிதலை ஞான ஒளியாகப் பெற்றார். இவ்வரலாற்றுப் புள்ளியின் அடிப்படையில் நாவலின் கதை நகர்வினை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் என்று கணிக்கலாம். ஓரிடத்தில் விபின்சந்திரபால் பற்றிய பேச்சு வருகிறது.

10. மரபு. இந்திய இலக்கியமரபினை இந்நாவல் ஓரளவு பேணுகிறது. அப்பண்ணசாமியின் மகன் சாம்ப மூர்த்தி என்ற பாத்திரம் கவிகாளிதாஸர், ஞான சம்பந்தர், குமரகுருபரர், தியாகையர் போன்றோரை நினைவூட்டுகிறது. ஊமையாகப்பிறந்து பாடும்திறன் பெற்ற ஒரு பிராமண கதாபாத்திரம் பிரம்மசாரி யாகவும், செவிட்டூமை குமாரசாமி என்ற அபிராமண பாத்திரம் இருமனைவியருடன் வாழ்வது போன்றும் படைக்கப்பட்டுள்ளன.

இந்தியமரபில் சாதி,சமயம், கடவுள், பாலியல் போன்றவை முதன்மை பெறும். இந்நாவலில் மூன்று கிறித்தவப் பாத்திரங்கள் இடம்பெறுகின்றன. ஒன்று: நாவலின் மையப்பாத்திரம் சிதம்பரம். இவன் உண்மையில் டேவிட் சிதம்பரம். இவன் இலங்கையில் கறுப்பு உபதேசியார் அதாவது native Pasteur வெள்ளைப்பாதிரியார் (European Pasteur) என இரு பாதிரிமார்களால் ஞானஸ்நானம் பெறுகிறான். வயதில் மூத்த மணமான கிறித்தவப் பெண்ணைக் காதலித்து துயருற்று விலகுகிறான். இக்கட்டம் மோகமுள் நாவலை நினைவூட்டும். இரண்டு: கிருஷ்ணன். இவன் வேணுகோபால் ஐயரின் மகன். மேற்படிப்பிற்கு வெளியூர் சென்ற அவன் கிறித்தவப் பெண்ணை சர்ச்சில் முறைப்படி மணந்தவன். கலப்பு மணத்தால் இழந்த சமூகமரியாதையினை படிப்பறிவு, பணம் இவற்றால் ஈடுகட்டுகிறான். இவ்விரு பாத்திரங்கள் மூலம் கிறித்தவம் உலக அறிவினைத் தரும் என்ற தொனி மெல்லோசையாகக் கேட்கிறது. மூன்று: டேவிட்சாரநாதன். எட்டாவது முறையாகக் கருவுற்ற தம் மனைவியை குடிபோதையில் அடிக்க அவள் கொல்லப்படுகிறாள். மேலே சுட்டப்பட்ட இருவருக்குக் கிட்டிய ஞானஒளி டேவிட்சார நாதனுக்கு ஏனோ கிடைக்கவில்லை. நாவலில் ஓரிரு தொடர்கள் பைபிள் சாயலில் அமைந்துள்ளன.

11. பாலியல். வளமையான காவிரிப்படுகைக்கே உரிய உபரி உற்பத்தியின் விளைச்சலான தேவதாசி முறையும் நாவலில் பதியப்பட்டுள்ளது. பஞ்சவர்ணம் என்ற தாசியுடன் சாம்பமூர்த்திஅய்யர், சிதம்பரம், மிராசுதார் என மூவரும் உறவுவைத்துள்ளனர். ஒருமுறை தாசியின்வீட்டில் சிதம்பரம் குலவிக் கொண்டிருந்தபோது மிராசுதார் வாசல்வழியே நுழையவே, சிதம்பரத்தினை பஞ்சவர்ணம் பின்வாசல் வழியே வெளியே அனுப்பிவைக்கிறாள்.

நாவலின் இறுதிக் கட்டத்தில் நிகழும் ஒரு திருமண நிகழ்வில் சிதம்பரத்தின் நடத்தை கீழ்க் கண்டவாறு பதியப்படுகிறது.

பெண்குழந்தை நான்கு வயதிருக்கும். பொன்னிற மான மேனி. அலைபாயும் கண்கள். அவன் (சிதம்பரம்) உவகையுற்று அவளை வாரி யணைத்துக் கொண்டான். இதழில் முத்த மிட்டான். குழந்தை அவனை உற்று நோக்கியது. பார்வை மிரள, தன் மாமா இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டது போல அவன் பிடியிலிருந்து நழுவி விருட்டென்று ஓடியது.

இன்னொரு பாத்திரமான வண்டியோட்டும் மீசைக்காரன் தம்பி மனைவியை மூன்றாண்டுகள் சொந்த மனைவியாக வைத்துக்கொண்டிருந்தான் என்று வாசகர்களுக்கு அறிமுகமாகிறான்.

எவ்வளவு விசித்திரமான பெண். மூன்று குழந்தைகளுக்குத் தாயானபிறகும் மோகம் குன்றாமல் மையலுற்றாள் என்று ஒரு பெண்பாத்திரம் பற்றிய பதிவும் உண்டு.

ஒருத்திக்கு ஒரு சமயத்துல ரெண்டு புருஷங்க இருக்கமுடியுமா? என்று ஒரு கூற்று ஓரிடத்தில் கேள்வியாக நாவலில் ஒலிக்கிறது.

சாதிப் பெருமைகள் பேசும்படியான செய்திகள் பதிவாகவில்லை. ஆனால், இருசாதிகளின் மீதான விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

ஒருமுறை அக்ரஹாரத்தில் வீடுகள் தீ பற்றி எரியும்போது அங்குவசிக்கும் மக்கள் முன்வராத போது அய்யருமாருங்க சமாசாரமே ஒரு தினுசு. வாயால ரொம்பநல்லா பேசுவாங்க. வேத சாஸ்திரம் சொல்லுவாங்க. ஆனா, காரியெமென்னா முன்னே போகமாட்டாங்க. இது இப்பத்தி சமாசாரமில்லே என்று ஒரு விமர்சனம் வீசப்படுகிறது.

இன்னொரு கட்டத்தில் சிதம்பரத்தின் பணச் செல்வாக்கு பற்றி பதஞ்சலி சாஸ்திரி சுப்புரத்ன அய்யாரிடம்... கல்கத்தா காங்கிரஸ§க்கு போக ராமசுப்ரமண்ய அய்யருக்கு இவன் தான் பணம் கொடுத்தானாம் என்று சொல்கிறார்.

ஒரு வெள்ளைக்காரனைக் கொன்னுட்டு பணத்தை அள்ளிக்கிட்டு வந்துட்டானம்

நெஜமா...?

நெஜந்தான்...!

கள்ள ஜாதி எல்லாம் பண்ணும்.

இது அச்சாதியின்மேல் பிராமணர் வைக்கும் விமர்சனமாகப் பார்க்கலாம். ஆனால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுப்ரமண்யபாரதி, சுப்ரமண்யசிவா, வாஞ்சிநாதன் அளவிற்கு பிற சமூகத்தினர் விடுதலைப் போராட்டத்தில் உக்கிரம் காட்டவில்லை என்பது பொய்யில்லை. வாஞ்சியைப்போல் அபிராமண சமூகத்தினர் வெள்ளையர்களைக் கொன்றனர் என்று சொன்னால் அது உண்மையில்லை. அதாவது இந்திய தேசிய காங்கிரஸ் தேசியவிடுதலை இயக்கம் என்ற போராட்டத்தினை முன்னெடுத்தபோதும் அவ் வியக்கத்திற்கு காந்தி ஒரு தலைவராக நிலை பெற்றதற்கு முன்பும் இருந்த நிலை.

ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொள்ளும் சாதிக் கட்டு இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ள இவ் வட்டாரத்தில் சாதி பெயரில் தெருப்பெயர் உண்டு. கூரைநாடு பகுதியில் ஒரு தெருவின் பெயர் இடத்தெரு; மற்றொன்று சாலியத்தெரு. நாவலில் சாலியத்தெரு பதியப்பட்டுள்ளது.
இஸ்லாமிய கதாபாத்திரங்கள் ராவுத்தர், மரைக்காயர், சாயபு என்ற பின்னொட்டுப் பெயரில் அறிமுகமாகின்றன. தற்காலத்தில் இச்சொற்கள் வழக்கில் இல்லை; இவர்கள் பொதுவாக முஸ்லிம் என்ற சொல்லில் சுட்டப்படுகின்றனர். பிராமணர்கள் அய்யர், அய்யங்கார், சாஸ்திரி என்று அறிமுகப் படுத்தப்படுகின்றனர். நாயுடு என்ற பெயரில் தெலுகு இனத்தினரும், ராவ் என்று மராட்டியர்/கன்னடரும் பேசப்படுகின்றனர். ஓரிடத்தில் பறையர் சமூகத்தின் இருதலைமுறைப் பெண்கள் தாய், மகள் என்று அறிமுகமாகின்றனர். ஒரு மகள், வாழாவெட்டியாகக் காட்டப்படுகிறார்.

12. விவரணை. நாவலின் முதன்மைப் பாத்திரமான சிதம்பரத்தின் இயக்கத்திற்கு களம் அமைத்துத் தரும் சாயாவனமான காடு காடுகளை உள்ளடக்கிய காடாக விவரிக்கப்படுகிறது. கள்ளிக் காடு, சப்பாத்திக்கள்ளிக்காடு, பிரப்பங்காடு மூங்கில் குத்து இவற்றுடன் புன்னைமரங்கள் நிறைந்திருந் தாலும் இச்சாயாவனம் புளியந்தோப்பு என்றே பெரு மிதமாகப் பேசப்படுகிறது. 48 வகையான தாவரங் களைப் பேசும் நாவலாசிரியரின் விவரணையில் மூன்று வகையான பாகல், ஒன்பது வகையான மரங்கள், நான்கு வகையான கொடிகளுடன் புல்லுருவியும் இடம்பெறுகிறது. அக்காகுருவி முதல் ஆமைவரை பத்தொன்பதுவகையான விலங்குகள் இடம்பெறு கின்றன. ஒரு நொண்டிநரியும் இடம்பெறுகிறது.

13. தீ. நாவலில் தீ தொடர்ந்து பேசப்படுகிறது. டேவிட் சிதம்பரம் இலங்கையில் ஒரு தீ விபத்தினை கண்ணுற்றான். சாயாவனத்தில் அக்ரஹாரமே தீ பற்றியது விவரிக்கப்படுகிறது. சாயாவனமே தீயிட்டுச் சாம்பலாவது நாவலின் சோகமான பகுதி. கதையில் அக்னி கடவுளுக்கும் ஜோதி கடவுளுக்கும் இடையிலான போட்டி இடம் பெறுகிறது. ஓரிடத்தில் கோயில்தேர் எரிந்தது பற்றியும் குறிப்பு உண்டு.

14. நோக்கம். தொழிற்சாலை சார்ந்த புதிய அறிவியல் வளர்ச்சியினை வரவேற்றும் வனங்கள் அழிக்கப்படுவதனை கவலையுற்றும் இந்நாவலில் தம் சமூகஅக்கறையினை சா.கந்தசாமி பதிவிட்டிருக் கிறார் எனலாம். சுருக்கமாக டேவிட்சிதம்பரம் மூலம் சாயாவனத்தினை சிவனாண்டித்தேவருடன் கூட்டு கண்டு சாய்த்துவிட்டார் என்று சொல்லலாம்.

15. பலன்: புளியமரங்கள் அழிக்கப்பட்டு கரும்பாலை கட்டப்பட்டதால் புளிப்பு போயி இனிப்பு வந்தது என்று முடிக்கலாம்.

(ஸ்ரீலோசனி வரதராஜுலு அறக்கட்டளை நிதிநல்கையுடன் ஏ.வி.சி.கல்லூரி (தன்னாட்சி) மன்னம்பந்தல்-609305 தமிழாய்வுத்துறை சா.கந்தசாமியின் படைப்பாளுமை என்ற தலைப்பில் நடத்திய இருநாள் [24 & 25-10-2018] கருத்தரங்கில் அளிக்கப்பட்ட கட்டுரை.)

Pin It